செப்புப்பட்டயம்

நவம்பர் 7, 2008

அகிலா கதைகள் அறுபத்தைந்து

கோப்பு வகை: சிறுகதை, தொடர்கதை — kundavai @ 4:46 பிற்பகல்
Tags: , ,


“சொல்லுங்க சார்! ஞாயித்துக் கிழமை எங்கப் போயிருந்தீங்க?”

அகிலா கம்பெனி நம்பருக்கே கால் செய்திருந்தாள்.

“ஆசிப் அண்ணாச்சி வீட்டுக் கல்யாணத்துக் போயிருந்தேன் என்னயிப்ப?”

“உங்க டப்பா மொபைல் போன் எங்க சார்?”

“இன்னும் காசு கட்டலை அதனால வொர்க் ஆகலை”.

“ஏன் சார் ஒரு வார்த்தை அதைச் சொல்லிட்டுப் போறதுக்கென்ன? உங்கக்காகிட்ட என் ப்ரண்டொருத்தனை வைச்சி பேசி விஷயம் வாங்கினேன். தெரியுமா?”

நான் மௌனமாயிருந்தேன்.

“பதில் சொல்லுங்க சார்.” கத்தினாள் மறுமுனையில்

“ஏண்டி உயிரை வாங்குற, உங்கிட்ட சொன்ன ஞாபகமாயிருந்துச்சு அதான்.”

கேட்டவள் சிரித்தாள்.

“ஏண்டி சிரிக்கிற!”

அவள் அவசரப்படாமல் மெதுவாய்ச் சிரித்துமுடித்துவிட்டு “உங்கக்கிட்ட ‘ஒரு வார்த்தை பேசினீங்கன்னா போனை வைச்சிடுவேன்’ன்னு சொல்லி போன் பேசி ஒரு ஆறு ஏழு மாசமிருக்குமான்னு நினைச்சேன் சிரிப்பு வந்திடுச்சி.”

எனக்கும் கொஞ்சம் சிரிப்பாய்த் தான் இருந்தது, நாங்கள் அந்த உரையாடலுக்குப் பிறகு அடித்த லூட்டி. நான் சிரித்தால் அதையே காரணமாய்க் காட்டி இன்னமும் வம்பிழுப்பாள் என்பதால் வெறுமனே “ம்ம்ம்” என்றேன். ஆனால் மனதிற்குள் அவள் பேசியது அப்படியே ஓடியது.

“என்னைய ரொம்பக் கஷ்டப்படுத்துறீங்க மோகன், காலையில் அப்படி நடந்துக்கிட்டது என் தப்பு தான், Sorry. என்கிட்டேர்ந்து நீங்க என்ன எதிர்பார்க்கிறீங்கன்னு தெரியலை, மனசு விட்டுப் பேசணும்னா? மனசுக்குள்ளே இருக்கிறதை எல்லாம் வெளிய கொட்டிடணும்னா என்னால அது முடியும்னு தோணலை. உங்களை காதலிக்கலைன்னு சொல்லலை அதே மாதிரி காதலிக்கிறேன்னும் சொல்ல முடியலை சொல்லப்போனா காதல்னா என்னான்னே ஒரே குழப்பமாயிருக்கு ஒவ்வொரு தடவையும் நம்மளைப்பத்தி நினைக்கிறப்ப.

நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்காம விட்டுட்டுப் போய்டுவீங்கன்னு நான் பயப்படலைன்னு சொல்ல முடியாது, அந்த பயம் எனக்கு இருக்கத்தான் செய்யுது. போனா இத்தோட போகட்டுமேன்னு தான் நான் இப்படியிருக்கிறதா கூட சிலசமயம் நினைச்சிருக்கேன், போய்ட்டீங்கன்னா அப்படியே துடைச்செறிஞ்சிட்டு போய்ட முடியும்னு இப்ப தோணலைன்னாலும் இது தேவலைன்னு நினைக்கத்தோணுது. இந்த பயம் போகாம என்னால காதலிக்க முடியாதுன்னே நினைக்கிறேன், ஆனால் விட்டுட்டுப் போய்டுவீங்கன்னு நினைக்கிறதுக்கு என்கிட்ட எந்த ரீஸனும் கிடையாது. நான் ரொம்ப குழப்பமாயிருக்கேன்.

சில சமயம் உங்கள ரொம்ப கஷ்டப்படுத்துறதா நினைச்சி பேசாம எதையாவது சொல்லி உங்களை என்ன வெறுக்குற மாதிரி செஞ்சிரலாம்னு கூட நினைச்சிருக்கேன். மூணு வருஷம் கழிச்சி இதெல்லாம் ரொம்ப ட்ரமேட்டிக்கா இருக்கும்னும் நீங்க நம்பமாட்டீங்கன்னும் தெரியிறதால என்ன செய்யறதுன்னே தெரியலை. நீங்க கேக்குற மாதிரி என் கேர்ள் ப்ரண்ட்ங்க கிட்ட பழகிற மாதிரி என்னால் உங்கக்கிட்ட பழக முடியலை, எங்கையோ ஒரு இடத்தில் என்னத்தையோ நான் மிஸ் பண்ணுறேன். என்னான்னு தான் தெரியலை.

சரி எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுவோம், என்ன உங்களுக்கு என் உடம்பப் பார்க்கணும் ஆசை தீர அனுபவிக்கணும் அவ்வளவுதானே போய்த் தொலையுதுன்னு அதைச் செஞ்சிரலாம்னு கூட நினைச்சிருக்கேன். ஆனால் கடைசியில் நீங்களும் இவ்வளவு தானான்னு நினைக்கிறப்ப மனசுக்கு கஷ்டமாயிருக்கு அதே சமயத்தில் என்னமோ உங்களுக்கு மட்டும் தான் இதில் விருப்பம் இருக்கு எனக்கு இல்லவேயில்லை சாமியார் நானுன்னு ஃப்ரூப் பண்ண நினைக்கிறனான்னு சந்தேகமாவும் இருக்கு. எனக்கு செக்ஸ் ஃபீலிங் இல்லாம இல்ல, எனக்கும் அதைப் பற்றி கனவு கற்பனை கவிதை எல்லாம் இருக்கு சொல்லப்போனா பாட்டுக் கூட இருக்கு உங்கள மாதிரி…”

சிரித்தாள் நான் எதுவும் சொல்லவில்லை.

“…ஆனா சீக்கிரமே ஒரு முடிவு எடுக்கணும்னு இன்னிக்கு காலைல தான் நினைச்சேன். அதுக்குள்ள இப்படி பண்ணிட்டீங்க, ஒன்னு உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிறது இல்லாட்டி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்ன மாதிரி தொறந்து காண்பிச்சிட்டு போய்ட்றதுன்னு இருக்கேன். ஆறுமாசம் ஒரு வருஷம் காதலிக்கிறவங்க எல்லாம் எப்படி நடந்துக்கிறாங்கன்னு பார்த்துக்கிட்டுத்தான் வர்றேன், மூணு வருஷமா உங்களைக் காதலிச்சும் காயப்போட்டேங்கிறப்ப எனக்கே கஷ்டமாத்தான் இருக்கு. மூணு வருஷம் பொறுத்தியே இன்னும் ஆறு மாசமோ ஒரு வருஷமோ பொறுத்திட்டா நான் முழுசா உனக்குத்தானேன்னு தான் சொல்லத் தோணுது. ஆனா அது என்ன ஃபார்மாலிட்டி தாலி கட்டுறது கூட படுத்துக்கிறதுக்கு லைசன்ஸான்னும் தோணுது. மூணு வருஷம் காதலிச்ச உங்களை விட தாலி பெரிய விஷயமா படலை எனக்கு.

என்னால ஒரு முடிவுக்கு வரவே முடியலை, இப்படி என்னைத் தடுமாற வைச்சு என்னை உபயோகிச்சிக்கப் பார்க்கிறீங்களான்னும் சில சமயம் தோணுது. என்ன எழவோ நான் எதுக்கும் தயாராய்ட்டேன், உங்களுக்கு விருப்பம்னா நாளைக்கே கூட நீங்க என்னை எடுத்துக்கலாம். இப்ப எதுவும் பேசாதீங்க எதார்ந்திருந்தாலும் நாளைக்கு சொல்லுங்க. நான் எதுக்கும் தயார். நான் போனை வைக்கிறேன்.”

சிரிக்கக்கூடாது என்று எவ்வளவு தான் முயன்றாலும் முடியாமல் சிரித்துவிட, எதிர்ப்பக்கத்தில் அவள் போனைத் துண்டித்துவிட்டு சென்றுவிட்டாள்.

———————

Mohandoss’s new status message – பெண்கள் மேலே மையல் உண்டு நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
யாசித்தலின் குரூரம்
காதலாய் யாசிக்கிறேன்

* தொடர்கதையாக ஆக்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அப்படி ஆகாது போலிருக்கு.

ஜூலை 2, 2008

நீராக நீளும் காதல் – 4

கோப்பு வகை: தொடர்கதை, நீராக நீளும் காதல் — kundavai @ 4:21 மு.பகல்

நான் உன்கிட்ட என்ன கேள்வி கேட்டேன் நீ என்ன பதில் சொல்ற. நீ வரவர லாஜிக்கலா யோசிக்கிறதையே மறந்துட்டு வர்ற. நான் அந்தப் பையன் பத்தி கேட்டது ரொம்ப சாதாரணமா!” தொடரும் முன் இடைமறித்தவள்.

தாஸ் உண்மையில் நான் உங்க பொண்டாட்டியோ காதலியோ கிடையாது, நீங்களும் அப்படி நினைக்கலாம். ஆனால் நான் என்னை உங்க காதலியா, பொண்டாட்டியாத்தான் நினைச்சிக்கிட்டிருக்கேன். சொல்லப்போனா உங்கக் கிட்ட ஒவ்வொரு தடவையும் காசு வாங்கிறப்பையும் என் மனசை கொன்னுட்டுதான் வாங்குறேன். நீங்க அப்படி நினைச்சிக்கிட்டு கொடுக்கிறதில்லைன்னாலும், அப்படி நான் நினைச்சிடக்கூடாதுன்னு நீங்க யோசிச்சு யோசிச்சு செய்தாலும் என்னால் அப்படி மறக்கமுடியலை.

அதனால தான் நீங்க அந்தப் பையனைப் பத்தி கேட்டதும் இத்தனையும் சொல்றேன். நீங்க இதுவரைக்கும் என்கிட்ட என் வாழ்க்கையை லைஃப் ஸ்டைலை, என்னுடைய நடவடிக்கையைப் பத்தி கேள்வி கேட்டதில்லை. நீங்க கேட்காததால நானும் சொன்னதில்லை ஆனால் இப்ப கேட்டீங்க பாருங்க, அதை நீங்க ஒரு கேள்வியா நினைச்சுக் கேட்கலைன்னாலும் எனக்கு நானே உங்க மூலமா சமாதானம் சொல்லிக்கிறேன். என்னமோ கேட்டீங்க நான் எங்கேயோ போய்ட்டேன்.

அந்தப் பையனைப் பத்தி உங்கக்கிட்ட முன்னாடியே சொல்லிருக்கேன்ல, அவன் என்னை தீவிரமா காதலிக்கிறான். இந்த உலகத்திலேயே என் மேல இருக்கும் அன்பை வெளிப்படையாச் சொன்னவன் அவன் தான். நீங்களும் சரி, எங்க அம்மாவும் சரி என் மேல இருக்கிற அன்பை பாசத்தை வெளிப்படையா சொல்லமாட்டீங்க. நான் உங்களையோ எங்கம்மாவையோ அந்தப் பையன் கூட கம்பேர் செய்யக்கூட மாட்டேன்; ஆனா நானும் சின்னப் பொண்ணு தானே? என்பின்னாடியே வழிந்து கொண்டு வரும் அப்பாவி பையன் அவன். அவ்வளவுதான். உங்களுக்கும் அந்தப் பையன் கூட எனக்கு வேறமாதிரி தொடர்பிருக்காதுன்னு தெரியும். இல்லையா?

நான் ஒரு சிகரெட் எடுத்து பற்ற வைத்துக் கொண்டேன். அவளும் ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்துக் கொள்ள லைட்டரை அவளிடம் நீட்டினேன்.

ஸஸ், நான் அந்தப் பையன் பத்தி உன்கிட்ட கேட்டதுக்கு ஒரே ஒரு காரணம். ஏறக்குறைய தீபிகாவிற்கும் அந்தப் பையனுக்கும் நிறைய ஸிமிலாரிட்டீஸ் இருக்குமென்று தான். நீ சொன்னத வச்சுப் பார்த்தா அது உண்மைன்னும் தெரியுது.

நான் கட்டிலில் இருந்து எழுந்து பால்கனிக்கு வந்து உட்கார்ந்தேன். கூடவே வந்தவள் எதிரில் உட்கார்ந்தாள். நான் அவள் ஆழமாய் சிகரெட் இழுத்து புகை விட்டதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

தாஸ் நீங்க வேணாம்னு சொன்னா நான் தம் அடிக்கிறதை, பியர் அடிக்கிறதை எல்லாம் நிறுத்திருவேன். இப்பவே கூட ஒன்னும் பெரிசா விரும்பி செய்யலை கண்டதையும் யோசிச்சிக்கிட்டிருப்பேன். அதையெல்லாம் மறக்கறதுக்காகத்தான் இதெல்லாம்.

நீங்க ஒரு வார்த்தை பண்ணாதன்னு சொல்லுங்க நிறுத்திற்றேன்.

ஸஸ் உனக்கு என்னமோ ஆச்சு இன்னிக்கு.” நானும் ஆழமாய் இழுத்து புகைவிட்டபடி வேடிக்கையாச் சொல்ல, அவள் முகம் சட்டென்று வாடத் தொடங்கியது. முகத்தில் லேசாய் சோகப் புன்னகை பரவியது.

ச்ச நான் ஒரு லூசு உங்கக்கிட்ட என்னவெல்லாமோ புலம்பிக்கிட்டிருக்கேன்.

நீராக நீளும் காதல்
நீராக நீளும் காதல் – 1
நீராக நீளும் காதல் – 2

அடுத்த பக்கம் »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.