என் பெயர் ராமசேஷன்

ஆரம்பத்தில் இருந்தே ஒரு விஷயத்தை நானாய்த் தேடிப்படிக்காமல், யாராவது நன்றாய் இருக்கிறது என்று சொன்னால் படிக்கத்தொடங்கும் வழக்கம் உண்டு ஆனால் அந்த அறிமுகம் எனக்கு முதல் புத்தகத்திற்குத்தான் வேண்டும். அதற்குப்பிறகு தேடித்தேடி படிக்கவேண்டியது என் பொறுப்பு. பொன்னியின் செல்வன் அறிமுகம் கிடைத்த பிறகு நான் அலை ஓசை படித்திருக்கிறேன். இதே போல் தான் பாலகுமாரன், எண்டமூரி வீரேந்திரநாத், சாண்டில்யன் என்று யாராவது ஒருவர் ஆத்மியின் பெயரையோ இல்லை நாவலின் பெயரையோ சொல்லவேண்டிய தேவையிருந்திருக்கிறது.

ஆனால் இந்தச் சமயத்தில் அப்படிப்பட்ட ஒன்று தேவைப்படாமல் நானாய்த் தேடிப்படிக்கத் தொடங்கியிருந்தேன். தமிழ்சிஃபியில் காலச்சுவட்டில் சாணக்கியாவின் ஆண்களின் படித்துறை படிக்கத்தொடங்கி அப்படியே, என் வீட்டின் வரைபடம், கனவுப்புத்தகம் என்று நீளத்தொடங்கியது அப்படி ஆரம்பித்தது தான் ரமேஷ் – பிரேம் புத்தகங்களும் ஆனால் டிசேவின் பதிவில் தான் ரமேஷ் பிரேமின் அறிமுகம் கிடைத்தது.

இப்படிப்பட்ட அறிமுகமாய் இல்லாமல், எங்கோ மனதில் ஒட்டிக்கொண்டதைப் போல் என் பெயர் ராமசேஷன் நல்ல புத்தகம் என்ற எண்ணம் இருந்தது. புத்தகம் வாங்கி அது ஒரு மூளையில் தூங்கிக் கொண்டிருந்தது. ஒரு பதினெட்டு மணிநேர வேளைநாளுக்குப் பின் தூக்கம் வராமல், கிளாஸ் நேம்களும் மெத்தேட் நேம்களும் லாஜிக்கல் அனலடிக்கள் லூப்களும் பிஸினஸ் லாஜிக்கும் தூக்கத்திற்குப் பிறகும் துரத்திய நாளொன்றில் இரவு இரண்டு மணிக்கு மேல் படிக்கத் தொடங்கினேன் என் பெயர் ராமசேஷனை.

கங்கையாற்றின் வேகத்தை நேரில் பார்த்திருக்கிறேன் ஹரித்துவார் ரிஷிகேஸில், அலட்சியமாக நின்றவர்களை அப்படியே இழுத்துச் செல்லும் வேகமும், லாவகமும் கங்கைக்கு உண்டு, அப்படிப்பட்ட கங்கை தான் நினைவில் வந்தது என் பெயர் ராமசேஷனை படிக்கத் தொடங்கிய பொழுது. உபபாண்டவம், நெடுங்குருதி என என்னை நாவலுக்குள் இழுத்துப்போகாமல், நாவலுக்குள் என்னைத் திணித்து படித்து வந்த பொழுதில் ராமசேஷன் தந்த அனுபவம் வித்தியாசமானது. வேகமாய் நாவலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டேன். ஆனால் காலில் கட்டியிருந்த சங்கலியாய் சாப்ட்வேர் துறை தந்த நாளொன்றின் அலுப்பு நான்கைந்து பக்கங்களுக்குள் இழுத்து நிறுத்த தூங்கப்பண்ணியது.

பின்னர் அடுத்த நாள் இந்த அனுபவத்தை நண்பரொருவரிடம் சாட்டில் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் அசாதாரணமாய் ‘எனக்குத் தெரியும் ஓய் உங்கள மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் பிடிக்கும் அந்தப் புத்தகம்’ னு சொல்ல, இன்னும் அதிக ஆர்வக்கோளாராகி அடுத்த நாள் படித்து முடித்திருந்தேன். புது அனுபவம், பொன்னியின் செல்வன் படித்து முடித்து பத்து வருடங்கள் ஆகியிருக்கும் அதே போன்றதொரு உணர்வு.

நாவலில் ராமசேஷன் அறிமுகப்படுத்துவதாய், பங்கஜம் மாமி, மூர்த்தி, ராவ் அவன் சகோதரி மாலா, அவங்க அம்மா மிஸஸ் ராவ், ராமசேஷனின் அப்பா, அம்மா, அத்தை, பெரியப்பா, பெரியம்மா, பிரேமா என ஒவ்வொருவரும் நமக்கே தெரியாமல் நாவலுக்குள் நுழைந்துவிடுகிறார்கள்.

உயிர்மை கொடுத்த பின்பக்க அறிமுகம் போல, ஒரு நகர்ப்புற, மத்தியதர இளைஞன், ராமசேஷன் கண்களின் வழியே நவீன வாழ்க்கையின் பாசாங்குகளும் முகமூடிகளும் வேட்கைகளும் சித்திரக்கப்படுகிறது. சுயநிரூபணத்திற்கான பரிதவிப்பும் அடையாளத் தேடலும் கொண்ட இளமையின் வண்ணமும் உங்கள் மீதும் பூசப்படுகிறது.

ஆமாம், ராமசேஷன். கர்நாடகமான ஒரு பெயர். எனக்கு என் அப்பா மீது கோபமேற்படுத்திய பல காரணங்களில் இந்தப் பெயரும் ஒன்று.”

இப்படி ஆரம்பிக்கும் இந்த நாவலில் அறிமுகப்படுத்தும் நபர்களை, சூழ்நிலைகளை நீங்கள் பெரும்பாலும் நேரில் பார்த்திருப்பீர்கள், அவர்களை நீங்கள் ஆதவனின் கண்கொண்டு இந்த நாவலில் பார்க்கலாம். எல்லா விஷயங்களையும் பற்றியும் ஆதவனின் வார்த்தைக் கோர்வைகள் ஆச்சர்யமூட்டுபவையாகவும் ஒரு பிரச்சனையை ராமசேஷன் மூலமாய் ஆதவன் அணுகும் முஅற யோசிக்கவைப்பதாயும் இருக்கிறது. பாட்டியும் அத்தையும் அப்பாவின் மீதான தங்கள் ஆதிக்கத்தை அம்மாவை விடவும் அதிகப்படுத்தியது அதில் பாட்டியின் செயல்கள். பாட்டியின் இறப்பிற்குப் பிறகு ஆதிக்கப்போட்டியில் அத்தையை அம்மா வென்றது என்பன போன்றவற்றிலும் அதற்குப்பிறகு அத்தை எப்படி தன் நிலையை காப்பாற்றிக்கொண்டால் போன்றவற்றை நாவலில் முதல் மூன்று பக்கங்களிலிலேயே விளக்கிவிடுகிறார்.

அவருடைய பாத்திர அறிமுகங்கள் கூட அப்படித்தான். அவர் ராமசேஷனை அறிமுகப்படுத்தியதை படித்தீர்கள்.

அப்பா ஒரு சம்பிரதாயப் பிச்சு. கோழை…” சொல்லவும் வேண்டுமா இது அப்பாவைப் பற்றியது

டே டு டே குடும்பச் சிக்கல்களிலே, மத சம்மந்தமான(பண்டிகை புனஸ்காரங்கள் இத்தியாதி, சகுனம், நாள், நட்சத்திரம்) கடவுள் சம்மந்தமான(என்னிக்குக் கோவிலுக்குப் போகணும், எந்தக் கோவிலுக்குப் போகணும்?) என்பதிலெல்லாம் அவளுடையதுதான் கடைசி வார்த்தை. இது டிபிகள் பொம்மனாட்டித் தந்திரம். கடவுளின் பிரதநிதியாகத் தன்னை ப்ரொஜக்ட் பண்ணிப் பண்ணி…” இது பாட்டியைப் பற்றிய அறிமுகம்.

அப்பா அத்தையுடன் ஷோடௌனுக்குத் தயாராக இல்லாததால், ஸெக்ஸ் தேவை காரணமாக அம்மாவின் முன்பு தான் மண்டியிட வேண்டி வந்தது அப்பாவுக்கு ஒரு குற்ற உணர்ச்சியை அளித்தது. இந்த குற்ற உணர்ச்சியை அத்தை எக்ஸ்ப்ளாய்ட் பண்ணினாள்…” இது அத்தையைப் பற்றியது.

அம்மாவுக்குத் தான் ஒரு இஞ்சினியரின் அம்மாவாக இருக்க வேண்டுமென்ற ஆசை பிறந்தது. அவளுடைய பெரியக்காள் பிள்ளை ஏற்கனவே இஞ்சினியராக இருந்தான்… அவள் பார்த்த திரைப்படங்களைப் பார்த்துக் கொண்டு, அவளுடன் கோவில்கள், அபிராமி அந்தாதி வகுப்புக்கள், பொன்விழாக் கொண்டாடும் வெற்றி நாடகங்கள் முதலியவற்றைப் பகிரந்து கொண்ட மாமிகள் பலரின் பிள்ளைகள் இஞ்சினியரிங் படித்தார்கள்…” இது அம்மாவைப் பற்றி

மூர்த்தி ஒரு நாய், அல்லது விசுவாசமுள்ள (பழங்காலத்து) பண்ணையாளைத்தான் எனக்கு நினைவூட்டினான்…” இது மூர்த்திக்கானது.

…நான் மிகச் சிரமப்பட்டு அவளுடைய முகத்துக்குக் கீழே பார்வையை இறக்காமலிருக்க முயன்று, தோல்வியுற்று, பார்வையால் கீழே மினி டைவ் அடித்தவாறு இருந்தேன்.

அவளுடைய மார்பகங்கள் மாக்ஸியில் ஏற்படுத்தியிருந்த மேடு… ஊப்ஸ்.

அதுவரை கதைகளில் ‘என்னவோ செய்தது, என்னவோ செய்தது’ என்று அர்த்தம் தெரியாமலேயே – இளமையின் அறியாமையில் – படித்திருந்த எனக்கு. அப்போதுதான் திடீரென்று அந்தப் பதச் சேர்க்கையின் அர்த்தம் புரிந்தது…”

இது மாலாவைப் பற்றிய ஒன்று.

…ராவின் அம்மா, ஒரு குழந்தையின் அபிநயத்தை அனுதாபத்துடன் பார்த்து ஷொட்டு கொடுப்பது போன்ற பாவாத்துடன் என் மீது ஒரு புன்னகைத் துணுக்கை கிள்ளி எறிந்தாள் …எனக்கு அந்தப் புடவை இன்னும் நினைவிருக்கிறது. ராவின் அம்மா என்னுடைய விசாரணையின் போது கட்டிக் கொண்டிருந்த புடவை… அவள் ஒரு முட்டாளில்லை என் போன்றவர்களை உள்ளும் புறமுமாக அவள் அறிவாள். சாலையில் போகும் பொழுது வழியில் கிடக்கிற தகர டப்பாவை வெறுமனே ஒரு உதைவிட்டுக் கொண்டு போகிறவர்கள் நாங்கள்…

பிரேமா மாலாவைப் போல வெளுப்பு இல்லை, கறுப்புதான். ஆனால் அட்டைக் கறுப்பில்லை. மாலாவை விட இவளுக்கு உயரம் குறைச்சல், முன்புற பின்புற மேடுகள் குறைச்சல், தலைமயிர் குறைச்சல், குரலும் மென்மையாக இல்லாமல் கரகரப்பாக இருக்கும்…” இது பிரேமாவைப் பற்றியது.

இப்படி ஆரம்பமாகும் நாவலில் கதையென்ற ஒன்றை பிரமாதமாக சொல்லமுடியாது, ஆனால் அதற்கான அவசியமும் இருப்பதாகத் தெரியவில்லை. தேவைப்பட்ட இடங்களில் சம்பவங்களைக் கோர்த்து நாவலை நகர்த்திவிடுகிறார் ஆசிரியர். ஆனால் எல்லா இடங்களிலும் நவீன வாழ்க்கையின் பாசாங்குகளை பளிரென்று வெளிப்படுத்துகிறார்.

மாலாவுடன் நீளும் ராமசேஷனின் பழக்கம் அவர்களுக்குள் உடல் சம்மந்தமான பழக்கத்தை ஏற்படுத்துவிடுவதையும் அந்தப் பழக்கத்தில் இருக்கும் சமயத்தில் அவர்கள் மட்டும்தான் நிஜமென்றும் மற்றதெல்லாம் கற்பனையாகவும் பொய்களாகவும் தோன்றுவதையும், ராமசேஷன் தான் ஒரு அல்சேஷனாக மாறிவிட்டதாக நினைப்பது பின்னர் தங்கள் உறவு ஒரு பாதுகாப்பான உறவாயில்லாமலிருப்பதைப் பற்றி கவலைப்படுபவது, ஆனால் நிரோத் வாங்க பயப்படுபது, தன் தந்தை உறை உபயோகித்திருப்பாரா என்று யோசிப்பது என்று பாசாங்குகள் தோலுரிக்கப்படுகின்றன.

மிஸஸ் ராவ், மற்றும் இயக்குநருக்கிடையேயான உறவு, இராமசேஷன் பிரேமாவிற்கிடையேயான உறவு, ராமசேஷனினன் பெரியப்பா பெரியாம்மாவின் உறவு, ராமசேஷன் பங்கஜம் மாமிக்கிடையேயான உறவு, பங்கஜம் மாமி மற்றும் அவருடைய கணவருக்கிடையேயான உறவு என அனைத்து பத்தாம் பசலித்தனங்களும் உடைக்கப்பட்டிருக்கின்றன, ஆதவனின் எழுத்துக்களின் வழியாக. புத்திசாலித்தனமான அவருடைய எழுதும் திறன், இரண்டு வரிகளுக்கிடையில் தொனிக்கும் நகைச்சுவையுடன் வெளிப்படுகிறது. இந்த நகைச்சுவை உணர்வுதான் நாவலை நாம் படிக்கும் பொழுது சட்டென்று உணர்வது ஆனால் சப்டைலாக பாசாங்குகள், முகமூடிகள் உடைக்கப்படுகின்றன, சில சாம்பிள்கள்.

…ஸீட்டின் கைப்பிடி மேலிருந்த அவள் கைமீது படுகிறாற் போல என் கையை வைத்துக் கொண்டேன்.

அவள் எதுவும் நடக்காதது போலத் திரையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

(அ) அவளுக்கு ஆட்சேபணையில்லாமல் இருக்கலாம். (ஆ) அவளுக்குப் பிடிக்கவில்லை, ஆனால் உடனே கையை விலக்கி என்னைப் புண்படுத்த வேண்டாமென்று கையை அப்படியே வைத்துக் கொண்டிருக்கிறாள். (இ) ஒருவேளை தற்செயலாக என் கை அந்த நிலையில் இருப்பதாக நினைத்து என் அடுத்த இயக்கத்திற்காகக் காத்திருக்கிறாள். (ஈ) கை தொடப்படுவது அவளுக்குப் பெரிய விஷயமேயில்லை. நான் வேறு எதையாவது தொடவேண்டும், அல்லது பேசமாலிருக்க வேண்டும்…”

…அவள் தைலத்தை என் மார்பில் தடவ, நான் அந்த ஸ்பரிச இன்பத்தில் லயித்துப்போகத் தொடங்கினேன். அவசரமாக ஒரு கணக்குப் போட்டேன். இரண்டும் இரண்டும் நாலு என்ற கணக்கு.

சட்டென்று அவள் மார்பின் மீது சாய்ந்தேன். அவள் முதுகைச் சுற்றிக் கைகளைக் கோர்த்து அணைத்துக் கொண்டேன். அவள் என்னை ஊக்குவிப்பதுபோல, என் முதுகில் தடவிக் கொடுத்தாள்.

நான் அவள் முதுகின் மேல் தடவியவாறு இருந்தேன். ரவிக்கைப் பித்தான்கள் மீது தடவினேன். சட்டென்று ஒரு பித்தானை அவிழ்த்து, அவள் முகபாவத்தைப் பார்ப்பதற்காக நிமிர்ந்தேன்.

ஆனால் அந்த நிமிரல் பூர்த்தியாவதற்குள் நான் படுக்கையில் தொப்பென்று, முகம் கீழாயிருக்க விழுந்தேன்.

இரண்டும் இரண்டும் எப்போதும் நாலாகி விடுவதில்லை.

‘யூ டெர்ட்டி ராஸ்கல்’…”

வெயிட் அ மினிட், வெயிட் அ மினிட், இந்த இரண்டு இடங்களை எடுத்து எழுதியதற்கு வெறுமனே என் அரிப்பு மட்டும் காரணம் கிடையாது.

ஒரு பெண், தான் பார்த்தே நான்கைந்து மணிநேரங்கள் தான் ஆகியிருக்கும் ஒருத்தியின் மீது லேசாக கைப்பட, அதற்கான ரியாக்ஷன்கள் எதுவும் வராததால் ராமசேஷனின் மனதில் ஓடும் வரிகள் நிச்சயமாய் ஒரு சராசரி ஆண் மகனை மிக அழகாக விவரிக்கிறது. சட்டென்று அந்தப் பெண்ணின் மீது எழும் தப்பெண்ணம் என அப்படியே ஒரு இளைஞனின் எண்ணத்தை எழுத்தில் பார்க்கிறேன். இந்த மாதிரி என்று சொல்ல முடியாவிட்டாலும் இதே போல பலமுறை சிந்தித்திருக்கிறேன். அதுவும் ஒரு செயலுக்கு காரணங்களை யோசித்திருக்கிறேன்.

அதைப் போலவே அடுத்த பத்தியும், ஒரு பணக்காரி, அவள் பணக்காரியாயிருப்பதாலேயே அவள் தப்பானவளாக இருப்பாள் என இரண்டும் இரண்டும் நான்கென்று கணக்குப்போடும் ராமசேஷன் கடைசியில் சொல்லும் எப்பொழுதும் இரண்டும் இரண்டும் நான்காகிவிடுவதில்லை. என்ற வரிகள் பிரமாதம் என்று சொல்வேன். கேட்கலாம் எப்படி இரண்டையும் இரண்டையும் எப்பொழுது கூட்டினாலும் நான்கு தானே என்று. அப்படிக் கேட்டால் அதற்குரிய விளக்கத்தை பிரகாஷிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.

என் வாழ்க்கையில் இதைப் போலவே(அந்த மேட்டரில் இல்லை) பல தடவைகள் இரண்டும் இரண்டும் நான்கென்று ரிஸ்க் எடுத்திருக்கிறேன். ஆனால் பட்டுத் தெரிந்து கொண்டேன், இரண்டும் இரண்டும் பெரும்பாலும் நாலாகயிருப்பதில்லை என்று, அதை அப்படியே எழுதிய ஆதவனின் எழுத்தின் மீது காதலே வந்துவிட்டது.

…உன்னுடன் தனியே இருக்கும்போது உன்னுடனாவது ஏதாவது பேசுவானா?’ என்று நான் பிரேமாவைக் கேட்டேன். ‘ஷ்யூர், வை நாட்?’ என்றாள் அவள். ‘நீ இருக்கும் போது அவனுக்கு கூச்சமாய்ப் போய்விடுகிறது. உன்னுடைய காஸனோவா பெர்ஸனாலிடி அவனுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்குகிறது… என்னிடம் நிறையப் பேசுவான், தனியே இருக்கும்போது.’

‘எதைப்பற்றி?’

‘சிலருடைய மூக்கு ஏன் மிக நீளமாக இருக்கிறது என்பது பற்றி…’”

இந்த உரையாடலில் மூக்கு எங்கிருந்து வருகிறது தெரிகிறதா? இதைப் போன்ற விஷயங்களை அவருடைய உரையாடல்களிலோ இல்லை விவரணைகளிலோ மிக அதிகமாய்ப் பார்க்கலாம்.

ஆனால் நான் ஆதவனின் இந்த நாவலில் விழுந்தது இதற்காகயில்லை. நிச்சயமாக.

…அவளுடைய கறுப்பு நிறமும் உயரக் குறைவாகவும் அவளுக்கு ஒரு இன்ஸெக்யூரிட்டியைக் கொடுத்தது. மரபுக்கெதிரான அவளுடைய பாய்ச்சலகளுக்கு இந்த இன்ஸெக்யூரிட்டிதான் காரணமென்பதைப் பின்னால் நான் புரிந்துகொண்டு அவள் மீது அனுதாபப்படக் கற்றுக் கொண்டேன். ஆனால் அந்த ஆரம்ப நாட்களில், ஏற்கனவே சொன்னது போல, சராசரித் தமிழ் பிராமணர்களின் மீது அவள் காட்டிய தீவிர வெறுப்பையும், பொழிந்த கனமான வசைமாரியையும் நான் புரிந்துகொள்ள முடியாமல் திணறினேன். பௌதிக ஆகிருதியையும் தோற்றத்தையுமே செலவாணியாகக் கொண்ட சராசரி பெண்வர்க்கம், சராசரி ஆண் வர்க்கம், இரண்டிடையேயும் தான் மிகக்குறைந்த மதிப்பெண்களே பெறுவோமென்பதை உணரந்து, தான் இவர்களால் ஒதுக்கப்படுமுன் இவர்களைத் தான் ஒதுக்கும் உபாயமாகவே (அதாவது ஒரு பழிப்புக் காட்டலாக) அவள் தன் இன்டலெக்சுவல் திறன்களை ஆவேசமாக வலியுறுத்தவும்…

இது அவரால் நாவலுக்காகப் படைக்கப்பட்ட பெண், கறுப்பு நிறமாயும் உயரக் குறைவாயும் படைத்து, அதன் மூலம் நிச்சயமாக அந்த வகையாக உண்மையிலேயே இருக்கும் பெண்களின் மனநிலையை படம்பிடித்திருக்கிறார்.(என்னைப் பொறுத்தவரை) வேண்டுமானால் பாலினம் வராதென்றால் என்னைப் பற்றி நான் நினைத்துக் கொண்டிருக்கும் அதே விமர்சனங்கள். எல்லா விஷயங்களைப் பற்றியும் தீவிரமான மறுபரீசீலனைக்கு உட்படுத்துவதைப் பற்றி நான் இந்தச் சமயத்தில் பயப்படுவதில்லை, ஜாதி, மதம், இட ஒதுக்கீடு, காதல், கல்யாணம், மனைவி, பெண்ணீயம், ஆணீயம்,கடவுள் மறுப்பு ஆதரிப்பு என என் மறு பரிசீலனைகள் எதற்கும் தயங்குவதில்லை. உண்மை என மனம் நம்புவதை மனதோடே வைத்துக் கொண்டிருக்கிறேன். வெளியில் சொல்வதில்லை அவ்வளவே. முன்பே சொன்னது போல், மிகச் சின்ன வயதில் ஆஸ்திரேலியா டீம் பிடித்துப் போனதிற்கான சாத்தியங்களைக் கூட பொய்கள் கலப்பில்லாமல் யோசித்து உண்மையை கண்டறிய முடிந்திருக்கிறது என்னால். ஆனால் வெளிப்படுத்துவது தேவையில்லையென்றே இன்னும் நினைக்கிறேன்.

ஆதவன் அவர் அப்படி மறுபரிசீலனை செய்ததை நாவலாக எழுதியிருக்கிறார். இந்த நாவலைப் பற்றி எழுதச் சொன்னால் இதைப் போல இன்னொரு நாவல் தான் என்னால் எழுத முடியும். ரிவ்யூ எழுவதற்காக குறிப்பெடுத்த விஷயங்களில் 10% கூட தாண்டவில்லை. பக்கம் 5 யைத் தாண்டிவிட்டது(மைக்ரோசாப்ட் வேர்டில்). இந்த நாவல் படித்து முடித்ததும் நான் ஆதவனின் விசிறி ஆகவிட்டது உண்மை, தொடர்ந்து காகித மலர்கள், இரவிற்கு முன்னால் வருவது மாலை(குறுநாவல்கள்), ஆதவனின் சிறுகதைகள் என கண்ணில் பட்ட ஆதவனுடையவை அனைத்தையும் வாங்கி படித்து முடித்தாகிவிட்டதில் இருந்து நான் புரிந்து கொண்டேன். சிறுகதை, நாவல்கள், குறுநாவல்கள் என ஆதவன் எழுதியது இவ்வளவே என நினைக்கிறேன். இந்த வகையறாக்களில் ஆதவன் எழுதிய எதையாவது மிஸ் பண்ணியிருந்தால் சொல்லவும்.

16 thoughts on “என் பெயர் ராமசேஷன்

 1. எனக்கும் ஆதவன் நண்பரின் மூலமாகவே அறிமுகம். இரண்டு முறை முயற்சி செய்து விட்டேன். புரியவில்லை. ஆனால், அதை படிப்பதற்கு ஒரு அசாத்தியமான அமைதி தேவைபடுகிறது. சாதாரண எழுத்துக்கள் இல்லை அவை. மனிதர்களை படித்து அவர்களையே எழுதியுள்ளார் ஆதவன். உங்களின் இந்த பதிவு படித்தவுடன், மறுபடியும் ஒரு முயற்சி கொடுக்கலாம என்றிருக்கிறேன்.

 2. மோகன் தாஸ்,

  நல்லா எழுதியிருக்கீருவே. என் பெயர் ராமசேஷனை வியந்து பாராட்டுபவர்கள் சுஜாதாவின் பாய்ஸ் வசனத்தை குறை சொல்வது ஒருவிதமான பாசாங்குதான். ஆதவன் எழுத்துக்கள் அதை விட மோசமானவை என்றொரு கருத்தை நண்பரொருவர் சொன்னார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

  சாத்தான்குளத்தான்

 3. அருமையான பதிவு ..ஒரு தபா செந்தழல் ரவி சொன்னாரு ..மோகன் சாரு சும்மா இருக்காரு போல ஒரு மணி நேரத்துக்கு ஒரு பதிவு போடுறாருனு..ஆனா நல்ல சில பதிவுகளும் இருக்கு ..வாழ்த்துக்கள்

  அப்புறம் சார் நான் சாண்டில்யன் படித்ததே இல்லை..அவர் எழுத்துக்கள் படிக்க ஆசை .அவரை பற்றி அல்லைது அவர் கதைகள் ஏதேனும் இருந்தால் அனுப்ப ஆர் பதியவும் ..அடிகடி வருகிறேன்

 4. லக்ஷ்மன், எனக்கென்னவோ ஆதவனைப் படித்து புரிந்து கொள்வதில் பிரச்சனைகள் ஏற்படவில்லை. நிச்சயமாய் இன்னுமொறு முயற்சி செய்யுங்கள்.

  ஆசீப்,

  சுஜாதாவின் பாய்ஸ் வசனத்தைக் குறைகூறுபவர்கள் பற்றி எனக்கு சொல்ல ஒன்றுமில்லை. நிறைய எழுதியாகிவிட்டது இதைப் பற்றி.

  ஆதவனின் எழுத்துக்கள் மொத்தமும்(ஓரளவிற்கு… நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள்)

  தனக்குச் சரியென்று பட்டதை மனிதர் சொல்லியிருக்கிறார். அவ்வளவே. நவீன உலகத்தின் பாசாங்குகளை, அதுவும் ஸெக்சுவலாக இருக்கும் பாசாங்குகளை இப்படித்தான் உடைக்க முடியும் தல, வேறவழியில்லை.

  என் பெயர் ராமசேஷனை தூக்குச் சாப்பிடும் காகிதமலர்கள்.(ஆ வருது வருது, விலகு விலகு, இன்னொரு விமர்சனம் வருது.)

  நீங்கள் மரப்பசு படித்திருக்கிறீர்களா? படித்துப் பாருங்கள் ஓய்! சுஜாதா எல்லாம் ஒன்னுமேயில்லைன்னு ஆய்டும்.

 5. கார்த்திக் பிரபு,

  எனக்கு நல்ல பதிவுன்னு மனசுக்குப் படாத விஷயங்களை நான் பதிவிடுவதேயில்லை.

  இன்னமும் எனக்கு நல்லாயில்லை என்று மனதில் பட்டதால் தூங்கும் பதிவுகள் ஏராளம் உண்டு ப்ளாக்கரிலும், என் டெக்ஸ்டாப்பிலும்.

  “சிங்கத்தைச் சாச்சுப்புட்டாங்களே” என்றொரு பதிவெழுதி மாதம் ஆறாகிறது. இன்னமும் மனதிற்கு திருப்தி வராததால் ப்ளாக்கரில் தூங்குகிறது. விஷயம் என்னன்னா நம்ம பதிவர்கள் ஒவ்வொருத்தரும் சிங்கத்தை எப்படிக் கொல்வாங்கங்கிறதுதான் மேட்டர்.

  நாலைஞ்சு பேரை வச்சு எழுதிட்டேன் இன்னமும் போடலை. வேண்டுங்கிறவங்க கான்செப்டை எடுத்துக்கலாம்.

  ———–

  ஒரு நாளைக்கு நான் தூங்குவது ஏறக்குறைய ஐந்து மணிநேரம் தான் இருக்கும். அதனால் எனக்கு டைம் நிறையக் கிடைக்குது. அவ்வளவுதான் விஷயம்.

 6. ஆதவனின் காகிதமலர்கள்,புதுமைபித்தனின் துரோகம்(சிறுகதை),புழுதியில் வீணை(நாடகம்-பாரதியை பற்றி) படிக்கலாம்.

 7. பிரசன்னா நன்றி. //இரவுக்கு முன்பு வருவது மாலை (1974)
  சிறகுககள்
  மீட்சியைத் தேடி
  கணபதி ஒரு கீழ்மட்டத்து ஊழியன்
  நதியும் மலையும்
  பெண், தோழி, தலைவி (1982) //

  இந்த ஐந்தும் – இரவுக்கு முன்பு வருவது மாலை குறுநாவல் தொகுப்பில் வந்துவிடும்.

  அவருடைய சிறுகதைகள் அனைத்தும் – ஆதவன் சிறுகதைகளில் வந்துவிடும்.

  மற்றபடிக்கு காகித மலர்களும், என் பெயர் ராமசேஷனும் படித்திருக்கிறேன்.

  மிஸ் ஆனது புழுதியில் வீணை தான். அது நாடகம் போலிருக்கு, இப்பல்லாம் நாடகம் படிக்கிறதிலையும் ஆர்வம் வந்திடுச்சு,

  ஆதியெலே மாம்சம் இருந்தது – ரமேஷ் பிரேமின் நாடகத் தொகுதியும். ஜெயமோகனின் நாடகத் தொகுதியும் என்னிடம் உள்ளன. கொஞ்சம் படித்திருக்கிறேன்.

  புழுதியில் வீணை வாங்கணும்.

 8. மணிகண்டன்,

  காகித மலர்கள், புதுமைப் பித்தனின் துரோகம் படித்திருக்கிறேன்.

  புழுதியில் வீணை படித்ததில்லை. முயற்சி செய்கிறேன் நன்றி.

 9. சிங்கத்தைச் சாச்சுப்புட்டாங்களே” என்றொரு பதிவெழுதி மாதம் ஆறாகிறது. இன்னமும் மனதிற்கு திருப்தி வராததால் ப்ளாக்கரில் தூங்குகிறது. விஷயம் என்னன்னா நம்ம பதிவர்கள் ஒவ்வொருத்தரும் சிங்கத்தை எப்படிக் கொல்வாங்கங்கிறதுதான் மேட்டர்.

  நாலைஞ்சு பேரை வச்சு எழுதிட்டேன் இன்னமும் போடலை. வேண்டுங்கிறவங்க கான்செப்டை எடுத்துக்கலாம்.
  //

  நீங்களோ அல்லது வெட்டி பயலோ எழுதுங்க ..அப்புறம் நான் சாண்டில்யன் பத்தி கேட்டதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்ல வில்லை ;(

  அந்த சிங்கம் கான்செப்ட் சாப்ட்வேர் கம்பெனிகளில் மெயிலாக பரவும் மேட்டர் தானே ..ந்ம்ம ஆளுகளை வச்சு எழுதுனா நல்லா தான் இருக்கும் ..எழுதுங்க எதிர்பார்கிறேன்

 10. சாண்டில்யன் கதைக்கு ரிவ்யூ எழுதயெல்லாம் இப்ப முடியாது.

  நீங்கள் உண்மையிலேயே ஒரு சாண்டில்யன் புத்தகம் வாங்கவேண்டுமானால் கடல்புறா வாங்குங்கள்.

  இளைய பல்லவன், மஞ்சள் அழகி ஒரு அற்புதமான காதல் கதை அது.

  ——

  ஹிஸ்டர் கொஞ்சம் படிச்சதால சொல்கிறேன். இந்த இளைய பல்லவன் உண்மையான ஆள்.

  இவனைப் பற்றியக் குறிப்புகள் கலிங்கத்துப் பரணியில் இருக்கு. இப்படிக் கொடுமையா ஒரு போரே நடந்ததில்லை என்று குறிப்பிடுகிறார்கள் கலிங்கத்துப்போரைப் பற்றி.

  —-

  பரணி – கொஞ்சம் மிகையாக எழுதப்பட்டதாக சொல்லப்பட்டாலும், இளைய பல்லவன் பயன்படுத்திய கொடுமையான தாக்குதல் பற்றி படித்திருக்கிறேன்.

  சட்டென்று நினைவில் வரமாட்டேன் என்கிறது.

  மற்றபடிக்கு யவனராணியும் படிக்கலாம். நிச்சயம் டைம் கிடைத்தால் சாண்டில்யனைப் பற்றி ஒரு ஜல்லி உண்டு உங்களுக்காய்.

  ————–

  அதே சாப்ட்வேர் சிங்கம் தான் ஆனால் கொல்றது பதிவர்கள். இந்த சூழ்நிலையில் அந்தப் பதிவை வெளிய விட்டேன்னா அவ்வளவுதான்.

  ஏற்கனவே டப்பா டான்ஸ் ஆடுது. போறா?

 11. மோகன்தாஸ் said…
  சாண்டில்யன் கதைக்கு ரிவ்யூ எழுதயெல்லாம் இப்ப முடியாது.

  //

  romba than salichukireenga !!
  ungga kuda nan dOOOOOOOO

 12. மற்றபடிக்கு யவனராணியும் படிக்கலாம். நிச்சயம் டைம் கிடைத்தால் சாண்டில்யனைப் பற்றி ஒரு ஜல்லி உண்டு உங்களுக்காய்.
  //

  expecting frend ..dankuuuu

 13. இன்று வந்த சந்தேகம். குந்தவை என்பது உங்கள் வலைப்பூவின் பெயர். ஆனால் இப்படி எங்கள குந்தவெச்சு படிக்க சொல்லுறது நாயமா? பாட்காஸ்ட் பண்ணலாமே. புத்தகத்தை பற்றி நிறைய பேச வேண்டியிருக்குனு சொல்லரீங்க. ஒரு முயற்சி பண்ணுங்க.

  http://www.podbazzar.com இங்கு நிறைய தமிழ் பாட்கேஸ்டர்கள் உள்ளனர்.

 14. சமூகத்தை பற்றிய
  எனது எண்ணங்களை
  மாற்றியமைத்த
  கதைகள் ஆதவனின் சிறுகதைகளும் நாவல்களும்
  முகமூடிகளுக்கு பின்னால் இருக்கும் முகங்களின்பால் இரக்கம் கொள்ள செய்கிறது ஆதவனின் எழுத்துக்கள்
  நம்மை சுற்றி இருப்பவர்களின் கதையாகவே பிரமை உண்டாகிறது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s