வாரணம் ஆயிரம்

வாரணம் ஆயிரம் படத்திற்கு நேற்று முன்பதிவு செய்யும் பொழுது வெறும் 2 சீட்டுகள் தான் மீதமிருந்தது. சூர்யாவிற்கும், காக்க காக்கவினால் கௌதம் மேனனுக்கும் நல்ல மவுசு பெங்களூரில் என்று நினைத்துக் கொண்டேன். இன்று காலையில் டிவிட்டரில் என் விருப்பமில்லாமல் கண்ணில் பட்டுவிட்ட, வாரணம் ஆயிரம் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’த்தைவிட கேவலம் என்ற ரிவ்யூ காண்டாக்கியது என்னவோ உண்மை. நானாய்ப் போய் பார்க்காமல் தானாய் வந்து விழுந்த இரண்டு வரி விமர்சனம் எரிச்சலைக் கிளப்பியது. அதனால் இரண்டு டிவிட்டு டிவிட்டி விட்டு ஓய்ந்தேன். என் நல்ல நண்பர் ஒருவருக்கு கூடிய சீக்கிரம் கல்யாணம் ஆகயிருக்கிறது, அவர் அளித்த பேச்சுலர் பார்ட்டியில் இருந்து பாதியில் தப்பித்து வந்து ‘வாரணம் ஆயிரம்’ படம் பார்த்தேன்.

நிச்சயமாய் கௌதம் மேனனின் படம் போல் இல்லை தான், ஒரு காக்க காக்கவையோ, வேட்டையாடு விளையாடுவையோ நினைத்துக் கொண்டு வந்திருந்தால் படம் அப்படியில்லை. ஆனால் நான் ரசிக்கக் கூடிய அளவிற்கு படமிருந்தது. இதற்கு மேல் கதை ஆங்காங்கு தட்டுப்படலாம். அதனால் படம் பார்க்க நினைக்கிறவர்கள் இங்கிருந்து எஸ்கேப் ஆகிவிடுவது நல்லது.

படம் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டு பின்னர் அசாதாரணமாக நகர்ந்தாலும் கடைசி வரையிலும் சாதாரண மனிதர்களையே தூக்கிப் பிடிப்பதால் பரவாயில்லை. நான் சொல்லவருவது அப்பா கேரக்டரை, இந்தக் கேரக்டரின் காதல் காட்சிகள் தவிர்த்து மற்றவைகள் பரவாயில்லை ரகம். சூர்யாவின் முதல் காதல் ஒவ்வொரு ‘சிறுகதை ஆசிரியர்’ன் கனவிலும் வந்து போயிருக்கக்கூடிய ஐஸ்கிரீம் காதல், அந்தப் பெண் அழகாக இருக்கிறாள், அழகாக சிரிக்கிறாள், ரொம்ப நாள் கழித்து எனக்கு ஒரு சினிமா ஹீரோயின் பிடித்துப் போயிருக்கிறாள். இந்தப் பெண் நடித்த மற்ற படங்களைப் பார்க்க விரும்பவில்லை – மோகமுள் படத்தில் வரும் ஜமுனா கதாப்பாத்திரம் போல்.

அந்தப் பெண்ணின் ட்ரெஸ்ஸிங் செலக்ஷன் பிரம்மாதம், மொத்த படத்தின் காஸ்ட்யூமுமே தேர்ந்தெடுத்து செய்திருக்கிறார்கள் என்றாலும், இந்தக் கதாப்பாத்திரம் செதுக்கப்பட்டிருக்கிறது, உடல்மொழியின் வழி, ஆடைகளின் வழி எல்லாவற்றிலும்.

சூர்யா நிறைய உழைத்திருக்கிறார் நன்றாகத் தெரிகிறது, அதுவும் முதல் காதலின் பொழுது – அந்தப் பெண் தன் காதலைச் சொன்ன பிறகு, நல்ல முன்னேற்றம். சிக்ஸ் பேக்ஸ் காண்பிக்கிறார், ஆர்மி உடையில் கச்சிதமாகப் பொறுந்துகிறார். வயதான கெட்டப்பில் கொஞ்சம் மேக்கப் பிசிறு தட்டினாலும் ‘தசாவதாரம்’ அளவிற்கு இல்லை. உடம்பைக் குறுக்கி கண்களைக் குறுக்கி உடல் மொழியை மாற்றி நன்றாகச் செய்திருக்கிறார்.

படத்தில் கொஞ்சம் சினிமாத்தனம் இருந்தாலும், கமர்ஷியலாக இந்தப் படம் பெயிலாகாமல் இருக்கச் செய்திருக்கிறார்கள் என்று தள்ளி வைத்துவிடலாம். நம் பக்கத்து வீட்டில் நடப்பதைப் பார்ப்பது போலவே இருக்கிறது.

ஒளிப்பதிவு எனக்குப் பிடிக்கவில்லை, ப்ரீஸ் செய்யும் பொழுது பிசிறு தட்டுவது தெரிகிறது என்ன பிரச்சனை? கௌதம் மேனனின் ரிச்னஸ் பாதி படத்தில் இல்லாமல் இருக்கிறது. ஒரு வேளை தெரிந்தே செய்தார்களா தெரியாது. இடையில் திருச்சி REC, மூகாம்பிகை கல்லூரி எல்லாம் வருகிறது; கொஞ்சம் போல் மனசு குறுகுறுத்தது.

மூன்று மணி நேர படத்தை கொஞ்சம் தட்டியிருக்கலாம், முதல் நாள் என்பதால் ஓட்டினார்களாயிருக்கும். நாளையிலிருந்து ஆப்பரேட்டர் கைவைத்துவிடுவார். ஆனால் கொஞ்சம் அலுப்பாய் இருந்தாலும், எப்படா இண்டர்வெல் விடுவார்கள், எப்படா முடிப்பார்கள் என்று இருந்தாலும் இந்த முயற்சியை பாராட்டியே ஆகவேண்டும். நல்ல டிரை.

இந்தப் படத்தின் ஏதோ ஒரு பகுதியில் நீங்கள் உங்களை உணர்வீர்கள், எனக்கு அது போல் நிறைய இருந்தது. உங்களுக்கு தனிப்பட்ட முறையில் சூர்யாவையும், கௌதமையும் பிடிக்குமென்றால் நிச்சயம் பார்க்கலாம்.

அகஅ – அன்புள்ள அகிலாவிற்கு


எல்லாம் ஒரு கடிதத்தில் முடிந்து போயிருந்தது அவள் தொலைபேசிய மறுநாள் இந்தக் கடிதத்தை அவளுக்கு அனுப்பியிருந்தேன். எங்கள் ஊடல் பின்னர் உணரப்பட்டு புணர்தலால் காமமான அந்நிகழ்ச்சிக்கு அடையாளமாய் இந்தக் கடிதம் மீந்து நின்றது.

Mohandoss’s new status message – பெண்கள் மேலே மையல் உண்டு நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
யாசித்தலின் குரூரம்
காதலாய் யாசிக்கிறேன்
அகிலா கதைகள் அறுபத்தைந்து

என் எழுத்தைப் படிக்க முடியாதவர்களுக்கு…

அன்புள்ள அகிலாவிற்கு,

நேற்றைக்கு நீ பேசிய பொழுது என்னன்னமோ பேசிய பொழுது பதில் சொல்ல என்னிடம் எதுவுமில்லை, நீ பதில் பேசாதே என்பதால் மட்டும் நான் பேசாமலிருக்கவில்லை.

காமக் கொடூரனாய் நான் உன்னிடம் நடந்து கொண்டேனா தெரியாது, காதலாயும் யாசித்தலாயும் வந்திருந்தாலும் கேட்டதென்னமோ காமம் என்ற வகையில் உன்னைக் காயப்படுத்தி விட்டதாயே நினைக்கிறேன். அதற்காகவே அதற்காக வருத்தமும் படுகிறேன். உன்னிடம் இந்த மூன்று வருடங்களில் நான் உன்னைக் கல்யாணம் செய்து கொள்வேன் என்ற எண்ணத்தைக் கூட வரவழைக்கவில்லை என்பதிலும் வருத்தமே!

அந்த அளவிற்கு கூட நம்பிக்கை வராத பொழுது நீ என்னிடம் நடந்து கொண்ட விதம் எனக்கு முற்றிலும் சம்மதமே. இந்த அளவிற்கு கூட நான் நம்பிக்கை வைக்காத ஆட்களிடம் பழகுவதில்லை என்பதும் என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

கடைசியாய் என்னன்னமோ சொன்னாய் ‘வேணும்னா நாளைக்கே எடுத்துக்கோ’ அப்படின்னெல்லாம். கொடுக்கப்படாதெல்லாம் எடுத்துக் கொள்ள முடியாது என்றே நினைக்கிறேன்.

வருகிறேன்

காதலுடன்
அன்புடன்
மோகன்தாஸ்

அகிலா கதைகள் அறுபத்தைந்து


“சொல்லுங்க சார்! ஞாயித்துக் கிழமை எங்கப் போயிருந்தீங்க?”

அகிலா கம்பெனி நம்பருக்கே கால் செய்திருந்தாள்.

“ஆசிப் அண்ணாச்சி வீட்டுக் கல்யாணத்துக் போயிருந்தேன் என்னயிப்ப?”

“உங்க டப்பா மொபைல் போன் எங்க சார்?”

“இன்னும் காசு கட்டலை அதனால வொர்க் ஆகலை”.

“ஏன் சார் ஒரு வார்த்தை அதைச் சொல்லிட்டுப் போறதுக்கென்ன? உங்கக்காகிட்ட என் ப்ரண்டொருத்தனை வைச்சி பேசி விஷயம் வாங்கினேன். தெரியுமா?”

நான் மௌனமாயிருந்தேன்.

“பதில் சொல்லுங்க சார்.” கத்தினாள் மறுமுனையில்

“ஏண்டி உயிரை வாங்குற, உங்கிட்ட சொன்ன ஞாபகமாயிருந்துச்சு அதான்.”

கேட்டவள் சிரித்தாள்.

“ஏண்டி சிரிக்கிற!”

அவள் அவசரப்படாமல் மெதுவாய்ச் சிரித்துமுடித்துவிட்டு “உங்கக்கிட்ட ‘ஒரு வார்த்தை பேசினீங்கன்னா போனை வைச்சிடுவேன்’ன்னு சொல்லி போன் பேசி ஒரு ஆறு ஏழு மாசமிருக்குமான்னு நினைச்சேன் சிரிப்பு வந்திடுச்சி.”

எனக்கும் கொஞ்சம் சிரிப்பாய்த் தான் இருந்தது, நாங்கள் அந்த உரையாடலுக்குப் பிறகு அடித்த லூட்டி. நான் சிரித்தால் அதையே காரணமாய்க் காட்டி இன்னமும் வம்பிழுப்பாள் என்பதால் வெறுமனே “ம்ம்ம்” என்றேன். ஆனால் மனதிற்குள் அவள் பேசியது அப்படியே ஓடியது.

“என்னைய ரொம்பக் கஷ்டப்படுத்துறீங்க மோகன், காலையில் அப்படி நடந்துக்கிட்டது என் தப்பு தான், Sorry. என்கிட்டேர்ந்து நீங்க என்ன எதிர்பார்க்கிறீங்கன்னு தெரியலை, மனசு விட்டுப் பேசணும்னா? மனசுக்குள்ளே இருக்கிறதை எல்லாம் வெளிய கொட்டிடணும்னா என்னால அது முடியும்னு தோணலை. உங்களை காதலிக்கலைன்னு சொல்லலை அதே மாதிரி காதலிக்கிறேன்னும் சொல்ல முடியலை சொல்லப்போனா காதல்னா என்னான்னே ஒரே குழப்பமாயிருக்கு ஒவ்வொரு தடவையும் நம்மளைப்பத்தி நினைக்கிறப்ப.

நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்காம விட்டுட்டுப் போய்டுவீங்கன்னு நான் பயப்படலைன்னு சொல்ல முடியாது, அந்த பயம் எனக்கு இருக்கத்தான் செய்யுது. போனா இத்தோட போகட்டுமேன்னு தான் நான் இப்படியிருக்கிறதா கூட சிலசமயம் நினைச்சிருக்கேன், போய்ட்டீங்கன்னா அப்படியே துடைச்செறிஞ்சிட்டு போய்ட முடியும்னு இப்ப தோணலைன்னாலும் இது தேவலைன்னு நினைக்கத்தோணுது. இந்த பயம் போகாம என்னால காதலிக்க முடியாதுன்னே நினைக்கிறேன், ஆனால் விட்டுட்டுப் போய்டுவீங்கன்னு நினைக்கிறதுக்கு என்கிட்ட எந்த ரீஸனும் கிடையாது. நான் ரொம்ப குழப்பமாயிருக்கேன்.

சில சமயம் உங்கள ரொம்ப கஷ்டப்படுத்துறதா நினைச்சி பேசாம எதையாவது சொல்லி உங்களை என்ன வெறுக்குற மாதிரி செஞ்சிரலாம்னு கூட நினைச்சிருக்கேன். மூணு வருஷம் கழிச்சி இதெல்லாம் ரொம்ப ட்ரமேட்டிக்கா இருக்கும்னும் நீங்க நம்பமாட்டீங்கன்னும் தெரியிறதால என்ன செய்யறதுன்னே தெரியலை. நீங்க கேக்குற மாதிரி என் கேர்ள் ப்ரண்ட்ங்க கிட்ட பழகிற மாதிரி என்னால் உங்கக்கிட்ட பழக முடியலை, எங்கையோ ஒரு இடத்தில் என்னத்தையோ நான் மிஸ் பண்ணுறேன். என்னான்னு தான் தெரியலை.

சரி எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுவோம், என்ன உங்களுக்கு என் உடம்பப் பார்க்கணும் ஆசை தீர அனுபவிக்கணும் அவ்வளவுதானே போய்த் தொலையுதுன்னு அதைச் செஞ்சிரலாம்னு கூட நினைச்சிருக்கேன். ஆனால் கடைசியில் நீங்களும் இவ்வளவு தானான்னு நினைக்கிறப்ப மனசுக்கு கஷ்டமாயிருக்கு அதே சமயத்தில் என்னமோ உங்களுக்கு மட்டும் தான் இதில் விருப்பம் இருக்கு எனக்கு இல்லவேயில்லை சாமியார் நானுன்னு ஃப்ரூப் பண்ண நினைக்கிறனான்னு சந்தேகமாவும் இருக்கு. எனக்கு செக்ஸ் ஃபீலிங் இல்லாம இல்ல, எனக்கும் அதைப் பற்றி கனவு கற்பனை கவிதை எல்லாம் இருக்கு சொல்லப்போனா பாட்டுக் கூட இருக்கு உங்கள மாதிரி…”

சிரித்தாள் நான் எதுவும் சொல்லவில்லை.

“…ஆனா சீக்கிரமே ஒரு முடிவு எடுக்கணும்னு இன்னிக்கு காலைல தான் நினைச்சேன். அதுக்குள்ள இப்படி பண்ணிட்டீங்க, ஒன்னு உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிறது இல்லாட்டி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்ன மாதிரி தொறந்து காண்பிச்சிட்டு போய்ட்றதுன்னு இருக்கேன். ஆறுமாசம் ஒரு வருஷம் காதலிக்கிறவங்க எல்லாம் எப்படி நடந்துக்கிறாங்கன்னு பார்த்துக்கிட்டுத்தான் வர்றேன், மூணு வருஷமா உங்களைக் காதலிச்சும் காயப்போட்டேங்கிறப்ப எனக்கே கஷ்டமாத்தான் இருக்கு. மூணு வருஷம் பொறுத்தியே இன்னும் ஆறு மாசமோ ஒரு வருஷமோ பொறுத்திட்டா நான் முழுசா உனக்குத்தானேன்னு தான் சொல்லத் தோணுது. ஆனா அது என்ன ஃபார்மாலிட்டி தாலி கட்டுறது கூட படுத்துக்கிறதுக்கு லைசன்ஸான்னும் தோணுது. மூணு வருஷம் காதலிச்ச உங்களை விட தாலி பெரிய விஷயமா படலை எனக்கு.

என்னால ஒரு முடிவுக்கு வரவே முடியலை, இப்படி என்னைத் தடுமாற வைச்சு என்னை உபயோகிச்சிக்கப் பார்க்கிறீங்களான்னும் சில சமயம் தோணுது. என்ன எழவோ நான் எதுக்கும் தயாராய்ட்டேன், உங்களுக்கு விருப்பம்னா நாளைக்கே கூட நீங்க என்னை எடுத்துக்கலாம். இப்ப எதுவும் பேசாதீங்க எதார்ந்திருந்தாலும் நாளைக்கு சொல்லுங்க. நான் எதுக்கும் தயார். நான் போனை வைக்கிறேன்.”

சிரிக்கக்கூடாது என்று எவ்வளவு தான் முயன்றாலும் முடியாமல் சிரித்துவிட, எதிர்ப்பக்கத்தில் அவள் போனைத் துண்டித்துவிட்டு சென்றுவிட்டாள்.

———————

Mohandoss’s new status message – பெண்கள் மேலே மையல் உண்டு நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
யாசித்தலின் குரூரம்
காதலாய் யாசிக்கிறேன்

* தொடர்கதையாக ஆக்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அப்படி ஆகாது போலிருக்கு.

மௌனத்தில் உறைந்திருக்கும் சுயம் – Children of a lesser God

வெகு சில படங்கள் பார்த்து முடித்ததும் மனம் ஜில்லென்று ஆகிவிடுவதுண்டு, பெரும்பாலும் சந்தோஷமான முடிவுகளைக் கொண்டிருக்கும் படங்களில் தான் இந்த உணர்வு வரும். சோகமான முடிவுகளைக் கொண்டிருக்கும் அட்டகாசமான படங்கள் வெகு காலத்திற்கு மனதில் தங்கினாலும் படம் பார்த்து முடித்ததும் காற்றில் பறக்கும் உணர்வைக் கொண்டுவருவதில்லை. சமீபத்தில் பார்த்த Children of a lesser god படமும் அப்படித்தான், காற்றில் பறக்கும் அனுபவத்தைத் தந்தது. மெலோடிராமா தான் என்றாலும் இன்னும் அதன் முடிச்சுகளில் இருந்து விலகிவிடவில்லை என்பதால் ரசிக்க பறக்க முடிந்தது. பொன்னியின் செல்வனின் மணிமேகலைக்கும் வந்தியத்தேவனுக்குமான உரையாடல், பயணிகள் கவனிக்கவும்-ல் ஜார்ஜினாவிற்கும் சத்தியநாராயணாவிற்குமான உரையாடல், என் பெயர் ராமசேஷனில் வரும் ராமசேஷன் – பிரேமா, ராமசேஷன் – மாலா உரையாடல்கள் என்று உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் புத்தகத்தில் இருந்து கூட அந்த உணர்வு சில சமயங்களில் வருவதுண்டு, இதை வேண்டுமானால் pleasure of text என்று சொல்லலாம்.

Children of a lesser god திரைப்படத்தின் கதை சுலபமானது, கவிதை போன்றது. மனதைப் பற்றியதாயும் உள்ளுணர்வுகளைப் பற்றியதாயும் சுயத்தைப் பற்றியதாயும் திரைக்கதை விரிகிறது. சுயத்தை இழக்க விரும்பாத ஒரு காது கேட்க இயலாத பெண்ணைப் பற்றியதும், அந்தப் பெண் இழக்கப்போவதாய் நினைப்பது சுயமே இல்லை; அவள் இழக்கப்போவதாய் நினைக்கும் சுயத்தின் விளைவாய் அவள் வாழ்க்கைக்கான இன்னொரு சாளரம் திறக்கப்போகிறது என்றும் தீவிரமாய் நம்பும் ஒரு ஆணைப் பற்றியதுமானது இக்கதை. மொழி படத்தில் நான் இல்லாததாய் உணர்ந்தது என்னவென்று இந்தப் படம் பார்த்ததும் புரிந்து கொண்டேன். ராதாமோகனின் ‘மொழி’ படத்திற்கான உந்துதல் இந்தப் படத்திலிருந்து கிடைத்திருக்கும் என்றே நினைக்க வைக்கிறது இந்தப் படத்தில் வரும் பல காட்சிகள், இல்லாமலும் இருக்கலாம். ஏகப்பட்ட ஒற்றுமைகள் இரண்டு படத்திற்கும் இடையில், அது இங்கே தேவையில்லாதது நிறுத்திக் கொள்கிறேன்.

படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது நினைத்துக் கொண்டேன், don’t tell me she(heroine) can actually hear and speak என்று, கடைசியில் அது உண்மையாகி அந்தப் பெண்ணால் உண்மையிலேயே கேட்க முடியாதென்று தெரிந்த பொழுது வருத்தமாகயிருந்தது. அற்புதமான டேலண்ட், இந்தப் படத்திற்காக Marlee Matlinக்கு சிறந்த நடிகைக்கான அக்காதமி அவார்ட் கிடைத்திருக்கிறது. William Hurtற்கு சிறந்த நடிகருக்கான அக்காதமி ஏன் கிடைக்கவில்லை என்ற வருத்தமும் உண்டு என்றாலும் சந்தோஷமாகயிருந்தது.

ஹீரோ காதுகேளாதோர் பள்ளிக்கு, அங்கு படிக்கும் மாணவர்களுக்கு பேசக் கற்றுத் தருவதற்காக வருகிறார். அந்தப் பள்ளியில் படித்து அதே பள்ளியில் வேலை பார்க்கும் ஹீரோயினை அவர் முதன் முதலில் சந்திக்கும் இடத்திலேயே அவளுடைய கோபத்தின் காரணமாய் ஹீரோவுக்கு ஹீரோயின் மேல் ஒரு விருப்பம் வந்து விடுகிறது. ஆனால் பின்னர் ஹீரோயின் “she is one of the brightest students we ever had” என்ற அறிமுகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு அந்தப் பள்ளியில் சுத்தம் செய்யும் பெண்ணாய் வேலை செய்யும் விஷயம் தெரிந்ததும் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள முயலும் ஹீரோவுக்கு அவளுடைய பிரச்சனை புரியவருகிறது. அதன் பின்னர் அந்தப் பிரச்சனையை ஹீரோ எப்படித் தீர்த்து வைக்க முயல்கிறார், முடிந்ததா என்பது தான் கதை.

அந்தப் பிரச்சனை மிக முக்கியமானதாக இருப்பதுவும், ஏனோ தானோவென்று எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அந்தப் பிரச்சனையை அணுகாமல் இருப்பதுவும் தான் எனக்கு இந்தப் படத்தை மிகவும் பிடித்திருப்பதற்கான காரணங்கள். ஹீரோயினின் பிரச்சனை எல்லோரும் அவளையே ‘லிப் ரீடிங்’ கற்றுக் கொள்ளச் சொல்வதும், பேச முயற்சி செய்யச் சொல்வதும் தான். ஏன் மற்றவர்கள் ‘Sign language’ கற்றுக் கொள்ளக் கூடாது என்பது அவள் கோபம். இதில் முக்கியமான இன்னொரு பிரச்சனை ஹீரோவின் வேலையே காது கேளாத மக்களுக்குப் பேசக் கற்றுக் கொடுப்பது தான். ஹீரோவுக்கு ‘Sign language’ தெரியுமென்றாலும் அத்தனை வேகம் கிடையாது, ஆனால் அதை விட பெரிய பிரச்சனை ஹீரோயினை தொடர்ந்து பேசக் கற்றுக் கொள்ளச் சொல்லி வற்புறுத்துவது தான்.

இப்படி ஹீரோயினை பேசக் கற்றுக் கொள்ளச் சொல்லி வற்புறுத்துவதில் தொடங்கும் ஒன்று, பின்னர் காதலாக மாறி அவர்களை சேர்ந்து வாழும் அளவுக்குக் கொண்டு செல்கிறது. ஆனாலும் தொடர்ச்சியாக ஹீரோ, ஹீரோயினை பேசச் சொல்வது அவளுக்கு அவள் சுயத்தை இழப்பதைப் போன்று தோன்றுவதால் இருவரும் பிரிந்து செல்லும் நிலைக்கு ஆளாகிறார்கள். ஹீரோயினின் இளமைப் பருவத்தில் அவளுடன் பழக நினைத்த ஆண்கள் எல்லோரும் ஒரு உரையாடலை/தொடக்கத்தைக் கூட அவளிடம் செய்யாமல் நேரடியாய் உடலுறவையே நினைத்தது அவளை இன்னும் கோபத்தில் கொண்டு போய் மேலும் அவளைத் தனிமைப் படுத்தியிருப்பது ஹீரோவிற்கு புரியவருகிறது. அவளை ‘அவள் எப்படி இருக்கிறாளோ’ அப்படி ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று வாதாடுவதில் இருக்கும் உண்மை ஹீரோவிற்குப் புரிந்தாலும் பேச முடியாததும், ‘உதடுகளைப் படிக்க’ முடியாததும் அவளைத் தனிமைப் படுத்துகிறது என்று நினைப்பதால் ஹீரோ தொடர்ச்சியாக அவளை அவள் விரும்பாததை செய்யச் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறான்.

கடைசியில் ஹீரோவும் சரி ஹீரோயினும் சரி தங்கள் பக்கமும் தவறு இருக்கிறது என்பதை உணர்ந்ததும் இருவரும் இணைய படம் சுபம்.

ஹீரோயின் மார்லி மாட்லின் இயற்கையிலேயே காது கேட்க முடியாதவர் என்பதால் அந்தக் கதாப்பாத்திரத்தோடு அருமையாக ஒன்றிப் போய்விடுகிறார், படத்தின் ஆரம்பப் பகுதி முழுவதும் கோபக்காரராக வந்துவிட்டு முகத்தை தூக்கிக் கொண்டே வந்துவிட்டு இடையில் ஒரு முறை சிரிக்கும் பொழுதுதான் தெரிகிறது எத்தனை அழகாய் இருக்கிறது அவருடைய புன்னகை என்று. எனக்கென்னமோ கையில் பூனைக் குட்டியுடன் ஹீரோவிற்காக அவர் வீட்டின் முன் காத்திருக்கும் பொழுது அவர் சிரிப்பது விகல்ப்பமில்லாமல் வந்திருப்பதாகப் படுகிறது. அழகான பெண், கோபப்படும் பொழுதும், சிரிக்கும் பொழுதும், ஒவ்வொரு முறையும் ‘Sign’ செய்யாமல் ஹீரோ பேச முயலும் பொழுதும் தன் தலையைத் திருப்பி அவர் உதட்டை படிக்காமல் இருக்கும் பொழுதும், உணர்ந்து செய்திருக்கிறார். காட்சிகள் மனதில் அப்படியே பதிந்து போய் விட்டது எனக்கு.

ஹீரோவாக வில்லியம் ஹர்ட், மாட்லின் போலில்லாமல் படத்திற்காக ‘Sign language’ கற்றுக் கொண்டிருப்பாராயிருக்கும். அவர் எப்படி இந்தக் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார் என்று ஆச்சர்யமே வருகிறது ஒவ்வொரு முறையும் அவருடைய கதாப்பாத்திரத்தை நினைத்துப் பார்க்கும் பொழுது. அவருக்கு எதிரில் நடிப்பவர்கள் செய்யும் ‘Sign’ஐ தனக்குத் தானே சொல்லிக் கொண்டும் தன்னுடைய வசனங்களை ‘Sign’உடன் பேசிக் கொண்டும் நடிப்பது பெரிய விஷயம். இது எல்லாவற்றையும் விட முக்கியமானது இப்படிச் செய்யும் பொழுது அவர் கஷ்டப்படுகிறார் என்பது போன்றோ, அவர் நடிக்கிறார் என்பது போன்றோ தெரியாமல் இருப்பது. அவருடைய நடிப்பு நிச்சயம் பாராட்டிற்குரியது. மாட்லின் உடைய கோபத்தைப் பார்த்து சிரிப்பது, அவள் சுயத்தின் மீது காரணத்தைச் சொல்லி தனிமைப் படுத்திக் கொள்ளும் பொழுது வருத்தப் படுவது, துரத்தி துரத்தி அவளைப் பேசச் சொல்வது, பின்னர் இருவரும் பிரிந்து வாழும் சமயத்தில் ஏதோ ஒன்றை இழந்ததைப் போலவே இருப்பது என தன் பங்கிற்கு படம் காண்பித்திருக்கிறார் மனிதர்.

இதைத்தவிர்த்தும் மற்ற காது கேளாத மக்களை நம்மிடையே பள்ளி மாணவர்களின் வழியாய் காண்பித்திருக்கிறார் இயக்குநர் Randa Haines, எனக்கு இந்தப் படம் பார்த்ததில் இருந்து Sing language கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை அதிகமாகயிருக்கிறது அதை ஆசையாய் முடித்துக் கொள்ளாமல் எதுவும் சீரியஸாய் செய்யவேண்டி இந்தப் பேச்சை இங்கே முடித்துக் கொள்கிறேன்.

வசனங்கள் அத்தனையும் அருமை என்று சொல்லலாம், எல்லா வசனங்களுமே ரொம்ப ‘ஷார்ப்’. Broadwayயில் நாடகமாக வந்து கொண்டிருந்ததை படமாக எடுத்ததால் அவர்களுக்கு இந்த வரம் அமைந்திருக்கிறது என்று சொல்லலாம். நான் கதை எழுதும் பொழுதெல்லாம் மெல்லிய நகைச்சுவை இருப்பது போலவே கதை எழுதி வந்திருக்கிறேன், எனக்கு இந்த மெல்லிய நகைச்சுவையின் மீது காதல் உண்டு. ஆனால் முழுநீள நகைச்சுவையின் மீதல்ல, நான் இதுவரை முழுநீள நகைச்சுவையாய் எதுவும் எழுதிய நினைவு இல்லை. எனக்கு இந்தப் படம் பிடித்திருந்ததற்கான இன்னொரு முக்கியக் காரணம் இதன் வசனங்கள்.

கடற்கரையில் ஹீரோ, ஹீரோயினியிடம் முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றை மனதில் வைத்துக் கொண்டு, “Hey you want to play stand up sit down again” விற்கு பதில் சொல்லாமல் ஆனால் அந்தக் கேள்வி எழுப்பிய உணர்வால் மனதால் சிரித்து அதன் எதிரொளிப்பு சிறியதாய் முகத்தில் தெரிய, ஹீரோ சொல்லும் “Ohh careful, you almost smiled”ல் கடுப்பாகி முறைக்க ஹீரோ மீண்டும் சொல்லும், “Ahh Thats the girl, Thats Sarah Norman we all know and love” வசனம் காட்சியை கேரக்ட்டரைசேஷனை சிறிய வசனங்கள் மூலம் நகைச்சுவையாகச் சொன்ன தந்திரம் பிடித்திருந்தது.

ஹோட்டலில் ஒன்றில் ஆர்டர் எடுக்க வரும் சர்வர், ஹீரோயின் ஹீரோவிடம் Sign languageல் பேசுவதைப் பார்த்து அதிசமயாகப் பார்க்க அதற்கு ஹீரோயின் சர்வர் தன்னை முட்டாளாகப் பார்க்கிறான் என்று சொல்ல, ஹீரோ “He doesnt think you stupid, he thinks you a deaf.” என்று சொல்லும் பதிலில் திருப்தியடையாமல் ஹீரோயின் மீண்டும், காதுகேட்கும் மக்கள் தங்களை(காது கேளாதவர்களை) முட்டாளாகப் பார்க்கிறார்கள் என்று சொல்ல, ஹீரோ சொல்லும், “Only stupid hearing people thinks that deaf people are stupid” என்ற பதிலில் ஹீரோயின் கண்களில் தெரியும் நன்றியுணர்ச்சி ஒரு கவிதை. எனக்குத் தெரிந்து அவளுக்கான காதல் இங்கே தொடங்குவதாகத்தான் நான் நினைக்கிறேன்.

ஹீரோயின் தான் டான்ஸ் ஆட விரும்புவதாகச் சொல்லும் காட்சியில், ஹீரோ கேட்கும், “Can you feel it?”ற்கான பதிலாய் ஹீரோயின் முகத்தை அசைத்து ஆமென்று சொல்லிவிட்டு சைகையில் “vibrations…” “…through my nose” என்று சொல்லி ஹீரோவை நக்கல் செய்வது.

ஹீரோவை டான்ஸ் ஆட அழைத்துச் சென்றுவிட்டு அவள் மற்றும் கண்ணை மூடிக்கொண்டு தனியாக ஆடிக் கொண்டிருக்க ஹீரோ அவள் நகர்தலில் மயங்கி நின்று கொண்டிருக்க, அவள் தனியாய் ஆடும் சூழ்நிலையை ஒப்பு/ஏற்றுக் கொள்ளும் அந்தப் பாடல் முடிந்து ஜோடியாய் ஆடும் பாடல் வந்ததும்; அதிர்வு இல்லாததால் கண்ணைத் திறந்து பார்த்துவிட்டு எல்லோரும் ஜோடியாய் ஆடத் தொடங்கியதை அறிந்து கொண்டு ஹீரோவைப் பார்க்கும் பொழுது ஹீரோ முகத்தில் ‘இப்ப என்ன செய்வ’ என்பதைப் போன்ற உணர்ச்சி ஒரு ஹைக்கூ கவிதை.

தொடர்ச்சியாய் அறை ஒன்றில் ஹீரோயின் ஹீரோவிடம் தான் ஏன் பேசவிரும்பவில்லை என்பதற்கு தன்னுடன் படுப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தன் பின்னால் அலைந்த பையன்கள் பற்றியும் அவர்கள் ஒரு கோக் வாங்கிக் கொடுத்து தன்னுடன் பேசவிரும்பாமல் தன்னுடன் படுப்பதையே குறியாக வைத்திருந்ததைச் சொல்லிவிட்டு தன்னைப் பற்றி ஹீரோவும் அப்படித்தான் நினைப்பதாகச் சொல்லி அவனைக் கோபப்படுத்தும் காட்சி ரொம்பவும் இறுக்கமானது அதன் வசனங்களும் அப்படியே.

ஹீரோயினை தன் வீட்டிற்கு அழைக்கும் காட்சியில் ஹீரோ கேட்கும் உனக்கு என்ன வேண்டும் என்ற கேள்விக்கு, நீ என்றும் குழந்தைகள் என்றும் சொல்லிவிட்டு பின்னர் காது கேளாத குழந்தைகள் என்று சொல்ல ஹீரோ, நான் எனக்கு காதுகேளாத குழந்தை வேண்டும் என்று சொல்லமாட்டேன் என்று சொல்லிவிட்டு அவளைப் பார்த்துவிட்டு ஆனால் அப்படி இருந்தால் அதில் எனக்கு வருத்தமில்லை என்று சொல்லும் வசனம்.

தனக்காய் ஹீரோ பேசுவது பிடிக்காமல் சண்டை போட ஆரம்பிக்கும் ஹீரோயின், தன்னை அவன் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்ற நினைப்பதும் தனக்காய் பேச ஆரம்பிப்பதும் பிரச்சனையாய் மாறுவதைச் சொல்லிவிட்டு.

“Until you let me being an I where you are, you can never come inside my silence and know me and I wont let myself know you. Until that time we cant be like joined.”

என்ற வசனத்தோடு இந்த வசனக் கதையை விட்டுவிடுகிறேன். இந்தப் படத்தை நான் இஞ்ச் பை இஞ்ச் ஆக ரசித்துப் பார்த்ததன் விளைவு என்னால் எதையுமே விடமுடியவில்லை. கடைசியில் அந்த மௌனத்தை உடைத்துக் கொண்டு அதில் உறைந்திருந்த சுயத்தை ஹீரோ எப்படி உணர்ந்தான் என்பது தான் Children of a lesser god படத்தின் கதை. அற்புதமான படம் எல்லோரும் ஒரு முறை பார்க்க வேண்டிய படம் என்று கூட சொல்லலாம்.

சினிமா

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா. என்ன உணர்ந்தீர்கள்?

ஏழு எட்டு வயதில் ஆரம்பித்தது, நினைவு தெரிந்து முதலில் பார்த்த படம் கர்ணன். டிவிப் பெட்டிக்குள் உண்மையில் எல்லாம் நடக்கிறது என்று நம்பினேன். அம்புகள் டிவியின் கண்ணாடித்திரையைத் தாண்டி வரக்கூடாது என்று பயந்தேன், டிவிப் பெட்டியை உடைத்துக் கொண்டு கர்ணனுக்காக உதவ எண்ணினேன்.

2.கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த சினிமா?

’காதலில் விழுந்தேன்’

3.கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

காதல் – வீட்டில் – டிவியில் – இந்த முறை பெரிதாய் ஒன்றும் இல்லை.

4.மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

குருதிப்புனல், மகாநதி – சட்டென்று நினைவுக்கு வந்ததும் மனது தானாய்ப் பதறும் இரண்டு படங்கள்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

என் காலம் இல்லாவிட்டாலும் பராசக்தி முதலான ‘திராவிட’ படங்கள் ஏற்படுத்திய தாக்கம்.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

தமிழ் சினிமாவின் ஒளிப்பதிவு – குறிப்பாய் சொல்லவேண்டுமானால் பாலுமகேந்திரா, மணிரத்னம், பாலா, ஜீவா இவர்களின் படங்கள். இன்னமும் கூட நிறைய பேரைச் சொல்லலாம்.

6.தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

கண்ணில் படும் எல்லாவற்றையும்.

7.தமிழ்ச்சினிமா இசை?

கேட்பதுண்டு. பெரும்பாலும் புதிய படங்களின் இசையில் கைவைப்பதில்லை. எனக்கான பழைய – புதிய பாடல்கள் தொகுப்பு உண்டு. பிடித்திருக்கிறது – நன்றாயிருக்கிறது என்ற சொன்ன பிறகு கேட்பதுண்டு.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

தற்சமயம் தமிழ் சினிமா எ உலக சினிமா 10 : 90 என்ற விகிதத்தில் உள்ளது. அதிகம் தாக்கிய படங்களின் வரிசை இந்தப் பதிவை விட நீண்டு விடும் என்பதால், குறிப்பாய் தற்சமயம் பார்த்து என் பதிவில் குறிப்பிடாத சில,

Perfume, Days of Glory(Indigழூnes), The golden pond, One flew over cuckoo’s nest, Mamma Roma, Oedipus Rex…

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இல்லை.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நன்றாகயிருக்கிறது. ‘ரே’ ‘கத்தக்’ அளவிற்கும் அதற்கு மேலும் பெயர் தரக்கூடிய படங்கள் விரைவில் வரும் என்றே எதிர்ப்பார்க்கிறேன்.

11.அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

நான்கு வருடம் முன்பென்றால் உலகமே இரண்டது போலிருந்திருக்கக்கூடும். இப்பொழுது பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்னைப் பொறுத்தவரை. அதுவும் தமிழ்சினிமா மட்டுமென்றால். தமிழர்கள் தங்கள் முதல்வரை வேறெங்கேணும் தேடத் தொடங்குவார்களாயிருக்கும்.

பதிவு போட அழைத்த மதிக்கு நன்றி.

நான் அழைக்க விரும்புபவர்கள் – விருப்பமிருந்தால் போடலாம்.

1) பெயரிலி
2) ஹரன் பிரசன்னா
3) சன்னாசி
4) நண்பன் ஷாஜி
5) ஜமாலன்

இரா.முருகனின் நெம்பர் 40 ரெட்டைத் தெரு

இரா. முருகனின் இந்தப் புத்தகத்தை எந்த வகையில் வைப்பது என்று தெரியவில்லை உண்மையில், நாவல் – குறுநாவல் – சிறுகதைத் தொகுப்பு(?!) எதிலுமே வைக்க முடியாது என்றே நான் நினைக்கிறேன். நாவலுக்குரிய அகச்சிக்கல் என்று எதுவும் இல்லை என்பதால் நாவலாக வைக்கமுடியாது, கூர்மையிருந்தாலும் சிறுகதைக்குரிய அளவில் இல்லை என்பதால் சிறுகதைத் தொகுப்பென்றும் சொல்லமுடியாது. தன்னுடைய வயதைக் குறிக்கும் வகையில் எழுத நினைத்தாரோ என்னவோ 54 (கொஞ்சம் பெரிய)பத்திகளில் தன் பத்து வயதில் தான் வாழ்ந்த இடத்தைப் பற்றிய குறிப்புக்களை எழுதியிருக்கிறார்.

ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது; இத்தனை விஷயங்களை நினைவில் வைத்திருந்திருக்கிறாரே என்று இரா.மு.வின் அரசூர் வம்சம் படித்துவிட்டு எப்படி இவரால் இப்படி ஒரு நாவல் எழுத முடிந்தது என்று ஆச்சர்யப்பட்டது நினைவில் இருக்கிறது.  அந்த ஆச்சர்யம் அப்படியே தொடர்கிறது இங்கேயும், கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார் ‘அடல்ஸ் ஒன்லி’ விஷயத்தில் என்பது மட்டும் ஏனென்று தெரியாவிட்டாலும். கூர்மை அப்படியே இருக்கிறது அத்தனை பத்திகளிலும், என்னமோ டைரி ஒன்றில் சிறு வயதில் இருந்து குறித்துக் கொண்டு வந்துவிட்டு இன்று இணைத்து எழுதியிருக்கிறாரோ என்று நினைக்க வைக்கிறது.

ஒரு தெரு அதைத் சுற்றி இருக்கும் வீடுகள் அதைச் சார்ந்த பள்ளி இன்ன பிற வகையறாக்கள் அதைச் சார்ந்த மக்கள் என்று மொத்தமாக எல்லாவற்றையும் பற்றிய தன் நினைவுகளை அன்றைய காலநிலையோடு, அரசியலோடு சேர்த்து எழுதியிருக்கிறார். நன்றாகவே வந்திருக்கிறது.

மொத்தமாய் படித்து முடித்த பின்னும் நினைவில் நீங்காமல் இரா.முருகனின் சில கதாப்பாத்திரங்கள் அப்படியே நின்றுவிடுகிறார்கள். பஞ்சவர்ணம் வாத்தியார் மாதிரி கடைசியில் அவர் வைக்கும் கேள்வியோடு “எல்லாக் கணக்கும், வாழ்க்கையும் தெக்கத்தி மிட்டாயாக இனிக்காமல் போக என்ன காரணம் என்று தெரியவில்லை.” சீரங்கத்தம்மா போல், “அந்தக் காலத்துலே சாரட்டுலே கல்யாண ஊர்வலம் வந்தவள்டா சீரங்கத்தம்மா” இதுபோல் நிறைய நான் என் வாழ்நாளில் கேட்டிருக்கிறேன். உருவாக்குவதும் தெரியாமல் முடிப்பதும் தெரியாமல் மூன்று பக்கங்களில் இப்படி நிறைய பேரை உலவவிடுகிறார். நான் சொன்னது இரண்டு நபர்களைத் தான் ஆனால் இந்தப் புத்தகம் முழுக்க இப்படித்தான் ஆட்களாய் நிரம்பியிருக்கிறார்கள்.

புத்தகம் முழுவதும் நகைச்சுவை வழிந்து கொண்டிருக்கிறது, மெல்லியதாய், வாசிப்பை சுவாரசியப்படுத்துவதாய்.

“… தினசரியில் ‘சர்ச்சில் கவலைக்கிடம்’ என்று கொட்டை எழுத்தில் வந்தது. கோகலே ஹால் நூலகத்தில் பேப்பர் படித்த எனக்கு, இப்படி அரைகுறைச் செய்தியை அதுவரை படித்ததாக நினைவில் இல்லை. சர்சுக்கு யார் போனது, அதில் என்ன கவலை என்ற தகவல் ஏதும் இல்லாது, ஒரு வெள்ளைக்காரக் கிழவர் போட்டோவோடு வந்த செய்தி. படிக்கப் பொறுமையில்லாமல் ‘சரோஜாதேவி தினசரி என் கனவில் வருகிறாரே’ என்று முறையிடும் கேள்வி-பதில் படிக்கப் பக்கத்தைத் திருப்பினால், பேப்பர் படக்கென்று பிடுங்கப்பட்டது…” புத்தகம் முழுதும் விரவியிருக்கும் நகைச்சுவைக்கு ஒரு சோறு.

முக்கியமான இந்தி எதிர்ப்பை பதிவு செய்ய வந்தவர் நகைச்சுவையில் விழுந்திருப்பது சரியானதுதானா என்ற கேள்விக்கு என்னிடம் பதில் கிடையாது; அதுதான் அவரது ஸ்டைல் எண்ணும் பொழுது அப்படியே விடுவது தான் சரியானதாயிருக்கும்.

“…எனக்கும் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி மேல் இப்படி அப்படி என்றில்லாத கோபம் வந்தது. கோயில் பிரகார உத்திரத்தில் வௌவால் தொங்குகிறது போல் வரிசையாக தொங்குகிற எழுத்தோடு இந்தியைப் படித்துக் கொண்டு தினசரி காய்ச்சல்காரன் போல சுக்கா ரொட்டி சாப்பிட்டுக் கொண்டு மிச்ச வாழ்க்கையைக் கழிக்க எனக்கென்ன தலைவிதி? இந்தி இருந்த பழைய ரயில்வே கைடு புத்தகத்தை வீட்டிலிருந்து கிளப்பிக் கொண்டு வந்து எரிகிற தீயில் போட்டேன். ஒழியட்டும் இந்தி…”

பத்துவயது கதைசொல்லியின் வருத்தம் இது. கீழிருப்பது 54 வயது கதைசொல்லியின் குரல்,

“…இன்றைக்கு எனக்கு இந்தி தெரியும். மனிதர்கள் பேசிப் புழங்குகிற ஒரு மொழி என்ற மட்டில் அதன் பேரில் வெறுப்பு எதுவும் இல்லை. ஆனாலும், ‘இந்தி ராஜ்பாஷா; தேசிய மொழி அதுதான்’ என்று யாராவது பேச ஆரம்பித்தால், ‘சரிதான் உட்காருடா’ என்று மண்டையில் தட்ட மனத்தில் ஒரு சின்னப் பையன் எழுந்து வருகிறான். அவனுக்கு கோடிக்கணக்கில் சிநேகிதர்கள் உண்டு என்பதை அவன் அறிவான்…”

எல்லாவற்றிற்கும் பிறகும் இந்தப் புத்தகம் எனக்குப் பிடித்த ஒன்றாகயில்லை, அரசூர் வம்சம் என்னிடம் உருவாக்கியிருந்த பிம்பம் இரா.முருகனின் அடுத்தப் புத்தகத்தைப் பற்றி நான் வைத்திருந்த எண்ணம் எதையும் இந்தப் புத்தகம் நிவர்த்தி செய்யவில்லை. இது நாவல் பற்றிய என்னுடைய மனநிலைப் பிரச்சனையாகக் கூட இருக்கலாம், ‘புலிநகக்கொன்றை’ போல் நாயகன் நாயகியையோ இல்லை ஒரு பரம்பரையின் கதை பேசுவதாகவோ இந்த நாவலை நகர்த்தியிருந்தால் நான் விரும்பியிருக்கக்கூடும். ஒரு ஹீரோ ஹீரோயினைச் சுற்றி நிகழும் ‘நாவல்’களை நான் கடந்துவிட்டதாகவே நினைக்கிறேன். அதை மீறியும் எதையோ இந்த நாவலில் நான் இழக்கிறேன், காரணம் தெரியவில்லை. ஒட்டுதல் வரவில்லை என்று கூட சொல்லலாம், இதுவரை என் வாழ்நாளிலேயே மிகவும் கஷ்டப்பட்டு படித்ததாக நினைக்கும் ‘புளியமரத்தின் கதை’யின் மீது கூட எனக்கு ஒட்டுதல் இருந்தது. இத்தனைக்கும் சுராவின் நெருங்கவிடாத எழுத்திற்கு அப்பாலும் சென்று என்னால் நெருக்கத்தை உருவாக்க/உணர முடிந்திருந்தது ஆனால் இந்த அணைத்துச் செல்லும் வகை எழுத்தில் என்னால் அதை உணர முடியவில்லை.ஒரு வேளை லைட் ரீடிங் வகையறா எழுத்துக்கள் எனக்கு போரடிக்கத் தொடங்கிவிட்டதா தெரியவில்லை. லைட் ரீடிங் என்று நான் சொல்வது கோணங்கியின் ‘இருள்வ மௌத்திகம்’ ரமேஷ் – ப்ரேமின் ‘சொல் என்றொரு சொல்’ முதலானவற்றோடு ஒப்பிட்டே.

இந்தப் புத்தகத்தில் எனக்கு பிடிக்காத இன்னொரு விஷயம் ‘கிரேஸி’ மோகனின் முன்னுரை(அல்லது whatever) புத்தகத்திற்கான முன்னுரை பதிப்பகம் கேட்டு வாங்குமா எழுத்தாளர் கேட்டு வாங்குவாரா தெரியாது. என்ன கொடுமைங்க இது சரவணன். என்னமோ புத்தகக் கண்காட்சிக்காகவே கேட்டு வாங்கியது போல் ஒரு முன்னுரை. இரா.முவை விடுத்தும் அவர் மொழியின் மீதான நம்பிக்கையை விடுத்தும் புத்தகம் விற்பதற்கான இன்னொரு ஸ்ட்ராடஜியாக ‘கிழக்கு’ இதை முன்வைத்தார்களா தெரியாது. நான் அறியேன் பராபரமே! (இரா.முருகனுக்கு; சார் நான் எல்லாம் அறிவுரை சொல்கிற அளவிற்கு நீங்கள் வந்துவிட்டீர்கள் என்று சொல்லலை, இதற்கு முன்னுரை இல்லாமலே நீங்கள் இந்தப் புத்தகத்தை வெளிவிட்டிருக்கலாம்.) ஆனால் அவர்களும் என்ன தான் செய்வார்கள் பாவம்.
சுஜாதாவை விடவும் இரா.முருகனின் ராயர் காப்பி கிளப் பத்திகள் நன்றாக இருப்பதாக நான் சொன்ன நினைவு, ஆனால் இரா.முவை சுஜாதாவாக ஆக்க முயல்கிறார்களோ என்பதில் எனக்கு பயமே வருகிறது. உதாரணத்திற்கு இந்தப் புத்தகத்தில் இருந்து ஏகப்பட்ட உதாரணங்கள் அள்ளி வீச முடியும், எனக்கு உண்மையிலேயே தெரியாது ‘கிழக்கு’ உடன் காண்ட்ராக்ட் போட்டு எழுதப்பட்ட நாவலா ‘ரெட்டைத் தெரு’ என்று. பொலிடிகலி கரெக்ட்னெஸ் இல்லாத பத்தியே இல்லை என்று சொல்லலாம்.

குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ
குனிந்து பார்க்கலாமோ
பாதி மறைந்த ஸ்தனமும்
பாங்காய் இடுப்பில் ஒட்டியாணமும்
வாழைத் தொடையும்
வடிவான தோளுமாய்க்
குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ
குனிந்து பார்க்கலாமோ

முனிவனவன் பெண்டாட்டி
முடிஞ்சு வச்ச கூந்தலிலே
செல்லமாத் தலைப்பேனா
கள்ளப் புருசனையும்
ஒளிச்செடுத்து வந்து
ஓரமாத் தலைவிரிச்சா
கச்சு அகற்றிப் பழம் போல
கனிஞ்சு தொங்கும் தனமிரண்டும்

எழுதிய மனம் தான், செம்மீன் பற்றிய பத்தியையும் எழுதியிருக்கும் என்று சொன்னால் நான் சத்தியமாக நம்ப மாட்டேன்.

அயோனி – சீதை – கேள்விகள் – நியீட்ஷே – வளர்மதி – பைத்தியக்காரன் – இட்லிவடை!?

திடீரென்று ஒருநாள் நண்பன் ஒருத்தன் சீதையை அயோனின்னு சொல்வாங்களாமே அப்படின்னா என்ன அர்த்தம் என்று கேட்டு என்னிடம் வந்து நின்றான். எனக்கு முதலில் ஆச்சர்யம் எப்படி இவனுக்கு இந்தக் கதை தெரிந்தது என்று, அடுத்து அவன் ஏன் இதைப்பற்றி கேட்கிறான் என்ற சந்தேகம். ஏற்கனவே நண்பன் ஒரு மாதிரியானவன் என்பதால் சும்மா வாயைக் கிண்டினேன், ஏன் இதைப் பத்தி கேட்கிறாய் என்று.

யோனின்னா என்ன அர்த்தம்னு எனக்குத் தெரியும், உன் ப்ளாக்கையெல்லாம் படிச்சிட்டு தமிழ்ல ஒரு வார்த்தைக்கு முன்னாடி அ- போட்டா அது அந்த வார்த்தையோட எதிர்ப்பதம்னும் தெரியும்.(புனைவு – அபுனைவு உதாரணம் சொன்னான்). அப்படின்னா சீதை யோனியில்லாதவள்னு அர்த்தமான்னு கேட்க, எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.

நான் சொன்னேன், ஒரு விஷயத்தை எக்ஸாக்ட்டா எப்படி தப்பா சொல்றதுன்னு உன்கிட்டத்தான் கேட்கணும் போலிருக்கு. அயோனின்னு சீதையைச் சொல்வாங்கங்கிறது சரிதான். ஆனால் அதற்கு அர்த்தம் சீதை யோனியில்லாதவள் என்பதல்ல, சீதை யோனியின் வழியாய் பிறக்காதவள் என்பதுதான். ஏன் என்றால் சீதை அம்மா – அப்பா மூலமாய் கருவுற்று பிறந்தவள் இல்லை என்று சொன்னேன். என்னத்தையோ நினைத்து வந்து என்னமோ கிடைத்த விரக்தியில் நகர்ந்தான்.

நான் சிறு வயதில் இருந்தே ஏகப்பட்ட கேள்விகள் கேட்பவனாகவே இருந்து வந்திருக்கிறேன், பள்ளிக்கூடங்களிலும் சரி கல்லூரிகளிலும் சரி எனக்கு பாடம் நடத்துவது அத்தனை சுலபமானது கிடையாது. தற்சமயங்களில் வேலை செய்யும் நிறுவனத்தில் கூட ‘செஷன்’ என்று கூட்டிச்சென்றாலோ ‘டிரைய்னிங்’ கொடுத்தாலோ அதிகம் கேள்விகள் கேட்பவனாகயிருந்திருக்கிறேன். கேள்விகள் ஒரு வியாதி போல் என்னைத் தொடர்ந்து வந்துகொண்டேயிருந்திருக்கிறது. சில சமயங்களில் வெறுமனே கேட்கவேண்டுமென்பதற்காகவே கேட்கப்பட்ட கேள்விகளை கேட்காமலேயே இருந்திருக்கலாம் என்று நினைக்கும் அளவிற்கு மோசமான அனுபவங்கள் நான் கேள்விகள் கேட்டதால் நடந்திருக்கிறது.

புத்தர் நான்கு வகைகளாகக் கேள்விகளைப் பிரிக்கலாம் என்கிறார், நேரடியாக பதில் சொல்வது போல் கேட்கப்படும் கேள்விகள், விளக்கத்துடன் பதில் சொல்வது போல் கேட்கப்படும் கேள்விகள், எதிர்கேள்வி கேட்பதன் மூலம் பதில் சொல்ல கேள்விகள், பதில் சொல்லக் கூடாத கேள்விகள் என்று. உண்மைதான் கேள்விகளுக்கும் நான்கு என்ற எண்ணுக்கும் தொடர்பு உண்டு போலிருக்கிறது, எது சரி எது தவறு என்பதைப் பற்றிய உணர்வின் மேல் நியீட்ஷே எழுப்பும் கேள்விகள் கூட நான்கு தான்.

<span style=”font-weight:bold;”>You run ahead?  Are you doing it as a shepherd?  Or as an exception?  A third case would be the fugitive.

Are you genuine?  Or merely an actor?  A representative?  Or that which is represented?  In the end, perhaps, you are merely a copy of an actor.

Are you one who looks on?  Or one who lends a hand?  Or one who looks away and walks off.

Do you want to walk along?  Or walk ahead?  Or walk by yourself?  One must know what one wants and that one wants. </span>

Questions of Conscienceவில் நியீட்ஷே கொடுக்கும் நான்கு கேள்விகளுக்குமான பதில் ஒவ்வொரு தனிமனிதனும் தனக்குத் தானே கேட்டுக் கொண்டு விடையளிக்க வேண்டிய அளவிற்கு முக்கியமானவை. நியீட்ஷேவைப் பற்றி நினைத்தால் சட்டென்று நினைவுக்கு வருவது ’வளர்மதி’ தான்.

ஒருமுறை பைத்தியக்காரன், வளர்மதி ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்ததையும் அதற்கு காரணம் நியீட்ஷே தான் என்று சொன்னதையும் நான் நிச்சயம் விளையாட்டாய் எடுத்துக் கொள்ளவில்லை தான். ‘ஒரு கேள்வி’ என்னை ஆட்டிப் படைத்திருக்கிறது, அது எந்தக் கேள்வி என்பது அல்ல இங்கே பிரச்சனை கேள்வியால் மனிதனை ஆட்டிப் படைக்க முடியாமா என்பது, அப்படியென்றால் முடியுமென்பது தான் பதிலாய் இருக்க முடியும்.

வளர்மதி, நியீட்ஷேவைப் படித்துவிட்டு நியீட்ஷே கேட்ட ஒரு கேள்வியால் அப்படி பாதிக்கப்பட்டதால் சாப்பிடாமல் கொள்ளாமல் அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்ததாக சொன்ன நினைவு உண்டு. எந்தக் கேள்வியென்று அத்தனை சுலபத்தில் நினைவிற்கு வரவில்லை என்றாலும் ‘மையமாக’ இப்படி இருந்தது. இதே உடல், இதே அறிவு, இதே நண்பர்கள், இதே பகைவர்கள், இதே வாழ்க்கை உங்களுக்கு இன்னொரு முறை வாய்க்கும் என்றால் வாழத் தயாரா என்பது தான் அந்தக் கேள்வி. வெண்ணைவெட்டியாய் இதற்கான பதிலை எதையும் யோசிக்காமல் ஆம் என்று சொல்ல வேண்டாம். இந்தக் கேள்வி எழுப்பும் அதிர்வு நிச்சயம் இல்லை என்று சொல்லவைக்கும். யாருக்கும் பதில் சொல்லவேண்டும் என்று இல்லாமல் உங்களுக்குச் சொல்லிக் கொள்ள முயலுங்கள். என் பதில் இல்லை என்பதை நான் அப்பொழுதே வளர்மதியிடம் சொன்னேன்.

அப்படியென்றால் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது என்ன?

‘மையம்’ என்றதும் சுஜாதா மையமாக வந்து என் கியூப்பிக்கில் மேல் கால் மேல் கால்போட்டு உட்கார்ந்து கொண்டு வளைந்த முதுகுடன் சிரிக்கிறார். நான் விரும்பிப் படித்த கேள்வி பதில்கள் சுஜாதாவினுடையவை, அந்துமணியில் இருந்து தான் இது தொடங்கியது. பின்னர் மதன், அரசு என்று பலவாறு தொடர்ந்து இன்றும் இணையப்பக்கங்களில் எழுதும் லக்கிலுக் வரை தொடர்ச்சியாய் கேள்வி பதில் படிக்கிறேன். ஜெயகாந்தன் பதில்கள் மட்டும் சட்டென்று ஒரு எரிச்சலை உண்டாக்கும் இவரிடம் போய் கேள்வி கேட்கிறாங்க பாருங்க என்று, ஒரு வேளை அவர் எதிர்பார்ப்பது கூட அதுவாகத்தான் இருக்கும்.

கேள்வி என்றதும் நினைவிற்கு வரும் இன்னொரு நபர் ’தெரிதா’. அவர் எழுப்பும் <span style=”font-weight:bold;”>‘must not structure have a genesis, and must not the origin, the point of genesis, be already structured, in order to be the genesis of something?’</span> இந்தக் கேள்வி உள்ளிட்டு அவருடைய எழுத்து கேள்விகளால் நிரம்பியதாக இருக்கிறது.

Interviewக்களால் நிரப்பப்பட்ட சாஃப்ட்வேர் வாழ்க்கையில் நான் கேள்விக்கான பதில் சொல்வதை ஒரு விளையாட்டாக விளையாடத் தொடங்கியிருந்தேன் ஒரு சமயத்தில், interviewer உடன் சதுரங்கம் விளையாடும் தந்திரத்துடனும் லாவகத்துடனும் கேள்வி பதில்கள் தங்கள் அடுத்த நகர்வை முந்தைய நகர்வை வைத்தே ஆடும் விளையாட்டு போல், என் பதிலின் மூலம் எனக்கான கேள்விகளை அவர்கள் வாயில் புகுத்தி ஆடும் இந்த விளையாட்டு எனக்கு தொடர்ச்சியாக வெற்றியையே பெற்றுத்தந்தது.

கேள்விகள் தொடர்ச்சியாக இருந்து கொண்டு தான் இருக்கின்றன, எதைப் பற்றியாவதும். தொடர்ச்சியாக கேள்வியாகவே இருந்த கேள்விகளுக்கான பதில் கிடைக்கும் தருணம் விளக்கிவிடமுடியாததாய் இருக்கிறது. பதிவுலகில் முகமூடியில் உலாவரும் இன்னொரு ‘க்ரூப்’ இட்லிவடை தன் முகமூடியை கழட்டி எறிய திட்டமிட்டிருப்பதாகத் தெரிந்ததும் அந்த உணர்வுதான் வந்தது. முகமூடிகளை அலட்சியப்படுத்திவிட்டு நகர்ந்துவிடுவதுதான் இணையத்தில் மனநிம்மதியுடன் வாழ வழி என்று தெரிந்தாலும், எலி எப்பொழுதும் புலியாவதில்லை என்று தீர்ப்பு வைத்த திருமுகத்தைப் பார்க்க ஆசையாகத்தான் இருக்கிறது. என்னவென்றாலும் இட்லிவடை கேள்வி பதில் இல்லாமல் தான் ‘சுழற்றிக்’ கொண்டு நிற்கும் என்று தெரிவதால், Ignorance is a bliss.