விளம்பரங்கள் பார்ப்பது என்பது எனக்கு எப்பொழுதும் பிடித்தமான ஒரு விஷயம், அக்காவிடம் இதற்காக திட்டு வாங்கிய நினைவுகள் கூட உண்டு. இரண்டு நிமிடங்களில் ஒரு அற்புதமான விஷயத்தை சொல்லிவிடும் பொழுது மனம் லேசானதைப் போல் உணர முடிகிறது. ஏறக்குறைய சமீபத்தில் வெளிவந்த எல்லா ‘த்ரீ ரோஸஸ்’ விளம்பரமும் எனக்கு பிடித்தமான ஒன்று. மெல்லியதான ஒரு ஆணாதிக்க உணர்வு இந்த விளம்பரங்களில் என்னை மிகவும் மனதிற்கு நெருக்கமாக ஆக்கிய ஒன்று. ஆரம்பத்தில் இருந்தே இந்த விளம்பரங்களைப் பார்த்து வருகிறேன், அந்த செட் ஆஃப் விளம்பரங்கள் எங்கேயும் கிடைக்குமா தெரியவில்லை வீடியோவாக?
எப்பொழுதாவது படிக்க நேர்கிற அழகான ஹைக்கூ கவிதை போல் கடைசியாக வெளிவந்த ‘த்ரீ ரோஸஸ்’ விளம்பரம். கணவன் மனைவிக்காக வாங்கி வந்த தோடுகளை பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிக் கொண்டே தூங்கிக் கொண்டிருக்கும் மனைவியை எழுப்பிக் காட்ட, வந்த மலர்ச்சியை/ஆச்சர்யத்தை மறைத்துக் கொண்டு, பிறந்த நாள் அடுத்த மாசம் என்று சொல்லும் மனைவி பின்னர் ஒரு நாள் அம்மா வீட்டிற்கு கிளம்பும் பொழுது தான் கட்டியிருக்கும் சேலை எப்படியிருக்கு என்று கேட்க பரிதாபமாய் முகத்தை வைத்துக் கொண்டு கணவன் நல்லாயிருக்கு ஆனால் போன தடவையும் இதைத் தான் கட்டினாய் என்று சொல்லும் பொழுது, மனைவி சட்டென்று கோபமடைந்து திரும்பி பின்னர் கணவரைப் பார்த்து அழகாய் சிரித்து தேங்க்ஸ் சொல்லும் பொழுது, கவிதை, கவிதைன்னு நான் எழும்பிக் குதித்துக் கொண்டிருந்தேன் டிவியின் முன். இது ஒரு உதாரணம் மட்டுமே ஏறக்குறைய எல்லா ‘த்ரீ ரோஸஸ்’ விளம்பரங்களும் இதே வகையான ஹைக்கூக்களே. தொடர்ச்சியாக இப்படி அழகான ஹைக்கூக்களை நான் ஒரு கவிஞர் எழுதிக் கூட பார்த்ததில்லை. த்ரீ ரோஸஸ் கான்செப்ட் செய்பவரைப் பார்த்து ஒரு ‘ஹாய்’ சொல்ல வேண்டும் போலிருக்கிறது.
இந்த விளம்பரம் இன்னொரு அழகு, ஒரு அழகான சிறுகதைக்கான இன்ஸ்பைரேஷன்.
இதைப் போலவே கொஞ்ச காலம் முன்னால் வந்த ‘Tata Sky’ன் அமீர்கான் விளம்பரமும் அப்படியே. அந்த செட்டில் வந்த முதல் விளம்பரம், அமீர்கான் தன் பெண்டாட்டிக்காக என்னவெல்லாமோ செய்துவைப்பார்; பார்க்க இயல்பாய் இருக்கும் கடைசியில் அன்றைய இரவு மேட்சிற்கான ஏற்பாடு அது என்று தெரியவரும் பொழுது ஒரு அழகான புன்னகை பரவும் உதடுகளில். அந்த விளம்பரத்தில் அமீர்கான் மற்றும் அவர் மனைவியாக வரும் குல் பனாக்கின் உணர்ச்சி வெளிப்பாடு அருமையாக இருக்கும். கடைசியில் “ச்சலோ ஜாவ் ஜாக்கே சாய் பனாக்கே லாவ்!” ஹைக்கு கவிதையின் ஆச்சர்யப் பகுதி!
தற்சமயம் ஓடிக்கொண்டிருக்கும் Airtelன் விளம்பரமும் அப்படித்தான்.
ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அந்தப் பையனின் தாயாக வரும் கதாப்பாத்திரம் அழகாக(?!) இல்லாததைப் போல் ஒரு வருத்தம் இருந்தது எனக்கு. ஆனால் கடைசியில் “பாப்பாகா ஃபோன் ஆயாத்தான்னா?” என்று அந்த குட்டீஸ் கேட்கும் பொழுது அவன் கையில் இருக்கும் பொம்மை ஃபோனைப் பார்த்து மெதுவாய் புன்னகைத்துவிட்டு நகரும் பொழுது. அருமை. இன்னொரு கவிதை.
HDFC Childrens Plan விளம்பரமும் சட்டென்று மனதைக் கவர்ந்த ஒன்று, தொடர்ச்சியாய் செல்லும் தியேட்டர்களில் எல்லாம் போட்டாலும் இன்னமும் மனதைக் கவர்ந்த ஒன்று.
இதில் ஒரு விஷயம், அந்த நான் சொன்ன எல்லா த்ரீ ரோஸஸ் விளம்பரங்களிலும், HDFC விளம்பரத்திலும் நடிக்கும் அந்தப் பையன் துள்ளுவதோ இளமையில் தனுஷுடன் நடித்த பையனாமே! ஆச்சர்யம்! என் அக்கா புருஷன் சொல்லப்போய் தான் எனக்கு தெரிய வந்தது. அந்தப் பையனின் உணர்ச்சி வெளிப்பாடு எனக்கு மிகவும் பிடித்ததாய் இருக்கிறது. கன்கிராட்ஸ் ட்யூட். இந்த இரண்டு நிமிட ஆச்சர்யங்களுக்கு/கவிதைகளுக்கு பின்னால் நிற்பவர்களுக்கு ஒரு குட்டி சல்யூட். நின்றபடியே, சின்னதாய் ஒரு Stand up Ovation.