நியூக்கிளியர்ட் இந்தியா மற்றும் யார் அந்த நாலுபேர்

இந்தியாவும் அமேரிக்காவும் நியூக்ளியர் டீலில் கையெழுத்திடும் நிலையில் இருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன(India and America are very close to an agreement on civil nuclear cooperation, says Nicholas Burns, US undersecretary of state.
). அது என்ன மாதிரியான நியூக்ளியர் டீல். ஆனால் அந்த டீலைப் பற்றி பார்ப்பதற்கு முன், அமேரிக்கா சொல்லும் சில நிபந்தனைகளைப்பற்றி,

முதலில் சிவிலியன் நியூக்ளியர் புரோக்கிராமையும், மிலிட்டரி நியூக்ளியர் ப்ரோக்கிராமையும் தனித்தனியாக பிரிக்கவேண்டும். இப்படி பிரிக்கும் பொழுது அவர்கள் இந்தியாவிற்கு அதிநவீனமான நியூக்ளியர் டெக்னாலஜி விவரங்களைத் தருவார்கள். அதுமட்டுமில்லாமல், நம் சிவிலியன் நியூக்ளியர் ப்ரோக்கிராம் இன்டர்நேஷனல் அட்டோமிக் ஏஜென்சியின் கண்காணிப்பில் வரும்.

அப்படி என்ன மாதிரியான டெக்னாலஜியை இந்தியாவிற்கு அமேரிக்கா கொடுக்குமென்றால்,

நியூக்ளியர் டெக்னாலஜியில் நியூக்ளியர் ரியாக்டர் என்றொரு விஷயம் உண்டு. அதாவது ஒரு அணுவை இன்னொரு அணுவுடன் இணைப்பதாலோ இல்லை ஒரு அணுவை பிளப்பதாலோ உண்டாகும் நியூக்ளியர் எனர்ஜி, ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் நடந்துவிடும். அதாவது அதன் முழுமையான செயின் ரியாக்ஸன்கள். இதுவே நியூக்ளியர் ரியாக்டர் என்னும் ஒரு டிவைசை வைத்துக்கொண்டு செய்யும் பொழுது அந்த செயின் ரியாக்ஸன்களை, முறையே துவக்கப்பட்டு, பின்னர் கட்டுப்படுத்தப்பட்டு, பின்னர் சேகரிக்கப்படும்.

இது போன்ற நியூக்ளியர் ரியாக்டர்கள் எங்கே உதவுகிறது என்றால் நியூக்ளியர் எனர்ஜியை சேகரித்து வைத்து அதனை உபயோகித்து மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களில்.

இந்த வகையான நியூக்ளியர் ரியாக்டர்களில் அதிநுட்பமான பாஸ்ட் பீரிடர் நியூக்ளியர் ரியாக்டர்களை உபயோகிப்பதனால் கிடைக்கக்கூடிய நிறைய சாதகமான தன்மைகளை கருத்தில் கொண்டு தான் இந்த வகையான தொழில்நுட்பத்தை அமேரிக்காவிடமிருந்து இந்தியா கேட்டுவருகிறது. இதை உபயோகித்து சிவிலியன் நியூக்ளியர் ப்ரோக்கிராம்களாக நியூக்ளியர் டெக்னாலஜியை உபயோகப்படுத்தும் இந்தியாவின் தேவைக்குத் தான் அமேரிக்கா,

இந்தியாவின் நியூக்ளியர் டெக்னாலஜிக்களை, இரண்டாகப் பிரித்து அதாவது முறையே, சிவிலியன் மற்றும் மிலிட்ரி நியூக்ளியர் ப்ரோக்கிராம்களாக மாற்றி, அதில் சிவிலியன் நியூக்ளியர் ப்ரோக்கிராம்களை இன்டர்நேஷனல் சேவ் கார்ட்களின் கண்காணிப்பில் வைக்க வேண்டும். அப்பொழுது அவர்கள் இது போன்ற அட்வான்ஸ்டு டெக்னாலஜீக்களை இந்தியாவிற்கு தருவார்கள். இதை அமேரிக்காவிடமிருந்து கேட்டது இந்தியாதான்.

ஆனால் தருவதற்கு அவர்கள் இதுபோன்றதொரு கட்டுப்பாட்டை வைத்திருக்கிறார்கள். புஷ் இந்தியா வருவதற்கு முன் இது கையெழுத்திடப்படும் என்று தெரிகிறது. அப்படி நடந்தால் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேல் இதுவரை கையெழுத்திடாத என் என்பிடி யில் கையெழுத்திட்ட நாடுகளுக்கு கிடைக்கும் தொழில்நுட்ப வசதிகள் கூட கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

இதற்காகத்தான் இந்தியா ஈரானுக்கு எதிராகவும் அமேரிக்காவிற்கு ஆதரவாகவும் கையெழுத்திடப்போவததாக(திட்டுவிட்டது??) உள்ளது. மன்மோகன்சிங் இதைப்பற்றி குறிப்பிடும் பொழுதுதான், 1990களில் அவர் கொண்டுவந்த திட்டங்கள் இந்தியாவிற்கு இன்று பயனளிக்கிறது. அப்பொழுது இதை எதிர்த்தவர்கள் இன்றுபாராட்டுகிறார்கள் அதைப்போலவே. இப்பொழுதும் நடக்கும் என்று கூறியுள்ளார்.

இதனால் இந்தியாவிற்கு லாபமா நட்டமா என்று இன்னும் நல்லா தெரிஞ்ச ஆளுங்க எழுதணும். இங்க எழுதியிருக்கிறதும் நான் புரிஞ்சிக்கிட்டதா நினைச்சு எழுதினது தவறிருந்தால் திருத்தவும். கீழே ஆர்டிக்கிள்கள் கொடுத்திருக்கிறேன் படித்து புரிந்துகொள்ளவும்.

http://www.ibnlive.com/article.php?id=3952&section_id=3
http://www.ibnlive.com/article.php?id=4522&section_id=2
http://en.wikipedia.org/wiki/Fast_breeder
http://en.wikipedia.org/wiki/Fast_breeder#India
http://en.wikipedia.org/wiki/Nuclear_reactor
http://en.wikipedia.org/wiki/International_Atomic_Energy_Agency
http://en.wikipedia.org/wiki/Thermal_breeder_reactor

நாலு பேர் விளையாட்டுக்கு என்னையும் சிவாவும், இராமநாதனும் அழைத்திருந்தார்கள்.

நான் இவர்களைப்போல் ஆகவேண்டும் என்று லட்சியமாகக் கொண்டிருக்கும் நாலு பேர்.

ஜேம்ஸ் கோஸ்லிங், லினக்ஸ் டொர்வால்ட்ஸ் பிறகு கூகுளின் அமைப்பாளர்கள்.

இன்னும் கொஞ்ச நாள் உயிர்வாழ்ந்திருந்தால் குறைந்தா போயிருப்பார்கள் என நினைக்கும் நாலு பேர்

விவேகானந்தர், பாரதியார், இராமானுஜம் மற்றும் ஆதித்த கரிகாலன்.

பிடித்த நடிகர்கள்,
டாம் க்ரூஸ், டென்சல் வாஷிங்டன், ரஸல் குரோ மற்றும் கமல்ஹாசன்

பிடித்த நான்கு திரைப்படங்கள்

மறக்க முடியாத நான்கு கதாப்பாத்திரங்கள்

வந்தியத்தேவன், மணிமேகலை, ஜார்ஜினா மற்றும் டோபி டெம்பிள்

பிடித்த நான்கு இடங்கள்

திருச்சி, தஞ்சாவூர், டெல்லி, மணாலி.

அழைக்க விரும்பும் நால்வர்.

ரோசாவசந்த், குழலி, பிகேஎஸ் அண்ணாச்சி, ஆசிப் மீரான்.

Basic Instinct – 2

ஆரம்பக்காலத்தின் தேடித்தேடி பார்த்த படங்களின் நாயகி ஷரன் ஸ்டோன். கொஞ்சம் போல, எனக்கு இவரை வரைவதற்கு பிடிக்கும். இவருடைய வரையப்பட்ட(?) புருவங்கள் நன்றாக இருக்கும். ஸிலிவர், பேசிக் இன்ஸிடிங்க்ட், கேசினோ, த ஸ்பெஷலிஸ்ட் இப்படி நிறைய படங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.

சஸ்பென்ஸ் திரில்லர் படங்களின் மீது ஆர்வமிருந்த சமயத்தில் பார்த்தது, பேசிக் இன்ஸ்டிங்ட். இப்பொழுது அதன் இரண்டாம் பாகம் ரிலீஸாம். முந்தையதை மிஞ்சிவிடுமா என்று எதிர்பார்க்கிறார்கள். தெரியவில்லை.

கீழே நான் சமீபத்தில் தேடிப்பார்த்தபொழுது கிடைத்த கூகுள் வீடியோவின் லிங்குகள். உங்களுக்குத் தருகிறேன்.

Basic Instinct

Flexist gymnast

Hitler

britney

britney

funny one

banned commercial

lot more comes…. 🙂

நட்சத்திரம் – நன்றிகள் பல

இது போன்று தமிழ்மணத்தின் நட்சத்திரமாய் இருக்க ஒரு அருமையான வாய்ப்பை நல்கிய தமிழ்மண நிர்வாகிகளுக்கு முதற்கண் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் இத்தனை நேர சிக்கல்களுக்கும் இடையில் 14 பதிவுகளைக் போட்டிருக்கிறேன் என நினைக்கும் பொழுது முன்பிருந்ததைப்போல் கொஞ்சம் வேலை குறைவாக இருந்திருக்குமேயானால், என்னால் தமிழ்மண வாசகர்களின் நிலையை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. 🙂

இந்த வாரம் மட்டுமல்லாமல், தொடர்ச்சியாக என் பதிவுகளை படித்துவரும் மக்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கிடைத்த ஒரு அருமையான வாய்ப்பாக இதை எடுத்துக்கொண்டு, இதுவரை ஆதரவளித்து வந்த அத்துனை நல்ல உள்ளங்களுக்கும் என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி! நன்றி!! நன்றி!!!

உங்களிடம் கூகுளின் அனலைடிக்ஸ்ஸைப்(google.com/analytics) பற்றி முன்பே சொன்னவன் ஆதலால் அதனால் கிடைக்கும் ஒரு பயனாக கீழ்வரும் ஒரு ஸ்ட்டாட்டிஸ்டிக்ஸ் விவரத்தை அளிக்கிறேன். எத்துனை பேர் இதை பயன்படுத்திவருகிறீர்கள் என்பது தெரியாது ஆனால் முன்பே சொன்னது போல் ஒரு அற்புதமான் டூல் இது. அதன் ஒரு எடுத்துக்காட்டாக இந்த ஒருவாரமாக என் பதிவைப்பற்றி விவரங்களை தருகிறேன்.

அதற்கு முன் உங்களில் பலருக்கு கூகுளின் வீடியோவைப்(video.google.com) பற்றி தெரிந்திருக்கும். அதை அமெரிக்காவைத் தவிர்த்த வெளிநாடுகளில் இருந்து உபயோகிப்பதில் உள்ள சிக்கலைப் பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன். அதை மீறியும் கூகுளின் இந்த வீடியோ சேவையை பயன்படுத்த ஒரு வழிமுறையைத் தருகிறேன். இதுவும் சொல்லப்போனால் கூகுளில் இருக்கும் ஒரு பக்(BUG) கே.

1. இதற்கு முதலில் உங்களுக்கு தேவையான கூகுளின் வீடியோ உரல் தெரிந்திருக்க வேண்டும், உதாரணமாக கீழே உள்ள உரலை எடுத்துக் கொள்ளுங்கள்:
http://video.google.com/videoplay?docid=-4319256606292930218

2. உங்களால் இந்த உரலை நேரடியாக உபயோகிக்க முடியவில்லை என்றால் கீழே குறிப்பிட்டுள்ளது போல் கூகுளின் டிரான்ஸ்லேட்டர் சர்வீசை உபயோகித்து: http://www.google.com/translate?langpair=en|en&u=(url of the video)

3. அதாவது:
http://www.google.com/translate?langpair=en|en&u=http://video.google.com/videoplay?docid=-4319256606292930218

4. சந்தோஷமா இருங்க.

பாரதியின் தீவிரதாசனாய் கீழேயுள்ள கவிதை வரிகளுடன் இந்த நட்சத்திர வாரத்தை இனிதே நிறைவு செய்கிறேன்.

தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

———————–

நட்சத்திரம் – சினிமா, கிரிக்கெட் மற்றும் புத்தகங்கள்

“யாராச்சும் சரியான `சினிமா கிறுக்கு’ன்னு சொன்னால் கோபமாய்த்தான் வரும். சினிமா பார்ப்பவர்களெல்லாம் அறிவில் கொஞ்சம் மட்டமானவர்கள் என்ற வியாக்கியானத்தை உடைய கோஷ்டி ஒன்று உள்ளது. சினிமா பார்ப்பவர்களின் அறிவு எதனால் குறையுமென்று அவர்களால் விளக்க முடிவதில்லை. இன்னொரு கோஷ்டி தமிழ்ப் படங்கள் பார்ப்பவர்களெல்லாம் காட்டான்கள் போலவும் ஆங்கில அல்லது பிற மொழிப் படம் பார்ப்பவர்களே அறிவு ஜீவிகள் என்பது போலும் பேசித் திரிவார்கள். மொழி வேறு அறிவு வேறுன்னு புரியாத அவர்களின் விமர்சனம் தேவையற்றது.”

தாணு அவர்கள் அவர்களுடைய நட்சத்திரப் பதிவில் இப்படிச் சொல்லியிருந்தார்கள். இப்படி சில விஷயங்கள் சிலருக்கு ஒன்றாய் இருப்பதைப் பற்றி நான் நினைத்து வியந்திருக்கிறேன். ஆங்கிலப்படங்கள் பற்றி விமர்சனங்களை செய்தவன் என்ற முறையில் சில விஷயங்களை தெளிவுபடுத்தவும் இதை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக்கொள்கிறேன்.

சினிமா

எங்க வீடு ஒரு மிடில்கிளாஸ் வீடு என்பதால், தொலைக்காட்சிப்பெட்டி எங்கள் வீட்டிற்கு வந்தது ரொம்பநாள் கழித்துத்தான். அப்பொழுதும் சில குடும்ப பிரச்சனைகளால் படத்தின் கிளைமாக்ஸ் வரை(இல்லை அதற்கு சற்று முன் வரை) பார்த்துவிட்டு கிளைமாக்ஸ் பார்க்கப்படாமல் விட்டிருக்கிறேன். இதனால் நான் கிளைமாக்ஸ் மட்டும் பார்க்காத படங்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கும். இதனாலெல்லாம் சின்னவயதில் ஒரு வெறி சினிமா பார்ப்பதென்றால்!

உங்களிடம் நீங்கள் உங்கள் அப்பா, அம்மா மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்களுடன் சினிமாத் தியேட்டர் சென்று பார்த்த படங்களை பட்டியலிடச் சொன்னால் முடியுமா ஆனால் என்னால் முடியும்.

காரணம் கொஞ்சம் ஸ்ட்ரிக்டான அப்பா அம்மா என்பதால், நாங்கள் எங்கள் ஏரியாவிற்கு, பிலக், சாந்தி படம் வந்தால் மட்டும் தான் அழைத்துச் செல்லப்படுவோம். அதாவது முதன்மை தியேட்டர்களில் படம் வந்து ஓடி, பிறகு இரண்டாம் தன்மை தியேட்டர்களில் ஒடும் பொழுது அப்பொழுதும், குறிப்பாக ரஜினி படங்கள் மட்டும் தான் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறோம். இதற்கு சில மிகச்சில விதிவிலக்குகள் உண்டு, அஞ்சலி, சேரன்பாண்டியன் போல், மொத்தம் ஒரு பத்து படங்கள் தான் நாங்கள் பார்த்திருப்போம் குடும்பமாக மீதி எட்டுபடங்கள் ரஜினியினுடையதே. மற்றபடிக்கு அந்த படங்கள் சன்டிவியில் காட்டப்படும்வரை காத்திருக்கவேண்டும்.

இப்படியிருந்த எனக்கு காலேஜ் வாழ்க்கை இன்னொரு பரிமாணத்தைக் காட்டியது என்றாலும் காலேஜை கட் அடித்துவிட்டு செல்லும் மாணவர்கள் தவறானவர்கள் என்பது போல் போதிக்கப்பட்டிருந்ததால் இது ஆரம்பித்தது இரண்டாம் ஆண்டில் தான். பிறகு மூன்றாம் ஆண்டில் பிராஜக்ட் ஏற்கனவே செய்துவிட்டு அதற்காக கொடுக்கப்பட்ட கல்லூரி நேரத்தில் சினிமாத்தியேட்டரில் குடித்தனம் நடத்தியிருக்கிறேன்.

அதன் பிறகு வேலைக்கு செல்ல ஆரம்பித்த நாட்களில் ஆரம்பித்தது சினிமாவின் மீதான பைத்தியம் என்றால் அது கொஞ்சமும் மிகையல்ல, நான் பார்த்த படங்கள் கொஞ்சம் அதிசயமாகவே இருக்கும், சன், ராஜ், ஜெயா,கே போடப்படும் எல்லா படங்களையும் பார்த்துவிடுவேன், எல்லாப்படங்களையும்.

எங்க அம்மாவும் அக்காவும் எப்பிடிடா இந்தப்படத்தையெல்லாம் பார்க்குற என்பது மாதிரியான படங்கள் அந்த லிஸ்டில் அதிகம்.(இப்படித்தா இருக்கும் எனத்தெரிந்தும் தீபாவளி முதல் நாள் பார்க்கும் விஜய் படங்கள் உள்ளிட்டு.) யார் இயக்குநர், யார் நடிகர் என்று பார்க்காமல் படம் பார்த்திருக்கிறேன். இதில் மொழிமாற்றப்பட்ட பூதப்படங்கள், சில ஆந்திரமொழி டப்படங்கள் என எல்லாம் அடக்கம். படங்களின் வரிசை தரவில்லை அவ்வளவுதான்.

ஆனால் ஆங்கிலப்படங்களின் தாக்கம் என்னிடம் அதிகமாகத்தான் இருந்தது, எச்பிஒ வும் ஸ்டார் மூவிஸ்ம் பின்னர் சன்,ராஜ், ஜெயா, கேயை அடக்கிவத்திருந்தாலும் நேற்றுவரை இரவு 10.30 க்கு கேடிவியின் படத்தை பார்த்துவருகிறேன். இதில் எனக்கு எந்த பிம்ப உடைதலும் நிச்சயம் கிடையாது.

ஒரு காலத்தில் ஞாயிற்றுக்கிழமையில் சன்டிவியில் போடப்படும் நான்கு மணிப்படத்தை பார்க்கவிட்டால் என்னமோ ஞாயிற்றுக்கிழமை வீணாய்ப்போய்விட்டதாய் நினைத்த காலம் உண்டு. இன்று கொஞ்சம் மாறியிருக்கிறது ஏனென்றால் இன்று நான் தனிக்காட்டு ராஜா, அதிகம் காசு, டிவிட் ப்ளேய்ர், டிவிடி, விசிடி கலெக்ஷன் என்னிடம் பெரிதாக உள்ளது அதனால் படங்கள் பார்ப்பது குறைந்தது கிடையாது.

பிரச்சனைகளின் மத்தியில் நடமாடிக்கொண்டிருப்பதால் சினிமா எல்லாவற்றையும் மறந்துவிட்டு கொஞ்ச நேரம் நிம்மதியாக நடமாட வைத்திருக்கிறது. இதில் நான் தாணுவின் கூற்றை முற்றிலுமாக ஒப்புக்கொள்கிறேன். மிடில்கிளாஸ் மக்களின் பொழுதுபோக்கில் முக்கியமானது சினிமாதான்.

கிரிக்கெட்

இரண்டாவது விஷயம் கிரிக்கெட், இந்திய இளைஞர்களின் இன்னொரு பொழுதுபோக்கு, விளையாடுவது இல்லை பார்ப்பது. வாழ்க்கையில் காலங்கார்த்தாலை அஞ்சுமணிக்கு நான் எழுந்து படித்ததா சரித்திரமேக் கிடையாது ஆனால் அலாரம் வைத்து முந்தைய நாளே, நொறுக்குத்தீனி வாங்கி வைத்திருந்து எழுந்து பார்த்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அதிகம். ஆஸ்திரேலிய கிரிக்கெட் எனச் சொல்வதற்கு காரணம். நான் ஒரு ஆஸ்திரேலிய அணியின் பைத்தியக்காரத்தனமான விசிறி. ஒரு நிகழ்ச்சி நடந்தது எங்கள் வீட்டில் அதை சொல்லவேண்டு இந்த நேரத்தில்,

நான் ஒரு மாலை நேரம் விளையாடிவிட்டு, இரவு வீட்டிற்கு வந்திருந்தேன் அக்கா என் அம்மாவின் முன்நிலையில், “தம்பி உனக்கு ரொம்பவும் பிடித்த கிரிக்கெட் ஆட்டக்காரங்கள் யார்” என்று கேட்க, நான் கொஞ்சமும் தயங்காமல் “மார்க் வா, ஷைன் வார்ன்.” சொல்லிட்டு மார்க் வா ஒரு நேட்சுரலி கிப்டட் எலகண்ட் ப்ளேயர், அப்புறம் ஷைன் வார்ன், இந்த நூற்றாண்டின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்னு ஆரம்பிக்க, அக்காவும் அம்மாவும் சிரித்தபடியே, அன்று மார்க்கும் வார்னேவும் ஒரு கிரிக்கெட் ஊழலில் மாட்டியிருந்ததை சொல்லி சிரித்தது இன்றும் நினைவில் இருக்கிறது.

எனக்கு ஆஸ்திரேலிய அணியை பிடித்திருந்ததற்கு காரணம் அவ்வளவு நிச்சயமாகத் தெரியவில்லயென்றாலும் ஒரு க்ளூ கிடைத்திருக்கிறது. ஆனால் அது வேண்டாம் இங்கே. சினிமாவின் மீதான மோகம் இன்று வரை தொடர்வதைப்போன்று கிரிக்கெட்டின் மீதான மோகம் இன்று இல்லை.முன்பெல்லாம் சினிமா போலத்தான் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாபே விளையாடும் ஆட்டத்தைக் கூட பார்த்திருக்கிறேன். ஆனால் இன்று ஆஸ்திரேலியாவின் ஆட்டத்தை நேரில் பார்க்கும் சந்தர்ப்பங்களும் மிகச்சிலவே.

இதற்கு ஒரு முக்கிய காரணம். பல நாட்களில் வீட்டிலோ இல்லை நண்பர்களிடமோ என்னால் வாக்குவாதத்தில் இறங்க முடிந்திருப்பதில்லை, அந்த மாட்ச் பார்க்கவேண்டுமென்று. மற்றபடிக்கு விவரங்கள் இன்று வரை நுனிவிரலில் தான் (ஆஸ்திரேலிய கிரிக்கெட் மட்டும். Thanks to baggygreen.com indeed cricinfo.com) உண்மையில் கிரிக்கெட் மீதான பித்து குறைந்தததைப்போல் சினிமா மீதான் பித்தையும் குறைத்துவிட அதிகம் முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். முடிவதில்லை. முடிந்தால் ஒன்று மட்டும் நிச்சயம் நான் இப்பொழுது இருப்பதை விட நல்ல இடத்திற்கு சென்றுவிடமுடியும். ஏனென்றால் டிவியும் திரைப்படங்களும் மனிதவாழ்க்கையில் One of the Time Eating habits.

புத்தகங்கள்

ஆசிரியர்கள் வீட்டில் இருந்ததால் புத்தகங்களின் அறிமுகம் மிக எளிதாகக் கிடைக்கக்கூடியதாக இருந்தது. இன்றும் நன்றாக நினைவில் இருக்கிறது நான் முதன் முதலில் படித்த புத்தகம், அது மீண்டும் ஜூனோ. முதல் பாகம் படிக்காமல் இரண்டாம் பாகம் படித்ததற்கு காரணம் ஏதோ ஒரு பத்திரிக்கையில் வந்து அதை பைண்ட் செய்து வைத்திருந்தார்கள் அதனால் தான். ஆனால் அந்தப் புத்தகம் முதலில் படிக்கும் பொழுது ஒன்றுமே புரியவில்லை, நல்ல சூப்பரான ஓவியங்கள் இருக்கும் அழகான நாய்க்குட்டி அவ்வளவுதான்.

பின்னர் அம்மாவால் அறிமுகம் செய்யப்பட்டது இருவர் ஒருவர், பாலகுமாரன் மற்றவர் எண்டமூரி வீரேந்திரநாத். எங்கவீடுகளில் சில எழுத்தாளர்களின் புத்தகங்களை அந்தக் காலத்தில் காசுகொடுத்து வாங்குவார்கள் என்றால் அது இவர்கள் இருவர் தான்.

பின்னர் தான் என் வாழ்வில் மறக்க முடியாத லைபிரரியன் ஒருவரை சந்தித்தேன். அந்த நாட்களில் எல்லாம் லைப்ரரியனாக ஆகிவிடவேண்டும் என்ற ஆசை கூட இருந்தது :-). அவர் தான் எனக்கு வரிசையாக அறிமுகப்படுத்தினார். எப்படி, சி, சி++, ஜாவா என்று படித்தால் கொஞ்சம் நன்றாய் இருக்குமோ அதுபோல் எனக்கு எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார் வரிசையாக,

அவர் தான் தேர்ந்தெடுத்து தருவார் புத்தகங்களை பொன்னியின் செல்வர், சிவகாமியின் சபதம், கடல் புறா, யவனராணி இப்படி ஆரம்பத்தில் எப்படி என்னுடைய புத்தக ஆர்வத்தை வளர்க்க முடியுமோ அப்படி வளர்த்தாவர் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய் சோதனை முயற்ச்சியாக சில நாவல்களை தருவார் பின்னர் நாங்கள் அதைப்பற்றி விவாதித்துக் கொண்டிருப்போம். அப்படி சோதனை நாவலாக தந்தது அலை ஓசை. அதை அவர் என்னிடம் தந்த பொழுது நான் பள்ளியில் தான் படித்துக்கொண்டிருந்தேன் அதாவது பன்னிரண்டாம் வகுப்புக்கு கீழ் ஏதோ ஒன்று. அதிகமாய் புரிந்திருக்குமா என்று கேட்டால் சந்தேகம் தான் ஆனால் அந்த அனுபவம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.

இப்படி எனக்கு எல்லா நேரத்திலேயும் நல்ல ஆசிரியர்கள் கிடைத்துவிட்டார்கள். பின்னர் தான் தமிழ் இலக்கியங்களுக்கு வழிகாட்டினார் அந்த லைப்ரரியன். அது ஒரு சுகமான அனுபவம் அதைப்பற்றி அப்புறம்.

ஆனால் இத்தனையிலும் நான் ஆங்கில நாவல்கள் படித்ததுகிடையாது. லைப்ரரியன் வற்புறுத்திய பொழுதும் வேண்டாமென்று மறுத்திருக்கிறேன். காரணம் ஒரு இன்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ். எனக்கு கொஞ்சமாவது புரிந்து படிக்க வேண்டும். மேலோட்டமாக படிக்க பிடிக்காது. அதனால் கொஞ்சம் வற்புறுத்தி லைப்ரரியில் வைக்கப்பட்டிருக்காத சில ஆங்கில நாவல்கள் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதிலும் ஒரு வழமையான தொடக்கம், இதை நானும் மற்றவர்களுக்கு வழிமொழிவேன் நீங்கள் ஆங்கில நாவல்களோ இல்லை கதைகளோ படிக்கும் வழக்கத்தை ஆரம்பிக்க விரும்புகிறீர்களா? சிட்னி ஷெல்டனில் இருந்து ஆரம்பியுங்கள். இது என்வரை நன்றாக உதவியது. பதின்ம வயது ஆட்களுக்கு ஏற்ற மாதிரியான் ஒரு ஆங்கில நாவல்களின் தொடக்கம் இதில் இருக்கும்.

இப்படி ஒரு சரியான ஆரம்பம் இல்லாமல் சுந்தரராமசாமியை படிக்க முடியாதோ அது போல் ஒரு நல்ல ஆரம்பத்தை எனக்கு ஆங்கிலத்தில் ஏற்படுத்திக்கொடுத்தது சிட்னி ஷெல்டன். ஒரே ஒரு புத்தகத்தைப் பற்றி மட்டும் நான் இந்த நேரம் பேச விரும்புகிறேன். யாரவது ராகிராவின் ஒரு புத்தகம் பெயர் பட்டாம்பூச்சு என்று நினைக்கிறேன். ஒரு ஆங்கில நாவலின் மொழிப்பெயர்ப்பு நாவல் அது. நாயகன் செய்யாத குற்றத்திற்காக நாடுகடத்தப்பட்டு சிறையில் இருந்து தப்பித்து பிறகு மாட்டிக்கொண்டு சிறையில் இருந்து தப்பித்து என்று ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாகக்கொண்ட நாவல் அது.

என் வாழ்க்கையில் ஒரு நாவலை எடுத்துவிட்டு தொடர்ச்சியாக படிக்கவும் முடியாமல், படிக்காமல் இருக்கவும் முடியாமல் பெரும் பிரச்சனையை ஏற்படுத்திய நாவல் அது. யாரவது அந்த நாவல் படித்திருக்கிறீகளா? உங்களுக்கு எப்படி இருந்தது அந்த அனுபவம். ப்ளீஸ் சொல்லுங்களேன்.

நட்சத்திரம் – சோழர்வரலாறு – ஆதித்த கரிகாலன்

கொஞ்சம் முன்பே சொல்லப்பட்டது போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட, கண்டராதித்தன் செய்த முயற்சியைத் தகர்த்து எறிந்த வீரபாண்டியன் தன்னுரிமையுடன் ஆண்டுவந்தான். சேவூர்ப் போரில் பராந்தகன் தன் பகைவர்களின் யானைகளை வெட்டிவீழ்த்தி, இரத்த ஆறு ஒடச்செய்தான் என்றும் அவனது மகன் ஆதித்தன் சிறுவனாய் இருந்தும் சிங்கம், யானையுடன் போரிடுவதுபோல், வீரபாண்டியனை எதிர்த்துப் போரிட்டதாக லெய்டன் பட்டயங்கள் புகழ்கின்றன.

புதுக்கோட்டையின் தென் எல்லையில் உள்ள, சேவலி மலைகளுக்குத் தெற்கேயுள்ள, சேவூர்ப்போர்க்களத்தில் ஆதித்தனது வீரம் வெளிப்பட்டதோடு, வீரபாண்டியன் தலைகொண்ட என்று கூறிக்கொள்ளவும் இவனுக்கு வாய்ப்பைக் கொடுத்தது. வீரபாண்டியன் ஆதித்தனால் கொல்லப்பட்டதாகத் திருவாலங்காட்டுப் பட்டயங்கள் கூறுகின்றன.

இரண்டாம் ஆதித்தன்

இரண்டாம் ஆதித்தனைத் தவிர, மேலும் இருவர், வீரபாண்டியனை வெற்றிகண்டதாகக் கூறுகின்றனர். இவரில் ஒருவன், பார்த்திவேந்திர வர்மன்.

வட ஆற்காடு தென் ஆற்காடு, செங்கற்பட்டு மாவட்டங்களில் கிடைக்கும் கல்வெட்டுகளில் காணப்படும் பார்த்திவேந்திரவர்மன் என்பவன் யார்? என்று தெளிவாக அறிய முடியவில்லை. இவன் பராந்தகனுக்குக் கட்டுப்பட்டிருந்த கங்க மன்னன் இரண்டாம் பிரதிவீபதியே என்று கருத்து நிலவுகிறது. இக்கருத்து பிரதிவீபதி, பார்த்திவேந்திரவர்மன் என்ற இரு பெயர்களுக்கு இடையே இருப்பதாக நம்பப்படும் ஒற்றுமையின் அடிப்படையில் ஏற்ப்பட்டதாகும்.

இரண்டாம் ஆதித்தன் மற்றும் பார்த்திவேந்திரவர்மன் ஆகியோரது கல்வெட்டுக்களை ஆராய்ந்த கிருஷ்ணசாஸ்திரி கீழ்கண்ட முடிவுகளுக்கு வந்துள்ளார்.

“இவ்விரு மன்னருமே, ‘பாண்டியன் தலைகொண்ட’ அல்லது ‘வீரபாண்டிய தலை கொண்ட பரகேசரிவர்மன் என்ற விருதுகளைப் பெற்றனர். இரண்டாம் பராந்தக சுந்தர சோழ மன்னனுடன் போரிட்ட பாண்டிய மன்னனே இவ்வாறு குறுப்பிடப்படுகிறான். இரண்டாம் ஆதித்தனின் கல்வெட்டுகள் மிகக்குறைவே. தென்பகுதியில் மட்டுமே கிடைக்கும் இக்கல்வெட்டுகள். இவனுடைய 5-ம் ஆட்சி ஆண்டுமுதல் ஏற்பட்டன.

பார்த்திவேந்திர வர்மனின் கல்வெட்டுகள் ஏராளமாகத் தொண்டை மண்டலத்தில் காணப்படுகின்றன. இவை 13-ம் ஆண்டு முதல் ஆனவை. பார்த்திவேந்திர ஆதித்த வர்மன், அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசனாக இருந்து, தொண்டை மண்டலத்தின் பிரதநிதியாக இருந்திருக்கக்கூடும். ஆதித்த கரிகாலனே உண்மையில் அரியணை ஏறியவனாக தோன்றுகிறது. “

பாண்டிய தலைகொண்ட பரகேசரியின் கல்வெட்டுகள் மிகக்குறைவு என்று கூற முடியாது. அதோடு அவை தெற்கே மட்டுமே, அதாவது தொண்டை மண்டலத்திற்கு வெளியே தென்பகுதியில் மட்டுமின்றி, பிற பகுதிகளிலும் கிடைக்கின்றன. பார்த்திவேந்திர வர்மனின் கல்வெட்டுக்கள் ஆதித்தனின் கல்வெட்டுகளிலிருந்து, அவை கிடக்கும் இடங்களைப்பொறுத்து மட்டுமே வேறுபடுகின்றன.

இவனது மூன்றாம் ஆண்டு கல்வெட்டில் பார்த்திவேந்திர ஆதித்த பருமர் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறான். இவனது பட்டத்தரசியார் உடையார் தேவியார் வில்லவன் மாதேவியார், பெருமானடிகள் தேவியார், தன்மப் பொன்னார் ஆகிய திரைலோக்கிய தேவியார் போன்ற பட்டங்களைப் பெற்றவராவார். கரிகாலக்கண்ணன் எனப் பெயருடையவன், இரண்டாம் ஆதித்தனின் மகனாய் இருக்கலாம், இராஜராஜனின் கல்வெட்டுக்கள் மூலம் அப்படியொருவன் இருந்ததாய் தெரிகிறது.

எனவே இவன் சோழர் அதிகாரத்திற்கு உட்பட்ட மன்னனாக இராமல், இவனே ஒரு சோழ மன்னனாக இருத்தல் கூடும். ஆதித்தன் என்ற பெயரும் பரகேசர் என்ற விருதும் பெற்ற இம்மன்னனே, ஆதித்த கரிகால பரகேசரி என்பதைத் தெளிவாக்குகிறது. பார்த்திவேந்திர ஆதித்திய வர்மன் என்ற பட்டமும், சில சிறு மாற்றங்களுடன் இவனது கல்வெட்டுக்களில் காணப்படும் இவனது கல்வெட்டுக்களில் காணப்படும் பட்டமும், இவன் பார்த்திவேந்திரவர்மன் என்ற பட்டத்தை ஏற்றதைக்காட்டுகின்றன.

சோழர்கள் புகழ்ச்சியான பட்டங்களை விரும்பி ஏற்றனர். மேலும் ஒவ்வொரு மன்னனும் பல பட்டங்களையும் சூடிக்கொண்டனர். இவனது கல்வெடுகள் 13ம் ஆண்டிலிருந்தே தொடங்குவதால் இவன் தந்தை சுந்த்ர சோழன் அரியணை ஏறியதும் இவன் இளவரசனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். சிறுவனாக இருந்தபோதே வெற்றியுடன், வீரபாண்டியனைத்தாக்கியவன் என்று லெய்டன் பட்டயம் புகழ்வதால், இது உண்மை என்று தெரிகிறக்டு இதற்குப்பின்னர், சோழ நாட்டின் வடபகுதிய ஆட்சி செய்யும் பொறுப்பை இவன் ஏற்றான். தந்தையின் வாழ்நாளிலேயே இவன் மரணமடையவே, இவனுக்கு பதிலாக பரகேசர் உத்தமசோழன் இளவரசன் ஆனான்.

இந்தக் காலத்தின் வரலாற்றைச் சொல்லுமுன் இதுவரை நாம் தெரிவித்ததின் முடிவுகளைச் சுருங்கச்சொல்லுவோம்.

இராஜகேசரி கண்டராதித்தன் கிபி 949/50 – 957
பரகேசரி அரிஞ்சயன் கிபி 956 – 957
இராஜகேசரி சுந்தரசோழன் கிபி 956 – 73
இரண்டாம் ஆதித்த பரகேசர் பார்த்திவேந்திர கரிகாலன் கிபி 956 – 969.

பரந்தூர்க் கல்வெட்டு

பார்த்திவேந்திர வர்மனின் 15ம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு செங்கற்பட்டு மாவட்டத்தில் கிடைத்துள்ளது. இக்கல்வெட்டு அழிந்திருப்பதாலும், இதைக் கூர்ந்து ஆராயும் பொழுது இரு விவரங்கள் உறுதிப்படுகின்றன. இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள் ஆண்டு பதினைந்து, இதில் காணப்படும் எழுத்துக்கள் நன்கு செதுக்கப்பட்டிருந்தாலும், இவை எழுதப்பட்டுள்ள கல் பாழ்பட்டுள்ளது.

அக்கால எழுத்து வடிவங்களுடனான இக்கல்வெட்டின் உண்மையை சந்தேகிப்பதற்கான காரணம் ஒன்றும் இல்லை. 15-ம் ஆண்டு என்று ஒப்புக்கொள்வோமேயானால் இரண்டாம் ஆதித்தனே பார்த்திவேந்திர வர்மன் என்ற அடிப்படையில் நாம் மேலே கொடுத்திருக்கும் அட்டவணை பெரும் மாற்றத்திற்குள்ளாகும். உத்தமசோழன் வருவதற்கு முன்னும் 15ஆண்டுகளைக் கணக்கிட இயலாது 13 ஆண்டுகளைக் கணக்கிட்டாலே கால வரையறையை மீறுவதால், சுந்தர சோழன் தன் ஆட்சி தொடக்கத்திலேயே ஆதித்தனையும் உடன் வைத்துக் கொண்டு அவனுடன் ஆட்சிப் பொறுப்புக்களைப் பகிர்ந்து கொண்டான் என்ற் கருத்தை ஏற்கச் செய்துள்ளது. அதே சமயம் பரந்தூர்க் கல்வெட்டு மட்டுமே, பார்த்திவேந்திரனுக்கு 13க்கு மேற்பட்ட ஆட்சி ஆண்டைத் தருகிறது. 13ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் பல இருந்தாலும் 14ம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றேனும் இல்லை. 15-ம் ஆண்டுக் கல்வெட்டு இது ஒன்றே.

எனவே மேலே குறிப்பிட்ட முடிவுக்குத்தான் வர இயலும் பார்த்திவேந்திரந்தான் ஆதித்தன் என்று ஏற்காவிடில், இவ்விருவரிடையே கண்ட பல ஒற்றுமைகளை நாம் அறவே ஒதுக்கிவிட முடியாது. இவ்வொற்றுமைகள் அனைத்துமே எதிர்பாரா வகையில் காணப்படுபவை அல்ல.

ஆகையால் பரந்தூர்க் கல்வெட்டில் காணப்படும் ஆட்சி ஆண்டில் “இ” என்று இரண்டாவது எண் தவறாக பொறிக்கப்பட்டுள்ளது என்ற கருத்தை ஏற்கலாம். 13-ம் ஆட்சி ஆண்டிற்கு மேற்பட்ட வேறு கல்வெட்டுகள் இனிக் கிடைக்கும் வரை, இக்கல்வெட்டை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை இல்லை.

நாம் இதுவரை ஏற்ற வாதங்களுடன் மற்றொரு முடிவான வளத்தையும் காண வேண்டியுள்ளது. ஆதித்தனும் பார்த்திவேந்திரனும் ஒருவரே என்று ஏற்காவிடில், ஆதித்தனின் வீரபாண்டிய பரகேசரி கல்வெட்டுகளில் மிக அதிகமானது கிபி 969௭0 உத்தம் சோழ அரியணையில் அமருவதற்கு முன்பாக இந்த ஐந்தாண்டுகள் என்று நாம் கருத வேண்டும். இந்த அடிப்படையில் ஆதித்தனுடைய ஆட்சி ஏறக்குறைய கிபி 694 – 5ல் தொடங்கியிருக்க வேண்டும்.

இதுவே மேலே கொடுக்கப்பட்ட கால அட்டவணைப்படி சுந்தர சோழனின் 8 அல்லது 9 வது ஆண்டாகும். தன் ஆட்சியின் 7-ம் ஆண்டிற்கு முன்பே பாண்டியனுடனான போரில் பெரும் வெற்றி பெற்றான் என்ற விவரமும் இப்போரில் செவ்வூர் என்னுமிடத்தில் நடைபெற்ற தாக்குதலில் சிறுவனான ஆதித்த கரிகாலன் பங்கேற்றான் என்று லெய்டன் கூறுவதிலிருந்து. சுந்த்ரசோழனின் ஆட்சித் தொடக்கத்திலேயே, ஆதித்தன் துணை அரசனாக விளங்கினான் என்ற கருத்தை வலியுறுத்துகின்றன. ஆயினும் இதை முழுக்க முழுக்க நம்ப முடியாது. ஏனெனில் துணை அரசனாக இல்லாமலேயே ஆதித்தன் இந்தப் போரில் பங்கேற்றிருக்க முடியும்.

இரண்டாம் ஆதித்தன் கொலை

குடும்ப வாழ்வில் ஏற்பட்ட பேரிழப்பால், சுந்தரசோழன் தன் இறுதிநாட்களில் மிகவும் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான். ‘பாண்டிய தலைகொண்ட கரிகாலச்சோழனை’ கொலை செய்த குற்றத்திற்காகச் சிலருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்து விற்கும் பணியினை மன்னன் கட்டளைப்படி திருவீர நாராயண சதுர்வேத மங்கச் சபை மேற்கொண்டதாக, இராஜகேசரி இரண்டாம் ஆண்டு உடையார்குடிக் கல்வெட்டு கூறுகிறக்டு. இரண்டாம் ஆதித்தன் ஒரு சதியின் மூலம் கொலை செய்யப்பட்டான் என்பது இந்தக் கல்வெட்டால் தெளிவாகிறது.

உத்தம சோழன் ஆட்சி செலுத்திய பதினாறு ஆண்டுகளில் இரண்டாம் ஆதித்தனைக் கொலை செய்தவர்கள் பழிவாங்கப்படவில்லை என்பது உண்மையே. மகனை இழந்த சுந்தரசோழன், ஒன்று மனம் நொந்து இறந்தான் அல்லது தன் மகனைக் கொன்றவர்களைத் தண்டிக்க இயலாதவாறு செய்யப்பட்ட சூழ்ச்சிகளைத் தண்டிக்க இயலாதவாறு செய்யப்பட்ட சூழ்ச்சிகளைக் கண்டு மனம் வருந்தி இறந்தான்.

சூழ்நிலைகளை உற்று நோக்கும் போது உத்தமசோழனுக்கு இந்தக் கொலையில் தொடர்பு இல்லையென்று கூறுவதற்க்கில்லை. உத்தமசோழனுக்கு, அரியணை ஏற வேண்டும் என்ற ஆசை இருந்தது. மன்னர் பதவி தவிர, அதற்குக் கீழ்ப்பட்ட எப்பதவியையும் அவன் ஏற்க விரும்பவில்லை, அரச குடும்பத்தின் மூத்த கிளை என்று அவன் கருதினான். தன் ஒன்று விட்ட சகோதரனும் அவன் மக்களும் அரியணையைத் தன்னிடமிருந்து பறித்துக் கொண்டதாகக் கருதினான். தனக்கு ஆதரவாக ஆட்களைத்திரட்டி இரண்டாம் ஆதித்தனைக் கொன்று தன்னை இளவரசனாக்குமாறு சுந்த்ர சோழனை வற்புறுத்தினான். வேறுவழியின்றி சுந்தரசோழன் இதற்கு இசைந்தான். திருவாலங்காட்டுப் பட்டயங்களிலும் உடையார்க்குடிக் கல்வெட்டுகளிலும் காணப்படும் குறிப்புக்களை இணைத்துபார்க்கும் பொழுது இந்த நிகழ்ச்சிகள் உண்மையாக இருக்கக்கூட்ம் என்பது புலனாகிறது. திருவாலங்காட்டுச் செப்பேடுகள்,

“விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான்(காணாமற் போனான்) கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளைப் போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகுமாறு அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் க்ஷத்ர தருமத்தை நன்கு அறிந்த அருண்மொழி அரசபதவியை விரும்பவில்லை என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரச பதவியை விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி அரசபதவியை மறுத்துவிட்டான் என்று தெரிவிக்கின்றன.

நாம் முன்பே இராஜகேசரி, பரகேசரி பிரச்சனைகளைப்பற்றி பார்த்துள்ளோம். அதைப்போலவே, சுந்தர சோழனால் இரளவரசுப்பட்டம் அளிக்கப்ப்ட்ட இரண்டாம் ஆதித்தன் தன் தந்தையின் வாழ்நாளிலேயே மரணம் அடையவே, இராஜகேசர் சுந்தரசோழன் இறந்தபிறகு, அரியணையேறிய மன்னன் நியதிப்படி ஒரு பரகேசரியாகவே ஆட்சி செய்தான்.

நட்சத்திரம் – ஒரு சோழ பரம்பரைக் கதை – இறுதிப்பகுதி

சிறிது நேரத்தில் இராஜேந்திரனை அழைத்துக் கொண்டு குந்தவை சென்றுவிட. இராஜராஜரும் வந்தியத்தேவரும் மட்டும் அங்கிருந்தனர். அந்த இடத்தில் நிலவிய மௌனம் இருவருக்குமே விசித்திரமாய் இருந்தாலும், இருவருமே அதை முடிவுக்கு கொண்டுவரும் மனநிலையில் அப்பொழுது இல்லை.

பிறகு சிறிது நேரத்தில் இராஜராஜரே அந்த மௌனத்தைக் கலைத்தார்.

“தேவரே நீங்கள் எனக்கு ஒரு உறுதிமொழியளிக்க வேண்டும். எனக்குப் பிறகு இராஜேந்திரனே பட்டத்திற்கு வருவான் என்ற உறுதிமொழி வேண்டும்.”

“அருண்மொழி என்னயிது???”

சாதாரண சந்தர்ப்பங்களில், வந்தியத்தேவர் ‘மன்னரே’ என்று தான் விளிக்கும் வழக்கம் இருந்தாலும் இருவருக்கும் இடையில் இருந்த நட்புறவும், குந்தவை தேவியை மணந்ததால் வந்த உறவும் வந்தியத்தேவருக்கு அருண்மொழி என்று அழைக்கும் உரிமையை அளித்திருந்ததது இருந்தும் அதுநாள் வரை அப்படி விளித்திருக்காத அவர் அருண்மொழி என்று அன்று விளித்ததற்கு காரணம் அவரிடம் கேட்கப்பட்ட வாக்குறுதி.

இன்னும் சொல்லப்போனால் இராஜராஜர் அப்படிக் கேட்பதற்கான காரணமும் வந்தியத்தேவருக்கு நன்றாகவே விளங்கியது. இருந்தாலும் அப்படியொரு கேள்வி தன்னிடம் கேட்கப்படாது என்றே நினைத்துக்கொண்டிருந்தவரை அந்தக் கேள்வி அதிகமாய்த் தான் அசைத்தது.

“தேவரே இந்தக் கேள்வியை உங்களிடம் நான் கேட்கக்கூடாதுதான். இருந்தாலும் இந்த ஒன்று மனதில் அடியில் இருந்து உறுத்திக் கொண்டிருக்கும் பொழுது என்னால் மற்ற அரசியல் விவகாரங்களில் முழுமனதாக ஈடுபடமுடியாமல் செய்துவருகிறது. உங்களுக்குத் தெரியாததென்ன,

இன்னும் பாண்டியர்கள் கூட முழுமையாக நம் கட்டுப்பாட்டில் வரவில்லை, ஈழதேசத்தின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பாண்டியன் உதவி கிடைத்ததும் நிச்சயம் பிரச்சனையளிப்பான்.

கீழைசாளுக்கியத்தின் தாயாதிப்பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்திருந்தாலும், மேலைச்சாளுக்கியம் தொடர்ந்து பலம்பெற்றுவரும் நிலையில் என்றைக்கிருந்தாலும் அவர்களால் பிரச்சனையிருக்கிறது. இவை மட்டுமல்லாமல் என்னுடைய கனவான ஒரு கடற்படையை உருவாக்கி பலநாட்களை நோக்கி செல்லவேண்டும்.

இப்படி நாளாப்பக்கமும் பிரச்சனையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நான் ஒருவரிடம் குறிப்பாக உங்களிடமாவது நம்பிக்கை வைக்கவேண்டுமில்லையா? பல சமயங்களில் அந்த நம்பிக்கை விட்டுப்போய் என்னை பாடாய்ப்படுத்துகிறது. உங்களுக்குத் தெரியாததல்ல, பதினாறு வருடம் நான் பட்டபாடு.

சிறுவயதில் சேவூர்ப்போர்க்களத்தில் பகைவரை சொல்லிச்சொல்லி அடித்த தமையனாரையே, சில ஆட்கள் பின்னணியில் இருந்த பலத்தால் மட்டுமே கொன்று, நியாயமாயும் தர்மப்படியும் எனக்குவரவேண்டிய பட்டத்தை உத்தமசோழனால் பறிக்கமுடியுமென்றால்…” முடிக்க முடியாமல் இராஜராஜர் இழுத்துக்கொண்டிருக்க, வந்தியத்தேவருக்கு மன்னருடைய நிலை நன்றாகத் தெரிந்துதான் இருந்தது.

வந்தியத்தேவர் எதையோ சொல்ல வாயெடுத்தார், ஆனால் அவரைத்தடுத்த இராஜராஜர்,

“தேவரே நான் முடித்துவிடுகிறேன், அரியணைக்கு எல்லா உரிமையும் உள்ள, தமையனாரின் மகன், கரிகாலக்கண்ணன், இராஜேந்திரனுக்கு எதிரியாய் கொண்டுவரப்படுவானோ என்ற அச்சம் என்னை அலைக்கழிக்கிறது. கரிகாலக்கண்ணன் அப்படியொரு ஆசைவசப்படுவானாயின் என்னால் கூட அவனை மறுத்து பேசயியலாதே, தந்தையில்லாமல் வளர்ந்தவனுடைய ஆசையை நிறைவேற்றமுடியாத சிற்றப்பனாய் இராஜேந்திரனை அரியணையில் அமர்த்தும் அளவிற்கு கல்நெஞ்சக்காரனா நான்.

நீங்கள் தான் இராஜேந்திரனை வளர்த்து வருகிறீர்கள், உங்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்கக்கூடாதுதான் என்றாலும் அப்படியொரு சமயம் வரும்பொழுது நீங்கள் என் மகனுக்கு சாதகமாக இருப்பீர்களா?”

முதன் முதலில் வந்தியத்தேவருக்கு, இராஜராஜர் இந்தக் கேள்வியை கேட்க ஆரம்பிக்கும் பொழுது சிறிது வருத்தம் இருந்தாலும். தற்பொழுது சிறிது சந்தோஷமாகக்கூட இருந்தார். உண்மைதான் இரண்டாம் ஆதித்தனின் மகனான, கரிகாலக்கண்ணனுக்கு இராஜேந்திரனுக்கு இருப்பதைப் போன்று அரியணையின் மீது அத்துனை உரிமையும் இருந்தது.

சுந்தரசோழரின் ஆட்சிக்காலத்தின் பொழுதே ஆதித்த கரிகாலனும் ஆட்சிப்பொறுப்பில் இருந்தது, முதலில் துணை அரசனாகயிருந்து பின்னர் அரசனாகவும் பதின்மூன்று ஆண்டுகள் தொண்டைமண்டலத்தை ஆட்சிசெய்தவர். இதனால் முறைப்படியோ இல்லை தருமப்படியோ கரிகாலக்கண்ணன் ஆட்சிப்பொறுப்பைக் கேட்டால் மறுக்க முடியாதுதான்.

இராஜராஜரின் அருகில் வந்து கட்டிப்பிடித்துக் கொண்டவர். சிறிது நேரத்தில் விலகிவிட்டு,

“மன்னரே உங்களின் நிலை எனக்கு நன்றாகப் புரிகிறது. இன்னும் சொல்லப்போனால் எனக்கு நீங்கள் இன்று கேட்ட வாக்குறுதியை நினைத்து கொஞ்சம் நகைப்பாய்க் கூட இருக்கிறது. இதே போன்றதொறு வாக்குறுதியை நான் உங்களிடம் கேட்பதற்காக எத்தனை முறை முயற்சிசெய்து பின்னர் அமைதியாகியிருக்கிறேன் தெரியுமா.

எங்கே உங்கள் தமையனாரின் மேல் பாசமில்லாதவனாக, பக்தியில்லாதவனாக சித்தரிக்கப்படுவேனோ என நினைத்து எழுந்த கேள்விகளை அப்படியே உள்ளுக்குள் கட்டிவைத்திருக்கிறேன். புரியவில்லையா?

நான் உங்களிடம் எக்காரணம் கொண்டும் இராஜேந்திரனைத் தவிர்த்த ஒருவரை அடுத்த மன்னராக அரியணையில் ஏற்ற நீங்கள் நினைக்கக்கூடாது என்று உறுதிமொழி வாங்க நினைத்திருந்தேன். நீங்களே இன்று கேட்டுவிட என்னைப்போல் மகிழ்ச்சியாய் இருப்பவன் இந்த உலகத்தின் யாருமே இருக்கமுடியாது. இதனாலெல்லாம் கரிகாலக்கண்ணனின் மேல் எனக்கு பாசம் கிடையாது என்பதில்லை. இராஜேந்திரன் ஒரு கண் என்றால் கரிகாலக்கண்ணன் மற்றொரு கண்ணைப்போன்றவன்.

வீரத்திலும் விவேகத்திலும் இராஜேந்திரனை அடித்துக்கொள்ளும் ஒருவனை இந்தப் பிறவியில் நான் இன்னும் பார்க்கவில்லை. நம்மையெல்லாம், நம் சாதனைகளையெல்லாம் தூக்கி சாப்பிடப்போகிறான் இராஜேந்திரன். என் மனதை உறுத்திக் கொண்டிருந்ததெல்லாம். நியாய சாஸ்திரம், தர்ம சாஸ்திரம் என்று எதையோ ஒன்றை சொல்லி உத்தமசோழனின் ஆட்சிக்காலத்தின் எங்களில் கைகளை கட்டி வைத்திருந்ததைப்போல் இப்பொழுது நடந்துவிடக்கூடாதென்று தான். அப்படியொரு சூழ்நிலை வந்திருந்தால் உங்களைக் கைது செய்துவிட்டு என் மருமகனை அரியணையில் அமரச் செய்திருப்பேன்.”

வந்தியத்தேவர் சொல்லிமுடித்ததும் இராஜராஜர் வந்தியத்தேவரின் முதுகெலும்புகள் உடையும் படி கட்டிப்பிடித்துக்கொள்ள,

“என்னது என் தம்பியைக் கைது செய்வதா? அதற்கு இப்படியொரு உபசரிப்பா? என்ன நடக்கிறது சோழ தேசத்தில் என்று கேட்டவாறு குந்தவை உள்ளே நுழைய, வந்தியத்தேவர் மகிழ்ச்சி சாகரத்தில் நீந்திக்கொண்டிருந்தவர், விளையாட்டாக,

“தேவி நீ ஆள்வதற்கு நாடு கேட்டாயல்லவா? போரிட்டு வேறு நாடுகளைப் பிடித்து நிறைய ஆண்டுகள் ஆகும் வேலையது. பேசாமல் இராஜராஜரை சிறைபிடித்து விட்டு, நாமிருவரும் ஆட்சிசெய்தால் என்ன என்று நினைத்தேன், அதைப்பற்றி மன்னரிடம் ஆலோசனைக் கேட்கத்தான் சந்தோஷமாய் ஆளுங்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார் அதற்குள் நீயும் வந்துவிட்டாய்.”

வந்தியத்தேவர் வேடிக்கையாய் சொல்ல, சோழ வரலாற்றில் பெரும் பெயர் எடுக்கப்போகும் அந்தச் சிறுவன் வந்தியத்தேவருக்கும், இராஜராஜருக்கும் இடையில் நடந்தவற்றை அறியாதவனாய், குந்தவைதேவி வந்தியத்தேவரின் மீது காட்டிய பொய்க்கோபத்தைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான்.