பாரதிதாசன்

சித்திரச் சோலைகளே – உமை நன்கு
திருத்தஇப் பாரினிலே – முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனர்
ஓஉங்கள் வேரினிலே.

நித்தம் திருத்திய நேர்மையி னால்மிகு
நெல்விளை நன்னிலமே – உனக்கு
எத்தனை மாந்தர்கள் நெற்றி வியர்வை
இறைத்தனர் காண்கிலமே.

தாமரை பூத்த தடாகங் களேஉமைத்
தந்தஅக் காலத்திலே – எங்கள்
தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச்
சொல்லவோ ஞாலத்திலே.

தாரணியே தொழிலாளர் உழைப்புக்குச்
சாட்சியம் நீ அன்றோ – பசி
தீரும் என்றால் உயிர்போகும் எனச்சொல்லும்
செல்வர்கள் நீதி நன்றோ.

பாரதி – எங்கள் தாய்

தொன்றுநிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் – இவள்
என்று பிறந்தவள் என்றுண ராத
இயல்பின ளாம் எங்கள் தாய்.

முப்பது கோடி முகம்உடையாள் உயிர்
மொய்ம்புற ஒன்றுடையாள் – இவள்
செப்புமொழி பதினெட் டுடையாள் எனின்
சிந்தனை ஒன்றுடை யாள்.

அறுபது கோடித் தடக்கைக ளாலும்
அறங்கள் நடத்துவள்தாய் – தனைச்
செறுவது நாடி வருபவ ரைத்துகள்
செய்து கிடத்துவள் தாய்.

நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி
நயம்புரிவாள் எங்கள்தாய் – அவர்
அல்லவ ராயின் அவரை விழுங்கியப்பின்
ஆனந்தக் கூத்திடு வாள்.