நான் காதலித்தக் கதை – ஒரு குரல் பதிவு

என்ன சொல்றது இன்னுமொரு குரல் பதிவு. இந்த முறை நான் +2 படித்த பொழுது செய்த காதல் அனுபவத்துடன். கொஞ்சம் பெரிய பதிவாகிவிட்டது.

தொடர்புடைய பதிவுகள்

நான் காதலித்தக் கதை
காக்கா’பீ’ ரோட்டில் ஒரு காதல் கதை – முதல் பகுதி
காக்கா’பீ’ ரோட்டில் ஒரு காதல் கதை – இறுதிப் பகுதி

வேர்ட் ப்ரஸில் குரல் பதிவு போடுவதில் இருக்கும் பிரச்சனையால். நேரடியாக உரல். இங்கே.

நான் காதலித்த கதை

இது என் காதல்(சொல்லலாமா தெரியவில்லை, வேண்டுமென்றால் விடலை காதல்) கதை, இதில் ஒரு குடும்பமும் ஒரு பெண்ணும் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை எதையும் தவறாக எழுத போவதில்லை நான். சில முக்கியமான காரணங்களுக்காக நான் பெயரையும் இடத்தையும் மாற்ற முடிவு செய்திருக்கிறேன். மற்றபடி நடந்த நிகழ்வுகளே இந்தக் காதல்(வைத்துக் கொள்கிறேன்)கதை.

இது நடந்த பொழுது நான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அந்தப் பெண் மீனா எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள், காதலிக்கவோ இல்லை, அதைப்பற்றி நினைத்துப்பார்க்கவோ கூட, கூடாத வயது அது. ஆனால் வாழ்க்கையில் காதல் இப்படித்தான் வரும்.

பார்த்த முதல் தடவையே எனக்கு காதல் வரவில்லை, நிச்சயமாய் தெரியும். எங்கள் குவார்ட்டர்ஸ்க்கு (இன்னும் சொல்லப்போனால் என் வீட்டெதிரில்) அவர்கள் குடும்பம் வந்து சில மாதங்கள் இருக்கும். இதற்கு முன் என்னைப்பற்றி ஒரு சிறிய அறிமுகம். நான் அவ்வளவு அழகானவன் இல்லை, எங்கள் குடும்பம் மிகவும் நடுத்தரமான குடும்பம் தான். முக்கியமாக நான் தமிழ் மீடியத்தில் படித்துவந்தேன். இதை ஏன் இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், எங்கள் குவார்ட்டர்ஸ்ஸில் தமிழ் மீடியத்தில் படிப்பவர்கள் மிகக் குறைவு.

அவள் குடும்பம் சிறிது வசதியானது என்று நினைக்கிறேன். எங்கள் ஊரின் மிக நல்ல பள்ளியில்(ஆங்கில மீடியம்) படித்துவந்தாள். அவளுக்கு ஒரு அண்ணன், சரியாக என் வயது ஒத்தவன். நான்படிக்கும் அதே வகுப்பை வேறொரு பள்ளியில் படித்து வந்தான். நாங்கள் இருவரும் கிரிக்கெட் விளையாடியிருக்கிறோம், ஒன்றாய். அவங்க அம்மாவுக்கு என்னை பிடிக்கும் என்று நினைக்கிறேன். பேசிய பொழுதெல்லாம் நன்றாக பேசியதாக ஞாபகம்.

சரி இப்போது என் காதலுக்கு, அவள் அப்படி ஒன்றும் அழகில்லை, கேள்விபட்டவரையில் அறிவுமில்லை, ஆனால் நான் அப்படியில்லை ஒரளவுக்கு நன்றாக படிக்கக்கூடியவன், இன்னும்சொல்லப்போனால் அவள் அண்ணன் ஒரு பப்ளிக் தேர்வில் வாங்கியதை விட இரண்டு மடங்கு மதிப்பெண் வாங்கியவன். ஆனால் நாளாக, நாளாக, நான் படித்த சாண்டில்யன் கதைகளும், பாலகுமாரன் கதைகளும், என்னை அவளைப் பார்க்க சொல்லியது.

அந்தக் காலத்தில் நாம் யாரயாவது காதலித்து(அல்லது நடித்தாவது) தொலையவேண்டியிருக்கிறது. இந்த நிலைமை எனக்கும் ஏற்பட்டது. அந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் மத்தியில் நானும் காதலிக்கிறேன் என்று சொல்ல நினைத்தேன். அதற்கு சேர்ந்தால் போல் இவளும் வந்தாள். எல்லாம் ஒரு சந்தர்ப்ப சூழ்நிலை தான்.

அவள் அந்த சமயத்தில் தலை முடியை பாப் கட் அடித்திருப்பாள். நான் நினைக்கிறேன், குறிப்பாக இவளிடம், அந்த உணர்ச்சியை பெற்றது இதனால் தான் என்று. ஏனென்றால் எல்லா பெண்களும் நீண்ட முடி வைத்திருந்த காலமது. அதுமட்டுமில்லாமல் அவள் ரோட்டிலோ இல்லை சாதாரணமாக வேறு இடங்களிலோ அதிகம் பேசி பார்த்ததில்லை நான். இதுவும் ஒரு காரணம். அவ்வளவுதான் நான் விழுந்துவிட்டேன். இதன் பிறகு நடந்த கூத்துக்களே நான் சொல்ல நினைப்பது.

ஒரு முக்கியமான விஷயம், நான் அந்தப் பெண்ணை காதலிப்பது(பார்த்துக் கொண்டு பின்னாலேயே சுற்றுவது) என் வீட்டில் அப்பாவை தவிர எல்லோருக்கும் தெரியும். எங்கள் வீட்டில், அப்பாவுக்கு இந்த விஷயங்களில் விருப்பமில்லை. அம்மா, அக்கா இருவருக்குமே நன்றாகவே தெரியும். இருவருமே ஒன்றும் சொல்லவில்லை, இன்னும் சொல்லப்போனால் எங்க அம்மா சில சமயங்களில், தம்பி இன்னிக்கு பல்லு விளக்கலைன்னா மீனு அம்மாகிட்ட சொல்லிடவேண்டியது தான்னு சொல்லி பயமுறுத்துவாங்கன்னா பார்த்துக்கோங்களேன். நான் சிறிது ஓவியம் கூட வரைவேன். எங்கள் வீட்டு சுவரில் இரட்டை சடை(கொஞ்ச நாளில் அவங்க அம்மா பாப் வேண்டாமுன்னு சொல்லிட்டாங்கன்னு நினைக்கிறேன், என் வாழ்க்கையில் நான் மிகவும் வருத்தப்பட்ட நாட்கள்) போட்டு அவளை மாதிரியே
ஒரு படம் வரைந்து வைச்சிருந்தேன்(இன்னும் சுவற்றில் இருப்பதாக ஞாபகம்). ஓரளவுக்கு நல்ல ஒற்றுமையே இருக்கும் அந்த படத்தில், அவளைப்போல. இதனால் என் அப்பாவுக்கும் விஷயம் தெரிந்திருக்கக்கூடும்.

இப்படியாக சாதாரணமாக நான் அவளைப் பார்த்துக்(காதலித்துக்) கொண்டிருக்கையில்.
ஒருநாள் அவளும் அவள் நண்பியும் எதையோ சொல்லி என்னைப் பார்த்து சிரித்து
தொலைத்தார்கள். அவ்வளவுதான் முடிந்துபோனது என் சந்தோஷ வாழ்க்கை.

அதன் பின்னால் என்னைப் பார்க்க வேண்டுமென்றால் மீனு எங்கருக்காளோ அங்கதான் இருப்பான் என்றுஎங்க வீட்டில் சொல்லுமளவுக்கு அட்டகாசம். பொண்ணு மேக்ஸில் பெயிலாகி ட்யூஷன் போயிக்கிட்டிருந்தது. அவள் வீட்டிலிருந்து கிளம்பும் போது பின்னாலேயே கிளம்புவது. அவள் ட்யுஷன் சென்டர்வரைக்கும் கொண்டுவிட்டுவிட்டு; பின்னர், அருகே உள்ள கிரெவுண்டில் கிரிக்கெட் விளையாடிவிட்டு, அவள் வீட்டிற்கு திரும்பும் போது அவள் பின்னாடியே வந்து வீட்டிற்கு கொண்டுவிடுவது. இதெல்லாம் அவளுக்கு தெரியாமலே.

தினமும் இப்படித்தான் இதில் கொடுமை என்னவென்றால் நான் அப்பொழுது பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். வீட்டில் படிக்கிறதாவது அப்பிடின்னா என்னன்னு கேட்டுக்கிட்டிருந்த காலமது. என் நாட்கள் இப்படியே போய்க்கிட்டிருந்தது, அப்பொழுது ஒருநாள் பக்கத்தில் உள்ள ஒரு கிளப்பில்(கொஞ்சம் பெரிய) ஒரு விழா, நடத்தும் பொறுப்பில் இருந்த எங்கள் பள்ளி N.S.S. மாணவர்களை அங்கே அனுப்பியது. நானில்லாமலா, அங்கே போனபின்தான் தெரிந்தது. மீனு படிக்கும் பள்ளியும் வந்திருந்தது என்று பிறகென்ன ஒரு திருவிழாத்தான்.

ஆனால் நான் போட்டிகளில் பங்குகொள்ள முடியாது. ஏனென்றால் நாங்கள் தான் நடத்துவதற்கு உதவி செய்ய வேண்டும். அவள் என்னவோ செய்தாள் சரியாக ஞாபகமில்லை, நாட்டியமோ, ஆங்கிலப்பாடலோ பாடினாள் என நினைக்கிறேன். மதியம் வரை சரியாக சென்றது. எல்லோரும் சாப்பிட சென்றார்கள். எங்களுக்கு பரிமாறும் பொறுப்பு. மதியம் உணவு முடிந்து அனைவரும் வந்து அரங்கத்தில் அமர்ந்தார்கள்.

அப்பொழுது நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஒரு அரைமணிநேரம் இருந்தது. மேடை அறிவிப்பாளர், மைக்கில் இந்த நேரத்தை உபயோகித்து மக்களை மகிழ்விக்க யாராவது முன்வந்தால் வந்தனம் என்றார். நான் காத்திருந்த வாய்ப்பு கிடைத்தது. சிறிது கூட கவலைப்படாமல் நான் மேடையேறி,திருவிளையாடல் வசனத்தை(நக்கீரன் சிவன் வாக்குவாதம்) சொன்னேன். சொல்லிமுடித்ததும் அரங்கம் அதிரும் சத்தம், (அத்துனையும் உண்மை). ஏனென்றால் அதில் சிவன் ஒரு பாடல்சொல்வதாக வரும் அந்த பாடல் முதற்கொண்டு நான் சரியாக மனப்பாடம் செய்து வைத்திருந்தேன்.

மேடையில் இருந்து கீழிரங்கினால் ஒரே பாராட்டு மழை, நான் சுற்றி சுற்றி பார்க்கிறேன் அவள்
இருக்கிறாளா? பார்த்தாளா? என்று. என் கண்ணுக்கு அகப்படவில்லை. ஒன்று தெரியுமா! அன்று எந்தப்போட்டியிலும் கலந்து கொள்ளாத எனக்கு ஒரு பரிசு கூடக் கொடுத்தார்கள்!.

பிறகு வீட்டிற்கு வந்து கொண்டிருந்த பொழுது, எதிரில் அவள் வந்து கொண்டிருந்தாள். ஆகா இவள் பார்க்கவில்லை போலிருக்கிறது என நினைத்து வருந்தினேன். அவள் நேராக என்னிடம் வந்து நல்லாயிருந்தது என்று சொல்லிவிட்டு போய்விட்டாள்(இது நாள் வரை அவள் என்னிடம் பேசிய ஒரே ஒரு வார்த்தை இதுதான்). அப்போழுது கூட நான் அவளிடம் ஒரு வார்த்தை பேசவில்லை.

பின்னாட்களில் எங்கள் வீட்டெதிரில் கிரிக்கெட் விளையாடும் பொழுது, வேண்டுமென்றே
பந்தை அவர்கள் வீட்டு மாடிக்கு அடித்து விட்டு அதைக் கேட்கும் சாக்கில் போயிருக்கிறேன்.
வீடு அழகாக இருக்கும். சுத்தமாக பளிச்சென்று. பிறகு உண்மைநிலை உணர்ந்து பன்னிரெண்டாம் வகுப்புக்கு படிக்க ஆரம்பித்தேன். என்னையும் ட்யுஷன் அனுப்பினார்கள்.(இது வேறு இடம் இன்னும் சொல்லப்போனால் எங்கள் வீட்டிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள இடம்.).

அப்பொழுது தான் காதலர்தினம் படம் வந்தது, அதில் வரும் ரோஜா ரோஜா பாடலைத்தான் நான் முதல் முதலாக மனப்பாடம் செய்தேன். பிறகு இன்றுவரை தொடர்கிறது. இதற்கு வாலியின் வரியமைப்பு காரணமா, தமிழ் உள்ளே ஊறியது காரணமா, இல்லை அவள் காரணமா தெரியாது. ஆனால் நல்லது தான். மனனம் செய்வது எப்பொழுதுமே நல்லதுதான். (பராசக்தி, மனோகரா,சாம்ராட் அசோகன், திருவிளையாடல் என மனப்பாடம் செய்தது அதிகம், இன்றும் அத்துனைவசனங்களும் நினைவிருக்கிறது). ஆனால் பாடல்களே பிடிக்காமல் இருந்த என்னை, பாடல்களின் பின்னால் திரும்ப வைத்ததில் அவளுக்கும் என் காதலுக்கும் சம்மந்தமுண்டு.

தினமும் காலையில் 6 மணிக்கு ட்யூஷனுக்கு கிளம்பவேண்டும், முடிந்ததும் பஸ் ஏறி பள்ளிக்கூடம் வந்துபடிக்கவேண்டும், பிறகு மாலை இரண்டு ட்யுஷன் இதில் என்ட்ரென்ஸ்க்கு தனியாக ட்யுஷன் வேறு. (மொத்தமாக இவையெல்லாம் உபயோகமாகவில்லை என்பது வேறு விஷயம். கடைசியில் நான் இன்ஜினெயரிங் படிக்கவில்லை, அதற்கு சில சொந்த காரணங்கள் உண்டு, அதை இங்கே குறிப்பிட விரும்பவில்லை). ஆனால் தினமும் நான் ரோஜாப்பூவாங்கி வருவேன்,(அவளுக்குக் கொடுக்கத்தான்)ஆனால் கொடுத்ததில்லை.

அக்கா அந்த ரோஜாப்பூவை காந்தி புகைப்படத்துக்கு வைப்பாள், பிறகு இரவு நான் அந்தப் பூவைபாடமாக்கி வைக்க பெரிய புத்தகங்களின் மத்தியில் வைப்பேன். இன்றும் இப்படி பாடமாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ரோஜாக்கள் என்னிடம் உள்ளன(என் முதல் காதல் நினைவாய்).

அதே கிளப்பில் ஒவ்வொரு சனிக்கிழமையும் படம் போடுவார்கள். எங்கள் அப்பாவிற்கு பாஸ் கிடையாது. ஆனால் அவள் வீட்டிற்கு உண்டு(இந்த வேறுபாடுகள் தான் நான் சொன்னது நடுத்தர குடும்பம்).ஆனால் காதலுக்கு முன்னால் எடுபடுமா நான் என்னென்னமோ தந்திரங்கள் செய்து அங்கே படம் பார்த்திருக்கிறேன். சில சமயங்கள் அவளும் என்னைப் பார்ப்பாள் பார்த்து சிரிப்பாள். அவ்வளவுதான், இதற்குத்தான் நான் பாடுபட்டு, வீட்டில் அடிபட்டு அந்தப் படங்கள் பார்க்க போனது. எங்கப்பாவுக்கு எட்டுமணிக்கு மேல் வெளியில் இருந்தால் பிடிக்காது. ஆனால் படமோ ஏழுமணிக்குத்தான் தொடங்கும், இடைவேளை எட்டரைக்குத்தான், அப்பொழுது தான் முறுக்கு, சீடை வாங்க வருவாள். அங்கேதான் அவள்
என்னை பார்க்க முடியும் (நான்தான் அவளை பார்த்தக் கொண்டேயிருந்தேனே). என்னை கிளப் வாசலில் விடமாட்டார்கள். அதனால் சுவர் ஏறிக் குதித்து, கதவின் கீழ்வழியாக வந்து இப்படியெல்லாம் ஹீரோயிஸம் காட்டியும், நான் அந்தப் படம் பார்க்கமாட்டேன்.

அரைமணிநேரத்தில் வீட்டிற்கு போகவேண்டும் (அதாவது எட்டரை) இல்லையென்றால் செருப்படி. படமும் பார்க்காமல், அவளும் என்னைப் பார்க்காமல் வேதனையில் தள்ளிய நாட்களும் உண்டு.

அவர்கள் இங்கே வ்ந்த பிறகு முதல் வருடபிறப்பு. அவள் வீட்டில் எல்லோரும் அந்தக் கிளப்பில் கொண்டாடினார்கள். அதற்காக நானும் உள்ளே போகலாமென்றால் உள்ளே விடமாட்டார்கள், மேலும் பார்ட்டியே பத்துமணிக்கு பிறகு தான். என் வாழ்நாளில் நான் பத்துமணிக்கு மேல் வெளியில் இருந்ததில்லை. ஆனால் வெளியில் இந்த வருடம் இருக்க வேண்டும். என் அப்பாவிடம் எவ்வளவோ கெஞ்சி கூத்தாடி, அம்மாவின் ஒப்புதல்லோடு நான் முதல் முறையாக வெளியே வந்தேன்.

எட்டுமணி இருக்கும், கிளப்பிறகு சென்று நான் உள்ளே நுழையும் இடங்களைப் பார்த்தால் செக்யுரிட்டி நின்று கொண்டிருந்தார்கள். அன்று என்னிலும் மூத்தவர்கள் குடித்துவிட்டு பிரச்சனை செய்வார்கள் என்பதால் அந்த ஏற்பாடு. எனக்கோ தூக்கிவாரிப் போட்டது. நான் உள்ளே நுழையும் அத்துனை வழியும் அடைபட்டிருந்தது. ஆனாலும் நான் உள்ளே செல்ல வேண்டும். அப்பாவிடம் அவ்வளவு போராடி அனுமதிபெற்று வந்தால் இப்படியரு நிலைமை. அழுகையே வந்தது எனக்கு. பிறகு தான் ஐடியா வந்தது. என்வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஒருவர் அந்தக் கிளப்பில் உறுப்பினர். நான் நேராக அவரிடம் சென்று எனக்கு உங்கள் மெம்பர் கார்டு கிடைக்குமா? என்று கேட்டேன்(இன்று நினைத்தால் ஆச்சர்யமாயிருக்கி
றது). அவரும் கொடுத்தார்.

மேலும் சோதனை நான் அந்தக் கார்டை எடுத்துக்கொண்டு நான் ஒரு வாசலுக்கு வந்தேன் அங்கிருந்தவரிடம்(கேட் கீப்பர்) மெம்பர் கார்டை காட்டினேன். அவர் கார்டை பார்த்துவிட்டு, உங்கப்பாவுக்கு பாஸ் கிடையாதே யாரோடது இதுன்னு கேட்டாரே பார்க்கலாம். நடுங்கிட்டேன் உடனே கார்டை வாங்கிட்டு திரும்பிவந்திட்டேன். கொஞ்ச நேரம் கழித்து நான் நினைத்தது போலவே, அவர் ஒரு செக்யூரிட்டியிடம் அந்தப் பொறுப்பை கொடுத்துவிட்டு போய்விட்டார். நான் பருப்புபோல் கார்டை அந்த செக்யூரிட்டியிடம் காட்டிவிட்டு உள்ளே வந்துவிட்டேன். ஆனால் சோகமே அன்று அவள் என்னை பார்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் நான் தைரியத்தையெல்லாம் திரட்டி அவளிடம் சொல்ல நினைத்த Happy NewYear கூட அவளிடம் சொல்லவில்லை.

நான் அவளை நிறைய தடவைப் பார்த்தது, நிறைய நேரம் பார்த்தது, எல்லாமே. அவள் பள்ளியில் இருந்து திரும்பி வரும்பொழுது தான். அழகா குதிரை மாதிரி நடந்து வருவாள், எப்பவுமே தனியா வரமாட்டாள். யாராவது ஒரு பெண் அவள் கூடவே வருவார்கள். ஆரம்ப காலங்களில் சுமார் ஆறு மாதங்களுக்கு நான் அவள் நடந்து வரும்பொழுது வீட்டின் வெளியே சேர் போட்டு உட்கார்ந்து கொண்டு பார்ப்பேன், இல்லையென்றால் சிலசமயம் ஜன்னலில் இருந்தும் பார்ப்பேன். பிறகு சிறிது தைரியம் வளர்த்துக்கொண்டு அவள் நடந்து வரும் பொழுது நான் புத்தகத்தையோ, இல்லை கிரிக்கெட் மட்டையையோ எடுத்துக்கொண்டு எதிரில் நடந்து வர ஆரம்பித்தேன். சில நாட்கள் இப்படியே சென்றது பிறகு எப்பொழுதெல்லாம் நான் அவள் எதிரில் இப்படி நடந்து வர ஆரம்பிக்கிறோனோ அப்பொழுதெல்லாம் அவளும் அவள் நண்பியும், என்னைப் பார்த்து சிரிக்கத் தொடங்கினார்கள்(பின்னாட்களில் தான் அவர்கள் நக்கலாகத் தான் சிரித்தார்கள் என்று உணர்ந்து கொண்டேன்). இதெல்லாம் சொர்க்க காலம். அதாவது என் காதலின் கடைசிக்காலம்.

அப்பொழுதெல்லாம் மழை பெய்தால் வீட்டில் உட்காருவதில்லை, வெளியில் நிற்பது, கவிதை
எழுதுவது, இல்லை மழையில் டான்ஸ் ஆடுவது என்று உடல் நலத்துக்கு நல்லதில்லாத எல்லாவற்றையும் செய்து வந்தேன். இதன் காரணங்களால்(மேலும் சில காரணங்களாலும்) நான் இன்ஜினியரிங் படிக்க இயலாமல் போனது. ஏன் இந்த காரணங்களால் என்று குறிப்பிடுகிறேன் என்றால், என் அப்பாவும் அம்மாவும் ஆசிரியர்கள், அதனால் நான் ஆரம்ப காலங்களில் இருந்தே வீட்டில் படிப்பது என்பது சுத்தமாக கிடையாது. இதனால் என் பெற்றோர் நான் முதல் மாணவனாக வந்த பொழுதும் என்னை ட்யூஷனுக்கு அனுப்பினார்கள். ஆனால் அங்கே போயும் நானும் படிக்காமல் மற்ற மாணவர்களை படிக்கவிடாமல் இருந்ததால். முக்கால்வாசி ட்யூஷன் சென்டரில் இருந்து விலக்கப்பட்டேன்
(அதென்ன முக்கால்வாசி என்றால் மற்ற ட்யூஷன் மாஸ்டர்களெல்லாம் அப்பாவிற்கு பயப்பி
டுபவர்கள் அதனால் விலக்க முடியாத பயம். அந்த முக்கால் வாசியும் என் அப்பாவிடம் வந்து, சார் எல்லாரையும் கெடுக்குறான் சார்ன்னு புலம்பித்தான் நிறுத்தினார்கள்).

இப்படி நான் படிக்காமலே நல்ல மதிப்பெண்ணும் ரேங்க்கும் வாங்கிய காலமது. ஆனால் இப்படியெல்லாம் படித்து மார்க் வாங்க முடியாது என எனக்கு உணர்த்தியது 10 வகுப்புத் தேர்வு. எல்லோரும் நான் பள்ளியில் முதலிடம் வருவேன் என நினைத்த பொழுது எல்லாருடைய எண்ணங்களையும் தகர்த்தெறிந்தேன். ஆனாலும் 80% வாங்கினேன். எதிர்பார்த்ததுக்கு மிகவும் குறைவான மார்க்குகள். இப்படியாக நான்
இருந்த பொழுதுதான் +2 தேர்வு. நான் படிக்கும் அறைக்கு நேர் எதிரே அவள் வீட்டு மாடி ஜன்னல். திரைபோட்டுத்தான் இருக்குமென்றாலும். வெய்யில் காலங்களில் திறந்துமிருக்கும். நான் தேவதைக்காக காத்திருந்து தேர்வில் கோட்டைவிட்டேன்.(கோட்டைவிட்டேன் என்றால் பெயில் இல்லை). சரி பையன் திருந்தி விட்டான் எப்பப் பார்த்தாலும் புத்தகத்தோடு மேஜையில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்கிறான். இந்த முறை நிச்சயம் நல்ல மார்க் வாங்கிவிடுவான்(பள்ளி முதல் மாணவன் கனவெல்லாம் உடைத்தாகிவிட்டது). ஒரு 1000 ஆவது வாங்கிவிடுவான்னு நினைத்தார்கள். வாங்கியதோ 70% (மொத்தம் 1200 க்கு கணக்கிட்டு பார்த்துக்கொள்ளுங்கள்).

சரியான அடி(மனதில்) இரண்டு நாள் அப்பாவும் அம்மாவும் அக்காவும் என்னை விட்டு நகரவேயில்லை, நான் எங்கே தற்கொலை செய்துகொள்வேனோ என நினைத்தார்கள்(பின்நாட்களில் அவர்களே சொன்னது). கட்டாப் பரவாயில்லை தான் (224 னு நினைக்கிறேன்). நான் என்ட்ரென்ஸில் நல்ல(சொல்லிக்கிட்டாங்க) மார்க் வாங்கியிருந்தேன். இன்ஜினெயரிங் கூட கிடைத்திருக்கும் (சிவில், மெக்கானிக்கல்). ஆனால் என் மாமாக்களின்(அமேரிக்க) ஆலோசனையின்(கட்டளையின்) படி. கம்ப்யூட்டர் தான் படிக்க வேண்டும் என்று முடிவானது. நான் இன்டர்வியூவுக்குள் போவற்குள் கம்ப்யூட்டர் ஸீட் முடிந்து போனது. (அடுத்த வருடம் சுமார் ஐயாயிரம் கம்ப்யூட்டர் ஸீட்டுகள் இருந்தன பில்லப்செய்யப்படாமல்).

அப்புறமென்ன, அலையோ அலையென அலைந்து எனக்கு பிஎஸ்ஸி ஸீட் வாங்கித்தந்தார்கள். நான்வேண்டிக் கேட்டுக் கொண்டு ஹாஸ்டலில் தங்கினேன். காதலை(என் காதலை) விட்டு விட்டு வேறுஎங்கோ போகிறேன்னு நினைக்கிறீங்களா இல்லை தோ வந்துட்டேன். அதன் பிறகு அவளை நான் பார்ப்பது சிறிது சிறிதாக குறைந்தது(கல்லூரியல் சேர்ந்து விட்டேனே). அடுத்த வருடம் நியூயியரில் அதே கிளப்பில் பார்த்ததாக ஞாபகம். அன்று தான் நான் அவளிடம் ஹேப்பி நியூயியர் சொன்னேன். அது தான் நான் அவளிடம் பேசிய கடைசி வார்த்தை. பிறகு நான் டிகிரி முடித்து டெல்லி, பெங்களுர் என்று இரண்டு வருடம் இருந்துவிட்டு சற்று நாளைக்கு முன் ஊருக்கு சென்றிருந்தேன்.

அதே ஜன்னல் முன்னாலிருந்து சிரித்துக் கொண்டிருந்தேன். அக்கா வந்து `என்னடா தம்பி’ என்றாள். நான் ‘மோனா மீனா எங்கன்னு தெரியுமான்னு’ கேட்டேன். அதற்கு அவள் ‘அவங்க குடிமாறிபோயிட்டாங்க. ஏய்! உனக்கு அவளை இன்னமும் ஞாபகம் இருக்கிறதா?’ன்னு கேட்டா. பிறகு ‘தெரியுமா நீ இங்க இல்லைல்ல அவளுக்கு பல்லு கொஞ்சம் வெளிய தெரிய ஆரம்பிக்க, கிளிப்போட்டிருந்தா, அவங்கம்மா கூட உன்னை சில தடவை கேட்டாங்க. அன்னிக்கு அவங்க வீட்ட கிரகப்பிரவேஷத்துக்கு அம்மா போயிருந்தப்ப, அம்மாகிட்ட சரியா நடந்துக்கலைன்னு(நாங்க அப்ப நடுத்தரகுடும்பம்) அம்மாவுக்கு கோபம்’னு, ஏதேதோ சொல்லிட்டுப் போனாள் என் அக்கா.

எனக்கு அன்றைய நாட்களை நினைத்தால் சிரிப்பாக இருந்தது. சைக்கிளில் அவள் பின்னாடி
போறதும், கதவு இடுக்கில் புகுந்து சினிமா பார்க்கிறதும், அவளைப்பற்றி கவிதை எழுதி
யதும். அன்னிக்கு முழுக்க சிரித்துக் கொண்டே இருந்தேன். அம்மாவுக்கு ஒரே பயம், கம்ப்யூட்டரில் ரொம்ப வேலைப் பார்த்தா லேசா பைத்தியம் பிடித்திடும்னு யாரோ அம்மாகிட்ட சொல்லியிருந்தது தான் அதற்கு காரணம்னு நான் நினைத்தேன். அவள் வீடு எங்கிருக்கிறதுன்னு தெரியும், எப்பிடி போறதுன்னும் தெரியும். வருடத்திற்கு இரண்டு நாட்களாவது நான் சொந்த வீட்டுக்குபோறேன் அதனால நேரமும் உண்டு. ஆனால் ஈகோ தடுக்கிறது. இப்போழுது நாங்கள் பணக்காரர்கள் (இரண்டு கவர்மெண்ட் எம்ப்ளாயிஸ், இரண்டு சாப்ட்வேர் ப்ரொப்ஷனல்ன்னு நாங்க பணக்காரங்க), ஆனால்
எங்கம்மாவை கிரகப்பிரவேசத்துல ஒழுங்கா நடத்தாததுதான் இப்போ ஞாபகம் வருது.

இப்போவும் போய்க் கேட்கலாம் அம்மா மீனாவீட்டுல போய் பெண்ணு கேளுங்கன்னு. ஆனா
வேணாம் அதுக்கு சில பர்ஸனல் காரணங்கள் இருந்தாலும் ஈகோத்தான் முதல் காரணம்.

அம்மாவின் பிறந்தநாள்

அம்மாவின் பிறந்தநாள்

ஆயிரந்தான் கவிசொன்னேன்
அழகழகாய் பொய் சொன்னேன்
பெத்தவளே ஒம் பெருமை
ஒத்தவரி சொல்லலையே!

எழுதவோ படிக்கவோ
ஏலாத தாயப்பத்தி
எழுதி என்ன லாபமின்னு
எழுதாமப் போனேனே!

எங்கேயோ, எப்படியோ, யாரா சொல்லக் கேள்விப்பட்ட இந்தவரிகளால் மூச்சடைத்துப் போய்
உட்கார்ந்திருந்தேன். திரும்பவும் வேதாளம் முருங்கை மரம் ஏறியிருந்தது. மனதிற்கு தெரிந்துதான் இருந்தது, இன்றைக்கு வேலை கோவிந்தாவென்று. பக்கத்து கியூபிற்கு வந்து உட்கார்ந்த அந்த காஷ்மீரத்து பெண் என் முகத்தை பார்த்ததுமே புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஒன்றுமே பேசாமலிருந்தாள், முன்பு சிலசமயம் பேசி வதைப்பட்ட காரணமாகயிருக்கலாம். நான் வேலைசெய்யாமல் உட்கார்ந்திருப்பதைப் பார்த்த மேலாளர்,

“என்ன இந்தவாரமும் சனிக்கிழமையா?”

கேட்டுவிட்டு போய்விட்டார், அவருக்கு அதற்குமேல் கேட்க உரிமையளிக்கவில்லை, நான் வேலைசெய்யும் பன்னாட்டு கம்பெனி. ஏதோ ஞாபகமாய் இணைய அஞ்சல் பெட்டியை திறக்க,

தம்பி ஜூலை 22, அம்மாவுக்கு பிறந்தநாள், மறக்காமல் வாழ்த்து சொல்லவும்.

அன்புடன்
அக்கா

இந்த மின்னஞ்சலை படித்ததும் எனக்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை, இருபத்திரண்டு ஆண்டுகள் ஆகிறது, என் குடிகார தகப்பனிடம் வாழ்க்கைப்பட்டும், தன்னை பற்றிய நினைவில்லாமல், எங்களை வளர்த்த அம்மாவிற்கு நான் இதுவரை பிறந்தநாள் வாழ்த்து சொல்லியதில்லை.

நான் நினைத்துப்பார்க்கிறேன், இதற்கு முழுக்காரணமும் நான்தானாவென்று. நிச்சயமாக சொல்லிவிடமுடியாது. எங்கள் வழக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதென்பது இல்லாதவொன்று. அடுத்தநாள் வாழ்க்கையையே யோசிக்கமுடியாத எங்களுக்கு பிறந்தநாள்களை பற்றிய நினைவு மிக அரிது. சிரிப்பாகத்தான் இருக்கிறது, என் தாயின் பிறந்ததினமே எனக்கு பதினாறு பதினேழு வயது வந்தபின்தான் தெரிந்தது என நினைக்கும் போது.

அம்மாகூட சொல்லியிருக்கலாம் இன்று என் பிறந்தநாள், நாளை என் பிறந்தநாள் என்று, ஆனால் சொல்லவில்லை இன்றுவரை. முடிந்த அடுத்தநாளோ இல்லை, அதற்கு அடுத்த நாட்களோ தெரியவந்திருக்கிறது. போட்டோஜெனிக் மெம்மரி இல்லாத காரணத்தாலோ என்னவோ நான் மறந்துவிட்டிருக்கிறேன் அடுத்த வருடமும்.

சிறுவயதில் கேட்கத்தெரிந்திருக்கவில்லை, ஏன் நேற்றே சொல்லவில்லையென்று, வயது வந்தபின்தன்னால் தெரியவந்தது, தெரியவந்ததற்கும் ஒரு பெரிய காரணம் இருந்தது.

அம்மாவை போலவே எங்களுக்கு தெரிந்த இன்னொருவர் வீட்டிலும் இதே போல் கணவனால் பிரச்சனை. கொஞ்சம் பிரச்சனை விவகாரமாக ஆகவிட்ட சூழ்நிலையில், அவருடைய பிள்ளைகள் அப்பாவிற்கு சாதகமாக பேசிவிட பயந்துபோன அம்மா, நாங்களும் அம்மாவிற்கு நடக்கும் கஷ்டங்களும், வேதனைகளும் தெரியாமல் அப்பாவிற்கு சாதகமாக பேசிவிடுவோமோ என நினைத்து, வயது வந்த பின் மிகவும் சாதுர்யமாக, சொற்களின் பின்னல்களால் சொல்லியிருக்கிறாள்.

அம்மாவின் பிறந்தநாட்களைப் போலவே எங்கள் வீட்டு தீபாவளியிலும் ஒரு சோகம் இருக்கும். கஷ்டம் பல இருந்தாலும் மனதிற்கு மகிழ்ச்சி தருவது தீபாவளி. அதுவும் எங்கள் வீட்டில் நாங்கள் கொண்டாடும் ஒரு பண்டிகை. புத்தாடை முதல்நாள் வாங்கி வந்தபோதும், 100 ரூபாய்களுக்கு மேல் பட்டாசே வாங்கியராத போதும். நானும் அக்காவும்(?) சந்தோஷமாகத்தான் இருந்திருக்கிறோம்.

அம்மா சுடும் முருக்கைப்போலவும் அதிரசத்தைப்போலவும், ரவாலாடைப்போலவும் நான் இதுவரை சாப்பிட்டதேயில்லை, இந்த விஷயத்தில் வேண்டுமானால் என்னை பாரதியுடன் ஒப்பிட்டுக்கொள்ளலாம்(?). `உண்மை வெறும் புகழ்ச்சியல்ல’. ஆனாலும் அம்மா சந்தோஷமாக இருந்ததில்லை. அன்றைக்கு காலையில் இருந்தே ஏதோ அணுகுண்டு வெடிக்கப்போவதற்கான அறிகுறிபோல் வீடு அமைதியாக இருக்கும். அம்மா மதியம்போல் நோன்பு எடுக்கபோகவேண்டுமென்று சொன்னவுடன் வெடிக்கும். இத்தனைக்கும் அப்பா கடவுள்மேல் நம்பிக்கை அதிகம் கொண்டவர்.

இதற்கான காரணமும் பிற்பாடு சொல்லப்பட்டிருக்கிறது. நான் எப்பொழுதும் திருவள்ளுவரை
கொண்டாடுபவன். வார்த்தைகளையோ, சொற்றொடர்களையோ ஆராய்ந்து பார்க்கும் ஆர்வம் அதிகமிருந்திருக்கிறது. ஆனால் அம்மா அந்த காரணத்தை ஒரு நாள் சொன்னதும் வருந்தியிருக்கிறேன், இனிமேல் ஆராயக்கூடாதென. அந்தச் சொற்றொடர். `தேவிடியாள் தெவசம் கொண்டினது போல்.’

அம்மா சின்னவயதில் சொல்லநினைத்திருந்தால் இதற்கான அர்த்தத்தையும் கூடவே சொல்லவேண்டியிருக்க வேண்டியிருக்கும். எனக்கென்னவோ தவிர்த்தது நல்லதாகப்பட்டது. நானும் அந்த சொற்றொடரின் விளக்கத்தை அளிக்க முன்வரவில்லை, புரிந்திருக்கும், கேஸ் இல்லாமல் மண் அடுப்பில், விரகுகளை வைத்து அம்மா அவ்வளவு கஷ்டப்பட்டு, சுவையாக எல்லாம் செய்து முடிக்க. அம்மாவின் வேதனை புரியாத மூடனில்லை நான்.

அப்பாவும் அம்மாவும் அவர்களுடைய பிராவிடண்ட் பண்ட்களையெல்லாம் எடுத்து எங்களைப் படிக்கவைக்ககேட்டிருக்கிறார்கள். ‘சார் நீங்க சொத்தே சேர்த்து வைக்காமல் இப்படி செலவளஇக்கிறீர்களே’யென்று, அதற்கு அப்பா சொன்னதாக அம்மா எங்களிடம் சொல்லிய, `எங்கள் புள்ளைங்கள் தான் எங்கள் சொத்தென்பது’ இன்று உண்மையாகி இருக்கிறது.

ஜூலை 22, போன் செய்தேன்,

“ம்ம்ம், நான்தான்.”

“இரு, அம்மாகிட்ட கொடுக்கிறேன்.”

“ம்ம்ம், சொல்லும்மா. என்ன விஷயம்.”

“இல்லை சும்மாத்தான், உனக்கு இன்னிக்கு பிறந்தநாள்தானே? Happy Birthday.”

என்னால் இந்தப் பக்கத்திலிருந்தே அம்மாவின் முகத்தில் இருக்கும் ஆச்சர்யத்தை புரிந்து கொள்ளமுடிந்தது.

கல்லூரி உறவுகளைப் பற்றிய சிறுகுறிப்புகள்

வாழ்க்கையில் ஆட்டோபயோகிராபி எழுதும் ஐடியா சின்னவயதிலிருந்தே உண்டு, யாராவது வாங்கி படிப்பார்களா என்றால், அதற்காகயெல்லாம் வருத்தப்படுவதென்றால் நான் பதிவுகள் கூடத்தான் எழுதமுடியாது. சரி விஷயத்திற்கு வருகிறேன், அப்படி எழுதும் பொழுது உபயோகப்படுத்திக் கொள்வதற்காக குறிப்புக்களை இப்பொழுதே எழுதி வைத்துக் கொள்கிறேன். அப்படி எழுதத்தொடங்கிய ஒரு சிறுகுறிப்பு போட்டிக்காக…,

——————————————————————

அலுவலகத்தில் என்னுடன் வேலை செய்யும் பெண் ஒருத்தி சொல்லப்போகத்தான் எவ்வளவு தவறான அனுமானத்துடன் என்னை மற்றவர்கள் அணுகுகிறார்கள் எனத்தெரிந்தது, அதில் என் பங்கு பெருமளவில் உண்டு. இங்கே ஒரு கம்பெனியில் பல ப்ரொஜக்ட்கள் இருக்கும், பெரும்பாலும் தற்சமயம் கணிணித்துறையில் வேலைவாய்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில் ஒரு நபர் ஒரே அலுவலகத்தில் ஒராண்டிற்கு மேல் வேலை செய்வதென்பதே நடக்கிறக் கதை கிடையாது. அதிலும் குறிப்பாக எங்கள் கம்பெனியில் இரண்டாண்டிற்கு ஒருமுறை தான் ஒரு ப்ரொஜக்ட்டிலிருந்து வேறொரு ப்ரொஜட்டிற்கு மாற்றுவார்கள். நான் இங்கே குறிப்பிடுவது சாதாரண ப்ரொஜக்டை அல்ல ஒரு அக்கவுண்டை என்று வைத்துக் கொள்ளலாம்.

அதாவது இப்பொழுது நான் எச்எஸ்பிசி(HSBC) அக்கவுண்டில் இருக்கிறேன் என்றால் நான் இரண்டாண்டிற்கு மேல் இதே அலுவலகத்தில் வேலை செய்தால் மட்டுமே இன்னொரு அக்கவுண்டிற்கு மாற்றுவார்கள். அதாவது மார்கன் ஸ்டான்லிக்கோ(Morgan Stanley), இல்லை சிட்டி பேங்கிற்கோ(City Bank). எதற்காக இதைச் சொல்ல வருகிறேன் என்றால் அந்த இரண்டு வருடங்களில் நீங்கள் செய்த உழைப்பென்பது உங்கள் பழைய அக்கவுண்ட் சார்ந்தவர்களுக்குத்தான் தெரியும் பெரும்பாலும். இப்படி அக்கவுண்ட் விட்டு அக்கவுண்ட் மாறும் பொழுது நீங்கள் புதிதாய் வேலை செய்யத் தொடங்குவதைப் போன்ற உணர்வும் ஏற்படும், புதிய பங்காளிகள் புதிய இடம் புதிய மேலாளர்கள் என மொத்தமாய்ப் புதிதாய் இருக்கும்.

அப்படி நான் ஒரு அக்கவுண்டிலிருந்து மற்றொரு அக்கவுண்டிற்கு வந்த பொழுதுதான் அந்தப் பெண்ணைச் சந்தித்தேன், இதற்கு முன்னர் இரண்டு மூன்று சமயங்களில் சந்தித்திருக்கிறேன், தென்னிந்தியா என்று தெரியும் ஆனால் தமிழ்நாடென்று தெரியாது. எங்கள் அலுவலகத்தில் ஒரு பழக்கம் உண்டு, வாலிபால் போட்டி நடக்கும் பொழுது பெண்களுக்கும் இடமளிக்கும் வகையில், ஆறுபேரில் ஒரு நபர் பெண்ணாக இருக்கும் படியாக எங்கள் அலுவலகம் ஒரு சட்டத்தை வைத்திருந்தது. அப்படி நான் வேறொரு அக்கவுண்டிற்காக விளையாடிய காலத்தில் இந்தப் பெண்ணை எச்எஸ்பிசி அக்கவுண்டிற்காக விளையாடும் சமயத்தில் பார்த்திருக்கிறேன். ஆனால் பேசியதில்லை.

சாதாரணமாக என்னைப் பார்க்க கரடுமுரடானவனாகத் தெரியும் அதற்கு நான் எதுவும் செய்ய முடியாது, அந்த மனநிலையை நானும் இன்னும் அதிகம் தான் படுத்துவேன். இப்படித்தான் அந்தப் பெண் நான் சேர்ந்திருந்த புது அக்கவுண்ட் உபயோகப்படுத்தும் விஷயம் சம்மந்தமாக ஒரு செஷன் எடுத்துக்கொண்டிருந்தாள். பெரும்பாலும் நான் சொந்தமாகப் படித்துதான் தெரிந்து கொள்வேன் என்பதாலும், செஷனில் சொக்கிச் சொக்கி விழும் என் தூக்கத்தைப் போக்க எடக்கு மடக்கானக் கேள்விகளை அடுக்கிக் கொண்டேயிருப்பேன். அப்படி நான் தூங்கிவிழுவதையும், கேள்வி கேட்பதையும் வைத்துக்கூட அந்தப் பெண் என்னைப் பற்றிய தவறான எண்ணத்திற்கு வந்திருக்க வாய்ப்புண்டுதான். ஆனால் அது அப்படியில்லை என்று இன்றுவரை நம்புகிறேன் அதற்கு முழுப்பொறுப்பு என் உருவத்தோற்றமாகக்கூட இருக்கலாம்.

பெரும்பாலும் முசுடாக யாரிடமும் பேச்சுக் கொடுக்காமல் நான் என் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு நாள் அவள் பின்னாலிருந்து நான் தமிழில் டைப்புவதைப் பார்த்து நீங்க ப்ளாக் எல்லாம் எழுதுவீர்களா என்று கேட்டது நினைவில் உள்ளது, நான் பெரும்பாலும் விளம்பரம் செய்வதில்லை ப்ளாக் எழுதுவதாக அவள் கேட்டுக்கொண்டதற்காக லிங்க் கொடுக்க பார்த்தவள் கூகுள் ‘ஆட்’கள் என் பக்கத்தில் இருப்பததைப் பார்த்தே தெரிந்து கொண்டவளாய், ரொம்ப நாளாய் எழுதுவீங்களோ என்று கேட்டாள் என்றாள் பார்த்துக் கொள்ளுங்களேன்.

அன்றைக்கு இரண்டு நல்ல நகைச்சுவை சம்பவம் நடந்தது, அதன்பிறகு என்னைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தவள், சாதாரணமாக இந்த கல்கியின் கடல்புறா புத்தகம் உங்களிடம் இருக்கிறதா என்று கேட்க, நான் அவளுடைய தமிழறிவை மொத்தமாகப் புரிந்து கொண்டேன் கொஞ்சம் தவறாக என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். இப்படியாக நாங்கள் பேசத் தொடங்கிய ஒரு நாளில் தான் அவள் சொன்னாள், உங்களைப் பார்த்தால் இவ்வளவு நல்லபடியாக பேசுபவராகத் தெரியவில்லையென்று. உருவத்தைப் பார்த்து எடைபோடுவதில் உள்ள தவறு பெரும்பாலும் பலருக்குத் தெரியவில்லை.

அதே நாளில் என் ப்ளாக்கில் இருந்து ஒரு கதையை பிரிண்ட் அவுட் எடுத்துப் படிக்கப்போவதாகவும் ஒரு நல்ல கதை சொல்லுங்களேன் என்று கேட்டதற்கு கூச்ச சுபாவத்தில் நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டேன், அதன் பயனை பிற்பாடு அனுபவித்தேன். நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், அன்றுதான் முதன் முறையாக தமிழில் பேச ஆரம்பித்திருந்தோம். அந்தப் பெண் தேர்ந்தெடுத்த கதை ‘மக்குக் குடும்பம்’, குளிர்கால டிசம்பர் மாதத்தின் தாக்கத்தில் எழுதப்பட்ட ஒரு ‘ஏ’த்தனமான கதையது. அன்றிரவு போகிற போக்கில் விண்டோ மெஸஞ்சரில் அவள் இந்த விஷயத்தை தட்டிவிட்டுச் சென்றாள்.

அதற்கு முன் அந்த மாதிரி கதை எழுதுவதைப் பற்றி எந்த முன்முடிவும் இருந்ததில்லை, சாண்டில்யன், பாலகுமாரன், சுஜாதா படித்து கொஞ்சம் செக்ஸியாக எழுத வேண்டுமென்று பெரும்பான்மையான என்னுடைய எல்லாக் கதையிலுமே பார்க்கக்கூடிய ஒரு விஷயமாக இருக்கும் ‘அது’. அன்று இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை, அந்தப் பெண் கதையைப் படித்து என்ன நிலையில் நாளை வருவாள் என்று. ஆனால் பெரிய வித்தியாசம் அடுத்த நாள் எனக்காக காத்திருக்கவில்லை, மிகவும் சாதாரணமாக அந்தக் கதை அப்படிப்பட்டதென்று சொல்லியிருக்கலாமே என்று சொன்னாள் என்று நினைக்கிறேன். ஆனால் அவள் மனதில் அந்தக் கதை படிந்திருந்ததை நான் இன்னொரு சமயத்தில் பார்த்திருக்கிறேன், நாங்கள் நல்ல நண்பர்களாக ஆன ஒருநாள் விளையாட்டிற்காக கப்டேரியாவில் சென்று கொண்டிருந்த பெண்ணை சைட் அடிப்பதாகச் சொல்லப்போக அந்தப் பெண் அவகிட்ட என்ன இருக்கு அயர்ன் பாக்ஸ் என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்தாள் நான் பதிலெதுவும் சொல்லவில்லை.

சொல்லப்போனால் எங்களிருவரிடமும் ஈகோ உண்டு, அதிலும் நான் எப்பொழுதுமே உள்ளர்த்தம் வைத்து மட்டுமே பேசுவதை வாடிக்கையாக வைத்திருந்தேன். இப்படி இருவருமே உள்ளர்த்தம் வைத்தும் ‘ஈயம்’ ‘ஈயம்'(பெண்ணீயம், ஆணீயம்) என்றும் பேசிவந்ததால் உள்ளர்த்தத்தை உணர்ந்து கொண்டாமோ என்று இருவருமே மற்றவரைப் பற்றி ஆராய்வதுண்டு அப்படிப்பட்ட ஒரு ஆராய்தல் தான் அன்று நடந்தது.

இப்படியாக அவள் என் கதைகளைப் படித்து ஒரு முன்முடிவிற்கு வந்திருக்க வேண்டும் என்னைய்ப்பற்றி, நாங்கள் நல்ல நண்பர்களாக ஆகிவிட்டிருந்த இன்னொரு நாளில் நீங்க காதலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற எடக்குமடக்கான கேள்வியைக் கேட்டாள், நான் ஒரே வார்த்தையாக முட்டாள்தனம் என்று பதிலளித்தேன். அவளுக்கு அது ஆச்சர்யமாகக் கூட இருந்திருக்கும், அவள் ஈகோவை விடுத்து, என்னால் இதை நம்பவேமுடியவில்லை, நீங்கள் இப்படி சொல்வீர்கள் என்று காதல் பற்றி கதைகதையாய் எழுதிக்கொண்டு காதலை முட்டாள்தனம் என்று சொல்வீர்கள் என்று. நான் காதலைப்பற்றிய என்னுடைய எண்ணங்களைத் தெளிவாக மிகத்தெளிவாகச் சொன்னேன், இன்னும் சொல்லப்போனால் அவளை நன்றாகக் குழப்பினேன்.

அன்று அவளிடம் நான் கல்லூரிக் காலங்களில் நம்மிடம் ஏற்படுவது காதலே கிடையாதென்றும் அது வெறும் இனக்கவர்ச்சி மட்டும் தான் என்றும் வாதாடினேன், இரண்டு மணிநேரம். என் பட்டிமன்ற நடுவர்களை பத்து நிமிடப்பேச்சால் என்னால் மாற்ற முடிந்திருக்கிறது. ஆனால் இது ரியல் டைம் கேள்விகள் நேருக்கு நேராய் கேட்கப்படும், கான்சப்டில் குழப்பமிருந்தால் பிரச்சனையாகிவிடும். அவள் யாரோ ஒரு பையன் யாரோ ஒரு பெண்ணை கல்லூரி இறுதி ஆண்டிலிருந்து காதலிப்பதாகவும் முதலில் அந்தப் பெண் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், கல்லூரி முடிந்த இரண்டாண்டுகளில் அதற்குப் பிறகு ஒருமுறை கூட நேரில் பார்த்திராத சமயத்திலும் அவன் அந்தப் பெண்ணையே நினைத்து கொண்டிருந்ததால் அதன் பின்னர் ஒப்புக்கொண்டதாயுமான அவளின் கல்லூரி நண்பர்கள் பற்றீய கதையைச் சொன்னாள். நான் அதைப்பற்றிய என் புரிதல்களையும் விளக்கத்தையும் அளித்தேன். அது இங்கே தேவையில்லாதது, அந்தக் காதலைப் பற்றியும் அந்தப் பெண்ணைப் பற்றியும் நான் முற்றிலுமாக மறந்து போய்விட்டேன் அந்தப் பொழுதில், முற்றிலுமாக. என் மனம் முழுவதும் இப்பொழுது சார்லஸூம் கனிமொழியும் தான் இருந்தார்கள்.

நான் படித்தது ஒரு அறிவியல் மற்றும் கலைக்கல்லூரி அதாவது பன்னிரெண்டாவது படித்து முடித்தவர்களுக்கு இரண்டவாது ஆப்ஷனாக வைத்திருப்பார்களே அது, அதுதான் எனக்கு முதல் ஆப்ஷனாகக் கிடைத்தது அதைப்பற்றி முன்பே எழுதிவிட்டதால் இப்பொழுது மற்றது. ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு டிரீம் கப்புள் இருப்பாங்க என்பது என் விஷயத்தில் உண்மை. அந்த டிரீம் கப்புள் தான் சார்லஸூம் கனிமொழியும், சொல்லப்போனால் கொஞ்சம் கூட ஒத்துவராக ஒரு ஜோடி, கனிமொழி ஆயிரத்திற்கு மேல் மதிப்பெண் எடுத்து குடுப்பப் பிரச்சனைகள் காரணமாக எங்கள் காலேஜில் படித்துவந்தால், சார்லஸிற்கோ அந்தக் கல்லூரியை விட்டால் வேறு காலேஜ் இல்லையென்ற நிலை. பேரிலேயே தெரிந்திருக்கும் முக்கியமான வித்தியாசம்.

முதல் வருடம் நான் ஹாஸ்டலில் தங்கியிருந்தேன், சார்லஸ் தான் ஏழு பேர் கொண்ட எங்கள் ரௌடி குரூபின் தலைவன் போன்றவன். அதற்கு முக்கியக் காரணம் கனிமொழியை அவன் காதலித்தது கிடையாது. அவன் உண்மையிலேயே ரௌடி, சிகரெட் பிடிப்பது, தண்ணி அடிப்பது பெண்களுடன் பயமில்லாமல் பேசுவது இதுதான் அந்தக் காலத்தில் தலைவனுக்கு உண்டான அடையாளம், இதில் எதிலும் சார்லஸ் குறைவைக்கவில்லை. இதற்கெல்லாம் மகுடமாக தன்னிடம் சண்டித்தனம் செய்த ஒரு சீனியரை பாத்ரூமில் வைத்து கன்னம் கன்னமாக இழுக்க ஹீரோ ஆனான். மொத்தம் எட்டு பேர், சார்லஸ், பெஞ்சமின், விமல்ராஜ், சரவணலால் ஜெயன், கலைராஜா, இளையராஜா, மோகன்தாஸ் அப்புறம் கடேசியாய் அன்சர்.

ஒவ்வொருவரைப் பற்றியும் சொல்வதற்கு நிச்சயமாய் ஒரு கதை உண்டு, இதில் விமல் கொஞ்சம் தலைமைப் பண்புகள் உள்ளவன் நான் சொல்ல வந்தது மேலே உள்ள தலைமைப் பண்புகளை முன்வைத்து. இந்த குரூப்பில் நானும் அன்சரும் இருந்தது தான் ஆச்சர்யமே பலருக்கும். ஏனென்றால் எங்களிருவருக்கு மட்டும் தான் அரியர் கிடையாது. அதுமட்டுமில்லாமல் நானும் அவனும் கொஞ்சம் நன்றாய்ப் படிக்கக்கூடியவர்கள், இந்தக் கொஞ்சமும் மற்ற அறுவர்களுடனான ஒப்பீட்டு மதிப்புதான். ஏன் விமலைப் பற்றி மட்டும் இழுக்கிறேனென்றால் அவனுக்கு இந்த மாதிரியான தலைமைப் பண்புகள் இருந்ததென்றாலும் கொஞ்சம் ப்ராக்டிகலானவன், சொல்லப்போனால்.

இதற்கு ஒரே காரணம் சார்லஸ் கனிமொழியைக் காதலிப்பதாகவும் அந்தப் பெண்ணும் அவனைக் காதலிப்பதாகவும் ஒரு கீழ்த்தர பாரில் பார்ட்டி கொடுத்தபடி சொல்ல முதலில் கண்டித்தவன் அவன்தான். சார்லஸின் முகத்திற்கு எதிராக ‘வேண்டாண்டா பங்காளி அவளை விட்டுடு’ என்றான். சார்லஸிற்கு கொஞ்சம் கோபமுண்டு இதனால். நானெல்லாம் முதலில் இந்த விஷயத்தை நம்பவேயில்லை, முதலில் ஒரு விஷயத்தை உறுதிசெய்துவிடுகிறேன். என் வயதின் படி, நான் ஒரு வருடம் முன்பே பள்ளியில் சேர்க்கப்பட்டவன், ஆசிரியரான அப்பாவின் கைங்கர்யம். அதனால் பெரும்பாலும் கல்லூரியில் என்னுடன் படித்தவர்கள் என்னை விட குறைந்த பட்சம் ஒருவயது அதிகமானவர்கள். கனிமொழியும் சரி கூடப்படித்த மற்ற ஆறு பெண்களும் சரி என்னைவிட வயதில் மூத்தவர்கள் தான் பெரும்பாலும் அக்கா என்றுதான் எல்லோரையும் அழைப்பேன். சரி விஷயத்திற்கு,

இந்தக் காதல் பெரும் படமெடுக்கும் அளவிற்கு கல்லூரியில் நடந்தது, காதலென்றால் ஒன்றிரண்டு உதாரணங்களைச் சொல்லி அவர்களை அமரக் காதலர்களாக்க வேண்டுமென்ற அவசியம் எனக்குக் கிடையாது. அவர்கள் மற்ற எல்லா கல்லூரிக் காதலர்களைப் போலவும் காதலித்தார்கள். என்ன கொஞ்சம் தீவிரமாய், இடையிடைய எங்கள் ஜிங்கிச்சாவையும் மீறி விமல் மட்டும் இதை எதிர்த்துக்கொண்டேயிருந்தான், மூன்றாவதாண்டில் அவனும் ஒரு முதலாமாண்டு பெண்ணைக் காதலிக்க எதிர்ப்பேயில்லாமல் கனிமொழி எங்கள் எல்லோருக்கும் அண்ணியானாள். நான் நிகழ்வுகளை வர்ணிக்க இங்கே எத்தனிக்கவில்லை. இப்படியாக அவர்கள் காதல் எங்கள் கல்லூரியின், வரலாற்றுப் புகழ்பெற்ற காதலானது, கடைசியாக கல்லூரிக்கும், தமிழ்நாட்டிற்கும் டாட்டா காண்பித்து நான் டெல்லி புறப்படும் வரை. எனக்கு சந்தேகமேக்கிடையாது, சார்லஸ் தண்ணியடித்துவிட்டு உளறிய உளறலிலிருந்தும் கனிமொழியுடனான அவனுடைய நேருக்கத்திலிருந்தும், எதிர்ப்புக்கள் அனைத்தையும் பொய்யாக்கிவிட்டு அவர்கள் காதல் சக்ஸஸ் ஆகிவிடுமென்பதில்.

பின்னர் கல்லூரியைப்பற்றியோ, சார்லஸ் கனிமொழியைப் பற்றியோ நினைக்க மட்டுமல்ல என்னைப் பற்றியேக் கூட நினைக்க முடியாத நாட்கள் அவை, டெல்லி, பேங்களூர், புனே என மூன்றாண்டுகள் அப்படியென்பதற்குள் ஓடிவிட்டன. கடைசியாண்டு ப்ரொஜக்ட் செய்வதற்காக என் நண்பர்கள், இவற்கள் வேறு படிக்கிற செட், வந்து புனேவில் தங்கி ப்ரொஜக்ட் செய்துவிட்டு போன பொழுது கூட நான் கேட்கவில்லை சார்லஸ் கனிமொழியைப் பற்றி. ஆனால் என் அலுவலகத் தோழி கேட்ட அன்று எங்கிருந்தோ நினைவில் வந்ததைப் போல சார்லஸ் கனிமொழியைப் பற்றிய விஷயத்தை நினைத்தவனாய். என் அத்துனை தொடர்புகளையும் பயன்படுத்தி அன்றிரவே என்னானார்கள் அவர்கள் என்று கேட்கும் ஆவல் முற்றியது.

முயன்றேன், சார்லஸின் எண் கிடைத்தும் பேச முடியாத சிக்கல், இந்தச் சமயத்திலேயே ஒருவாறாக நண்பர்களின் மூலம் அவர்களைப் பற்றிய செய்தி கிடைத்திருந்தது, ஏனென்றால் முன்பே சொன்னேனே காவியக் காதலர்கள் என்று அவர்கள் தொலைபேசி எண்ணைக் கேட்டால், முழு வரலாற்றையே சொல்லிப் புலம்பாத நண்பர்களே இல்லை, அப்படியிப்படி என்று ராத்திரி பதினொன்று மணிக்கு கனிமொழியின் செல் நம்பர் கிடைத்தது, சாப்ட்வேர் உலகத்தின் மகிமையால் அந்த நேரத்திலும் கால் செய்ய நான் தயங்கவில்லை.

“ஹலோ கனிமொழிங்களா, நான் மோகன் பேசுறேன்.

“ஹலோ எந்த மோகன் தெரியலையே,”

“… காலேஜ், கம்ப்யூட்டர் சைன்ஸ், முத பெஞ்சில் உட்கார்ந்திருப்பேனே மோகன்.”

“இல்லங்க தெரியலை.”

“கனிமொழி, என் நம்பர் கூட 018, கனிமொழி, லிஜோ பாபு, மலர்விழி, நரேந்திரன் அப்புறம் நான் மோகன் தெரியலையா.”

“ம்ஹும் தெரியலை.”

“என்னங்க வேறென்னத்தை சொல்ல, சரி நீங்க நல்லாயிருக்கீங்களான்னு கேட்கத்தான் போன் செய்தேன், நல்லாயிருக்கீங்கல்ல சரி வைக்கிறேன்.”

“சரி சொல்லுங்க.”

“யாருன்னு தெரிஞ்சுதா?”

“இல்லங்க தெரியலை, பரவாயில்லை சொல்லுங்க.” என்றவள் ஏதோ ஞாபகம் வந்தவளாக, “ம்ம்ம் நீங்களா சொல்லுங்க, ராத்திரி இல்லையா தூங்கிக்கிட்டிருந்தேன் ஞாபகத்தில் வரலை.”

“சரிங்க கனிமொழி நீங்க தூங்குங்க நான் காலையில் போன் பண்றேன்.”

வைத்துவிட்டேன், உண்மையில் அதை நான் எதிர்பார்க்கவில்லைதான், ஏனென்றால் நான் படித்த ஒரே ஒரு கல்லூரி அதுதான், அதனால் அந்த நினைவுகள் என்னிடம் எப்பொழுதும் உண்டு, சொல்லப்போனால் என் கதைகளில் கூட அவர்களை வேறு கதாப்பாத்திரப் பெயர்களால் குறித்திருப்பேன். நம்பர், உட்கார்ந்திருந்த இடம் எல்லாமே இன்னும் நன்றாய் ஞாபகத்திலிருக்கிறது. ம்ஹும் கதையெழுதுகிறேன் இல்லையா நினைவில் கொண்டு வந்திருப்பேனாயிருக்கும்.

அடுத்த நாள் காலையில் மீண்டும் போன் செய்தேன், போனை எடுத்தவள் கண்டுபிடித்துவிட்டாள், சொல்லப்போனால் என்னை அவளுக்கு நன்றாய்த் தெரியும் சில நாட்கள் சார்லஸ் சொல்லப்போய் லெட்டர் எல்லாம் கொடுத்திருக்கிறேன் மிகவும் பர்ஸனலான விஷயங்களாகக் கூட இருக்கும் அந்தக் காகிதங்கள். சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தவள் என்னைப் என் பெயரால் அவள் அறிந்திராததையும் கல்லூரி நினைவுகள் அவ்வளவாக இல்லாததையும் சொன்னாள், என்னைப் பற்றிக் கேட்ட அவளுக்கு விவரங்களைச் சொன்னேன், மறுபக்கத்தில் வரப்போகும் ஆச்சர்யத்தையும் கணக்கிட்டுத்தான்,

‘அப்ப செட்டிலாயிட்டேன்னு சொல்லுங்க, சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கங்க’, நான் வாங்கும் சம்பளத்தில் ஒரு சைபர் இல்லாத சம்பளம் கூட தங்களுக்கு கிடைப்பது அரிதாக இருப்பதான புலம்பல்கள் ஆரம்பித்ததும் நான் ஆரம்பித்தேன் சார்லஸ் பற்றி, அவள் ஒரேயொரு வார்த்தை தான் சொன்னாள்.

“உங்கக்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்…”

“கேளுங்க…”

“இல்லை நீங்கதான் எங்க காலேஜோட டிரீம் கப்புள்…”

“புரியலை என்ன சொல்றீங்க…”

“இல்லை நீங்களும் சார்லஸூம் தான் அந்தக் காலேஜின் டிரீம் கப்புள்ஸ், என்னாச்சுன்னு கேட்கிறேன்.”

“இந்த ஆம்பளைங்க எல்லாமே ஏமாத்துறவங்க தானே, அதை விடுங்க. எல்லாம் அத்துப்போச்சு.”

இப்படி நான் கனிமொழி, சார்லஸ் நம்பர்களைத் தேடிய பொழுது கிடைத்த விமல் நம்பருக்கும் போன் செய்தேன்,

“மாப்ள, இது உனக்குத் தெரியாதா இல்லை எனக்கு தெரியாதா, ஆனாலும் நான் அப்பவே சொன்னேன் அந்தப் பொண்ணு பாவம் விட்டுறுன்னு. உனக்குத் தெரியாது ரொம்பக் கஷ்டமாயிருச்சு…”

அதற்கு மேற்பட்ட விஷயங்கள் பர்ஸனலானவை உண்மை பெயர்களை உபயோகிப்பதால் வேண்டாம், என் அலுவலகத் தோழியின் கல்லூரியில் நடந்த காதல் என்ன முடிவிற்கு வந்திருக்கும் என்று கேட்கும் ஆசை சுத்தமாக இல்லை. நான் அவளிடம் பிரயோகித்த என் தர்க்கங்ளை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்தி அது எத்தனை தூரம் உண்மையென யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

ஒரு சிறு அறிமுகம்

நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் திருச்சியில் தான். அப்பாவும் அம்மாவும் ஆசிரியர்கள். என்னைப்பற்றிய அறிமுகம் என் கதைகளின் மூலமாக ஏற்கனவே நிறைய எழுதிவிட்டதால் கொஞ்சம் வித்தியாசமாய், என் பதிவுலக ஆரம்பம் வளர்ச்சி என சில வரிகள்.

நான் முதன்முதலில் இணையத்தளத்தை வலம் வர தொடங்கிய பொழுது என் மாமாவெல்லாம் தமிழில் கவிதை எழுதிக் கொண்டிருந்தனர் (அதேதான் நிலா, காதல், மற்றும் இன்னபிற – அவர்களை எல்லாம் பார்த்தால் ஆச்சர்யமாய் இருக்கும் இதையெல்லாம் கூட கவிதையாய் இப்படியெல்லாம் எழுதலாமா என்று :-)). அதனால் ஏஞ்சல் பயர் அறிமுகமாகி, அப்புறம் காப்பி பேஸ்ட் டெக்னாலஜிக்களை வைத்து முதன்முதலில் ஒரு இணையத்தளத்தை ஏஞ்சல் பயரில் தொடங்கினேன். பின்னர் ஜியோசிட்டியில் ஒன்று. பிறகுதான் கொஞ்சம் அளவாய் கதை எழுதுகிறேன் பேர்வழியென்று. கீதம்.நெட்டை கொஞ்ச காலம் வாட்டி வதைத்தேன்.

பின்னர் போதும் நீ கீதத்தில் கிழித்தது என்று நானே நினைத்துக் கொண்டிருந்த சூழ்நிலையில், தான் காலச்சுவட்டில் ஜேபி சாணக்யாவின், ஆண்களின் படித்துறையை படித்து விட்டு, ஜேபி யை கூகுளில் தேட அது பிகேசிவக்குமாரின் வலைபதிவிற்கு சென்றது. இலக்கியத்தேடல் எனக்கு இருந்ததுன்னு இப்பவாவது ஒத்துக்கோங்க மக்களே, வேற வழியேயில்லை. அங்கே போட்டேன் முதல் பின்னூட்டத்தை. ஆனால் அவர் அதை கண்டுக்கிட்ட மாதிரி தெரியலை. அதனால அப்படியே விட்டுற்றதா, நான் யாருன்னு காண்பிக்காம விடறதில்லைன்னு மரத்தடிக்கு போனேன்.

பின்னர் அப்படியே கொஞ்ச நாள் மரத்தடியில் ஓசி காஜி அடித்துவிட்டு, தொடங்கியது தான் என்னுடைய வலைத்தளம். (கேவிஆர், நடராசன், ஆசாத் பாய், மீரான் அண்ணாச்சி போன்றோர் இனிமேல் கதையெல்லாம் எழுதினே கையக்காலை உடைச்சிறுவேன் பயமுறுத்தியதால் தான் நான் மரத்தடியை விட்டு(அந்தப் பழம் புளிக்கும்) வலைத்தளம் தொடங்கினேன் என்பதெல்லாம் வதந்தி என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.)

அப்படியே தமிழ்மணத்திற்கு தொடுப்பு கொடுத்துவிட்டு பார்த்தால், பெரிய பெரிய விஷயமெல்லாம் நடத்துக்கிட்டு இருந்தது தமிழ்மணத்தில். சரி இதையும் ஒரு கை பார்ப்போமுன்னு களத்தில் குதித்தேன். இருக்கவே இருந்தது விகடன்.கொம். வெள்ளிக்கிழமை சுடச்சுட விகடனிலிருந்து மாவெடுத்து தோசையை நான் என் வலைபதிவில் சுட, பின்னூட்டம் வந்துச்சோ இல்லையோ கவுண்டரு எப்பப்பாரு ஆயிரம் பேரு வந்தாங்க வெள்ளிக்கிழமைன்னு சொல்லிக்கிட்டேயிருந்துச்சு.

சரி இப்படியே உட்டால் அப்புறம் சரி வராதுன்னு, நம்ம பழைய கதையை எல்லாம் விட்டேன் இதையும் யாரும் கண்டுக்கிட்ட மாதிரி தெரியலை. அப்ப முடிவெடுத்தது வாத்தியாரோட பிரம்மாஸ்திரம், ஜல்லியடிக்கிறதுங்கிறதை. கொஞ்ச நாள் நானும் நல்லாத்தான் ஜல்லியடித்துக் கொண்டிருந்தேன். ஒரு வழியா இவ்வளவு நாளா நான் புரொஜெக்டில் என்னத்த கிழிக்கிறேன்னு தெரிஞ்சிக்கிட்ட கம்பெனி, ஒட்டுமொத்தமா ப்ளாக்கரையே பேண்ட் பண்ணிட்டாங்க. அப்புறம் கொஞ்ச நாள் மூடிக்கிட்டிருந்த நான் இப்பல்லாம் அதிகமா பொலம்பாம அப்பப்ப புலம்பிக்கிட்டிருக்கேன்.

நானும் கதையெழுதுகிறேன் பேர்வழியென்று எழுதிக் கிழித்துக் கொண்டிருக்கிறேன். இன்றும் கூட என் கல்லூரியை மையமாக வைத்து ஒரு நாவல் மாதிரி எழுதுகிற ஐடியாவெல்லாம் உண்டு. (பைவ் பாய்ண்ட் சம்திங்கின் தாக்கம்) ஆரம்பத்தில் இருந்தே சொல்லிவந்தது போல் கிடைக்கும் நேரம் குறைவாக இருப்பதால் அதை மறந்து விட்டேன். (எழுதினாலும் அச்சில் எல்லாம் இப்போதைக்கு கொண்டுவரமாட்டேன் பயப்படாதீர்கள். கல்யாணத்திற்கு வாங்கும் வரதட்சணையை வைத்து தமிழுக்கு என்னாலான உதவியை(அச்சில் கொண்டுவருவது) செய்யலாம் என்று நினைத்திருக்கிறேன். எல்லாம் வல்ல எங்கம்மாவும் அக்காவும் இதற்கு உடன்பட வேண்டும் (கேவிஆர் – இங்கேயும் இழுத்துட்டேன்)) மற்றபடிக்கு தற்சமயம் நிறைய விஷயங்களை படித்துக்கொண்டும், சில விஷயங்களை எழுதிக்கொண்டும் இருக்கிறேன்.

நான் எழுதியவைகளில் தேவதையின் காதலன் என்ற சிறிய தொடர்கதை எனக்கு பிடித்தமானது. நான் பைவ் பாய்ண்ட் சம்திங் போல் ஒன்று எழுதினால் அது இந்தக் கதையின் விரிவாகத்தான் இருக்கும்.

Thanks: Tamiloviam.com

PS: நான் பிகேஎஸ் பதிவைப்பற்றி எழுதியிருந்ததற்கு பிகேஎஸ் தமிழோவியத்தில் பதிலளித்திருந்தார். பார்க்கவேண்டுமானால் மேலேயுள்ள லிங்கை கிளிக்கவும்.