சோழ வரலாறு 2ம் பாகம் – விஜயாலயன், முதலாம் ஆதித்தன்

சங்ககாலத்திற்குப்பிறகு, ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகளுக்குக் கடுங்கோன் வழிவந்த பாண்டியர்களும், சிம்மவிஷ்ணு வமிசத்துப் பல்லவர்களும் எவ்வாறு தமிழ்நாட்டைக் தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டு ஆட்சி புரிந்து வந்துள்ளனர் என்பது புதிராகவே உள்ளது. இதுபோன்று அடுத்த மூன்று நூற்றாண்டுகளில் அதாவது ஒன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் விஜயாலயன் ஆட்சிக்கு வரும்வரை சோழ மன்னர்களின் வரலாறு இருள் சூழ்ந்ததாக உள்ளது.

இந்நீண்ட இடைக்காலத்தில் இப்பெரிய ஆட்சிகளில் ஏற்பட்ட மாறுதல்களைப்பற்றிக் கல்வெட்டுகளிலிருந்தும் இலக்கியந்திலிருந்தும் ஒருவாறு அறிந்து கொள்கிறோம். சோழநாட்டின் வீழ்ச்சிக்கு பிறகு வடக்கிழும் தெற்கிலும் பல்லவர்களும், பாண்டியர்களும் வலுப்பெற்றப்போது, சோழ அரச குடும்பத்தைச் சேர்ந்தோர் வெற்றிபெற்ற தம் பகைவரிடமும் பணி புரிந்ததோடு அவர்களது உரிமைகளையும் பெற்று வந்தனர் இத்தகைய நிகழ்ச்சி, இந்திய வரலாற்றில் சர்வசாதாரணமாக ஏற்பட்ட ஒன்றாகும்.

ராஷ்டிரகூடரின் எழுச்சியின் போது மேளைச்சாளுக்கியரும், இராஜராஜன் காலத்துக்கும் வேங்கியைக் கைப்பற்றிய முதலாம் குலோத்துங்கன் சோழ அரியணையில் ஏறுவதற்குமிடையே கீழைச் சாளுக்கியரும், பாண்டியரும், பல்லவர்களும், கங்கர்களும், பாணர்களும், விஜயாலயன் ஆட்சிக்குப்பின் தம் பகைவரிடம் பணிபுரிந்ததற்கான பல சிறந்த எடுத்துக்காட்டுக்களில் ஒரு சிலவாகும்.

களப்பிரர்கள்

நாட்டில் பல அரசியல் மாறுதல்கலூக்குக் காரணமாக இருந்த தெளிவற்ற ஒரு குலத்தைச் சார்ந்த களப்பிரர்களைப்பற்றிப் பாண்டியர்களின் வேள்விக்குடிப்பட்டயமும், பல்லவர்களின் சில பட்டயங்களும் கூறுகின்றன. பாண்டியர்களும் பல்லவர்களும் தம் ஆட்சியை நிலைநாட்ட வேண்டி ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் இக்குலத்தை அடியோடு முறியடுத்தமை அவர்கள் மேற்கொண்ட முதல் நடவடிக்கையாகும்.

இவர்களில் குறிப்பிடுதற்குரிய ஒரு மன்னன், அச்சுதவிக்கந்தன். இம்மன்னனே சேர சோழ பாண்டிய மன்னர்களைச் சிறையெடுத்தான் என்று இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்படும் அச்சுதன். கி.பி. பத்தாம் நூற்றாண்டைச்சேர்ந்த யாப்பெருங்காலக்காரிகையின் ஆசிரியரியரான அமிர்தசாகர் இவனைப்பற்றிய சில பாடங்களை மேற்கோள்காட்டியுள்ளார். இம்மன்னர் பௌத்த மதத்தைச்சேர்ந்தவனாய் இருக்கக்கூடும்.

சோழர்களின் வீழ்ச்சி

அச்சுதனின் ஆட்சிக்காலத்திற்குப் பிறகு (எவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு என்பதை அறுதியிட்டுக் கூறஇயலாது), களப்பிரர்களை முறியடித்த பல்லவர்களும், பாண்டியர்களும் தங்கள் ஆட்சியினை நிலைநாட்டினர், தம் சுதந்திரத்தை மீண்டும் நிலைநாட்ட இயலாத சோழ மன்னர்கள், காவிரிக்கரைப்பகுதிகளஇல் புகழ் மங்கிய நிலையில் வாழ்ந்து வந்தனர். வடக்கிலும் தெற்கிலும் புதிதாக ஏற்பட்ட அரசுகள் சோழ மன்னர்களை ஓரளவு புறக்கணித்தாலும் இவர்களது பழம் புகழை மதிக்கின்ற வகையில், சோழர்குல மகளிரை மணத்ததோடு, தம்மிடம் பணியாற்ற விரும்பிய சோழ இளவரசர்களுக்குப் பதவிகளையும் அளித்தனர்.

தமிழ்நாட்டில் சோழர்கள்

இந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த சோழ மன்னர்களைப்பற்றி நம்மால் அறிய முடியவில்லை, இக்காலத்தைச்சேர்ந்த கல்வெட்டுக்களும் இலக்கியமும் இச்சோழ மன்னர்களைப்பற்றி மேலெழுந்த வாரியாக கூறும்போது, காவேரிக்கரையில் இவர்கள் தொடர்ந்து வாழந்தனர் என்று கூறுகின்றனவே தவிர, வரலாற்று முக்கியமுள்ள செய்திகளைத்தரவில்லை.

இதன் காரணமாக கி.பி. 3-ம் அல்லது 4-ம் நூற்றாண்டு முதல் 9-ம் நூற்றாண்டு வரை சோழர்களைச் சுற்றி நீண்டதோர் இருண்ட காலம் சூழந்து கொள்வதை அறிகிறோம். இக்காலத்தில், கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் மாறும் என்ற நிலையில் இருந்தனர் என்றே கூறலாம். நாம் இப்பொழுது அறிந்துகொள்ள முடியாத விதத்தில் அவர்கள் தங்களுக்கென்று ரேனாட்டுப் பகுதியில் இரண்டாம் புகலிடத்தைத்தேடிக் கொண்டனர். பழைய நாட்டிலோ, தமக்கெதிராக ஏற்பட்ட, ஒவ்வொரு புயலுக்கும் வளைந்து கொடுத்து, தம் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்த தக்க சமயத்தை எதிர்பார்த்திருந்தனர். வெற்றிபெற்ற மன்னர்களுடன் தம் சந்ததியினருக்குத் திருமணங்கள் செய்து வைத்தும், அக்காலத்திய சமய இயக்கங்களை ஊக்குவித்தும், தம் அரசியல் செல்வாக்கை வளர்க்கப்பாடுபட்டனர்.

விஜயாலயனின் எழுச்சி முதலாம் ஆதித்தன் (கி.பி. 850 – 907)

திருப்புறம்பயம்

தென்னிந்திய வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக இருந்த இந்த திருப்புறம்பயம் போர் இக்காலத்தில் சிறப்புப் பெற்றிருந்த பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையில் நடைபெற்றது.

இதே காலத்தில் வரலாற்றுப் புகழ்மிக்க முத்தரையர் என்னும் குறுநில மன்னர்கள் தஞ்சை மாவட்டத்தில் செழிப்பான பல ஆற்றோரப் பகுதிகளை தம் வசப்படுத்தினர். இவர்களே செந்தலை அல்லது நியமம் என்ற ஊரைத் தம் தலைநகராகக் கொண்டு தஞ்சையை கண்டுவந்தனர் என்று செந்தலைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இவர்களும் சோழர்களைப்போலவே, தம் சுதந்திர ஆட்சியை நிலைநாட்ட முடியாமல், பாண்டியர்களுடனோ பல்லவர்களுடனோ நட்பு கொள்ளவேண்டியிருந்தது. தங்கள் முன்னேற்றத்தை மட்டும் நோக்கமாகக்கொண்டு அவ்வப்போது தங்கள் ஆதரவை முத்தரையர் மாற்றிக் கொண்டனர் என்பதை இவர்களது கல்வெட்டுக்களும் விருதுகளுமே விளக்குகின்றன.

வரகுண மன்னன் காலத்தில், தாமாகவோ அல்லது வரகுணனின் முயற்சியாலோ இவர்கள் தம் முழு ஆதரவைவையும் பாண்டியர்களுக்கு அளித்தனர். இதன் விளைவாக, பல்லவர்களின் உரிமைகளைக் காக்கும் பொருட்டுச் செயல்பட்ட விஜயாலயனிடம் தஞ்சையை இழக்கலாயினர். தம் அதிகாரத்திற்கு உட்பட்ட சோழமன்னனை இச்செயலில் இறக்கியது. “புலிக்குட்டியை வளர்த்து, இரத்தத்தை சுவைபார்க்க வைத்தது போலாகும்” என்று பல்லவ மன்னன் சிறிதும் சிந்திக்கவில்லை. விஜயாலயனும், இவ்வெற்றியே இந்திய வரலாற்றில் காணப்படும் ஒரு பேரரசை நிறுவுவதற்கான மிகச்சிறப்பான தொடக்கம் என கனவுக்கூடக் காணவில்லை.

விஜயாலயனது வெற்றி, பாண்டிய மன்னன் வரகுணவர்மனின் நண்பர்களான முத்தரையரின் பலவீனத்தையே காட்டியதால், சமநிலையை மீண்டும் நிலைநாட்டும் பொருட்டு, பாண்டியர்கள் சோழ நாட்டின் மீது படையெடுத்து வடகரையிலுள்ள இடவை என்னுமிடத்தை அடைந்தனர். இந்த நிகழ்சிக்குச் சற்று முன்பே நிருபதுங்கவர்மனுக்கு (பல்லவ மன்னன்) அடுத்த மன்னனான அபராஜிதன் கங்க மன்னன் முதலாம் பிரதிவீபதி உள்ளிட்டுத் தன் நண்பர்களைக் கூட்டி பாண்டியர்களை முறியடிக்க வேண்டிய பெரும் முயற்சியை மேற்கொண்டான். திருப்புறம்பயத்தில் நடந்த பெரும் போரில், விஜயாலயனை அடுத்து ஆட்சிக்கு வந்த ஆதித்த சோழனும் அபராஜித மன்னனுடன் இருந்து போரிட்டான்.

பல்லவர்க்கும் கங்க மன்னர்களுக்கும் இடையில் தொன்றுதொட்டு நட்பு ஏற்பட்டிருந்தாலும், இப்போரில் கங்கமன்னன் உயிர்நீத்ததால், போரில் கிடைத்த வருவாயின் பெரும் பங்கை ஆதித்தனே பெற்றான். ஆதித்தன், போரில் தனக்கு உதவிதற்கான நன்றிப் பெருக்கால், முத்தரையரிடமிருந்து முன்னால் ஆதித்தன் தந்தை விஜயாலயனால் எடுத்துக்கொள்ளப்பட்ட பகுதிகளையும் அபராஜித்தன், ஆதித்தனுக்கு அளித்தான். திருப்புறம்பயம் போரில், ஆதித்தன் பெரும்பங்கை ஏற்காவிடினும், தனக்கு அனுகூலமாக அமைந்த சூழ்நிலையை அறிந்து தன் உயர்வுக்காகத் தன் பலத்தை விரைவிலேயே பயன்படுத்தத்தொடங்கினான். முதலாம் பிரதிவீபதியின் கடைசி ஆண்டு, கி.பி. 879 ஆகத்தெரிகிறது. எனவே இதே ஆண்டில்தான் இவன் உயிர்விட வேண்டி நேர்ந்த திருப்புறம்பயம் போரும் நடைபெற்றிருக்க வேண்டும்.

இதிலிருந்து முதலாம் ஆதித்தன் கி.பி. 870 யிலிருந்து கி.பி. 907 வரை, ஏறத்தாழ 36 ஆண்டுகள் ஆட்சி செய்தான் என அறிய இயலுகிறது. கி.பி. 850 அளவில் தொடங்கிய விஜயாலயனது ஆட்சி, கி.பி. 870-ம் ஆண்டு அளவில் முடிவுற்றது என்றும் இதிலிருந்து அறியலாம்.

முதலாம் ஆதித்தன்

சஹுயாத்திரி மலைத்தொடரிலிருந்து பரந்த கடல்வரையுள்ள பகுதிகளில், காவிரியாற்றின் இரு கரைகளிலும், தன் வெற்றிச் சின்னங்களாகச் சிவபெருமானுக்கு வரிசை வரிசையாக வானோக்கி பல கோயில்களை எடுப்பித்தான் என்று ஆதித்தனைப்பற்றி (கி.பி. 871 – 907) அன்பில் பட்டயங்கள் கூறுகின்றன. பலம் மிக்க பல்லவ மன்னன் அபராஜிதனைத் தோற்கடித்து, அவனது ஆட்சியைக் கைப்பற்றினான் என்று திருவாலங்காட்டுப் பட்டயங்கள் கூறுகின்றன. கோதண்டராமன் என்னும் சிறப்புப் பெயரை இவனுக்கு இடுவதோடு, ஒரு உயர்ந்த யானையின்மீது அமர்ந்திருந்த பல்லவமன்னன் மீது பாய்ந்து அவனைக்கொன்றான் என்றும் கன்னியாக்குமரிக் கல்வெட்டு கூறுகிறது.

தில்லைஸ்தானம் என்னுமிடத்திலுள்ள ஒரு கல்வெட்டு இராஜகேசரி தன் இராஜ்ஜியத்தை, தொண்டைநாடு வரை பரவச்செய்தான் என தெளிவாகக் கூறுகிறது. இதிலிருந்து ஆதித்தன் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றி அதன்மூலம் பல்லவர்களஇன் ஆட்சியை ஒரு முடிவிற்கு கொண்டுவந்ததோடு, சோழ இராச்சியத்தை இராஷ்டிரகூடர்களின் எல்லைவரை பரப்பினான் என்றே கூற வேண்டும். இதை வைத்து இவன் கி.பி. 890-ல் தான் பல்லவர்களைத் தோல்வியுறச்செய்து, அந்நாட்டைக் கைப்பற்றியிருத்தல் வேண்டும்.

புதிதாகக் கைப்பற்றப்பட்ட தொண்டை மண்டலப் பகுதியில் அமைதியை ஏற்படுத்த சில ஆண்டுகள் தேவைப்பட்டதோடு, பல புதிய படையெடுப்புக்களுக்கும் காரணமாயிற்று. இவ்வெற்றிகளில் கங்க மன்னன் உதவியிருக்கக்கூடும், இது எவ்வாறு இருப்பினும் விரைவிலேயே கங்கை மன்னன், ஆதித்தன் தலைமையை ஏற்றான்.

தஞ்சாவூர்-பட்டணத்தில் முடி சூட்டிக்கொண்ட பின் ஆதித்தன் கொங்கு தேசத்திற்கு வந்து, இந்நாட்டை வெற்றிகொண்டு, தன்னாட்டுடன் சேர்த்து ஆட்சிசெய்தான் என்று கொங்கு தேச ராஜாக்கள் என்னும் குறிப்பேடு கூறுகிறது.

இவன் காலத்தில் வாழ்ந்த சேரமன்னன் தாணுரவி என்பவனுடன் ஆதித்தன் நெருங்கிய உறவு கொண்டிருந்தான் என்று தில்லைத்தானத்திலுள்ள ஆண்டு குறிப்பிடாத ஒரு கல்வெட்டு கூறுகிறது.

மறைவு

சித்தூர் மாவட்டம் காளத்தியின் அருகேயுள்ள தொண்டைமானாடு என்னுமிடத்தில் ஆதித்தன் இறந்தான். இவனது மகன் பராந்தகன், இறந்த இடத்தில் கோதண்ட இராமேசுவரம் என்றும் ஆதித்தீசுவரம் என்றும் அழைக்கப்பட்ட கோயிலை எடுப்பித்தான். பராந்தகனைத்தவிர, ஆதித்தனுக்கு கன்னரதேவர் என்ற மற்றொரு மகனும் இருந்தான்.

இத்துடன் விஜயாலயன் மற்றும் முதலாம் ஆதித்தனின் வரலாறு முடிகிறது. அடுத்து முதலாம் பராந்தகனைப்பற்றிப் பார்க்கலாம்.

சோழ வரலாறு முதல் பாகம் தொடர்ச்சி – கிள்ளி & Co.

நலங்கிள்ளி

புறநானூற்றில் 14 பாடல்களுக்குக் குறையாமல் நலங்கிள்ளியைப் புலவர்கள் பாடியுள்ளார்கள். இவற்றில் பாதிக்கும் மேலான பாடல்களை பாடியுள்ள கோவூர்கிழார், கரிகாலனைப்போன்று, நலங்கிள்ளியும் தமிழ் அரசர்களில் தலைமை ஏற்றான் என்று கூறுகிறார். இப்பாடல்களைக் கீழ்காணுமாறு மிகைப்படுத்திப் பாடியுள்ளார்.

அறத்தின் பயனாகவே பொருளும் இன்பமும் நிலையாகக் கிடைக்கும் உன்னுடைய எதிரிகளாக இருக்கும் சேரர் பாண்டியர் உனக்குப்பின்னே வர உன்னுடைய ஒப்பற்ற வெண்கொற்றக்கொடை முழுநிலாப்போல புகழுடன் செல்லுகிறது. நீயும் அரண்மனைக்குள் அல்லது தலைநகருக்குள் இராமல் வெற்றிநடைபோட்டு, போர்க்களத்திலேயே இருக்கின்றாய். உன்னுடைய யானைகளோ, எதிரிகளுடைய நீண்டுயர்ந்த கோட்டைகளைத் தகர்க்கவல்லவை, உன்னுடைய படையோ, வீரக்கழலை உடைய மறவர்களைக் கொண்டது. அவர்கள் அடர்த்தியான காடுகளiனுடே சென்று எதிரியின் நாட்டை அடைய அஞ்ச மாட்டார்கள். உன்னுடைய குதிரைப்படை, கீழைக்கடற்கரையில் புறப்பட்டால் மேலைக்கடற்கரைவரை பிடித்துத்தான் நிற்கும். எனவே நீ எங்கே படையெடுத்து விடுவாயோ என்று எந்த நேரமும் வடநாட்டு அரசர்கள் கவலையால் கண்துயிலாது இருக்கின்றனர். (புறம்.)

தன் மன்னனைப்பலவாறு புகழந்து பாடிய புலவர் இச்சகம் பாடுபவர் அல்லர். மேற்சொன்ன பாடலுக்கு முரணாகக் கீழ்க்காணும் பாடலில, நெடுங்கிள்ளியைத் தோற்கடிக்கும் பொருட்டு, உறையூரை முற்றுகையிட்ட நலங்கிள்ளியிடம் சமாதானத்தை நிலை நாட்டக் கோரி வற்புறுத்திக் கூறுவதைக் காணுகிறோம்.

பெரிய பனையினது வெளியத் தோட்டைச் சூடினோனல்லன், கரிய தோட்டினையுடைய வேம்பினது தாரையுடையவனும் அல்லன், உன்னுடைய கண்ணியும் ஆத்தியாற் செறியக்கட்டப்பட்டது, ஆதலால் உங்கள் ஒருவர் தோற்பினும், தோற்பது உங்கள் குடியன்றோ? இருவரும் வெல்லுதல் இயல்புமன்று ஆதலால் உனது செய்கை உன் குடிக்கு தக்கதொன்றின்று, ஆதலால் இதை(போரை)த்தவிர்த்தலே உமக்கு நல்லது (புறம். 45)

இப்புலவரது அறிவார்ந்த அறிவுரையை நலங்கிள்ளி, செவிமடுக்கவில்லை என்பது தெரிகிறது. காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி என்ற பட்டப்பெயரிலிருந்து, இவ்விருவருக்குமிடையே ஏற்பட்ட போர், நெடுங்கிள்ளி இறந்த பிறகே முடிவிற்கு வந்திருக்க வேண்டும். என்பதை அறிகிறோம்.

இவனது காலத்தில் வாழந்த பல மன்னர்களைப் போன்று நலங்கிள்ளியும் இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டிருந்தான். இவன் இயற்றிய பாடல்களில் இரண்டு புதுமையான உறுதிமொழி பற்றிக் கூறுகிறான்.

நட்பால் என்னிடம் வந்து வேண்டிக் கொண்டால் நான் என்னுடைய ஆட்சியைக்கேட்டாலும் கொடுத்துவிடுவேன். பழமையும் தொன்மையும் உடையதே என்று பார்க்காமல் என்நாட்டை மகிழ்ச்சியுடன் இரப்பவனிடம் ஓப்புவத்துவிடுவேன், கெஞ்சிக் கேட்பவனுக்காக என் உயிரையும் கொடுப்பேன். ஆனால் என் ஆற்றல் இன்னது என்று தெரியாமல் என்னுடன் போரிட வருவார்களாயின், தூங்குகிற புலியை எழுப்புவது போல் ஆகிவிடும். என் போர்ப்படை எதிரிகளை அழிக்கும். அப்படி அழிக்காவிட்டால் கற்பில்லாப் பெண்டிரோடு என் மார்பகம் கிடந்து முயங்குவதாக. (புறம். 73)

நெடுங்கிள்ளி

நலங்கிள்ளிக்கு எதிராகப் போர் புரிந்த நெடுங்கிள்ளியைப்பற்றி,இவ்விருவரையும் சமாதானப்படுத்த முயன்று கோவூர்க்கிழார் பாடிய இரு பாடல்களில் காண்கிறோம். உறையூரை நலங்கிள்ளி, முற்றுகையிட்டு அங்கு நெடுங்கிள்ளியை சிறை வைத்தான் என்று ஒரு பாடல் கூறுகிறது. கீழ்க்காணும் இப்பாடல் இம்முற்றுகையின் விவரங்களை நமக்குப்படம் பிடித்துக் காட்டுகின்றது.

உறையூரில் கோட்டைக்கட்டி ஆளும் நெடுங்கிள்ளியே, உன் கோட்டையை நலங்கிள்ளி முற்றுகையிட்டிருக்கிறான். நீயோ அதைப் பொருட்படுத்தாமல் உன்னுடைய கோட்டைக்குள் கவலையின்றி இருக்கிறாய். இது கோழையின் செயல், வீர அரசர்களுக்கு ஏற்க்குமா? ஒன்று கோட்டையை விட்டு வெளியே வந்து அவனுடன் போரிடுக, அல்லது அவனுடன் சமாதான உடன்பாட்டைக் காண்க, இரண்டும் கெட்டான் நிலையில், மக்கள் துன்பப்பட்டுகிறார்கள். யானைகள் உணவின்றி தவிக்கின்றன. பெண்டு பிள்ளைகள், குழந்தைகள் எல்லாம் கூடப்பட்டினியால் தவிக்கின்றனர். உன் ஆட்சிக்கு இதெல்லாம் இழுக்கு அல்லவா? நீயாகிலும் ஆட்சி செய், அல்லது அவனையாகிலும் ஆளவிடு. (புறம். 44)

நலங்கிள்ளியின் பகுதியிலிருந்து உறையூருக்குள் வந்த இளந்தத்தன் என்ற ஒரு புலவரை ஒற்றர் எனக்கருதி, அவரைத் தூக்கிலிட இவன் உத்தரவிட்டான். ஆனால் அங்கு இருந்த கோவூர் கிழாரின் வேண்டுகோளுக்கு இணங்கி அவரது உயிர் காப்பாற்றப்பட்டது. இது சங்க கால புலவர்களின் வாழ்க்கை முறையை தெரிவிக்கிறது.

இளந்தத்தன் என்ற புலவர், நலங்கிள்ளியிடம் பரிசில் பெற்ற பிறகு, நெடுங்கிள்ளியிடம் பரிசல் பெற வருகிறார். நலங்கிள்ளியிடமிருந்து வருவதால் புலவர் ஒற்றராக இருக்கலாம் என்று அச்சப்படுகிறான் நெடுங்கிள்ளி. ஐந்தாம் படைப் பேர்வழிகளைப்போல அவரைக் கொன்றுவிடவும் முடிவு செய்கிறான். இது தகுமோ? புலவர் ஒற்றர் அல்லர், அவர்கள் வறுமையால் வாடுபவர்கள், பழுத்த மரத்தை நாடிச்செல்லும் பறவைகள் போல, வள்ளல்களைச் தேடிச்செல்வது அவர்களுடைய இயல்பு. பொருள்பெற்று, சுற்றத்தை வாழ வைக்க வேண்டியது புலவர் கடமை. அவர்கள் ஒரு நாளும் பிறருக்குத் தீங்கு இழைக்க மாட்டார்கள். தங்களை இகழ்ந்தார் நாணும்படி நடந்து கொள்வர். மண்ணை ஆளும் அரசர் போல அவர்களும் தலைமையே விரும்புவர்.

கிள்ளிவளவன்

நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி ஆகியோரைப் பற்றிப் பாடிய புலவர்களே குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பற்றியும் பாடியிருப்பதால், கிள்ளிவளவனும் இவர்கள் காலத்திலேயே வாழ்ந்தவனாவான். கோவூர்கிழாரின் ஒரேவொரு பாடலில், பாடப்பட்டுள்ள மற்றொரு கிள்ளிவளவன், குராப்பள்ளியில் இறந்தான் என்று கூறப்படுகிறது. ஆனால் இவ்விரு மன்னர்களுமே ஒருவரே என்று கூறப்படுகிறது. இது எவ்வாறாயினும் கோவூர்கிழாரின் பாடல், கிள்ளிவளவன் கருவூரைக் கைப்பற்றிய பிறகே இயற்றப்பட்டதாகும். ஆலத்துர் கிழார் தம் பாடலில், கருவூரைக் கைப்பற்றுவதற்கு முன் நிகழ்ந்த ஒரு முற்றுகையைப்பற்றி கூறுகிறார். கிள்ளிவளவனின் புகழைப்பற்றி பத்து புலவர்கள் பதினெட்டு பாடல்கள் பாடியுள்ளனர். சிறுகுடி என்னும் பகுதியின் தலைவனான பண்ணன், என்ற இவனது நண்பனைப் புகழ்ந்து பாடப்பெற்றுள்ள பாடல் இவன் (கிள்ளிவளவனே) இயற்றியதே. இவன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தான்.

இம்மன்னன் வீரமும் பெருந்தன்மையும் பலவகைத்திறமையும் வாய்ந்தவன். ஆனால், செருக்குமிக்கவன். இதனால் பல புலவர்கள் இவனுக்கு அறிவுரை வழங்கி, இவனை நல்ல முறையில் திருத்தியுள்ளனர். வெள்ளைக்குடி நாயனார் என்னும் புலவர் தம் ஊரின் நிலத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த வரியைத் தள்ளுபடி செய்யுமாறு கீழ்வரும் செய்யுமாறு கீழ்வரும் பாட்டினை அவர் பாடியுள்ளார்.

சேரரின் தலைநகரான கரூரை முற்றுகையிட்டு, பின் அதைக் கைப்பற்றியதே கிள்ளிவளவனின் மிகச்சிறந்த போர் வெற்றியாகக் கருதப்படுகிறது. இந்நிகழ்ச்சியைக்குறித்து பல நாட்கள் சிறப்பாகப் பேசுகின்றன. தனக்கு பொருத்தமில்லாத பகைவனுடன் போரிடுவது தகாது, பொருந்தாது, நியாயமாகாது என்று கிள்ளிவளவனுக்கு எடுத்துரைக்கும் வகையில் கரூரை அழிவின்றி காக்க, முயன்றவர் ஆலத்தூர் கிழார் என்னும் புலவர். ஆனால் இப்புலவரது முயற்சி வெற்றி பெறவில்லை, அழகிய நகர் வீழந்தது. இதைப்பற்றி மாறோக்கத்து நப்பசலையார் என்னும் பெண்பாற்புலவர் புலம்புகின்றார்.

இதே போல் கபிலரும், மாறோகத்து நப்பசலையாரும், புறநானுற்றுப் பாடல்கள் பலவற்றில் புலவர்களிடம் இவன் காட்டிய கொடைத்திறனை வியந்து பாடியுள்ளனர். வெற்றிபெற்ற சோழமன்னன் மலையமானின் குழந்தைகளுக்கு அளித்த மரணதண்டனையிலிருந்து அவர்கள் தப்பி விடுதலை பெறச்செய்து இவர்களைப்போன்ற ஒரு புலவர் எழுதிய ஒரு பாடலே.

இம்மன்னன் இறந்தபொழுது பாடப்பட்ட இரு இரங்கற்பாக்கள், இவன் இறந்த இடமாகிய கழுமுற்றம் எங்குள்ளது என்றோ, இவன் இறந்ததற்கு காரணம் என்ன என்றோ கூறாவிடினும் இவனது அகந்தையை எடுத்துக்காட்டுகின்றன.

கோப்பெருஞ்சோழன்

உறையூரிலிருந்து அரசாண்டு வந்த கோப்பெருஞ்சோழன் இக்காலத்தில் வாழ்ந்த மற்றொரு புகழ் வாய்ந்த சோழ மன்னன் ஆவான். இம்மன்னன் தாமே ஒரு புலவராய் இருந்ததோடு, பிசிர் ஆந்தையார், போத்தியார் ஆகிய இரு புலவரின் நெருங்கிய நட்பை பெற்றிருந்தான்.

பெருங்கிள்ளி

சங்ககாலத்துச் சோழ மன்னர்களுள் இராசூய யாகத்தைச் செய்த பெருங்கிள்ளி, மிகப்பலம் வாய்ந்த மன்னனாக இருந்திருக்க வேண்டும். சேரமன்னன் மாரி வெண்கோவும், பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதியும் பெருங்கிள்ளியின் ஆட்சியின் தொடக்கத்தில் நடைபெற்ற இந்த யாகத்தில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியைக் கண்ட ஒளைவயார் பாடிய வாழ்த்துப்பாவில் இம்மூன்று மன்னர்களையும் குறிப்பிட்டதிலிருந்து ஒருவாறு அறியலாம்.

தேவலோகம் போன்ற இந்த நாடு உன்னால் ஆளப்பட்டாலும் சரி, உன் பகைவரிடம் சென்றாலும் சரி, உண்மையில் அது துறவிகளுக்கு உரிமையானது. பிராமணர்களக்கு நீ தண்ணீரும் பூவும் பொன்னும் தருவாயாக, மிளiரும் நகைகளை அணிந்த வேலைக்காரப்பெண்கள் தங்ககுவளைகளில் தரும் மதுவை அருந்தி மகிழ்வாயாக அந்த மகிழ்ச்சியில் தேவைப்பட்டவர்களுக்கு எளியவர்களுக்கு பரிசுகளை அள்ளி வழங்குவாயாக. அறச்செயல்கள் தாமே இறுதி நாளில் உன்னைத் துணை நிற்கும் வெண்கொற்றக் குடைகளும் வீரத்தேர்களும் உடைய அரசர்களே நீவர் நீடு வாழ்க. (புறம். 367)

பெருங்கிள்ளிக்கும், சேரமன்னன் மாஞ்சேரல் இரும்பொறைக்கும் நடந்த போரில், தேர் வண்மலையான் என்ற தலைவன் சோழ மன்னனுக்கு ஆதரவாக போரிட்டதாக கொளு கூறுகிறது. சோழ மன்னனின் நண்பனையோ இல்லை பகைவனையோ யார் என்று அறுதியிட்டு கூறமுடியாது.

கோச்செங்கணான்

கரிகாலனது வாழ்க்கையைப் போன்று, கோச்செங்கணான் வாழ்க்கையைச் சுற்றியும் எண்ணற்ற கற்பனைக் கதைகள் பின்னப்பட்டுள்ளன. இவன் காலத்திய சான்றுகள் பிற்காலத்தில் ஏற்பட்டு தலைமுறை தலைமுறையாக நம்பப்பட்ட செய்திகளும் இரண்டறக் கலந்துவிடாமல் பிரித்துப்பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. புறநானூற்று பாடலொன்றும் பொய்கையார் பாடல் நாற்பது பாடல்களைக் கொண்ட களவழியும் இவனது வாழ்க்கையைப்பற்றிய தொன்மையான சான்றுகளாகும். திருஞானசம்மந்தரும் திருமங்கையாழ்வாரும் சுந்தரமூர்த்தி நாயனாரும் தங்கள் பாடல்களில் இம்மன்னனது சமய வாழ்க்கையைப்பற்றி விளக்குகின்றனர். பத்து பதினோராம் நூற்றாண்டுகளில் கிடைக்கும் சோழர் செப்பேடுகளிலிருந்து தெரியும் புராண மரபுவழிகளும் இவனைப்பற்றிக் கூறிப்பிட்டுள்ளது.

நடுத்தர அளவிலான களவழி பெரும்பாலும் மரபுவழிச் செய்திகளையே கொடுத்தாலும், சில சமயம் கொங்கு நாட்டில கரூருக்கு அருகேயுள்ள கழுமத்தில் நடைபெற்ற யுத்தத்தைப்பற்றி கொடுரமான வர்ணனைகளையும் தருகிறது. சேரமன்னன் கணக்கால் இரும்பொறையை வென்று அவனை செங்கணான் சிறைப்பிடித்தான்.

திருநாறையூரைப்பற்றத் திருமங்கை ஆழ்வார் பாடியுள்ள பாடல்களில் ஒன்று கோச்செங்கணானின் சாதனைகளைக் கூறுவதுடன், இவன் இவ்வூரில் கோயில் கொண்டுள்ள இறைவனை வழிபட்டதையும் குறிப்பிடுகிறது. போர்க்களத்தில் பெரும்வீரனாகவும் சிவபெருமானுக்கு எழுபது கோயில்களை எடுத்து சிறந்த சிவபக்தனுமான சோழமன்னன் திருநாறையிலுள்ள வைணவ ஆலயத்திலும் வழிபட்டான் என்று இவ்வாழ்வார் கூறும்பொழுது சோழமன்னன் என்று கோச்செங்கணானையே குறிப்பிடுகிறார் என்பதை எவ்வித ஐயப்பாடுமின்றி உணரலாம். செங்கணானின் பகைவனுடைய யானைப்படையைப் பற்றியும் செங்கணானின் குதிரைப்படை ஆற்றிய அரும் பெரும் பணியைப் பற்றியும் ஆழ்வார் குறிப்பிடுகிறார். இவ்வாறே களவழியிலும் சேரமன்னனனுடைய யானைப்படையை எதிர்த்துச் சோழமன்னன் வெற்றி கொள்ள அவனது குதிரைப்படையும், காலாட்படையும் காரணமாயிருந்தன என்று குறிப்பிட்டுள்ளது.

செங்கணானது ஆட்சி சோழ நாட்டிற்கு அப்பாலும் பரவியிருந்ததென்றும் அழுந்த, வெண்ணி என்ற இடங்களில் இவன் போர் பரிந்தானென்றும் விளந்தை வேள் என்ற குருநில மன்னனைப்போரில் கொன்றான் என்றும், திருமங்கையாழ்வார் கூறுகிறார். ஆம்பூர், வைகல், நன்னிலம் ஆகிய இடங்களிலுள்ள சிவாலயங்கள், செங்கணானாலேயே கட்டப்பட்டவை என்று திருஞானசம்மந்தரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் தங்கள் தேவாரப் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். நாடுமுழுவதும் கௌரீசனுக்கு செங்கணானால் கோயில்கள் கட்டப்பட்டன, என்று சுந்தர சோழனுடைய அன்பில் பட்டயங்கள் கூறுகின்றன.

சேக்கிழார் குறிப்பிடும், செங்கணான் என்ற இவனது பெயரும், இவன் சோழ குடும்பத்தில் பிறந்தவன் என்பதும் ஜம்புகேஸ்வரம் உள்ளிட்ட பல இடங்களில் சிவபெருமானுக்கு இவன் கோயில்கள் எடுத்த விவரங்களும் இம்மன்னனைப்பற்றி பாடியுள்ள நாயனார் யாரென்று முடிவுகட்ட உதவுகின்றன.

இத்துடன் கிள்ளி & Co.ன் வரலாறு முடிகிறது. இனி சோழர்களின் பொற்காலத்தை தொடங்கி வைத்த விஜயாலய மன்னன் பற்றி அடுத்து பாரக்கலாம்…

சோழ வரலாறு முதல் பாகம் – கரிகாலன்

காவேரி

காவிரியின் பெருமையைப் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் புகழ்ந்து பாடுகின்றன. சூரிய புத்திரர்களுக்காகவும் காந்தமன் என்ற மன்னனின் வேண்டுதலுக்காகவும் அகத்திய முனிவரின் கமண்டலத்திலிருந்து பிறந்ததே இக்காவேரி நதி என்று கூறப்படுகின்றது. நீதியைப் பேணீ வளர்த்த சோழ மன்னர்களஇன் குலக்கொடியாக விளங்கிய காவிரி, நீண்ட வறட்சிக் காலங்களஇலும் அவர்களைக் கைவிடவில்லை. ஆண்டுதோறும் மழை பெய்து, காவிரியாறு பெருக்கெடுத்து ஓடும்போது மன்னன் முதல் சாதாரண உழவன் வரை சோழநாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுகூடி திருவிழாக் கொண்டினார்கள்.

சோழர்கள் காலம்

தென்னிந்திய வரலாற்றில் மிகவும் படைப்பாக்கம் நிறைந்த காலப்பகுதி சோழர் காலமாகும். அக்காலத்தில் முதன் முதலாகத் தென்னிந்தியா முழுவதும் ஒரே அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. புதிய சூழ்நிலைகள் தோன்றியபோது ஆட்சிமுறைச் சிக்கல்களைச் சமாளிக்கவும் தீர்க்கவும் சோழர் காலத்தில் அக்கறையுடன் முயற்சியகள் மேற்கொள்ளப்பட்டன. உள்ளூர் ஆட்சிமுறை, கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளஇல் பிற்காலங்களில் மீண்டும் அடைய இயலாத ஒரு பொற்காலத்தை, ஒர் உயர்வைத் தமிழ்நாடு இக்காலத்தில் பெற்றது. வெளிநாட்டு வாணிகம், கடலக வாழ்வின் செயல்முறைகள் ஆகியவற்றைப்போல, முன்சொன்ன துறைகளிலும் ஏற்கனவே பல்லவர்கள் காலத்தில் தொடங்கப்பெற்ற இயக்கங்கள், சோழர் காலத்தில் முழுமை பெற்றன.

சோழர் என்னும் பெயர்

சோழர் என்னும் பெயர் எவ்வாறு வழங்கத்தொடங்கியது என்பது தெரியவில்லை, சேரர், பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடும்பம் அல்லது குலத்தின் பெயராகும் என்று பரிமேலழகரால் கருதப்பட்டது. சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவரும் சகோதரர்களே என்று கூறப்படுகின்றன. இது மரபு வழிச்செய்தி வரலாற்று ஆதாரமற்றது. இது எவ்வாறாயினும் சோழ அரச மரபின் மன்னர்களது ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளும், மக்களும் பண்டைக்காலம் முதலே இப்பெயராலேயே குறிப்பிடப்பட்டு வந்துள்ளனர்.

இலச்சினைச் சின்னம்

சோழர்களின் இலச்சினை அவர்களது கொடியிலும் பொறிக்கப்பட்டது. இப்புலிச் சின்னத்தைப்பற்றி பல இடங்களஇல் கூறும் இலக்கியங்கள், இதன் தோற்றத்தைப்பற்றி ஒன்றும் கூறவில்லை.

பண்டைய இலக்கியங்களின் தன்மை

சங்க இலக்கியங்களிலிருந்து நாம் பண்டைய சோழர்களைப்பற்றித் தெளிவாக அறிய முடிகிறது. இவ்விலக்கயங்கள் கிறித்துவ சகாப்தத்தின் முதற்சில நூற்றாண்டுகளில் இயற்றப்பட்டன என்பது பொதுவாக எல்லா அறிஞர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்விலக்கியங்களின் கால வரையறையை இவற்றில் கிடைக்கும் குறிப்புக்களைக் கொண்டு அறுதியிட்டுக் கூறஇயலவில்லை. இதுவே இக்காலத்தின் வரலாற்றைத் தொடர்ச்சியாக எழுதத்தடையாக உள்ளது. அரசர்கள், இளவரசர்கள் ஆகியோரின் பெயர்களும், இவர்களுடைய புகழ்பாடிய புலவர்களின் பெயர்களும் நமக்குக் கிடைக்கின்றன. விஜயாலயச் சோழர்களின் காலம் உறுதியாக்கப்பட்ட பிறகு, இலக்கியத்தின் மெய்யான இயல்பும் உறுதியும் குலைந்து, அரண்மனைகளில் வீற்றிருக்கும் தனி மனிதர்களின் புகழ்பாடும் பாக்களாக அது குறைந்துவிடுகிறது.

இருபெரும் மன்னர்கள்

சங்க இலக்கியங்கள் கூறும் சோழ மன்னர்களுள் இரு பெருவேந்தர் சிறந்து விளங்குகின்றனர். இவர்களது நினைவு பல பாடலகளிலும், கற்பனை கதைகளிலும் பிற்காலத்தில் போற்றப்படுகிறது. கரிகாலனும் கோச்செங்கணானுமே இவ்விருவர்.

இவ்விருவருள் முன்னால் வாழ்ந்தவர் யார்? இவர்களுக்கிடையே நிலவிய உறவு யாது? இவர்களுக்கும், இவர்கள் காலத்தில் வாழ்ந்த மற்ற மன்னர்களுக்கும், குறுநில மன்னர்களுக்கும் இடையே நிலவிய உறவு எத்தகையது? என்பது போன்ற குறிப்புக்கள் நமக்குத்தெளிவாகக் கிடைக்கவில்லை. புகார் எனப்படும் காவிரிப்பூம்பட்டினம் கரிகாலன் காலத்தின்தான் சிறப்பில் உயர்வு பெற்றதெனில், உறையூரில் ஒன்றும் புகாரிலும் மற்றொன்றுமாகத் திகழ்ந்த சோழகுலத்தின் கிளைகள் இரண்டுக்கும் இடையே ஏற்பட்ட உட்பூசல், கரிகாலன் ஆட்சிக்குப் பிறகே தோன்றியிருக்க வேண்டும்.

சங்ககால மன்னர்களைப்பற்றி ஆராயுமுன், சங்க இலக்கியத்தில் இவர்களைப் பற்றி காணப்பெறும் செவிவழிக் கதைகளை பார்ப்போம். பசுவின் கன்றுமீது தேரிணை ஏற்றிக்கொன்ற தன் மகனுக்கு மரணதண்டனை அளித்த மன்னனையும் பருந்திடமிருந்து புறாவினைக் காத்த மன்னனையும் பற்றி இவ்விலக்கியங்கள் பேசுகின்றன. ஆனால் சிபி, மனு ஆகியோர் பெயர்கள் இவற்றில் கூறப்படவில்லை. புறாக்கதையில் கூறப்படும் மன்னனே செம்பியன் என்பவனாவான். இக்கதைகளுள் கன்றுக்குட்டியும் இளவரசன் ஆகிய கதைகள் சங்கஇலக்கயத்தொகை நூல்களில் காணப்படவில்லை, ஆனால் முதல்முறையாக சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரட்டைக்காப்பியங்களில் காணப்படுகின்றன.

கரிகாலன்

சங்ககாலச் சோழர்களில் கரிகாலனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை. இவன் அழகான போருக்குரிய தேர்களைப் பெற்றிருந்த இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான், கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவனுக்கு வழங்கலாயிற்று. ஆனால் பிற்காலத்தில் வடமொழி செல்வாக்குப்பெற்ற போது, (எதிரிகளின்) யானைகளின் யமன் என்று இப்பெயருக்கு விளக்கம் தரப்பட்டது. அரியாசனம் ஏறுவதற்கு தன் பிறப்புரிமையான பதவியை இழந்து சில ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டான். சிறையினின்று இவன் தப்பிச்சென்று ஆட்சியைக் கைப்பற்றியதைக் கற்பனை வளம்மிக்க கவிஞர்கள் உயர்வு நவிற்சியாக வருணித்துள்ளனர்.

“வாரேன் வாழிய நெஞ்சே கூருகிர்க் கொடுவரிக்
குருளைகூட்டுள் வளர்த்தாங்குப் பிறர், பிணியகத்திருந்து
பீடுகாழ், முற்றி யருங்கரை கவியக்குத்திக் குழி
கொன்று யானை பிடிபுக்காங்கு”
(பட்டினப்பாலை 220 – 228)

“நுண்ணுதி னுணர நாடி நண்ணார்
செறிவடைத் திண்காப் பேறிவாழ் கழித்
துருகெழ தாப மூழி னெய்திப்
பெற்றவை மகிழ்தல் செய்வான்”
(பட்டினப்பாலை 220 – 228)

புலிக்குட்டி, கூண்டுக்குள்ளஇருந்து வளர்ந்தே பலம் பெறுவது போல, எதிரிகளின் சிறைக்கூடங்களில் வாழ்ந்த போது கரிகாலன் வல்லவன் ஆயினான். ஒரு குழியில் யானை பிடித்து அடக்கப்படுகிறது. ஆனால் அதே குழியை நிரப்பி தப்பித்து ஓடி, பெண் யானையுடன் சேர்ந்துவிடும் இயல்பு அதற்கு உண்டு. இவ்வாறே கரிகாலன் சிறையில் இருந்த காலமெல்லாம் சிந்தித்துச் சிந்தித்து, சீரிய முடிவுகளுக்கு சிறைக்காவலரரைக் கொன்று தப்பி, பிறகு படிப்படியாகப் புகழும் பெருமையையும் அடைந்தான்.

இவனது ஆட்சியில் நடைபெற்ற முதல் பெரும் போர் வெண்ணிப்போர். சோழ அரியணையைக் கரிகாலன் நிலையாகப் பெறுமாறு செய்ததும், தமிழகத்தின் முடியுடைய மூவேந்தர்க்குத் தலைவனாக விளங்குமாறு செய்ததும் இப்போரே. ஏனெனில் இவ்வெற்றியின் மூலம் தனக்கெதிராக அமைக்கப்பட்டிருந்த ஒரு பெரும் கூட்டணியை அவன் முறியடித்துவிட்டான். இப்போரில் முதுகில் புண்பட்ட சேரமன்னன், தனக்கு பெரும் அவமானம் ஏற்பட்டதாகக் கருதி, கோழைத்தனமாக தற்கொலை செய்து கொண்டான். இதை கரிகாலனின் நண்பரும் வெண்ணியில் வாழ்ந்து போரை நேரில் கண்டவருமான வெண்ணிக்குயத்தியார் என்னும் புறநானுற்றுப்புலவர் விளக்குகிறார்.

இவனது படை பலத்தைப் பயன்படுத்தவும் வெளிப்படுத்தவும் வேறு வாய்ப்புகள் வாய்ககாமல் போகவில்லை. வாகைப் பெருந்தலை என்னுமிடத்தில் ஒன்பது குறுநில மன்னர்களின் கூட்டணியை இவன் முறியடித்தான். கரிகாலனின் படைகள் அவனது பகைவர்களின் இராச்சியங்களை அழித்த விவரங்களையும் அவர்கள் காட்டிய வீரத்தையும் பட்டினப்பாலையின் ஆசிரியர் மிக விளக்கமாக வர்ணிக்கிறார்.

கரிகாலனின் சொந்த வாழ்க்கையைப்பற்றி நமக்குப் பேரளவிற்கு ஒரு விவரமும் கிடைக்கவில்லை. இவன் பெண்டிருடனும் பிள்ளைகளுடனும் மகிழந்திருந்தான் என்று பட்டினப்பாலை ஆசிரியர் உத்திரங்கண்ணனார் பொதுப்படையாக கூறுகிறார். நாங்கூரைச்சேர்ந்த வேளிர் குலப்பெண் ஒருத்தயை கரிகாலன் மணந்தான் என்று உரையாசிரியர் நச்சினார்கினியார் அவரது காலத்தின் நிலவிய மரபுவழிச் செய்தியின் அடிப்படையில் கூறுகிறார்.

புராணக்கதைகள்

பழங்காலந்தொட்டே கரிகாலனைப்பற்றிய பல புராணக் கதைகள் உருவாகி, தற்போது, இக்கதையே வரலாறாகப் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் முடியுடை வேந்தர், வடநாட்டு ஆரிய மன்னர்களை எதிர்த்து வெற்றி பெற்றனர் என்று கூறும் சிலப்பதிகாரம், கரிகாலனின் வடநாட்டுப் படையெடுப்பை பலபடப் பாராட்டுகிறது. இப்படையெடுப்பில், கரிகாலன் இமயம் வரை சென்றதோடு, வச்சிரம், மகதம், அவந்தி போன்ற சில நாடுகளை வென்றோ, அல்லது உடன்பட்டோ செய்து கொண்டான். காவேரியாற்றின் கரைகளை உயர்த்திக்கட்டினான் என்பதை ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் வாழந்த தெலுங்கு சோ(ட)ழ மன்னன் புண்ணிய குமரனின் மலேபாடு பட்டயங்களில் முதன் முதலாகக் காண்கிறோம்.

சமயம் இறப்பு

வைதீக மதத்தில் கரிகாலனுக்கு இருந்த நம்பிக்கை பற்றியும் அவன் இறந்ததால் ஏற்பட்ட ஆறாத்துயரத்தைப் பற்றியும் கருங்குழல் ஆதனார் என்னும் புலவர் பாடியுள்ளார்.

அடுத்து சோழர் பரம்பரையில் இருந்த கிள்ளி மன்னர்கள், கில்லியில்லை கிள்ளி, நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, கிள்ளிவளவன், பெருங்கிள்ளி ஆகியோர் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

சோழர்களைப்பற்றிய ஆழமான பதிவு(depth)

எல்லோரும் நல்ல பதிவுகளும், ஆழமான பதிவுகளும் போட்டுக்கொண்டிருக்கும் பொழுது, நான் மட்டும் ஆனந்தவிகடனில் இருந்து காப்பியடித்து போட்டுக்கொண்டிருந்தது சிறிது காலமாகவே வேதனையளிப்பதாகவே இருந்தது.

அதனால் நானும் ஆழமான பதிவுகளை போடநினைத்தேன். நினைத்தால் மட்டும் போதுமா சரக்கு வேண்டாமா? யோசித்துப்பார்த்து சோழ குல வரலாற்றை பற்றி ஒரு ஆழமான(உண்மையிலேதாங்க) பதிவு போடலாமென்று முடிவெடுத்திருக்கிறேன்.

சின்னவயசிலிருந்தே சோழர்கள் மீது ஒரு காதல் உண்டு எனக்கு, சோழர்களை எனக்கு அறிமுகப்படுத்தியதில் பெரும்பங்கு கல்கி அவர்களுக்கு உண்டு, பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களையும் ஐந்து நாட்களில் படித்து முடித்திருக்கிறேன். பொய்சொல்லவில்லை உண்மைத்தான். படித்தவர்களஇல் பெரும்பான்மையானவர்களைப்போல் எனக்கும் அருள்மொழியை விட வந்தியத்தேவனையே பிடித்திருந்தது. ஆனால் கொஞ்சம் வித்தியாசமாய் குந்தவையைவிட மணிமேகலையை, பெண் கதாப்பாத்திரங்களில் பிடித்திருந்தது.

அந்தக்காலத்தில் படித்த கல்கியின் ஐந்தாம் பாகத்து கவிதைகளால் கூட இருக்கலாம். கைவசம் புத்தகம் இல்லாத காரணத்தால் அந்தக் கவிதைகளை போட முடியவில்லை.

கல்கியே சொல்லியிருந்தாலும் அந்தக் கதை படித்தவுடன், நந்தினி ஒரு கற்பனைப்பாத்திரம் என்று நம்பமுடியவில்லை. அத்துனை தூரம் நான் கதையில் ஊறியிருந்தேன். படித்துமுடிக்கும் வரை, முடித்த சில ஆண்டுகள் வரை கூட அதுதான் வரலாறு என்று நம்பி வந்தவர்களில் நானும் ஒருவன்.
அப்பொழுது நான் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன். கையில் புத்தகம் வாங்குவதற்கு காசு கிடையாது. அந்த லைப்ரரியன் சிறுவனான நான் படிப்பேனா? புரியுமா? என்றெல்லாம் யோசிக்காமல் ஒரு கண்டிஷனோடு பொன்னியின் செல்வன் புத்தகத்தை ஒரு முழுஆண்டுத்தேர்வு விடுமுறையில் கொடுத்தார். அது அந்த புத்தகத்தை அடுத்தநாள் கொடுக்கவேண்டும் என்பது. இப்படியே ஒவ்வொருநாள் ஒவ்வொருபாகமாகப் படித்து ஐந்து நாட்களில் முதன் முறையாக பொன்னியின் செல்வன் புத்தகத்தை முடித்தேன். அதன் பின்னர் அதில் இருக்கும் வரிகள் மனப்பாடம் ஆகுமளவிற்கு அடுத்த சில ஆண்டுகளில் படித்தது வேறுவிஷயம்.

அப்பொழுதெல்லாம் ஆதித்த கரிகாலனைக் கொன்றது, நந்தினியா, பெரிய பழுவேட்டரையரா, வந்தியத்தேவனா, இல்லை இரவிதாசனா என்று எங்களுக்குள் விவாதிப்பதில் ஆர்வம் அதிகம் இருந்தது. கல்கி சொல்லியிருந்ததாக ஞாபகம், அவர் நீலகண்ட சாஸ்திரி எழுதிய சோழர்கள் என்ற புத்தகத்தை பயன்படுத்தி எழுதியதாக. அதனால் அந்தப் புத்தகத்தை படித்து மற்றவர்களுக்கு முன்னர் உண்மையை சொல்ல நினைத்து லைப்பரரியனிடம் கேட்டேன். அந்தப்புத்தகம் ஆங்கிலத்திலோ தமிழிலோ அங்கு இல்லை. பின்னர் சில ஆண்டுகள் கழித்து டெல்லியில் இன்டர்நேஷனல் புக்பேர் போட்டிருந்தார்கள். முதல் மாத சம்பளம் வாங்கிய ஞாபகம், தனியாக அந்த இடத்தை கண்டுபிடித்து கடலென திரண்டிருந்த புத்தகங்களின் மத்தியில் அந்தப்புத்தகத்தையும் வாங்கினேன். இரண்டு பாகங்கள் சேர்த்து 470 ரூபாய் என்று நினைக்கிறேன்.

அழகாக அட்டையிட்ட புத்தகங்களை வாங்க மற்றவர்கள் விரும்ப, ஏதோ பழைய புத்தகம் போலிருந்த இந்தப்புத்தகத்தை நான் வாங்கி வந்ததைப் பார்த்து என் சித்தி வீட்டில் எல்லோருக்கும் ஆச்சர்யம். ஆனால் அவர்களுக்கு என் சந்தோஷம் புரியவில்லை.
இப்படியாக என் சோழர் குலத்தின் மீதான காதல் வளர்ந்து கொண்டே வந்தது, இந்தச் சமயத்தில் தான் பாலகுமாரன் உடையார் எழுதுகிறார் என அறிந்து மகிழ்ந்தேன். ஆரம்பக்காலத்தில் பாலகுமாரனுடைய நாவல்களும் என்னை கவர்ந்திருந்தன என்பதுதான் அதன் காரணம். இந்த இடைவெளியில் நான் அந்த சோழர்கள் புத்தகத்தை படித்து ஒருவாறாக முடித்திருந்தேன். அதன் உண்மை என்னை யோசிக்க வைத்துக்கொண்டிருந்தது.

உடையார், முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் பாகங்களை படித்துவிட்டேன், ஆனால் கோபமே மிஞ்சியது, அதை ஒரு பதிவில் கூட குறிப்பிட்டிருந்தேன். அது தேவையில்லை இங்கே, கல்கி 90% கற்பனை கலந்து எழுதினால் பாலகுமாரன் 75% கற்பனை சேர்த்து அவர் பாணியில் எழுதியிருந்தார் அவ்வளவுதான் வித்தியாசம்.

அப்பொழுதிலிருந்தே எனக்கு தோன்றிய எண்ணத்தை எழுத நினைத்திருந்தேன். இடையில் என்னுடைய சில தொடர்கதைகள் மரத்தடி.கொம்மில் வெளியாகியிருந்ததால், ஒரு கதையாக எழுத நினைத்து முடியாமல் கைவிட்டேன். இப்பொழுது இதை ஒரு பதிவாக போட உத்தேசம். நான் வைத்திருக்கும் அந்த புத்தகத்தை நம்பி, கொஞ்சம் ஆழமாக. ஆழமாகன்னு சொல்லிட்டாலே புரியாதுன்னுதான் சொல்லவரேன்னு நினைத்தால் அது என் தவறில்லை.

ஒரு வரலாறாக, ஆரம்பத்திலிருந்தே கொஞ்சம் கடுமையாக இருந்தாலும் முயற்சிக்கு முடிவுசெய்துள்ளேன். சிறிய ஆரம்பத்துடன்.

சோழர்வரலாறு

சோழர்களது நீண்ட வரலாற்றை நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம்.

1. சங்க இலக்கிய காலம்
2. சங்ககால இறுதிக்கும் விஜயாலய அரசமரபின் தோற்றத்திற்கும் இடைப்பட்ட காலம்
3. விஜயாலயனுடைய மரபு புகழ்பெற்று விளங்கிய காலமான கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு முதலான காலம்(இதில்தான் இராஜராஜன் இராஜேந்திரன் வருவார்கள்)
4. சாளுக்கிய-சோழ குல மன்னன் முதலாம் குலோத்துங்கனும் அவனது பின்னோரும் புகழ்பெற்று விளங்கிய கி.பி. பதினோராம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் பதின்மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரையிலான காலம்.

நாம் இதில் முதல் பகுதியான சங்க இலக்கிய காலத்தை பற்றி முதலில் பார்ப்போம். ஆதாரமாக நான் வைத்து எழுதிக் கொண்டிருப்பது, சோழர்கள், பேராசிரியர் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி எழுதியது, தமிழில் மொழிபெயர்த்தது, கே. வி. ராமன்.

சாரு நிவேதிதா – ஒரு மழை இரவில் நடந்த சந்திப்பு…

கழுத்தில் ஆறேழு தங்கச் சங்கிலிகளைப் போட்டுவிட்டால், தமிழ் சினிமாவில் வில்லனாக்கிவிடலாம் என்பது போன்ற தோற்றம். ‘ஜீரோ டிகிரி’, ‘கோணல் பக்கங்கள்’ என காமமும் வியர்வையும் கலந்து மணக்கும் சாருவின் எழுத்துக்கள், சமயத்தில் வியப்பளிக்கும்… சமயத்தில் வெறுப்படிக்கும். அப்படி ஒரு ரகளையான பாணியைத் தனது பிரத்யேக மொழியாக்கி வளைய வரும் சாரு, இலக்கிய எல்லைகளைத் தாண்டியும் பிரபலம். ஒரு மழை இரவில் நடந்தது இந்தச் சந்திப்பு…

‘‘தமிழ் இலக்கியச் சூழல் இப்போ மோசமா இருக்கு. பாரதி மாதிரி, ப.சிங்காரம் மாதிரி தீவிரமாகவும் உலகத் தரத்திலும் இயங்கக்கூடிய படைப்பாளிகள் ரொம் பவே குறைந்து விட்ட னர். கவிதைகளில் தருமு.சிவராமுக்குப் பிறகு அவ்வளவு உக்கிரமாக, பித்த நிலையில் எழுத ஆட்கள் இல்லை. உரை நடையில் அசோகமித் திரன் அளவுக்கு எழுதும் படைப்பாளி யைத் தேட வேண்டி இருக்கிறது. ஒரு சில பேர் இருந்தா லும், அவர்களும் பரவலாக அறியப் படாமல் வட்டத் துக்குள்தான் வாழ் கிறார்கள்.

பெரு நாட்டு அதிபராக இருந்தவர் லோசா… தன் ஆட்சியில் ஆயிரக்கணக்கான அப்பாவிகளைக் கொன்று குவிக்க உத்தரவிட்டவர். ஆனால், அவர் பிரமாதமான எழுத்தாளர். ‘தி ரியல் ஸ்டோரி ஆஃப் அலெக்சான்ட்ரா மாய்தா’ என்கிற அவருடைய நாவல், ஒரு புரட்சிக்காரனைப் பற்றிய ஆக அற்புதமான படைப்பு. ஓர் எழுத்தாளராக அவரை நான் கொண்டாடுவேன். அப்படிக்கூட இங்கே பலரைக் கொண்டாட முடியாதே!

லக்ஷ்மி மணிவண்ணன், அழகிய பெரியவன், என்.டி.ராஜ்குமார் எனச் சிலர் சொல்கிற மாதிரி எழுதுகிறார்கள். மாலதி மைத்ரி எழுத்துக்களில் ஒரு தெறிப்பு இருக்கு. ஆனாலும், உலகத் தரத்தில் எழுத யாரும் இல்லை. என் எழுத்துக்கள் உலகத் தரத்துக்கானவை. அதற்கான வாசிப்பும் உழைப்பும் என்னிடம் இருக்கிறது. மலையாளத்திலும் வெளிநாடுகளிலும் என்னைக் கொண்டாடுகிறார்கள். அங்கே எல்லாம், நம்ம ஊரில் ஒரு நடிகனுக்குக் கிடைக்கிற மரியாதையும் வரவேற்பும் எனக்குக் கிடைக்கின்றன. ஆனால் இங்கே என்னை எவ்வளவு பேருக்குத் தெரியும்? எழுத்தாளனை மதிக்காத, கொண்டாடாத ஒரு சமூகம் எப்படி உருப்படும்..?’’

‘‘சிறு பத்திரிகைச் சூழல் எப்படி இருக்கிறது?’’

‘‘உண்மையில் இங்கே உள்ள பல எழுத்தாளர்கள், சாமான்யர்களைவிட கட்டுப் பெட்டிகளாக பத்தாம்பசலிகளாக இருக்கிறார்கள். ஜாதிய மனோபாவம் சிறு பத்திரிகை உலகிலும் பரவிக் கிடக்கிறது.

விமர்சனங்களை நேர்மையாக எதிர்கொள்ளாமல் வக்கீல் நோட்டீஸி லிருந்து அடியாள் அனுப்புவது வரையான ஆபத்துக்கள் நடக்கின்றன. உச்சகட்டமாக கும்பலாக வந்து நேரடியாகவே தாக்குகிறார்கள். உனக்கும் எனக்கும் நடுவிலேயே கருத்துச் சுதந்திரம் இல்லையென்றால், சமூகத்தில் அதை எப்படி எதிர்பார்க்க முடியும்?

அப்புறம், கோஷ்டிப் பூசல்… ஆளாளுக்கு ஒரு கோஷ்டி சேர்த்துக்கொண்டு பண்ணுகிற கோமாளித் தனங்கள். என்னை ஒரு மலையாள பத்திரிகையில் பேட்டி எடுக்க இருந்தால், ‘சாருவா… அவனெல்லாம் ஒரு எழுத்தாளனே இல்லை. குப்பை!’ என்று தமிழ்நாட்டிலிருந்து தகவல் போகிறது. இந்த மாதிரியான கோஷ்டிப் பூசல்களால்தான், தகுதியானவர்களுக்கு வர வேண்டிய விருதுகளும் கிடைக்காமல் போகின்றன. ‘இவருக்கு விருது கொடுத்தால் சண்டை வரும். அவருக்குக் கொடுத்தால் வம்பு’ என்று கொடுக்கப் பயப்படுகிறார்கள். இதனால் நம் படைப்புகள் வேறு மொழிகளுக்குப் போய்ச் சேர வாய்ப்பு இல்லாமல் போகிறது. அரசியலைக் குறைத்து அவரவர் படைப்பில் கவனம் செலுத்தினால், தமிழ் இலக்கியத்துக்கு நல்லது நடக்கும்.

இன்னொரு பக்கம் ஆரோக்கியமாவும் இருக்கு. பல்கலைக்கழகங்களோ, அரசியல் இயக்கங்களோ, அரசாங்கமோ, சினிமாவோ, வெகு ஜனப் பத்திரிகைகளோ தமிழை முன்னெடுத்துச் செல்ல முடியாது. சிற்றிதழ்களாலும் சிற்றிதழ் எழுத்தாளர்களாலும்தான் அது நடக்கிறது… தொடர்ந்து நடக்கும்!’’

‘‘பெண் படைப்பாளிகளின் படைப்புகளில் பாலுணர்வு தூக்க லாக இருக்கின்றன என்பது மாதிரி யான சர்ச்சைகள், அவர்களின் படைப் புச் சுதந்திரத்தை பாதிக்கும்தானே?’’

‘‘முதலில் பெண் படைப்பாளிகளின் எழுத்தில் ஆபாசம் அதிகமாக இருப்பதாகச் சொல்வது யார் தெரியுமா? நம் திரைப்படப் பாடலாசிரியர்கள். இந்த மாதிரி உலக காமெடி எல்லாம் இங்கேதான் நடக்கும். அதை விட்டுத் தள்ளுங்க. உடலைப் பற்றி, காமத்தைப் பற்றி இன்னும் ஆழமாக வலிமையாக எழுதப் பெண் படைப்பாளிகள் முன்வர வில்லை என்பதுதான் என் ஆதங்கம்.

நோபல் பரிசு வாங்கின ஆஸ்திரியா நாட்டு பெண் எழுத்தாளர் எல்ஃப்ரிட் ஜெலினெக் எழுதிய ‘பியானோ டீச்சர்’ என்கிற நாவலைப் படியுங்கள். முழுக்க முழுக்க ஒரு பெண்ணின் உடல் வேட்கையை, காமத்தை அடிச்சு நகர்த்தி இருப்பார். நாவல் வந்ததும் ‘அது என் சொந்த அனுபவங்கள்தான்’ என்று துணிச்சலாகச் சொன்னார். அந்த உண்மையில், உக்கிரத்தில் ஒரு சதவிகிதம்கூட இங்கே இல்லை. உடல் எவ்வளவு மகத்தான விஷயம்… அதைக் கொண்டாட வேண்டாமா?

தமிழில் இப்போது பாலுணர்வு பற்றி எழுதுபவர்களில் முக்கியமான ஆள் நான்தான். என் எழுத்துக்களைப் பற்றி இதுவரை எந்த பெண் படைப்பாளியும் கருத்து சொன்னதாகவோ, விவாதித்ததாகவோ விமரிசனம் பண்ணியதாகவோ எனக்குத் தெரியவில்லை. என் எழுத்தை அவர்கள் வாசித்திருப்பார்களா என்பதுகூடத் தெரியவில்லை. அந்த அளவுக்கு வாசிப்பு கிடையாது. இன்னும் கட்டுமானங்களை, கட்டுப்பாடுகளை முழுதாக உடைக்க முன்வராவிட்டால், அப்புறம் எப்படி ஜெலினெக் மாதிரியெல்லாம் எழுத முடியும்?’’

‘‘சரி, குஷ்பு பேசிய கற்பு பிரச்னை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?’’

‘‘கற்பாவது மண்ணாங்கட்டியாவது! இதை பெரியார் எப்பவோ சொல்லிட்டார். அந்தப் பெரியார் வழியில் வந்த தம்பிகள்தான் இன்னிக்கு தாம்தூம்னு குதிக்கிறாங்க. இவங்க சொல்ற கற்பு என்ன? ராமன் _ சீதா மாதிரி ஒருவனுக்கு ஒருத்தி. ஆனால், நம் தலைவர்கள் எத்தனை பேர் அப்படி இருக்காங்க?

நீங்க ஒரே ஒரு நாள் ஃபேமிலி கோர்ட்டுக்கு போய் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தீங்கன்னா தெரியும்… நம்ம தேசம் எப்படி இருக்குன்னு? விவாகரத்து கேட்டு வருகிற பல தம்பதி களுக்கு இருக்கிற பிரச்னையே ‘என் மனைவிக்கு இன்னொருத்தனோட தொடர்பு இருக்கு, கணவனுக்கு இன்னொருத்தியுடன் காதல் இருக்கு’ என்பது மாதிரிதான். நீங்க காட்டுக் கத்தா கத்துகிற கற்பு எங்கே போச்சு? அப்புறம் ப்ரீ&மேரிடல் செக்ஸ். கல்யாணத்துக்கு முன்னாடி யார் யாருடன் எப்படி இருக்கிறார்கள் என்பதெல்லாம் அவங்கவங்க விருப்பம் சார்ந்த விஷயம். யாரும் யாரையும் ஏமாற்றக் கூடாது; ஏமாந்து விடக் கூடாது. உறவுகளில் பாதுகாப்பாக இருக் கணும். அவ்வளவுதான் விஷயம்! அது பற்றிய பாலியல் கல்வியைக் கற்றுக் கொடுப்பது பற்றி யாரும் பதறக் காணோம். போராடக் காணோம். சும்மா கற்பு, ஒழுக்கம்னு கத்திட்டே இருக்கிற நம் நாட்டில்தான் கற்பழிப்புச் சம்பவங்கள் நிறைய நடக்கிறது. செக்ஸின் தலைமையிடம்னு சொல்லப்படுகிற தாய் லாந்தில் கற்பழிப்பு என்பதே இல்லை. அப்ப என்ன கற்பு… கருமம்னுக்கிட்டு?

திருமாவளவன் ‘டெக்கான் கிரானிகல்’ இங்கிலீஷ் பேப்பரில் கற்பைப் பற்றி முற்போக்காகப் பேட்டி தருகிறார். இன்னொரு பக்கம் அவர் கட்சிக்காரர்கள் கையில் விளக்கு மாறுடன் கழுதைகளுடன், குஷ்பு வீட்டின் முன்னால் போராட்டம் நடத்துகிறார்கள். இதுதான் இங்கே இவங்க அரசியல்.

கற்பைப் பற்றி குஷ்பு தவறாகப் பேசிட்டாங்களாம்… ஆளாளுக்கு செருப்பு தூக்குவது, வழக்கு தொடுப்பது, கொடும்பாவி கொளுத்துவது என காமெடி நாடகம் நடத்துகிறார்கள். குஷ்பு அப்படி அந்தப் பத்திரிகையில் என்ன பேசினார் என்பதே பலருக்கு சரியா தெரியாது.

‘உங்களின் கருத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனால் அந்தக் கருத்தை நீங்கள் சொல்கிற உரிமைக்காக என் உயிரையும் கொடுப்பேன்’னு ரூஸோ சொன்னது எவ்வளவு மகத்தான கருத்து. ஆனால் இங்கே, நம் அரசியல் தலைவர்கள் எல்லாம் ஒண்ணு சேர்ந்து சமூகத்தையே ரௌடிக் கூட்டமாக மாத்தி வெச்சிருக்காங்க. கொடும் பாவியைக் கொளுத்துகிறவன் நாளைக்கு உயிரோடவும் கொளுத்து வான்… பஸ்ல பிள்ளைங்களை உயிரோட எரிச்சாங்களே அப்படி நடக்கும்!

அதுக்காக நான் குஷ்புவை ஆதரிப்பதாக அர்த்தமில்லை. அது தனிக் கச்சேரி. அந்தப் பேட்டியில் குஷ்பு பேசின அத்தனையும் உளறல். குஷ்பு மாதிரி நடிகைகள் எல்லாம் தொழிலதிபர்கள். லட்ச லட்சமா பணம் பார்க்கிறவர்கள். அவங்களுக்கு மக்களைப் பற்றி, சமூகத்தைப் பற்றியெல்லாம் கவலையே கிடையாது. இப்பவும் சாந்தி தியேட்டர் எதிரே தன் பிள்ளைக்குச் சாப்பாடு வாங்குகிற காசுக்காக உடம்பை வித்து வாழ்கிறார்களே.. அவங்களுக்காகப் போராட நான் ரெடி. குஷ்புவுக்காக நான் எதுக்குப் போராடணும்?

அது இருக்கட்டும், இது மாதிரியான பிரச்னைகளுக்கு ஆரம்பமாக இருந்த தங்கர்பச்சானின் பேச்சு இருக்கே… அதையும் கண்டிக்கணும். அதுவும், ‘கேவலம் அறுநூறு ரூபாய் பாக்கிக்காக ஒரு சிகை அலங்கார நிபுணரெல்லாம் ஷ¨ட்டிங்கை நிறுத்துறாங்க’னு ஒரு தொழிலாளியையும் அவங்க வாங்குகிற கூலியையும் கேவலப்படுத்திப் பேசினார் பாருங்க… அதுக்குத்தான் போராடணும். தங்கர்பச்சான் _ குஷ்பு பிரச்னைகள் தமிழ்நாட்டின் பிரச்னையா என்ன… இது சும்மா, பேயும் பிசாசும் அடிச்சுக்குது!’’

‘‘கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாதுன்னு ஆரம்பிச்சு ஓட்டல் களில் நள்ளிரவு நடனம் ஆடக் கூடாது என்பது வரை ‘கலா சாரக் காவல்’ எண்ணத்தோடு அரசியல் கட்சிகளும், கல்வித் துறையும், காவல் துறையும் எடுத்துவரும் நடவடிக்கைகளை வரவேற்கிறீர்களா?’’

‘‘காட்டுமிராண்டித்தனம்! நம்ம தேசத்தில்தாங்க நடக்குது இவ்வளவு கூத்தும்! இங்கே பொது இடங்களில் சிகரெட் விற்கலாம். ஆனால், புகைக்கக் கூடாது. 11 மணிக்கு ஓட்டல் பார்களை மூடிவிட வேண்டும். ஆனால், அரசாங்கத்தின் டாஸ்மாக் மட்டும் 12 மணி வரை விற்கலாம். சிகரெட், சாராயத்தை விற்க, அரசாங்கமே அனுமதிக்கும். ஆனால், சினிமாவில் மட்டும் இவை இரண்டுமே காட்டக் கூடாது.

அதே போல, கல்லூரிகளிலும், பகலைக்கழகங்களிலும் புதிய கட்டுப்பாடுகள் என்ற பெயரில் நடப்பதெல்லாம் கோமாளிக் கூத்து. ஆட்சி அதிகாரத்தில் யார் அமர வேண்டும் என்று தீர்மானிக்கிற வாக்கு அளிக்கும் வயதும் உரிமையும் உள்ள மாணவர் களைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை இவர்களுக்கு வழங்கியது யார்?

கல்விக்கூடங்கள் என்பது ஒரு சுதந்திர வெளி. அங்கே இருந்துதான் சிறந்த விஞ்ஞானிகளும் கல்வியாளர்களும் தலைவர் களும் உருவாகி வருகிறார்கள். அவர்களை அடிமைக் கூட்டமாக ஆக்க ஆசைப்பட்டால், இனி வரும் காலங்களில் ஒரு நல்ல மாணவனையோ, மனிதனையோ சமூகத்துக்கு உருவாக்கித் தர முடியாது.

அப்புறம், இந்த ஹோட்டல் விவகாரம். ரோட்ல டான்ஸ் ஆடினா பிடிங்க… அது த்ரிஷாவா இருந்தா மன்னிச்சு விட்ருவீங்க. ஆனா, நட்சத்திர ஹோட்டலுக்குள் நாலு சுவத்துக்குள் நடனம் ஆடினால் தவறாம். சொல்லப் போனால், அது ஒருவரது பிரைவஸிக்குள் அத்துமீறல் என்று காவல்துறை மீதும் மீடியா மீதும் மான நஷ்ட வழக்கே போடலாம்.

ஆனால், அதே நட்சத்திர ஓட்டல் களுக்குள் வேறு ஒரு அநியாயம் நடக்கிறது. சமீபத்தில், நானும் என் நண்பர் ஒருவரும் அப்படி ஒரு ஓட்டலுக் குக் குடிக்கப் போயிருந்தோம். நண்பர், கிராமத்தைச் சேர்ந்தவர். கறுப்பாக இருப்பார். அதனால் அவரை உள்ளே அனுமதிக்க வில்லை. என்ன அநி யாயம்! அவரும் காசு தானே கொடுக்கிறார்! தீண்டாமை இன்னும் ஒழியலை. எங்கேயும் ஒழியலை. அது வேற வேற முகம் எடுத்துட்டே இருக்கு… அதை எதிர்த்துத்தான் நாம் போராடணும்!’’

‘‘விஜயகாந்த் அரசியலுக்கு வந்திருக்காரே…’’

‘‘செம காமெடி! ‘ஏன் அரசியலுக்கு வந்தீங்க?’னு ஒரு கேள்விக்கு, அவர் சொல்ற பதில், ‘நான் சின்ன வயசிலேருந்தே சமூக சேவை செஞ்சிருக்கேன். இப்பவும் தையல் மெஷினெல்லாம் குடுக்கிறேன்’ என்கிறார். நான்கூடத்தான் பீச்சுக்குப் போறேன்… பிச்சை போடறேன். அதுக்காக அரசியலுக்கு வந்திடலாமா?

சினிமாவால் சமூகத்தைக் கெடுத்தது போதாதுன்னு இப்போ அரசியலுக்கும் வர்றாங்க. ரஜினிக்கு ஆன்மிகம் மாதிரி, விஜயகாந்துக்கு அரசியல். பல கோடிகளைப் பத்திரமா பேங்க்ல டெபாஸிட் பண்ணிட்டு, இமயமலைக்கு ட்ரிப் அடிக்கிறது எவ்வளவு சூப்பர் ஆன்மிகம்!

துறவின்னா யாரு… காமம், போகம், யோகம் எல்லாத்தையும் தாண்டி அதிகாரத்தையும் துறக்கணும். ஆனால் துறவி என்கிற பெயரில், ஜனாதிபதியையும் நீதிபதிகளையும் வந்து வாசலில் நின்னு பார்க்க வெச்சு, அதிகாரத்தை நிறுவுகிறவர்கள்தானே இங்கே துறவி! அரசியல், ஆன்மிகம் இலக்கியம்னு அத்தனையும் கெட்டுக் கிடக்கிற சமூகத்தில், விஜயகாந்த் அரசியலுக்கு வருவதா ஆச்சரியம்?’’

‘‘பிரேமானந்தாவில் இருந்து ஜெயலட்சுமி வரைக்கும் தமிழகத்தின் திடீர் பிரபலங்கள் அத்தனை பேரும் செக்ஸ் குற்றச்சாட்டுக்களிலேயே சிக்குவது தொடர்கதையாக இருக்கிறதே…’’

‘‘அக்பர் வரலாறு… அலெக்ஸாண்டர் வரலாற்றைவிட தமிழகத்தின் சாமியார்கள், ‘பெரிய மனிதர்கள்’, அழகிகள் வரலாறு நமக்குத் தெளிவாகத் தெரியும். புண்ணியம் & மீடியாவுக்கு!
மனைவியுடன்…

நம் சமூகத்தில் நடக்கிற பெரும்பாலான குற்றங்களுக்கு அடிப்படைக் காரணம் செக்ஸ்தான். செக்ஸ்னா அசிங்கம் என்று சொல்லிச் சொல்லி வளர்க்கிற சமூகத்தில், செக்ஸ் குற்றங்கள்தான் அதிகமாக நடக்கும். காலத்துக்கும் தேவைகளையும் ஆசைகளையும் அழுத்தி அழுத்தி உள்ளேயே பூட்டிட்டு அலைந்தால், பசி அதிகமாகும். வக்கிரம்தான் தலைதூக்கும். பசி அதிகமாகி விட்டால், பிடுங்கிச் சாப்பிடுகிற மாதிரி எங்கே யாவது வாய்ப்பு கிடைக்கிறபோது, எதற்கும் தயாராகிவிடுகிறார்கள்.

அண்ணாச்சி முதல் ஜெயலட்சுமி வரை நடக்கும் அத்தனை விவகாரமுமே நம் சமூகத்தின் சாம்பிள்கள் தான். ‘என்னை எவ்வளவு கஷ்டப்படுத்தறே… உன்னை கால்ல போட்டு மிதிச்சுக் காட்டறேன் பார்’னு ஒரு பெண் கிளம்பினால் என்னவாகும் என்பதற்கு ஜீவஜோதி முதல் ஜெயலட்சுமிவரை உதாரணங்கள் இங்கே அதிகம்!’’

‘‘உங்களுக்கு ஈழத் தமிழர்களின் நட்பு அதிகம்… அவர்களின் வாழ்வு எப்படி இருக்கிறது?’’

‘‘இணைய தளத்தில் என் கட்டுரைகளைப் படித்து, நண்பர்கள் ஆனவர்கள் நிறையப் பேர். அவர்களின் வாழ்வு துயரமானது. நிறையச் சம்பாதிக்கிறார்கள். வசதியாகவும் சிலர் வாழ்கிறார்கள். ஆனால், தங்கள் தாய் மண்ணில் போய் ஒரு பிடி சோறு சாப்பிட முடியலையே என்கிற துயரம் எப்பவும் அடிமனதில் அழுத்திட்டே இருக்கு. எனக்குச் சொந்த மண், மொழின்னெல்லாம் ஒண்ணும் கிடையாது. நிலப்பரப்பு எல்லாம் என்னோடதுதான்னு நினைப்பேன். ஆனால், சொந்த மண்ணே மறுக்கப்படுகிறபோது வருகிற சோகம் வேறு. அதை அனுதினமும் அவர்கள் அனுபவிக்கிறார்கள்.

இன்னொரு பக்கம், ஷோபா சக்தி மாதிரி உக்கிரமான படைப்பாளிகள் உருவாகி வருகிறார்கள். இங்கே தமிழ் தமிழ் என்று கத்திட்டு, படப் பெயரை மாற்றச் சொல்லி, டாடா சுமோக்களில் போய்ப் போராட்டம் நடத்துபவர்களை விட, அவர்கள் பல மடங்கு நம்பகமானவர்கள். அன்னிக்குப் பார்க்கிறேன்… கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் ‘அண்ணைத் தமிழ் வாழ்க!’னு மூணு சுழி ‘ண’ போட்டு எழுதி இருக்காங்க. இதுதான் இங்கே அரசியல்! இதுதான் நம்ம சமூகம்!

ஃப்ரான்ஸ்தான் என் கனவு தேசம். அங்கே ஒரே தெருவில் தேவாலயம், ஸ்கூல், செக்ஸ் ஷாப் எல்லாம் இருக்கு. ஆனால், எதுவும் எதுவாலும் டிஸ்டர்ப் ஆவதில்லை. அது மாதிரி ஒரு சூழல் வரும்போதுதான் இந்தியா உருப்படும்!’’

Credits : Anantha Vikatan

நடிகை குஷ்புவுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

திருவண்ணாமலை அக்டோபர் 21: அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நீதிமன்ற விசாரணையில் நடிகை குஷ்பு ஆஜராகாவிட்டால், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று திருவண்ணாமலை நீதிமன்றம், நடிகை குஷ்புவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் கலாசாரம் பற்றியும், பெண்களின் கற்பு பற்றியும் நடிகை குஷ்பு கூறிய கருத்துக்கள் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் கிளப்பியது. இந்த விவகாரத்தில் நடிகை குஷ்புவுக்கு எதிராக திருவண்ணாமலையைச் சேர்ந்த சமூக சேவகி ஒருவர் திருவண்ணாமலை 2 ஆம் வகுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு விசாரணையில் கடந்த 13 ஆம் தேதி நீதிமன்றத்தில் குஷ்பு ஆஜராக வேண்டும் என்று மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டிருந்தார். ஆனால் அன்று குஷ்பு ஆஜராகாததால் 20 ஆம் தேதி(நேற்று) ஆஜராக வேண்டும் என்று கூறி சம்மன் அனுப்ப உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி குஷ்புவுக்கு சம்மன் அனுப்பப்பட்டு, அதை அவரது கணவர் சுந்தர்.சி கையெழுத்திட்டு பெற்றுக் கொண்டார். இதனால் குஷ்பு நேற்று நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் நேற்று ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக அவரது வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள்.

குஷ்பு சென்னையில் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருப்பதால் அவரால் ஆஜராக முடியவில்லை என்று அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். அதனால் அடுத்த மாதம் 28 ஆம் தேதி ஆஜராக உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

இதற்கு வாதியின் வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குஷ்பு அடுத்த மாதம்(நவம்பர்) 14 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும், தவறினால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்றும் எச்சரித்து, வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.

Credits – Aanantha Vikatan

சு.ரா பற்றி சுஜாதா – ஓர் உண்மையான ரசிகனின் வணக்கங்கள்(Vanakkangal)

சுந்தர ராமசாமி வெள்ளிக்கிழமை மதியம் அமெரிக்காவில் இறந்துபோன செய்தி கேட்டு, அதிர்ச்சி அடைந்தேன். அவருடைய படைப்புகளுடன் எனக்குப் பரிச்சயம் ஏற்பட்டது, டில்லியில் இருந்தபோது.

‘சரஸ்வதி’ இதழில் வெளிவந்த அவரது சிறுகதைகள் மற்றும் ‘ஒரு புளியமரத்தின் கதை’ நாவல் மூலமாக, புதுமைப்பித்தன், ஜானகிராமனிலிருந்து வேறுபட்ட, அவர்கள் அளவு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு புதிய எழுத்தை அடையாளம் காண முடிந்தது. ‘பசுவய்யா’ என்ற பெயரில், ‘எழுத்து’ பத்திரிகையில் வெளிவந்த கவிதைகள் அவருடையவை என்று தெரிந்ததும், அவரது திறமையின் வீச்சு பரிச்சயமாகி வியப்பளித்தது.

‘நடுநிசி நாய்கள்’ கவிதைத் தொகுப்பில், ஒரு கோயிலில் ஒரு ட்யூப் லைட்டில் அதைக் கொடுத்தவர் பெயர் எழுதியிருப்பதைத் தொடர்ந்து, யார் யாருடைய உபயம் என்று எழுதிய கவிதை நினைவிருக்கிறது. புதுக்கவிதை பற்றி ‘இந்தியா டுடே’யில் நான் எழுதிய விரிவான கட்டுரையின் முடிவில், இக்காலத்து நல்ல கவிதைக்கு உதாரணமாக அவர் கவிதையைத்தான் குறிப்பிடுவது பொருத்தமாக இருந்தது.

சுந்தர ராமசாமியின் ‘காகங்கள்’ தொகுப்பில் பிரசாதம், சீதை மார்க் சீயக்காத்தூள் போன்ற பல சிறுகதைகள் என்னை மிகவும் வசீகரித்தன. ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ பற்றி கணையாழியில் விரிவான விமர்சனம் எழுதியது நினைவிருக்கிறது.

பெங்களூர் அருகே நடந்த ஒரு கருத்தரங்கில் அவரைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன். அதிகம் இலக்கியம் சம்பந்தமில்லாமல், பொதுவாக ‘சாப்டாச்சா?’ போன்ற பேச்சுகள்தான். சு.ரா. ஏறக்குறைய மூன்று தலைமுறை எழுத்தாளர்களை அடையாளம் கண்டுகொண்டு பாராட்டியிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். ஆ.மாதவன், கிருஷ்ணன் நம்பி, ஜெயமோகன், நாஞ்சில் நாடன், மனுஷ்யபுத்திரன் போன்ற பெயர்கள் உடனே நினைவுக்கு வருகின்றன. மலையாளத்தில் இவரது மூன்று நாவல்களும் (ஒரு புளியமரத்தின் கதை, ஜே.ஜே. சில குறிப்புகள், குழந்தைகள்&பெண்கள்&ஆண்கள்) மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. தகழியின் ‘தோட்டியின் மகன்’ ‘செம்மீன்’ போன்ற நாவல்களை தமிழில் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார். அண்மையில், அவர் காலச்சுவடு பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளும், கேள்வி பதில்களும் ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டின.

‘ஒரு புளிய மரத்தின் கதை’யை கிருஷ்ணமூர்த்தி (ஆர்ட் டைரக்டர்) திரைக்கதையாக்கி மீடியா ட்ரீம்ஸில் கொடுத்தபோது, அதை திரைப்படமாக்கச் சம்மதம் தெரிவிக்கப்பட்டு, கம்பெனியின் சில ஷரத்துகளில் உடன்பாடில்லாததால் கைவிடப்பட்டது. சு.ரா. எனக்கு கையெழுத்திட்டுக் கொடுத்த ‘ஒரு புளியமரத்தின் கதை’ இன்னமும் இருக்கிறது.

சு.ரா&வுக்கு கனடாவின் ‘இயல்’ விருது கிடைத்தது. இந்தியாவில் ‘சாகித்ய அகாடமி’ விருது கிடைக்கவில்லை. இழப்பு அகாடமியினுடையதே!

சுந்தர ராமசாமி (30.05.1931 & 15.10.2005)க்கு ஓர் உண்மையான ரசிகனின் பாராட்டும், வணக்கங்களும்!

நன்றி ஆனந்தவிகடன்.