உண்மையின் பயங்கரம்(ரமேஷ் – பிரேம்)

மனிதர்கள் அடிப்படையில் வன்முறையானவர்கள் என்று கூறுவது, சற்று வன்முறையாகத் தோன்றலாம். ஆனால் என்ன செய்வது நாம் அப்படித்தான் என்பதைச் சொல்லித்தான் ஆக வேண்டியிருக்கிறது. வன்முறைகள் சமூக அமைப்பின் அடிப்படை. வன்முறைதான் மனிதரை ‘மனிதராக’ வைத்திருக்கிறது. மனிதர்களைப் பற்றி எத்தனைப் புனைவுகளை உருவாக்கிக் கொண்டாலும் அடிப்படையில் விலங்குகள் என்பதை மறந்துவிடவோ, மறுத்துவிடவோ எந்தச் சான்றும் இதுவரை கிட்டவில்லை. நாம் விலங்குகள் போல் வன்முறையை உடையவர்கள். எந்த நிமிடமும் வன்முறையைச் செலுத்த நாம் ஆயத்தமாக இருக்கிறோம். விலங்குகளின் வன்முறை அக்கணத்தின் காரணங்களைக் கொண்டது; உணவுக்காக, தற்பாதுகாப்புக்காக, இடத்திற்காக, இனத்துக்காக, புணர்ச்சிக்காக என ஏதோ ஒரு தருணத்தில் அவை வன்முறையில் ஈடுபடுகின்றன. ஆனால், அவற்றின் வன்முறை இயற்கை விதியின் ஒரு பகுதியாக இருப்பது போல் வரலாற்றுத் தொடர்ச்சி கொண்டதல்ல. மனிதர்களின் வன்முறையோ வரலாற்றுத் தொடர்ச்சி கொண்ட ஒரு உயிரியல் நிகழ்வு. மனிதர்கள் அடிப்படையில் ஊன் உண்ணிகள், அத்துடன் தமது உணவுக்காக, தேவைக்காக எந்த விலங்கையும் தாவரத்தையும் அழிக்கத் தயங்காதவர்கள். விலங்குகளில் சிலவற்றைத் தவிர, பிற தமது இனத்தின் ஊனை உண்பது இல்லை. மனிதர்கள் தமது இனத்தின் ஊனையும் உண்ணப் பழகியவர்கள். அதே சமயம், தமது இனத்துக்காகத் தமது உயிரையும் இழக்கவும் பழகியவர்கள்.

காதல், போர் என்ற இருமைகளின் மீது கட்டப்பட்டது அடிப்படை மனித சமூகம். வீரமும், காதலும் என்ற இரு அடிப்படை உணர்வுகள் மனிதச் செயல்பாட்டின் எல்லா கூறுகளிலும் ஊடாடி இருப்பவை. வீரம் என்பது தற்காத்தல், தன் உயிரை, உடலை அழிவிலிருந்து காத்தல், தன் இனத்தைக் காத்தல் என்பவற்றுடன் தொடர்புடைய வன்முறைச் செயல் உத்தி. இது தற்போது உள்ள உடலைக் காத்தலின் தொழில் முறை, போர் அவ்வகையில் புராதனப் புனிதச் செயலாகிறது. காதல் என்பதோ இனத்தொடர்ச்சி என்பதை நோக்கியது, தன் இனப்பெருக்கம் என்பதை அடிப்படையாகக் கொண்டது. இந்த இரண்டைச் சுற்றியும் எத்தனை காவிய கற்பனைகள் புனையப்பட்டாலும், இந்த இரண்டின் உள்ளீட்டு உந்தம் ‘மரணம்’ என்ற‘ அழிவற்ற உண்மை’. தன் உடல் அழியாமை, தன் இனம் அழியாமை என்பதே இதன் நேரடி இயல்புருவம். இயற்கையின் விதி இது, இது இயற்கையின் சட்டமும் நியதியும் ஆகிறது. ஒரு உடல் உருவாகி, வளர்ந்து, தன்னைப் போல் இன்னொரு_இன்னும் சில உடல்களை உருவாக்கிவிட்டுத் தளர்ந்து மடிவது என்பது இயற்கை நியதி. எத்தனை முயன்று தேடினும் இதற்கு மேல் இயற்கை நமக்கு எந்த உரிமையையும், உன்னதத்தையும் வழங்கி விடுவதில்லை. மற்ற பிற எல்லாம் ‘மொழி’ என்பதைப் போல் எதேச்சையாக, ஏதோ வகையில், விபத்தைப் போல், விபரீதமாக மனிதருக்கு நேர்ந்தவைதாம். ‘மொழி’ என்ற புரியாத ஒரு மர்மம், புதிர், இயற்கை வினோதம் மட்டும் நிகழாமல் இருந்திருந்தால், இயற்கை மீறிய இந்த மனிதத் தன்மை என்பது எப்படி இருந்திருக்கும் என யூகிப்பது கடினம். எல்லையற்ற பயங்கரமாக விரிந்து கிடக்கும் இயற்கையின் விதிகளுக்குள் இருண்மையாய் இருந்து மனிதரை மிரட்டும் மரணத்தையும் நாம் இப்படித்தான் மொழி மூலம் எதிர்கொள்கிறோம்.

வாழ்வு, மரணம் என்ற இரு நிலைப்புள்ளிகளுக்கிடையே நமது மாபெரும் தனிமை எங்கெங்கோ நம்மை அலைக்கழிக்கிறது. இன்பம், துன்பம் என்ற இரு இருமைகளால் சுழலியக்கம் பெரும் மனிதப் புலன்களின் அடிப்படையில் இந்த இறப்புணர்வும், வாழ்வுணர்வும் நடத்தும் நாடகங்கள் பற்றி எல்லா தத்துவங்களும் ஏதேதோ பேசிச் செல்கின்றன. இன்ப விழைவு, துன்ப மறுப்பு என்பதில்தான் மனித சமூகப் பண்பும் கூட வடிவம் பெறுகிறது. ஆம், மனிதர்கள் இவ்வகையில்தான் என்றும் வன்முறையானவர்களாக இருந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்கள் எந்த அளவுக்கு சமூக வயமானவர்களோ, அதே அளவுக்கு சமூக வெறுப்பும், சமூக மறுப்பும் கொண்டவர்கள். நாம் எப்போதும் இந்த வெறுப்பின் உள் சுழல்களை அடக்கியபடியே இன்னொன்றாக இருக்கப் பழகிக் கொண்டிருக்கிறோம். வாழ்வை ஓயாமல் இயக்கும் இந்த இறப்பைத்தான் இந்திய மனம் தர்மம் என்கிறது. தர்மம் என்பது நியதி, விதி, சட்டம். அதனால் தான் தர்மத்தின் தேவனே மரணத்தின் தேவனாக இருக்கிறான். எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் தர்மத்தின் தேவன், மரணத்தையே தனது உத்தியாகக் கொண்டிருப்பதான உருவகம் உண்மையில் மிக வலிமையானது. இதனால்தான் இந்திய மரபில் பிறவி என்பது பெருந்துன்பமாக, பெரும் நோயாக அச்சுறுத்துவதும் ‘பிறவாமை’ என்பது பேரின்பமாகக் கவர்ந்திழுப்பதும் தொடர்ந்து நிகழ்ந்தபடி இருக்கிறது. நோக்கமற்ற ஒரு எதேச்சை நிகழ்வாக ‘ஊழாக’ விளைந்து விட்டது இந்தப் பிறவி என்ற உணர்வு, எவ்வளவு பெரிய அதிர்ச்சிக்குரியது. இதற்கு சமூக சமயத்தீர்வு பிரம்மம் என்ற புனைவாக இருக்கலாம். அல்லது சூன்யம் என்ற மிரட்டும் பிரக்ஞையாக இருக்கலாம். இந்த இடத்தில் மனிதருக்கு முன் இரண்டு சாத்தியங்கள் உள்ளன. கட்டற்ற செயல், ஒடுங்கி நிற்கும் செயலின்மை. துறவும், சரணும் இந்த வெறுமைக்கு மாற்று மயக்க மருந்துகள். ஆனால், எல்லாம் கலைந்து போகும் மயக்க நிலைகள் தான். மனிதர்கள் தம் மீது கவிழ்க்கப்பட்ட இந்த வன்முறையிலிருந்து விடுபட வன்முறையைத்தான் கைக்கொள்வார்கள். அப்படியெனின் அறம், அன்பு, அகத்தனிவு என்பவை முற்றிலும் பொய்யானவைகளா எனில், நிச்சயமாக நம்மால் எதுவும் கூற முடியாது. ஆனால், அவையும் மனிதச் செயல்பாட்டின் சில கூறுகளாக அமைந்து விடுகின்றவைதாம்.

அன்பு என்பது முதலில் மனிதர்களின் சுய அன்பில்தான் தொடங்குகிறது. தன்னைத்தான் நேசித்தல், தன்னைத்தான் மோகித்தல் என்பதில்தான் எல்லா நேசங்களின் அடிப்படையும். தான்_பிறர் என்பதில் தற்காதல் தான் முதலில் நிற்கிறது. உயர் பண்புகளின் தொடக்கமாகக் கூறப்படும் தன் மதிப்பு சுய மரியாதையில்கூட முதலில் தன் மீதான மதிப்பு தான் தொடக்கம்.

தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்

_ தொன்றும்

துன்னற்க தீவினைப் பால் (குறள்_209)

‘‘உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனதோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து’’ இதுவே தலை சிறந்த முதன்மையான கட்டளை.

‘‘உன் மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக’’ என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை.

(மத்தேயு 22:34_40 மாற்கு 12:28.34 லூக்கா 10:25_28) இந்தத் தற்காதல் தன் நேசம் என்பதில் முன் நிற்கும் ‘தான்’ என்பது எப்போதும் தனித்து இருக்க விரும்பாதது. தான் என்பதை அறிய, உணர, உணர்த்த, அறிவிக்க அதற்குப் ‘பிற’ தேவைப்படுகிறது. எந்த ஒரு மனிதரும் இந்த உலகில் தனித்து இருக்க இயலுவதோ, எண்ணுவதோ, ஏன் யூகிப்பதோ இல்லை என்பது இதனால் தான். ஒரு வகையில் தான் என்பதே பிற என்பதால் தான் அறியப்படுகிறது என்பதும்கூட உண்மையே. கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறிய ஒவ்வொரு மனித உடலிலும் புலன்கள் இருந்தாலும் காண ஒளியும், கேட்க ஒலியும், உண்ண உணவும், நுகர மணமும் உற்றறிய மற்ற பொருளும் இல்லாத போது புலன்கள் என்பவை எந்த அர்த்தமும், வடிவமும் பெறுவதில்லை. இன்னொரு வகையில் நமது ஒவ்வொரு ‘நாள்’ மற்றும் ‘தான்’ என்பது பல்வேறு பிறவற்றின் இணைப்பால் இழைவால் நேரும் ஒரு விளைவும் கூட. இந்த ‘தான்’ பிற என்பதில் நேர்ந்து விடும் இந்தச் சிக்கல், பெரும் ஆக்கங்களை நோக்கியோ, பெரும் அழிவை நோக்கியோ நம்மை நகர்த்தலாம். அத்துடன் எல்லாத் தருணங்களிலும் ‘தன் மீது தான் காதலாகி’ நிற்பதும் கூட சாத்தியமற்ற ஒன்றே. பிற என்பது இதன் நீட்சியாக வெறுப்பும் விருப்புமாக உருச் சுழன்றபடியே இருப்பதும் தவிர்க்க முடியாதது. ஒரே சமயத்தில் ‘தான் ஒரு மையம்’, ‘பிற ஒரு மையம்’ என்ற இரு துருவச் சுழற்சியால் மனிதச் செயலாற்றல் பெருகவோ, சுருங்கவோ செய்கிறது.

நாம் நம்மை வெளியிலிருந்தே கற்கிறோம்; குழந்தையாக இருக்கும்போது, நமக்கு எந்த ஒழுங்கும் தெரியாது. நாம் அனைத்தையும் கலைத்துப் போடுகிறோம். மடிக்கப்பட்ட துணி, அடுக்கப்பட்ட பாத்திரம், வட்டமான தட்டில் இடப்பட்ட சோறு எதையும் நாம் கலைத்தும், கலந்தும் போடவே முயல்கிறோம். நேர்க்கோடு, வட்டம், சதுரம், முக்கோணம் என்ற ஒழுங்கு நமக்குத் தெரியாது. கலைப்பது என்பது நமது இயற்கை வினை. பிறகு மெல்ல மெல்ல ‘ஒழுங்கை’ விதிகளைக் கற்கிறோம். இந்த ஒழுங்கு கற்றல்தான், நமது வாழ்தலைக் கற்றலாகிறது. உண்ணக் கூடியது, உண்ணக் கூடாதது, தொடக் கூடியது, தொடக் கூடாதது, செய்யக் கூடியது, செய்யக் கூடாதது; என நம் வாழ்தலின் விதிகளைக் கற்கிறோம். இந்த விதிகள் மீறப்படும் பொழுது, நாம் உயிரை இழக்க வேண்டி வரும். எப்பொழுதும் மரணம் நம்மை இழுத்துக் கொள்ளக் காத்திருக்கிறது. நம் உடல் காயப்படலாம். ஊனப்படலாம். விதிகள் மீறப்படும்போது, நாம் மெல்ல சமூக உயிரியாக மாறிய பிறகும், நமக்குள் இந்த ஒழுங்கு கலைக்கும் உந்துதல் கடைசிவரை இருந்து கொண்டே இருக்கிறது. இருக்கத்தான் செய்யும். இப்பொழுது மெல்ல புரிபடத் தொடங்குகிறது. ஏன் மனிதர்கள் ஒரே சமயத்தில் சமூக உயிரிகளாகவும் சமூக வெறுப்பு கொண்டவர்களாகவும் உள்ளே முட்டிமோதிக் கொண்டிருக்கிறார்கள் என்பது. இங்கே சமூக விதி என்பது இன்னொரு வடிவில் மனிதர்களின் இறப்புணர்வுடன் தொடர்ந்து பேரம் பேசிக் கொண்டே இருக்கிறது. எல்லா சமூகத்திலும் தனி மனிதர்களுக்கு தண்டனை என்பது வரையப்பட்ட ஒன்று. அதன் உச்சபட்சம் மரணம். மரண பயத்தில் தொடங்கி தன் மோகத்தில் தொடர்ந்து மீண்டும் மரண சாசனத்தில்தான் எல்லா ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்படுகின்றன. இயற்கை விதித்த அதே கொடு விதியைச் சமூகமும் _ அரசியலும் _ பண்பாடும் தமது கூட்டு மன இயக்கத்தின் உத்தியாக மாற்றிக் கொண்டுவிட்ட பின்; வன்முறை என்பது நிகழ்ந்தாலும் நிகழாவிட்டாலும் எப்போதும் எங்கும் இருந்துகொண்டே இருக்கிறது என்பது மிகைப் பட்ட கூற்றல்ல; ஆனால் ‘ஒழுங்கு’ என்பதன் மூலம் நாம் அதனைத் தவிர்க்க, தணிக்க, உருமாற்ற முடிகிறது. அரசு, சட்டம், ஆட்சி என அனைத்து நிறுவனங்களும் இந்த உயிர்_உடல் நீக்கும் அதிகாரம் கொண்டவையே; தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு மனிதரும் இதே அதிகாரத்தைக் கற்றுச் சிறிய அளவில் செயல்படுத்தியபடியே இருக்கிறோம். ஆனாலும் தனி மனித ஒழுங்கும், சமூக ஒழுங்கும், அரசியல் ஒழுங்கும் ஒத்திசைகிறபோது அமைதியும் இணக்கமும் இயல்பும் தோற்றம் தருகின்றன. வேறு வகையில், ஒரு ஒழுங்கு இன்னொரு ஒழுங்கின் மீது திணிக்கப்படும் பொழுது, இன்னொன்றுடன் மோதுகின்றபொழுது, பார்வைக்குத் தென்படும் பருண்மையான வன்முறையும், பயங்கரமும் பரபரப்பைப் பெருக்கி விடுகின்றன. இரண்டோ இரண்டுக்கு மேற்பட்ட ஒழுங்குகளோ மோதிக் கொள்ளும் தளங்கள் பற்றியதுதான் நமது கவலை. ஒழுங்குகளின் மோதல்கள் இலங்கையில் செஞ்சோலையில் நூற்றுக்கு மேற்பட்ட பச்சைக் குழந்தைகளைப் பலி கொள்ளலாம். லெபனானில் ஆயிரக்கணக்கானோரை சாகடிக்கலாம். இராக்கில் பத்து லட்சம் பேருக்கு மேலான மக்களை கணக்கிலிருந்தே நீக்கி விடலாம். ஆப்கானிஸ்தானை வெறும் கற்குவியலின் பூமியாக மாற்றிவிடலாம், என்னவும் செய்யப்படலாம்; எல்லாம் ஒழுங்குகளின் விதிகளின் மோதல்கள்தான். வன்முறை தற்போது வேறு வடிவில் நம்முன் மகா கொடூரமாக நிற்கிறது அல்லவா. எங்கும் பேசப்படுவதாக, எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்குவதாக, எப்போதும் வெடித்துக் கிளம்புவதாக அது விரிகிறது அல்லவா. இதைப்பற்றிய வேறு வகையான பேச்சுத்தான் பயங்கரவாதம் பற்றியது.

பயங்கரவாதம் என்றவுடன் நமக்கு நினைவூட்டப்படுவது சில கட்டடங்களின் தகர்ப்பு, சில ரயில் வெடிப்பு, சில தலைவர்கள் கொலை செய்யப்படுவது என்பவை போன்றன. உண்மையில் நம்மை நடுங்கச் செய்யும் நிகழ்வுகள்தாம் இவைகள், ஆனால், பயங்கரவாதத்திற்கு எதிரான போர் (கீணீக்ஷீ ஷீஸீ tமீக்ஷீக்ஷீமீக்ஷீவீsனீ) என்பது அதைவிட நடுக்கத்தை ஏற்படுத்தக் கூடியதல்லவா. 2001 ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதிக்கு முன், உலகில் எங்கும் பயங்கரங்கள், வன்முறைகள் நடக்காதது போலவும், அன்றுதான் மனித குலத்துக்கே நாசம் வந்து சேர்ந்ததாகவும் தொடங்கப்பட்ட பேச்சுக்கள், கட்டமைக்கப்பட்ட கருத்துக்கள், எத்தனை வன்கொடுமையானது. அதனை ஒரு சாக்காக வைத்து ஆப்கானிஸ்தானும் ஈராக்கும் தரைமட்டமாக்கப்பட்டது, பேரன்பின் அடையாளம் போலப் பேசப்படுகின்றன. இராக்கில் சில மனித உரிமை அமைப்புகளின் கணக்குப்படி உயிரிழப்பு பன்னிரண்டு இலட்சங்களைத் தாண்டுகிறது. தினம் இரண்டு மூன்று கார் குண்டு வெடிப்புகள் ர்ராக் மண்ணில் நிகழ்த்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. சரி இதனால் ‘பயங்கர வாதம்’ என்று பெயரிடப்பட்ட ஒரு வன்முறை நியாயமானதாகி விடுமா. இல்லை; எல்லா வன்முறைகளும் கொடூரமானதே. ஆனால், மனிதர்கள் அதைப் பெருக்கிக் கொண்டே இருப்பதை நாம் எப்படிப் புரிந்து கொள்வது? நாம் எப்பொழுதும் வன்முறை செலுத்த, பிறர் மீது செலுத்தப்படும்போது பார்த்து ‘ரசிக்க’ தயாராக இருப்பதற்கு எல்லாவிதமான தயாரிப்புகளும் முறைப்படுத்தப்பட்டுள்ளன.

பயங்கரவாதம் என்பது போர் அல்ல, போர் செய்ய முடியாதவர்களால் போர் வலிமை உடையவர்கள் மீது செலுத்தப்படும் வன்முறை. அதில் ஒரு அரசு, ஒரு இனம், ஒரு மொழி, ஒரு மதம், ஒரு வர்க்கம், ஒரு தலைமை எது வேண்டுமானாலும் குறிவைக்கப்படலாம். எந்த வகையிலும் அத்துடன் தொடர்பற்ற மக்களும் பாதிக்கப்படலாம். அது திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்படும் ஒரு வன்கொடுமை. இதைச் செய்பவர்களின் நோக்கம் தீர்வு அல்ல, வெறும் எதிர்ப்பு_வெறுப்பு; இதற்குப் பின்னுள்ள பிரச்சினையை நோக்கி அனவைரையும் இழுத்துவிட அவர்கள் செய்யும் முயற்சி. இது ஒரு ‘நவீனத்தொழில் நுட்பம்’. நவீன அழிவுக் கருவிகளால், உத்திகளால் நிகழ்த்தப்படுவது. சில ஆய்வாளர்கள் இது வெகுசன ஊடகங்களின் காலகட்டத்தில், ஊடகங்களில் இவற்றிற்கான சொல்லாடல் களத்தை ஏற்படுத்துவதற்காகவே செய்யப்படுபவை என்று கூறுகிறார்கள். ‘தனிநபர் பயங்கரவாதம்’ என்பதோ, இயக்கங்களின் திட்டமிடுதலில் நடப்பதோ, எதுவானாலும் அதில் ஈடுபடுபவர்களுக்கும் அவர்கள் யாருக்காக குரல் கொடுக்கிறார்களோ அவர்களுக்கும் இடையில் பெரிய இடைவெளி இருக்கவே செய்யும். மக்கள், இனங்கள், சமூகங்கள், தேசங்கள் என்பவை இதிலிருந்து தம்மைத் தூரப்படுத்திக் கொள்ளவே செய்கின்றன. ஆனாலும் இது எப்பொழுதும் நடந்துகொண்டே இருந்திருக்கிறது என்பதுதான் நமக்கு முன் உள்ள கேள்வி. ‘நவீன பயங்கரவாதம்’ என்பது வேண்டுமானால் இருபதாம் நூற்றாண்டின் உருவாக்கமாக இருக்கலாம். ஆனால் படுகொலை, வன்கொடுமை, திட்டமிட்ட தனித்தாக்குதல் என்பவை மனித இன வரலாற்றின் தொடக்கத்திலிருந்தே நடந்து கொண்டே இருப்பதுதானே. இங்குதான் சிக்கல் எழுகிறது. பயங்கரவாதத்தை எதிர்ப்பவர்களின் ‘அறம்’ வன்முறையை மனிதர் மீது மனிதர் செலுத்தும் வன்கொடுமையை எதிர்க்கிறதா; அல்லது அதிகாரபூர்வமான, நியாயப்படுத்தப்பட்ட வன்முறை நிறுவனங்களைத் தவிர (அரசுகள், இராணுவங்கள், பலவகைப்படைகள்) வேறு யாரும் வன்முறையில் ஈடுபடுவதை எதிர்க்கிறதா. இதற்குப் பதில் கூறப் போகும் முயற்சியில்தான் ‘மனிதர்கள் அடிப்படையில் வன்முறையானவர்கள்’ என்ற வாசகம் நம்மை எதிர்கொள்கிறது.

இருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த சில பயங்கரங்களை, பாதகங்களை, சற்றே நினைவுபடுத்திக்கொள்வது நமது உறக்கத்தை, தொந்தரவு செய்வது என்றாலும், தற்போது தேவை இருக்கிறது. தற்போது பேசப்படும் ‘மகாபாதக செப்டம்பர்’ 11 போல், 1973 ஆண்டு ஒரு செப்டம்பர் 11 இல் சிலியின் தலைநகரில் ஒரு படுகொலை வெறியாட்டம் நடத்தப்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சோசலிச அரசை, அமெரிக்கத் துணைப்படை அழிக்கப் புறப்பட்டு, ஒரே நாளில் 14,000 பேர் கொல்லப்பட்டனர். அதற்குப் பிறகும் தினம் கைதும் படுகொலையுமாக எத்தனை ஆண்டுகள்! ஆனால், உலகம் இப்போது போல் பெரும் சோகத்தில் மூழ்கிடவில்லை. (தொலைக்காட்சி இப்போது போல் அதைப்படம் பிடிக்காதது மட்டும் காரணம் அல்ல). ஆனால், 9/11 என்று புதிய ஒரு ரகசிய குறியீட்டு எண்ணை உருவாக்க, தற்போது அமெரிக்காவுக்கு ‘பயங்கரவாதம்’ பயன்படுகிறது. இனி உலகை ஆட்டிப்படைக்க இது ஒரு பயங்கர ஆயுதம்.

1945_செப்டம்பர் மாதம் வியட்நாமின் மக்கள் தலைவர் ஹோ சிமின் ஞிமீனீஷீநீக்ஷீணீtவீநீ ஸிமீஜீuதீறீவீநீ ஷீயீ க்ஷிவீமீtஸீணீனீ இன் சுதந்திரப்பிரகடனம் செய்கிறார். அதுவரை இந்தோசீனா என்ற பெயரில், பெரும் நிலப்பரப்பை அடிமை கொண்டிருந்த வன் கொடுமையாளர்களுக்கு அது ஏற்கக் கூடியதாக இல்லை. வியட்நாம் மண்ணை இரண்டாகப் பிரித்து, பெரும் நாசத்தை விளைவித்த போரைத் தொடங்கினர். பத்து ஆண்டுகள் பிரஞ்சுப் படையினரின் அட்டூழியம், 1955 முதல் அமெரிக்கப்படையினரின் அட்டூழியம். அப்பொழுதும் வியட்மின்களை பயங்கரவாதிகள் என்றே கூறினர், அமெரிக்க நிர்வாகிகள். 1975 வரை எத்தனை இலட்சம் மக்களின் உயிரிழப்பு, எத்தனை ஆயிரம் பேரின் ஊனம், எத்தனை பெரிய மனநோக்காடு. அதற்காக அமெரிக்கா செய்த செலவு எத்தனை மில்லியன் டாலர்கள். வியட்நாமை இரு பகுதிகளாக்கி பயங்கரவாதத் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டன. இன்றைய ஈராக்கில் ஷியா_சன்னி என்ற பிரிவினையைப் பயன்படுத்தி நிகழ்த்தப்படும் படுகொலை வெடிப்புகள் போல. இதைப்பற்றி ஜான் பிட்சரால் கென்னடி ‘‘கீமீ sலீணீறீறீ ஜீணீஹ் ணீஸீஹ் ஜீக்ஷீவீநீமீ, தீமீணீக்ஷீ ணீஸீஹ் தீuக்ஷீபீமீஸீ னீமீமீt ணீஸீஹ் லீணீக்ஷீபீsலீவீஜீ, suஜீஜீஷீக்ஷீt ணீஸீஹ் யீக்ஷீவீமீஸீபீ ஷீஜீஜீஷீsமீ ணீஸீஹ் யீஷீமீ tஷீ வீஸீsuக்ஷீமீ tலீமீ suக்ஷீஸ்வீஸ்ணீறீ ணீஸீபீ suநீநீமீss ஷீயீ லிவீதீமீக்ஷீtஹ்’’ என மிகச் சிறப்பாக எடுத்துரைத்திருக்கிறார். இப்போது உள்ள அமெரிக்க ஜனாதிபதியும் இதுபோல் உலக அமைதியைக் காக்க எதையும் எப்படியும் செய்யத் தயாராக இருக்கிறார்.

1948இல் இரண்டாம் படுகொலைப்போர் முடிந்து மூன்றாண்டுகளுக்குப்பின் பாதிக்கப்பட்ட யூத இன மக்களைக் காக்க அமெரிக்க_ ஐரோப்பிய நாட்டு மனிதாபிமானிகள் ஒன்றுகூடி ஒரு நாட்டை உருவாக்கினார்கள்: இஸ்ரேல், யூதர்கள் மீது நிகழ்த்தப்பட்ட நாஜி தாக்குதல் வரலாற்றின் பெருங்கொடுமையானதே. ஆனால், ஐரோப்பியர்கள் தமது நிலப்பகுதிக்குள் ஒரு நாட்டை, நிலத்தை ஒதுக்கி ஒரு குடியேற்ற தேசத்தை உருவாக்கித் தந்து தமது மேலான மனிதநேய மெல்லுணர்வுகளை நிரூபித்திருக்கலாம். புதிதாக ஒரு நாட்டை வேறு நாட்டுக்குள் இடம் ஒதுக்கி நட்டதன் மூலம் ஐம்பதாண்டு ரத்தக்களரியை உருவாக்கி விட்டனர். பாலஸ்தீனத்தின் தினசரிப் போராட்டம் இப்படியாகத் தொடங்கியது. அராபிய மண்ணில் தமக்கு ஒரு இராணுவத் தளத்தை ‘இஸ்ரேல்’ என்ற பெயரில் அமெரிக்கா உருவாக்கிக்கொண்ட படுபாதகச் செயலின் விளைவுதான், பின்னால் வந்த பல தனிநபர் தாக்குதல் இயக்கங்கள், யாசர் அராபத் போன்றவர்களையும் பல காலம் பயங்கரவாதி என்றே கூறி வந்தன மேற்கத்திய அரசுகள். பயங்கரவாதத்தின் இன்னொரு வடிவம் இந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவால் உருவாக்கப்பட்டதும், சோவியத்துக்கு எதிராக ஒசாமா பின்லாடன் என்ற தாக்குதல் தளபதியை அமெரிக்கா உருவாக்கி உலவவிட்டதும் இந்தப் பின்னணியில்தான்.

1994ஆம் ஆண்டு ஒரு ஏப்ரல் மாத நாளில் ருவாண்டாவில் தொடங்கிய வன்முறை, கடந்த நூற்றாண்டின் மிகக்கொடூரமான வன்முறைகளில் ஒன்று. இரண்டு ஆப்பிரிக்க கறுப்பின மக்களுக்கிடையிலான வன்மம். ‘ஹ§டு’ என்ற இனமக்கள் ‘டுட்சி’ என்ற இனமக்களில் 80,0000 பேரை மூன்று மாதத்திற்குள் மகாகொடூரமான முறையில் கொன்று குவித்தனர். பல ஹ§டு இன மக்களும் இதில் கொல்லப்பட்டனர். அதற்குப் பிறகும் பல ஆண்டுகள் அந்தப் படுகொலை அங்குமிங்குமாக நிகழ்ந்தபடியே இருந்தது. உயிரிழப்புகள் தொடர்ந்தபடியே இருந்தன. இதில் ஏகாதிபத்திய வெள்ளை ஆட்சியாளர்கள் என்ன செய்ய முடியும் என்று கேட்கலாம். இதைத் தொடங்கி வைத்தவர்களே ஐரோப்பிய ஆட்சியாளர்கள்தான். முதலில் ஜெர்மனியின் ஆதிக்கத்திலும் பிறகு பெல்ஜியத்தின் ஆதிக்கத்திலும் ருவாண்டா இருந்தபோதுதான் ஹ§டு_டுட்சி என்ற எதிர்ப்பு இன அடையாளம் வன்மைப்படுத்தப்பட்டது. தமது ஆதிக்கத்தை நிறுவ _ தொடர இந்த இன வெறுப்பு தூண்டி வளர்க்கப்பட்டது. பழங்குடிச் சமூக அரசுகளாக இருந்த இந்நாட்டின் மக்கள் குழுவினரை ஒன்றாக நெருக்கி நாட்டை உருவாக்கி, 10 பசுக்களுக்குக் கீழ் உள்ளவர்கள் ‘ஹ§டு’ என்றும், 10க்கு மேல் பசுகொண்ட மக்களை ‘டுட்சி’ என்றும் சட்டப்பதிவு செய்து, ‘டுட்சி’ மக்களுக்கு சில அரசு சலுகைகள் தருவதன் மூலம் பெரும் பான்மை ஹ§டு மக்களிடம் வன்மத்தைத் தூண்டி ஒரு நீடித்த இனமோதலை ஏற்படுத்தியது, பெல்ஜிய ஆதிக்கம். 1994_இல் நடந்த படுகொலைக்கு ஆயுத உதவி செய்தது பிரான்ஸ் என்ற பரந்த மனப்பான்மை கொண்ட நாடு. படை உதவியும் செய்ததாக தற்போது தெரியவருகிறது. இனமோதலை முன்பெல்லாம் சிறிய போர்களின் மூலம் தீர்த்துக்கொண்ட வரலாறு, தற்போது நவீன உத்திகளால் படுபயங்கரமாக மாற்றப்பட்டுவிட்டது.

நன்றி தீராதநதி

One thought on “உண்மையின் பயங்கரம்(ரமேஷ் – பிரேம்)

  1. மிக அற்புதமான பதிவு. நான் ரமேஷ்-பிரேம் புத்தகங்கள் படித்துள்ளேன். ஒரு விதமான தர்க்கரீதியான மாய உலகை அவர்களின் எழுத்துகள் அறிமுகபடுத்துகின்றன.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s