என்ன தவம் செய்தனை மோகனா?

ஆச்சர்யமாகவே இருக்கிறது வாழ்க்கை எனக்கு பெரும்பான்மையான சமயங்களில். சொல்லப்போனால் அந்த ஆச்சர்யம் இல்லாமல் போகும் நாளில் வாழ்க்கை போரடித்துவிடும் என்பது மட்டும் இன்று பிரகாசமாகத் தெரிகிறது.

“நாடுங்கால் ஒரு மனமற்ற செய்கையை
நல்லதோர் மணமாம் என் நாட்டுவார்
கூடுமாயில் பிரமசரியம் கொள்
கூடுகின்றிலதெனில் பிழைகள் செய்து

ஈடழிந்து நரக வழிச்செல்வாய்
யாது செய்யினும் இம்மணம் செய்யல்காண் – பாரதி”

“கெட்டு சீரழிந்து போனாலும் போ, கல்யாணம் மட்டும் செஞ்சிக்காத”(ஒரு மாதிரி என்னுடைய டிரான்ஸ்லேஷனில் – பாரதியின் கவிதைவரிகள் எக்குத்தப்பாக இதைத்தான் சொல்லும்) பாரதியின் கவிதைகளுக்கு இடையில் வரும் இரண்டெழுத்து வரிகள் பெரும்பாலும் என்னைப் புரட்டிப்போட்டுவிடும் திறமை வாய்ந்தவையாகவேயிருந்திருக்கின்றன.

“பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும் அச்சமில்லை…” என்று எழுதிய வரிகளுக்குப் பின் என்ன இருந்திருக்கலாம் என்று ப்ராக்டிகலாக நான் அதே போன்றதொறு சூழ்நிலையில் இருந்த பொழுது உணரத் தழைப்பட்டிருக்கிறேன்.

அதைப் போலவே, “வேடிக்கை மனிதரைப் போல் நான் வீழ்வேனென்று நினைத்தனையோ…” இந்த வரிகளும். பாரதியுடன் ஒப்பீட்டளவில் பேசவில்லையென்றாலும் என் அளவில் இப்படிப்பட்ட சூழ்நிலைகளைச் சந்தித்தது குறைவான சமயங்களில் அல்ல. வேண்டுமானால் இப்படி வைத்துக்கொள்ளலாம் அந்த வரிகள் பாடமான பிறகு வந்த சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட நான் இந்த வரிகளைக் கூறி என்னைச் சமாதானம் செய்து கொண்டதாக.

ஆனால் இதைப் போலவெல்லாம் இல்லை, கல்யாணம் செய்து கொள்வதைப் பற்றிய பாரதியின் வரிகள். (இலக்கிய)தமிழுடன் அவ்வளவாக பரிட்சையம் இல்லாமல் போனதால் கொஞ்ச காலத்திலேயே பாரதியை விட அவருடைய தாசனின் வரிகளில் பித்து தலைக்கேறியது; அவருடைய இயல்பான தமிழ் வரிகளால்.

“கல்யாணம் செய்து கொள்ளாதே!” என கல்யாணம் செய்த மற்ற ஆண்கள் சொல்வதைப் போல பாரதி சொன்னதை ஒப்பிடலாமா? இல்லை மற்ற கவிதைகளைப் போல மெஸேஜ் சொல்ல பாரதி இந்தக் கவிதையைச் எழுதவில்லை என்று ஓரம் கட்டிவிடலாமா? குடும்பம் பிள்ளைகள், என சாதாரண மனித சிக்கல்களில் விழுந்து புரளும் அளவிற்கு பாரதி மனதளவில் இல்லையென்றாலும்; தான் கவிதைகளில் எழுதிய விஷயங்களுக்கு எதிராகவே(சில சமயங்களில்) வாழமுடிந்ததையும் பற்றி வருத்தப்படும், அதை செய்யாதே என்று சொல்லும் ஒரு சாதாரண மனிதனாக பாரதியை ஒப்பிட முடியுமா? தெரியவில்லை.

வைப்பாட்டி வைத்துக் கொண்டு(அல்லது விபச்சாரம் செய்து) நரகத்திற்கு போனாலும் போ, கல்யாணம் செய்து கொள்ளாதே என்று சொன்னதை எப்படிப் பார்ப்பது கல்யாணம் ஆகாத நான் தீவிரமா யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

“கஞ்சா” அடிச்சா மட்டும் தான் தலைவர் பிரகாசமா எழுதுவார்; அப்படி அடிக்காமல் போய் எழுதியதில் உண்மையைச் சொல்லிட்டாரோ என்னவோ என்று நண்பரொருவர் நாங்கள் பேசிக்கொண்டிருந்த பொழுது சொல்லிய நினைவு. அந்தாளைத் தூக்கி குப்பையில் போடுவோம், அதை விடுங்க.

“உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்”, “நஞ்சை வாயிலே வந்து நண்பரூட்டும் போதிலும்”, “இச்சை கொண்ட பொருளெல்லாம் இழந்துவிட்ட போதிலும்” எழுதியவருக்கு “கச்சையணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசும் போதிலும்” பற்றி எழுத நேர்ந்தது ஏதோ வேறுவழியில்லாமல், மெட்டுப்போட்டாச்சு வார்த்தை இதுக்கு மேல உக்காரலை என்று ஹீராதி ஹீரோ என்று எழுதும் சுயநலக்கவிஞனாக என்னை பாரதியைப் பார்க்கமுடியவில்லை. இதில் என்னமோ விஷயம் இருக்கின்றது; பாரதியின் சுயவரலாறு போல் வரும் கவிதையொன்றில் வருவதைப் போல,

தான் காதலித்த பெண்ணை(???) திருமணம் செய்துகொள்ள முடியாமல் தந்தையின் சொல்லைக் கேட்டு சிறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள நேர்ந்ததையும் பின்னர் தன் மகளுக்கும் சிறுவயதில் திருமணம் செய்துவைத்ததையும் வைத்து, அட்வைஸ் சொல்றவங்க அந்த அட்வைஸ் படி நடந்தார்களா இல்லையா என்ற கேள்வி தேவையில்லை என்று வைத்துக்கொள்ளலாமா? “நல்ல விலை கொண்டு நாயை விற்பார் அந்த நாயிடம் யோசனைக் கேட்பதுண்டோ…” எழுதிய பாரதி; தன் பெண்ணிடம் கேட்டிருப்பாரா? அவருக்கு தன் பெண்ணிடம் அந்த அளவிற்கு உரிமையிருந்திருக்குமா? பதின்மூன்று பதினாலு வயது பெண்ணுக்கு தனக்கு வரப்போகும் கணவன் எப்படிப்பட்டவனாகயிருக்க வேண்டும் என்பதைப் பற்றி தெரிவு இருந்திருக்குமா? தெரியவில்லை.

ராமகிருஷ்னர், சக்கரை சாப்பிடும் வழக்கத்தை தன் பையனிடம் நிறுத்தச் சொல்லுங்கள் என்று சொல்லி ஒரு அம்மையார் வந்த பொழுது ஒரு வாரம் கழித்து வாருங்கள் சொல்கிறேன் என்று சொல்லி அனுப்பியதாகவும். பின்னர் ஒரு வாரம் கழித்து வந்த அந்தப் பையனிடம் சக்கரை சாப்பிடுவதை நிறுத்து என்று சொல்லியதாகவும் ஏன் ஒரு வாரம் கழித்து இந்த அறிவுரையைச் சொன்னீர்கள் என்று கேட்டதற்கு, தனக்கே சக்கரை அதிகம் சாப்பிடும் வழக்கம் இருந்ததாகவும் அதை நிறுத்திவிட்டு தான் அறிவுரை சொல்லவேண்டும் என்பதால் அப்படி செய்ததாகவும் படித்திருக்கிறேன். தானே தவறு செய்துகொண்டு அந்தத் தவறை இன்னொருவரை செய்யாதே என்று சொல்வது குற்றம் என்று சொன்னதாகவும் படித்திருக்கிறேன். (உண்மையா என்று தெரியாது!)

இப்பொழுது ராமகிருஷ்ணர் செய்தது சரியென்று பாரதி செய்தது தவறென்றும் சொல்லிவிடமுடியுமா? ராமகிருஷ்ணர் செய்தது தனிநபர் செய்யக்கூடியது. ஆனால் பாரதி பாடிய விஷயங்கள் சமுதாயத்தை திருத்தப் பாடியவை இல்லையா(இல்லாவிட்டால் சமுதாயம் இப்படி இருக்க வேண்டும் என்ற பாரதியின் கனவுகள்). சமுதாயத்தை தனி ஒருவனால் திருத்தி விடமுடியுமா? அப்படி திருத்த வேண்டுமானால் அந்த தனிமனிதனின் கடமைகள் என்னவாகயிருக்க முடியும் என ஏகப்பட்ட கேள்விகள் மனதிலே தொக்கி நிற்கின்றன.

———————————-

நான் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு திருச்சி சென்றதற்கு சில பல காரணங்கள் வீட்டில் உள்ளவர்களால் சொல்லப்பட்டது. அதில் முதலாவது போனமுறையும் அதற்கு முந்தைய முறையும் ஆஸ்திரேலியா உலகக்கோப்பை ஜெயித்த பொழுது அங்கிருந்ததால் தான் நான் திருச்சிக்கு வந்தேன் என்று சொல்வது சுத்தப் பொய்.

இப்படித்தான் இனிமேலும் உலகக்கோப்பை போட்டிகள் இருக்குமென்றால் ஆஸ்திரேலியாவை டைரக்ட் செமி பைனல் அனுப்பிவிடலாம் ;). கில் கிறிஸ்டின் ருத்ர தாண்டவம் பார்க்க சூப்பராகயிருந்தது. எனக்குத் தெரிந்து கில்’லி செஞ்சுரி அடித்து ஆஸ்திரேலியா தோற்ற மாட்சுகள் மிக மிக குறைவாகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன்.

அந்த அற்புதமான ஆட்டத்தை பார்க்க என்ன தவம் செய்தேனோ??? வரும் நவம்பர் வரையில் ஆஸ்திரேலியாவிற்கு எந்தப் கிரிக்கெட் போட்டியும் கிடையாது :(.

உலகக்கோப்பையில் ஒரு ஆட்டத்தில் கூட தோற்கமாட்டார்கள் என்று நான் குருட்டாம் போக்கில்(வைச்சுக்கோங்களேன்…) நிறைவேற்றிய ஆஸ்திரேலியாவிற்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.

நான் திருச்சியிலும் பெங்களூரூவிலும் நண்பர்களிடம், பான்டிங் இன்னும் இரண்டு உலகக்கோப்பை விளையாடும் வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்கலாம் என்று சொல்லிப்பார்த்தேன். அதற்கு அவர்களோ ஒரேயடியாய் அதற்கு முன்பே பான்டிங் ரிட்டயர்ட் ஆகிவிடுவார் என்று ஒன்றுபோல் சொன்னது ஆச்சர்யம் அளிப்பதாகவேயிருந்தது.

இன்னும் ஒரு உலகக்கோப்பையாவது பான்டிங் விளையாட ACB பிரச்சனை ஒன்றும் செய்யாமல் இருக்கணும். அதே போல் சச்சினின் எல்லா ரெக்கார்டையும் போட்டு உடைக்கணும் ஏன் என்றால் ரெக்கார்டுகள் அதற்காக மட்டுமே விளையாடுபவர்களுக்கு போய்விடக்கூடாது என்பதற்காகத்தான்.

Go Aussie Go!!!

Go Aussie Go!!! – 9 (Finals)

திருச்சியில் இருப்பதால் அதிகம் எழுத முடியவில்லை. இருந்தாலும் இவ்வளவு போட்டிகளுக்கு எழுதிவிட்டு இறுதிக்கு எழுதாவிட்டால் எப்படி எனபதால் இந்தப் பதிவு.

சொல்வதற்கு ஒன்றுமில்லை, இந்த இறுதிப் போட்டி ஒன் சைடட் மேட்ச் ஆகத்தான் இருக்கும் என்பது என் கணிப்பு.

இதற்கு நான் இலங்கை அணியை குறைவாக கணிக்கிடுவதாக ஆகாது. ஆஸ்திரேலியா “பிக்” மேட்ச்களில் மிகச் சிறப்பாக விளையாடுபவற்கள்.

ஆஸ்திரேலியா முதல் பேட்டிங் பிடித்தால் முன்னூறு அடிப்பார்கள், மிகச் சுலபமாக ஜெயிப்பார்கள்.

இலங்கை முதலில் பேட்டிங் செய்தால் 200 ரன் மட்டுமே எடுப்பார்கள்.

இது என் கணிப்பு மட்டுமே. என்னைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியா முதலில் பௌலிங் செய்யவேண்டும்.