Marooned In Iraq

எனக்கு அகதிகளைப் பற்றிய அறிமுகம், போர் பற்றி எரியும் நாடுகளின் எல்லைகளைப் பற்றிய பிரகாசமான அறிமுகம் கிடையாது. அதாவது எப்படியென்றால் புத்தக அறிவைத் தவிர்த்த அறிவைப் பற்றி பேசுகிறேன். மற்றபடிக்கு, இலங்கை, ஈரான் ஈராக் இஸ்ரேல் லெபனான் பற்றிய படிப்பறிவு உண்டு. ஆனால் படிப்பறிவு இந்த விஷயங்களில் பெரும்பான்மையான சமயங்களில் இரண்டு பக்கங்களின் விஷயங்களையும் சொல்வதில்லை. அது மட்டுமில்லாமல் எல்லா விஷயங்களைப் பற்றிய ஒரு முன்முடிவும் எனக்கு இரண்டு பக்கங்களையும் பார்க்கவிடாமல் தடுத்துவிடுகிறது.

மரூன்ட் இன் இராக் படம் அப்படித்தான் எனக்கு இதுவரை தெரியாத ஈராக்கை, ஈரானை இல்லை அவற்றின் ஒரு பகுதியை அறிமுகப்படுத்தியது. படம் ஈரானின் எல்லையில் உள்ள குர்தீஸ்தானில் ஆரம்பிக்கிறது, அங்கே வயதான மிகப்பிரபலமான பாடகரான மிர்ஸாவிற்கு அவருடைய முன்னால் மனைவியைப் பற்றிய செய்தி வருவதில் இருந்து படம் தொடங்குகிறது. அவரது முன்னால் மனைவி இருப்பது ஈராக்கின் குர்தீஸ்தானில், போர் நடந்து கொண்டிருக்கும் சமயம்(அதாவது சதாம் உசேன் பதவியில் இருந்த காலம். அவர் தீவிரமாக குர்தீஸ்களை கொன்று கொண்டிருந்த சமயம், அவர் குர்தீஸ்களைக் கொல்ல கெமிக்கல் ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகவும் படம் சொல்கிறது.)

அந்தச் சமயத்தில் இவர்கள், அதாவது மிர்ஸாவும் அவருடைய இரண்டு மகன்களும் மிர்ஸாவின் முன்னால் மனைவி ஹனேராவைத் தேடி பயணத்தைத் தொடர்கிறார்கள். இங்கே ஒரு விஷயம் மிர்ஸாவின் இரண்டு மகன்களும் பரட் மற்றும் அயுத்தும் கூட அவர்களுடைய தந்தையைப் போலவே பாடகர்கள், கொஞ்சம் பிரபலமானவர்களும் கூட. இதில் அவருடைய இரண்டாவது பையனுக்கு ஏழு மனைவிகள் பதிமூன்று பெண் குழந்தைகள். அவர் வார்த்தையிலே சொல்ல வேண்டுமானால் தனக்கு ஆண் குழந்தை பிறக்காத வரை அந்தப் பகுதியில் இருக்கும் ஒரு பெண்ணையும் விடமாட்டேன் என்று சொல்கிறார், ஆனால் யாரையும் வற்புறுத்துவதில்லை என்பதும் இந்த விஷயத்தை படம் முழுவதும் இயக்குநர் காமெடியாகவும் பயன்படுத்தியிருக்கிறார்.

படத்தின் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை படத்தில் இசையும் நகைச்சுவை உணர்வும் வழிந்து கொண்டேயிருக்கின்றது.

ஆரம்பத்தில் இரண்டாவது மகன் அயுத் தன் மனைவிகளையும் குழந்தைகளையும் விட்டு தந்தையுடன் இந்த பயணத்தில் வரமாட்டேன் என்று அடம்பிடிக்கிறார். ஆனால் தந்தை வற்புறுத்தி இருவரையும் அழைத்துக் கொண்டு போகிறார். மிர்ஸாவின் முன்னால் மனைவி ஹனேரா அவருடைய கணவரை விவாகரத்து செய்துவிட்டு மிர்ஸா நடத்திய பாடற்குழுவில் பாடிக்கொண்டிருந்த சயீத்-ஐ திருமணம் செய்துகொண்டு இராக்கிற்கு வந்துவிடுகிறார். ஏனென்றால் ஒரு சமயத்தில் இரானில் பெண்கள் பாடக்கூடாதென்று கண்டிப்பு வந்துவிட தொடர்ந்து பாடவேண்டும் என்று நினைக்கும் ஹனேரா சயீத்தை கல்யாணம் செய்துகொண்டு இராக்கிற்கு வந்துவிடுகிறார்(இராக்கில் உள்ள குர்தீஸ்தானிற்கு – அப்பொழுது சதாம் ஈராக்கில் பெண்களுக்கு சில பல உரிமைகளை தந்துவந்துள்ளதாகத் தெரிகிறது).

தற்சமயம் அந்த ஹனேரா தான் ஈரான் ஈராக் எல்லையில் அகதிகளை மகிழ்விப்பதற்காக பாடிவருவதாகவும் அவருக்கு மிர்ஸாவின் உதவி தேவையென்பதும் தான் மிர்ஸாவிற்கு கிடைத்த செய்தி. உடனே தன்னுடைய மகன்களை அழைத்துக் கொண்டு புறப்படுகிறார். இந்த மூவரும் போகும் பயணம் அவ்வளவு சுலபமாக இல்லை. முதலில் இரானிய எல்லையில் இருக்கும் அகதி முகாமில் ஹனேராவின் தற்போதைய கணவர் சயீத்தின் அம்மாவைப் பார்க்கிறார்கள். சயீத் கொடுத்த ஒரு கடிதத்தை அவரிடமிருந்து பெற ஆனால் அந்தம்மா அந்தக் கடிதத்தை எங்கே போட்டார் என்பதை மறந்து போயிருக்கிறார். இப்படியாகத் தொடரும் பயணம் அவர்களுக்கு அவ்வளவு சுலபமாகயில்லை.

தொடரும் அவர்கள் பயணத்தில் அவர்களுடைய பணம், ஓட்டி வந்த வாகனம் போன்றவை கொள்ளையடிக்கப்படுகின்றன. கடைசியில் அவர்கள் நடைபாதையாக ஹனேராவைத் தேடத் தொடங்குகிறார்கள். அவர்கள் கடக்கும் ஒவ்வொரு இடத்திலும் இருக்கும் மக்களுக்கும் மிர்ஸாவைத் தெரிகிறது அதே போல் ஹனேரா மிர்ஸாவின் உதவியை நாடியிருப்பதும். இப்படியாக தொடரும் பயணத்தில், முதல் மகன் பரட் ஒரு பெண்ணின் குரலில் மயங்கி அவளை திருமணம் செய்து கொள்ளக் கேட்கிறார். இரண்டாவது மகன் அயுத்திற்கு அகதிகள் முகாமில் இருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் தத்தெடுத்துக் கொள்ளக் கிடைக்கிறார்கள். இப்படி இவர்கள் ஒருவாறு மிர்ஸாவை பிரிந்துவிடுகிறார்கள் பயணத்தின் ஒரு பகுதியில்.

இரண்டாவது மகனை மிர்ஸா தானே ஒரு பகுதிக்கு மேல் வரவேண்டாம் என்று நிறுத்திவிட, பரட் கொஞ்சம் வாட்ட சாட்டமாக இருப்பதால் எல்லைப் படையினர் பிடித்தால் இராணுவத்திற்கு பிடித்துக் கொண்டு போய்விடுவார்கள் என்ற பயத்தில் பரட்டை மிர்ஸா தன்னைத் தொடர்ந்து வரவேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்.

பின்னர் தன்னந்தனியாக தொடரும் பயணத்தில் ஒருவாறு ஹனேராயிருக்கும்/இருந்த இடத்தை அடைகிறார் மிர்ஸா, ஆனால் அவரை சந்திப்பதோ; ஹனேராவின் தற்காலக் கணவரின் சகோதரி. அங்கே தான் சயீத் இறந்து போன விஷயத்தை தெரிந்துகொள்கிறார் மிர்ஸா. சயீத்தின் கடைசி ஆசையான, மிர்ஸாவுடன் சேர்ந்து பாடவேண்டும் என்ற ஆசையும் நடக்காமல் போய்விட, சயீத் தன் உடலை மிர்ஸா தான் தகனம் செய்யவேண்டும் என்று சொல்லியிருக்க அதன் படியே மிர்ஸாவும் செய்கிறார்.

பின்னர் மிர்ஸா ஹனேராவைப் பற்றிக் கேட்க, அவர் கெமிக்கல் தாக்குதலால் பாதிக்கப்பட்டு குரல், முகம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் மிர்ஸாவுக்காக ரொம்ப காலம் காத்திருந்ததாகவும் பின்னர் வேறெங்கேயோ சென்று விட்டதாகவும் செய்தி கிடைக்கிறது. பின்னர் கடைசியில் ஹனேரா மிர்ஸாவிற்காக விட்டுச் சென்ற ஹனேரா/மிர்ஸாவின் பெண் குழந்தையை எடுத்துக்கொண்டு ஈராக்கிய எல்லையைத் தாண்டி ஈரானிய எல்லைக்குள் நுழைவதுடன் படம் முடிவடைகிறது.

———————————————

படம் நானெல்லாம் முழுக்க முழுக்க பாலைவனம் என்று நினைத்துகொண்டிருந்த ஈராக்கில் முழுக்க முழுக்க பனிப்பொழிவில் நடக்கிறது. அதற்கு காரணம் சொல்லும் இயக்குநர், குர்தீஸ்தானில் இயற்கையழகு மிகச் சிறப்பாகயிருக்கும் இதே படத்தை நான் இலையுதிர் காலத்திலோ வசந்த காலத்திலோ எடுத்திருந்தால் பார்ப்பவர்கள் குர்தீஸ்தானின் இயற்கையழகில் கவனத்தை செலுத்தி நான் சொல்லவந்த விஷயத்தை மறந்திருப்பார்கள் என்பதும்.

உண்மைதான் படத்தின் பெரும்பான்மையான காட்சிகளில் ஸ்கிரீன் முழுவதும் வெள்ளைப் பனியாலும், ஒன்றிரண்டு கறுப்புப் புள்ளிகளாக மக்கள் தோன்றுவதையும் காணலாம். இதையும் குறிப்பிட்ட இயக்குநர் சிம்பாலிக்காக மக்களின் துயரத்தை விளக்குவதற்காக இப்படி செய்ததாக சொல்லியிருந்தார்.

படத்தில் ஹனேரா தான் முக்கிய கதாப்பாத்திரம் என்றாலும் ஹனேராவை காண்பித்திருக்கவே மாட்டார் இயக்குநர் காரணம் ஹனேரா தான் முக்கிய கதாப்பாத்திரம் என்றாலும் தான் சொல்லவந்தது குர்தீஸ்தானில் இருக்கும் மக்கள் வாழ்நிலையை அதற்காக எடுத்துக்கொண்ட ஒரு கதை தான் ஹனேராவைப் பற்றியது. மக்கள் ஹனேராவைப் பற்றி யோசிக்காமல் கதையை, மக்களை, அவர்களில் வாழ்வாதரவிற்கான பிரச்சனையைப் பார்க்கவேண்டும் என்றுதான் அப்படி செய்ததாகவும் சொல்வார்.

குர்தீஸ்தான் மக்களின் அடிப்படை வாழ்வியல் விஷயங்களாக இருக்கும் நகைச்சுவை உணர்வையும் இசையையும் கொண்டுவரவே முயன்றதாகச் சொல்லியிருப்பார் இயக்குநர், உண்மைதான் மைல்ட் காமெடியும் இசையும் படம் முழுவதிலும் ஆக்கிரமித்திருக்கிறது.

நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படுவது அன்றாட விஷயமாகிவிட்ட மக்களிடம் மரணம் என்பது ஒரு விளையாட்டாகயிருப்பதாகச் சொல்வார் இயக்குநர் உண்மைதான், கண்ணிவெடிகளிலும், கெமிக்கல் ஆயுதங்களாலும் மக்கள் கும்பல் கும்பலாகக் கொல்லப்பட அவர்களின் வாழ்க்கையை இன்னமும் நகர்த்திக் கொண்டிருக்க உதவுவது இசையும் நகைச்சுவையுமாகவேயிருக்கும். இருக்க முடியும்.

கதைப்படி எல்லோருக்கும் ஒரு ஹாப்பி எண்டிங் இருக்கும், பரட்டிற்கு அவர் ஆசைப்பட்ட பெண் கிடைப்பாள், அயுத்திற்கு இரண்டு ஆண் குழந்தைகள், மிர்ஸாவிற்கு சயீத்/ஹனேராவின் குழந்தை என இதை விளக்கும் இயக்குநர் தான் ஆப்டிமிஸ்டிக்கா இருப்பதையே விரும்புவதாகச் சொல்கிறார்.

உண்மையில் ஒரு அருமையானப் படம் இந்த “மரூன்ட் இன் இராக்”. வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள், அதே போல் இயக்குநரின் பேட்டியையும் கண்களால் சிரித்துக்கொண்டு அந்த மனிதர் படத்தைப் பற்றி விளக்குவது பிரம்மாதம்.

Baran

டிசெவின் Baran பற்றிய பதிவைப் படித்ததுமே சொல்லிவைத்திருந்தேன் இந்தப் படத்திற்காக; எடுத்துச் சென்றிருந்த புண்ணியவான் திருப்பிக் கொடுத்த நாளில் சென்றிருந்ததால் சொல்லப்போனால் சீக்கிரமாகவே கிடைத்தது.

கண்களை உறுத்தாத ஒரு காதல் கதை சொல்லப்பட்டிருக்கிறது,Marooned in Iraqக்கைப் போலவே ஒரு பிரிவினரின் வாழ்வாதாரப் பிரச்சனையைச் சொல்ல ஒரு காதல் தேவைப்பட்டிருக்கிறது. ஆப்கான் அகதிகள்(பொதுவாகவே அகதிகள்) வாழ்க்கை, ஈரானில்(பொதுவாக உலகில்) எப்படியிருக்கிறது என்பதைச் சொல்கிறது படம். பெரும்பாலும் ஏதோவொரு காரணத்திற்காக ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு அகதியாய் செல்பவர்களின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது.

பல சமயங்களில் நாம் எவ்வளவு சொகுசான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று பொட்டில் அறைவதைப் போன்ற கேள்வி இது போன்ற படங்களைப் பார்க்கும் பொழுது இயல்பாய் எழுகிறது.

அடுக்குமாடிக் கட்டிடம் கட்டும் தொழிலாளர்களுக்கு தேநீர் போட்டுக் கொடுக்கும்; அவர்களுக்காக சிறுசிறு சமையல் சார்ந்த வேலைகள் செய்யும் லத்தீப். குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு வருகிறார்கள் என்பதற்காக அரசாங்கம் அனுமதி மறுத்திருந்தும், ஆப்கானியர்களை வேலைக்கு வைத்திருக்கும் மெமர். தந்தை வேலைசெய்யும் பொழுது கீழே விழுந்ததால் வேறுவழியில்லாமல் ஆண்வேடமிட்டு கட்டிட வேலை செய்யவரும்வரும் பரான்(இவர் ஆண்வேடமிட்டிருக்கும் பொழுது இவர் பெயர் ரஹ்மத்) என இவர்கள் மூவரை மையமாக வைத்தே இந்தப் படம் சுழல்கிறது.

லத்தீப் கொஞ்சம் சாமர்த்தியக்காரனாக, காசு சேர்ப்பதில் குறியானவனாக இருக்கிறான். அந்த கட்டிடம் கட்டும் இடத்திலேயே மிகவும் சுலபமான வேலையான தேநீர் போட்டுத்தந்து மதிய உணவு சமைத்துத் தரும் வேலை செய்து சொகுசாக இருக்கும் லத்தீப்பிற்கு, புதிதாக வேலைக்குச் சேர்ந்த ரஹ்மத்திற்கு கட்டிட வேலை செய்யும் அளவிற்கு வளு இல்லாததால் லத்தீப் செய்து வரும் சமையற்கட்டு வேலை கொடுக்கப்படுவது முற்றிலும் பிடிக்கவில்லை. (யாருப்பா அது ஆணியவாதி வந்துட்டான்னு சொல்றது – வளு குறைந்தவர் சமையல் செய்யவேண்டும் என்று நான் சொல்லவில்லை; அதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.) அதுவரை டிரனேஜ் வாட்டர் போல் டீ சாப்பிட்டுவந்த கட்டிடத் தொழிலாளர்கள், உண்மையில் பெண்ணான ரஹ்மத் போடும் பிரமாதமான தேநீராலும், மதிய உணவாலும் கவரப்படுகிறார்கள்.

ஏற்கனவே தன்னுடைய சுலபமான வேலையைப் பறித்துவிட்டான் என்று கோபத்தில் இருந்த லத்தீப் மற்ற தொழிலாளிகளின் பாராட்டிற்குப் பிறகு இன்னமும் கோபப்படுகிறான். இதன் காரணமாக ரஹ்மத்தை சின்ன சின்ன வழிகளில் வம்பிழுப்பது என போகும் படத்தில், பின்னர் ரஹ்மத் ஒரு பெண் என லத்தீப் தெரிந்துகொண்ட பிறகு வரும் பகுதிகள் காதல் கவிதைகள். ஒவ்வொரு முறையும் அவளுக்காக பரிந்து கொண்டு வருவது, பரான்-ஐ பார்ப்பதற்கு முன் புறாக்களை கல்லால் அடிப்பதையும் பின்னர், பரான் புறாக்களுக்கு மீந்து போன அப்பளங்களைப் போடுவதைப் பார்த்தபின் அந்தப் பெண் வராத நாள் ஒன்றில் இவர் போடுவதும் என சிறுவயது மக்களின் மனதை நன்றாகப் படம்பிடித்திருக்கிறார் இயக்குநர்.

இடையில் நடக்கும் ஒரு பிரச்சனையில், ஆப்கன் அகதிகளை கட்டிட வேலைக்கு வைத்துக்கொள்ளமுடியாத ஒரு சூழ்நிலை வந்துவிடுகிறது. அதனால் பரான் வேலைக்கு வருவது நின்றுவிடுகிறது. இதன் காரணமாக லத்தீப், பரானைத் தேடி அலைகிறார். ஆப்கான் அகதிகள் வாழும் பகுதிகளையெல்லாம் தேடி ஒரு வழியாக கண்டும் பிடிக்கிறார். அவர்கள் குடும்பம் கஷ்டப்படாமல் இருப்பதற்காக நிறைய பண உதவிகளையும் செய்ய முயற்சிக்கிறார் ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான தோல்வியில் சென்று முடிவடைகிறது. கடைசியில் பரான் -ன் குடும்பத்தினர் திரும்பவும் ஆப்கானிஸ்தான் செல்வதற்காக தன்னிடம் இருக்கும் கடைசி விஷயமான வேலை செய்ய அனுமதிப்பதற்கான அடையாள அட்டையை விற்று பணம் கொடுக்கிறார்.

கடைசி காட்சி இன்னமும் மனதிலேயே நிற்கிறது, இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் காதலை கண்களாலேயே பகிர்ந்து கொள்வதை. கவிதைத்துவமான படம்.

——————————–

சிம்பாலிக்காக நிறைய விஷயங்களைச் சொல்கிறார் இயக்குநர், கோல்ட் பிஷ் கொண்ட மீன் தொட்டியைக் காண்பிப்பது. பரானின் அர்த்தமான மழையை இருவரும் பிரியும் பொழுது இடையில் கொண்டுவருவது என சொல்லிக் கொண்டே போகலாம்.

படம் அடுக்கு மாடிக் கட்டிடத்திற்குள் உலவும் பொழுதும் சரி, அதை விட்டு வெளியில் வரும் சமயத்திலும் சரி ஒளிப்பதிவு இயல்பாக உள்ளது, கண்களை உறுத்தவில்லை. எதையும் நம்மீது திணிக்கிறார்கள் என்ற எண்ணமே வராதது தான் என்னைப் பொறுத்தவரை இந்தப் படத்தின் வெற்றி என்பேன்.

y las visitadoras

நிறைய படங்களைப் பார்க்கிறோம், சில தமிழ்ப் படங்கள் முதற்கொண்டு ஒரு இரண்டு வார்த்தையாவது எழுதிடுவோம்னு நினைக்கிற படங்கள் நிறைய. ஆனால் கொஞ்சமே கொஞ்சமாவது எழுதுறதுக்கு பிரயோஜனமா கொஞ்சமாவது ஜல்லி அதிகமாகாம விஷயத்தைச் சொல்லணும்னு நினைச்சே நான் எழுத நினைக்கும் படங்களின் எண்ணிக்கை அதிகமாய்ட்டே போகுது. வலது பக்கம் போட்டுறுக்கிற படமெல்லாம் மிகமிக தேர்ந்தெடுத்து ரிவ்யூ எழுதியே தீர்வதுன்னு முடிவு பண்ணி வைத்திருக்கிற படங்கள். சரி இந்தப் படத்திற்கு,

எப்ப முதல் தடவை இந்தப் படத்தைப் பார்த்தேன் என்று நினைவில் இல்லை, சோமிதரன் உடைய பதிவொன்றில் நிர்வாண ராணுவம் என்று நினைக்கிறேன், கடைசியில் குறிப்பாகச் சொல்லும் பொழுது மகிந்தாவிற்கு, ராணுவத்தினரை குறை சொல்ல முடியாது. நீங்க அவர்களுடைய இந்த செக்ஸ் வெறியை தீர்ப்பதற்கு ஒரு வழி செய்யுங்கள் என்பதான ஒரு தீர்வை சொல்லியிருப்பார். அதே போல் பொடிச்சியின் சமீபகால பதிவொன்றும் கொஞ்ச நாள்களுக்கு முன்னர் வந்த இந்தப் படத்தை மீண்டும் தேடிப் பார்க்க வைத்தது.

படத்தின் கரு என்னான்னா, இதுமாதிரி ஆண்குறிகளை கையில் பிடித்துக் கொண்டு அலையும் பெரு(Peru) நாட்டு ராணுவத்தினரால் ஏற்படும் பிரச்சனைகளைக் கட்டுப்படுத்த முடிந்த மட்டும் குறைக்க சிகரெட், தண்ணி, பொண்ணு இப்படி எந்த வித கெட்டப்பழக்கமும்(இது பட இயக்குநரின் கருத்து, இதில் என்னுடைய கருத்து வித்தியாசமாகக் கூட இருக்கக்கூடும் ;-)) இல்லாமல் இராணுவப் பயிற்சியில் நல்ல பெயர் எடுத்திருக்கும் ஒருவரிடம் ஒரு சீக்ரெட் மிஷன் ஒப்படைக்கப்படுகிறது.

சீக்ரெட் மிஷன் என்னவென்றால், பாலியல் தொழிலாளிகளை தேர்ந்தெடுத்து, இராணுவ வீரர்களுக்கு அவர்களுடைய பாலியல் தேவைகளை நிவர்த்தி செய்வது. இது தான் அவருடைய சீக்ரெட் மிஷன், சொல்லப்போனால் படத்தை டைரக்டர் செக்ஸுவல் காமெடியாகச் செய்திருந்தாலும் சொல்ல வந்த விஷயத்தின் தீவிரம் எனக்கு புரிந்துதான் இருந்தது.

ஆரம்பத்தில் ஒரு பழைய பாலியல் தொழிலாளி, தற்சமயம் பாலியல் தொழிலில் பெண்கள் ஈடுபடுத்தி வருபவரிடம் வந்து இதுபோல் ஒரு விசிட்டர் சர்வீஸ் நடத்த வேண்டும் என்று பேச்சு கொடுக்கத் தொடங்குதில் சூடுபிடிக்கிறது படம். இந்த விஷயத்தை, ஒரு கார்ப்ரேட் கம்பெனியின் ஒழுங்குடன் அவர் நடத்த நினைப்பது. அதற்கான அச்சாரங்களைச் செய்வது, பவர்பாய்ண்ட் ஸ்லைடுகளை டேட்டாக்களுடன் சீனியர் அபிஷியல்களுக்கு அனுப்புவது என டைரக்டர் தான் எடுக்க நினைத்த் விஷயத்தை மிகச் சரியாகச் செய்ததாகவே படுகிறது எனக்கு.

பின்னர் இத்தனை நல்லவராக இருக்கும் ஹீரோ, அந்த விசிட்டர் சர்வீஸில்(இராணுவ வீரர்களுக்கான ப்ராத்தல் சர்வீஸை அப்படித்தான் சொல்கிறார் ஹீரோ.) வரும் பெண்ணொருத்தியிடம் மயங்கி பின்னர் அவருடைய காதல், இதன் காரணமாக மனைவியுடன் பிணக்கு, இதை(இந்த விசிட்டர் சர்வீஸ், மற்றும் அவருடைய சீக்ரெட் லைப்) இரண்டையும் சொல்லி ப்ளாக்மெயில் செய்யும் லோக்கல் ரேடியோ அறிவிப்பாளர், என்று மசாலாத் தன்மை கொண்ட படம் தான் இதுவும்.

கடைசியில் ஹீரோவுடைய காதலி, ஒரு விபத்தில் – இராணுவத்திற்கு மட்டும் செய்யக்கூடாது நாங்களும் காடுகளில் வசிக்கிறேம் எங்களுக்கும் இந்த விசிட்டர் சர்வீஸ் வேண்டும் என விரும்பும் அதற்காக இராணுவ மேஜர் வரை பேசும் ஒரு லோக்கல் குருப், இந்த விசிட்டர் சர்வீஸ் மக்களை அவர்களுடைய தேவைகளுக்காக கட்டாயப்படுத்தும் ஒரு சூழ்நிலையில் நடக்கும் விபத்தில் – இறந்துவிடுகிறார்.

இந்தச் சமயத்தில் தான் ஹீரோ அந்த பாலியல் பெண்ணிற்கு இராணுவ மரியாதையுடனாக இறுதிமரியாதை தரப்போக அது இராணுவத்தில் பிரச்சனையைக் கிளப்பிவிடுகிறது. பின்னர் இதற்காக அவரை வேலையிலிருந்து தூக்கிவிட நினைக்கும் இராணுவத்திடம் ஹீரோ இல்லை தான் இராணுவத்தில் தான் இருக்க விரும்புவதாக உறுதியாகச் சொல்ல, குளிர்ப்பிரதேசத்திற்கு தூக்கியடிக்கப் படுகிறார். கடைசியில் அவர் இந்த முன்னால் இராணுவத்தினரின் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்த பெண்களுக்கும் அவர்களுடைய தலைவிக்கும் கடிதம் எழுதுவதாய் படம் முடிவடைகிறது.

படத்தில் விசிட்டிங், ரெண்டரிங், ஆபீஸ் என்று கொஞ்சம் போல் ஹீரோ ஆரம்பிக்கும் பொது தொடங்கும் காமெடி, தலைவர் பவர்பாய்ண்ட் பிரசண்டேஷன் அனுப்பும் பொழுதும் அதனுடன் அவர் தான் எதற்காக இந்த முடிவிற்கு வந்தார் என்றும் சொல்லும் பொழுதும் அளவாய் இருக்கிறது. இராணுவ வீரர்களின் மெண்ட்டாலிட்டியைக் கூட சொல்லியிருப்பார் இயக்குநர், கடைசியில் பிரச்சனை ஆன பிறகு அந்த பாலியல் தொழிலாளர்களின் தலைவி, ஹீரோவை, இராணுவ சேவையில் இருந்து பதவி விலகுமாறும், பின்னர் இப்பொழுது இராணுவத்தினருக்கு செய்ததைப் போலவே பாலியல் தொழிலை – கார்ப்பரேட் தொழில் போல செய்யலாம் என்றும், ஹீரோ தங்களுக்கு பாஸாகயிருக்க வேண்டும் என்றும் கேட்கும் பொழுது, ஹீரோ சொல்கிறார்.

எனக்கு நிச்சயம் பாஸ்கள் வேண்டும், அவர்கள் போடும் கட்டளையை நிறைவேற்றுபவனாகவே நான் பழகிவிட்டேன், என்னால் பாஸாகயிருக்க முடியாது என்று சொல்லும் பொழுது சிந்திக்க வைக்கிறார் இயக்குநர். இது அவருக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே பொருந்தும். இத்தனைக்கும் ஹீரோவிற்கு அற்புதமான மேனேஜ்மெண்ட் ஸ்கில்கள் இருக்கும்.

என்ன சொல்வது அருமையான படம், எத்தனை பேருக்கு இந்தப் படத்தைப் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியாது. பெரு நாட்டின் படம், ஸ்பானிஷ் மொழி, சப்டைட்டில் உண்டு, கொஞ்சம் செக்ஸ் சீன்கள் உண்டு.(Obvious இல்லையா???)

இந்தப் பதிவிற்கு வேறெதாவது செக்ஸியான தலைப்பு வைக்கலாம் தான் கொஞ்சம் போல் ஜல்லியடிக்காத பதிவுகளுக்கு நேரடியாக தலைப்பு வைப்பது என்று முடிவெடுத்திருக்கிறேன். நன்றாய்த் தெரியும் ரீச் கம்மியாயிருக்கும் என்று, ஆனால் அதற்காக எழுதப்படுவதில்லை என்று மனதை தேற்றிக் கொள்கிறேன்.

ஹீரோயின் பற்றி
படம் பற்றி

8 Mile

நிறைய படங்கள் நாம் எதிர்ப்பார்க்காத சமயங்களில் கிடைத்துவிடுவதுண்டு. ஆனால் சில படங்கள் எவ்வளவு தேடினாலும் கிடைக்க மாட்டேன் என்று பிரச்சனை செய்வதுண்டு. அப்படி நான் எமினம்-ன் பாடல்களைக் கேட்டு/பார்த்துப் பிடித்துப் போய் இந்தப் படத்திற்காக அலைய ஆரம்பித்த இரண்டாவது ஆண்டில் கிடைத்தது; இந்தப் படம்.

சாதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் ஒரு அன்டர்டாக்(Underdog) ஸ்டோரி அவ்வளவுதான் படம். ஒரு ராப் பாடகர் தன்னுடைய பிரச்சனைகளை எல்லாம் கடந்து வெற்றி பெறுவதுதான் கதை. ஹாலிவுட்டில் நம்ப ஊரு தாலி செண்டிமெண்ட் மாதிரி பிரபலமான கான்செப்ட். ஆனால் எனக்கு சிண்ட்ரெல்லா மேன் பிடித்துப் போனதற்கும் இந்தப் படம் பிடித்துப் போனதற்கும் காரணம் இந்தப் படங்கள் உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப் பட்ட கதைகள்.(சிண்ட்ரெல்லா மேன் உண்மைக் கதை என்றே சொல்லி எடுக்கப்பட்டது, ஆனால் 8 மைல் அப்படிக் கிடையாது பார்ட்ஷியல் பயோகிராபி தான்.(சொல்லப்படுகிறது))

இதெல்லாம் இருந்தும் படத்தில் எனக்குப் பிடித்த விஷயங்கள் நிறைய, முதலில் எமினம் நடித்தது. வாழ்க்கையில் நடிக்கிறது எவ்வளவு கஷ்டம் என்று, “தூள்” படம் பார்த்துத்தான் கற்றுக் கொண்டேன், அதில் ஒரு வயதான அம்மா நடித்திருக்குமே(வேறவழி). அந்தம்மா ஸ்கிரீனில் சும்மா நிக்கிறதையும், டயலாக் டெலிவரியின் போது கூட முகத்தில் ஒரு ரியாக்ஷனுமே இல்லாமல் இருப்பதையும் பார்த்துவிட்டு, அம்மாடி நடிக்கிறது பெரிய வேலைதான் என்ற முடிவிற்கு வந்துவிட்டேன். ஏன் இங்கே இதைச் சொல்கிறேன் என்றால் எமினம்-ன் முதல் படமாகயிருந்தாலும் இந்தப் பிரச்சனைகள் தெரியவில்லையென்றே சொல்லவேண்டும்.

ஒரு நடிகரைப் போட்டு எடுத்திருக்கலாம் தான் ஆனால் இந்த ரியாலிட்டி வந்திருக்காது, அதுவும் படத்தில் பெரும்பங்குவகிக்கும் ராப் பாடல்கள் இத்தனை நன்றாக வந்திருக்காது. சரி ராப் பாடல்களுக்கு, எனக்கு மிகச்சரியாய் ராப்பாடல்கள் அறிமுகம் ஆனது டிசேவின் பதிவில், அவர் ராப் பாடல்களைப் பற்றிய பதிவெழுதியிருந்தார். முன்பே கேட்டிருக்கிறேன் டூபாக், ஸ்னூப்பி டி ஓ டபுள் ஜி, எமினெம் என்று என்றாலும் வெறும் சப்தத்திற்காக பிடித்திருந்த பாடல்கள். அதே சமயத்தில் இல்லை இன்னும் கொஞ்ச காலம் கழித்து சாருவின் கோனல்பக்கங்களில் எமினம் பற்றி எழுதும் பொழுது நினைத்திருக்கிறேன், ஆஹா மனுஷன் இப்பத்தான் முதல் முறையா நமக்குத் தெரிந்த ஒருத்தரைப் பற்றி சொல்றார் என்று. ஏன் என்றால் எனக்கும் விளிம்பிற்குமான தொலைவு அதிகம். பெரும்பாலான நியூட்ரல் ஜல்லிகளுக்கு இதுதான் காரணம்.

அந்தச் சமயங்களில் தான் ரொம்பவும் சீரியஸாய் ஆங்கிலப் பாடல்களைக் கேட்கத் தொடங்கியது. எப்படி இங்கிலிபீஷ்ஷில் இருந்து இங்கிலீஷ்ற்கு வர ஆங்கிலப் படங்கள் உதவியதோ அப்படி இங்கிலீஷ்லிருந்து English வர இந்த வகையறா பாடல்கள் உதவின. ஜான் லெனன், பேக் ஸ்டீர்ட் பாய்ஸ்(I Really Miss them), U2 என பாப் இசைப் பாடல்களில் விழுந்து பொரண்டிக் கொண்டிருந்த பொழுது கிடைத்த அறிமுகம் தான் ராப் பாடல்களினுடையது.

ஒரு மிகச் சிக்கலான விஷயத்தை, தன்னுடைய ஏற்கனவே பிரபலமான ஸ்டைல் பாடல் வரிகளினிடையே எப்படி எமினமால் தரமுடிகிறது என்று வியந்திருக்கிறேன். எல்லா விஷயங்களையும்(அமேரிக்க விளிம்புப் பிரச்சனைகள்) பற்றியும் எமினம்-ன் வரிகள் பிடித்திருந்திருக்கிறது. நான் எனக்கு எமினம்-ஐ மிகவும் பிடிக்கும் என்று பக்கத்தில் ஒரு ப்ளாக்கரிடம் சொல்லிக் கொண்டிருந்த பொழுது அவர் “உனக்கு அவனை பிடிக்காமல் இருந்தால் தான் ஆச்சர்யம்” என்று சொல்ல, முதலில் புரியாமல் விழித்தேன் பிறகு அவரே, உன்னை மாதிரி MCPக்கெல்லாம் அவனைத்தான் பிடிக்க வேண்டும் என்று சொல்ல, ஒன்றுமே சொல்லாமல் விட்டுவிட்டேன்.(சாரு நிவேதிதா கேட்டிருக்கணும் முன்பே ஒருமுறை சொன்ன மாதிரி அவுத்துப்போட்டு ஆடியிருப்பார் ;).)

ஆனால் அது அப்படியல்ல, என்னுடைய அறிப்பை நான் மற்றவர்களின் மேல் சொறிந்துவிட முடிவதில்லை பெரும்பாலும் என்னுடைய சுயசொறிதல்களே எனக்கு போதுமானவையாக இருக்கின்றன.

சரி படத்திற்கு, கறுப்பர்களால் டாமினேட் செய்யப்படும் ராப் பாடல் உலகில் ஒரு வெள்ளையரான எமினெம்-ன் ஆரம்பம் வளர்ச்சியைப் பற்றியதுதான் இந்தப் படம். 8 மைல் என்று கவிதைத்துவமான தலைப்பு, அதாவது படம் நடப்பதாகச் சொல்லப்படும் டெட்ராய்டில் கறுப்பர்களும் வெள்ளையர்களும் வாழும் பகுதியைப்(வேண்டுமானால் பணக்காரர்கள் ஏழைகள்) பிரிப்பது இந்த 8 மைல் தூரம். அந்த 8 மைல் தூரத்தை எமினெம் எப்படிக் கடந்தார் என்பதைத் தான் சொல்லியிருக்கிறார்கள்.

மியூசிக் சம்மந்தப்பட்ட படம் என்பதால், படம் முழுவதும் ரசிக்கக்கூடிய இசை காதில் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. எனக்கு எமினம்-ன் பாடல்கள் பிடித்துப் போன பிறகு அவருடைய கதையை(அதாவது உண்மை வரலாற்றை) தேடிப் படித்திருக்கிறேன் என்பதால், இந்தப் படத்தில் சொல்லப்படும் விஷயம் ஏற்கனவே நானறிந்த ஒன்றுதான்.

படத்தில் ராப் பாடல்களுக்கான போட்டிகள் நடைபெறுவது முக்கிய விஷயமாகப் பேசப்படுகிறது சொல்லப்போனால் இந்த ராப் போட்டிகள் குத்துச் சண்டை போட்டிகளை ஒத்துக் காணப்படுகிறது. 8 மைல் படத்தைப் பற்றி எழுதத் தொடங்கிவிட்டு இதைப் பற்றி எழுதாமல் போகக்கூடாது என்பதால் எழுதுகிறேன். எமினெம்-ன் வாழ்க்கை தொடக்கத்தில் இது போன்ற போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார். ரொம்ப எளிமையா சொல்லணுனா இரண்டு பேர் பங்குபெரும் பேச்சுப் போட்டிகளைச் சொல்லலாம். இங்கே பேசுவது போல் அங்கே பாடுவார்கள், ஆனால் அங்கே வாசிக்கப்படும் மெட்டிற்கு ஏற்றபடி சொற்களைக் கட்டிப் பாடுவது. இதையும் பேச்சுப் போட்டிகளுடன் சொல்லலாம், ஐந்து நிமிடத்திற்கு முன் டாபிக் கொடுத்தெல்லாம் நானே பேசியிருக்கிறேன். ஆனால் முன்னர் சொன்னது போல் ஏற்கனவே பெரும்பாலும் மனதில் உருப்போட்ட வரிகளைத்தான் உபயோகிப்போம் தலைப்பு என்ற விதத்தில் வேண்டுமானால் இதை(ராப் போட்டிகளை, ஆனால் இதிலும் எமினெம் முன்பாகவே பிரிபேர் செய்வதைப் போல் இருக்கும்) வேறாகச் சொல்லலாம்.

இன்றுவரை ராப் ஒலிம்பிக்ஸ் நடந்துவருகிறது. 2001லோ இல்லை 2002லோ தெரியாது எமினெம் ரன்னர் அப்பாக வந்தார் என்று நினைவில் இருக்கிறது. இது உண்மையில் நடந்தது. ஆனால் உண்மையில் ராப் பாடல்களை, ராப் பாடகர்களை, அவர்களின் வாழ்க்கை முறையை அறிந்திருந்தீர்கள் என்றால் இந்தப்படம் அவ்வளவு இயல்பாக ராப் உலகைக் காண்பிப்பதாகச் சொல்லமுடியாதென்றாலும். ஒரு நல்லமுயற்சி இந்தப்படம்.

இந்தப் படத்தில் வரும் “Lose Yourself” பெஸ்ட் ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கார் விருது பெற்றது. ஆனால் இந்தப்பாடலை அவர் செரிமெனியில் பாடவில்லை, ஏனென்றால் American Broadcasting Company இந்தப் பாடலை எடிட் செய்து பாடச் சொன்னதால் பாடவில்லை. அந்தப் பாடல்வரிகள் மற்றும் படக் காட்சியுடன் நிறைவு செய்கிறேன்.

“Lose Yourself”

Look, if you had one shot, or one opportunity
To seize everything you ever wanted-One moment
Would you capture it or just let it slip?

His palms are sweaty, knees weak, arms are heavy
There’s vomit on his sweater already, mom’s spaghetti
He’s nervous, but on the surface he looks calm and ready
To drop bombs, but he keeps on forgettin
What he wrote down, the whole crowd goes so loud
He opens his mouth, but the words won’t come out
He’s chokin, how everybody’s jokin now
The clock’s run out, time’s up over, bloah!
Snap back to reality, Oh there goes gravity
Oh, there goes Rabbit, he choked
He’s so mad, but he won’t give up that
Easy, no
He won’t have it , he knows his whole back’s to these ropes
It don’t matter, he’s dope
He knows that, but he’s broke
He’s so stagnant that he knows
When he goes back to his mobile home, that’s when it’s
Back to the lab again yo
This whole rap shit
He better go capture this moment and hope it don’t pass him

[Hook:]
You better lose yourself in the music, the moment
You own it, you better never let it go
You only get one shot, do not miss your chance to blow
This opportunity comes once in a lifetime yo

The soul’s escaping, through this hole that it’s gaping
This world is mine for the taking
Make me king, as we move toward a, new world order
A normal life is borin, but superstardom’s close to post mortem
It only grows harder, only grows hotter
He blows us all over these hoes is all on him
Coast to coast shows, he’s know as the globetrotter
Lonely roads, God only knows
He’s grown farther from home, he’s no father
He goes home and barely knows his own daughter
But hold your nose cuz here goes the cold water
His hoes don’t want him no mo, he’s cold product
They moved on to the next schmoe who flows
He nose dove and sold nada
So the soap opera is told and unfolds
I suppose it’s old partna’, but the beat goes on
Da da dum da dum da da

[Hook]

No more games, I’ma change what you call rage
Tear this mothafuckin roof off like 2 dogs caged
I was playin in the beginnin, the mood all changed
I been chewed up and spit out and booed off stage
But I kept rhymin and stepwritin the next cypher
Best believe somebody’s payin the pied piper
All the pain inside amplified by the fact
That I can’t get by with my 9 to 5
And I can’t provide the right type of life for my family
Cuz man, these goddam food stamps don’t buy diapers
And it’s no movie, there’s no Mekhi Phifer, this is my life
And these times are so hard and it’s getting even harder
Tryin to feed and water my seed, plus
Teeter totter caught up between being a father and a prima donna
Baby mama drama’s screamin on and
Too much for me to wanna
Stay in one spot, another day of monotony
Has gotten me to the point, I’m like a snail
I’ve got to formulate a plot fore I end up in jail or shot
Success is my only mothafuckin option, failure’s not
Mom, I love you, but this trailer’s got to go
I cannot grow old in Salem’s lot
So here I go is my shot.
Feet fail me not cuz maybe the only opportunity that I got

[Hook]

You can do anything you set your mind to, man.

Blackboard

இந்தப் படம் எனக்குக் கிடைத்தது ஒரு தற்செயலான நிகழ்வு. நான் சினிமா பாரடைசியோவில் Baran படத்தையும், Turtles Can Fly படத்தையும் கேட்டுக் கொண்டிருந்த பொழுது அங்கே வேலை செய்யும் நபர் Blackboard பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டார். நான் இல்லை என்றதும் எடுத்துக்கொடுத்தவர். எக்ஸ்ட்ராஸில் அந்தப் படம் எடுத்ததைப் பற்றி சமீரா கென்னஸ் படவிழாவில் சொல்வார், நிச்சயமாய்ப் பாருங்கள் நன்றாகயிருக்கும் என்றார்.

ஒரு சில படங்கள் தான் இந்தப் படத்தை எப்படி எடுத்திருப்பார்கள் என்று ஆச்சர்யப்படவைக்கும், அந்த வரிசையில் நிச்சயமாய் சேர்க்கக்கூடிய ஒரு படம் ப்ளாக்போர்ட். படம் பார்த்துக் கொண்டிருந்த பொழுது எனக்கு இந்த எண்ணம் எழத் தொடங்கியது, அதாவது ஒரு டாக்குமென்ட்டரியைப் பார்ப்பதைப் போன்ற ஒரு உணர்வு வரும். இது முன்னர் வந்தது Battle of Algiris பார்த்த பொழுது அந்தப் படம் பார்க்கும் பொழுது ஒரு படம் பார்க்கும் உணர்வே வராது. அதைப் போலவே இந்தப் படமும்.

கடைசியில் நண்பர் சொன்ன கென்னஸ் படவிழா பேட்டியைப் பார்த்த பொழுதுதான் தெரிந்தது எவ்வளவு கஷ்டப்பட்டு இந்தப் படத்தை சமீரா இயக்கியிருந்தார் என்பது. இந்தப் படத்தை இயக்கும் பொழுது அவருக்கு வெறும் இருபது வயது தான், பெண்களுக்கு அவ்வளவாக சுதந்திரம் இல்லாத ஈரான் நாட்டுப் பெண்ணாகயிருந்தாலும், அப்பாவும் அம்மாவும் இயக்குநர்களாக இருந்ததால் இது சாத்தியமாகியிருக்கிறது. ஆனால் அவருடைய திறமை மறுப்பதற்கில்லை நிச்சயமாய்.

அகதிகளின் வாழ்க்கை, போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை, அதன் காரணமாக ஏற்படும் கல்வியறிவின்மை, கெமிக்கல் ஆயுதங்களை பயன்படுத்துவதால் வரும் பிரச்சனைகள் என்று தீவிரமான பிரச்சனைகளைப் பற்றிய படம், என்றாலும் அரசியல் கிடையாது ஈரான் ஏன் அப்படி செய்தது, ஈராக் ஏன் அப்படி செய்தது என்ற தனிநபர்களின் விளக்கங்கள் கிடையாது. எல்லா விஷயங்களும் Subtle ஆக ஒரு சாதாரண கதைக்குள் மறைத்து வைக்கப் பட்டு சொல்லப் படுகிறது.

———————————————

படம் இரண்டு ஆசிரியர்கள் ஈரானின் எல்லைப் பகுதியில் உள்ள குர்தீஸ்தான் மலைப் பகுதிகளில் பாடம் சொல்லித் தந்து பணம் பெறுவதற்காக, பிள்ளைகளைத் தேடி கரும்பலைகையுடன் பயணமாவதில் தொடங்குகிறது. பள்ளிக்கூடங்களை நோக்கி மாணவர்கள் செல்லும் வழக்கத்தையே பெரும்பாலும் பார்த்த நமக்கு(எனக்கு) ஆசிரியர்கள் பிள்ளைகளைத் தேடி பயணம் ஆவதில் தொடங்குகிறது படத்தின் ஆச்சர்யங்கள்.

இரண்டு ஆசிரியர்கள் மலைமுகடுகளின் இரண்டு பக்கங்களில் பயணப்பட, கதையும் இரண்டு தனித்தனி கதைகளை தன்னகத்தே கொண்டு பயணப்படத் தொடங்குகிறது. இரண்டு ஆசிரியர்களுக்குமே பாடம் சொல்லிக்கொடுத்து பணம் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம். அவர்கள் பயணப்படும் அந்த மலைப்பாதை ஈரான் ஈராக் இரண்டு நாடுகளுக்கும் இடையில் இருப்பது.

இதில் ஒரு ஆசிரியருக்கு ஈரானிலிருக்கும் ஈராக்கிய அகதிகள், முதியவர்கள், தங்களது மரணம் ஈராக்கில் தான் நடக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் கிடைக்கிறார்கள். அதாவது அந்த முதியவர்கள் ஈரானிலிருந்து கள்ளத்தனமாய் ஈராக்கிற்கு செல்ல முயல்கிறார்கள். இவர்களைப் பின்பற்றி செல்லும் ஒரு ஆசிரியர். இன்னொருவருக்கு அதே போல் ஈரானிலிருந்து ஈராக்கிற்கு பொருட்களைக் கடத்திச் செல்லும் சிறுவர்கள் கிடைக்கிறார்கள்.

இப்படியாக இருவேறு ஆசிரியர்களாக, இருவேறு குழுக்களாக கிளம்பும் ஒட்டுமொத்தமானவர்களின் விருப்பம் ஈரானிலிருந்து ஈராக்கிற்கு செல்வது. பனிப்பொழிவு நடக்கும் சமயம் அவ்வப்போது விமானங்களில் ரோந்தும் நடக்கிறது. கரணம் தப்பினால் மரணம் என்பது மாதிரியான மலைத் தொடர்ச்சி. இப்படியே போகிறது படம். அந்தப் பகுதிகளில் வாழும் சிறுவர்களுக்கும் சரி, வயதானவர்களுக்கும் சரி கல்வி என்பது ஒரு விஷயமாகவேயில்லை என்பதை இயக்குநர் மிக அழகாக படம் பிடிக்கிறார்.

இரண்டு ஆசிரியர்களும் பாடம் சொல்லித் தருகிறேன் நீங்கள் காசு கூட கொடுக்க வேண்டாம் சாப்பிட ஏதாவது கொடுத்தால் போதும் என்ற நிலைக்கு வந்தாலும் அவர்கள் சாப்பிடவே ஒன்றும் இல்லாத நிலையில், ஆசிரியர்களுக்கு சாப்பிடக் கொடுத்து படிக்கவேண்டிய நிலை இல்லை.

———————————-

இடையில் ஒரு ஆசிரியர் முதியவர்களுடன் பயணமாகும் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார் அப்படியே விவாகரத்தும். அந்தப் பெண் திருமணம் செய்து கொள்ளும் காட்சியும் விவாகரத்து செய்து கொள்ளும் காட்சியும் பார்க்கும் நமக்கு வேடிக்கையாய் இருக்கிறது. ஆனால் அந்த நபர்களின் வாழ்க்கை அப்படிப்பட்டதுதான் என நினைக்கும் பொழுது வேதனையாக இருக்கிறது.

பொருட்களைக் கடத்தும் சிறுவர்கள் எல்லையைக் கடக்கும் பொழுது சுட்டுக்கொல்லப்படுகிறார்கள், முதியவர்கள் எல்லையைக் கடந்து ஈராக்கிற்குள் செல்கிறார்கள். அப்பொழுது அந்த நபர்களால் தங்களுடைய எல்லை இதுதான் என்று தெரிந்துகொள்ள முடியாத அளவிற்கு குண்டுவீச்சால் எல்லை சிதிலமடைந்திருக்கிறது. முதியவர்கள் எல்லையைத் தொட்டதும் விழுந்து வணங்குவது போன்றவை அவர்கள் சொந்த நாட்டின் மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார்கள் என்று காட்டுகிறது. அவர்கள் அகதியாக வந்திறங்கிய நாட்டில் எவ்வளவுதான் வசதிவாய்ப்புக்கள் இருந்தாலும் சொந்தநாட்டிற்கு திரும்புவதையே விரும்புகிறார்கள் என்பதை படம் அழகாக படம் பிடிக்கிறது.

எல்லைப் படையினர் துப்பாக்கியால் சுடும் பொழுது, இவர்கள் கெமிக்கல் குண்டு வீசுகிறார்கள் என்று பயந்து நடுங்குவது, அந்த பிராந்தியமே கெமிக்கல் குண்டு வீச்சால் நேரடியாகப் பாதிக்கப்படாவிட்டாலும் மனதளவில் பாதிக்கப்பட்டதைக் காட்டுகிறது.

————————————-

உண்மையில் இந்தப் படம் முடிவடையும் பொழுது ஒரு பக்கம் சந்தோஷத்தையும் ஒரு பக்கம் துக்கத்தையும் ஏற்படுத்துகிறது, இதைத்தான் இயக்குநர் சொல்ல விரும்பியிருக்க வேண்டும். ‘டைஸ்’ போல ஒரு ரேண்டமாக எந்தப் பக்கம் சந்தோசம் வரும், இல்லை துக்கம் வரும், எனத் தெரியாமல் ஆனால் அதேசமயத்தில் அவர்களுடைய வாழ்க்கையை வாழ்ந்தாகவேண்டிய கட்டாயத்தில் இந்த மக்கள் இருப்பதை சொல்லியிருக்கிறார்.

நடித்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் ப்ரொபஷ்னல் நடிகர்கள் கிடையாது, அவர்களிடம் வேலை வாங்கியிருக்கிறார் இயக்குநர். நீங்களும் படம் பார்த்தீர்களென்றால் எக்ஸ்ட்ராஸில் உள்ள படம் எடுத்த விதத்தை பார்க்கவும்.

நிச்சயமாய்ப் பார்க்கப்படவேண்டிய ஒரு அருமையான படம் இந்த Blackboard.

இரண்டாம் குலோத்துங்க சோழன் – சாளுக்கிய சோழர்கள் – கிருமி கண்ட சோழன் – தசாவதாரம் – கல்கி – பொன்னியின் செல்வன் – ரங்கராஜ நம்பி – சைவம் – வைணவம் – ஜல்லி

முதலிலேயே ஒரு விஷயத்தை சொல்லிடுறேன் கிருமி கண்ட சோழன் என்று ஒரு சோழன் குறிப்பிடப்படுவது வரலாற்று ஆதாரம் கிடையாது. புராணங்களிலும் இதிகாசங்களிலும் ‘கதை’களிலும் சொல்லப்படுவது, சொல்லப்போனால் எப்படி ‘கடவுளுக்கும்’ அறிவியலுக்கும் எப்படி ஆகாதோ அப்படியே இந்த வகையறா ‘கதைகளுக்கும்’ வரலாற்றிற்கும் ஆகாது.

கல்கி பொன்னியின் செல்வனில், நந்தினி, ஆழ்வார்க்கடியான் என்ற கற்பனைக் கதாப்பாத்திரங்களைத் தவிர்த்தும், ஆதித்த கரிகாலன் விஷயத்தில் ஏகப்பட்ட கற்பனைகளைக் கலந்துகட்டி சோழர் வரலாற்றைக் கவிழ்த்திருந்தார் என்பதைச் சொல்லி அலுத்துவிட்டது. ஒவ்வொரு முறையும் கல்கியின் தீவிர ஆதரவாளர்கள் வந்து அவர்களுக்கு கல்கியை மதிக்கிறேன் அதற்காக அவர் எழுதிய வரலாற்றுத் தவறுகளை சுட்டாமல் விடமுடியாது என்று டிஸ்க்ளெய்ம்பர் போட்டும் கை வலிக்கிறது.

சரி மேட்டருக்கு, கிருமி கண்ட சோழன் என்று ‘மேற்சொன்ன கதைகள்’ உள்ளிட்டு எதுவும் எந்தச் சோழனையும் குறிப்பிட்டுச் சொல்வதில்லை. ஒட்டக்கூத்தரின் ‘குலோத்துங்கச் சோழன் உலா’ வரி 76 – 78, இன்னும் தெளிவாக உள்ள ‘இராஜராஜ சோழன்(இது முதலாம் இராஜராஜ சோழன் இல்லை) உலா’ வரி 64 – 66, தக்கையாகப் பரணி செய்யுள் 777 என்று வந்தாலும் இவைகள் அனைத்தும் மிகவும் குறிப்பிட்டு இரண்டாம் குலோத்துங்க சோழன் என்று கூறுவதில்லை.

இன்னும் சொல்லப்போனால் இந்த ‘கிருமி கொண்ட சோழன்’ முதலாம் குலோத்துங்க சோழன் தான் என்றே நிறைய பிற்காலக் கதைகள்(கோயிலொழுகு முதலியன) சொல்கின்றன. Life of Ramanuja என்ற எஸ்.கே. அய்யங்காரின் புத்தகம் குறிப்பிடுவதும் முதலாம் குலோத்துங்க சோழனையே. “சோழர் குடும்பம் அரசர்களாக இருந்து ஆட்சி செய்வது ஒழியட்டும்” என்று திருவாரூரில் கோயில் கொண்டுள்ள சிவபெருமான் பிரகடனம் செய்ததாக “திவ்யசூரி சரிதத்தில்” உறுதியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த “திவ்யசூரி சரிதமும்” “யதிராஜவைபவம்” உம் ராமானுஜர் வாழ்க்கையக் கூறும் பழைய நூல்கள்.

சாளுக்கிய சோழர்களை சோழர்களாக ஒப்புக்கொள்ளாமல் வைக்கும் பொழுது வரும் கடைசி சோழ மன்னர்களான வீர ராஜேந்திர சோழனையோ(இந்த மன்னன் இராஜகேசரி என்ற பட்டத்துடன் அழைக்கப்பட்டவன்) இல்லை அவனுக்குப் பின் வெகு சில காலம்(சொல்லப்போனால் சில வாரங்கள்) ஆண்ட ஆதி இராஜேந்திர சோழன் தான் இந்த ‘கிருமி கண்ட சோழன்’ என்றும் conspiracy theoryகள் உண்டு. ஆனால் என் வழி K.A. நீலகண்ட சாஸ்திரி வழி(தனியா வழியில் போக நானென்ன ரஜினிகாந்தா!) “எந்த ஒரு விஷயத்தை அடிப்படையாகக் கொண்டு புராணக் கதைகள் சொல்லும் விஷயங்களை நிலைநாட்டுவதற்கில்லை”(சோழர்கள் முதல் பாகம் – நீலகண்ட சாஸ்திரி – பக்கம் 404)

வரலாறோ மன்னருடைய கல்வெட்டுக்களோ இந்தக் காலத்தில் (985 – 1170) வாழ்ந்த மன்னன் கிருமி கடிச்சி(ஹிஹி) இறந்ததாகச் சொல்லவில்லை. சரி அப்படியே சைவ – வைணவர் பிரச்சனையில் ‘வைரஸ்’ தாக்கம் ஏற்பட்டு ‘முதலாம் குலோத்துங்கனுக்கு பிற்பட்ட’ காலத்தில் நடைபெற்ற பிரச்சனையில் சைவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வைணவர்களை எதிர்த்து அதனால் சிவபெருமானே(!) சாபம் கொடுத்து கிருமி பாதிப்பு ஏற்பட்டு இறந்ததாகச் சொல்லவில்லை. ரொம்பவும் லாஜிக்கலா யோசிச்சா அந்த குறிப்பிட்ட மன்னன் ‘முதலாம் இராஜராஜ சோழன்’ போலவோ ‘முதலாம் இராஜேந்திர சோழன்’ போலவோ சைவ மன்னனாக இருந்து எல்லா சமயங்களையும்(சைவம் வைணவம் சமணம் பௌத்தம் முதலியன…) ஆதரிக்காமல், வைணவர்களை ‘ஒரு காட்டு காட்டியதால்’ கோபப்பட்டு புலம்பியதாகவே கொள்ள முடியும் ‘கிருமி கண்ட சோழன்’ என்ற பதத்தை.இதற்கும் வரலாற்றிற்கும் சம்மந்தம் இல்லை

கமலஹாசன், வைணவர்களை ஆதரித்து சைவர்களை எதிர்ப்பதற்காக ‘இராமானுஜ நம்பி’ என்ற பெயரில் பாவம் அவர் நாத்தீகரா இருந்தும் முயல்வதாக நிருவ முயல்வதெல்லாம் ஒன்னும் சொல்றதுக்கில்லை. அதே போல் அந்தக் காலத்தில் இருந்ததைப் போல் வைணவ-சைவ பிரச்சனை இப்பொழுது இல்லை என்று நம்ப வைக்க முயல்வதும். ஈஸ்வரோ ரக்ஷத் ‘ஆண்டவன்’ தான் உங்களை எல்லாம் காப்பாற்றணும். படம் ‘ஹே ராமை’ப் போல கமர்ஷியல் பக்வாஸாக இல்லாமல் இருக்க எப்படி கே.எஸ்.ஆரின் உதவியை நம்பியிருக்கேனோ அதைப் போல் கமலஹாசன் படமாம ‘ஹே ராம்’ ஆக கமர்ஷியல் பக்வாஸாகி தேர்ந்த படமாக இருக்க வேண்டும் என்றும் நம்பிக் கொண்டிருக்கிறேன்.(இரண்டும் சரியா அமைஞ்சா என்னை விட சந்தோஷப்படப் போறது கமலஹாசனாத்தான் இருக்கும்!)

சைவ – வைணவ சண்டையை வலை உலகிற்கு எடுத்துட்டு வராதீங்க என்றெல்லாம் அறிவுரை வழங்கவில்லை விருப்பமுமில்லை சொல்லப்போனால் இப்படிச் சண்டைப் போட்டா கூத்தாடியா நான் தான் முதலில் நிற்பேன்.

இன்னும் விஷயம் தேவைப்பட்டால் – கிடைத்தால் வருகிறேன்.

அன்பு தோழர் ஃபெடரிக் நியீட்ஷேவைக் கொண்டு இதை முடித்து வைக்கிறேன்.

God is dead. God remains dead. And we have killed him. How shall we comfort ourselves, the murderers of all murderers? What was holiest and mightiest of all that the world has yet owned has bled to death under our knives: who will wipe this blood off us? What water is there for us to clean ourselves? What festivals of atonement, what sacred games shall we have to invent? Is not the greatness of this deed too great for us? Must we ourselves not become gods simply to appear worthy of it?

– Nietzsche, The Gay Science, Section 125, tr. Walter Kaufmann

(நியூட்டனைப்போல நியீட்ஷேவையும் கடவுள் நம்பிக்கையுள்ளவர் என்று சொல்லிவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் :))

ஆதித்த கரிகாலன்
இராஜராஜ சோழன்
இராஜேந்திர சோழன்
வீரராஜேந்திர சோழன்
ஆதி ராஜேந்திர சோழன்
முதலாம் குலோத்துங்க சோழன்
இரண்டாம் குலோத்துங்க சோழன்
மூன்றாம் குலோத்துங்க சோழன்
சோழர்கள்

தொடர்புடைய பதிவுகள்.

தசாவதாரம்: Kamal Haasan & his “Naked” Lies!!

Twitter, தமிழ் விக்கிபீடியா இன்ன பிற

பதிவெழுதுவதை விடவும் twitter உபயோகிப்பது சுலபமாக இருக்கிறது என்றாலும் twitter, தினப்பதிவுகளின் நீட்சியாகப் பார்க்கலாம். உலகைப் புரட்டிப்போடப்போகும் வலை உலகின் நீட்சியாக எல்லாம் இதைக் கருத முடியாது, அதனால் கடப்பாரையாக பதிவைக் கருதாத எவரும் சுலபமாக twitterராக மாறமுடியும். Javaவிற்கும் சேர்த்து API கொடுத்திருக்கிறார்கள். கொஞ்சம் விளையாடிக் கொண்டிருந்தேன். நல்லா வருது, ஆனால் கைவசம் dynamic application ஒன்று இல்லாத குறையை உணர்கிறேன். முன்பொருமுறை ப்ளாக்கர் API வைத்து பின்னூட்ட விளையாட்டு விளையாண்டது நினைவில் வருகிறது.

தீவிரமாக பதிவெழுதாமல் இருக்கும் பொழுதெல்லாம் எனக்கு தமிழ் விக்கிபீடியா நினைவிற்கு வரும், அதுபோல் தான் தற்சமயமும். ஜூலை 2006ல் தொடங்கியது என்றாலும் என்னுடைய தமிழ் விக்கி பங்களிப்பு அங்கையோடு நின்றது ஒரு சோகம் என்று தான் சொல்வேன். ஆதித்த கரிகாலன் பற்றி எழுதியது தான் முதல் கட்டுரை, விக்கிநடை பற்றி தெரியாத கணம், இன்னும் சொல்லப்போனால் என் நடையில் காதல் வர ஆரம்பித்த தருணம், வேகவேகமாகத் தட்டிப்போட்ட கட்டுரை என் நடையிலும், சிறிது எழுத்துப் பிழையுடனும் இருந்தது போலும் அதற்கு தமிழ் விக்கி மக்களிடம் இருந்து வந்த ரெஸ்பான்ஸ் என்னை ஒரு வருடம் அந்தப் பக்கம் அண்ட விடாமல் செய்தது. அது அவர்கள் தவறும் இல்லை சொல்லப்போனால் என் தவறும் இல்லை. விக்கிக்கு செய்வது/எழுதுவது என்பது ‘வறட்சியான’ ஒன்று.

சொல்லப்போனால் என்னைப் போன்ற ஒரு ஆள் அதனை செய்திருக்கவே முடியாது. Gone in 60 seconds படத்தில் நிக்கோலஸ் கேஜ் கடைசியில், 49 கார்களை கடத்திவிட்டு கடைசி ஒன்றையும் கொண்டு வந்து நிறுத்து, I need some appreciation என்பார் அதைப் போல் எனக்கு அந்தக் காலத்தில் தேவைப்பட்டது appreciation என்று சொல்ல முடியாது ஒரு கட்டுரைக்கு என்ன அப்ரிஷேஷன் வேண்டிக்கிடக்கு. இன்னும் சாதாரணமான மொழியில் எப்படி எழுதுவது என்று புரியும் படி சொல்லியிருக்கலாம்(ஈகோ உச்சக்கட்டத்தில் இருந்த சமயம் என்ன சொல்லியிருந்தாலும் விளங்கியிருக்காது! :)), சோழர்கள் பற்றி எழுதும் ஆவல், ஆதித்த கரிகாலன் பற்றி எழுதும் ஆவல் என்று வெறியுடன் வந்தால் அப்படி ஒரு பதில். இப்பொழுது சிரிப்பாக இருந்தாலும் அன்றைக்கு நினைத்தது அப்படித்தான். மற்றவர்களைப் பற்றித் தெரியாது எனக்கும் விக்கிநடை என்று புழக்கத்தில் இருக்கும் ஒரு விஷயத்திற்கும் பெரும் தொலைவு உண்டு.

பின்னர் எனக்கு நானே தமிழ் விக்கிபீடியா படும் அவஸ்தைகளைப் புரிந்து கொண்டு என் ஈகோவைக் கடாசிவிட்டு திரும்பவும் இறங்கிய பொழுது ஒரு வருடம் ஓடியிருந்தது. முதல் கட்டுரை 28 ஜூலை 2006, இரண்டாவது கட்டுரை 17 மே 2007. நான் மட்டுமல்ல விக்கிபீடியாவும் மாறியிருந்ததாகத் தெரிந்தது. ஏற்கனவே எழுதி இருந்த சோழர் வரலாறு பத்திகளை, கொஞ்சம் போல் விக்கிநடைக்கு மாற்றி போட ஆரம்பித்தேன். பின்னர் தொடர்ச்சியாக என்று சொல்லாவிட்டாலும் ஏதோ என்னால் ஆன, நேரம் செலவு செய்ய முடிந்த அளவிற்கு தமிழ் விக்கிக்கு எழுதினேன். சொல்லப்போனால் நானெல்லாம் இன்னும் ஒன்றும் செய்யவே ஆரம்பிக்கலை. இப்போதைக்கு சோழர்கள் பற்றி ஆங்கில விக்கிபீடியா அளவிற்கு இல்லை அதற்கும் மேல் விவரம் சேர்க்க வேண்டும் என்ற ஆசை மட்டும் இருக்கிறது.

ஆழ உழுவது என்றும் அகல உழுவது என்றும் பதிவுகளிலேயே பேச்சு உண்டு, பதிவுலகில் அகல உழுவதையே நான் தேர்ந்தெடுத்தாலும் தமிழ் விக்கியில் ஆழ உழுவதைத் தேர்ந்தெடுத்தேன். ஆங்கில விக்கிபீடியாவை நாளொன்றுக்கு இருபது இருபத்தைந்து முறைக்கு மேல் உபயோகிப்பவன் என்ற முறையில் இதை நான் செய்ய வேண்டியது என் கடமை என்றே நினைக்கிறேன். இப்போதைக்கு கொஞ்சம் “நீலகண்ட சாஸ்திரி” நடையில் வருகிறது சோழர் கட்டுரைகள் என்றாலும் ஓரளவிற்கு முடித்துவிட்டு எழுதிய எல்லாக்கட்டுரையையும் இன்னும் பொது நடைக்கு கொண்டு வரவேண்டும். ஆச்சர்யமாகயிருக்கிறது, விரும்பி ஏற்றுக் கொண்ட என் நடையை விட்டு விலகி இதைச் செய்கிறேன் எனும் பொழுது ஆனால் முன்னர் சொன்ன காரணம் தான் மீண்டும் மீண்டும் நினைவில் வருகிறது. என்னைக் கேட்டால் தமிழ் விக்கிபீடியாவிற்கு பதிவர்கள் இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்றே சொல்வேன்.

எடுத்துக் கொள்ள விஷயமா இல்லை, உங்களுக்கு பிடித்த புத்தகங்களைப் பற்றி எழுதலாம்(தனித்தனி புத்தகங்களாக), எழுத்தாளர்களைப் பற்றி, சினிமாக்களைப் பற்றி ஆனால் ஒரேயொரு பிரச்சனை தான் நடை பொதுவாக இருக்க வேண்டும் appreciation பதிவுலகத்தில் கிடைக்கும் அளவிற்குக் கிடைக்காது அதனால் பின்வரும் ஒரு சந்ததிக்கு விஷயம் கொடுத்தவர்களாயிருப்பீர்கள்.

சமீபத்தில் மாற்றங்கள் செய்த மூன்று கட்டுரைகள்.

இராஜராஜ சோழன்
இராஜேந்திர சோழன்
புதுக்கோட்டை(பாதியில் நிற்கிறது)

ஏற்கனவே mohandoss.in என்ற இணையதளம் என்னிடம் தான் இருந்தது/இருக்கிறது, அதற்கு இணைப்பு கொடுத்திருந்த ஜாவா, டேட்டாபேஸ் சப்போர்ட் வாய்ந்த என் மற்றொரு இணையதளம் மறதியில் கைவிட்டுப் போனதால் mohandoss.in ன்னும் அப்படியே நின்றது. இப்பொழுது mohandoss.com வாங்கி, blog.mohandoss.comல் செப்புப்பட்டயம் ஏற்றப்பட்டுவிட்டது. எனக்கு ப்ளாக்கர் விட்டுச் செல்ல அத்தனை ஆசையில்லை, சொல்லப்போனால் kundavai.wordpress.com நான் கொஞ்ச காலமாகவே உபயோகித்துவரும் ஒரு இணையதளம் தான் என்றாலும். ப்ளாக்கர் ஃபீவர் இன்னும் போகலை. முழுசும் சொந்தமா code எழுதி Java, J2EE, structs, springs என்று கையில் கிடைச்சதையெல்லாம் போட்டு ஒரு சொந்த இணையதளம் வைச்சிக்கணும்னு ரொம்ப ஆசை. சொல்லப்போனால் இது திரும்பவும் சக்கரம் கண்டுபிடிக்கிற கதைதான்னாலும் அப்படி ஒரு வெறி இருந்தது, இப்ப ரொம்ப கொஞ்சமா இருக்கு. 🙂

Adventure tourism என்று சொல்லி கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவர் வயநாட்(கேரளா) போகலாமா என்று கேட்டிருந்தார் என் பெயர் எல்லாம் டீபால்ட்டாகவே உண்டென்றாலும் வேறு எதுவும் ப்ளான் இருக்கக்கூடாதென்பதற்கான ஒரு அப்படி ஒரு கேள்வி. யார் யார் வருவார்கள் என்று தெரிந்தாலும் டீம் முழுவதற்கும் மெயில் அனுப்பப்பட்டது. பதில் எப்பொழுதும் போலத்தான் bachelor எல்லாம் in, married எல்லாம் out. :))))) கல்யாணம் செய்துக்கிறதைப் பத்தி தீவிரமா யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

PS: தமிழ்மணத்தில் இன்னமும் புதிய பதிவின் உரல் சேர்க்கப்படாததால் பூனைக்குட்டியை எழுப்பி விட்டிருக்கிறேன்.