தொன்றுநிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் – இவள்
என்று பிறந்தவள் என்றுண ராத
இயல்பின ளாம் எங்கள் தாய்.
முப்பது கோடி முகம்உடையாள் உயிர்
மொய்ம்புற ஒன்றுடையாள் – இவள்
செப்புமொழி பதினெட் டுடையாள் எனின்
சிந்தனை ஒன்றுடை யாள்.
அறுபது கோடித் தடக்கைக ளாலும்
அறங்கள் நடத்துவள்தாய் – தனைச்
செறுவது நாடி வருபவ ரைத்துகள்
செய்து கிடத்துவள் தாய்.
நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி
நயம்புரிவாள் எங்கள்தாய் – அவர்
அல்லவ ராயின் அவரை விழுங்கியப்பின்
ஆனந்தக் கூத்திடு வாள்.