Apocalypto, 300, மொழி & ராஜராஜன்

சமீபத்தில் அபோகலிப்டாவும், 300 வும் பார்க்க நேர்ந்தது, முதலாவது முற்றிலும் தற்செயலான ஒன்று எப்படியென்றால், முந்தைய நாள் டிரைலர் பார்க்க பிடித்துப்போய் இந்தப் படம் பார்க்க உட்கார்ந்தேன். ஆனால் 300 பற்றிய விமர்சனங்கள், டிரைலர்கள் என பலவற்றைப் பார்த்துவிட்டு இந்தப் படம் ரிலீஸ் ஆகும் நாளுக்காக காத்திருந்தேன்.

என்னைப் பொறுத்தவரை முதலாவது படம் எனக்கு அதிகம் பிடித்திருந்தது, காரணம் எல்லாம் சொல்லமுடியாது.

Mayan civilization ல் நடக்கும் கதையாய் சொல்லப்படுகிறது. படம் நகர்வதே தெரியவில்லை, காட்டில் பன்றியொன்றை வேட்டையாடுவதில் தொடங்கும் படம், ஹீரோ Jaguar Paw (Rudy Youngblood), பக்கத்து கிராமத்து(சொல்லப்போனால்) மக்கள் ஊரைவிட்டு போவதைப் பார்ப்பதில் இருந்து சூடுபிடிக்கிறது. அவர்கள் ஏன் ஊரை விட்டு ஓடிப்போகிறார்கள் என்பதில் தான் இருக்கிறது கதை.

மேட்டர் என்னான்னா, இந்த மாயன் சாம்ராஜிய மன்னர், சூரிய கிரகணத்தின் மீதான தன்னுடைய தவறான புரிதல்களால் அவர்களுடைய சூரிய கடவுளான (sun god Kukulkan) திருப்தி செய்வதற்காக நரபலி கொடுக்கிறார். அப்படி நரபலி கொடுக்க வேண்டிய ஆட்களை பிடித்துச் செல்ல ஹீரோவின் ஊருக்கும் வருகிறார்கள். அந்த களேபரத்திலும் ஹீரோ தன் புள்ளைத்தாச்சி மனைவியையும் அவருடைய குழந்தையையும் காப்பாற்றி ஒரு கிணற்றில் விட்டுவிட்டு அவர்களிடம் சிறைபடுகிறார். பின்னர் எப்படி இந்த நரபலி ஆட்களிடம் இருந்து தப்பித்து தன் மனைவி குழந்தையைக் காப்பாற்றுகிறார் என்று மெல் கிப்ஸனின் டைரக்ஷனில் பார்க்கலாம்.

இரத்தத்தை உறையச் செய்யும் வன்முறைக்காட்சிகள் நிறைந்த படம். அதுவும் அந்த நரபலி கொடுக்கும் காட்சிகள், படம் R rated. மெல்கிப்ஸனின் முந்தைய படங்களில் அறிமுகம் உள்ளவர்களுக்கு கொஞ்சம் புரிந்துகொள்ள வாய்ப்பு இருக்கும். பாஷன் ஆப் கிறிஸ்ட், பிரேவ் ஹார்ட் பார்த்திருந்தால் புரியும். பாஷன் ஆப் கிறிஸ்டைப் போலவே ஒரு கோட்டுடன் ஆரம்பித்து படத்தின் கடைசியில் கிரடிட்ஸ்.

Opening quote: “A great civilization is not conquered from without until it has destroyed itself from within.” — W. Durant

இதுதான் கோட்.

அடுத்தது பார்த்தது 300, ஏற்கனவே சிறில் அலெக்ஸ் இந்தப் படத்திற்கான விமர்சனத்தை எழுதியிருந்தார். பிராங்க் மில்லரின் கிராபிஃக் நாவலை ஃசேக் ஸிண்டர் படமாக எடுத்திருக்கிறார். எனக்கென்னமோ படத்தை விடவும் டிரைலர் தான் ரொம்பவும் பிடித்திருந்தது. ஹிஹி. படத்தின் ஹீரோ ஜெராட் பட்லர், தான் படத்தின் ஹீரோவாகயிருந்ததால் பட்ட கஷ்டங்களை சொன்ன பேட்டி ஒன்றை யூடியூபில் பார்த்திருந்தேன். உரலைத் தொலைத்துவிட்டேன். அதில் அவருடைய மேட்டர்(;) புரியுதா) பெரிதாகத் தெரிவதற்காகப் பட்ட கஷ்டங்களை சொல்லியிருந்தார், சாக்ஸ் எல்லாம் வைப்பார்களாம் உள்ளே.

படம் பிரமாண்டமாகத்தான் இருந்தது. ஆனால் எனக்கு அபோகலிப்டோ பிடித்த அளவு இந்தப் படம் பிடிக்கவில்லை. ஆனாலும் பாக்ஸ் ஆபிஸில் வெளுத்து வாங்குகிறது.

மூன்றாவது பார்த்தது மொழி, தமிழ் படங்களில் வித்தியாசமான முயற்சி, வில்லன்கள் கிடையாது, வெட்டிச் சண்டை கிடையாது, அதிக லாஜிக் மீறல்கள் கிடையாது. ஜோதிகா பிரமாதப்படுத்தியிருக்கிறார் டவ் அண்ட் டம்மாக. ஆனால் பாபெல் படத்தில் அந்த ஜப்பானியப் பெண் செய்திருந்த கதாப்பாத்திரத்துடன் ஒப்பிட்டுக்கொண்டே தான் படம் பார்த்தேன். எனக்கென்னமோ அந்தப் பெண் இன்னும் இயல்பாகச் செய்திருப்பதாகத் தோன்றுகிறது. இதில் பாலிடிக்ஸ் எதுவும் கிடையாது.

கடைசியாக அபோகலிப்டோ பார்த்ததும், முன்பு ராயர் காப்பி கிளப்பில் படித்த இந்தக் கவிதையும் அதைத்தொடர்ந்த சில வரிகளும். எனக்கென்னமோ ராஜராஜர் ராஜேந்திரர் காலத்தில் நரபலியைத் தவிர்த்து அத்தனையும் நடந்திருக்கும் என்று படுகிறது.

ராஜராஜன்

ராஜராஜனின் சிலைக்காக வருந்துகிறார்
ராஜராஜனின் சிலையின் உள்ளே
நரம்புகள் உண்டா? நாளங்கள் உண்டா?
சிலையாகுமுன்னர் ஜீவித்திருந்த
இம்மன்னன்
எதைச் செய்து கிழித்துவிட்டானாம்?
ஈழம் கொண்டானாம்…
சாவகம் வென்றானாம்…
காலனி ஆதிக்கத் தொழுநோய்த் தேமலை
பூமியின் முகத்தில் எழுதிய புல்லனுக்கு
மக்களாட்சியா மகத்துவம் சேர்க்கும்
கலைகளை எல்லாம் கட்டி வளர்த்தானாம்
பிரகதீஸ்வரர் ஆலயத்துக்காக
குடும்பவிளக்கின் கொழுந்துகளை எல்லாம்
மண்ணில் தேய்த்த மா பாதகன் இவன்
தஞ்சை நகரில் தேவடியார் தெருக்களுக்குக்
கால்கோள் விழாச்செய்த காமுகன்
இம் மன்னன்.
மக்களாட்சியின் மகத்துவத்தைச்
சிலையான பின்னும் கற்பழிக்கிறான்

ராஜராஜ சோழன் பற்றிய இன்குலாப் கவிதையின் பகுதி மேற்கண்டது.

‘ராஜராஜ சோழனுக்கும் அவன் மகனுக்கும்(ராஜேந்திர சோழன்) வாழ்க்கையில் இரண்டு முக்கியமான வேலைகள் தான் உண்டென்று தெரியவருகிறது. அவர்கள் போர் செய்யாத போதெல்லாம் கோவில் கட்டினார்கள். கோவில் கட்டாத பொழுதெல்லாம் போர் செய்தார்கள். போரில் எதிரிகளை வென்று அவர்களிடமிருந்து காணிக்கையாகப் பெற்ற பொருளையெல்லாம் கோவில் கட்டுவதில் செலவழித்தார்கள்.’

இதை எழுதியவர் சாட்சாத் கல்கி தான்.

ஒரு சேஞ்சுக்காக இந்தப் பதிவில் படங்கள் எதுவும் போடவில்லை. இந்தப் பதிவிற்கான படங்கள் தனியாக இன்னொறு பதிவாகப் போடப்படும்.

11 thoughts on “Apocalypto, 300, மொழி & ராஜராஜன்

 1. 300 எல்லோருக்கும் பிடிக்க வாய்ப்பில்லை, நானும் அதை சூப்பரு டூப்பர் என்றெல்லாம் சொல்லமாட்டேன். காட்சிகளை அமைத்திருந்தது.. the very fact that the whole set was CG, இதுதான். Timeல ஒரு கட்டுரை வந்திருந்தது சில காட்சிகள் எப்படி எடுத்திருந்தார்கள் எனப் போட்டிருந்தாங்க.

  குறிப்பா அந்த ஆரக்கிளின் நடனம். அது தண்ணீர் தொட்டியில் ஆட விட்டு எடுத்த காட்சியாம். பாக்கும்போது நம்பமுடியல.

  ஒரு காமிக்ஸ் புத்தகத்திலிருந்து (கிட்டத்தட்ட அதே பார்வையில்) படத்தை தந்திருப்பதால் இதன் வரலாற்றுப் பார்வையை விமர்சனம் செய்வது தேவையல்ல என நினைக்கிறேன்.

  அப்போக்ளிப்டோ பாக்கணும்.
  DVD வந்துடுச்சா?

 2. நான் தியேட்டரில் பார்த்தேன் அண்ணாச்சி. டிவிடி வரலைன்னு தான் நினைக்கிறேன்(பெங்களூரில்).

  சில படங்களைப் பார்த்தேன் நானும், அதைப் பற்றி தனியாக ஒரு பதிவு போடும் எண்ணம்.

 3. ராஜராஜ சோழன் பற்றிய சில எழுத்துகளைப் பார்த்து நொந்தேன். ராஜராஜன் சாதித்தவை பற்றி தங்களின் ஆய்வு சரியில்லை அல்லது தாங்கள் அவனை பற்றி ஆராயவே இல்லை. அவனும் அவனைப் போன்ற தமிழ் மன்னர்களும் போரையும் கோயிலையுமாவது சாத்தித்து விட்டுப் போனார்கள். தமிழன் என்ற ஒரு இனம் வீரத்தோடும் கொஞ்சம் கட்டிடக் கலை போர்க்கலை நெடுங்கடலோடும் திறன் பெரும் கலங்கள் கட்டும் தொழில் நுட்பம். இன்னும் இன்றும் சைவமும் தமிழும் கொண்டாடும் தேவாரத்தை மீட்டேடுத்தமையும் தமிழன் அடையாளம் காட்டப்பட இன்னும் தமிழனுக்கு தேவைப்படுகின்றன. இது தமிழ் நாட்டுத் தமிழனுக்குத் தெரிகிறதோ இல்லையோ கடல் கடந்து மலேசியாவில் வாழும் எங்களைப் போன்ற தமிழினச் சொரணை உள்ளவர்கள் உணர்கிறோம். இங்கு கடாரமும் சாவகமும் இராஜராஜனு அவன் வழித்தோன்றலும் வென்ற சரித்திரமே இங்குள்ள இன்று ஆட்சிக் கட்டிலில் உள்ள இனங்களுக்கு எரிச்சலூட்டும் சரித்திரமாக உள்ளது. பள்ளி சரித்திர நூலில் கூட ராஜராஜன் மலாய் மன்னனிடம் மண்டியிட்டான் என்று எழுதலாமா என்று அலோசித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழன் ஈராயிரம் மையில் கடந்து யானைப் படயோடு கடல் மார்க்கமாய் வந்தான் தன் இனத்தை வென்றான் என்பதை இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். எங்கள் மண்ணின் மைந்தர்கள். நல்ல வேளை வெள்ளையானாவது பாரபச்சமில்லாம் எழுதி வைத்தான். அன்று போல் இன்று ஒரு ராஜராஜன் முளைத்து மீண்டும் தென்கிழக்காடியாவை வெல்ல மாட்டானா அங்கு நாளுக்கு நாள் எல்லா வழிகளிலும் நசுக்கப்படும் தமிழன் தலை நிமிர மாட்டானா என்று நாங்கள் ஏங்குகிறோம். இன்று தமிழ் நாட்டில் மட்டும் மக்களாட்ட்சி என்கிற முதலாளித்துவத்தின் ஆசை நாயகி இல்லாமல் அந்த ராஜராஜனே அரச கட்டிலில் இருந்திருந்தால் இன்று உங்கள் பக்கத்தில் சிங்களவன் எம் தமிழ் பெண்களின் சேலையை தொட்டிலுத்துக் கொண்டிருக்கமாட்டன். அவன் மாணமுள்ள தமிழன். சாதனையாளன். அவனது கால கட்டத்தில் மற்றவர் ஆற்ற முடியாததை அவன் ஆற்றிக் காட்டினான். கொன்றான் வேசியர்களுக்கு விழா எடுத்தான் என்பவர்கள் இன்றய உங்கள் மகத்தான மக்களாட்சியில் கொல்லாமலா இருக்கிறீர்கள் வேசித்தனத்தை வளர்க்காமலா இருக்கிறீர்கள். சொல்லப் போனால் மக்களாட்சி என்று கூறிக்கொண்டு அரசியல் நடத்தும் அரசியல்வாதிகள் வேசிகளை விட மோசமானவர்களாக அல்லவா இருக்கிறார்கள். ராஜராஜன் சாதித்தான் தமிழனுக்கு உலக அடையாளங்களைக் கொடுத்தான். இன்றய தமிழகத் தமிழன் உலக அரங்கில் தமிழை ஐநா வில் கூட கொண்டு சேர்க்க முடியவில்லையே.

  ராஜராஜனைவிட பல்லாயிரம் மடங்கு கொன்று குவித்து சீனப் பெருஞ்சுவரும் சீனாவின் எல்லா மொழிகளையும் அழித்து மென்ரின் என்ற ஒரே மொழியை சீனாவுக்குக் கொடுத்து சீனாவை ஒன்றுபடுத்திய ஷி வாங் தி யை என் சீன நண்பர் வானளாவாகப் புகழ்கிறார்.ஆனால் சீனாவிலும் கால் பதித்தான் சோழன் என்று ஆதாரம் காட்டினாலும் ஏற்றுக் கொள்ள தடுமாறுகிறார். ஆகா என்னே ராஜராஜன் சாதனைகள். தமிழ் நாட்டுத் தமிழனுக்கு தமிழனைத் தவிர வேறு எல்லாவற்றையும் பிடிக்கும் என்பதை நான் இப்போது ஒப்புக் கொள்கிறேன்.

 4. ராஜராஜன் நீங்கள் கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லிக்கொள்கிறேன்.

 5. நன்றி. நான் கற்றது மிக மிக கொஞ்சம் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். என் கண்களுக்கும் கைகளுக்கும் கிடைப்பன வற்றை தொடர்ந்து கற்று வருவேன். என் தேடுதல்களை மேலும் அகலமாக்கவும் ஆழமாக்கவும் கடுமையாக உழைப்பேன்.மீண்டும் நன்றி.

 6. MR. Rajarajan. really you are correct. I am also from tamil nadu. You have given important information about The GREAT RAJARAJAN. Those who are not accepting your point, Thay must be from some other background other then tamil and tamil culture and tamil background.
  Really I am very proud to be a tamilian (because of Cholas). But Now Watever is happining in tamilnadu is very wost thing. There is no manly leader, Truthfull leader for Tamilnadu.

  God only have to save Tamil. Because, I feel, Whatever happend to Tamil Eelam, will happen very soon for Tamil nadu ppl also. (very soon means within 2 generation)

 7. அக் கால சோழ மன்னர்களான ராஜராஜ சோழன், ராஜேந்திரச் சோழன் போன்றோர் தன் ஆளுமையையும், அதிகாரத்தையும் நிலைநாட்ட மட்டுமில்லாமல் பொருளாதார காரணங்களுக்காகவுமே சேர, பாண்டிய, இலங்கை, சுமத்ரா, பர்மா, கடாரம் (தற்போதைய மலேசியா), மாலத் தீவுகள் போன்ற நாடுகளின் மீது படை எடுத்தனர். தன் நாட்டு வணிகர்களுக்கும், பொருளாதாரத்திற்கும் ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாகவே பலப் போர்களை சோழ மன்னர்கள் தொடுத்தார்கள். ஸ்ரீவிஜய நாட்டின் மீது போர் தொடுத்த ராஜேந்திரச் சோழன் தன் வணிகர்களுக்கு இடையுறு செய்த மன்னர்களுக்குப் பாடம் புகட்டியப் பிறகு, அவர்களிடமே ஆட்சியை ஓப்படைத்து விட்டான். தன் வணிகர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுத்தான்.

  சுமத்ரா தீவுகள், கடாரம், பர்மா போன்ற பகுதிகள் ஸ்ரீவிஜய நாடு என்று அழைக்கப்பட்டது. ராஜராஜ சோழன் காலத்தில், அந் நாட்டை ஆண்ட மன்னன் பெயர் சூடாமணிவர்மன். ஸ்ரீவிஜய நாட்டுக்கும், சோழ நாட்டுக்கும் இடைய நல்லுறவும் வர்த்தக தொடர்பும் இருந்தது. சோழ சம்ராஜ்யத்திற்கு வர்த்தகம் செய்ய ஏராளமான வர்த்த்கர்கள் ஸ்ரீவிஜய நாட்டில் இருந்து வருவார்கள். கடாரத்து இரும்பு, தேக்கு மரங்கள் போன்றவை ஸ்ரீவிஜய நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. அது போலவே சோழ நாட்டில் விவசாயம் செழித்தோங்கியதால் மிகுதியான தானியங்கள், ஏலம், மிளகு, நெசவுப் பொருட்கள் போன்றவை தெற்காசிய மற்றும் சீனா, அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. சுமத்ரா மட்டுமல்லாமல் சீனா மற்றும் அரபு நாடுகளில் இருந்தும் வர்த்தகர்கள் சோழ நாட்டில் வணிகம் செய்து கொண்டிருந்தனர். வர்த்தகத்தில் நாகப்பட்டினம் துறைமுகம் தான் முக்கிய இடம் வகித்தது. சோழ நாட்டில் பல வர்த்தக குழக்களையும் ஏற்படுத்தினார்கள் (Confederation of Indian Industries போல இருக்குமோ). பல பொருட்களில் வர்த்தகம் நடைப்பெற்றது (Commodity trading ?)

  ஸ்ரீவிஜய நாட்டுடன் நல்லுறவாகச் சென்று கொண்டிருந்த வர்த்தகம், ராஜேந்திரச் சோழன் காலத்தில் பிரச்சனைகளை எதிர்கொண்டது. சூடாமணிவர்மன் காலத்திற்குப் பிறகு வந்த ஸ்ரீவிஜய மன்னர்கள் சோழர்களின் வர்த்தகத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்தினார்கள். குறிப்பாக சோழ நாட்டிற்கும், சீனாவிற்கும் இடைய இருந்த வர்த்தகத்தை சீர்குலைக்கும் முயற்ச்சியிலோ, அல்லது சீனாவுடன் தங்களுடைய வர்த்தகத்தை மேம்படுத்தி சோழ நாட்டு வர்த்தகத்தை பாதிப்படையச் செய்யும் செயலிலோ, ஸ்ரீவிஜய மன்னர்கள் ஈடுபட்டதாகக் கருதப்படுகிறது. தன் வர்த்தகத்திற்கு இடையூறு ஏற்ப்பட்டதால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரச் சோழன் தனது கடற்ப்படையைக் கொண்டு ஸ்ரீவிஜயா நாட்டின் மீது 1025ம் ஆண்டு போர் தொடுத்தான்.

  போரில் வெற்றிப் பெற்ற ராஜேந்திரச் சோழன், அந் நாட்டை தானே ஆட்சி செய்யாமல், அம் மன்னர்களிடமே ஆட்சியை ஒப்படைத்து விட்டு, ஸ்ரீவிஜய நாட்டை, கப்பம் கட்டும் ஒரு குறிநில நாடாக, சோழ சாம்ராஜ்யத்தின் கீழ் கொண்டு வந்தான்.அது போலவே சோழ மன்னர்களின் வர்த்தகத்திற்கு பெரும் சவாலாக விளங்கியவர்கள் அரபு நாட்டைச் சேர்ந்தவர்கள். தெற்காசிய நாடுகளில் தங்களது வர்த்தகம் அரபு நாட்டை சேர்ந்தவர்களால் பாதிப்படையக் கூடும் என்று கருதிய சோழர்கள் அவர்களின் வர்த்தகத்தை தடுக்க முனைந்தார்கள். அரபு நாடுகள் மீது அவர்களால் படையெடுக்க இயலாத சூழ்நிலையில், அவர்களின் வர்த்தக மையங்களாக விளங்கிய மாலத்தீவுகள், மலபார் பகுதிகள் (சேர நாடு) மற்றும் இலங்கை போன்ற நாடுகளின் மீது படையெடுத்து, அந் நாடுகளைத் தங்களின் ஆளுமைக்கு கொண்டு வந்தார்கள். இதன் மூலம் தங்கள் வர்த்தகத்தை பாதுகாத்துக் கொண்டார்கள்.

  சோழ நாட்டின் பொருளாதாரம் தற்பொழுது உள்ளது போலவே வரி விதிப்பு மூலமே நிர்வாகிக்கப்பட்டது. நில வரி மட்டுமல்லாமல், வர்த்தக வரியும் விதிக்கப்ப்ட்டது. வர்த்தகம் செழித்தோங்கினால் தான் தங்களுக்கு வரி கிடைக்கும், என்ற எண்ணமே, தங்கள் வர்த்தகத்திற்குப் பாதிப்பு ஏற்பட்ட பொழுதெல்லாம் அவர்களை போர் செய்யத் தூண்டியது.

  பொருளாதாரம் மட்டுமில்லாமல் சோழ நாட்டைப் போன்ற மாபொரும் சாம்ராஜயத்தை நிர்வகிக்க கல்வி மிக முக்கியம் எனக் கருதிய சோழர்கள், கோயில்களில் கல்விச் சாலைகளை தோற்றுவித்தார்கள் (Human Resouce Development). சமய நூல்கள் மட்டுமல்லாது கணிதம், வானசாஸ்திரம் போன்றவையும் இந்தக் கல்விச் சாலைகளில் கற்றுத்தரப்பட்டது. அக் காலத்தில் சோழ நாட்டில் படிப்பறிவு அதிகமிருந்ததாக தெரிகிறது.

  மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை நிர்வாகம் செய்ய கிரமங்களில் நிர்வாகக் குழுக்களை ஏற்படுத்தினார்கள். கிராம நிர்வாகங்களை கவனித்தல், வரி விதித்தல், சட்டம் ஒழுங்கு, உணவு சேமிப்பு போன்றவை இந்தக் கிராமக் குழுக்களிடமே இருந்தது (Decentralization). இந்தக் குழு ஓட்டெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் என்பது தான் ஹைலைட் (Democracy).

  சோழர் செய்த தவறு என்னவென்றால், அந்த நாடுகளைக் கைப்பற்றிய பின்னர், அந்தநாட்டு அரசாங்கத்தைத் திரும்ப அந்நாட்டவரிடம் ஒப்படைத்து விட்டு, அவர்களைக் குறுநில மன்னர்கள் போல வைத்திருந்தது தான். இதனால், தமிழரின் மொழி, பண்பாடு, கலாச்சரங்களை அவர்களுக்கு எங்களால் கொடுக்க முடியாமல் போய் விட்டது.

  அக்காலத்தில் ஆசியாவில் எழுத்து வடிவமைப்பைக் கொண்ட ஒரு சிலமொழிகளில் தமிழும் இருந்ததால், நிச்சயம் தமிழ்மொழி வடிவத்தை அவர்களுக்குள் வழங்கி தமிழ்பேசும் மக்களாகவே உருவெடுக்க வைத்திருக்க முடிந்திருக்கும். மலாய் மொழி இப்போது, ஆங்கில எழுத்துக்களை வைத்துத் தான் உபயோகிப்பது குறிப்பிடத்தக்கது.

  எதிர்காலம் பற்றிய தெளிவான சிந்தனைகள் அன்றும் சரி, இன்றும் சரி நம்மிடம் இருந்ததில்லை. அதனால் தான் சொற்பிழைகளாக எழுதினால் என்ன தப்பு என்று இவ் யாழ்களத்திலேயே கேள்வி கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.

  ஆனால் அதனால் ஏற்படப்போகின்ற எதிர்கால சந்ததியினருக்கான தீங்கு பற்றி எள்ளவும் மனதில் வருத்தமில்லாமல் இருப்பது மிகமிக துர்அதிட்டமானது.

 8. மாவீரனான ராஜராஜ சோழன், நாட்டில் அமைதி நிலவுவதை விரும்பினான். பல்லவர் ஆட்சியில் மிகுந்த போர்களால் தமிழகத்தின் வளங்கள் அழிந்த நிலை. ஆகவே போர்க்களம் தவிர்க்க விரும்பிய மாமன்னன் அவன். சோழ நாட்டை சூழ்ந்திருந்த நாடுகளுக்கு எல்லாம் தூதர்களை அனுப்பி நட்புக்கரம் நீட்டினான். அப்படியும் எதிர்த்தவர்களை மட்டும் போரிட்டு வென்று, மீண்டும் போர் நடக்காதவாறு தன் படைகளையும் தளபதிகளையும் அங்கே தொடர்ந்து இருக்கச்செய்தான். சோழ நாட்டிற்குள் போர் நடக்கவில்லை. அதனால் சோழ நாட்டில் வளம் கொழித்தது. செல்வம் குவிந்தது. கலைகள் பல செழித்தன.கேளுங்கள்! திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள காந்தளூர் என்கிற இடத்தில், தனது தூதரை சிறையில் அடைத்த சேர மன்னனை ராஜராஜன் வீழ்த்தினான்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s