கம்பனுக்கு ஒரு கேள்வி

டிசேவின் பதிவில் இருந்து ஆரம்பமானது தான் இந்தத் தேடல். முன்பு ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்னர் எழுதிய வரிகளை இன் டர்நெட்டில் தேடப்போக ஆச்சர்யமாக இருந்தது நான் வழமையாக எழுதிய பல போரம்களை காணவேயில்லை. இருந்த போரங்களும் முழுமையாக மாற்றப்பட்டு ஆச்சர்யமாகயிருந்தது.

நான் அந்தப் பின்னூட்டத்தில் சொன்னது போல் இந்தக் கவிதையை, வைரமுத்துவின் கவிதைத்தொகுப்பு புத்தகம் வாங்கிய மறுநாள் மனனம் செய்தது. இன்னமும் நினைவில் உள்ளது சில மாற்றப்பட்ட வரிகளுடன். (என்னை நேரில் பார்க்கும் வாய்ப்புள்ள பதிவர்கள் வேண்டுமானால் கேட்டுப்பாருங்கள். மூடிருந்தால் சொல்கிறேன் அன்று.)

மற்றபடிக்கு இன்றைக்கு கடேசி பதிவு இதுதான் என்று வாக்களிக்கிறேன். இதுவரை ஒருவழியாக நாளொன்றைக்கு ஒரு பதிவு போடாவிட்டாலும் கொஞ்சம் மீள்பதிவு கொஞ்சம் சுயபதிவு என்று ப்ளாக் உலகத்தில் மீண்டும் எழுதத்தொடங்கியிருக்கிறேன். பார்க்கலாம் எவ்வளவு நாட்கள் நீடிக்கிறது என்று. இனி கவிதை.

ராப்பகலாய் பாட்டெழுதி
ராசகவி ஆனவனே
தமிழென்னும் கடலுக்குள்
தரைவரைக்கும் போனவனே

சூத்திரம்போல பாட்டெழுதும்
சுகக்கவியே நான் உனக்கு
மனுஷப்பூ மாலையிட்டா
மரியாதை ஆகாது

இந்திர லோகத்து
இளசுளை தேவரெல்லாம்
மோகக் கிறுக்கெடுத்து
முந்நூறு முத்தமிட
முத்தமிடுங் கூத்துகளை
மூத்தநிலா பார்த்துவிட

இட்ட முத்தத்து
எச்சில் கரையழிக்க
வட்டில் அமுதெடுத்து
வாய்கழுவ வாய்கழுவ

வாய்கழுவும் அமுதமெல்லாம்
வாய்கால் வழியோடி
கற்பக மரங்களுக்கு
கால்கழுவக் கால் கழுவ

கால்கழுவும் சுகவெறியில்
கற்பக மரமபூக்க
அந்த பூவையெல்லாம்
அரும்போடு கிள்ளிவந்து
வானவில்லில் நார்கிழித்து
வகையாக மாலைகட்டி
சொல்லரசே நான் உனக்குச்
சூட்டிவிட வேணுமல்லோ

நான் உனக்கு
மனுஷப்பூ மாலையிட்டா
மரியாதை ஆகாது

சொல்லுக்குள் வாக்கியத்தை
சுருக்கிவச்ச கவிப்புலவா

உன்னை இதுவரைக்கும்
ஒருகேள்வி கேட்கலையா

தினம்வடிச்ச கண்ணீரால்
தீவுக்குள் கடல்வளர்த்து

அசோகவனத்திருந்து சீதை
அழுதாளே அவளை நீ
கண்ணால் பார்க்கலையே
கவிமட்டும் சொன்னாயே
அம்பிகா பதியிழந்து
அமரா வதியுனது
காதுக்குள் அழுதாளே

ஊமை வெயிலுக்கே
உருகிவிட்ட வெண்ணெய் நீ
அக்கினி மழையிலே
அடடாவோ உருகலையே

கடவுள் காதலைநீ
கதைகதையாய் பாடினையே
மனுஷக் காதலைநீ
மரியாதை செய்யலையே

இந்தக்கேள்வியை, ஓ
எங்குபோய் நான்கேட்க
பாடிவச்ச கவிஇல்லே
படிச்சவுக சொல்லுங்க.

– எழுதினது வைரமுத்து, வைரமுத்து இன்னுமொறு முறை வைரமுத்து.(வேணும்னா இப்படியும் எழுதினது நானில்லை…)

6 thoughts on “கம்பனுக்கு ஒரு கேள்வி

 1. கம்பராமயணத்திலிருக்கும் சொல்/பொருள் சுவைகாய் அதைப்பிடிக்குமே தவிர, அதற்கப்பால் பெரிதாய் ஈர்ப்பில்லை. சிறுவயதில் பாடப்புத்தகங்களிலும், ராஜாஜியின் (சக்கரவர்த்தி திருமகன்?) இராமாயணத்தையும் வாசித்தன்பின் அந்தப்பக்கம் எட்டிப்பார்க்கவுமில்லை. சிலப்பதிகாரம் போன்ற சமண மற்றும் பவுத்த இலக்கியங்கள் சாதாரண மனிதர்களை பாட்டுடைப்பொருளாக்கியது போலவன்றி, சைவ/இந்துமதங்கள் ஆரம்பத்தில் தயங்கித்தான் நின்றிருக்கின்றன (கடவுளர்களும்,அரசர்களும் மட்டுமே முதன்மைப்படுதப்பட்டிருக்கின்றன) என்று எங்கையோ வாசித்திருக்கின்றேன்.
  ……
  கமபரை தமிழின் முதல் மொழிபெயர்ப்பாளர் என்று அழைக்கலாமோ?

 2. முதற்பின்னூட்டத்தில் சொல்ல மறந்தது, வைரமுத்துவின் பதிவுக்குத்தான் இணைப்பு கொடுத்திருந்தீர்கள் என்றால் அது இதுவாய் இருக்கவேண்டும் (உங்களினது வேறெங்கோ போகின்றது என்று நினைக்கின்றேன்).
  http://djthamilan.blogspot.com/2007/01/blog-post_116844761137538733.html

 3. டிசே மாத்திட்டேன், அது நேரா நான் போட்ட அந்தப் பின்னூட்டத்தோட perma link. ஆனா நான் நினைச்ச மாதிரி ஒர்க் ஆகலை. சுட்டிக்காட்டி சரியான உரல் தந்து உதவியதற்கு நன்றி.

  கம்பராமாயணத்தை மொழி பெயர்ப்பு என்று சொல்ல முடியாது என்று நான் நினைக்கிறேன்.(தவறாகவும் இருக்கலாம்)

  ஒரே ஒரு சிறு உதாரணம்(ரொம்ப நாளைக்கு முன்னால் படித்தது.)

  வால்மீகி ராமாயணத்தில் ராவணன் சீதையை கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனதாக வருமென்றும். கம்பன் தான் தமிழனென்ற முறையிலும், இராவணன் ஒரு சிவனடியார் அப்படி செய்திருக்க வாய்ப்பேயில்லை என்ற முறையிலும், அவள் இருந்த ஓலைக்குடிசையையே பெயர்த்துக்கொண்டு போனதாக எழுதியிருப்பார் என்றும் படித்த ஞாபகம்.

  இதைப் போல நிறைய மாற்றங்கள் இருக்கும் என்றும் நினைக்கிறேன். எக்ஸாக்ட் மொழிபெயர்ப்பென்று சொல்லமுடியாவிட்டாலும். மொழிபெயர்ப்புதான், மொழிபெயர்ப்புதான் ஐயா(இது தருமி பாணியில்).

  கம்பரை தமிழின் முதல் மொழி பெயர்ப்பாளர்னு அழைக்கலாமா என எனக்குச் சரியாய் தெரியவில்லை டிசே, வேண்டுமானால் இரா.முருகனைக் கேட்கலாம்.

  ஆனால் ஒரு விஷயம் அந்தக் காலத்தில் சம்ஸ்கிருதத்தை சரியாகப் புரிந்துகொள்ளும் அறிவும், தமிழில் கரைவரையும் தொட்ட கம்பனை நினைத்தால் எனக்கு இன்னமும் ஆச்சர்யம் தான்.

 4. இந்தக் கவிதை எனக்கும் மனப்பாடம் தான்.
  (வைரமுத்துவின் ‘திருத்தி எழுதிய தீர்ப்புகள்’இல் இருக்கிறது?)

 5. கம்பன், மகன் இறப்பிற்குப் பிறகு அதிகம் வெளியில் வரவுமில்லை எதுவும் பாடவுமில்லை என்று அறிகிறேன். அம்பிகாபதி மட்டும் நீண்ட நாள் வாழ்ந்திருந்தால் ……ம்

 6. ஜெயபால், இப்னுஹம்துன், யோகன் நன்றிகள்.

  ஆரம்பக்காலத்தில் எனக்கு பேச்சுப்போட்டிக்கென்று ஆசிரியர்கள் எழுதித் தந்த காலங்களில் அறிவுரைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. கம்பனை முழுவதுமாகப் படியென்று.

  ஆனால் என்னவோ நான் படிக்கவில்லை. நேரம் கிடைத்தால் படிக்கவேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s