haikoவும், மரத்தடி.கொம்மில் கிடைத்த மறுமொழிகளும்

haiko என்ற பெயரில் நான் ஒன்றை எழுத மரத்தடி.கொம்மில் கிடைத்த மறுமொழிகளும் அந்த haikoவும்.

———————————

சுரண்டப்பட்ட எச்சிலாய்
கலைக்கப்பட்ட குழந்தை
– Kundavai Vanthiyaththevan

———————————

> mohandoss.i@g…> wrote:
> சுரண்டப்பட்ட எச்சிலாய்
> கலைக்கப்பட்ட
> குழந்தை

தலைவா!

நீங்க யாரு இன்னான்றதெல்லாம் நமக்கு தெரியாது. ஒண்ணே ஒண்ணுஇன்னும் நீங்க நெறையப் படிக்கணும் போலத் தோணுது. மேல எழுதுனமேட்டர்ல என்ன சொல்ல வறீங்க?

கலைக்கப்பட்ட குழந்தைன்ற பிரயோகம் என்னோட பார்வைல அதிகம்.’கரு’ன்ற பிரயோகந்தான் சரி. கவிதைய அல்ஜிப்ரா ஆக்கக்கூடாது,எனக்குத் தெரியும். ஆனாலும், கவிதைய ஆனா ஆவன்னாவாவும்ஆக்கிரக்கூடாது இல்லீங்களா?

கரு – கலைப்பு சமாச்சாரமுன்னா ஒரு வலி தெறிக்கணும் சார்.
“என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே.கர்ப்பத்தில் நானே கரஞ்சிருப்பேனே” சாட்டைய சொடுக்கணும் சார்.

உங்க உணர்வு புரியுது. ‘வழித்தெடுத்து வீசிட கரு என்ன எச்சிலா’இதத்தான் கேக்க வறீங்க. கொஞ்சம் பொறுமையா வார்த்தைகளச்செதுக்குங்க. சில சமயம் நல்லா வரும், சில சமயம் கோணிக்கும்.சல்தா ஹை. ஆனா சிற்பமே வடிக்காம, கல்லு ஷேப்பு நல்லாஇருக்குன்னு அப்படியே பாலீஷ் அடிச்சு வச்சுட்டா சரிங்களா?

கவிதை அப்படியே ஆறாப் பெருகி ஓடும் அத அப்படியே வடிச்சுத்தரணும்ன்றது ஒரு டைப்பு ஸ்கூல் ஆ·ப் தாட்ஸ். கொஞ்சம் அங்கஇங்க தட்டி க்ரா·ப்ட் மாதிரி வடிக்கணும்ன்றது இன்னொரு ஸ்கூல்ஆப்· தாட்ஸ். நான் கத்துக்கிட்டது ரெண்டாவது.

ஆறாப் பெருகி ஓடணும்ன்னா, அதுக்கு நம்ம மனசுக்குள்ள எப்படிவேகம் பொங்கணும் தெரியுங்களா. மனசுக்குள்ள நூறு சதம் வேகம்இருந்து மொழியும் வசப்பபட்டுச்சுன்னா ஒரு அம்பது சதம்வார்த்தையா வரலாம். சரிங்களா?
*
மோகன்தாஸ்,
பாய் இப்படித்தான் கலாய்ப்பாரு. கலங்காதீங்க. அடிச்சு வுடுங்க.விமர்சனத்துக்கு பயந்தா கவித எழுதமுடியுங்களா?

அன்புடன்
ஆசாத்

———————————-

இத இத இதத்தான் நான் எதிர்பார்த்தேன். நாம பாட்டுக்கு எழுதிட்டே போறோம் ஒன்னும் விமரிசனம் வர்ற வழியையே காணோமேன்னு தான் திண்டாடிக்கிட்டிருந்தேன்.

சரி குளத்தில் ஒரு கல்லை எறிவோம் நிச்சயம் எதிர்வினை இருக்கும்னு நினைச்சேன் நடந்திருச்சு.

முதலில் வெண்பா எழுதிதான் கொல்றதா இருந்தேன், ஆனா பலபேரு கொலைவெறியோட,ஐபி அட்ரெஸ் தெரிஞ்சுக்கிட்டு வீட்டுக்கு வந்திருவாங்கன்னு பயந்து சும்மா, ஒரு குட்டிக் கவிதைஎழுதி, அதிலும் வார்தையை வேணும்ணே மாத்திப்போட்டேன் ஆசாத்ஜி.

ஓத்துக்கொள்கிறேன். படிச்சுட்டு புரிஞ்சிக்கிறதோட சரி கவிதையெல்லாம், எழுதுறது இல்லை,ஆனா இங்க என்னோட கதைகளுக்கு விமரிசனங்களேயில்லை, மரத்தடி.கொம்மில் என் கதைகள்ஏற்றப்பட்ட போது கூட இத்தனை சந்தோஷம் படவில்லை நான். நேற்று நிம்மதியான தூக்கம்.

நிச்சயமா தெரியும் கவிதை எழுதுணா ஒரு கூட்டமே உதைக்க வரும்னு,
ஆனா நீங்க நம்புவீங்களோஇல்லையோ, நான் எழுதிய கவிதை இதுதான்.

சுரண்டப்பட்ட எச்சிலாய்
குறிதெரிந்த
கரு

அப்படின்னு தான் எழுதினேன், ஆனால் இதையும் படித்துவிட்டு போய்டுவாங்கன்னு தான் மாற்றினேன்.(அதுதான் உண்மை.)
நீங்க எழுதினதுக்கு என்னோட பதில் இவ்வளவுதான்.

——————————-

இதுக்கு கீழே இருப்பது சும்மா விளையாட்டுக்கு, பம்மாத்துக்கு.

சார், உண்மையிலேயே நீங்க தெரிஞ்சுதான் சொன்னீங்களா இல்லை அவசரத்தில் சொன்னீங்களாதெரியாது,

“என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே கர்ப்பத்தில் நானே கரைஞ்சிருப்பேனே?”

இதில் சாட்டை சொடுக்கியிருக்கிறதா படுதா உங்களுக்கு, எனக்கென்னவோ அவர் அமைத்திருக்கிறஒரு சொற்கூட்டு தான் தெரிகிறது. பெரும்பாலும் நான் சினிமா வரிகளை உதாரணம் சொல்வது கிடையாது.

இந்த வரிகளுக்கும்,
இட்ட முத்தத்து
எச்சில் கரையழிக்க
வட்டில் அமுதெடுத்து
வாய்கழுவின வரிகளுக்கும் என்னால் வித்தியாசம் காணமுடியவில்லை, சார் கவிதையில்,

தாயி
காவேரித்தாயி
கூவிக்கூவி
வலிக்குது வாயி
ஆத்தான்னு
அம்மான்னு
அழைக்கிறேன்
விவசாயி
என்அழைப்புக்கு
கொஞ்சம்
செவிசாயி

இதுபோன்ற ஒரு சொற்கூட்டு தான் சார் நீங்க சொன்ன அந்த வரிகள், இப்பொழுதுள்ள பெண்களிடம் பெண் கவிஞர்களிடம் அந்த வரியை சொல்லி பாருங்க, தெரியும் விளையாட்டு.
பெண்களின் தங்களை ஆண்களின் வார்த்தைகளால் நிரப்பிடமுடியும் என்ற வாதத்தை என்னால் ஒத்துக்கொள்ளமுடியாது. வேண்டாம் சினிமாவைப்பற்றியோ சினிமா வரிகளைப்பற்றியோ நான் பேச விரும்பவில்லை. அவ்வளவுதான்.

கு.வ

———————————–

> mohandoss.i@g…> wrote:>
இதுக்கு கீழே இருப்பது சும்மா விளையாட்டுக்கு, பம்மாத்துக்கு.
> “என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே> கர்ப்பத்தில் நானே கரைஞ்சிருப்பேனே?”
> இதில் சாட்டை சொடுக்கியிருக்கிறதா படுதா உங்களுக்கு,

தலைவா!

இன்னா பண்றதுன்னே புர்ல தலைவா. இது வெள்ளாட்டுக்குன்னாஅப்படியே வுட்டுர்றேன். வெள்ளாட்டுக்கு இல்லேன்னா வைரத்தோடமேட்டர் நெறைய இருக்கு நம்மகிட்ட பேசத்துக்கு. நீங்க க்ரீன்சிக்னல் தந்தீங்கன்னா நம்ம விவாதம் தொடரும்.

> வேண்டாம் சினிமாவைப்பற்றியோ சினிமா வரிகளைப்பற்றியோ> நான் பேச விரும்பவில்லை. அவ்வளவுதான்.

இதையும் அப்படியே வுட்டுர்ரேன்.

நான் சொல்ற பதில் வெள்ளாட்டுக்கு இல்ல’பா, மெய்யாலுமே.
பாய்க்கு சினிமால கொஞ்சம் ஆர்வம் அதிகம். அதுலேர்ந்துதான்நெறயப் பேசுவான். உங்களுக்கு விருப்பமில்லேன்னா உங்ககிட்டசினிமா பேசமாட்டேன்.
அவ்ள்தான்.

மத்த இலக்கியம் தெரிஞ்சவரைக்கும் பேசுவேன்.
அன்புடன்தஞ்சை ராமையாதாஸ் முதல் பா.விஜய் வரையில் ரசிக்கும்பயாஸ்கோப் பாமரன்
————————————–

நீங்க மட்டும் விமரிசனம் எழுதிட்டு கீழே டிஸ்கிளெம்பர் மாதிரி எழுதலாம். நான் கூடாதா. வாங்கவிளையாடி பார்ப்போம்.

—————————————

> mohandoss.i@g…> wrote:> வாங்க விளையாடி பார்ப்போம்.
> உண்மையிலேயே நீங்க தெரிஞ்சுதான் சொன்னீங்களா> இல்லை அவசரத்தில்> சொன்னீங்களா தெரியாது,

இனிய மோகன்தாஸ்,
அவசரத்தில் சொல்லப்பட்ட வார்த்தையன்று அது. தெளிவானநினைவுடன்தான் சொல்லியிருக்கிறேன்.

> “என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே கர்ப்பத்தில் நானே> கரைஞ்சிருப்பேனே?”> இதில் சாட்டை சொடுக்கியிருக்கிறதா படுதா உங்களுக்கு,> எனக்கென்னவோ அவர்> அமைத்திருக்கிற ஒரு சொற்கூட்டு தான் தெரிகிறது.

மன்னிக்கவேண்டும், நான் ரசித்ததை நீங்களும் ரசிக்கவேண்டும்என்னும் அவசியம் கிடையாது. எனக்கு சாட்டை தெரிகிறது;உங்களுக்கு சொற்கூட்டு தெரிகிறது.
இந்த விதியை அப்படியே உங்கள் கவிதையில் பொருத்தி அதுஉங்களுக்கு கவிதையாகத் தெரியவும், எனக்கு சொற்கூட்டாகத் தெரியவும் வாய்ப்பு இல்லை. ஏனென்றால், நீங்கள் தெளிவாக,

> சரி குளத்தில் ஒரு கல்லை எறிவோம் நிச்சயம் எதிர்வினை> இருக்கும்னு நினைச்சேன் நடந்திருச்சு.
> முதலில் வெண்பா எழுதிதான் கொல்றதா இருந்தேன், ஆனா> பலபேரு கொலைவெறியோட, ஐபி அட்ரெஸ் தெரிஞ்சுக்கிட்டு> வீட்டுக்கு வந்திருவாங்கன்னு பயந்து சும்மா, ஒரு குட்டிக் கவிதை> எழுதி, அதிலும் வார்தையை வேணும்ணே மாத்திப்போட்டேன்> ஆசாத்ஜி.

இப்படி ஒரு வாக்குமூலம் தந்துள்ளீர்கள். அதாவது, விளையாட்டைத்துவங்குகின்றீர்கள்.
என்னதான் எதிர்வினை வரும் பார்ப்போம் என்னும் நினைப்பில்,வேண்டுமென்றே, பிரவாகமெடுத்து பொங்கிய ஒரு கவிதையின்கருவைச் சிதைத்து, மறுவடிவம் தந்து, உயிரற்றதாக்கி, எதிர்வினையை எதிர்பார்த்து இட்டிருக்கின்றீர்கள். சரிதானா?
ஆக, நீங்கள் எழுதியது உயிரற்ற ஒரு சொற்கூட்டு என்பது உங்களின் வாக்குமூலம் வழியாகவே நிரூபணமாகிவிட்டது. சல்தா ஹை.
அடுத்த விவாதத்தைத் தொடர்வோமா?

> வேண்டாம் சினிமாவைப்பற்றியோ சினிமா வரிகளைப்பற்றியோ> நான் பேச விரும்பவில்லை. அவ்வளவுதான்.
இதைச் சொன்னதும் நீங்கள்தான்

> வாங்க விளையாடி பார்ப்போம்.
இதைச் சொல்வதும் நீங்கள்தான்.

முதல் மடலில் சினிமா பேச விருப்பமில்லை. இரண்டாவது மடலில் விளையாடிப் பார்ப்போம். பரவாயில்லை, எனக்கும்இப்படி அடிக்கடி மனம் நல்வழியில் செல்லும், திடீரென சினிமாவுக்குப் பாயும். திரை இசைக்கும் இலக்கியத்திற்கும் இடையில்ஊசலாடும் மனப்பக்குவம் கொண்டவன் நான். அது கிடக்கட்டும்,

> பெண்களின் வருத்தங்களை ஆண்களின் வார்த்தைகளால்> நிரப்பிடமுடியும் என்ற> வாதத்தை என்னால் ஒத்துக்கொள்ள முடியாது.

முதல் கேள்வி:திரை இசைப் பாடல்களிலிருந்து பெண்களின் உணர்வுகளுக்குமேற்கோள் காட்டலாமா? கூடாதா?

கூடாது என்றால், முதல் கட்டமாக மாலன் அய்யா அவர்களின்எம்.எஸ். என்னும் தொடர்கதையை சொல்வேன். அதில் பெண்ணின்உணர்வுகளை மாலன்தானே வடித்தார். பாலாவின் இரும்புக் குதிரைகளும், மெர்க்குரிப்பூக்களும் இருக்கவே இருக்கின்றன பெண்ணின் உணர்வுகளை ஆண் எழுதியிருப்பதன் அடையாளமாக.

இவை உரைநடை, நான் சொல்வது கவிதையை என்னும் வாதத்தைமுன்வைத்தீர்களென்றால், நான் பாரதியிலிருந்து சில வரிகளைஎழுதுவேன். (வரிகள் நினவில் இல்லாததால் எழுதவில்லை.வாதமென்று தொடரும்போது பாரதியார் கவிதைகளைபக்கத்தில் வைத்துக்கொண்டு எழுதுவேன்)

திரையிசையிலிருந்தும் மேற்கோள் காட்டலாம் என்றால், முதன்முதலில் நான் வாதத்திற்கென வைக்கும் பாடல், ‘காலமிது காலமிதுகண்ணுறங்கு மகளே’வாக இருக்கும். பிறகு, சரவண பொய்கையில்நீராடி முதல் பூப்பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை எனஇடையில் சிற்றிடைக்கு மேலே சேலை கட்ட ஆசையையும்சொல்வேன்.

‘இவையெல்லாம் கவிதைகளா’ என்னும் வாதத்தை நீங்கள்முன்வைத்து, நவீனத்துவம் – பின் நவீனத்துவம் – கட்டுடைப்புஎன்றெல்லாம் நுணுக்கமாக அணுகினீர்களென்றால், நன்றிகள்!நமக்கு அத்தனை ஞானமில்லை.
நான் ஒரு பாமரத்தனமையுள்ள ரசிகன், அவ்வளவே. இலக்கியவாதியும் அல்லன், அறிஞனும் அல்லன். ஒரு பாமர ரசிகனுடன் விவாதம் நடத்துவது தங்களின் திறனுக்கும், தகுதிக்கும் சரியாகப்பட்டதென்றால், பதில் எழுதுங்கள்.
உங்கள் பின்னூட்டம் கண்டபின் எனது அடுத்த வாதத்தினைமுன்வைப்பேன். திங்கட்கிழமை மாலையில்தான் அடுத்த வாத்ததினஎழுத இயலும்.

அன்புடன்
ஆசாத்

—————————-

— Abul Kalam Azad wrote:

> ‘இவையெல்லாம் கவிதைகளா’ என்னும் வாதத்தை நீங்கள்> முன்வைத்து, நவீனத்துவம் – பின் நவீனத்துவம் – கட்டுடைப்பு> என்றெல்லாம் நுணுக்கமாக அணுகினீர்களென்றால், நன்றிகள்!> நமக்கு அத்தனை ஞானமில்லை.>> நான் ஒரு பாமரத்தனமையுள்ள ரசிகன், அவ்வளவே. இலக்கியவாதி> யும் அல்லன், அறிஞனும் அல்லன்.

*************************************************
பாமர ரசனை – 1================

என்னைக் கேட்டால் பாமரத்தனமான ரசனைதான் பரம ரசனை என்பேன். என்னையாரும் கேட்க மாட்டார்கள். ஆனால் நான் சொல்லாமல் விடுவதாக இல்லை.எனக்கிருக்கும் ரசனையை பாமரத்தனமானது என்று சொல்லிக்கொள்வதில்எந்தவித தயக்கமோ வெட்கமோ அல்லது தாழ்வுமனப்பான்மையோ கொஞ்சமும்இல்லை. பாமரத்தனமானது என்று பலர் கருதுவதை மிகவும் உயர்ந்த்ததாகநினைக்கிறேன். என்னளவில் இந்த ரசனை எனக்கிருப்பதை பெருமையாகக்கருதுகிறேன். எவை எவை பாமர ரசனை என நான் கருதுகிறேன் என்பதற்கானபட்டியல் மிக நீளமானது. உண்மையில் அது முடிவில்லாதது.

எனக்கு பள்ளிப்பாடங்கள் அளித்த மொழி அறிவிற்கு அப்பாற்பட்ட மொழிஅறிவையும், அழகு மற்றும் பரக்கிரமத்தைப் போற்றிப் பாராட்டும் குணத்தையும்,புதிர்கள் விடுவிக்கும் திறத்தையும், புதியன பலவற்றை கற்பனை செய்யும்ஆசையையும் வளர்த்ததில் ஆரம்பப் பங்கு வகித்ததாய் நான் கருதுவது ‘பெரியஎழுத்து விக்கிரமாதித்தன் கதை’ எனும் மிகத் தடிமனான ஒரு புத்தகம்தான்.அந்நியன் படத்தில் காட்டப்படும் கருடபுராணப் புத்தகத்தைப்போல் இருக்கும்.இந்தப் புத்தகத்திற்கு அடுத்தபடியாக இன்றளவும் எனது ரசனைத் தேவைகளைபூர்த்திசெய்வது திரைப்படங்கள்தான்.

நான் பார்த்ததில் எனக்கு நினைவிலிருக்கும் பழைய படம் ‘மனோன்மணி’.குடந்தைக்கருகில் ஒரு கூடாரத்திரையரங்கில் பார்த்த நினைவிருக்கிறது.இந்தப் படத்திலிருந்து அந்நியன் வரை ஏராளமான படங்கள் என் பலதரப்பட்டரசனைகளை வித்திட்டு வளர்த்துவந்திருக்கின்றன. இதில் முக்கியமாகக்குறிப்பிட வேண்டியது எம்ஜியார் படங்களைத்தான். பொதுவாக எம்ஜியார்படங்களின் ரசிகர்கள் மற்றெல்லா நடிகர்களின் படங்களுக்கும் மகா ரசிகர்கள்.சிவாஜிப் படங்கள் உட்பட. எம்ஜியார் படங்களின் சிறப்பம்சம்களில்முக்கியமானவை பாடல்கள். பல பாடல் வரிகள் அற்புதமானவை. இன்று மாலை(26-08-2005) கிரிக்கெட் நிலவரம் அறியும்பொருட்டு பண்பலை வானொலிநிலையங்களைத் துழாவியபோது ஏதோ ஒரு நிலையத்தில் ‘கண்ணன் பிறந்தான்எங்கள் கண்ணன் பிறந்தான்’ என்ற பாடல் ஒலித்தது. உடனே நானும் என்மனைவியும் அந்த நிலையத்திலேயே வானொலியை வைத்துவிட்டு, ஒலிஅளவைக்கூட்டி, தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு எங்கள் சாய்விருக்கையில்நிலைப்பட்டோம். அந்த மூன்று நிமிடங்கள் எங்கள் வாழ்வில் அந்தப் பாடல்மட்டும்தான்.

இன்று கோகுலாஷ்டமி -‘கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான். ‘
இன்று மரபுக் கவிதைகளை நான் தேடிச்சென்று ரசிப்பதற்கு காரணம்இவைபோன்ற எளிமையான, அதேநேரம் சந்தங்களும் மொழிநயமும் குன்றாத பலபாடல்கள். என்னளவில் இவையெல்லாம் அதி அற்புதமான பாடல்கள். நம் மனதில்இடம் பிடிக்கும் சாகாவரம் பெற்ற திரைப்படப் பாடல்கள், எதுகைமோனைகள்கொண்ட, தாளக்கட்டுடன் அமைந்த, புரியும்படியான சொற்கள் கொண்டபாடல்கள்தான்.

கால்விரல்நுனியில்கோலக்கோடுகள்ஜன்னலின்கம்பி முத்தங்களுடன்அவள்.
என்ற இருவிரல் நுனிகளுக்குள் சிறைப்பட்ட சர்க்கரைத் துகள்களைவிட
‘காலாலே
நிலத்திலேகோலம்
போட்டு காட்டுறாகம்பி
போட்ட ஜன்னலிலேகன்னத்தைத்
தேய்க்கிறா’

என்னும் அதிரசம் எனக்கு இனிமையாயும், பொருளுடையதாகவும், நினைத்து நினைத்து இனிப்பெய்துவதாகவும் இருக்கிறது.

அன்புடன்
நடராஜன்

———————————–

இனிய ,

//என்னதான் எதிர்வினை வரும் பார்ப்போம் என்னும் நினைப்பில்,வேண்டுமென்றே, பிரவாகமெடுத்து பொங்கிய ஒரு கவிதையின்கருவைச் சிதைத்து, மறுவடிவம் தந்து, உயிரற்றதாக்கி, எதிர்வினையை எதிர்பார்த்து இட்டிருக்கின்றீர்கள். சரிதானா?//

சரிதான்

//ஆக, நீங்கள் எழுதியது உயிரற்ற ஒரு சொற்கூட்டு என்பது உங்களின் வாக்குமூலம் வழியாகவே நிரூபணமாகிவிட்டது. சல்தா ¨†.//

நான் என்கவிதையை பற்றிய உங்கள் விமரிசனத்தை முழுமனதாக ஏற்றுக் கொண்டேன். ஆனால் விவாதமாக நான் வைத்த கருத்து. நீங்கள் குறிப்பிட்ட வைரமுத்து வார்த்தைகள் மட்டுமே. ஒரு நல்ல கவிதையிலிருந்தோ இல்லை உங்கள் சொந்த வரிகளில் இருந்தோ சொல்லியிருப்பீர்களேயானால் விவாதத்திற்கே வந்திருக்க மாட்டேன்.

//அடுத்த விவாதத்தைத் தொடர்வோமா?
> வேண்டாம் சினிமாவைப்பற்றியோ சினிமா வரிகளைப்பற்றியோ> நான் பேச விரும்பவில்லை. அவ்வளவுதான்.
இதைச் சொன்னதும் நீங்கள்தான்
> வாங்க விளையாடி பார்ப்போம்.
இதைச் சொல்வதும் நீங்கள்தான்.முதல் மடலில் சினிமா பேச விருப்பமில்லை. இரண்டாவது மடலில் விளையாடிப் பார்ப்போம். பரவாயில்லை, எனக்கும்இப்படி அடிக்கடி மனம் நல்வழியில் செல்லும், திடீரென சினிமாவுக்குப் பாயும். திரை இசைக்கும் இலக்கியத்திற்கும் இடையில்ஊசலாடும் மனப்பக்குவம் கொண்டவன் நான். அது கிடக்கட்டும்,//

திரும்பவும் தவறாக புரிந்து கொண்டுவிட்டீர்கள். நான் விளையாடிப் பார்ப்போம்னு சொன்னது.வைரமுத்துவின் வார்த்தைகளோடு தான். நீங்கள் வைரத்தின் சரக்கு நிறைய இருக்கு என்று சொல்லியகாரணத்தால் சொன்னது. வைரம் சினிமா தவிரவும் நிறைய எழுதியதாக நினைவு. வைகறைமேகங்களில் இருந்து, கருவாச்சி காவியம் மூன்றாம் பாகம் வரை. இல்லை நான் பாமரன் சினிமாவைதான் சொல்வேன் என்று சொன்னால் வைரத்தை மட்டும் உதாரணம் காட்டுங்கள்.

//> பெண்களின் வருத்தங்களை ஆண்களின் வார்த்தைகளால்> நிரப்பிடமுடியும் என்ற> வாதத்தை என்னால் ஒத்துக்கொள்ள முடியாது.
முதல் கேள்வி:திரை இசைப் பாடல்களிலிருந்து பெண்களின் உணர்வுகளுக்குமேற்கோள் காட்டலாமா? கூடாதா?
கூடாது என்றால், முதல் கட்டமாக மாலன் அய்யா அவர்களின்எம்.எஸ். என்னும் தொடர்கதையை சொல்வேன். அதில் பெண்ணின்உணர்வுகளை மாலன்தானே வடித்தார். பாலாவின் இரும்புக் குதிரைகளும், மெர்க்குரிப்பூக்களும் இருக்கவே இருக்கின்றன பெண்ணின் உணர்வுகளை ஆண் எழுதியிருப்பதன் அடையாளமாக.
இவை உரைநடை, நான் சொல்வது கவிதையை என்னும் வாதத்தைமுன்வைத்தீர்களென்றால், நான் பாரதியிலிருந்து சில வரிகளைஎழுதுவேன். (வரிகள் நினவில் இல்லாததால் எழுதவில்லை.வாதமென்று தொடரும்போது பாரதியார் கவிதைகளைபக்கத்தில் வைத்துக்கொண்டு எழுதுவேன்)//

அண்ணே மாலனை பற்றி வேண்டுமானால் சொல்லுங்கள் நான் மதிக்கின்ற எழுத்தாளர்களில் ஒருவர். பாலா என்று நீங்கள் சொல்லும் பாலகுமாரனை பற்றி வேண்டாம். உடையார்(4) படித்துவிட்டு கடும் கோபமாய் இருக்கிறேன். விரைவில் ஒரு விமரிசனக் கட்டுரையை எதிர்பாருங்கள் மரத்தடியில் அப்போது வைத்துக்கொள்வோம் அந்த சண்டையை.

//திரையிசையிலிருந்தும் மேற்கோள் காட்டலாம் என்றால், முதன்முதலில் நான் வாதத்திற்கென வைக்கும் பாடல், ‘காலமிது காலமிதுகண்ணுறங்கு மகளே’வாக இருக்கும். பிறகு, சரவண பொய்கையில்நீராடி முதல் பூப்பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை எனஇடையில் சிற்றிடைக்கு மேலே சேலை கட்ட ஆசையையும்சொல்வேன்.
‘இவையெல்லாம் கவிதைகளா’ என்னும் வாதத்தை நீங்கள்முன்வைத்து, நவீனத்துவம் – பின் நவீனத்துவம் – கட்டுடைப்புஎன்றெல்லாம் நுணுக்கமாக அணுகினீர்களென்றால், நன்றிகள்! நமக்கு அத்தனை ஞானமில்லை.

நான் ஒரு பாமரத்தனமையுள்ள ரசிகன், அவ்வளவே. இலக்கியவாதியும் அல்லன், அறிஞனும் அல்லன். ஒரு பாமர ரசிகனுடன் விவாதம் நடத்துவது தங்களின் திறனுக்கும், தகுதிக்கும் சரியாகப்பட்டதென்றால், பதில் எழுதுங்கள்.//

விளையாட்டா இருக்கு, வைரமுத்துவைப் பற்றி பேசிவிட்டு, கவிப்பேரரசையும், நவீன கவித்துவத்தையும், சாகித்திய அக்காதெமியையும், கள்ளிகாட்டு இதிகாசத்தையும் பேசாமல் விடமுடியுமா. என்ன நான் சொல்றது.

//உங்கள் பின்னூட்டம் கண்டபின் எனது அடுத்த வாதத்தினைமுன்வைப்பேன். திங்கட்கிழமை மாலையில்தான் அடுத்த வாத்ததினஎழுத இயலும்.//

இலக்கியவாதியாக இல்லாமல் போனாலும் காசு கொடுத்து படிப்பவன் என்ற முறையில் இந்த விவாதங்களை வைக்கிறேன். முடிவெடுக்கும் பொறுப்பு. உங்களுடயது.

பல காலமாய் வைரத்தின் முனை மழுங்கிய தீக்குச்சியை தேடும்
கு.வ

—————————————

>பல காலமாய் வைரத்தின் முனை மழுங்கிய தீக்குச்சியை தேடும்
>கு.வ


இனிய மோகன்தாஸ்,
நன்றிகள். தங்களுடன் இனியும் என்னால் விவாதத்தைத் தொடர இயலாது. மன்னிக்கவேண்டுகிறேன்.

அன்புடன்
ஆசாத்

எனது ஓவியங்கள்

இந்த ஓவியங்களெல்லாம் நான் வரைந்தவை. நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் நான் வரைவதுண்டு. அத்துனை நன்றாக இல்லாவிட்டாலும் பார்க்கிறமாதிரி இருப்பதாக நான் நினைக்கிறேன்.

காதல் பக்கம் – தபூ சங்கர்

ஒற்றைப் பார்வையால் அழகாகிறேனடா…

எல்லாப் பெண்களுமே
நிற்கும் காரை கடக்கையில்
அதன் கண்ணாடியில்
தங்களைச் சரி செய்து கொள்கிறார்கள்.
நானோ
உன்னைக் கடக்கையில்
உன் முகத்தைப் பார்த்தே
சரி செய்து கொள்கிறேன்.

எதற்கெடுத்தாலும் வெட்கப்படுகிறாயே
என்று
என்னைக் கேலி செய்யாதே.
இந்த உலகில்
உன்னைத் தவிர வேறு யாராலும்
என்னை வெட்கப்படுத்த முடியாது.

கட்டிக்கப் போறவனை
“டேய்” என்று கூப்பிடலாமா
என்று அதட்டுகிறாள் என் அம்மா.
கட்டிக்கப் போறவனைக்
கூப்பிடுவதற்கென்றே
கண்டுபிடிக்கப்பட்ட சொல்தானே “டேய்”!

உன் காதலியாய் இருப்பது
எனக்குப் பிடிக்கவே இல்லை.
கால்பந்து ஆடிவிட்டு நீ
களைப்போடு சாய்கையில்
ஓடிவந்து உன்னை இழுத்து
மடியில் போட்டுக்கொள்ளத் துடிக்கும்
என் ஆசையை
உன் காதலியாய்
என்னால் நிறைவேற்ற முடியவில்லையே.
அதனால்தான் சொல்கிறேன்

உடனே என்னை
மனைவியாக்கிக் கொள்.

யமுனைதான்
எனக்குப் புண்ணிய நதி
அதுதான்
காதல் வாழும் தாஜ்மஹாலை
தொட்டுக்கொண்டு ஓடுகிறது.

என்னிடம் இருக்கும்
எந்த அழகு சாதனத்தை விடவும்
உன் ஒற்றைப் பார்வை
என்னை அழகாக்கி விடுகிறது.

“நீ இல்லாமல் என்னால்
உயிர் வாழ முடியாது” என்று
நீ சொல்வதை
நம்பமாட்டேன்.
நீ பிறந்து மூன்று வருடங்கள் கழித்துதானே
நான் பிறந்தேன்.
அந்த மூன்று வருடங்கள்
நான் இல்லாமல்தானே
நீ உயிர் வாழ்ந்திருக்கிறாய்!?

அத்யாயம் 19 & 20 (முடிந்தது)

அத்யாயம் 19

நான் அப்பா முன்னாடி நின்றுகொண்டிருந்தேன் அகிலாவுடன்.

“நைனா நான் இந்தப் பெண்ணை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்”. சொன்னவுடன் நெருங்கி வந்து பளீரென அறைந்தார்.

“ஏண்டா நாலு காசு சம்பாதிக்க ஆரம்பித்ததும். உனக்கு கூடப்படுத்துக்க பாப்பாத்தி கேட்குதா?”

உடனே அம்மா தலையிட்டு, “என்ன பாவா இது, சின்னப்பிள்ளைங்க கிட்ட இப்பிடியா பேசுறது” ன்னு கேட்டவுடன்.

அப்பா சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பிச் சென்றுவிட்டார்.

அம்மா என்னை அழைத்து, “டேய், நீ போய் கனிமொழியைக் கூப்பிட்டுட்டு வா”

நான் கனிமொழியை கூப்பிட்டு வரவும் அப்பா வீட்டுக்கு வரவும் சரியாக இருந்தது. அப்பா கனிமொழியிடம், “ஏய் உனக்கும் இதெல்லாம் தெரியுமா?”

“இல்லைப்பா, எனக்கு இதைப்பத்தி எதுவும் தெரியாது. அண்ணே இப்பத்தான் சொன்னாரு,” ஒரு குண்டை போட்டாள்.

“சரி பெண்ணு எப்பிடி, அவங்க குடும்பம் எப்பிடி?”

“அப்பா, பெண்ணு ரொம்ப நல்ல பெண்ணு, அவங்க அப்பா புரோகிதர், அம்மா கிடையாது. மற்றபடிக்கு நல்ல குடும்பம்தாம்பா..”

“ஏண்டி அந்த பொண்ணு எங்க?” இது அம்மாவிடம்.

“அகிலா, இங்க வந்து மாமா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்க!” அம்மா சொன்னதும் அகிலா வீட்டுக்குள்ளிருந்து வந்தாள். அம்மாவுடைய கல்யாணப் புடவை, அம்மாவுடைய நகைகள் எல்லாம் போட்டுக்கிட்டு, கல்யாண பெண்ணு மாதிரி இருந்தாள்.

“என்னங்க அப்பிடியே, குலதெய்வம் கோயிலுக்கு போய்ட்டு வந்திரலாம், அப்புறம் நீங்க அவங்க அப்பாகிட்ட பேசுங்க. ஆறு மாதம் கழிச்சு கல்யாணம் பண்ணிக்கலாம்.”

எங்கப்பாவும் ஒத்துக்கொள்ள, ஆறுமாதத்திற்குப் பிறகு எங்கள் திருமணம் நடந்தது.

அத்யாயம் 20

அன்புள்ள பாவாவுக்கு,

நல்லாயிருக்கீங்களா, உங்களுக்கென்ன, ஆண்டவன் உங்களுக்கு ஒரு குறையும் வைக்கமாட்டான். ஆனால் என்னைத்தான் இப்படி பழிவாங்கிட்டான் பாவி. உங்களை மாதிரி ஒரு கணவனை கொடுத்துட்டு பாதியிலேயே புடுங்கிக்கிட்டான்.

ஆனால் உங்களுக்கு எப்படி தெரியும் பாவா, நீங்கமட்டும் அன்னிக்கு அப்பிடி கேட்கலைன்னா. இன்னிக்கு உயிரோட இருப்பேனான்னா தெரியாது. ஒருநாள் ராத்திரி நான் புரண்டு படுக்கும் போது முழிச்சிக்கிட்டு இருந்தீங்க. நான் உங்களை தொட்டதும், ‘அகிலா நான் ஏதாவது காரணத்தால, செத்துட்டாலும் நீ உயிரோடயிருக்கணும். நம்ம புள்ளையை வளர்க்கணும்’னு சொன்னீங்க. நான் தூக்கக் கலக்கத்துல, ‘அப்பிடியெல்லாம் பேசக்கூடாது..’ னு சொல்லிவிட்டு இன்னும் இறுக்கமா உங்களை கட்டிக்கிட்டு படுத்துட்டேன்.

அன்னிக்கு உங்களுக்கு ஆக்சிடெண்ட்ன்னு சொன்னதும் நானும் உங்கம்மாவும் நம்பவே இல்லை, உயிரும் உடம்புமா இருந்த உங்களை அப்பிடிப் பார்க்கவே மாட்டோம்னு சொல்லிட்டோம். உங்கப்பாவை பார்த்து நான் ரொம்ப பயந்திருக்கேன். அதுவும், ‘கையில நாலு காசு வந்ததும் கூடப்படுத்துக்க பாப்பாத்தி கேட்குதா’ன்னு கேட்டாருல்ல, அதுல ரொம்பவும் பயந்துதான் போயிருந்தேன். அன்னிக்கு ஒரு பக்கம் நான் மயக்கமாக விழ, இன்னொருபக்கம் அத்தை மயக்கமாகி விழ, பாவம் அவரோட சோகத்தையும் மறைச்சிக்கிட்டு, அப்பப்பா உங்கப்பா ரொம்ப கஷ்டப்பட்டுட்டார். மோகனா அக்காவும் பரவாயில்லை சமாளிச்சிட்டாங்க.

உங்கம்மாவும், மோகனாவும் அவ்வளவு சோகத்திலையும் நான் பாத்ரூம் பக்கமோ, இல்லை வேறு எங்கேயாவதோ போனா பின்னாலையே வந்து நான் ஏதும் பண்ணிக்க போறேன்னு என் பின்னாடியே சுத்திகிட்டு இருந்தாங்க. நான் கூப்பிட்டு சொல்லிட்டேன். உங்க பையன் அன்னிக்கு கேட்டுக்கிட்டார். அதனால பயப்படாதீங்க. ஆனா எனக்கு உங்கம்மா மேல ரொம்ப பொறாமையாப் போச்சு, மாஞ்சு மாஞ்சு அழறாங்க. எனக்கு ஒன்னுதான்; எப்பிடி என்கிட்ட சொல்லாம போகமுடியும்; இனிமே உங்கிட்ட பேசமாட்டேன், உன்னைப் பார்க்க மாட்டேன், உன்னைத் தீண்டமாட்டேன்னு எப்பிடி சொல்லாம போகமுடியும்னு தான் அழுகையே.

பாவா, உங்க பையன் அப்பிடியே உங்களை மாதிரிதான். எங்கிட்டையும், அத்தைகிட்டையும் தான் இருப்பான். இதில் உங்கப்பாவுக்கு சிறிது வருத்தம் தான். அவன் அத்தைகிட்ட போனாலும் போவான். உங்கப்பாகிட்ட வரமாட்டான். இரண்டு வயசுதானே ஆகுது. சரியாயிரும்.

அன்னிக்கு உங்கக்காவும், அத்தையும் என்கிட்ட வந்து எதுவும் பேசாமல் ஒருத்தர் மூஞ்சியை ஒருத்தர் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. நான் என்னன்னு கேட்டேன். அதுக்கு அத்தை, ‘மாமா ரொம்ப வருத்தப்படறார். சின்ன வயசுதானே உனக்கு, இதே மோனாவுக்கு ஆயிருந்தா சும்மா விட்டிருப்போமா வேறு எதைப்பத்தியும் யோசிக்க மாட்டோம். அதானால… ‘ அப்பிடின்னு என்னன்வோ சொன்னாங்க. நான் நேரா மாமாவிடம் போய், “நான் இங்க இருக்குறதுல உங்களுக்கு ஏதும் பிரச்சனையா?” னு கேட்டேன்.

“என்னம்மா இது, இப்பிடியா பேசுறது. உனக்கென்ன சின்ன வயசுதானே?”

“மாமா, நானும் அவரும் வாழ்ந்த ரெண்டு வருடம் ரொம்ப சந்தோஷமாத்தான் வாழ்ந்தோம். அவரு பையனோடயே நான் வாழ்ந்திருறேன். கேட்டதுக்கு ரொம்ப சந்தோஷம் இனிமே இதப்பத்தி பேசாதீங்கன்னு” சொல்லிட்டேன்.

தாஸ் ஆரம்பத்திலேர்ந்தே நீங்க என்னிடம் ஒன்னும் கேட்டதில்லை, உங்களோட நான் சந்தோஷமாத்தான் இருந்தேன். ஆனா நீங்க என்கூட சந்தோஷமா இருந்தீங்களான்னு தெரியலை. ஆனா உங்கம்மாவும் அக்காவும் நீங்க சந்தோஷமாத்தான் இருந்ததா சொல்றாங்க. அதே போல் இப்பவும் ஒரு வேண்டுகோள். நீங்க எனக்காகக் காத்திருக்கணும், அடுத்த பிறவியிலும் நீங்கத்தான் எனக்கு புருஷனா வரணும். இது பேராசைன்னாலும் வேறு வழியில்லை, இன்னொருத்தரை புருஷனா என்னால கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியலை.

இப்படிக்கு உங்கள்
அகிலா.

(முடிந்தது.)

அத்யாயம் 15 & 16

அத்யாயம் 15

அதற்குப் பிறகு எனக்கு நேரம் கிடைப்பதே அரிதாக இருந்தது, கிளெயண்ட் இடம் போய், டிடெயல்ஸ் வாங்கி வந்து, புரோஜக்ட்ல் வேலை பார்த்துக் கொண்டிருந்ததால், மிகவும் சிரமமாக இருந்தது, அந்த நாட்களில் நானும் சார்லசும் இரவு ஐந்து, ஆறு மணிநேரம் தினமும் வேலை பார்த்துக் கொண்டிருந்தோம். உணவை பற்றி கவலைப்படாத நாள்கள், அவர்களுக்கும் காலேஜ் வேலை சரியாக இருந்ததால் பல நாட்கள் பார்க்கக்கூட முடியாது. சில நாட்கள் பார்த்தாலும் ஹாய், ஹலோ சொல்லத்தான் நேரம் இருக்கும்.

நான் உணவு உட்கொள்ளாத காரணத்தால் மெலியத் தொடங்கியிருந்தேன், கண்கள் உள்ளே சென்றுவிட்டதாக சனிக்கிழமை பார்க்க வந்திருந்த அம்மாவும் அக்காவும் சொன்னார்கள். திங்கட்கிழமை மதிய உணவுவேளையில் நானும் சார்லசும் கிளாசில் உட்கார்ந்து புரோஜக்ட் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அவன் அந்த வாரம் செய்ய வேண்டியதை சொல்லிவிட்டு அதற்கு உதாரணங்களை காட்டிக்கொண்டிருந்தேன். கனிமொழியும், அகிலாவும் அங்கு வந்தார்கள்.

அகிலா வேகமா என்னருகில் வந்து என் லாப்டாப்பை மூடி கையில் எடுத்துக் கொண்டாள்.

“ஏய் என்னாடி பண்ணுற?”

“ஒன்னும் பேசாதீங்கண்ணே, நேத்திக்கு அம்மாவும் அக்காவும் ஹாஸ்டலுக்கு வந்திருந்தார்கள். அம்மா ஒரே அழுகை, உங்களை அப்படிப் பார்க்கவே முடியலையாம். என்னைத்தான் திட்டினார்கள். நீங்கள் எல்லாம் இருக்கிறீர்கள்தானே. அவன் சாப்பிடுறதேயில்லை, கேட்கிறதில்லையான்னு?”

“உங்கக்கா என்கிட்ட வந்து, என்னாடி அவனை காதலிக்கிறேன்னு சொன்னே, அவனோ லூசு மாதிரி கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துக்கிட்டிருக்கான். நீ அவனை தினமும் பார்க்கிறியான்னு கேட்கிறாங்க. நான் என்னத்த சொல்றது, நான் உங்களை பார்த்தே பத்து நாள் இருக்கும். சார்லஸ் கூட வண்டியில் வறீங்க, காலேஜ் முடிஞ்சதும் போயிர்றீங்க. இனிமே உங்க இரண்டு பேருக்கும் மதியம் சாப்பாடு எங்ககூடத்தான்.”

“சொல்லியாச்சுல்ல, கொடு அதை. உங்ககூட சாப்பிட்டா தப்பா நினைக்காமாட்டாங்களா. லூசுங்களா”

“சரி எங்ககூட சாப்பிட வேண்டாம், நான் கேன்டீனில் சொல்லிடுறேன் சாப்பாட்டுக்கு, நீங்க சாப்பிடலைன்னா வந்து லாப்டாப்பை தூக்கிட்டு போயிருவேன், சரி இப்ப போய் சாப்பிட்டு வந்து வாங்கிக்கங்க.”

ஆனால் சிறிது நாள்களில் எங்களுக்கு எல்லா டேட்டாக்களும் வந்து சேர்ந்து விட்டது, டாக்குமெண்டேஷனும் முடிந்து விட்டது. இனிமே வெறும் புரோக்கிராம் தான் மீதமிருந்தது. அதனால் தினமும் நானும் சார்லசும் சாப்பிடத்தொடங்கியிருந்தோம். செங்குட்டுவன் சார் கூப்பிடுறதா சொல்லி அட்டெண்டர் வந்து சொன்னார். போய்ப் பார்த்தேன்.

“மோகன், பார்ட் பெஸ்ட்க்கு அழைப்பு வந்தாச்சு, சேர்மன் உன்னைக் கூப்பிட்டு கொடுக்கச்சொன்னார். நான் அவரிடம் சொல்லிவிட்டேன் நீ கொஞ்சம் பிஸியென்றும் இந்த வருடம் வேறு யாரையாவது வைத்து பண்ணிக்கொள்ளலாம் என்று. ஆனால் அவருக்கு இதில் சிறிது கோபம். அதானால் நீ சி ன்னதா பண்ணிக் கொடுத்துறு. ப்ரைஸ் கிடைக்கலன்னாலும் பரவாயில்லை. எப்பிடியிருந்தாலும் எலக்கேஷன்ல நீதான் வருவ. என்ன?”

“சார் பரவாயில்லை, நான் நாடகம் பண்ணித்தரேன், ஆனா நான் இந்த வருடம் பேசவில்லை, வேறு யாரையாவது பேசவைக்கலாம்.”

“யாராவது மனசில் இருக்காங்களா?”

“அதெல்லாம் இல்லை சார், காம்படீஷன் நடத்துங்க, ஜெயிக்கிறவங்க கலந்துக்கிட்டும்.”

“அப்ப ஒரு ப்ரைஸ் போயிருச்சு, நாடகத்துக்கு கிடைக்குமா?”

“அப்படியெல்லாம் இல்லை சார், பேச்சுலயும் நான் வாங்க வைக்கிறேன். இந்த வருஷம் நாடகத்துக்கு நமக்குத்தான், சார் அப்ப நான் ஆரம்பிக்கிறேன். ரிகர்ஸல் எப்ப பார்க்கிறீங்க.”

“ரிகர்ஸல் எல்லாம் வேண்டாம், உனக்கு நம்பிக்கையிருந்தா போதும், பேச்சுப்போட்டிக்கு நீயே ஆளை செலக்ட் பண்ணிரு”

“இல்லை சார், அது நல்லாயிருக்காது. இந்த வாரம் சனிக்கிழமை நடத்தி நீங்களே செலக்ட் பண்ணிடுங்க” சொல்லிவிட்டு நேராக முதலாம் ஆண்டு வகுப்பிற்கு வந்தேன். பேசுவேன்னு சொன்ன பையனை செங்குட்டுவனை பார்க்கச் சொல்லிவிட்டு கனிமொழியையும் அகிலாவையும் கேன்டீனுக்கு கூப்பிட்டேன்.

“அகிலா, இந்த வருஷம் பேச்சுப்போட்டியில் நான் கலந்துக்கலைன்னு சொல்லிட்டேன். அதனால இந்த சனிக்கிழமை காலேஜில் ஒரு போட்டியிருக்கும். ஜெயிச்சா நீ கலந்துக்கலாம்”

“நான் கலந்துக்கலை…”

“ஏன்?”

“கலந்துக்கலைன்னா கலந்துக்கலை, இதுக்கு என்ன காரணம் சொல்ல?”

“உதை வாங்குவ, உனக்காகத்தான் நான் பேசலைன்னு சொன்னேன், இப்ப நீ இப்பிடி சொன்னாயெப்படி?”

“தெரியும் எனக்கு, அதனாலத்தான் சொல்றேன் நீங்களே கலந்துக்கோங்க, நான் கலந்துக்கிட்டாலும் தோத்திடுவேன்.”

“அப்பிடியெல்லாம் தோக்க விடுவேனா, நான் எழுதி தரேன நீபோய் பேசு. அப்புறம் ஒரு நாடகம் நானும் கனிமொழியும், தேவையிருந்தா நீயும். என்ன கனிமொழி?”

“அண்ணே, இதுக்கு முன்னாடி யாரும் வரமாட்டாங்க அதனால நான் நடிச்சேன். இப்பத்தான் இவ நடிப்பாளே; இருந்தும் நான் நடிக்கணுமா?”

“இங்கபாரு இதுல கொஞ்சம் மெச்சூர்டான பெண்ணு வேணும், அதுக்கு நீதான் சரியாயிருப்ப. அதுவும் இல்லாம இந்த நாடகத்தில் பெண்களுக்கு காலம் காலமா நடக்கும் கொடுமைகளைக் காட்ட வேண்டியிருக்கும், சில இடத்தில் பெண் கேரக்டரை அடிக்கிற மாதிரி கதையிருக்கும்…”

“அதானே பார்த்தேன். சோழியன் குடுமி சும்மா ஆடுமா. இவளை அடிக்க மாட்டீங்க, என்னை அடிப்பீங்க அப்பிடித்தானே?”

“ஏம்மா ஏறுக்குமாறா பேசுனா எப்படி, பதில்தான் வேணும்னா, ஆமாம்னு வைச்சுக்கோயேன்.” சொல்லி விட்டு அகிலாவைப் பார்த்தேன், அவளுக்கு இதில் விருப்பம் இல்லையென்று தெரிந்தது. நான் முடிவை மாற்றுவதாக இல்லை. ஆனால் கடைசியில் நாடகத்திலும் அவள்தான் நடித்தாள்.

அத்யாயம் 16

அடுத்த நாள், கனிமொழி என் முன்னால் நின்று கொண்டிருந்தாள்.

“என்னம்மா?”

“நான் நடிக்கலை அந்த நாடகத்தில்?”

“ஏன் என்னாச்சு?”

“நேத்திக்கு பூரா மூஞ்சிய தூக்கிவச்சுகிட்டு இருந்தா, நான் அவளை டிஃபண்ட் பண்ணலையாம். நான் சொன்னா நீங்க கேப்பீங்களாம். ஆனா நான் சொல்லாமாட்டேன்னு சொல்லிட்டு அதுக்கு பிறகு என்கூட பேசவேயில்லை. எங்க இரண்டுபேருக்கு இடையில் சண்டை மூட்டி விடாதீங்கண்ணே. அவளே நடிக்கட்டும்.”

“அப்பிடியா, சரி அவளே நடிக்கட்டும். ஆனால் நான் கதையை மாத்திருறேன். சீதை, திரௌபதி, இவங்களை மாதிரி பொண்ணுங்களையெல்லாம் வித்தியாசமா காட்டி, பெண்ணுங்களை தெய்வமா பாக்காதீங்க, பெண்ணா பாருங்க அதுபோறும்னு சொல்லலாம்னு நினைச்சேன். இப்ப அதை மாத்திவிட்டு சுதந்திர போராட்டத்த வித்தியாசமா காட்டப்போறேன். நீ அவக்கிட்டையும் இதைச் சொல்லிறு.”

கல்லூரியில் நடந்த பேச்சுப்போட்டியில் அவள் தான் ஜெயித்தாள். நாங்கள், குமரனையும், கப்பலோட்டிய தமிழனையும் வித்தியாசமாகக் காட்டி நாடகம் போட்டோம் (பக்கத்தில் கொடி பிடிக்கிற கதாப்பாத்திரம் அகிலாவுக்கு). அவளுக்கு முதலில் கோபம்தான். பின்னர் நடித்துக் கொடுத்தாள். அவளுக்கு பேச்சுப்போட்டியில் இரண்டாம் பரிசும், நாடகத்திற்கு எங்களுக்கு முதல் பரிசும் கிடைத்தது.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் நாங்கள் சந்தித்துக் கொள்வது சிரமமானது. நான் புரோஜக்டிலும் அவர்கள் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான நேரம் அது. சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இருவரும் வருவார்கள். கொஞ்ச நேரம் பேசிவிட்டுப் போய்விடுவார்கள். செமஸ்டர் பரிட்சை வந்தது, மிகவும் கஷ்டமான காலங்கள். புரோஜக்ட் முடியும் தருவாயில் இருந்தது. எக்ஸாமுக்குப் படிக்கவும் வேண்டும். எக்ஸாம் ஒருவழியாக முடிந்தது. ஒருநாள் கனிமொழியும், அகிலாவும் வந்தார்கள்.

“நாங்கள் ஊருக்குப் போகிறோம், நீங்க வரீங்களா?” என்றாள் கனிமொழி.

“உங்களை மாதிரி வேலை வெட்டியில்லாதவனா நான், ஊர் சுத்துவதற்கு? எனக்கு ஆயிரம் வேலையிருக்கு. நீங்க போய்ட்டுவாங்க”

“நீங்க வேலையைக் கட்டிக்கிட்டு அழுங்க, நாங்க போய்ட்டு வர்றோம்” – இருவரும் பழிப்பு வேறு காட்டிவிட்டுப் போனார்கள்.

பதினைந்து நாள் விடுமுறை, எனக்குக் கிடைத்த அற்புதமான வாய்ப்பு. செதுக்கிச் செதுக்கி நானும் சார்லசும் அந்த புரோஜக்டை முடித்தோம். நாள்களும் முடிந்திருந்தது. நாளை கல்லூரி தொடங்கும் நாள். சார்லஸ் வேலையிருப்பதாகச் சொல்லிவிட்டு வீட்டுக்குப் போய்விட்டான். நான் மேனுவல் டெஸ்டிங் மற்றும் சில டெஸ்டிங்க டூல் எல்லாம் வைத்து எல்லாம் ஒழுங்காப் போகுதான்னு பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது மணி காலை பதினொன்று இருக்கும். பசித்தது. எதாவது சாப்பிட்டுவிட்டு வரலாமேன்னு நினைத்து வெளியே வந்தேன். அகிலா வந்து கொண்டிருந்தாள்.

“என்னாடி ஊரெல்லாம் சுத்திட்டு வந்தாச்சா?”

“ம்ம்ம், முடிஞ்சிருச்சு, நீங்க சாப்பிட்டீங்களா?”

“அதுக்குத்தான் கிளம்பிட்டுருக்கேன்!”

“நான் நினைச்சேன், அதனாலத்தான் உங்களுக்கு சாப்பாடு வாங்கி வந்தேன், சாப்பிடுங்க. எனக்கு ரொம்பக் களைப்பா இருக்கு. சரி உங்களை பார்த்துட்டு ஹாஸ்டல் போகலாம்னு வந்தேன். ம்ஹூம் முடியலை. நான் கொஞ்ச நேரம் தூங்குறேன். சாயந்திரமா எழுப்பிவிடுங்க. என்ன?”

“சரி தூங்கு, கனிமொழி எங்க?”

“நான் வீட்டில் இருந்து நேரா இங்க வந்திட்டேன். அக்கா வீட்டுக்கு போயிருக்கு; நாளைக்கு வரும். புரோஜக்ட் முடிஞ்சிருச்சா?”

“சூப்பரா முடிஞ்சிருச்சு, பார்க்கிறியா?”

“ஆமாம் அதைவிட்டா வேற வேலையில்லை பாருங்க, உங்களைமாதிரி,” சொல்லிவிட்டுப் போய் கட்டிலில் படுத்துத் தூங்கத் தொடங்கினாள்.

நான் சாப்பிட்டுவிட்டு மீதமுள்ள டெஸ்டிங் பண்ணிக் கொண்டிருந்தேன்.

“என்னங்க மணியென்ன, ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போலிருக்கு?”

“மணி பத்தரை” நான் சொல்லிவிட்டுப் பேசாமல் இருந்தேன்.

“என்னங்க இது, பத்தரையா நான் எப்படி ஹாஸ்டல் போறது? நான் உங்களை எழுப்பிவிடச் சொன்னேன்ல?”

“அசந்து தூங்கிட்டிருந்த, அதான் எழுப்ப மனமே வரலை…”

அகிலா அன்று இரவு ஹாஸ்டல் போகவில்லை.

(தொடரும்…)

அத்யாயம் 17 & 18

அத்யாயம் 17

காலையில், “யேய், காலேஜ் வரலை?”

“நீங்க போங்க, எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கு, போறப்ப ஒரு சாவியை இங்க வைச்சுட்டு வெளியில பூட்டிட்டு போயிருங்க”

திரும்பவும் பதினைந்து நாள் கழித்து பார்த்ததால், அன்றைக்கு எல்லாருடனும் பேசிக்கொண்டிருந்து விட்டு, இந்த செமஸ்டர் எல்லாரும் என்னா புரோஜக்ட் செய்யப் போறாங்கன்னு கேட்டுக் கொண்டிருந்ததில். மூணு மணிநேரம் ஓடியதே தெரியவில்லை.

சாப்பிட கான்டீன் வந்தால், மாம்பழ கலர் பாவாடையும் கருப்பு கலர் தாவணியும் போட்டுக்கிட்டு, ஷாம்பூ போட்ட குளிச்ச தலைமுடி பறக்க, நெத்தியல அழகா, சின்னதா ஒரு குங்குமப்பொட்டு வச்சுக்கிட்டு. சூப்பரா தேவதை மாதிரி இருந்தாள். அவளுடைய மாம்பழ நிற உடம்புக்கு அந்தக் கருப்பு தாவணி மிக அழகாக இருந்தது. இதுதான் நான் முதல் முறை அவள் தாவணி கட்டிப்பார்க்கிறேன்.

“தாஸ் வாயை மூடுங்க, ஈ எதுவும் உள்ளே போயிரப்போகுது. இப்பிடியா ஜொள்ளு உடறது.”

“ஏய் என்னன்னு கூப்பிட்ட?”

“தாஸ்னு… ஏன்?”

“ரொம்ப கொழுப்பு ஏறியிருக்கு நேத்தியிலேர்ந்து…”

“இனிமே அப்பிடித்தான், யாரும் பக்கதில் இல்லைன்னா செல்லமா தாஸ்தான்…”

“ஏய் இன்னிக்கு நீ எவ்வளவு அழகா இருக்க தெரியுமா? அப்பிடியே தூக்கிட்டுபோய்…”

“பாருங்க, இனிமேல் தொட்டீங்கன்னா கடிச்சுடுவேன்…, இன்னிக்கு நாலே காலுக்கு உங்க கிளாசுக்கு வருவேன். என்னைக் கூட்டிக்கிட்டு கோயிலுக்கு போகணும், உங்க புரோஜக்டை தூக்கி குப்பையில் போடுங்க.”

“நீங்க சொல்லீட்டீங்கன்னா சரிதான் மேடம்.”

அவள் என்னைப் பார்க்க வரும் பொழுது, புதிதாய் சேர்ந்திருந்த அவள் கிளாஸ் மாணவி ஒருத்தி (கேரளா) என்னிடம் வந்து நோட்ஸ் கேட்டுக் கொண்டிருந்தாள். கொடுமையென்னவென்றால் அவளே ஜோக் சொல்லி அவளே சிரித்துக் கொண்டிருந்தாள். நானும் தப்பா நினைக்கக்கூடாதேன்னு சிரித்து வைத்தேன். அவள் சென்ற பிறகு என்னிடம் வந்தாள் அகிலா.

“அவகிட்ட சிரிச்சு, சிரிச்சு அப்படியென்ன பேச்சு, ஒரு நாள், எனக்கும் அவளுக்கும் சண்டையாயிருச்சு தெரியுமா. சரி அவ என்ன கேட்டா?”

“வேறென்ன நோட்ஸ்தான்…, சரி என்ன சண்டை?”

“அதெல்லாம் பொம்பளங்க சமாச்சாரம், நான் பாத்துக்கிறேன். அவளுக்கு நீங்க என்ன பதில் சொன்னீங்க?”

“வேறென்ன, இங்க கேட்டா கிடைக்காது. என் வீட்டுக்கு வந்து கேளு. அதுவும் இப்பெல்லாம் ஒரு பொண்ணு வீட்டிலேயே இருக்கு. அதனால அவகிட்ட நான் எப்ப ·பிரின்னு கேட்டு சொல்றேன். அப்ப வந்து கேளுன்னு சொன்னேன்.” சொன்னதும்தான் தாமதம் விருட்டென்று கிளம்பி வெளியே ரோட்டில் நடக்க ஆரம்பித்தாள்.

நான் மெதுவாக சார்லசின் வண்டியை எடுத்துக் கொண்டு அவள் பின்னால் வந்து நிறுத்தி. “ஏய் இந்தாடி, ஏறிக்கோ” சொன்னதும் ஏறிக்கொண்டாள். ஆனால் வண்டியில் எனக்கும் அவளுக்கும் ஒரு கிலோமீட்டர் தூரம் இருந்தது.

நாங்கள், கோயிலுக்கு போனோம். நான் கடவுளை நம்புகிறவன் இல்லையென்றாலும் அவளுடன் கோயிலுக்கு உள்ளே வந்தேன். குருக்கள் விபூதி தந்ததும் வாங்கிவிட்டு கையிலே வைத்திருந்தேன். என்னைப் பற்றி தெரியுமாதலால் அவள் கையில் இருந்த விபூதியை என் நெற்றியில் பெரிதாக வைத்துவிட்டாள். பிறகு நாங்கள் ஹோட்டலுக்கு வந்தோம். ஆனால் அதுவரை அவள் என்னிடம் ஒருவார்த்தை கூட பேசவில்லை.

ஹோட்டலில் என் பக்கத்தில் அவள் உட்கார்ந்ததும், அவளிடமிருந்து ஒரு வாசனை வீசியது. அவள் வைத்திருந்த மல்லிகைப்பூவும், அவள் வேர்வையும் சேர்ந்த அந்த வாசனையால் தடுமாறிய நான் அவள் தோளைச் சுற்றி கையை போட்டேன். என் கையை எடுத்து கீழே வைத்துவிட்டு, “இதுக்கு மட்டும் நான் வேண்டுமாக்கும், அந்தக் கேரளாக்காரி மேல போய் போடவேண்டியது தானே?”

நான் அதற்குப் பிறகு அவளிடம் எதுவும் பேசிவில்லை. அவளை திரும்ப கொண்டுவந்து ஹாஸ்டலுக்கு பக்கத்தில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தேன்.

அதற்கு பிறகு இரண்டு நாள் நான் அவளிடம் பேசவில்லை, அவள் என்னை பார்க்க வந்தாலும் நான் முகத்தை திருப்பிக்கொண்டு வந்துவிட்டேன். இரண்டு மூணு முறை என்னிடம் பேசமுயன்றாள். நான் பேசாமல் நகர்ந்து விட்டேன். அடுத்தநாள் சனிக்கிழமை வீட்டுக்கே வந்துவிட்டாள். நேராக என் எதிரில் வந்து நின்று, இடுப்பில் கையை வைத்துக் கொண்டு, “இப்ப நான் என்ன பண்ணனுங்கிறீங்க?”

நான் உடனே, “சேலை கட்ட தெரியும்னா, போய் கட்டிக்கிட்டுவா, ஒரு வேலையிருக்கு…”

அத்யாயம் 18

அரைமணி நேரத்தில் நாங்கள் மதுரை-திருச்சி ரோட்டில் பைக்கில் போய்க்கொண்டிருந்தோம் ஆனால் இடைவெளி மட்டும் அப்படியே இருந்தது.

“நாம இப்ப எங்க போறோம்?”

“எங்கப்பாவைப் பார்க்க…”

“எதுக்கு?”

“நம்ம விஷயத்தை சொல்லப்போறோம்…”

“இங்கப் பாருங்க, அதுக்கு முன்னாடி உங்க அம்மாகிட்ட சொல்லலாம்ல, உங்கப்பா கோபக்காரருன்னு வேற சொல்றீங்க. உங்கம்மாகிட்ட சொன்னா அவங்க நமக்கு உதவி பண்ணுவாங்கல்ல…”

“அம்மாவுக்கு எல்லாம் தெரியும்…” நான் சொல்லி நிறுத்தினேன்.

“தாஸ், கொஞ்சம் வண்டியை நிறுத்துங்க.”

நான் பக்கத்தில் இருந்த ஒரு மரத்தடியில் வண்டியை நிறுத்தினேன். நேரே என்னெதிரில் வந்தவள்.

“என்ன சொன்னீங்க?”

“அம்மாவுக்கு எல்லாம் தெரியும்னு…”

“எல்லாம்னா?”

“எல்லாம் தான்.”

அவள் உடனே தலையில் அடித்துக் கொண்டு, பக்கத்தில் இருந்த மரத்தடியில் உட்கார்ந்தாள். ஐந்து நிமிஷம் இருக்கும். லேசாக சிரித்துக் கொண்டே என்னருகில் மீண்டும் வந்தவள்.

“என்ன தாஸ் இது, அம்மாகிட்ட எதையெல்லாம் சொல்றதுன்னு விவஸ்தையில்லை, நான் இனிமே உங்கம்மா முகத்தில எப்பிடி முழிப்பேன். அன்னிக்கு ஹாஸ்டல்ல என்னைய விட்டுட்டு போனதுக்கு பிறகு என்ன நடந்தது. உங்கம்மா கிட்ட எப்ப சொன்னீங்க, அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க?”

“அன்னிக்கு என்கிட்ட அப்பிடி நடந்துக்கிட்டதுக்காக, எனக்கு உம்மேல துளிகூட கோபமில்லை, உனக்கும் அப்படித்தான்னு தெரியும். ஆனா அன்னிக்கு நைட்டு தூக்கமே வரலை எனக்கு, ஒரே கெட்ட கெட்ட கனவா வந்தது. ஏற்கனவே சின்ன பெண்ணை ஏமாத்திட்டதா ஒரு கில்டி ஃபிலிங். கனவுல இந்தியன் தாத்தா வந்து, ‘செய்வியா, செய்வியா’ ன்னு கத்தியில குத்துறார். ஒரு பையன் வந்து, ‘நீ இந்த செமஸ்டர்ல மூணு அரியர்’னு சொல்றான். நான் ரொம்பவே பயந்திட்டேன். இடையில நீ வேற கனவுல வந்து சிரிக்கிற. முதல் நாள் சமாளிச்சிட்டு காலேஜ் வந்தேன். நீ வேற விடாம திரும்பத் திரும்ப வந்து என்னைப் பார்த்துக்கிட்டிருந்தியா… அதான் அடுத்த நாள் நேரா போய் அம்மாகிட்ட சொன்னேன்.”

“என்னன்னு சொன்னீங்க?”

“அம்மாவுக்கு ஏற்கனவே இதப்பத்தி தெரியும், நானும் அம்மாவும் பேசிவச்சிட்டுத்தான் அன்னிக்கு உன்னைய பூஜைக்கே வரச்சொல்லியிருந்தோம். அதானால நான் அம்மாகிட்ட நேராப் போய், ‘நைனாகிட்ட பேசு’ ன்னு சொன்னேன். அம்மா அதுக்கு என்னடா அவசரம்னு கேட்டாங்க; நான் அவசரம் தான்னு சொல்லிட்டு தலையை குனிஞ்சுகிட்டேன். அம்மாவுக்குப் புரிந்துவிட்டது…”

“அத்தே என்ன சொன்னாங்க?”

“நான் அப்பவே நினைச்சேன்னு சொன்னாங்க”. நான் சொல்லிவிட்டு சிரித்தேன். பக்கத்தில் வந்து தலையில் ஓங்கி ஒரு குட்டு வைத்துவிட்டு, “பண்ணியதெல்லாம் நீங்க, கெட்டபேரு மட்டும் எனக்கா? அத்தே என்னைத்தான் தப்பா நினைச்சிருப்பாங்க. சரி அது என்னா கையில, என்னவோ வைச்சிருக்கீங்க?”

“உனக்குத்தான்” சொல்லிவிட்டு கையில் வைத்திருந்த தங்கச் சங்கிலியை அவளிடம் கொடுத்தேன்.

“ஐ, எனக்கா சூப்பராயிருக்கு. உண்மையை சொல்லுங்க உங்களுக்கு இதெல்லாம் தோணாதே, யார் சொன்னாங்க வாங்கிக்கொடுக்கச் சொல்லி?”

“யாரும் சொல்லலை, அம்மாதான் இதை கொடுத்து, அகிலாகிட்ட கொடுன்னு சொன்னாங்க.”

நான் சொன்னதும், அதுவரை அவள் கையில் வைத்திருந்த லாப்டாப்பை என் கையில் திணித்து, “நீங்க இதையே கட்டிக்கிட்டு அழுங்க, உங்களையெல்லாம் நான் கல்யாணம் செய்துக்க முடியாது.”

(தொடரும்…)

அத்யாயம் 13 & 14

அத்யாயம் 13

குளித்துவிட்டு வந்து பார்த்தால், என் லேப்டாப்பை மடியில் வைத்து என்னமோ பார்த்துக் கொண்டிருந்தாள். அதுவரை சுத்த சைவம் என் லாப்டாப். சொல்லப்போனால், நான் அதுவரை என் அக்காவைக் கூட தொடவிட்டதில்லை, ஆனால் வாழ்க்கையில் சில விஷயங்களை நாம் நினைப்பதைப் போல் நடப்பதில்லை, இரண்டு மாதங்களுக்கு முன்னர் நான் இவளை சந்தித்த நாளில், நான் சத்தியமாய் நினைக்கவில்லை, ஒரு நாள் இவள் என் ரூமில், தனியாக, என் லாப்டாப்பை மடியில் வைத்து பார்த்துக் கொண்டிப்பாள் என்று.

“என்னங்க இது, ஒரு கேம் கூட இல்லை, வெறும் சாப்டுவேரா இருக்கு”

“நான் விளையாட கம்ப்யூட்டர் வாங்கவில்லைன்னு நினைக்கிறேன், சரி சிலபஸ் இருக்கா. நாம வரிசையா பார்ப்போமா.”

சொல்லப்போனால் அடுத்த ஐந்து மணிநேரம் நான் அவளுக்கு சி லேங்குவேஜ் பற்றி அவள் தேர்வுக்கு தேவைப்படும் எல்லாமும் சொல்லிக் கொடுத்திருந்தேன், அவளும் சும்மா சொல்லக்கூடாது ரொம்ப ஆர்வமாய் கற்றுக் கொண்டிருந்தாள். கடைசியில் அவள் முகம் சுருங்குவது போல் இருந்தது உடனே நான்,

“என்னா போர் அடிக்குதா?”

“போர் எல்லாம் அடிக்கலை, பசிக்குது. நான் காலையில் இருந்து சாப்பிடலை, சரி இங்க வந்தா உங்ககூட சாப்பிடலாம்னு பார்த்தா, எனக்கு சாப்பாடு போடாம சி சொல்லித்தந்து கொன்னுறுவீங்க போலிருக்கு, நல்லா சொன்னாரு வள்ளுவர், செவிக்குணவில்லாத பொழுது சிறிது வயிற்றுக்கும் ஈய்யப்படும்னு. உங்கக்கூட வந்தா வயிற்றுக்கு உணவு கிடையாது போலிருக்கு, வெறும் செவிக்கு மட்டும் தானோ?”

“ஏய் சொல்லலாம்ல, நானும் சாப்பிடலை. பசிக்கவேயில்லை, சரி உட்கார்ந்திரு, ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வர்றேன்.”

நாங்கள் சாப்பிட்டு முடித்ததும், “சரி நான் வரலையின்னா, எப்ப சாப்பிடுவீங்க?”

“சில சமயம் சாப்பிடவேமாட்டேன், இராத்திரி எல்லாத்தையும் சேர்த்து ஒன்னா சாப்பிடுவேன். சரி படிப்போமா?”

“இல்ல தலைக்கு மேல ஒரே ப்ளென்சரா போய்க்கிட்டிருக்கு, வேற எதாச்சும் பேசுவோமே?”

“எதைப்பத்தி?”

“ஏன் வாழ்க்கையில சி யையும், கம்ப்யூட்டரையும் தவிர வேறு ஒன்றும் இல்லையா?”

“சரி எதைப்பத்தி பேசலாம் நீயே சொல்லு?”

“வாழ்க்கையைப் பத்தி…”

“உனக்கு இன்னும் அந்த அளவுக்கு வயது வரலைன்னு நான் நினைக்கிறேன்.”

“இங்கப்பாருங்க, நான் ஒன்னும் சின்னப் பொண்ணு கிடையாது. வயசாகலையே தவிர எனக்கும் சில விஷயங்கள் தெரியும், எங்கம்மா இறந்தப்ப எனக்கு மூணுவயசு, அப்புறம் நானும் அப்பாவும் தான். நான் சமைக்க ஆரம்பிச்சப்ப வயசு எட்டு, அப்பாவை பார்க்க கஷ்டமா இருக்கும், ஆனா அவரு எனக்காகத்தான் வாழ்கிறார். அவருகிட்ட நான் இன்னிக்கு போய் நான் இப்பிடி மோகன்னு ஒரு பையனை காதலிக்கிறேன்னு சொன்னால். சத்தம் போடமாட்டார், உட்கார்ந்து யோசிப்பார். நான் செலக்ட் பண்ணியிருக்கேன்னா தப்பாயிருக்காதுன்னு நினைப்பார். உங்களைப் பத்தி விசாரிப்பார். பிடிச்சிருந்தா நிச்சயம் கல்யாணம் பண்ணிவைப்பார். எனக்கும் எங்கப்பாவுக்கும் ஈகோ பிராப்பளம் கிடையாது; நான் நல்ல பையனையே பார்த்திருந்தாலும், அவருக்கு தெரியாம பண்ணிட்டேன்னு எகிறி குதிக்க. உங்களமாதிரியே அவரும் ஒரு நல்ல மனிதர்.”

“சரி உங்கப்பா நல்ல மனிதராகவே இருக்கட்டும், நான் நல்ல பையன்னு நீ எப்படி கணக்கு போடலாம். நான் பெண்ணுங்க கூட பேசறதில்லை என்பதால் நல்ல பையனாதான் இருப்பேன்னு நினைக்கிறியா?”

நான் கேட்டதும் சிரித்தாள் பிறகு,

“தனியா ஒரு ரூம், தன்னைக் காதலிக்கும் பதினெட்டு வயது, சுமாரான அழகுள்ள ஒரு பொண்ணு, ஆனா உங்களால ஐந்து மணிநேரம் வேறு எதையும் பத்தி யோசிக்காம, உங்க பார்வை கூட மாறாம, சி சொல்லித்தர முடியும்னா நீங்க நல்ல பையன்தான். அது மட்டுமில்லாம நீங்க சிகரெட் குடிக்க மாட்டீங்க, தண்ணியடிக்க மாட்டீங்க, இதுவே போதும். நான் இரண்டு வருஷம் பொறுத்துக்கூட என் காதலைச் சொல்லியிருப்பேன். ஆனா ஒன்னுமே தெரியாத இந்தப் புள்ளையை வேறு யாராவது, எதையாவது காட்டி மயக்கிட்டா, அதனாலத்தான் நான் அவ்வளவு சீக்கிரம் சொன்னது. நீங்கத்தான் இப்படி, உங்கக்கா எமகாதகி, நான் நினைச்சதை எவ்வளவு அழகா சொன்னாங்க தெரியுமா, ‘இங்கப்பாரு அவன் உன்னை குழந்தைம்பான்; ஆனா அவன்தான் குழந்தை, கம்ப்யூட்டரையும், பேச்சுப்போட்டியையும் தவிர வேறு ஒன்னும் தெரியாது. உன்னைப் பார்த்தால் அவனுக்கு ஏத்த பெண்ணா இருக்கு, நான் அம்மாகிட்ட பேசுறேன். ஆண்டவன் தான் எங்க அப்பாகிட்ட பேசணும். அவனை பத்திரமா பார்த்துக்கோ’ னு சொன்னாங்க அன்னிக்கே. நான் வேறு எதாவது சொல்லணுமா இதைப்பத்தி.”

நான் வாயடைத்து நின்று கொண்டிருந்தேன்.

அத்யாயம் 14

“சரி முதல் நாள் நான் உன்னை அடிச்சப்ப நீ என்ன நினைச்ச?”

“உங்களுக்கு ஒன்னு தெரியுமா, நீங்க ஆரம்பிச்ச தமிழ் வாழ்த்துப் பாட்டு, முடிச்சப்ப சொன்ன சிலவரிகள்னு எல்லாமே நான் வழக்கமா சொல்றது. எனக்கு ஆச்சர்யமாயிருந்தது, இதுல கூட ஒருத்தரோட ஒற்றுமையிருக்குமான்னு, ஆனா உங்களைப்பத்தி அன்னிக்கு சொன்னதுல கோபமாவீங்கன்னு நினைக்கலை. பேச்சுப்போட்டியில பேசுறவங்க பெரும்பாலும் இந்த மாதிரி எதிர்ப்புக்களைச் சந்திச்சிருப்பாங்க. ஒரு வேளை நான்- ஒரு பெண்ணு- உங்களை இப்படி சொன்னது தான் பிரச்சனைன்னு நினைச்சேன் அவ்வளவுதான்.”

நான் பேச்சை மாற்ற விரும்பி, “சரி கனிமொழி இங்க வரவேண்டியது தானே, வேறு எதும் பிரச்சனையா?”

“அதெல்லாம் ஒன்னுமில்லை, நான்தான் வரவேண்டாம்னு சொன்னேன். அக்காவுக்கு கோபம், உங்ககிட்ட தனியா பேசணும்னு தான் முக்கியமா வந்தேன் பேசிட்டேன். உங்களுக்கு ஒன்னும் கோபம் இல்லையே?”

“கோபமெல்லாம் ஒன்னுமில்லை, வந்தவுடனேயே இதை நீ சொல்லியிருக்கலாம், அவளுக்கும் சேர்த்து சி சொல்லித் தந்திருப்பேன். அவளுக்குச் சொந்தமா இல்லைன்னா நீ என்னை நெருங்கியிருக்கவே முடியாது. அதுதான் உண்மை.”

“நல்லாவே தெரியும். இதுதான் ஃபர்ஸ்ட் அண்டு லாஸ்ட், எனக்கு அக்கா முன்னாடி உங்ககிட்ட இப்பிடிப் பேசமுடியாது; அதான். மத்தபடி அவங்களை தவிர்க்கணும்னுங்கிறது என்னோட எண்ணம் கிடையாது.”

“அது இருக்கட்டும், நான் படிச்ச காதல் கதைகளில் எல்லாம் முத்தம் இல்லாத கதையே கிடையாது. நீயோ காதல்ங்கற, காதலிங்கிற, ஆனா அந்த விஷயத்தை பத்தி சத்தமே இல்லை?”

“சரி ரூட் மாறுது, நானே நல்ல புள்ளையை கிளப்பி விட்டுட்டேன் போலிருக்கு, நான் கிளம்புறேன்.”

நான் பதில் எதுவும் சொல்லலை.

“இங்கப்பாருங்க நான் கிளம்புறேன்னு சொன்னேன், நீங்க பதில் சொல்லலைன்னா எனக்கு இதுதான் மனசிலே ஓடும். அதுனால ஏதாவது பேசுங்க.”

“ஏய் சும்மாத்தான் கேட்டேன், போய்ட்டு வா.”

“கோபமில்லையே?”

“நிச்சயமாய் இல்லை.”

அடுத்த நாள் கல்லுரிக்கு போனதும், HOD வந்து,

“மோகன் நேத்திக்கு லெக்சரர் வராததால லேப் அட்டெண்டர, பர்ஸ்ட் இயர் கிளாசுக்கு அனுப்பினேன். அங்க ஒருத்தன் ரொம்ப பருப்புமாதிரி அவங்ககிட்ட பண்ணியிருக்கான். புதுபையன் கொஞ்சம் படிச்சவன் போலிருக்கு. நான் நேரடியா தலையிட விரும்பலை. நீ கொஞ்சம் இன்னிக்கு கிளாசுக்குப் போய் அவனை தட்டிவையேன்.”

அவரே சொன்னதுக்கு பிறகு போகலைன்னா எப்பிடி?

“பசங்களா, இன்னிக்கு லெக்சரர் வரலை. அதான் நான் வந்திருக்கேன். ஒரு மணிநேரம் ஜாலியா ஏதாவது பேசலாம். என்ன பேசலாம், ஏதாவது விளையாடலாம்னாலும் விளையாடலாம்.”

நான் சொல்லிமுடிந்ததும் அந்தப் பையன் தான் எழுந்தான்.

“எக்ஸ்கயூஸ் மீ, நாங்க இங்க படிக்க வந்திருக்கோம். விளையாட இல்லை, நாலு நாளா லெக்சரர் வரலை. எங்க படிப்புத்தான் வீணாகுது. நேத்திக்கு லேப் அட்டண்டர் வந்தாங்க, அதுகூட பரவாயில்லை, இன்னிக்கு ஒரு ஸீனியர் ஸ்டுடண்ட் வந்திருக்கீங்க. என்ன நடக்குதேன்னே புரியலை. நான் உங்களைத் தப்பா நினைக்கலை, இந்த ஒரு மணிநேரமும் வேஸ்ட்” சொல்லிவிட்டு அவன் உட்கார்ந்ததும். சரியா மாட்டிக்கிட்ட மகனேன்னு நினைச்சிக்கிட்டு, “ஐயோ, சூப்பர் தம்பி உங்க பேரு என்ன சொல்லமுடியுமா?”

“விஸ்வநாதன்…”

“விசு, எனக்கும் இதுதான் பிராப்ளம். எனக்கு விளையாடவோ, சும்மா ஜாலியா இருக்கவே பிடிக்கவே பிடிக்காது. ஃபர்ஸ்ட் இயர் பையன்கள் சீரியஸா இருக்கமாட்டாங்கன்னு தப்பா கணக்குப் போட்டுட்டேன். சொல்லுங்க இந்த ஒரு மணிநேரம் உபயோகமா போகணும்னா என்ன பண்ணலாம்.”

“எது வேண்டுமானாலும் ஆனால் உபயோகமாய்!”

“சரி புரோஜக்ட் பத்தி பேசலாம், நாம படிக்கிறதே அதுக்குத்தானே,” சொல்லிவிட்டு புரோஜக்ட் பத்தி எல்லாவற்றையும் சொன்னேன். அப்பப்ப அவனையும் எழுப்பி ஒரு கருத்தைக் கேட்டு அவன் சரியான கருத்தே சொல்லியிருந்தாலும் இல்லையென்றும் அவனை மட்டம் தட்டியும் பேசினேன். சிலசமயம் அவன் சொன்ன கருத்து எல்லோருக்குமே முரணாக இருந்ததால் மற்ற மாணவர்களிடமும் கேட்டு அவனை முட்டாளாக்கினேன். முடிவில் நான் இப்பொழுது பண்ணிக்கொண்டிருக்கும் புரோஜக்ட் பத்தி சொல்லி கையில் வைத்திருந்த லாப்டாப்பில் இருந்து எடுத்துக்காட்டுகளைக் காட்டினேன்.

ஒரு மணிநேரம் முடிந்திருக்கும்; அவனை எழுப்பி, “உபயோகமாக இருந்ததா?”

“ம்ம்ம், மிகவும் உபயோகமாக இருந்தது!”

“தெரியுமா, நான் இந்த ஒரு மணிநேரத்தை வேஸ்ட் பண்ணிட்டேன். இந்த நேரத்தில் புரோஜக்ட் பண்ணியிருந்தால் சம்பாதித்து இருப்பேன். பரவாயில்லை இந்தப் பையனுக்காக இல்லை. மற்ற மாணவர்களுக்காவும்தான் நான் சொன்னது. அதானால் சந்தோஷம்.” சொல்லிவிட்டு கிளாசுக்கு வந்துவிட்டேன்.

மதியம் கேன்டீனில் உட்கார்ந்திருக்கும் பொழுது அங்கு வந்தனர் அகிலாவும் கனிமொழியும்.

“அண்ணே, இன்னிக்கு ஜூனியர் ஒருத்தனை போட்டு வாங்கிட்டீங்களாமே?”

“ஆமாங்கா அவன் அழாத குறைதான். எனக்கு ஆச்சர்யம் நம்மாளுக்கு இவ்வளவு தெரியுமான்னு, சும்மா பிசிறு கிளப்பிட்டார். நேத்திக்கு அவர் கேட்டதுக்கும் அதுக்கும், இவர் பேசி முடித்ததும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துடலாம்னு பார்த்தேன். ஆனா உண்மையிலே நானே பயந்திட்டேன்.”

“இல்லை கனி, லேப் அட்டண்டரை தப்பா பேசியிருக்கான். HOD புலம்புறார். அதான் என்னை விட்டு அடக்கச் சொன்னார்.”

“அப்பிடியா, வேணும்னே பழிவாங்குனதா இது. நான் அப்பவே நினைச்சேன். என்னடா இது இப்படி நடந்துக்கிற ஆளில்லையேன்னு. இதுக்கு பின்னாடி இவ்வளவு கதையிருக்கா?” – அகிலா.

“சரி அது போகட்டும் என்னவோ குடுக்கிறேன்னு சொன்னியே, பரவாயில்லை இப்ப கொடு.”

“அண்ணே என்ன இது, நான் இங்க இருக்கேன் மறந்திட்டு இரண்டு பேரும் பேசிக்கிட்டிருக்கீங்க.” கனிமொழி வேண்டுமென்றே மூஞ்சை தூக்கிவைத்துக் கொண்டாள்.

(தொடரும்…)