பெங்களூர் to ஸ்ரீரங்கம்

பெங்களூர் டு ஸ்ரீரங்கம்

கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் வடமாநிலங்களiல் வேலை செய்து வந்ததால் செய்ய முடியாத ஒரு காரியத்தை இந்த வருடம் பெங்களூரில் இருப்பதால் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. அது வைகுண்ட ஏகாதெசி அன்று சொர்க்கவாசல் மிதிப்பது. முடிஞ்சிருச்சான்னு கேட்டா இல்லை இன்னைக்கு நைட்டு தான்.

ஆனால் வழக்கம் போல் சில கேள்விகள் எல்லோர் மனதிலும். கடவுள் நம்பிக்கையில்லை என்று சொல்லிக்கொள்ளும் நான், கொஞ்சம் கஷ்டப்பட்டு இந்த சொர்க்கவாசலுக்கு வரும் காரணம் என்ன என்பது அது. அவரவர்கள் அவரவர்களுக்கு பிடித்த முகமுடியுடன் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டார்கள் என்றே சொல்லுவேன்.

அம்மாவிற்கு இன்னும் தன் பையன் முழுசா கெட்டுப்போய்விடவில்லை, இன்னும் தன் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறான் அதனால் எப்படியாவது சொர்க்கவாசல் மிதிக்க வருகின்றான் என்பதில் ஒரு திருப்தி.

அப்பாவிற்கு, நான் பத்திரமாக வந்து எல்லாம் முடிந்து எந்தவித பிரச்சனையும் இல்லாமல் திரும்பப்போய்விடவேண்டும். இதற்கு நான் வராமலேயிருக்கலாம் என்ற எண்ணம்.

அக்காவிற்கு, நான் கதையெழுதுவதற்கான ஒரு தீம் இந்த கூட்டத்தில் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தில் தான் நான் இந்த முறை வந்திருக்கிறேன் என்ற நினைப்பு.

நம்ம ஜிகிடி தோஸ்துக்கு, ஸ்ரீரங்கத்துச் சின்ன மாமிகளை பை போடுவதற்காகத்தான் நான் போவதாகவும்.

நம்ம மனசாட்சி(கலைஞருக்கு முரசொலி மாறன் மாதிரியெல்லாம் கற்பனை செய்துக்காதீங்க, உண்மையை மறைக்கத் தெரியாத என் பாகம்னு வேண்ணா வைச்சிக்கோங்க) சொன்னது தான் கொஞ்சம் பக்கத்தில் வருவது மாதிரி இருந்தது. மாமு உனக்கு அந்தச் சம்பவத்துக்குப் பிராமணாஸ் கண்டா ஆகாது, முதலிலே பார்த்த உடனே நம்புறது கிடையாது. ஆனால் இப்ப ப்ளாக் உலகத்திற்கு வந்த பிறகு அது கொஞ்ச கொஞ்சமா குறையிற மாதிரி ஒரு பீலிங்.

இப்ப ஏகாதெசிக்கு ஸ்ரீரங்கத்துப் போனா அங்க நடக்கிற விஷயங்களைப் பார்த்து ஆட்டோமேட்டிக்கா திரும்பவும் மனசில ஊடு கட்ட ஆரம்பிச்சிருவ. அதாவது தூங்கிற சிங்கத்த எழுப்பிடாம அதே சமயத்தில ஒரேயடியா தூங்கிடா பார்த்துக்கிற நீ இல்லையா?

எனக்கென்னமோ இந்த விஷயம் கொஞ்சம் சரி மாதிரி தெரிஞ்சாலும், எனக்கு சாதாரணமாவே கூட்டத்தைக் கண்டால் ரொம்பப் பிடிக்கும். ஆனா அந்தக் கூட்டத்தோட பழகிறதுக்குக் கிடையாது, வேடிக்கைப் பார்க்க. எப்படி கிருஸ்துமஸ் இரவுகளில் சர்சிற்கு செல்கிறேனோ அப்படி. (செக்யூலரிஸ்டு முகமூடி வெளியில் வந்திடுச்சு.)

திரும்பவும் அந்த மனசாட்சி மேட்டருக்கு, எனக்கு கொஞ்ச காலத்துக்கு முந்தியெல்லாம் பாலகுமாரனை ரொம்பப் பிடிக்கும்(இப்ப பிடிக்குமா பிடிக்காதாங்கிறது வேற விஷயம்) அதுக்கெல்லாம் முக்கிய காரணம் எங்க மாமா, அவன் தான் பல நாவல்களைக் கொடுத்து படிக்கச் சொல்லியிருந்தான். வாங்கியும் கொடுப்பான். ஆனால் நன்றாக நினைவில் இருக்கிறது ஒரு ஏகாதெசி முடிந்த அடுத்த நாள் பாலகுமாரன் நல்லவர் இல்லைன்னு ஒரே ஆர்க்யூமெண்ட், ஏன்னு கேட்டா பாலகுமாரன் எப்பப்பார்த்தாலும், கடவுளை பார்ப்பதற்கு காசுகொடுத்தோ இல்லை இன்னபிற விஷயங்களை உபயோகித்தோ ஸ்கிப் பண்ணி போகக்கூடாதுன்னு எழுதியிருப்பாரு.

அந்த ஏகாதெசியில, மேல் சட்டைப்போடாமல்(;))வரிசையை ஸ்கிப் பண்ணி, சாமிப்பக்கத்தில் போய்ட்டார். அதை மாமன் பார்த்துட்டான் அதான் இந்த வெறுப்பு. ஏனென்றால் சாருநிவேதிதா போலில்லாமல், அவருடைய வாழ்க்கையையும் எழுத்தையும் ஒன்றாய்ப் பார்க்கும் நிறைய பேரில் மாமனும் ஒருத்தன். பாவம் மாமாவிற்கு ப்ராக்டிகாலிட்டி ரொம்பச் சுட்டிருக்கணும் அன்னிக்கி. அதே விஷயம் மறுபடியும் மறுபடியும் என்னை சுடணும் அப்படிங்கிறதுக்காகத்தான் நான் ஏகாதெசிக்கு வர்றேன்னு மனசாட்சியே சொன்னாலும்.

இரண்டு கைகளையும் எக்ஸர்சைஸ் செய்வதைப்போல் முன்னால் நீட்டி அந்த கேப்பில் தான் பெற்ற பெண்ணை(ஐயர் பொண்ணுன்னு வைச்சுக்கோங்களேன் – திராவிடப் பிகரை சைட் அடிச்சேன்னா முத்து உதைப்பார், இதே பிராமணப் பொண்ணை சைட் அடிச்சேன்னு தெரிஞ்சா, பிகேஎஸ் இரண்டு வரிக்கதை எழுதுவார். இருந்தாலும் ஒரு உதாரணத்திற்கு)யாரும் கிள்ளிவிடாமல்(புரியும்னு நினைக்கிறேன்) காப்பாற்றி சொர்க்வாசலை கடக்கவைத்து இதற்கிடையே அந்த பல்லியையும் இன்னொரு ஐட்டத்தையும் வேறு காண்பித்து. அப்பப்பா. இதைப் போன்ற விஷயங்கள், பிறகு ஆந்திராவிலிருந்து கோவிந்தனையே மனதில் நினைத்தபடி வரும் தெலுங்கர்கள், சபரிமலைக்கு போகும் அவசரத்தில் கோவிலுக்குள் ஓடிக்கொண்டேயிருக்கும் சாமிகள். பிகர்களை, மாமிகளை இடிப்பதற்கென்றே வரும் கும்பல் என ஒவ்வொரு தடவையும் எனக்கு வித்தியாசமான பிக்சர் கிடைத்து வருகிறது. ஆனால் ஊஞ்சலாடும் உற்சவர் ஒருவர்தான்(இதைச் சொல்லி தேசிகனின் பதிவில் போன வருடம் வாங்கிக் கட்டிக் கொண்டேன்.)

எனக்கு இப்படின்னா நிறையப்பேருக்கு வேறமாதிரியெல்லாம், சீவலி(?) பிடிக்கிறவா, பல்லக்கு தூக்கறவா இப்படி அவரவர்களுக்கு வித்தியாசமாய் ஆனால் நல்ல பொழுது போக்காய்.(எங்க அப்பாவுக்கு தெரிஞ்சது எனக்குன்னு தனியா ஒரு கேபிஎன் புக் பண்ணி பெங்களூர் பார்சல் பண்ணிடுவார். ஏதோ புள்ளை சாமியெல்லாம் கும்பிடுதுன்னு தான் இப்ப வர்றதுக்கு அப்ரூவல் கிடைத்தது. பொழுதுபோக்குன்னு சொன்னேன்னா அவ்வளவுதான்.)

சரிசரி ஏற்கனவே லேட் ஆகிக்கிட்டிருக்கு, நான் கிளம்புறேன். போய் மூலவருக்கு முத்தங்கிசேவையில் ஒரு ஹாய் சொல்லிவிட்டு. பின்னூட்டம் போடுறவர்கள் கேட்டுக்கொண்டால் அவர்கள் சார்பாகவும் ஒரு ஹாய் சொல்வதாக உத்தேசம். வருகிறேன். நாளை இந்த வருட ஏகாதெசி அனுவங்களுடன்.

நகுலன்

கொஞ்ச நாட்களுக்கு முன்னர் நகுலன் பற்றி சாருநிவேதிதா எழுதி சாருவினுடைய வெப்சைட்டில் பார்த்த நியாபகம் தான் முதலில் வந்தது ஆனந்தவிகடனுடைய நகுலன் கவிதைகளைப் படித்தபொழுது…

நகுலன்

‘‘நான் இறந்த பிறகு எனக்கு அஞ்சலிக் கூட்டங்கள் நடத்த வேண்டாம். ஏனென்றால், என்னால் வர முடியாது!’’

தன்னைப் பார்க்க வரும் இலக்கிய நண்பர்கள் விடைபெறும் போது, அவர்களிடம் நகுலன் கடைசியாக வைக்கும் வேண்டு கோள் இதுதான். தமிழ் இலக்கியப் பரப்பில் குறிப்பிடத்தக்க எழுத்தாளரான இவர் தற்போது திருவனந்தபுரத்தில், தனிமையில் வசிக்கிறார்.

தமிழில் யாரையும் பின்பற்றிப் போகாத, தனிப்பட்ட ஆளுமையும் மௌனத்தில் எரியும் மகத்தான மொழியும் நகுலனுடையவை. பனிக்குடம் உடைபடுவதைப் போல, உயிர் விடைபெறு வதைப் போல இயல்பும் புதிருமாக எழுகிற எழுத்து இவரது தனிப்பாணி. தற்போது எழுதுவதை முற்றிலும் நிறுத்திவிட்டார். நினைவின் நிழல் படியும் அந்தியின் சாய்வு நாற்காலியில் அமர்ந்து சிரித்துக்கொண்டு இருக்கும் நகுலனுக்கு இப்போது வயது 87.

நகுலனின் நிரம்பிய முதுமையை, குழந்தையைப் போல் இருக்கும் உடல்வாகை புகைப்படக் கலைஞர் ஆர்.ஆர்.சீனிவாசன் எடுத்த படங்களுடன், நகுலனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளது காவ்யா பதிப்பகம்.

எந்தப் புத்தகத்தைப்
படித்தாலும்
நமக்குள் இருப்பதுதான்
புஸ்தகத்தில்
எழுதியிருக்கிறது;
அதை மீறி ஒன்றுமில்லை!

இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்.
இல்லாமல்
போகிறோம்!

என்னைப் பார்க்க வந்தவர்
தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்!

மிகவும் நாணயமான மனிதர்
நாணயம் என்றால் அவருக்கு உயிர்!

வேளைக்குத் தகுந்த
வேஷம்
ஆளுக்கேற்ற
அபிநயம்
இதுதான்
வாழ்வென்றால்
சாவதே சாலச் சிறப்பு!
எனக்கு
யாருமில்லை
நான்
கூட!

யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்துகொண்டிருக்கிறது?
எல்லாம்!

நீயிருக்க
நானிருக்க
நேற்று
இன்று
நாளை
என்ற நிலை
ஒன்றும் இல்லை
ஒன்றுமே இல்லை!

உன்னையன்றி
உனக்கு வேறு யாருண்டு?

ஆர்ப்பரிக்கும் கடல்
அதன் அடித்தளம்
மௌனம்; மகா மௌனம்!

முக்கோணம்
முடிவில்
ஒரு ஊசி முனை ஞானம்!

வந்தவன் கேட்டான்
‘‘என்னைத் தெரியுமா?’’
‘‘தெரியவில்லையே’’
என்றேன்.
‘‘உன்னைத் தெரியுமா?’’
என்று கேட்டான்.
‘‘தெரியவில்லையே’’
என்றேன்.
‘‘பின் என்னதான் தெரியும்’’
என்றான்.
‘‘உன்னையும் என்னையும் தவிர
வேறு எல்லாம் தெரியும்’’
என்றேன்!
எழுத்தாளனுக்கும்
வாசகனுக்கும்
நடுவில்
வார்த்தைகள்
நி
ற்
கி
ன்

ன!

credits vikatan.com, charu nivedita.

அவார்டுகள் அள்ளிக்கோ – 1

சினிமா

சிறந்த நடிகர்: சூர்யா (கஜினி).

சிறந்த நடிகை: அசின் (கஜினி).

சிறந்த நகைச்சுவை நடிகர்: வடிவேலு (இம்சை அரசன் 23ம் புலிகேசி).

சிறந்த கருத்துக்களை நகைச்சுவையுடன் கலந்தது: விவேக் (பல படங்களில்).

சிறந்த டைரக்டர்: மிஷ்கின் (சித்திரம் பேசுதடி).

சிறந்த ஒளிப்பதிவாளர்: ரவிவர்மன் (வேட்டையாடு விளையாடு).

சிறந்த பாடலாசிரியர்: நா.முத்துக்குமார் (வெயில்).

சிறந்த இசையமைப்பாளர்: யுவன்ஷங்கர் ராஜா (வல்லவன்).

சிறந்த பாடகர்: கார்த்திக் (கஜினி).

சிறந்த பாடகி: பாம்பே ஜெயஸ்ரீ (வேட்டையாடு விளையாடு).

சிறந்த ஆர்ட் டைரக்டர்: செல்வகுமார் (ஈ).

சிறந்த திரைப்படம்: ‘சித்திரம் பேசுதடி’ & தமிழ்; ‘லகே ரஹோ முன்னா பாய்’ & இந்தி; பீஷீஷ்ஸீயீணீறீறீ & ஹிட்லரின் கடைசி தினங்கள் & ஜெர்மன் (ஆங்கில சப் டைட்டில்களுடன்).

சிறந்த பின்னணிக் குரல்: சவிதா.

சிறந்த சினிமா பாடல்: ‘ரகசியமானது காதல்’. படம் & கோடம்பாக்கம். எழுதியவர் & விஜயசாகர்; இசை & சிற்பி.

மிக அதிகம் பாடப்பட்ட சினிமா பாடல்: ‘வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்…’ & கானா உலகநாதன்.

இலக்கியம்

சிறந்த கவிதைத் தொகுப்புகள்:

1. ‘அகி’ & 139 கவிதைகள் & முகுந்த் நாகராஜன், ‘உயிர்மை’, 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை&18.

2. றஞ்சனி கவிதைகள் & றஞ்சனி, இமேஜ் & இம்ப் ரெஷன், 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை&18.

3. சிறந்த தலித் கவிதை & ‘பட்டுப்போன கிறிஸ்துமஸ் மரம்.’ & மோகனப்ரியா; ‘கோடை உமிழும் குரல்.’ & தொகுப்பு: திலகவதி.

4. சிறந்த சிறு கவிதை: யாத்ரீகன் & முனியப்பராஜ்.

‘பழைய மன்னருடன் நகர்வலம்
வந்ததாய்ச் சொல்லப்பட்ட
பாகனற்ற கிழ யானை
பட்டத்து ஒப்பனையோடும்
ஓசையற்ற சலங்கையோடும்
தெருவில் இறந்து கிடந்தது’.

சிறந்த சிறுகதை: ‘மிஸ் மார்ட்டீனின் நாய்க்குட்டி.’ & விமல் குழந்தைவேல். தொகுப்பு: ‘குறளிக் குஞ்சன்.’ வெளியீடு: ‘நிறம்’, அக்கரைப்பாட்டு & 0132400, ஸ்ரீலங்கா (சுனாமி நிதிக்காகத் தன் செல்ல நாய்க்குட்டியை விற்கும் ஆங்கிலேயப் பெண்மணியின் கதை).

சிறந்த அறிவியல் நூல்: ‘இன்னொரு வானம்’ & ஆதனூர் சோழன், சிபி பதிப்பகம், சாந்தி நகர், மதுரை&18.

சிறந்த ஆராய்ச்சி நூல்: புதிய வாஸ்து விஞ்ஞானம், கே.சுப்ர மணியன், வானதி பதிப்பகம், சென்னை&17.

பத்திரிகைகள்

சிறந்த ஸ்பெஷல் இதழ்: ஆனந்த விகடன் 304 பக்க தீபாவளி இதழ்.

சிறந்த புது வரவு: தினகரன் தீபாவளி மலர்.

சிறந்த மாத இதழ்: அமுதசுரபி.

சிறந்த புதிய இதழ்: அம்ருதா.

சிறந்த சிறு பத்திரிகை: இலக்கிய ரசனை.

சிறந்த அறிவியல் காலாண்டிதழ்: அறிவியல் பூங்கா. வெளியீடு: மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச்சங்கம், சென்னை& 4.

சிறந்த பக்தி இதழ்: சமரசம்.

சிறந்த சிறுவர் இதழ்: சுட்டி விகடன்.

சிறந்த பெண்கள் பத்திரிகை: மங்கையர் மலர் & நவராத்திரி ஸ்பெஷல்.

சிறந்த இலவச இணைப்புப் புத்தகங்கள்: அவள் விகடன்.

சிறந்த பேட்டைப் பத்திரிகை: மயிலாப்பூர் டாக்.

சிறந்த ஆங்கில தினசரி: டெக்கான் க்ரானிக்கல்.

சிறந்த வார அனுபந்தம்: சன்டே எக்ஸ்பிரஸ்.

சிறந்த வியாபார தந்திரம்: சன் நெட்வொர்க் (குங்குமம், தினகரன், தமிழ் முரசு போன்றவற்றுடன் இலவச பொருட்கள் தந்தது).

சிறந்த அட்டைப் படம்: சானியா மிர்ஸா, குங்குமம்.

சிறந்த கார்ட்டூன்: கேசவ் & தி இந்து.

சிறந்த கேள்வி&பதில்கள்: மக்கள் களம், நக்கீரன்.

சிறந்த வாசகர்: அயன்புரம் சத்தியநாராயணன்.

கர்னாடக சங்கீதம்

சிறந்த பாடகர்: சஞ்சய் சுப்ரமண்யம், டி.எம்.கிருஷ்ணா.

சிறந்த பாடகி: பாம்பே ஜெயஸ்ரீ, நித்யஸ்ரீ.

சிறந்த இசைக் கலைஞர்: பிரசன்னா (கிடார்), யு.ஸ்ரீனிவாஸ் (மாண்டலின்).

சிறந்த புதிய பாடகர்: குருசரண்.

சிறந்த புதிய பாடகி: சுபிக்ஷா.

கிரிக்கெட்

சிறந்த புதியவர்: வெய்ன் ப்ராவோ, வெஸ்ட் இண்டீஸ்.

சிறந்த கேப்டன்: மஹேளா ஜெயவர்த்தனா.

மாஸ்டர் ப்ளாஸ்டர்: க்றிஸ் கேய்ல், ரிக்கி பாண்டிங்.

சிறந்த பௌலர்: ஷேன் வார்னே.

சிறந்த மறுபிறவி: சவுரவ் கங்குலி, சனத் ஜெய சூர்யா.

மைதானத்துக்கு வெளியே நிறையச் சம்பாதித்தவர்: டோனி.

சிறந்த ரன் துரத்தல்: தென் ஆப்பிரிக்கா & ஆஸ்திரேலியா (400&க்கு மேல்).

இந்த ஆண்டுக்கான சிறப்பு இடது கைப் பரிசுகள்…

1. தொலைக்காட்சி மெகா சீரியல்களில் சந்து கிடைக்கும்போதெல்லாம் ஆ… ஆ… பாடும் பெயர் தெரியாத பாடகர்களுக்கு ஒரு பாக்கெட் ஸ்ட்ரெப் சில்.

2. சங்கீதா ராஜேஸ்வரன் & ‘டைலாமு டைலாமு’ பாடலுக்காக… தமிழண்ணலின் ‘நல்ல தமிழில் பேசுவோம்’ புத்தகம்.

3. மெரீனா கடற்கரையில் சிமென்ட் பெஞ்சுகளை இரும்புக்காக உடைத்து வைத்திருக்கும் குடிகாரர்களுக்கும், அவற்றை ஒரு வருஷமாகியும் ரிப்பேர் செய்யாத அதிகாரிகளுக்கும் கடப் பாரை பரிசு (யார் ரிப்பேர் செய்வது… கார்ப்பரேஷனா, போக்குவரத்துக் காவல்துறையா என்று பட்டிமன்றம் நடந்து கொண்டு இருக்கிறது).

4. ‘வேட்டையாடு விளையாடு’ தமிழ்ப் படத்தில் மிக அதிக எண்ணிக்கையில் கொலைகள் செய்ததற்காக (18 உடல்கள் கணக்கிட் டேன்) இயக்குநர் கௌதம் மேனனுக்கு, ஒரு பொம்மைத் துப்பாக்கி. சிறப்புப் பரிசு ஹாரிஸ் ஜெயராஜுக்கு & இதே படத்தில் இடைவிடா மல் உரக்க ரீ&ரிக்கார்டிங் வாசித்ததற்காக, இரண்டு காதுகளுக்கும் பஞ்சு.

5. மிக அதிகம் பெண்களை அழ வைத்ததற்காக சிரபுஞ்சி அவார்டு ‘செல்வி’ ராதிகா சரத்குமாருக்கு. சன் டி.வி. 480 எபிசோடுகளில், டைட்டில் தவிர மூன்று முறை சிரித்திருக்கிறார்.

6. இந்திய கிரிக்கெட் அணி எத்தனை விதத்தில் தோற்க முடியுமோ அத்தனை விதத்திலும் தோற்றதற்கு மிக அகலமான கைக்குட்டை.

7. பஞ்சாப் ஹைகோர்ட், நவ்ஜோத் சித்து 1988&ல் செய்த கொலைக்கு 2006&ல் தண்டனை தந்ததற்கு & ஓடாத கடிகாரம்.

8. ஷோயப் அக்தர், ஆசிப் இருவருக்கும் தண்டனை தந்தது போல் பாவ்லா காட்டியதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு & முஷாரப்புடன் தனிப் பட்ட விருந்து.

9. காசாசை காட்டி நம் வீரர்களின் ஆட்டத்தைக் கெடுத்ததற்காக இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு & ஒரு பாக்கெட் லாலிபாப்!

—————–

PS: அடிக்கப்போறது ஜல்லின்னு ஆய்டுச்சு, அப்புறம் காப்பி பேஸ்ட் என்ன சொந்த சரக்கென்ன… இந்த வருஷ சுஜாதா அவார்டுகளின் பட்டியல்

திருவிளையாடல் ஆரம்பம் – ரொம்ப முக்கியம்

வாழ்க்கையில் ஒரு பெரிய தவறைச் செய்துவிட்டதாக வருந்துகிறேன்.

ஒழுங்கு மரியாதையா இந்தி, இங்கிலீஸ் படங்களை மட்டும் தியேட்டர்களில் பார்த்துக்கொண்டிருந்த நான் திருவிளையாடல் ஆரம்பம் என்ற தனுஷின் படத்திற்கு சென்றதைத்தான் சொல்கிறேன்.

ஒவ்வொரு முறையும் இந்த தனுஷ் படங்களால் நான் மிகவும் வெறுப்படைகிறேன். இதுக்கு முன்னாடி இப்படித்தான் ஒரு படம் பேரு நினைவில் இல்லை(அவங்க அப்பா இயக்கியிருந்தாரு – துள்ளுவதோ இளமையில்லை). சரியான கடி. அதுக்கு கொஞ்சமும் குறைந்ததில்லை இந்தப் படம். ஏண்டா படத்திற்கு போனோம் என்று ஆகிவிட்டது.

இந்த புண்பட்ட மனதை இன்னும் சில இந்தி ஆங்கில படம் பார்த்துத்தான் ஆற்ற வேண்டுமென்று நினைக்கிறேன். இதன் காரணமாக சில படங்களின் விமர்சனங்களை எதிர்பார்க்கலாம். இந்தப்படத்தை தியேட்டரில் சென்று பார்க்கவேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட விருப்பம்.

அயர்லாந்து ஒரு அறிமுகம்

என்னடா இவன் இந்தியாவிலிருந்து அயர்லாந்துக்கு எதுவும் போய்ட்டானா என்று அவசரப்படுபவர்களுக்காக ஒரு சின்ன ப்ளாஷ்பேக். நான் கேன்பேவிலிருந்து மாறி பெங்களூருக்கு வந்தது உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும். நான் இங்கே வந்து சேர்ந்திருக்கும் ஒரு கம்பெனி ஒரு அயர்லாந்து பேஸ்டு கம்பெனி. இதனாலெல்லாம் நான் அயர்லாந்து ஒரு அறிமுகம் போடவேண்டுமானால். முதலில் அமேரிக்கா ஒரு அறிமுகம் தான் போடவேண்டும்.

சரி விஷயத்திற்கு வரலாம்னா ஒரு கன்டின்யுட்டி வேணும்ல அதனால இன்னும் கொஞ்சம் சுயசொறிதல். அதாவது நான் சேர்ந்திருப்பது ஒரு சிறிய கம்பெனியாக இருந்தாலும்(கேன்பேவுடன் ஒப்பிடும் பொழுது) ப்ரொடக்ட் பேஸ்டு கம்பெனி. இதனால் என்ன பிரச்சனை என்றால் இவர்கள் இன்டஸ்டிரியில் உபயோகப்படுத்தும் ஆர்க்கிடெக்சர்களை உபயோகப்படுத்தாமல்(சரியாகச் சொல்லவேண்டுமானால் – நேரடியாக உபயோகப்படுத்தாமல்) சொந்தமாக ஆர்கிடெக்சர் வைத்திருக்கிறார்கள். (டெக்னிக்கலாக இன்னுமொறு பதிவு போட விரும்புவதால் இப்போதைக்கு சுறுக்கமாக.)

இந்த மாதிரி வைத்திருப்பதால் வரும் கஷ்டம் என்ன என்றால் கூகுளாண்டவர் கோட் எழுத உதவமாட்டார். காப்பி பேஸ்ட் எல்லாம் ஒரளவிற்கு மேல் உதவாது. அதன் காரணமாக எங்களுக்கு அந்த ஆர்கிடெக்சரை சொல்லித்தருவதற்காக அந்த ஆர்கிடெக்சரை டிசைன் செய்த மக்களை – இல்லை நன்றாக அந்த ஆர்கிடெக்சர் அறிந்தவரை – இல்லையென்றால் என்னைப்போல பெரிய கம்பெனியில் இருந்து வந்த மக்களை கொஞ்சமாவது சமாதானப்படுத்துவதற்கு – அயர்லாந்து மக்கள் வந்திருந்தார்கள். அப்பாடா ஒருவழியா கதைக்கு வந்துட்டேன்.

ஒரு நாள் என்ன ஆச்சுன்னா, அன்றைக்கான வகுப்புகள் இல்லாததால் வழக்கம் போல் தமிழ்மணத்தைப் படித்துக்கொண்டிருந்தேன். ஒரு மெயில் உடனடியாக நாம் எல்லோரும் சந்திக்கிறோம் என்று. (நாம் என்பது அந்த அயர்லாந்துக்காரர் மற்றும் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும் நாங்கள்). நான் என்ன நடந்தது என ஒன்றும் புரியாமல் ஆகா நாம எக்ஸர்சைஸ் ஒழுங்கா செய்யாம டிமிக்கி கொடுக்கிறது தான் தெரிஞ்சு கூப்பிடுறான் போலிருக்குன்னு நினைச்சுக்கிட்டு. இருந்தாலும் வடிவேலு மாதிரி இருக்கிற மீசை விறைப்பா வைச்சிக்கிட்டு உள்ள போனேன் அந்த கான்பிரன்ஸ் அறைக்கு.

அந்த மனிதர் அயர்லாந்தைப் பற்றி பாடம் எடுக்க ஆரம்பித்துவிட்டார். ஒரு வழியாக நிம்மதிப் பெருமூச்சு விட்டவாறு கொஞ்சம் போல் நிமிர்ந்து உட்கார்ந்தேன். விஷயம் என்னான்னா – பயிற்சி எடுத்துகொண்டிருந்த ஒரு அதிகப்பிரசங்கி, அந்த நபரிடம்(பேரு டோனின்னு வைச்சுக்கோங்களேன்.) அயர்லாந்து ஒரு நாடில்லை போலிருக்கே, அது இங்கிலாந்தோட ஒரு மாநிலமாமுல்ல – என்பதாகவோ இல்லை அதற்கு ஈடான ஒன்றையோ கேட்டுத் தொலைக்க எனக்கு இந்தப் பாடம். பெரும்பாலும் இது போல் பயற்சியளிக்க வருபவர்கள் கொஞ்சம் நெருக்கமாக பழகமாட்டார்கள். முக்கியமாக தற்பெருமை பேசமாட்டார்கள் அதனால் தான் டோனி முதலில் இதைப்பற்றி ஆரம்பித்ததும் நான் மலைத்தது – இதற்கெல்லாம் காரணம் நாட்டுப்பற்று என்பது எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது.

இனிமேல் கொஞ்சம் போல் அயர்லாந்து ஒரு அறிமுகம்.

எனக்கு அயர்லாந்து இங்கிலாந்தின் ஒரு மாநிலம் கிடையாது அது ஒரு தனிப்பட்ட நாடென்று தெரியும். அதேபோல நார்தர்ன் அயர்லாந்து பிரச்சனையும் கொஞ்சம் தெரியும். எப்படின்னா ஒரு சமயம் எந்த தேசத்தின் தேசியப்பாடல் சிறந்தது என்பதாகவோ இல்லை அதற்கு ஈடானதோ ஒரு போட்டியை பிபிசி(?) அறிவித்திருந்தது. அந்த முடிவுகளில் நார்தர்ன் அயர்லாந்தின் தேசியப்பாடல் முதல் இடம் பெற்றதாக ஞாபகம். விடுதலைப்புலிகளினுடையது இரண்டாவது வந்ததென்று நினைக்கிறேன். (நான் நிச்சயமாக போட்டோஜெனிக் மெம்மரி உடையவனெப்பது எனக்கு தெரியும் ஆனால் வரவர சாதாரண விஷயங்களை கூட நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை.)

என்ன பிரச்சனை என்றால், இந்தியாவைப் போல் அயர்லாந்தும் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் தான் முழுமையாக இருந்தது. பின்னர் 1949ல் இரண்டாம் உலகப்போரின் பின் சுதந்திரம் அடைந்து ரிப்பப்ளிக் ஆப் அயர்லாந்து என்ற பெயரில் தனிநாடனது. அங்கே தான் ஒரு சின்ன பிரச்சனை. நம்முடைய காஷ்மீரைப்போல(இது ஒரு சாதாரணமான கம்பேரிஸன் – மக்களுக்கு பிரச்சனை புரியவேண்டுமென்பதற்காக மட்டுமே.)

பிரச்சனை என்னவென்றால் அயர்லாந்தின் ஒட்டுமொத்த பகுதிகளும் கிறிஸ்துவத்துன் ஒரு பிரிவான கேத்தலிக் மக்களைக்கொண்டது. ஆனால் நார்தன் அயர்லாந்து பெரும்பான்மையாக ப்ரோட்டஸ்டண்ட் பிரிவினரைக்கொண்டது. இதனால் இங்கிலாந்திலிருந்து அயர்லாந்து பிரிந்த பொழுது இந்த வட அயர்லாந்து மக்கள் மட்டும் தாங்கள் இங்கிலாந்துடன்(இங்கிலாந்து ஒரு ப்ரோட்டஸ்டண்ட் நாடு) இருந்துவிடுவதாக சொல்லிவிட. இன்று வரை வட அயர்லாந்து இங்கிலாந்தின் ஒரு பகுதி. அந்த அதிகப்பிரசங்கியும் இந்த வட அயர்லாந்தை மட்டும் எடுத்துக்கொண்டு இங்கிலாந்தின் ஒரு பகுதி தான் ஒட்டு மொத்த அயர்லாந்து என்று சொல்லிவிட நான் இங்கே உங்களுக்கு இதையெல்லாம் விளக்குகிறேன்.

இன்னமும் வட அயர்லாந்தில் இருக்கும் கேத்தலிக் மக்கள்(சொல்லலாமா?) வட அயர்லாந்து அயர்லாந்துடன் இணைந்துவிட வேண்டும் என்று போராடி வருகிறார்கள். இது தான் சுருக்கமான இல்லை மிகச்சுருக்கமான அயர்லாந்தின் வரலாறு.

கேலிக் புட்பால்னு ஒரு அய்ட்டம். அப்புறம் ஒரு வகையான ஐரிஷ் டான்ஸ்.

இந்த கேலிக் புட்பால் என்கிற அய்ட்டம் கொஞ்சம் போல் புட்பால், கிரிக்கெட், ஹாக்கி எல்லாம் கலந்த ஒரு கலவை. உண்மை என்ன என்பது தெரியாது ஆனால் டோனி இந்த ஆட்டத்திலிருந்து தான் கிரிக்கெட் கொண்டுவந்தார்கள் என்பதைப் போன்ற ஒன்றை சொன்னார். ஆனால் நான் கூகுளை நாடவில்லை இதைக் கண்டுபிடிக்க.

மற்றது ஐரிஷ் டிரடிஷினல் மியூசிக் வகையில் வரும் ஒரு வகை டான்ஸ். நான் ரொம்ப நாளாக இந்த வகை டான் ஸ்பானிஷ் வகையறா என்று தான் நினைத்து வந்தேன். இந்த டான்ஸில் ஒரு விஷயம் அவர்கள் இந்த ஷூக்களை ஒரு சின்க்கில் ஆடும் பொழுது ஒரு பிரபலமானவர் ஒரு செகண்டில் அந்த ஷூவை 100க்கு பக்கத்தில் தட்டுவார் எனவும் டோனி சொன்னார். ரியலி அம்மேசிங். உங்களுக்காக ஒரு கேலிக் புட்பால் வீடியோவும், இந்த டான்ஸ் வகையறாவும் யூடுயூபில் கொடுக்கிறேன். பார்த்து மகிழுங்கள்.

இரண்டு நிமிஷங்களுக்கு பிறகு வரும் அந்த டான்ஸைப் பார்க்கத் தவறாதீர்கள்

கடேசியில் ஒரு விஷயம் மற்றும் சில டீட்டெய்ல்ஸ்.

விஷயம் என்னன்னா டோனி இந்தக் கதையெல்லாம் சொல்லி இனிமேல் நீங்களெல்லாம் யாரவது ஒரு நபரிடமாவது அயர்லாந்து தனிநாடு. இங்கிலாந்தின் மாநிலம் என்பதை விளக்கவேண்டும் என கொஞ்சம் விளையாட்டாகச் சொன்னார். நான் அதைச் செய்து விட்டேன். இன்மேல் உங்களிடம் யாராவது மேற்சொன்ன விஷயத்தைச் சொன்னால் ப்ளீஸ் விளக்கவும்.

அப்புறம் அந்த டீட்டெய்ல்ஸ், டோனி அயர்லாந்தில் பிறந்தவர்களைப்(சில சமயம் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக அயர்லாந்து தொடர்பு உள்ளவர்களைப்) பற்றிச் சொல்லும் பெரும்பாலானோர் வியந்துதான் போனோம் நீங்களும் அந்தப் பட்டியலை ஒரு முறைப் பாருங்கள்.

Irish People

அவார்டுகள் அள்ளிக்கோ

தொலைக்காட்சி:

சிறந்த தொலைக் காட்சி நிகழ்ச்சி: ஜெயா டி.வி. லட்சுமியின் ‘அச்சமில்லை… அச்ச மில்லை’. (மதுரை சித்திரைத் திருவிழாவில், ஆறு வயதில் காணாமல் போய், குஜராத்துக்குக் கடத்தப்பட்டு, அங்கே திருடக் கற்றுக் கொடுக்கப்பட்டு, தப்பித்து வந்து, கருணாலயத்தில் ஏற்றுக்கொள்ளப் பட்டு, எட்டு வருஷம் கழித்து, தொலைக் காட்சி நிகழ்ச்சியில் பார்த்த பெற்றோர் களுடன் சரவணனைச் சேர்த்துவைத்த உள்ளம் உருக்கிய நிகழ்ச்சி).

சிறந்த பேட்டிகள்: காபி வித் அனு (விஜய் டி.வி.) & சிவமணி, மாண்டலின் ஸ்ரீனிவாஸ் இருவருடனும் பேட்டி; மற்றும், சங்கீத வித்வான்களுடன் அனு ராதாவின் பேட்டிகள் (பொதிகை). குறிப்பாக, டி.கே. பட்டம்மாளுடன்!

தொலைக்காட்சியில் சிறந்த அறிவியல்: கியான் தர்ஷன்.

சிறந்த ஆலய தரிசன வர்ணனை: சுகிசிவம் & நவக்கிரகத் தலங்கள் (பொதிகை).

சிறுவர் தொலைக் காட்சி: போகோ.

சிறந்த நடிகர்: வேணு அரவிந்த் & ‘செல்வி’ (ப்ராம்ப்டிங்குக்காகக் காத்திராத சமயங்களில்).

சிறந்த நகைச்சுவைத் தொகுப்பு: சிட்டிபாபு&அர்ச்சனா காமெடி டைம் (சன் டி.வி.) காமெடியுடன் ‘உள்ளே & வெளியே’ என்று கொஞ்சம் பொது அறிவும் தந்ததற்காக!

சிறந்த கவனக் கலைப்பு: மந்த்ரா பேடி & செட் மேக்ஸ் (கிரிக்கெட் இடைவேளை களில் ரவிக்கையைத் தவிர, விமர்சனத்தை யார் கவனித்தார்கள்?).

சிறந்த நகைக் காட்சி: ‘தங்கவேட்டை’ கனிஹா (சன் டி.வி.)

புடவை ஜாக்கெட்: குஷ்பு ஜாக்பாட் (ஜெயா).

பேச்சு வெள்ளம்: ‘நீயா & நானா?’ (விஜய் டி.வி.)

சிறந்த ரேடியோ

எஃப்.எம்.கோல்டு, ரெயின்போ (கர்னாடக சங்கீதம், அறிவியல், ஆரோக்கியக் குறிப்பு களையும் சினிமா பாட்டுகளுடன் சேர்த் துக் கொடுக்கும் பிடிவாதத்துக்குப் பாராட்டாக, மற்ற அரை டஜன் எஃப்.எம். சேனல்கள் எதுவும் ஒன்றோடொன்று வேறு படாமல், சளைக் காமல்… ‘இச்சுத்தா… இச்சுத்தா’, ‘கல்யாணம்தான் கட்டிக் கிட்டு…’ பாடல்களைத் தந்துகொண்டு இருந் தாலும் ரேடியோ மிர்ச்சி கேட்க முடி கிறது).

அரசியல்

சிறந்த புதுவரவு: விஜயகாந்த்.

சிறந்த பேச்சாளர்: வைகோ.

சிறந்த தேர்தல் தந்திரம்: கலைஞரின் கலர் டி.வி, கையளவு நிலம்.

சிறந்த தீர்மானமின்மை: சரத்குமார் (இப்போது எ.மு.க?).

சிறந்த புள்ளி விவரங்கள்:

ஜெயலலிதா.

சிறந்த செயற்கைப் பேட்டிகள்: ரபி பெர்னார்ட் (ஜெயா).

சிறந்த ‘தமிழ் நாட்டு’ அமைச்சர்: தயாநிதி மாறன்.

சிறந்த மத்திய அமைச்சர்கள்: லாலு பிரசாத், ப.சிதம்பரம்.

சிறந்த மாநிலம்: உத்ராஞ்சல்.

சிறந்த ‘புலிவருது’: பிரகாஷ்காரத் (சி.பி.எம்.)

விளம்பரம்

சிறந்த நேரடி விளம்பரம்: சரவணா செல்வரத்தினம் தங்க நகை & ‘சட்டுபுட்டுனு பழசை மாத்துங்க.’ மற்றும், ஆரெம்.கேவி புடவை.

சிறந்த மறைமுக விளம்பரம்: ‘வெடா’ ஆங்கில வகுப்பு (ஆங்கிலப் பாட்டு பாடிக் கொண்டே வீடு பெருக்கும் வேலைக்காரி).

சிறந்த விளம்பர நகைச்சுவை: எம்.டி.ஆர். குலாப்ஜாமூன் (எத்தனை பேர் ஓடினாங்க? ரெண்டு).

மிகைத் திலகம் அவார்டு: ப்ளூ ஸ்டார் (ஒரே அறையில் எஸ்கிமோ, ஒட்டகம்).

தின்பண்டம்

சிறந்த பலகாரம்: முருகன் இட்லி.

சிறந்த இனிப்பு: முந்திரிப் பருப்பு கேக், ஸ்ரீ மிட்டாய்.

டயாபடீஸ்காரர்களுக்குச் சிறந்த இனிப்பு: டிஸைர் , சுந்தர் கெமிக் கல்ஸ்.

காரமில்லாத சாப்பாடு: மாரீஸ் ஓட்டல்.

காபி: சரவணபவன்.

பிற..

தமிழர்கள் இந்த ஆண்டில் மிக அதிகம் பயன்படுத்திய சொல்: சூப்பர்!

சிறந்த ‘மேக் ஓவர்’: ரஜினிகாந்த் ‘சிவாஜி.’

சிறந்த நகைச் சுவையாளர்: தமிழக மாநிலத் தேர்தல் அதி காரி சந்திரசேகர்.

சிறந்த சாதனம்: ஆப்பிள் ஐபாட்.

சிறந்த டெக்னாலஜி: தமிழ் எஸ்.எம்.எஸ். ஏர்செல் & முத்து நெடுமாறன்.

மிக அதிகம் அனுப்பப்பட்ட எஸ்.எம்.எஸ்: engagement ring; wedding ring; suffering!

—————–

PS: அடிக்கப்போறது ஜல்லின்னு ஆய்டுச்சு, அப்புறம் காப்பி பேஸ்ட் என்ன சொந்த சரக்கென்ன… இந்த வருஷ சுஜாதா அவார்டுகளின் பட்டியல்