கல்லூரியில் கிரிக்கெட்

நான் என் கல்லூரி அணிக்குத் தேர்வானது ஒரு நல்ல கதை. முதலில் டென்னிஸ் பந்துகளில் விளையாடுவதைத் தொடங்கினாலும் எனக்கு கிரிக்கெட் பந்துகளில் விளையாட நேரமோ, சூழ்நிலையோ அமையவில்லை. இதனாலெல்லாம் நான் கல்லூரி அணிக்கு தேர்ந்தெடுக்கிறார்கள் என்றதும்; அதுவும் கிரிக்கெட் பந்தில் என்றதும் தாழ்வு மனப்பான்மையால் அந்தப் பக்கமே போகவில்லை. என்ன பெரிய செலக்ஷன் ப்ராப்பர் கிரவுண்டிலா நடந்ததது? என்றால் இல்லை. கல்லூரிக்கு பின்னால் இருந்த ஒரு இடத்தில் நடந்தது.

நான் அந்த செலக்ஷனுக்குப் போகாத மற்றொரு காரணம் முதலில் பீல்டிங் பயிற்சி என்று காஜி எடுத்துக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் கல்லூரி நேரம் முடிந்ததும் பக்கத்து பஸ் ஸ்டாப்பில் இருக்கும் ஆயா கடையில் டீ சாப்பிடப் போவது வழக்கம். அன்று அப்படி போயிருந்த பொழுதுதான் தெரிந்தது; பீல்டிங் செலக்ஷன் நடப்பது. நானும் வேடிக்கைப் பார்த்துவிட்டு, நக்கலாக இரண்டு கமெண்ட் அடித்துவிட்டு கிளம்பிவிட்டேன். அதற்கடுத்து சனி, ஞாயிறு என்று நினைக்கிறேன். ஹாஸ்டலில் பெரிய காலமாகப் போகும் அவை.

அடுத்த நாளும் கல்லூரி முடிந்ததும் ஹாஸ்டல் வந்து கைலி கட்டிக்கொண்டு டீகுடிக்க, ஆயாக்கடையை நோக்கி நகரும் பொழுதுதான் கவனித்தேன். பௌலிங் செலக்ஷன் நடந்து கொண்டிருந்தது. கிரிக்கெட் பற்றிய தீராத வெறி என்னை ஒரு ஐந்து பத்து நிமிடம் அங்கே நிற்க வைத்தது. நான் எதிர்பார்த்ததைப் போலில்லாமல் அங்கே டிஸ்டிரிக்ட் டிவிஷினல் என்று கதைகளை விட்டு நிறைய பேர் பௌலிங் போட்டுக் கொண்டிருந்தார்கள். பூரா க்ராப்; ஒரே வார்த்தை. நான் அவசர அவசரமாக கூடவந்த பையனின் பாண்டை உருவி போட்டுக்கொண்டு நானும் பௌலிங் செய்ய பந்து ஒன்றை வாங்கினேன்.

டென்னிஸ் பந்துகளை விட சைஸில் பெரிய பந்துகள்; சிகப்புக் கலர் கூக்குபரா பந்துகள். கைக்கு அடக்கமாக இல்லாத காரணத்தால் நான் எதிர்பார்த்த யார்க்கராக இல்லாமல் முதல் பந்து ஒரு நச்சு பௌன்ஸராகப் போனது. ஹெல்மட் போட்டுத்தான் விளையாடுவார்கள் என்றாலும் அந்த சீனியர் பையன் பயந்து போனது நன்றாகத் தெரிந்தது. அப்பொழுதுதான் முதன் முதலில் கிரிக்கெட் பந்தில் பௌலிங் போடுகிறேன் என்பதை நினைவில் வைக்க வேண்டும். அந்தப் பந்திற்கு பாட்ஸ்மேனிடம் பதிலொன்றும் இல்லாததால். தொடர்ச்சியாக ஒரு ஓவர் போடும் வாய்ப்பு கிடைத்தது.

இப்பொழுது இருப்பதையெல்லாம் விடவும் தலைமுடி அதிகம் வைத்திருப்பேன். நான் ஓடிவர என் தலைமுடி ஒரு பக்கம் தனியாக வரும். ரெண்டு குட் லெங்க் டெலிவரிகளும், இரண்டு யார்க்கரும் போட்டுக்காட்ட, இரண்டு யார்க்கரிலும் பாட்ஸ்மேனின் குச்சி போயிருந்தது. பெரும்பாலும் இந்த கிரிக்கெட் விளையாடுபவர்களுக்கு கால்கள் அவ்வளவு வேகமாக நகராது ஏனென்றால் அடிஷனல் பர்டன் பேட்கள். அதுவும் கிடைக்கிறதென்று இரண்டு பேட்கள், ஹெல்மெட், காட் என ஏகப்பட்ட அய்டங்களைப் போட்டுவிளையாடுவதால். அவர்களுடைய நேச்சுரல் கேம் வரவே வராது. அதனால் குச்சி பறந்தது பெரிய விஷயம் இல்லை; அந்த வேகத்தில் வரும் பந்தை கரெக்டாக ஜட்ஜ் செய்து டிபென்ஸ் ஆடுவது கடினம்.

நான் ஒரு ஓவர் போட்டு முடித்ததும் கூட டீ குடிக்க போய்விடலாமா என்றுதான் நினைத்தேன். அங்கே செல்க்ஷனுக்காக நின்றிருந்த வாத்தியார் பாட்டிங் செய்வியா இல்லை ஒன்லி பௌலரா என்று கேட்க ஆஹா போட்ட பந்துக்கு காஜியும் அடிக்கலாம் என்று ஆடுவேன் என்று சொன்னேன். சரி போய்த் தயாராகு என்று சொன்னதும். வேகவேகமாகப்போய் இடது காலுக்கு மட்டும் பேட் கட்டிக் கொண்டு போய் நின்றேன். எல்லாம் ஒரு சீன் தான், எங்கள் ஸ்டேடியத்தில் ப்ராக்டிஸ் செய்யவரும் பிரபல BHEL பிளேயர்கள் அந்தக் காலில் மட்டும் பேட் கட்டி விளாயாடுவதைப் பார்த்திருக்கிறேன்.

ஆனால் ஹெல்மட் மேண்டேட்டரியாகக் கொடுக்கப்பட அதைமட்டும் போட்டுக் கொண்டு போய் நின்றேன். சீனியர் மக்களுக்கு கோபம் இருந்திருக்க வேண்டும். அதுவரை பௌலிங் செய்து கொண்டிருந்த ஜூனியர் மக்களை நிறுத்தி அவர்களே இறங்கினார்கள் பௌலிங்கிற்கு. நாங்க மதிச்சாத்தானே. ஆறு பந்துகளுக்குமே கீழேயிறங்கி ஆடினேன். என் அதிர்ஷ்டம்(???) நான்கு பந்துகள் கிளிக் ஆகியது. ஒன்று எட்ஜாகி பின்பக்காம் சென்று விட ஒன்று மிஸ். அம்பையர் இடத்தில் இருந்த செல்க்டர் சரி போதும் என்று சொல்ல பேடைக் கழட்டியவன். ஆயாக்கடை சாயாவில் மயங்கி அங்கிருந்து எஸ்கேப் ஆக; டீக்கடைக்கு மெஸேஜ் வந்தது செலக்டர் என்னை தேடுவதாக. ஆல்ரவுண்டராக என்னை அணியில் தேர்ந்தெடுத்திருந்தார்கள். அதற்குப் பிறகு ஹாஸ்டல் அணியுடன் டென்னிஸ் பால் கிரிக்கெட். காலேஜ் அணியுடன் கிரிக்கெட் பால் ப்ராக்டீஸ் என பிரகாசமாகப் போனது.

ஆனால் நாங்கள் RECயில் கொங்கு Arts & Scienceவுடன் விளையாடிய மட்ட ரகமான ஆட்டம் ஒருவாறு எங்கள் கிரிக்கெட் வாழ்க்கையை இல்லாமல் செய்தது என்று சொல்லலாம். சீனியர்கள் செலக்டர் சொல்லியும் கேளாமல் என்னை சப்ஸ்டிட்யூட் ஆக வைத்து விளையாடினார்கள். நாங்கள் RECயில் பிகர் பார்க்கக் கிளம்பிப் போய்விட்டு வருவதற்குள் பாதி பேர் அவுட். இருபத்தைந்து ஓவர்களுக்கு எங்கள் அணி அடித்ததை விக்கெட் இழப்பில்லாமல் ஐந்து ஓவர்களில் அடித்துவிட்டு அவர்கள் கிளம்பிப் போனார்கள். அதற்குப் பிறகு சீனியர்கள் முகம் போன போக்கு… ;). அதற்குப் பிறகு அபிஷியலாக அதிகம் விளையாடாவிட்டாலும்; பக்கத்தில் இருந்த சாரநாதனுடன் நிறைய ஆட்டம் விளையாடியிருக்கிறோம். இந்த இடைப்பட்ட காலத்தில் நான் சீனியர்களுடன் நல்ல பழக்கத்திற்கு வந்திருந்தேன்.

பின்னர் எங்கள் ஹாஸ்டல் அணியின் நிரந்தர ஆட்டக்காரராகவே இருந்தேன். பெரும்பாலும் எக்ஸாம் இல்லாத நாட்களில் எல்லாம் ஏதாவது ஒரு கல்லூரி அணிக்கும் ஹாஸ்டல் அணிக்கும் இடையில் மேட்ச் இருக்கும். சில சமயம் நான் படிக்கும் வகுப்பிற்கு எதிராகவே விளையாடுவோம். அப்பொழுதெல்லாம் கிளாஸ்மெட்களையெல்லாம் விடவும் ஹாஸ்டல் மெட்கள் தான் பிடிக்கும். ஏனென்றால் நாள் முழுவதும் அவர்கள் தான் எங்களுடன் இருப்பார்கள். கல்லூரியில் உட்கார்ந்திருக்கும் பொழுதுகளிலும் கூட ஹாஸ்டல் நண்பர்களுடன் தான் உட்கார்ந்திருப்பது. டேஸ் ஸ்காலர்களின் உலகம் வேறு, ஹாஸ்டல் மக்களின் உலகம் வேறு…

முந்தைய பாகம்
அதற்கு முந்தையது

கிரிக்கெட் நான் மற்றும் Nostalgia – 1

கிரிக்கெட் நான் மற்றும் Nostalgia

இந்தச் சமயத்தில் ஒரு மிக முக்கியமான நிகழ்வு நடந்தது அது நான் எட்டாவது படித்து முடித்த பொழுது மே மாத விடுமுறைக்காக டெல்லிக்குச் சென்றது. மற்ற விஷயங்களை விடுத்து கிரிக்கெட் சம்மந்தமான முக்கியமான நிகழ்வென்றால் அது நான் என் மாமாக்கள் இருவருக்கும் பந்து வீசியது. இருவரும் உண்மைக் கிரிக்கெட் 😉 ஆடியிருந்தவர்கள். அதாவது மேட் எல்லாம் போட்டு விளையாடும் டிவிஷன் மேட்ச்சஸ். இதனால் இருவருக்குமே டெக்னிக்கலாக கிரிக்கெட் எப்படி விளையாட வேண்டுமென்று தெரியும்.

அங்கே விளையாடிய பொழுதுதான், Front foot, Back foot, பந்து வீசுபவர்களின் கைகளைக் கவனிப்பது, பந்து கைகளில் இருந்து வெளியேறியது பந்தை கவனிப்பது, பேட்டை எப்படி விளையாடப் போகிறோம் என்பதற்கிணங்க ஹேண்டிலைப் பிடிப்பது(ஸ்ட்ரோக் ஆடுவதற்கும் ஷாட்ஸ் ஆடுவதற்கும் வெவ்வேறு ஸ்டைலில் பேட்டைப் பிடிக்க வேண்டும்) என நிறைய விஷயங்களை ப்ராக்டிகலாக இம்ப்ளிமெண்ட் செய்ய சொல்லித் தந்தார்கள். அதுவரை குருட்டாம் போக்கில் வந்த பந்தை அடிப்பது என்ற நிலையில் இருந்த என்னை அடுத்த அடிக்கு உயர்த்தியது அங்கே தான். எனக்கு என் மாமாக்களுடன் இன்றும் கிரிக்கெட் விளையாடப் பிடிக்கும். இன்று நான் ஆப்-ஸெட்ம்புக்கு அந்தப் பக்கம் நாலு இஞ்சில் போடப்படும் பந்தை லாவகமாக தடுத்தாடுவார்கள் என்று நன்றாகத் தெரியும் ஆனால் வேலை காரணமாக நாங்கள் மூவரும் ஒரு இடத்தில் இருக்கும் வாய்ப்புக்கள் குறைந்ததில் நான் அனுபவிக்கும் வருத்தத்தில் இதுவும் ஒன்று.

இதையெல்லாம் விடவும் முக்கியமான ஒரு விஷயம் மாமா வைத்திருந்த SG பாட் ஒன்றை என்னிடம் தந்தார் நான் டெல்லியில் இருந்து புறப்படும் பொழுது. நான் என் பகுதியில் கேப்டன் ஆனேன் ;). நாங்கள் விளையாடிக் கொண்டிருந்த பேட்களுடன் ஒப்பிடக் கூட முடியாது அந்த பேட்டை, கொஞ்ச நாள் யாருக்கும் கொடுக்காமல் நான் மட்டும் தான் விளையாடி வந்தே அந்த பேட்டில் ஆனால் அது பல காரணங்களுக்காக சரிவராமல் போக எல்லோரும் உபயோகிக்கத் தொடங்கினார்கள். சில டோர்னமென்ட் விளையாடுவதற்கு பெரிய டீமில் இருந்தெல்லாம் பேட் கேட்டு வருவார்கள்.

இப்பத்தான் நான் அப்பா ஸ்கூலில் இருந்து வேறு ஸ்கூலுக்கு வந்தது, ஆனால் இரண்டு பள்ளிகளுமே ஒரு மேனேஜ்மென்ட்-ஆல் நடத்தப்படுபவை. நானூறு மீட்டர் இடைவெளி இருக்கும் இரண்டு பள்ளிகளுக்கும் அவ்வளவுதான் விஷயம் என்றாலும். ஸ்கூல் அதையடுத்து ஒரு ரோடு ரோட்டைத்தாண்டினால் “நேரு ஸ்டேடியம்”. இது போதுமே ஆனால் இன்னொரு விஷயமும் இருந்தது, “நேரு ஸ்டேடியம்” தாண்டி கேர்ல்ஸ் ஹைஸ் ஸ்கூல் ;).

பள்ளி விடும் 4.15க்கு முன்னமே கிளம்பிப் போய் கிரவுண்டில் குச்சி நட்டு வைச்சு, அந்தப் பெரிய கிரவுண்டில் நல்ல பிச்சா விளையாடுவதற்கு தேர்ந்தெடுத்து வேறுயாரும் விளையாடாமல் பார்த்துக்கொள்ளவென்றே ஒருத்தன். அவன் 4.00 மணிக்கெல்லாம் கிளம்பிடுவான் பாத்ரூம் வருகிறதென்று. நாங்கள் அவன் பையையும் எடுத்துக் கொண்டு கிரவுண்டிற்கு வந்துவிடுவோம். அப்புறமென்ன இரண்டு இரண்டு பேரா அரைமணிநேரத்திற்கு ஒரு தடவை குறையத் தொடங்க. கடைசி இரண்டு மூன்று ஆட்கள் வரும் வரை விளையாடிவிட்டு பேட் பாலை எடுத்துக் கொண்டு வீடு வந்து சேருவோம். அந்த கிரவுண்டில் மொத்தம் எங்களைப் போல் இருபது டீம் விளையாடிக் கொண்டிருக்கும்.

இது கிட்டத்தட்ட அந்த நான்கு வருடங்களில் தொடர்ச்சியாக நடந்தது. அப்பல்லாம் டீம் மாட்ச் நடக்கும் 9A, 9B, 9C என மூன்று பிரிவுகள் ஆங்கில வகுப்புக்கள். அப்புறம் 9D ல் தொடங்கி 9M வரைக்கும் தமிழ் பிரிவுகள். ஒவ்வொரு வகுப்பிற்கும் 40 – 45 மாணவர்கள் இருப்பார்கள், அதனால் குறைந்த பட்சம் 11 பேர் பிரச்சனையே இல்லை. எல்லா நாட்களும் மேட்ச் தான், மதியம் இன்டர்வெல்லில் இதற்கென்றே இருக்கும் மாணவர்கள் போய் எதாவது ஒரு க்ளாஸிடம் மேட்ச் கேட்டு வருவார்கள். அப்படி டீம் மாட்சா இருந்தால் சென்டர் பிச்சில் விளையாடுவோம்.

பொதுவாக சென்டர் பிச் காலியாகத்தான் இருக்கும், இதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று பெரிய மைதானம், இருபத்திரெண்டு பேர் விளையாடாவிட்டால் சரிவராது அதுமட்டுமில்லாமல் அந்த சென்டர்பிச் பௌலிங் பிச் அதனால் அதிக ரன்கள் வராது. எட்டு ஓவர்கள் இருபத்தைந்து ரன் அடிப்பதுவே பெரிய விஷயம் அதனால் கிளாஸிக் கிரிக்கெட் போல் இருக்குமென்பதால் அவ்வளவு சுவாரசியமாகயிருக்காது. ஆனால் க்ளாஸ் மேட்ச் என்று வந்துவிட்டால் செண்டர் பிச் தான். அந்தக் காலத்தில் எல்லாம் அப்பா என்னைத் தேடவேண்டுமென்றால் நேராக ஒன்றிரண்டு கிரிக்கெட் கிரவுண்டிற்கு போய்த் தேடி கண்டுபிடித்துவிடுவார்.

அந்தக் காலத்தில் எல்லாம் நான் ஆல்-ரவுண்டர், கொஞ்சம் வித்தியாசமான. பெரும்பாலும் ஓப்பனிங் பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர்(நான் பௌலிங் செய்யாத பொழுது), அப்புறம் பௌலர். எட்டு/பத்து ஓவர் மேட்சில் இரண்டு ஓவர்கள் தான் கிடைக்கும். அந்த இரண்டு ஓவர்களும் நன்றாகப் போட்டால் மூன்றாவது கிடைக்க வாய்ப்புண்டு எனென்றால் ஒரு பத்து ஓவர் மேட்சில் ஒரு ஆள் தான் மூன்று ஓவர் போடலாம்.

அதுமட்டுமில்லாமல் விக்கெட் கீப்பிங் ரொம்பவும் முக்கியமான ஒன்று. அதனால் அதுவும் நானே, அப்பல்லாம் கண்ணாடி கிடையாது. ஸ்டெம்புக்கு ரொம்பவும் அருகில் நின்று கீப்பிங் செய்வேன். சிலகாலம் ஒரு அணிக்கு அவர்களிடம் இருந்த ஒரு பேஸ் பவுலரின் பந்துகளை நான் கீப் செய்கிறேன் என்பதற்காகவே குறைந்த வயதில் டோர்னமெண்ட் விளையாடியிருக்கிறேன். எப்படியாவது லெக் அம்ப்பயரை ஏமாத்தி மேட்சுக்கு ஒரு ஸ்டெம்பிங் வாங்கிவிடுவேன் ;). அப்புறம் பௌலிங், முதலில் எங்கள் அணி பௌலிங் செய்தால் நான் தான் முதலில் வீசுவது. முதல் ஸ்பெல் முடிந்து எட்டாவதோ பத்தாவதோ ஓவரை நான் தான் வீசுவேன்.

1500 ஓடுவதாலும் வீட்டில் தண்ணி தெளித்து விட்டிருந்ததாலும் என்னால் அந்தக் காலக் கட்டத்தில் நிறைய கிரிக்கெட் விளையாட முடிந்திருந்தது. பின்னர் எனக்கென்று ஒரு டீம் இருந்தாலும் பிற அணிகளுக்காகவும் விளையாட போய்விடுவேன். கூத்தைப்பார் டோர்னமெண்ட், செக்யூரிட்டி காலனி டோர்னமெண்ட், எழில்நகர் டோர்னமெண்ட் என சுத்துவட்டாரத்தில் நான் விளையாடாத டோர்னமெண்ட்களே ஒரு காலத்தில் இல்லை என்பது போல் ஒன்று கிரிக்கெட் விளையாடுவது இல்லை கிரிக்கெட் பற்றி பேசுவது இது மட்டும் தான் வாழ்க்கை அப்பொழுது.

+1, +2 விலும் அப்படித்தான். நான் எதிர்பார்த்த அளவிற்கு மதிப்பெண் வாங்காததற்கு இதுவும் ஒரு காரணம். மற்ற காரணம் தான் முன்னமே தெரிந்திருக்குமே.

அடிக்கிற மழை கொளுத்தும் வெய்யில் என எதற்காகவும் நாங்கள் விளையாடுவதை நிறுத்தியதில்லை. இதுவரையான சமயத்தில் நான் ரொம்பவும் பேமஸான பௌலர் தான் பேட்டிங் பிஞ்ச் ஹிட்டர், ஏனென்றால் டெக்னிக்கலாக தெரிந்திருந்தாலும் 8 ஓவர் மேட்சில் நமக்கு கிடைக்கும் ஒன்றிரண்டு ஓவர்களை ஸ்ட்ரோக் பண்ணியெல்லம் ஆடினால் அடுத்த மேட்சில் ஆட இடம் கூட கிடைக்காது. அதனால் ஓப்பனிங் பிஞ்ச் ஹிட்டர், ஷாட்ச் பிச் டெலிவர் வந்தால் போதும் ஒரு போர் அடித்துவிடுவேன் பெரும்பான்மையான சமயங்களில் என்பதால் என் பள்ளி அணிக்காக பெரும்பாலும் ஓப்பனிங் மட்டுமே விளையாடுவேன். சிலசமயம் ஆப்பொனண்ட் ரொம்பவும் குறைவான ரன்கள் என்றால் நான் இறங்க மாட்டேன்.

ஆனால் இதையெல்லாம் மாற்றிப் போட்ட கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன், +2 படிக்கும் பொழுது. பௌலிங் கிடையாது ஒன்லி த்ரோ தான், ஒரு சதுரம் போல் இருக்கும் இடம் தான் பிச். வெறும் ஆப் சைட் மட்டும் தான். கட்டத்திற்கு வெளியில் தூக்கி அடித்தால் அவுட். அது ஒரு அற்புதமான கிரிக்கெட். ஓவர் கணக்கு கிடையாது அவுடாகும் வரை விளையாடலாம். ஆனால் அந்த சின்னக் கட்டத்திற்குள் இருக்கும் பீல்டர்கள் கைகளில் சிக்காமல் ரன் அடிப்பது என்பது பெரிய விஷயம். ஆனால் சில பேர் வேண்டுமென்றே ஸ்ட்ரோக் வைக்கிறேன் பேர்வழியென்று ஆரம்பித்ததால் – unlimited ஓவர்கள் விளையாட முடியாமல் போனது. அதனால் ஒரு கணக்கிற்கு 15 ஓவர்கள்.

பிரம்மாதமான ஆஃப் சைட் ஆட்டம் கைக்கு வந்தது அப்பொழுது தான். அதேபோல் லெக் ஸ்பின் விளையாட வந்ததும்(பிற்காலத்தில் கல்லூரி அணிக்காகவும், கம்பெனி அணிக்காகவும் ஆடிய பொழுது ஸ்பின்னர்ஸை அடிக்க இந்த ஆட்டம் உதவியது.) அப்பொழுதுதான். ஷென் வார்னேவின் மைக்கேல் ஹோல்டிங்கிற்கான பந்து தெரிந்திருக்கும். அதெல்லாம் என்ன பிரம்மாதம் த்ரோ என்பதால் வெறும் முத்தையா முரளீதரன்களும் ஷேன் வார்னேக்களும் தான் அங்கே. அதுவும் இல்லாமல் நிறைய வெரைட்டி வேறு, ஒரே ஓவரில் பேஸ், பவுன்ஸ், லெக் ஸ்பின், ஆப் ஸிபின், புல்டாஸ் என நிறைய போடுவார்கள். இந்த ஆட்டங்களில் எத்தனை 50 அடித்திருப்பேன் நினைவில் இல்லை. மாமாக்கள் சொல்லிக் கொடுத்த டெக்னிக் இங்கே நிறைய உதவியது.

அடுத்த பாகம் போடுகிறேன், இப்பவே நிறைய ஆச்சுது.

கிரிக்கெட் நான் மற்றும் Nostalgia

நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தது எப்பொழுது என்று சரியாக நினைவில் வரமறுக்கிறது ஆனால் ஐந்தாவது வகுப்பு படிக்கும் பொழுதெல்லாம் ஆடியிருக்கிறேன் என்பது நினைவில் இருக்கிறது. கொஞ்சம் போல் சீரியஸ் கிரிக்கெட் என்றால் அது ஆரம்பித்தது ஆறாவது ஏழாவது படிக்கும் பொழுதாகயிருக்கலாம்.

எங்கள் பள்ளிக்கூடத்திற்கு அருகில் இருந்த ஒரு இடத்தில் விளையாடுவோம்; பக்கத்தில் ஒரு மாங்காய் மரத்துடன் கூடிய வீடிருந்தது. பெரும்பாலும் அந்த வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள் எனவே பந்து வீட்டின் கொல்லைப் புறத்திற்கு சென்றுவிட்டால் பிரச்சனையில்லாமல் எடுத்துவரமுடியும் என்பதுகூட நாங்கள் அந்த இடத்தில் விளையாடியதற்கு ஒரு காரணம். அப்பொழுதெல்லாம் ரப்பர் பந்துதான், கிரிக்கெட் பேட் என்று பெரிதாக ஒன்றும் இல்லாவிட்டாலும் எங்கேயோ கிடைத்த ஒரு பேட்டில் விளையாடிக் கொண்டிருந்த நினைவு.

ஸ்டிக் எல்லாம் மரக்குச்சிகள் தான், பெரும்பாலும் பள்ளிவிட்ட பிறகு இரண்டு மணிநேரங்கள் விளையாடுவோம். வெறும் ‘லெக்’ சைட் மட்டும் தான்; அதுவும் ஸ்டிக்கிற்கு பின்பக்கம் ரன்கள் கிடையாது. ஏனென்றால் அந்த வயதில் பௌலிங் போடும் பொழுது ஷார்ட் பிச் டெலிவர்கள் அதிகம் இருக்குமென்பதால் அந்தப் பக்கம் அடிக்க வசதியாக இருக்கும். அதன் காரணமாகவே அந்தப் பக்கம் ரன் கிடையாது. பள்ளிக்கூடம் விட்டபிறகென்பதாலும் எல்லோர் வீடுகளிலும் உடனே வீட்டிற்கு போய்விடவேண்டிய அவசியம் இல்லாத காரணத்தாலும் சைட் ஒன்றிற்கு ஆறு பேர் என பன்னிரெண்டு பேர் விளையாடுவோம்.

நினைவு தெரிந்து அந்த வயதில் எல்லாமே வேகப் பந்துவீச்சு தான்; சனி ஞாயிற்றுக் கிழமைகளில் கொஞ்சம் பெரிய க்ரவுண்ட்களில் இரண்டு செக்டார்களுக்கு இடையில் மேட்ச் நடக்கும். அந்த மொட்டை வெய்யலில் முதல் ஆளாக நான் உட்கார்ந்திருப்பேன் மேட்ச் பார்ப்பதற்கு. நான்கு மணிக்கு ஆட ஆரம்பிக்கும் அவர்கள், ஆறு மணி போல் மேட்ச் ஆடி முடித்ததும் அந்த பெரிய ஆட்களுக்கு பௌலிங் செய்வேன். சொல்லப்போனால் நான் ஓசி காஜி தான் அடிப்பார்கள் அவர்கள் இருந்தாலும்; அதுவரை நானாகப் பார்த்திராத டென்னிஸ் பால்களுக்கு அறிமுகம் அங்கே தான் கிடைத்தது.

ரப்பர் பாலுக்கும், காஸ்கோ பாலுக்கும் வித்தியாசம் நிறைய உண்டு. கொஞ்சம் மித வேகமாக பந்து வீசினாலே ரப்பர் பாலில் வேகமாகச் செல்லும். ஆனால் காஸ்கோ பாலிற்கு வெய்ட் சுத்தமாகயிருக்காது, அதனால் என்ன வேகமாக ஓடிவந்து வேகமாக வீசினாலும் பேட்ஸ்மேனுக்கு டைமிங் நிறைய கிடைக்கும். நான் ஆறாவது படிக்கும் பொழுதெல்லாம் இப்பொழுது மார்க்கெட்டில் கிடைக்கும் ‘விக்கி’ பந்துகள்(இரண்டு கலர்களில் பெரும்பாலும் இருக்கும், சில ஒற்றைக் கலரிலும்) கிடைக்காது. BHELல் டென்னிஸ் கிளப்பில் இருந்து இந்த காஸ்கோ பந்துகளை அந்த அண்ணன்கள் வாங்கி வருவார்கள்.

சின்ன வயது, எதையாவது சாதிக்கணும் என்ற ஆசை எல்லாம் சேர்த்து அந்த வயதிலேயே நான் வேகமாக பந்துவீசுவேன். காஸ்கோ பந்திலும்; என்னைவிட சற்றேறக்குறைய பத்து வயது பெரியவர்கள் பேட்டிங் செய்பவர்களை என் வேகத்தால் தடுமாறவைப்பேன் சில தடவைகள். சில தடவைகள் பொத்தென்று ஷார்ட் பிச் விழ பந்து பறக்கும்(பஞ்சு மாதிரி ;)). இதில் பிரச்சனை என்னவென்றால் அப்படி அடிக்கப்பட்ட பந்தையும் நான் தான் எடுத்துவரவேண்டும். இதனாலெல்லாம் ஒரு நன்மை என்னவென்றால் ஆஸ்பிட்டல் பக்கம் ஒரு பிரச்சனை என்று படுத்ததில்லை அவ்வளவே.

அப்பா வேறு உடற்பயிற்சி ஆசிரியர், அக்கா ஸ்டேட்-ல் தொடர்ச்சியாக தங்கம் வாங்கியவர். இதனால் காலையில் ஐந்தரை மணிக்கே “நேரு ஸ்டேடிய”த்திற்கு துரத்தப்படுவேன். அக்கா போய் வார்ம் அப் செய்யும் வரை, கேலரியில் படுத்திருந்துவிட்டு. வார்ம் அப் ஆனதும் லாங்க் ஜெம்ப் பிட்டில் படுத்துக் கொள்வேன். அப்பா தூரத்தில் வருவது தெரிந்ததும் நானும் அப்பத்தான் ஓடிக் களைச்சு போயிருக்கிறதா சீன் போடுவேன். ஆனால் அப்பாவுக்கு அதெல்லாம் நல்லாவே தெரியும். ஆனாலும் நான் காலையில் எழுந்து ஸ்டேடியம் போனதற்கு காரணம் அம்மா போய்வந்ததும் தரு கேழ்வரகு கஞ்சி. (அந்த ஏலக்காய் மணம் இப்பவும் நினைச்சா உணரமுடிகிறது.)

காலை இப்படின்னா சாயங்காலம் இப்படி கிடையாது; என்னையும் அக்காவையும் ஸ்டேடியத்திற்கு துரத்திவிட்டுட்டு அப்பாவும் அம்மாவும் வாக்கிங் வருவார்கள். வந்து ஸ்டேடியத்தின் கேலரியில் உட்கார்ந்திருப்பார்கள்; அதனால் ஏமாற்ற முடியாது. அந்த ஸ்டேடியம் பெரியது. எப்படியென்றால் நானூறு மீட்டர்களை ஒரே ரவுண்டில் ஓடக்கூடிய அளவிற்கு பெரியதென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். நான் அந்த ஸ்டேடியத்தில் பதினைந்து ரவுண்ட்கள் ஓடுவேன். பார்த்துக் கொள்ளுங்கள்(400மீட்டர் x 15). அக்காவிற்கு வெறும் இரண்டு ரவுண்ட்கள் தான் ஏனென்றால் அவள் பங்கேற்பது 100, 200 மற்றும் லாங் ஜெம்ப்.

என்னை இருபது மீட்டர் முன்னால் நிறுத்திவிட்டு எனக்கும் அக்காவிற்கு 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடக்கும் பெரும்பாலும் எல்லா நாளும், 20 மீட்டர் மட்டுமல்லாமல் ஸ்டாட்டிங்கும் முன்னாடியே கொடுத்துவிட்டு ஓடுவேன். ஆனால் அக்கா தீவிரமாக ஓடிக்கொண்டிருந்த காலங்களில் அவள் என்னை முந்திக் கொண்டுதான் முடிப்பாள்.

இதுமுடிந்ததும் அப்பா அக்காவைக் கூட்டிக் கொண்டு வீட்டிற்குப் போய்விடுவார், நான் அந்த ஸ்டேடியத்தில் கிரிக்கெட் விளையாடுவேன். இது வேறு ஒரு கூட்டம் கொஞ்சம் போல் நான்-ஸ்டாண்டர்ட் கிரிக்கெட் விளையாடுபவர்கள். அதாவது காலையில் இருந்து வேலை செய்துவிட்டு விளையாட வருபவர்கள். இவர்களிடம் என் பௌலிங்க் வெகு சீக்கிரமாக எடுபடும் பந்தும் ரப்பர் பால் தான். என்னிடம் இருந்த அத்தெலெட்டுக்கான திறமை என்னுடைய பீல்டிங்கிலும் ரன்கள் எடுப்பதிலும் தெரியும்.

சொல்லப்போனால் இவ்வளவு தான் நினைவில் இருக்கிறது நான் எட்டாவது படித்தது வரையிலான கிரிக்கெட் அனுபவம், நினைவுகள், நோஸ்டாலஜியா எல்லாம். அடுத்து நான் கொஞ்சம் போல் கிரிக்கெட் பைத்தியம் பிடித்துக் கிடந்த 8 – 12 படித்த பொழுதுகளின் நினைவுகள்.

என்ன தவம் செய்தனை மோகனா?

ஆச்சர்யமாகவே இருக்கிறது வாழ்க்கை எனக்கு பெரும்பான்மையான சமயங்களில். சொல்லப்போனால் அந்த ஆச்சர்யம் இல்லாமல் போகும் நாளில் வாழ்க்கை போரடித்துவிடும் என்பது மட்டும் இன்று பிரகாசமாகத் தெரிகிறது.

“நாடுங்கால் ஒரு மனமற்ற செய்கையை
நல்லதோர் மணமாம் என் நாட்டுவார்
கூடுமாயில் பிரமசரியம் கொள்
கூடுகின்றிலதெனில் பிழைகள் செய்து

ஈடழிந்து நரக வழிச்செல்வாய்
யாது செய்யினும் இம்மணம் செய்யல்காண் – பாரதி”

“கெட்டு சீரழிந்து போனாலும் போ, கல்யாணம் மட்டும் செஞ்சிக்காத”(ஒரு மாதிரி என்னுடைய டிரான்ஸ்லேஷனில் – பாரதியின் கவிதைவரிகள் எக்குத்தப்பாக இதைத்தான் சொல்லும்) பாரதியின் கவிதைகளுக்கு இடையில் வரும் இரண்டெழுத்து வரிகள் பெரும்பாலும் என்னைப் புரட்டிப்போட்டுவிடும் திறமை வாய்ந்தவையாகவேயிருந்திருக்கின்றன.

“பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும் அச்சமில்லை…” என்று எழுதிய வரிகளுக்குப் பின் என்ன இருந்திருக்கலாம் என்று ப்ராக்டிகலாக நான் அதே போன்றதொறு சூழ்நிலையில் இருந்த பொழுது உணரத் தழைப்பட்டிருக்கிறேன்.

அதைப் போலவே, “வேடிக்கை மனிதரைப் போல் நான் வீழ்வேனென்று நினைத்தனையோ…” இந்த வரிகளும். பாரதியுடன் ஒப்பீட்டளவில் பேசவில்லையென்றாலும் என் அளவில் இப்படிப்பட்ட சூழ்நிலைகளைச் சந்தித்தது குறைவான சமயங்களில் அல்ல. வேண்டுமானால் இப்படி வைத்துக்கொள்ளலாம் அந்த வரிகள் பாடமான பிறகு வந்த சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட நான் இந்த வரிகளைக் கூறி என்னைச் சமாதானம் செய்து கொண்டதாக.

ஆனால் இதைப் போலவெல்லாம் இல்லை, கல்யாணம் செய்து கொள்வதைப் பற்றிய பாரதியின் வரிகள். (இலக்கிய)தமிழுடன் அவ்வளவாக பரிட்சையம் இல்லாமல் போனதால் கொஞ்ச காலத்திலேயே பாரதியை விட அவருடைய தாசனின் வரிகளில் பித்து தலைக்கேறியது; அவருடைய இயல்பான தமிழ் வரிகளால்.

“கல்யாணம் செய்து கொள்ளாதே!” என கல்யாணம் செய்த மற்ற ஆண்கள் சொல்வதைப் போல பாரதி சொன்னதை ஒப்பிடலாமா? இல்லை மற்ற கவிதைகளைப் போல மெஸேஜ் சொல்ல பாரதி இந்தக் கவிதையைச் எழுதவில்லை என்று ஓரம் கட்டிவிடலாமா? குடும்பம் பிள்ளைகள், என சாதாரண மனித சிக்கல்களில் விழுந்து புரளும் அளவிற்கு பாரதி மனதளவில் இல்லையென்றாலும்; தான் கவிதைகளில் எழுதிய விஷயங்களுக்கு எதிராகவே(சில சமயங்களில்) வாழமுடிந்ததையும் பற்றி வருத்தப்படும், அதை செய்யாதே என்று சொல்லும் ஒரு சாதாரண மனிதனாக பாரதியை ஒப்பிட முடியுமா? தெரியவில்லை.

வைப்பாட்டி வைத்துக் கொண்டு(அல்லது விபச்சாரம் செய்து) நரகத்திற்கு போனாலும் போ, கல்யாணம் செய்து கொள்ளாதே என்று சொன்னதை எப்படிப் பார்ப்பது கல்யாணம் ஆகாத நான் தீவிரமா யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

“கஞ்சா” அடிச்சா மட்டும் தான் தலைவர் பிரகாசமா எழுதுவார்; அப்படி அடிக்காமல் போய் எழுதியதில் உண்மையைச் சொல்லிட்டாரோ என்னவோ என்று நண்பரொருவர் நாங்கள் பேசிக்கொண்டிருந்த பொழுது சொல்லிய நினைவு. அந்தாளைத் தூக்கி குப்பையில் போடுவோம், அதை விடுங்க.

“உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்”, “நஞ்சை வாயிலே வந்து நண்பரூட்டும் போதிலும்”, “இச்சை கொண்ட பொருளெல்லாம் இழந்துவிட்ட போதிலும்” எழுதியவருக்கு “கச்சையணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசும் போதிலும்” பற்றி எழுத நேர்ந்தது ஏதோ வேறுவழியில்லாமல், மெட்டுப்போட்டாச்சு வார்த்தை இதுக்கு மேல உக்காரலை என்று ஹீராதி ஹீரோ என்று எழுதும் சுயநலக்கவிஞனாக என்னை பாரதியைப் பார்க்கமுடியவில்லை. இதில் என்னமோ விஷயம் இருக்கின்றது; பாரதியின் சுயவரலாறு போல் வரும் கவிதையொன்றில் வருவதைப் போல,

தான் காதலித்த பெண்ணை(???) திருமணம் செய்துகொள்ள முடியாமல் தந்தையின் சொல்லைக் கேட்டு சிறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள நேர்ந்ததையும் பின்னர் தன் மகளுக்கும் சிறுவயதில் திருமணம் செய்துவைத்ததையும் வைத்து, அட்வைஸ் சொல்றவங்க அந்த அட்வைஸ் படி நடந்தார்களா இல்லையா என்ற கேள்வி தேவையில்லை என்று வைத்துக்கொள்ளலாமா? “நல்ல விலை கொண்டு நாயை விற்பார் அந்த நாயிடம் யோசனைக் கேட்பதுண்டோ…” எழுதிய பாரதி; தன் பெண்ணிடம் கேட்டிருப்பாரா? அவருக்கு தன் பெண்ணிடம் அந்த அளவிற்கு உரிமையிருந்திருக்குமா? பதின்மூன்று பதினாலு வயது பெண்ணுக்கு தனக்கு வரப்போகும் கணவன் எப்படிப்பட்டவனாகயிருக்க வேண்டும் என்பதைப் பற்றி தெரிவு இருந்திருக்குமா? தெரியவில்லை.

ராமகிருஷ்னர், சக்கரை சாப்பிடும் வழக்கத்தை தன் பையனிடம் நிறுத்தச் சொல்லுங்கள் என்று சொல்லி ஒரு அம்மையார் வந்த பொழுது ஒரு வாரம் கழித்து வாருங்கள் சொல்கிறேன் என்று சொல்லி அனுப்பியதாகவும். பின்னர் ஒரு வாரம் கழித்து வந்த அந்தப் பையனிடம் சக்கரை சாப்பிடுவதை நிறுத்து என்று சொல்லியதாகவும் ஏன் ஒரு வாரம் கழித்து இந்த அறிவுரையைச் சொன்னீர்கள் என்று கேட்டதற்கு, தனக்கே சக்கரை அதிகம் சாப்பிடும் வழக்கம் இருந்ததாகவும் அதை நிறுத்திவிட்டு தான் அறிவுரை சொல்லவேண்டும் என்பதால் அப்படி செய்ததாகவும் படித்திருக்கிறேன். தானே தவறு செய்துகொண்டு அந்தத் தவறை இன்னொருவரை செய்யாதே என்று சொல்வது குற்றம் என்று சொன்னதாகவும் படித்திருக்கிறேன். (உண்மையா என்று தெரியாது!)

இப்பொழுது ராமகிருஷ்ணர் செய்தது சரியென்று பாரதி செய்தது தவறென்றும் சொல்லிவிடமுடியுமா? ராமகிருஷ்ணர் செய்தது தனிநபர் செய்யக்கூடியது. ஆனால் பாரதி பாடிய விஷயங்கள் சமுதாயத்தை திருத்தப் பாடியவை இல்லையா(இல்லாவிட்டால் சமுதாயம் இப்படி இருக்க வேண்டும் என்ற பாரதியின் கனவுகள்). சமுதாயத்தை தனி ஒருவனால் திருத்தி விடமுடியுமா? அப்படி திருத்த வேண்டுமானால் அந்த தனிமனிதனின் கடமைகள் என்னவாகயிருக்க முடியும் என ஏகப்பட்ட கேள்விகள் மனதிலே தொக்கி நிற்கின்றன.

———————————-

நான் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு திருச்சி சென்றதற்கு சில பல காரணங்கள் வீட்டில் உள்ளவர்களால் சொல்லப்பட்டது. அதில் முதலாவது போனமுறையும் அதற்கு முந்தைய முறையும் ஆஸ்திரேலியா உலகக்கோப்பை ஜெயித்த பொழுது அங்கிருந்ததால் தான் நான் திருச்சிக்கு வந்தேன் என்று சொல்வது சுத்தப் பொய்.

இப்படித்தான் இனிமேலும் உலகக்கோப்பை போட்டிகள் இருக்குமென்றால் ஆஸ்திரேலியாவை டைரக்ட் செமி பைனல் அனுப்பிவிடலாம் ;). கில் கிறிஸ்டின் ருத்ர தாண்டவம் பார்க்க சூப்பராகயிருந்தது. எனக்குத் தெரிந்து கில்’லி செஞ்சுரி அடித்து ஆஸ்திரேலியா தோற்ற மாட்சுகள் மிக மிக குறைவாகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன்.

அந்த அற்புதமான ஆட்டத்தை பார்க்க என்ன தவம் செய்தேனோ??? வரும் நவம்பர் வரையில் ஆஸ்திரேலியாவிற்கு எந்தப் கிரிக்கெட் போட்டியும் கிடையாது :(.

உலகக்கோப்பையில் ஒரு ஆட்டத்தில் கூட தோற்கமாட்டார்கள் என்று நான் குருட்டாம் போக்கில்(வைச்சுக்கோங்களேன்…) நிறைவேற்றிய ஆஸ்திரேலியாவிற்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.

நான் திருச்சியிலும் பெங்களூரூவிலும் நண்பர்களிடம், பான்டிங் இன்னும் இரண்டு உலகக்கோப்பை விளையாடும் வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்கலாம் என்று சொல்லிப்பார்த்தேன். அதற்கு அவர்களோ ஒரேயடியாய் அதற்கு முன்பே பான்டிங் ரிட்டயர்ட் ஆகிவிடுவார் என்று ஒன்றுபோல் சொன்னது ஆச்சர்யம் அளிப்பதாகவேயிருந்தது.

இன்னும் ஒரு உலகக்கோப்பையாவது பான்டிங் விளையாட ACB பிரச்சனை ஒன்றும் செய்யாமல் இருக்கணும். அதே போல் சச்சினின் எல்லா ரெக்கார்டையும் போட்டு உடைக்கணும் ஏன் என்றால் ரெக்கார்டுகள் அதற்காக மட்டுமே விளையாடுபவர்களுக்கு போய்விடக்கூடாது என்பதற்காகத்தான்.

Go Aussie Go!!!

Go Aussie Go!!! – 9 (Finals)

திருச்சியில் இருப்பதால் அதிகம் எழுத முடியவில்லை. இருந்தாலும் இவ்வளவு போட்டிகளுக்கு எழுதிவிட்டு இறுதிக்கு எழுதாவிட்டால் எப்படி எனபதால் இந்தப் பதிவு.

சொல்வதற்கு ஒன்றுமில்லை, இந்த இறுதிப் போட்டி ஒன் சைடட் மேட்ச் ஆகத்தான் இருக்கும் என்பது என் கணிப்பு.

இதற்கு நான் இலங்கை அணியை குறைவாக கணிக்கிடுவதாக ஆகாது. ஆஸ்திரேலியா “பிக்” மேட்ச்களில் மிகச் சிறப்பாக விளையாடுபவற்கள்.

ஆஸ்திரேலியா முதல் பேட்டிங் பிடித்தால் முன்னூறு அடிப்பார்கள், மிகச் சுலபமாக ஜெயிப்பார்கள்.

இலங்கை முதலில் பேட்டிங் செய்தால் 200 ரன் மட்டுமே எடுப்பார்கள்.

இது என் கணிப்பு மட்டுமே. என்னைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியா முதலில் பௌலிங் செய்யவேண்டும்.

Go Aussie Go!!! – 8(Semi Final)

ஒருவழியா உலகக்கோப்பை கிரிக்கெட் அதன் இறுதிக் கட்டத்துக்கு வந்தாச்சு. ஏற்கனவே ஒரு அரையிறுதிப் போட்டி முடிஞ்சு நியூஸிலாந்து வெளியேறிவிட்டது. இன்றைக்கு கடைசி அரையிறுதிப் போட்டி, 8 வருடங்களாக உலகக்கோப்பைப் போட்டிகளில் தோற்காமலும், குரூப் ஸ்டேஜில் சௌத் ஆப்பிரிக்காவை போட்டு புரட்டி எடுத்தும் மனதளவில் பிரகாசமாக இருக்கிறார்கள் ஆஸ்திரேலிய அணியினர்.

மாத்யூ ஹைடன், ஆடம் கில்கிறிஸ்ட், ரிக்கி பான்டிங், மைக்கேல் கிளர்க், அண்ட்ரூ சைமண்ட்ஸ், மைக்கேல் ஹஸ்ஸி போன்ற பலமான பேட்ஸ்மேன்களும். மிகவும் வித்தியாசமான பௌலிங் அட்டாக்குடன் மிகவும் வலுவாகயிருக்கிறது ஆஸ்திரேலியா அணி.

மனதளவில் தளர்ந்து போயே சௌத் ஆப்பிரிக்க அணி இருந்தாலும், செமியிலாவது ஒரு நல்ல போட்டியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். முதல் பேட்டிங்காக இருந்தாலும் சரி, இரண்டாவது பேட்டிங்காக இருந்தாலூம் சரி என்று பின்னிக் கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணியை சௌத் ஆப்பிரிக்கா ஜெயிக்க வேண்டுமானல் They have to play like champions. அவ்வளவுதான்.

ஒரு மாதிரியான போட்டி கூட இல்லாததால ஒவ்வொரு போட்டிக்கும் பதிவு போடணும்ங்கிற கான்செப்ட் கூட உதைவாங்குது எழுதவே ஒன்னும் இல்லை. யாரும் ஆஸ்திரேலியா பக்கத்தில் கூட வரலைங்கிறதால, என்னாத்த எழுத… ஆனாலும் உற்சாகப் படுத்துவதற்காக(உற்சாகப் படுத்திக் கொள்வதற்காக…) இந்தப் பதிவு.

Go Aussie Go!!! – 7

இந்த உலகக்கோப்பையின் ஆரம்பத்தில் இருந்து நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மாட்ச். ஸ்ரீலங்காவைப் போல் ஏப்பை சாப்பையாக ஆடமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். இருவரும் முழு பலத்துடன் ஆடினால் நல்ல மாட்சாகயிருக்கும்.

நியுஸிலாந்திற்கு எதிரான கடைசி சீரியஸ் போட்டியிலும் கூட, ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் திறமையாகத்தான் இருந்தது, கேப்டன்ஸியும், சில வீரர்களும், பவுலிங் அட்டாக்கும் சரியாகயில்லை. ஆனால் இப்பொழுது எல்லாம் பிரகாசமாகயிருக்கும் நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு மிகச் சாதகமான ஒரு மாட்சாகத்தான் இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் சாதாரணமாகவே இவர்கள் இருவரும் விளையாடினால், இந்தியா, பாகிஸ்தான் மாட்ச் பார்ப்பது போல் இருக்கும். தற்போதைய நிலையில் பைனல்ஸ் வருவார்கள் என்று நான் நினைக்கும் அணிகளாகயிருப்பதால். பைனல்ஸ்க்கு முன் மற்ற போட்டியாளர்களின் மனவலிமையைக் குறைக்க நிச்சயம் நினைப்பார்கள் இருவருமே.

ரொம்ப ஆப்டிமிஸ்டிக்கா யோசிச்சாலும் நியூஸிலாந்து ஜெயிக்கயிருக்கும் 5% சான்ஸஸும் அவர்கள் இரண்டாவதாக பேட்டிங் செய்தால் மட்டுமே. அதற்குமே கடினமாகப் போராடவேண்டும். பார்க்கலாம்.

இவர்கள் இருவரும் நன்றாக விளையாடவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.