பெங்களூர் புத்தகக்கண்காட்சி

பெங்களூர் புத்தகக்கண்காட்சி

பெங்களூருக்கு வந்து சேர்ந்ததும் வரும் முதல் வாய்ப்பு என்பதால் விட மனசில்லாமல், சென்றிருந்தேன். மனதிலே சில புத்தகக் கணக்குகளுடன்.

பன்சங்கரியில் இருந்து பேலஸ் கார்டனுக்கே முதலில் ஆட்டோவே கிடைக்காமல் அரைமணிநேரத்திற்கு பிறகு கிடைத்தது.

வந்து சேர்ந்ததும் மூன்று கடைகளைத் தேடினேன். முதலாவது காலச்சுவடு, இரண்டாவது உயிர்மை, மூன்றாவது பத்ரியின் கிழக்கு.

முதலாவதும் மூன்றாவதும் வந்திருந்தன.

காலச்சுவடு கடைக்குள் நுழைந்ததுமே, தெரிந்துவிட்டது, தமிழ்க்கடைகளில் காற்றடிக்கும் நிலை, நன்றாக நினைவில் இருக்கிறது. டெல்லியில் நானிருந்த பொழுது நடந்த புத்தகக்கண்காட்சி.

அப்பொழுதெல்லாம் இலக்கியம் என்றால் எனக்கு சுஜாதாவும் பொன்னியின் செல்வனும் தான். அதனால் வந்திருந்த காலச்சுவடு கடைக்குள் நுழைந்து சுஜாதாவின் புத்தகங்களைக் கேட்க அவர்கள் என்னை புழுவைப்போல பார்த்தது அப்பொழுது புரியவில்லை.

ரொம்ப சண்டை போட்டேன் அன்று, சுஜாதா பாலகுமாரன் புக்கெல்லாம் எடுக்காமல் ஏன் வருகிறீர்கள் என்று.

அந்த நினைவுகள் பசுமையாக ஓட, காலச்சுவடு கடைக்குள் நுழைந்து நான் சில புத்தகங்களைக் கேட்டதும். அந்தப் புத்தகக் கடைக்காரரின் முகம் பிரகாசமானதை உணரமுடிந்தது. ரொம்ப நாளா தேடிக்கொண்டிருந்த ஜேபி சாணக்கியாவின், என் வீட்டின் வரைபடம் மற்றும் கனவுப் புத்தகம் சிறுகதைத் தொகுப்பை வாங்கினேன். அப்புறம் ஒரு படுபாவி வீட்டில் இருந்து ஏற்கனவே இருந்த ஜேஜே, வை சுட்டுக்கொண்டு போய்விட்டதால் அதையும் ஒருமுறை வாங்கினேன்.(இன்னொருமுறை).

என்னவோ இந்தப் புத்தகங்கள் எல்லாம் வாங்கியதாலோ என்னவோ, கொஞ்ச நேரம் அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் சில புத்தகங்களை வெறும் பத்து எண்ணிக்கை போடுவது பற்றி வருத்தப்பட்டார்.

அடுத்து நுழைந்தது, கிழக்கு. ஒரு ஓரமாய் திங்க்பேடும் கையுமாக பத்ரி உட்கார்ந்திருந்தார். அன்றைக்கு ஒரு மனநிலைக்கு தயார் செய்து போகாததால் நான் அறிமுகம் செய்து கொள்ளவில்லை.

ஆதவனின் சிறுகதைகள் இவர்கள் கொண்டுவந்த ஞாபகம் இருந்தது. அதனால் நுழைந்ததுமே அந்தப் புத்தகத்தைக் கேட்டேன் ஆனால் வந்ததோ வேறொரு புத்தகம். ஆத்தர் நேமும் ஆதவன் இல்லை புத்தகத்தின் பெயரும் ஆதவன் இல்லை. ஆனால் இந்தப் புத்தகமும் நல்லப் புத்தகம் என்ற விளக்கம் வேறு கிடைத்தது.

சரி போனால் போகிறதென்று வேறு ஒருவர் எங்கேயோ போய் எடுத்துக்கொண்டு வந்தார்(ஷாயித் நிவேதா – இந்த விஷயத்துக்கு பிறகு வருகிறேன்). அந்தப் புத்தகம் கிடைத்தது. அப்புறம் நம்ம ஊர்க் கதையான அரசூர் வம்சம் வாங்கினே. முன்பே கொஞ்சம் நிறைய படித்திருக்கிறேன் திண்ணையில்.

ஆனால் புத்தகமாக இருப்பதில் கிடைக்கும் சுகத்தால் அதையும் வாங்கினேன்.

அந்தச் சமயத்தில் தான் இராகவன்(அவருதான்னு நினைக்கிறேன்!) அந்தப் பக்கம் வந்தார். கையில் ஹெல்மெட் பின்னால் பேக் என்று. ஆனால் நிச்சயமாகத் தெரியாததாலும் என்னுடைய அன்றைய மனநிலை காரணமாகவும் அறிமுகப்படுத்திக்கொள்ளவில்லை.

இடையில் தான் நினைவில் வந்தது, ஆதவனின் இன்னொரு நாவல். ஆனால் பெயர் நினைவில் வரவில்லை. கிழக்கின் மத்த நபர்களைக் கேட்பதைவிட பத்ரியையே கேட்டுவிடலாம் என்று கேட்டேன். என் பெயர் ராமசேஷன் இல்லாமல் மற்ற நாவல் என்று. என் மனதில் கண்ணீர்ப் பூக்கள் என்ற பெயரே ஒட்டிக்கொண்டு உண்மையான பெயர் வரவேயில்லை. ஆனால் பத்ரி சரியாகச் சொன்னார்.

பின்னர் ராம்கியின் முகவையும், ரஜினி பற்றிய புத்தகதையும் எடுத்துக்கொண்டு முன்னுரையைப் படிக்கத்தொடங்கியிருப்பேன். சார் இந்த கிமு கிபி புத்தகத்தை எடுத்துக்கோங்க என்று பிஸினஸ் ஸ்டிரேடஜி மூஞ்சில் வீசப்பட்டது. பின்னர் இன்னும் இரண்டு மதனின் புத்தகங்களும் அதே கொள்கையுடன் முகத்தில் வீசப்பட, ஹெல்மட் இல்லாமல் ஆம்ப்ரோஸின் பந்தை விளையாடச் சென்ற ஒரு உணர்வு தான். ஆனால் கொஞ்ச நேரத்தில் பொறுக்கமுடியாமல் “மதன் புக் படிக்கிற அளவுக்கு இப்போ மூடில்லை” என்று பின்நவீனத்துவ மூஞ்சியை திருப்பிக் காட்டினேன். பின்னர் ஆரம்பித்தது இட்லிப் பிரச்சனை.

ஜினடின் ஜிடேனை “மொட்டை” என்று சொல்லியதால் தான், அவர் மற்ற அணிவீரரை முட்டித்தள்ளினார் என்ற செய்தி புதிகாகக் கிடைத்தது “இட்லி…” பற்றிய புத்தகத்தின் கேன்வாஸாக. அறிமுகமே சரியில்லாததால்( ;-)).

வாங்கின இரண்டு புத்தகங்களுக்கு பில் போடுங்க என்று கிரெடிட் கார்டைக் கொடுத்தால் அங்கேயும் பிரச்சனை. ரொம்ப வேகமாக கார்ட் நம்பரை எழுதி வைத்துக் கொள்கிறார்கள். நான் சட்டப்படி அது குற்றம் என்று இந்தியில்(!) ஆர்க்யூ பண்ண(அந்த பையன் கன்னடிக்கா – இது சிக்கன் டிக்கா இல்லை) ஒன்றும் பேசமுடியாமல் ஹாட்கேஷ் இல்லாத பர்ஸும் வாங்கிய புத்தகத்தை திரும்பக் கொடுக்க மனம் வராமலும் நானும் எழுதிவைத்து வந்தேன்.

திரும்ப வரும்பொழுது ராகவனும் பத்ரியும் வெளியில் பேசிக்கொண்டிருந்தார்கள், ஒருவாரு அவர்தான் என்று உறுதியாகத் தெரிந்தாலும் இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று விகடனுக்குள் நுழைந்தேன்.

அங்கே சின்ன பையனுங்களெல்லாம் காசுக்கொடுத்து தங்கள் விளம்பரங்களை வருபவர்களுக்கு கொடுக்கச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். சமூக உணர்வு பெருக்கெடுத்து குழந்தைத் தொழிலாளர் வைச்சுக்கக்கூடாது தெரியுமில்லை. என்று தெரியாதவருக்கு சொல்வதாகச் சொன்னேன். அதைக் கண்டுகொண்டதாகவேத் தெரியவில்லை. நான் இதை எழுதி அனுப்புவேன்னு சொன்னதற்கு செய்யுங்களேன் என்று சொன்னதும் வாயையும் மற்றதையும் பொத்திக்கொண்டு வெளியேறினேன்.

கிழக்கிற்கும் உயிர்மைக்கும் என்ன காண்டு என்று தெரியாது. சாதாரணமாகத்தான் கிழக்கில் உயிர்மை வரலையே யாரவது அவங்க புத்தகம் எடுத்துக்கிட்டு வந்திருக்காங்களான்னு கேட்டேன். தெரியாதுன்னு சொல்லிட்டாங்க சரி நானும் அப்படித்தான்னு போய்ட்டேன். திரும்ப மிளகாய் பஜ்ஜி வாங்க வெளிய வரும் பொழுது காலச்சுவட்டைக் கடந்தேன்.

மனுஷ்யபுத்திரனுக்கும், காலச்சுவடிற்கும் பிரச்சனை இருப்பதாக நான் நினைத்து இவரிடம் எப்படிக் கேட்கலாம் என நினைத்து பிறகு, சில இலக்கிய புக் வாங்கிய நல் மதிப்புடன் கேட்டேன், முழு விளக்கங்களுடன் சொல்லிவிட்டு நிவேதாவில் கிடைக்கும் போய்ப்பாருங்க என்று சொன்னார்.

அங்கே வந்து நண்பர் ஒருவர் ஏற்கனவே எடுத்துக்கொண்டு போன ஜீரோ டிகிரியையும். வாங்கிவிட்டுப் பார்த்தால் முகவும், ரஜினியும் கிழக்கு அட்டைகளுடன் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.

PS: எழுதியதற்கு அப்பால் தான் பார்த்தேன், கிரெடிட் கார்ட் பற்றி எழுதியிருந்தது கொஞ்சம் போல கிழக்கு நேரடியாக கிரெடிட் கார்ட் எண்ணை வாங்கி எழுதியது போன்ற பிம்பம் என்னால் உருவாக்கப்பட்டிருந்ததை. ஆனால் உண்மையில் கார்ட் டிரான்ஸாக்ஷன்ஸ் செய்தது புத்தகக்கண்காட்சி நடத்தியவர்கள் தான். இது வேண்டுமென்று நடந்த தவறு அன்று. எழுதும் பொழுது சொற்கள் தவறிவிழுந்து வரிகள் வேறு அர்த்ததத்தை உண்டுபண்ணியிருக்கலாம்.

தனிப்பட்ட விளக்கங்களுக்கு நன்றி பத்ரி.

4 thoughts on “பெங்களூர் புத்தகக்கண்காட்சி

  1. சத்தியமா படிச்சுட்டு தான் பின்னூட்டம் போட்டேன் :))

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s