சோழ வரலாறு 2ம் பாகம் – முதலாம் பராந்தகன் (கி.பி. 907 – 955)

முதலாம் பராந்தகன் (கி.பி. 907 – 955)

திருப்புறம்பயம் போரின் போது, தஞ்சையையும் உறையூரையும் கொண்ட சிறு பகுதியைச் சோழர்கள், பல்லவர்களின் தலைமையின் கீழேயே ஆட்சி செய்து வந்தனர். ஆனால் அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குள்ளாகவே சோழர்களின் பலம் பல மடங்கு பெருகிற்று. இந்நிலைக்கு மிக முக்கியமான காரணமாயிருந்தவன் ஒப்பற்ற வீரனும், இராஜதந்திரியுமான முதலாம் ஆதித்தனே ஆவான்.

இவனுக்கு பிறகு அரியணைக்கு வந்த பராந்தகன் என்றழைக்கப்படும் முதலாம் ஆதித்தனின் மகன், சிறிது காலத்திலேயே பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தான். தனது மூன்றாம் ஆட்சி ஆண்டிலேயே “மதுரை கொண்ட” என்ற விருதை அவன் பெற்றான். இவன் ஆட்சிக்கு வந்தபொழுது, சோழநாடு வடக்கில் மைசூர் பீடபூமி நீங்கலாக, தெற்கே காவிரிவரையிலான பகுதியும், மேற்குத் கடற்கரையோரமாக ஒரு பகுதியும், சென்னை, காளத்தி வரையிலும் பரவியிருந்தது. கங்க மன்னர்கள் சோழரது அதிகாரத்திற்கு உட்பட்ட நண்பராகவும் சேரமன்னன், நெருங்கிய நண்பனாகவும் கருதப்பட்டனர்.

இலங்கையின் வரலாற்றுப் பதிவான மகா வமிசம் கூறும் குறிப்புகளிலிருந்து(மஹாவம்சா சி.வி. பாகம், 52, பக். 70) சோழ-பாண்டியப் போரில் மூன்று கட்டங்களைப்பற்றி அறியலாம். முதல் கட்டத்தில் பராந்தகனிடம் பாண்டிய மன்னன் தோல்வியுற்றான். இரண்டாம் கட்டத்தில் பாண்டிய மன்னன், ஈழ மன்னனது உதவியைக் கோரிப் பெற்று, சோழப்படையைத் தாக்கினான். பாண்டிய ஈழத்துப்படைகள் சோழப்படையிடம் பின்வாங்கின. ஈழப்படைத்தலைவன் சோழரை வெல்ல மீண்டும் முயன்றது மூன்றாம் கட்டமாகும்.

ஈழப்போர்

தான் புதியதாக வெற்றி கொண்ட பகுதிகளைத் தன் அதிகாரத்தை ஏற்குமாறு செய்யும் பணியில் பெரும்பாலும் முடிந்துவிட்டது என்று எண்ணிய பராந்தகன், தன் வெற்றியை மதுரையில் கொண்டாடும் பொருட்டு, பாண்டிய மன்னனின் முடியையும், மற்ற சின்னங்களையும் தானே அணிந்து கொள்ள எண்ணினான். ஆனால் இவையனைத்தும் இராஜசிம்மனால்(பாண்டிய மன்னன்) ஈழத்து மன்னனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததால் பராந்தகன் நான்காம் உதயன் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 945 – 53) இவற்றைத் திரும்பிப் பெறமுயன்று இம்முயற்சியில் படுதோல்வியடைந்தான்.

இவை பராந்தகனின் ஆட்சிக் காலத்தின் கடைசி ஆண்டுகளைப்பற்றியதாகவே இருக்க வேண்டும். மறக்கப்படாமலிருந்த இவனது தோல்வி, பல ஆண்டுகளுக்கு பிறகு, இவனது பலம் வாய்ந்த வழித்தோன்றலான முதலாம் இராஜேந்திரனால் மாற்றப்பட்டது(அதாவது பழிவாங்கப்பட்டது).

பராந்தகனின் நண்பர்கள்

கேரள மன்னன், கீழப்பழுவூர்த் தலைவர்களான பழுவேட்டரையர் ஆகியோரைத்தவிர, கொடும்பாளூரைச் சேர்ந்த வேளிர் தலைவரும், பாண்டியருக்கான போர்களில் பராந்தகனுக்காக உதவி செய்தனர்.

கொடும்பாளூர் வமிசத்தைச் சேர்ந்த தென்னவன் இளங்கே-வேளிர் என்பவரின் மகள் பூதி ஆதிக்க பிடாரி என்பவளைப் பராந்தகனின் மக்களில் ஒருவனான அரிகுலகேசரி முன்பே திருமணம் செய்திருந்தான்.

ஆட்சிக்காலம்

முதலாம் பராந்தகன் 48 ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்பதை அவனது 48-ம் ஆண்டின் கல்வெட்டிலிருந்து அறியலாம். இராஷ்டிரகூட மன்னன் இரண்டாம் கிருஷ்ணன், தன் பேரன் கன்னர தேவனைச் சோழ நாட்டின் அரியணையில் அமரச்செய்த முயற்சியை முதலாம் பராந்தகன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே முறியடித்தான். அதுமுதல் பராந்தகன் தன் ஆட்சிக்காலம் முழுவதும் வெற்றிமேல் வெற்றி பெற்று பீடுநடைப்போட்டான் தன் தந்தையின் வெற்றிகளை நிறைவேற்றும் வகையில் இவன் பாண்டியர்களஇன் சுதந்திரத்தைப் பறித்து, தன் நாட்டைத் தெற்கே கன்னியாகுமரிவரை பரவச்செய்தான். ஈழத்தின் மீதும் படையெடுத்தான், ஆனால் இம்முயற்சியில் இவனது குறிக்கோள் வெற்றியடையாததை முன்னர் பார்த்தோம். ஏனைய இடங்களில் இவன் பாணர்களை வெற்றி கொண்டதுடன் கங்க மன்னன் ஹுஸ்தி மல்லனைத் தன் அதிகாரத்திற்கு உட்படுத்தினான.

எஞ்சியிருந்த பல்லவர்களின் அதிகாரம் அடியோடு மறைந்தது, பராந்தகனின் நாடு, வடக்கே நெல்லூர் வரை பரவியது. எனினும் இவனது ஆட்சி முடிவதற்கு முன், வட மேற்கிலிருந்து மிகுந்த படைபலத்துடன் மூன்றாம் கிருஷ்ணன் சோழ நாட்டின் மீது படையெடுத்தான். அதன் விளைவாக நடைபெற்ற போரில் பராந்தகனின் மூத்த மகனான இராஜாதித்தன் உயிரழந்ததோடு, இதற்குப்பின் பராந்தகனும் வெகுகாலம் உயிர் வாழவில்லை. இதுமுதல் புகழ்மிக்க முதலாம் இராஜராஜன் கி.பி. 985ல் அரியணையில் அமர்ந்தது வரையிலான முப்பது ஆண்டுகள் வரையில் சோழ நாடு பெரும் இருளில் ஆழந்திருந்தது.

தக்கோலப்போர்

இதுவும் சோழ வரலாற்றில் ஒரு முக்கயமான போர் என்பதால் விரிவாகப் பார்ப்போம்.

பிரதிவீபதியின் மரணம்

சுமார் கி.பி. 940ல் முதற் பராந்தகனின் நம்பிக்கையுடைய நண்பனும் அவன் ஆட்சிக்குட்பட்டவனுமான கங்கமன்னன் இரண்டாம் பிரதிவீபதி மரணம் அடைந்தான். இதுவே கங்க நாட்டிலிருந்து, பராந்தகனுக்கு ஏற்பட்ட தொல்லைகளின் தொடக்கமாக இருந்தது, பிரதிவீபதி தன் வாழ்நாளின் இறுதியில், ஒரே மகன் விக்கியண்ணனை இழந்திருந்தான். இரண்டாம் பூதகன் என்பவன் இராஷ்டிரகூட இளவரசியும் மூன்றாம் கிருஷ்ணனின் சகோதரியுமான ரேவகா என்பவளை மணந்தான். இவன் கங்க நாட்டின் தனிப்பெரும் தலைவனாக இப்போது விளங்கினான். சோழர்களின் வலிமையைக்கண்டு அஞ்சிய வாணர்களும் வைதும்பரர்களும் ஏற்கனவே கிருஷ்ணனுடைய பாதுகாப்பைக் கோரியிருந்ததோடு, சோழருக்கு எதிராகவும் அவனது உதவியைப் பெற விழைந்தனர்.

இச்சூழ்நிலையில், அப்போதுதான் தன் நாட்டில் ஏற்பட்ட எதிர்ப்புகள் அனைத்தையும் அழித்துப் புகழேணியில் இருந்த கிருஷ்ணன்(இராஷ்டிரகூட மன்னன்) தெற்கு நோக்கித் தன் நாட்டை மேலும் விரிக்கக்கூடிய அரியவாய்ப்பை நழுவவிட விரும்பாமல் சோழருக்கு எதிராகப் படையெடுத்தான்.

இராஜாதித்தன்

திருமுனைப்பாடியில் இக்காலத்திலேயே பராந்தகனின் முதல் மகன் இராஜாதித்தன் தலைமையில் யானைப்படையும் சிறிய குதிரைப் படையும் அடங்கிய பெரும் படை ஒன்று இந்த இராஷ்டிரகூட படையெடுப்பு நிகழும் சாத்தியக்கூறுகள் இருந்ததால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதே காலத்தில், இதே பகுதியில் அரிகுலகேசரி என்ற பராந்தகனின் இரண்டாம் மகனும் தன் சகோதரன் இராஜாதித்தனுக்கு உறுதுணையாக இருந்தான்.

வாணர், வைதும்பர் ஆகியோருக்கு எதிராகத்தான் கடைப்பிடித்த ஆக்கிரமிப்புக் கொள்கையின் விளைவுகளைப்பற்றி கவலையுற்ற பராந்தகன், இரண்டாம் பிரதிவீபதியிடம் மட்டும் இந்தப் பொருப்புக்களை ஒப்படைக்காமல் பல எச்சரிக்கை நடவடிக்கைகளை, தானே மேற்கொண்டான். இத்தகைய ஏற்பாடுகள் பல ஆண்டுகளாகதப் பராந்தகனின் நாட்டைப் பாதுகாத்து வந்தது. ஆனால் கி.பி. 949ல் பல காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த இந்த படையெடுப்பு தக்கோலத்தில் பெரும்போரில் முடிவுற்றது.

தக்கோலத்தில் மூவடி சோழ இராஜாதித்தனுடன் பொருது அவனைக் கொன்று கன்னரதேவன் வெற்றி கொண்டதாக, ஆதகூர் கல்வெட்டு கூறுகிறது. பூதகனது இந்த வீரச்செயலைப் பாராட்டும் வகையில் கிருஷ்ணன் அவனுக்கு வனவாசி 12,000 பெல்வோலோ 300 என்ற பகுதிகளை வழங்கினான். இதை சோழர்களின் சான்றுகளை ஒப்புகின்றன.

இப்போரில் வெற்றி பெற்றாலும் கிருஷ்ணனுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு மறைந்துவிடவில்லை. இன்னும் பல ஆண்டுகள் இம்மன்னன் கடும் போர் புரிய வேண்டிய நிலையில் இருந்தான். கிருஷ்ணனின் படையெடுப்பால் சோழ நாடு சிறறுண்டது. வடபகுதியில் பெற்ற தோல்வியின் பயனாக, பராந்தகன் தன் நாட்டின் தென் பகுதியையும் இழந்தான் என்பது திண்ணம். சோழப் பேரரசு வீழ்ச்சியுற்றது, அதற்கு மீண்டும் உயிரூட்ட வேண்டிய நிலையை அடைந்தது.

பராந்தகன் ஆட்சியின் முடிவு

பராந்தகனது ஆட்சியின் இறுதி ஆண்டுகளைப் பற்றி தஞ்சையை அடுத்துள்ள இடங்களஇலிருந்து கிடைக்கும் ஒரு சில கல்வெட்டுகளிலிருந்து அறியலாம். இதைக்கொண்டு இம்மன்னன் 48-ம் ஆட்சி ஆண்டு வரை உயிர்வாழ்ந்தான்.

இம்மன்னன் பல மனைவியரை மணந்திருந்தான், இவர்களில் பதினொருவருடைய பெயர்கள் கல்வெட்டுகளில் இடம் பெறுகிறது. இராஜாதித்தனைத்தவிர, பராந்தகனுக்கு நான்கு மக்கள் இருந்தனர். கண்டராதித்தன், அரிகுலகேசரி, உத்தமசீலி, அரிந்திகை அல்லது பட்டயங்களில் காண்பது போல அரிஞ்சயன் என்பவராவர். பராந்தகன் சிறந்த சிவ பக்தன் என்று திருவாலங்காட்டுப் பட்டயம் சொல்கிறது. முதலாம் ஆதித்தனால் மேற்கொள்ளப்பட்ட கோயில் எடுப்பிக்கும் பணீ இவனது காலத்தில் சிறந்த முறையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.

இதனுடன் முதலாம் பராந்தகனின் வரலாறு முடிவுறுகிறது. அடுத்து முதலாம் பராந்தகனின் மறைவிலிருந்து (கி.பி. 955) முதலாம் இராஜராஜன் அரியணையேறும் வரையிலான காலத்தைப்பற்றி பார்க்கலாம்(கி.பி. 985).

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s