கணையாழி கடைசிபக்கங்கள்

ஒரு வாரத்திற்கு முன்பு சமீபத்தில் ஆர்டர் செய்திருந்த பதின்மூன்று புத்தகங்கள் வந்து சேர்ந்திருந்தன. பெரும்பாலும் பொதுபுத்தி புத்தகங்கள் வீட்டு மக்களுக்காக, மனுஷங்க படிக்கிற புக்கெல்லாம் நீ வாங்கவே மாட்டியா என்ற கேள்விக்காகவே வாங்க வேண்டாமென்று நினைத்தேன். அதில் கணையாழி கடைசிபக்கங்களும் ஒன்று. புத்தகக்கண்காட்சியிலேயே வாங்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். நான் சென்றிருந்த அன்று வரவில்லை.

என்ன சொல்வது இந்தப் புத்தகத்தைப் பற்றி, கற்றதும் பெற்றதுமின் ஓல்ட் வெர்ஷன். பொதுமக்களுக்காக இல்லாமல் கொஞ்சமே கொஞ்சம்(சில ஆயிரங்கள்) கணையாழி வாசகர்களுக்காக எழுதியதால் கற்றதும் பெற்றதுமைவிட நன்றாகவே வந்திருக்கிறது. மற்றபடிக்கு, சுயபுலம்பல்கள், நேம் டிராப்பிங்கள், ரோடே போடும் அளவிற்கு திறமையிருந்தாலும் ஜல்லியடித்திருப்பது என கற்றதும் பெற்றதுமின் பல விஷயங்களை முன்நாட்களிலேயே செய்திருக்கிறார் சுஜாதா கணையாழி கடைசி பக்கங்களில்.

“சொந்த தங்கையை ஒப்படைக்கலாம் போன்ற என் மூஞ்சியைப் பார்த்துவிட்டு…”, “ஜப்பானிய பத்திரிகைகள் எல்லாமே கணையாழி போல. கடைசிப் பக்கத்திலிருந்து படிக்கிறார்கள்…”, “‘எழுதினால் பிரசுரிக்க ஆள் இருக்கிறது என்று எதையும் எழுதும்’ சலுகை, கடிதம் எழுதினவருக்கும் கிடைத்திருப்பதால் புன்னகையுடன் மன்னிப்போம்”

போன்ற உதாரணங்கள் எல்லாம் போதும் என்று நினைக்கிறேன்.

மனிதர் கருணாநிதியில் ஆரம்பித்து, கமலஹாசன், ராஜிவ்காந்தி என்று பெயர்களை நீளமாக அடுக்குகிறார். கூடவே,

“…இந்தத் தரமான வாசகர் கூட்டத்தைக் கொச்சைப்படுத்தாதே என்று ஆதவன் கோபப்பட…”, “…இந்திரா பார்த்தசாரதி கிரிக்கெட் ஸ்கோர் என்ன என்று கேட்டார்…”, “…என்.எஸ்.ஜே. எனக்கு விஷன் இருக்கிறதா என்று கேட்டார்…”, “…வாசந்தி கணேஷ் வசந்த் கதை கணையாழிக்கு எழுதுவீர்களா? என்றார்…”

பெயர்கள், பெயர்கள் மீண்டும் பெயர்கள். மற்றும் நக்கலாக கடைசி நிறுத்தற்குறி வேறு, “…நண்பர் ஜெயராமன் தன் ஒரு வயது பையனுக்கு ‘தோபார்ளு இன்டலக்சுவல்’ என்று வேடிக்கை காட்ட(ம்) கூட்டம் தொடர்ந்தது…”

மற்றபடிக்கு, அதே பக்கத்தில் இருக்கும்

“…ஒரு இரண்டாயிரம் இன்டலெக்சுவல் வாசகர்களுக்கா, லட்சக்கணக்கான சாதாரண வாசகர்களுக்கா எழுதுகிறான்…”

“‘நீ பிரபலமாயிருக்கிறாய், அதனால் உன்னால் இலக்கியம் படைக்க முடியாது.’ இப்படிச் சிந்தாந்தத்தை நான் அடிக்கடி சந்தித்துவிட்டேன்.”

“…இந்தத் தருணத்தில் சாகாத இலக்கியம் படைக்கப்போகிறேன் என்று கெடிகாரத்தை பார்த்துக் கொண்டு எழுத முடியாது…”

போன்றவைகள் யோசிக்க வைக்கின்றன.

இடையில் Erica Jong ன் The Teacher.

The Teacher stands before the class.
She’s talking of Chaucer.
But the students arent hungry for Chaucer.
They want to devour her.
They are eating her knees, her toes, her breasts, her eyes and spitting out her words
What do they want with words?
They want a real lesson.

She is naked before them.
Psalms are written on her thighs.
When she walks sonnets divde
Into octaves & sestets.
Couplets fall into place
When her fingers nervously toy
With the chalks…

Eat this poem.

சுஜாதா எழுதிய ஒரு சைனீஸ் கவிதை

மன்னாரு மெதுவாக வந்து சேர்ந்தான்
மணி பார்த்தான், உட்கார்ந்தான், படுத்துக் கொண்டான்
சென்னை விட்டுத் திருச்சி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ்
சீக்கிரமே அவ்விடத்தில் கடந்து செல்லும்.

டைம் பத்திரிகையில் வந்த ஒரு வாசகம் தன்னைக் கவர்ந்ததாகச் சொல்கிறார் படித்துப் பார்த்தால் கொஞ்ச நாள் கழித்து தான் உல்டா செய்த அதே வாக்கியம்,

In the future everybody will be famous for at least fifteen minutes.

“தமிழில் போர்னோகிராஃபி இருக்கிறதா என்ன” மனிதர் நிறைய தேடியிருக்கிறார். கண்டும் பிடித்திருக்கிறார்.

“தமிழில் ஆதியிலிருந்தே பார்த்தால் சங்கப்பாடல்கள் செக்ஸ் உணர்ச்சியற்று இருக்கின்றன. சில களவுப்பாடல்களில் உள்ள கலவையைப் பதம் பிரிப்பதற்குள் உயிர் போய் விடுகிறது. திருக்குறளில் காமத்துப்பாலில் உண்மையான காமம் கொஞ்சமே. மற்றவை பெருமூச்சுக்கள், ஊடல், வளை கழல்வது இன்ன பிறவே. தமிழில் ஏகமாகப் பரவிக் கிடக்கிற காவியங்களிலும் பிரபந்தங்களிலும் அவ்வப்போது தோன்றும் பெண்கள் யாவரும்(out of proportion) கொங்கைகளில் ஈர்க்கிடை போகாதாம். இல்லையென்றால் மலைக்குன்றுகளாம். இடை இல்லவே இல்லையாம்(உலோபியின் தருமம்) சமாளிக்கச் சிரமமான பரிமாணங்கள். அருணகிரிநாதர் சில சமயங்களில் Pure Porno.

அருக்கு மங்கையர் மலரடி வருடியும்
கருத்தறிந்து பின் அரைதனில் உடைதனை
அவிழத்தும் அங்குள…
மேலே ‘திருப்புகழில்’ தேடிக்கொள்ளவும்.”

என்று போட்டிருக்கிறது, தேவைப்படுபவர்கள் தேடிக்கொள்ளவும் கண்டுபிடித்தவர்கள் ஒரு பின்னூட்டம் போடவும்.

சரி மனுஷன் சுத்திச் சுத்தி இலக்கியத்தில மாரைத்தான் தேடுறாருன்னு நினைச்சிக்கிட்டே அடுத்த பக்கத்தைத் திருப்பினால். நான் நினைத்ததை ஒரு முப்பத்திரண்டு வருஷத்துக்கு முன்னாடியே கேட்டது மாதிரி அடுத்தப் பக்கத்தில் விளக்கம் தருகிறார்.

“தமிழ் இலக்கியத்தில் போர்னோ என்று நான் தேடுவது முலைகளைப் பற்றிய பாடல்களை இல்லை. ஐம்பெரும்காப்பியங்களிலும் அகத்திலும், புறத்திலும் ஆழ்வார்களிலும் குங்குமம் கழுவின கொங்கைகளுக்குப் பஞ்சமே இல்லை என்பது எனக்குத் தெரியும் நான் தேடுவது இன்னும் கொஞ்சம் Subtle ஆன விஷயம். ஆழ்வார் பாடலிலிருந்தே உதாரணம் சொல்கிறேன்.

‘மையார் கண் மடலாச்சியார் மக்களை
மையன்மை செய்து அவர் பின்போய்
கோய்யார் பூந்துகில் பற்றித் தனிநின்று
குற்றம் பலபல செய்தாய்’

என்பது ஆண்டாள் பாடல்களை விட Better Porno.”

ஏன் அந்த மாரைப் பற்றிய சந்தேகம் வந்ததுன்னா, தமிழ் சிபியில் முலைகளைப் பற்றிய ஒரு இலக்கியக் கட்டுரை நான் படித்த ஞாபகம் இருக்கிறது அதனால் தான் இதைப் போயா தேடினார்னு நினைச்சேன். ம்ம்ம் மனுஷன் பெரிய ஆள்தான்.

“இந்த நூற்றாண்டின் தமிழ் எழுத்திலும் அதிகம், போர்னோ கிடையாது. பாரதியார் இதைத் தொடவில்லை. பாரதிதாசனின் ஓடைக் குளிர் மலர்ப் பார்வைகள் தான் உண்ணத் தலைப்பட்டன. உடல்கள் இல்லை. புதுமைப்பித்தன், கு.ப.ரா, போன்றவர்கள் தலைவைத்துப் பார்க்கவில்லை. ஏன் புதுக்கவிஞர்களும் புது எழுத்தார்களும் கூட இந்த விஷயத்தில் ஜகா வாங்கியிருக்கிறார்கள். தமிழ்நாடனின் காமரூபம் சற்று வேறு ஜாதி. எடுத்துக்கொண்ட செக்ஸை நேராகச் சொல்வதில் எல்லோருக்குமே தயக்கம் இருந்திருக்கிறது. மார்பகம் விம்மித் தணியும், அதற்கப்புறம் என்னடா என்றால் இருவரும் இருளில் மறைந்தார்கள்? ஏன் மறைய வேண்டும்?”

என்னமோ இப்படி ஆரம்பித்து இப்படியே போய்க்கொண்டிருக்கிறது. சரி போதும் கடைசியாக இதைப்பற்றி,

“கற்றதனாலாய பயனென்கொல் கற்றவனைக்
கட்டி அணைக்கா விடின்” இது என் ஜல்லி கிடையாது, தக்ஷினாமூர்த்தி ‘திவ்ய தரிசனம்’ இல் எழுதியதாக சுஜாதா சொன்னது.

மற்றபடிக்கு, நிறைய திரைப்படங்களை அறிமுகப்படுத்துகிறார், அதற்கு மொழி பாகுபாடு கிடையாது. கன்னடா, மலையாளம், தெலுகு, ஒரியா, குஜராத்தி என நீள்கிறது அந்த வரிசை. ஜப்பானுக்கு சென்று வந்ததைப் பற்றி, பாரதியின் சுயசரிதைக் கவிதை பற்றி, Aஹுக்கூவை ஸ்கேலால் அளப்பது பற்றி, மணிப்பிரவாளப் பேச்சைப்பற்றி இப்படி நிறைய விஷயங்கள்.

நிச்சயமாய் முப்பதாண்டுகளுக்கு முன் நிகழ்ந்ததை சுஜாதாவின் கண்கொண்டு நிச்சயமாய்ப் பார்க்கலாம் இந்த கணையாழி கடைசிபக்கங்களில். சுவாரஸியமாய் இருந்தது. எனக்கு. சுஜாதாவின் பேமஸான நக்கல் மொழியுடனும், ஒரு ஹைக்கூ மற்றும் ஒரு பசுவய்யா(சுரா) கவிதையுடனும் முடிக்கிறேன்.

“ஜப்பானில் பத்து நாட்கள் தங்கிவிட்டு சென்னை வந்த போது கஸ்டம்ஸ் அதிகாரிகளையும், எண்ணெய் போடாமல் முனகும் ஏர்போர்ட் கன்வேயரையும் பார்த்த பொழுது ‘திரும்ப ஜப்பான் போகலாமா?’ என்று எனக்குத் தோன்றவில்லை. காரணம் ஜப்பானில் ஜப்பானியர்களால் தான் இருக்க முடியும். இந்திய தேசத்தில் சுபிட்சம், சந்தோஷம் இவற்றுக்கெல்லாம் அர்த்தம் வேறு.

எந்த நாட்டில் மாதம் முப்பது ரூபாய்க்கு வேலைக்காரச் சிறுவன் கிடைப்பான்?

எந்த நாட்டில் நினைத்த மாத்திரத்தில் சுவர்களில் சுதந்திரமாக எழுத முடியும் நம்பர் ஒன் போகமுடியும்?

எந்த நாட்டில் லஞ்சத்தால் பெருமாளையே வாங்க முடியும்?

மேரா பாரத் மஹான்.”

சில ஹைக்கூகள்.

மூங்கில் நிழல் இரவெல்லாம்
மாடிப்படி பெருக்கிற்று
தூசுகள் அகலவில்லை

மரியாதை செலுத்த விரும்பும்பொழுது
பெற்றோர்
இறந்து விட்டனர்

கூந்தல் போர்த்த உடல்
நெய்யும் தறியில்
காஞ்சிப் பட்டு

—————–

பசுவய்யா கவிதை

வேட்டையாடத்தான் வந்தேன்
வேட்டைக்கலையின் சாகச நுட்பங்களை
தாய்ப்பாலில் உறிஞ்சத் தொடங்கினேன்
பின் வில் வித்தை
பின் வாள் வீச்சு
பின் குதிரை ஏற்றம்
பின் மற்போர்
நாளை நாளை என வேட்டை பின்னகர
ஆயத்தங்களில் கழிந்தது என் காலம்
திறந்து வைத்த கற்பூரம் போல
ஆயுளின் கடைசித் தேசல் போல
இனி ஆயத்தங்களைத் தின்று சாகும் என்
முதுமை…
பின்னும் உயிர்வாழும் கானல்…

பெயரில் என்ன இருக்குதுங்க சுஜாதா படங்காட்டல்

எப்பவுமே விகடன்.காம் ஓப்பன் பண்ணினா கற்றதும் பெற்றதும் முதலில் படிக்கிறது வழக்கம். இன்னைக்கு சுஜாதா சொல்லியிருந்த ஒரு விஷயம் சிறிது உறுத்தியது.

ராமானுஜன் என்றால், ராமனின் உடன்பிறப்பு. எனக்குப் பிடித்த பெயர்களில் அது ஒன்று. நான் மிகவும் வியப்பது மூன்று ராமானுஜர்களை! 11-ம் நூற்றாண்டில் வாழ்ந்த, விசிஷ்டாத் வைதக் கருத்துக்களை நிறுவி, ஸ்ரீபாஷ் யம் தந்த ராமானுஜர் அதில் முதல்வர். கணித மேதை ஸ்ரீநிவாச ராமானுஜன் இரண்டாமவர். கவிஞரும், தேர்ந்த மொழிபெயர்ப்பாளருமான ஏ.கே. ராமானுஜன் மூன்றாமவர்….

சொல்லிவிட்டு அவரவர்களைப்பற்றி இரண்டிரண்டு வரிகள் சொன்னவர் கடேசியில் சொன்ன, “ராமானுஜன் என்ற பெயரில் ஏதோ இருக்கிறது!” சொன்னது தான் பெருங்கொடுமை. எனக்குக் கூடத்தான் ராமானுஜன் என்ற பெயரில் கணக்கில் முட்டை மார்க் வாங்கிய சிலரைத் தெரியும். அப்பக்கூட சொல்லுவீங்களோ ராமானுஜன் பெயரில் சில விஷயம் இருக்குன்னு.

என்னவோப் போங்க நல்லாயிருந்தா சரிதான்.

இது பெயரில் என்ன இருக்குதுங்க சுஜாதா, அடுத்தது படங்காட்டல்

ஒரே ரப்சர் பண்ணி இந்த வருட புத்தகக் கண்காட்சிக்கு சென்று கிளப்பிக்கொண்டுவந்த புத்தகங்கள் ஒரு புகைப்படம்.( நன்றி இளவஞ்சி, டிசே – கான்செப்டிற்கு)

அடுத்து வருவது எங்கள் கம்பெனியின் வெளிப்புற அழகு இரவு வேளையில்.


அவார்டுகள் அள்ளிக்கோ – 1

சினிமா

சிறந்த நடிகர்: சூர்யா (கஜினி).

சிறந்த நடிகை: அசின் (கஜினி).

சிறந்த நகைச்சுவை நடிகர்: வடிவேலு (இம்சை அரசன் 23ம் புலிகேசி).

சிறந்த கருத்துக்களை நகைச்சுவையுடன் கலந்தது: விவேக் (பல படங்களில்).

சிறந்த டைரக்டர்: மிஷ்கின் (சித்திரம் பேசுதடி).

சிறந்த ஒளிப்பதிவாளர்: ரவிவர்மன் (வேட்டையாடு விளையாடு).

சிறந்த பாடலாசிரியர்: நா.முத்துக்குமார் (வெயில்).

சிறந்த இசையமைப்பாளர்: யுவன்ஷங்கர் ராஜா (வல்லவன்).

சிறந்த பாடகர்: கார்த்திக் (கஜினி).

சிறந்த பாடகி: பாம்பே ஜெயஸ்ரீ (வேட்டையாடு விளையாடு).

சிறந்த ஆர்ட் டைரக்டர்: செல்வகுமார் (ஈ).

சிறந்த திரைப்படம்: ‘சித்திரம் பேசுதடி’ & தமிழ்; ‘லகே ரஹோ முன்னா பாய்’ & இந்தி; பீஷீஷ்ஸீயீணீறீறீ & ஹிட்லரின் கடைசி தினங்கள் & ஜெர்மன் (ஆங்கில சப் டைட்டில்களுடன்).

சிறந்த பின்னணிக் குரல்: சவிதா.

சிறந்த சினிமா பாடல்: ‘ரகசியமானது காதல்’. படம் & கோடம்பாக்கம். எழுதியவர் & விஜயசாகர்; இசை & சிற்பி.

மிக அதிகம் பாடப்பட்ட சினிமா பாடல்: ‘வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்…’ & கானா உலகநாதன்.

இலக்கியம்

சிறந்த கவிதைத் தொகுப்புகள்:

1. ‘அகி’ & 139 கவிதைகள் & முகுந்த் நாகராஜன், ‘உயிர்மை’, 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை&18.

2. றஞ்சனி கவிதைகள் & றஞ்சனி, இமேஜ் & இம்ப் ரெஷன், 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை&18.

3. சிறந்த தலித் கவிதை & ‘பட்டுப்போன கிறிஸ்துமஸ் மரம்.’ & மோகனப்ரியா; ‘கோடை உமிழும் குரல்.’ & தொகுப்பு: திலகவதி.

4. சிறந்த சிறு கவிதை: யாத்ரீகன் & முனியப்பராஜ்.

‘பழைய மன்னருடன் நகர்வலம்
வந்ததாய்ச் சொல்லப்பட்ட
பாகனற்ற கிழ யானை
பட்டத்து ஒப்பனையோடும்
ஓசையற்ற சலங்கையோடும்
தெருவில் இறந்து கிடந்தது’.

சிறந்த சிறுகதை: ‘மிஸ் மார்ட்டீனின் நாய்க்குட்டி.’ & விமல் குழந்தைவேல். தொகுப்பு: ‘குறளிக் குஞ்சன்.’ வெளியீடு: ‘நிறம்’, அக்கரைப்பாட்டு & 0132400, ஸ்ரீலங்கா (சுனாமி நிதிக்காகத் தன் செல்ல நாய்க்குட்டியை விற்கும் ஆங்கிலேயப் பெண்மணியின் கதை).

சிறந்த அறிவியல் நூல்: ‘இன்னொரு வானம்’ & ஆதனூர் சோழன், சிபி பதிப்பகம், சாந்தி நகர், மதுரை&18.

சிறந்த ஆராய்ச்சி நூல்: புதிய வாஸ்து விஞ்ஞானம், கே.சுப்ர மணியன், வானதி பதிப்பகம், சென்னை&17.

பத்திரிகைகள்

சிறந்த ஸ்பெஷல் இதழ்: ஆனந்த விகடன் 304 பக்க தீபாவளி இதழ்.

சிறந்த புது வரவு: தினகரன் தீபாவளி மலர்.

சிறந்த மாத இதழ்: அமுதசுரபி.

சிறந்த புதிய இதழ்: அம்ருதா.

சிறந்த சிறு பத்திரிகை: இலக்கிய ரசனை.

சிறந்த அறிவியல் காலாண்டிதழ்: அறிவியல் பூங்கா. வெளியீடு: மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச்சங்கம், சென்னை& 4.

சிறந்த பக்தி இதழ்: சமரசம்.

சிறந்த சிறுவர் இதழ்: சுட்டி விகடன்.

சிறந்த பெண்கள் பத்திரிகை: மங்கையர் மலர் & நவராத்திரி ஸ்பெஷல்.

சிறந்த இலவச இணைப்புப் புத்தகங்கள்: அவள் விகடன்.

சிறந்த பேட்டைப் பத்திரிகை: மயிலாப்பூர் டாக்.

சிறந்த ஆங்கில தினசரி: டெக்கான் க்ரானிக்கல்.

சிறந்த வார அனுபந்தம்: சன்டே எக்ஸ்பிரஸ்.

சிறந்த வியாபார தந்திரம்: சன் நெட்வொர்க் (குங்குமம், தினகரன், தமிழ் முரசு போன்றவற்றுடன் இலவச பொருட்கள் தந்தது).

சிறந்த அட்டைப் படம்: சானியா மிர்ஸா, குங்குமம்.

சிறந்த கார்ட்டூன்: கேசவ் & தி இந்து.

சிறந்த கேள்வி&பதில்கள்: மக்கள் களம், நக்கீரன்.

சிறந்த வாசகர்: அயன்புரம் சத்தியநாராயணன்.

கர்னாடக சங்கீதம்

சிறந்த பாடகர்: சஞ்சய் சுப்ரமண்யம், டி.எம்.கிருஷ்ணா.

சிறந்த பாடகி: பாம்பே ஜெயஸ்ரீ, நித்யஸ்ரீ.

சிறந்த இசைக் கலைஞர்: பிரசன்னா (கிடார்), யு.ஸ்ரீனிவாஸ் (மாண்டலின்).

சிறந்த புதிய பாடகர்: குருசரண்.

சிறந்த புதிய பாடகி: சுபிக்ஷா.

கிரிக்கெட்

சிறந்த புதியவர்: வெய்ன் ப்ராவோ, வெஸ்ட் இண்டீஸ்.

சிறந்த கேப்டன்: மஹேளா ஜெயவர்த்தனா.

மாஸ்டர் ப்ளாஸ்டர்: க்றிஸ் கேய்ல், ரிக்கி பாண்டிங்.

சிறந்த பௌலர்: ஷேன் வார்னே.

சிறந்த மறுபிறவி: சவுரவ் கங்குலி, சனத் ஜெய சூர்யா.

மைதானத்துக்கு வெளியே நிறையச் சம்பாதித்தவர்: டோனி.

சிறந்த ரன் துரத்தல்: தென் ஆப்பிரிக்கா & ஆஸ்திரேலியா (400&க்கு மேல்).

இந்த ஆண்டுக்கான சிறப்பு இடது கைப் பரிசுகள்…

1. தொலைக்காட்சி மெகா சீரியல்களில் சந்து கிடைக்கும்போதெல்லாம் ஆ… ஆ… பாடும் பெயர் தெரியாத பாடகர்களுக்கு ஒரு பாக்கெட் ஸ்ட்ரெப் சில்.

2. சங்கீதா ராஜேஸ்வரன் & ‘டைலாமு டைலாமு’ பாடலுக்காக… தமிழண்ணலின் ‘நல்ல தமிழில் பேசுவோம்’ புத்தகம்.

3. மெரீனா கடற்கரையில் சிமென்ட் பெஞ்சுகளை இரும்புக்காக உடைத்து வைத்திருக்கும் குடிகாரர்களுக்கும், அவற்றை ஒரு வருஷமாகியும் ரிப்பேர் செய்யாத அதிகாரிகளுக்கும் கடப் பாரை பரிசு (யார் ரிப்பேர் செய்வது… கார்ப்பரேஷனா, போக்குவரத்துக் காவல்துறையா என்று பட்டிமன்றம் நடந்து கொண்டு இருக்கிறது).

4. ‘வேட்டையாடு விளையாடு’ தமிழ்ப் படத்தில் மிக அதிக எண்ணிக்கையில் கொலைகள் செய்ததற்காக (18 உடல்கள் கணக்கிட் டேன்) இயக்குநர் கௌதம் மேனனுக்கு, ஒரு பொம்மைத் துப்பாக்கி. சிறப்புப் பரிசு ஹாரிஸ் ஜெயராஜுக்கு & இதே படத்தில் இடைவிடா மல் உரக்க ரீ&ரிக்கார்டிங் வாசித்ததற்காக, இரண்டு காதுகளுக்கும் பஞ்சு.

5. மிக அதிகம் பெண்களை அழ வைத்ததற்காக சிரபுஞ்சி அவார்டு ‘செல்வி’ ராதிகா சரத்குமாருக்கு. சன் டி.வி. 480 எபிசோடுகளில், டைட்டில் தவிர மூன்று முறை சிரித்திருக்கிறார்.

6. இந்திய கிரிக்கெட் அணி எத்தனை விதத்தில் தோற்க முடியுமோ அத்தனை விதத்திலும் தோற்றதற்கு மிக அகலமான கைக்குட்டை.

7. பஞ்சாப் ஹைகோர்ட், நவ்ஜோத் சித்து 1988&ல் செய்த கொலைக்கு 2006&ல் தண்டனை தந்ததற்கு & ஓடாத கடிகாரம்.

8. ஷோயப் அக்தர், ஆசிப் இருவருக்கும் தண்டனை தந்தது போல் பாவ்லா காட்டியதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு & முஷாரப்புடன் தனிப் பட்ட விருந்து.

9. காசாசை காட்டி நம் வீரர்களின் ஆட்டத்தைக் கெடுத்ததற்காக இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு & ஒரு பாக்கெட் லாலிபாப்!

—————–

PS: அடிக்கப்போறது ஜல்லின்னு ஆய்டுச்சு, அப்புறம் காப்பி பேஸ்ட் என்ன சொந்த சரக்கென்ன… இந்த வருஷ சுஜாதா அவார்டுகளின் பட்டியல்

அவார்டுகள் அள்ளிக்கோ

தொலைக்காட்சி:

சிறந்த தொலைக் காட்சி நிகழ்ச்சி: ஜெயா டி.வி. லட்சுமியின் ‘அச்சமில்லை… அச்ச மில்லை’. (மதுரை சித்திரைத் திருவிழாவில், ஆறு வயதில் காணாமல் போய், குஜராத்துக்குக் கடத்தப்பட்டு, அங்கே திருடக் கற்றுக் கொடுக்கப்பட்டு, தப்பித்து வந்து, கருணாலயத்தில் ஏற்றுக்கொள்ளப் பட்டு, எட்டு வருஷம் கழித்து, தொலைக் காட்சி நிகழ்ச்சியில் பார்த்த பெற்றோர் களுடன் சரவணனைச் சேர்த்துவைத்த உள்ளம் உருக்கிய நிகழ்ச்சி).

சிறந்த பேட்டிகள்: காபி வித் அனு (விஜய் டி.வி.) & சிவமணி, மாண்டலின் ஸ்ரீனிவாஸ் இருவருடனும் பேட்டி; மற்றும், சங்கீத வித்வான்களுடன் அனு ராதாவின் பேட்டிகள் (பொதிகை). குறிப்பாக, டி.கே. பட்டம்மாளுடன்!

தொலைக்காட்சியில் சிறந்த அறிவியல்: கியான் தர்ஷன்.

சிறந்த ஆலய தரிசன வர்ணனை: சுகிசிவம் & நவக்கிரகத் தலங்கள் (பொதிகை).

சிறுவர் தொலைக் காட்சி: போகோ.

சிறந்த நடிகர்: வேணு அரவிந்த் & ‘செல்வி’ (ப்ராம்ப்டிங்குக்காகக் காத்திராத சமயங்களில்).

சிறந்த நகைச்சுவைத் தொகுப்பு: சிட்டிபாபு&அர்ச்சனா காமெடி டைம் (சன் டி.வி.) காமெடியுடன் ‘உள்ளே & வெளியே’ என்று கொஞ்சம் பொது அறிவும் தந்ததற்காக!

சிறந்த கவனக் கலைப்பு: மந்த்ரா பேடி & செட் மேக்ஸ் (கிரிக்கெட் இடைவேளை களில் ரவிக்கையைத் தவிர, விமர்சனத்தை யார் கவனித்தார்கள்?).

சிறந்த நகைக் காட்சி: ‘தங்கவேட்டை’ கனிஹா (சன் டி.வி.)

புடவை ஜாக்கெட்: குஷ்பு ஜாக்பாட் (ஜெயா).

பேச்சு வெள்ளம்: ‘நீயா & நானா?’ (விஜய் டி.வி.)

சிறந்த ரேடியோ

எஃப்.எம்.கோல்டு, ரெயின்போ (கர்னாடக சங்கீதம், அறிவியல், ஆரோக்கியக் குறிப்பு களையும் சினிமா பாட்டுகளுடன் சேர்த் துக் கொடுக்கும் பிடிவாதத்துக்குப் பாராட்டாக, மற்ற அரை டஜன் எஃப்.எம். சேனல்கள் எதுவும் ஒன்றோடொன்று வேறு படாமல், சளைக் காமல்… ‘இச்சுத்தா… இச்சுத்தா’, ‘கல்யாணம்தான் கட்டிக் கிட்டு…’ பாடல்களைத் தந்துகொண்டு இருந் தாலும் ரேடியோ மிர்ச்சி கேட்க முடி கிறது).

அரசியல்

சிறந்த புதுவரவு: விஜயகாந்த்.

சிறந்த பேச்சாளர்: வைகோ.

சிறந்த தேர்தல் தந்திரம்: கலைஞரின் கலர் டி.வி, கையளவு நிலம்.

சிறந்த தீர்மானமின்மை: சரத்குமார் (இப்போது எ.மு.க?).

சிறந்த புள்ளி விவரங்கள்:

ஜெயலலிதா.

சிறந்த செயற்கைப் பேட்டிகள்: ரபி பெர்னார்ட் (ஜெயா).

சிறந்த ‘தமிழ் நாட்டு’ அமைச்சர்: தயாநிதி மாறன்.

சிறந்த மத்திய அமைச்சர்கள்: லாலு பிரசாத், ப.சிதம்பரம்.

சிறந்த மாநிலம்: உத்ராஞ்சல்.

சிறந்த ‘புலிவருது’: பிரகாஷ்காரத் (சி.பி.எம்.)

விளம்பரம்

சிறந்த நேரடி விளம்பரம்: சரவணா செல்வரத்தினம் தங்க நகை & ‘சட்டுபுட்டுனு பழசை மாத்துங்க.’ மற்றும், ஆரெம்.கேவி புடவை.

சிறந்த மறைமுக விளம்பரம்: ‘வெடா’ ஆங்கில வகுப்பு (ஆங்கிலப் பாட்டு பாடிக் கொண்டே வீடு பெருக்கும் வேலைக்காரி).

சிறந்த விளம்பர நகைச்சுவை: எம்.டி.ஆர். குலாப்ஜாமூன் (எத்தனை பேர் ஓடினாங்க? ரெண்டு).

மிகைத் திலகம் அவார்டு: ப்ளூ ஸ்டார் (ஒரே அறையில் எஸ்கிமோ, ஒட்டகம்).

தின்பண்டம்

சிறந்த பலகாரம்: முருகன் இட்லி.

சிறந்த இனிப்பு: முந்திரிப் பருப்பு கேக், ஸ்ரீ மிட்டாய்.

டயாபடீஸ்காரர்களுக்குச் சிறந்த இனிப்பு: டிஸைர் , சுந்தர் கெமிக் கல்ஸ்.

காரமில்லாத சாப்பாடு: மாரீஸ் ஓட்டல்.

காபி: சரவணபவன்.

பிற..

தமிழர்கள் இந்த ஆண்டில் மிக அதிகம் பயன்படுத்திய சொல்: சூப்பர்!

சிறந்த ‘மேக் ஓவர்’: ரஜினிகாந்த் ‘சிவாஜி.’

சிறந்த நகைச் சுவையாளர்: தமிழக மாநிலத் தேர்தல் அதி காரி சந்திரசேகர்.

சிறந்த சாதனம்: ஆப்பிள் ஐபாட்.

சிறந்த டெக்னாலஜி: தமிழ் எஸ்.எம்.எஸ். ஏர்செல் & முத்து நெடுமாறன்.

மிக அதிகம் அனுப்பப்பட்ட எஸ்.எம்.எஸ்: engagement ring; wedding ring; suffering!

—————–

PS: அடிக்கப்போறது ஜல்லின்னு ஆய்டுச்சு, அப்புறம் காப்பி பேஸ்ட் என்ன சொந்த சரக்கென்ன… இந்த வருஷ சுஜாதா அவார்டுகளின் பட்டியல்

நெருடாபுருடா

சுஜாதா மீண்டும் தன்னுடைய வழமையைத் தொடங்கியிருக்கிறார்.(சரிதானா வாக்கியம்.)

“அலைகள்
பூக்கள்
குழந்தை
நண்பர்கள்
கவிதையும்கூட
அவ்வப்போது
அலுத்துப்போகிறது’

என்று சொல்லும் கனிமொழி, சென்ற தேர்தல் பிர-சாரத்தின்போது தமிழகமெங்கும் தன் தந்தையுடன் சுற்றுப்பயணம் செய்தபோது, மக்கள் முகங்களில் கண்ட ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் பார்த்துப் பிரமிப்பாக, ஏன் பயமாகக்கூட இருந்தது என்கிறார். கொதிக்கும் மத்தியான வெயிலில், தலைவரின் ஒரு செகண்ட் தரிசனத்துக்காகக் காலையிலிருந்து காத் திருக்கும் இளைஞர்களையும், புதுசணிந்து வாசலில் வந்து நிற்கும் பெண்களையும் கவனித்து, ஒரு நீண்ட கவிதையாக எழுதியிருக்கிறார். படித்துப் பார்த்தேன். அலுக்கவில்லை.

அரவிந்தன் வழக்கம் போல் அட்டை போட்டு, ‘Bill Bryson-ன் ‘A Short History of Nearly Everything’ என்ற புத்தகத்தை அன்பளித்தார். ஸபானிஷ் மொழியில் இளங்கலை படிக்கிறார்.

‘தமிழ்க் கவிதைகளை ஸ்பானி-ஷில் மொழிபெயர்ப்பது எளிது. அங்கிருந்து இறக்குவதுதான் கஷ்டம். அதில் reflexive verbs ஏராளம்’ என்றார்.

இப்படி யாராவது உண்மை-யாகவே ஸ்பானிஷ் படித்து, தமிழில் உலவும் நெருடாபுருடாக்களைத் தெளிவாக்கலாம்.”

எல்லாருக்கும் புரிதா இந்த நெரிதா மேட்டர். – இது நான்.

மொத்தம் பதினேழு ஓட்டுக்கள் ஆச்சர்யமாகயிருக்கிறது, ஒரு நபர் தனக்கு அந்தக் கதை சுத்தமாகப் புரியவில்லையென்று சொன்னதும் நினைவில் வருகிறது. ஓட்டுப்போட்ட அத்தனை நபர்களுக்கும் நன்றி.

முன்பு தமிழோவியத்திற்காக எழுதிய செகுவாரா பற்றிய குறிப்புகளையும் சேர்த்து.

என்ன ஒரு தொடர்பு, செகுவாராவிற்கு பாப்லோ நெருதாவை பிடிக்குமாம். அதிகம் படிக்கவும் செய்வாராம். ஆனால் பாப்லோ நெருதா ஒரு பாடிஸ்டாவின் ஆதரவாளராம். வேடிக்கை….

———————–செகுவாரா—————————

எனக்கு எப்பொழுதுமே ஒரு விஷயம் எப்படி எனக்கு தெரியக்கிடைத்தது என்பதனை யோசித்து ஒருவாறு உறுதிசெய்து கொள்வேன். அதாவது முதன் முதலில் எனக்கு செகுவாராவை தெரிந்ததெப்படி என்பதைப் போன்ற கேள்விக்கு பதில் தெரிந்து கொள்ள சில மாலை நேரங்களை இழப்பதைக் கூட அனுமதிப்பேன் இப்படித்தான் ஒருமுறை செகுவாராவை எனக்கு எப்படி தெரியவந்தது என யோசித்துக் கொண்டிருந்தேன். ஆரம்பக்காலத்தில் இருந்தே கொஞ்சம் அமேரிக்கா என்றால் அலர்ஜி அதன் ஒரு பக்கமாய் தெரிந்து கொண்ட கியூபா நாட்டு சரித்திரமும் அதன் பின்ணணியில் இருந்த பிடல் காஸ்ட்ரோவும், செகுவாராவும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள்.

த பைசைக்கிள் டைரிஸ் படம் பார்ப்பதற்கு முன்பே கொஞ்சம் அறிமுகம் இருந்தது. என்றாலும் எப்படி த ப்யூட்டிபுல் மைண்ட் பார்த்தபின் ஜான் நேஷ்ஷைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எழுந்ததோ அதைப்போல் இந்தப் படம் பார்த்தபின்னர் செகுவாராவைப்பற்றி தெரிந்து கொள்ள விரும்பினேன். சன்டிவியின் டாப்டென் மூவிஸில் சொல்வதைப் போல் இந்தப் படத்தை ஏற்கனவே ஏகத்திற்கு அலசிவிட்டதால் நேராய் விஷயத்திற்கு வருகிறேன்.

உலகம் முழுவதும் இப்பொழுதெல்லாம் புரட்சி என்ற சொல்லுக்கு அர்த்தம் கற்பிக்க முயலும் எல்லோரும் உபயோகப்படுத்தும் ஒரு வார்த்தை அல்லது ஆள் செகுவாரா(சேகுவாரா – ஆரம்பத்தில் இருந்து அப்படியே பழகிவிட்டேன் தவறிருந்தால் மன்னிக்க.) ஆனால் இதற்கெல்லாம் அவர் தகுதியானவர் தானா? உலகத்தின் எல்லா மூலைகளிலும் விடுதலைக்கான போர் என்பது நடந்து கொண்டேயிருக்கிறது. ஒருவருக்கு விடுதலைப்போராகப்படும் விஷயம் மற்றவருக்கு வேறுவிதமாகவும் இருக்கிறது. அப்படியிருக்க எங்கோ ஒரு மூலையில் இருக்கும் கியூபாவின் வெற்றிகரமான விடுதலையில் பங்கு கொண்டதற்காக இவருக்கு உலக அரங்கில் இருக்கும் மரியாதை இவருக்கு உரித்தானதுதானா? அப்படியென்ன சாதனையை செய்துவிட்டார் செகுவாரா? கியூபாவைத் தவிர்த்து அவர் போராட்டத்தில் இறங்கிய பொலிவியா மற்றும் காங்கோவில் அவருடைய போராட்டம் தகர்க்கபட்டது மட்டுமல்லாமல், அவர் உறுதியாக நம்பிக்கொண்டிருந்த அவர் வகையான கொரில்லாப் போரும் தோற்றுப்போனதுதானே. பின்னர் எந்தவகையில் அவரை உலகம் மிகப்பெரும் போராளியாக கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

இந்தக் கேள்விக்களுக்கான விளக்கங்களைத் தேடி அலைந்த சமயங்களில் எனக்கு கிடைத்த அல்லது நான் தெரிந்து கொண்டதாய் நினைக்கும் சில குறிப்புக்களை உங்களுக்கு கொடுக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரையில் மட்டுமல்ல உலக அரங்கிலும் கியூப நாட்டு அதிபர் பிடல் காஸ்ட்ரோவைப் போன்றே கம்யூனிஸவாதியாக தவறாக கருத்தில் கொள்ளப்பட்டவர் செ, உண்மையில் செகுவாரா கம்யூனிஸ்டா என்றால் நிச்சயம் கிடையாது இதை அவரது மனைவியின் வார்த்தைகளிலும் இன்னும் ஏன் பிடல் காஸ்ட்ரோவின் வார்த்தைகளில் இருந்துமே அறிந்து கொள்ளலாம். ஆனால் இங்குதான் நாம் செகுவாராவின் வாழ்க்கையை நன்றாகக் கவனிக்க வேண்டும்.

கியூபா செகுவாராவின் சொந்தநாடு கிடையாது, அவர் அர்ஜென்டினாவில் பிறந்தவர். அந்த நாட்டில் போராடிக் கொண்டிருந்தவர்கள், அவருக்கு வேறு எந்தவிதத்திலும் உறவும் கிடையாது. ஆனால் தனது மிகப்பிரபலமான லத்தீன் அமேரிக்க பைக் பயணத்தில் அவர் கண்டுகொள்ளும் மக்களின் இன்னல்கள் செவின் மனதை பாதிக்கின்றது. மக்களுக்காக போராடுவதற்காக செகுவாரா களத்தில் இறங்குகிறார். இன்னுமொறு விஷயம், செகுவாரா இளம் பிராயத்திலிருந்தே ஒரு ஆஸ்துமா நோயாளி.

இப்படி செகுவாரா தன்னுடைய போராட்டத்தை மக்களுக்காகத் தொடங்கியதால் தான், கியூபாவில் கிடைத்த வெற்றிப் பின்னர் கிடைத்த அரச உத்தியோகத்தை விடவும் மீண்டும் மக்கள் போராட்டத்தை உற்சாகமாய்த் தேர்ந்தெடுக்க உதவியது. கியூபாவின் விடுதலைப் போருக்குப் பின்னர், அந்த நாட்டின் இரண்டாவது மிகப்பெரும் தலைவராக இருந்து வந்த செகுவாராவிற்கும் முதலாவதான பிடல் காஸ்ட்ரோவுக்கும் சித்தாந்தந்தகளின் அடிப்படையில் சில கருத்துவேறுபாடுகள் இருந்துவந்தது. என்னதான் கம்யூனிஸ ரஷ்யாவின் உதவியால் மட்டுமே இயங்கக்கூடிய நிலையில் கியூபா இருந்தாலும். விடுதலைக்குப் பின் நேரடியாய் கியூபாவை கம்யூனிஸ நாடாக மாற்றுவதில் இருந்த பிரச்சனைகளை செகுவாரா உணர்ந்திருந்தார், மக்களுக்கு அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை முதலில் செய்து விட்டுத்தான் அவர்களை கம்யூனிஸ்ட்களாக மாற்றவேண்டும் என்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்துவந்தார்.

கியூபன் மிஸைல் கிரைஸில் எனப்படும், ரஷ்யாவின் அணுஆயத ஏவுகணைகள் கியூபாவில் கொண்டு வந்து வைத்திருந்து அமேரிக்காவை அலறடித்ததில் செகுவாராவின் பங்கு அபரிமிதமானது. ஒரு பேட்டியில் அந்த ஏவுகணைகளை இயக்கும் வாய்ப்பும் அனுமதியும் இருந்திருந்தால் (அவரிடம்) அந்த ஏவுகணைகள் அமேரிக்காவின் மீது நிச்சயமாய் வீசப்பட்டிருக்கும் என்று சொன்னவர் செ. அப்பொழுது மிகப்பிரபலமான ஒன்றாக பேசப்பட்டு வந்த மாவோயிஸத்தை (ரேபிட் இன்டஸ்டிரியலைஷேஷன்) கியூபாவில் நடைமுறைப்படுத்த நினைத்தார் செகுவாரா. ரஷ்யாவோ தங்களுடைய கம்யூனிஸ முறைகளை நடைமுறைப்படுத்துமாறு அவர்கள் காஸ்ட்ரோவை வற்புறுத்தினர். உண்மையில் ரஷ்யா மற்றும் சீனாவிற்கிடையேயான பிரச்சனை கியூபாவிலும் செகுவாராவால் நீண்டது.

இந்தப் பிரச்சனையால் தான் செகுவாரா கியூபாவில் இருந்து வெளியேறி காங்கோவிற்கு சென்றாரர் என்றாலும், பிடல் காஸ்ட்ரோவின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, கியூபாவிலேயே தன் வாழ்நாள் முழுவதையும் சுகமாய்க் கழித்திருக்க முடியும். அது மட்டுமில்லாமல் எந்த விதமான் ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் இருந்தவர் செகுவாரா. (பாடிஸ்டாவின் ஆர்மி தவிர்த்த ஆட்களையும் கொன்றார் என்பதற்கான காரணங்கள் வேறுஉண்டு.)

ஒரு மருத்துவராக வாழ்க்கையைத் துவங்கி, போராளியாகி அதில் வெற்றியும் பெற்று, அந்த நாட்டின் இரண்டாம் பெரும் தலைவராகவும் இருந்தவருக்கு மீண்டும் போராளியாக மாற வேண்டிய கட்டாயம் நிச்சயம் இல்லைதான். அதையும் மீறி மக்களுக்குக்காக போராளியாக முடிவெடுத்து அந்த போராட்டத்திலேயே உயிரையும் மாய்த்துக் கொண்டவர் செகுவாரா. அதற்குப் பின்னால் இருந்த அமேரிக்க தலையீட்டை மறைக்க முடியாது. தனியாளாக (சிறிய கும்பலுடன்) அமேரிக்க ஆதரவு பொலிவிய ராணுவத்தை எதிர்த்து போராடும் நம்பிக்கையை அவருக்கு அளித்தது கியூப விடுதலைச் சரித்திரம். அதைப் பொறுத்தவரையில் ஒரு இடத்தில் நடந்தது இரண்டு இடங்களில் நடக்கவில்லை அவ்வளவே. ஆனால் இன்று பொலிவியாவின் ஆட்சியில் நடந்த மாற்றம் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் செகுவாரா விட்டுச்சென்ற கொரில்லா யுத்தத்தின் காரணத்தாலே.

இன்றும் கியூபாவை அடக்கிவிடத் துடிக்கும் அமேரிக்காவிற்கும், அது பிடல் காஸ்ட்ரோ உயிரோடு இருக்கும் வரை நடக்காது என்பது தெரிந்துதான் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் செகுவாராவின் பேருக்கும் புகழுக்கும் முழுமையான தகுதியுடையவர் அவர்.

Credits, Vikatan.com, Tamiloviam.com.

சுஜாதாவும் என் கதைக்கான சில விளக்கங்களும்

தொடர்கதை தொடரா வந்தா படிக்கிறதில்லைன்னு ஒரு முடிவில் இருந்தேன், ஆனால் வாத்தியார் முடிவை மாத்த வைச்சிறுவாரு போலிருக்கு. ஆனால் அந்தக் காலத்தில் இருந்த அளவிற்கு கணேஷ் வசந்த் கிரேஸ் இப்ப இல்லைங்கிறது உண்மை. பிரகாசமா மெக்ஸிகோ சலவைக்காரியுடன் ஆரம்பித்திருக்கிறார்.

தேர்தல் முடிஞ்சிருச்சு. என்னமோ நான் நினைச்சது நடக்கலை, கலைஞர் வருவார்னு தெரியும் ஆனால் தனியா வருவார்னு நினைத்தேன். ஒரு விதத்தில் ரோசாவசந்த் எழுதியிருந்ததில் எனக்கும் உடன்பாடு உண்டு. இதே ஜெயலலிதா பதவிக்கு வந்திருந்தால் இரண்டு நாளைக்கு சோறு தண்ணீர் இறங்காது. இதை நான் போனமுறை உணர்ந்திருக்கிறேன். ஆனால் காரணமெல்லாம் தெரியாது. மனசு ஏனோ அலைபாயும். இதை நான் ஆரம்பக்காலங்களில் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் தோற்றாலும் உணர்ந்திருக்கிறேன்.

எனக்கு பெரும்பாலும் தேன்கூடு நடத்துவதைப்போன்ற போட்டிகளில் விருப்பமிருந்ததில்லை, மக்களை தேர்ந்தெடுக்க சொல்லும் இதுபோன்ற போட்டிகளில் இருக்கும் குழப்பம் எனக்கு பிடித்ததில்லை. ஆனால் கொஞ்ச நாளாகவே மனதிற்குள் சுற்றிக்கொண்டிருந்த ஒரு விஷயத்தை எழுத கிடைத்த வாய்ப்பாக இதை நினைத்தேன். அதனால் தான் எழுதினேன். சிலர் அந்தக் கதையில் சில பாதிப்புகள் இருப்பதாக சொன்னார்கள். நான் பாதிப்புகள் இல்லாமல் இருப்பதற்காக பெரும்பாலும் உட்கார்ந்து திருத்துவதில்லை. என்னைப்பொறுத்தவரை, எந்த கதையின் தாக்கமும் இல்லாமல் தான் எழுதினேன்.

எங்கள் கம்பெனியின் இமெயில் முகவரியில் இருந்து ஒரு கடிதம் வந்திருந்தது, இதுபோல் உங்கள் ப்ளாக்கை படிப்பேன் தற்சமயம் தான் தெரிந்தது நீங்கள் இங்கே வேலை செய்கிறீர்கள் என்று சந்திக்கலாமா என்று கேட்டு. கேட்டு வந்த கடிதம் எழுதியவர், ஒரு ப்ளோர் மேலே தான் உட்கார்ந்திருந்தாலும் இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏற்கனவே ஞானசேகர் என்ற ஆர்இசி யில் படித்த மாணவர் ஒருவர் என் கம்பெனியில் இருந்து தமிழில் வலைபதிகிறார். சிலசமயம் நாங்கள் சந்தித்து வலைபதிவு நிலவரங்களை பேசுவதுண்டு. (புனே வலைபதிவர் வட்டம்.)

இரண்டொறு நபர்களை உள்ளே இழுத்துவிட்டேன், ஆனால் அவர்கள் தமிழ்மணத்தைப் பற்றி கேட்கும் சில கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் கட்டாயப்படுத்தாமல் விட்டுவிட்டேன். அதே தேர்தல் 2060 தலைப்பிற்கு ஒரு நகைச்சுவை கதை எழுதலாமா என்று யோசித்து வருகிறேன். அவ்வளவு பிரகாசமாக வராதென்று தெரியும் ஆதலால் தற்போதைக்கு விட்டு வைக்கிறேன்.

சுஜாதாவை கடத்தப்போறேன்

பெர்லின் – ஜெர்மனி

“சுஜாதாவை கடத்தப்போறோம்**.”

மோகன் சொன்னதும் வந்தியின் முகத்தில் வலது புருவம் உயர்ந்ததை தவிர வேறு எந்த உணர்ச்சி மாற்றமும் நிகழவில்லை.

“என்ன பிளான்? ”

“அதே பழைய பிளான்தான்.”

“ம்ம்ம்… சொல்லு.”

“வழக்கம் போல நம்ம வேலையெல்லாம் முடிஞ்ச கடைசிநாள், கிளம்பறதுக்கு இரண்டு மணிநேரம் முன்னாடி, கடத்தப்போற இடம் கடற்கரை, அரைமணிநேர வேலை, வேலை முடிஞ்சதும் மூணு மணி நேரத்துக்கு ஸ்லீப்பிங் டோஸ் கொடுத்துட்டு கிளம்புறோம். அதுவும் தேவைப்பட்டாத்தான்.”

“வெப்பன்ஸ்?”

“ஒரு பிஸ்டல், இம்போர்ட்டட் மாஸ்க், ஒரு கார்.”

“மற்றபடி…”

“இந்த முறை ரொம்ப தூரம் போகமுடியாது, எந்த இடமும் வேண்டாம், அதனால நோ புக்கிங், எல்லாமே காருக்குள்ள தான்.”

“காருக்குள்ளயா?”

“ஆமாம் காருக்குள்ளத்தான். ஓகே டன். இப்ப உன்நேரம். நெகட்டிவ் கொஸ்ஸின்ஸ். ”

“முதல் கேள்வி எழுத்தாளர் சுஜாதாவைக் கடத்தி என்ன செய்யப்போற. பணம்ங்ற பேச்சுக்கே இடம் கிடையாது. நம்மக்கிட்ட இல்லாத பணமா. வேற என்னதான் ரீஸன். ”

“கொஞ்சம் கேள்வி கேட்கணும்.”

“எதைப்பத்தி?”

“கடவுளைப்பத்தி.”

“இதை கடத்திட்டு வந்துதான் கேட்கணுமா? நேரிலே போய்க்கேட்டா ஆகாதா. அவரும் நம்ம
ஆளுதானடா. ”

“என்ன ஐயங்கார்னு சொல்றியா.”

“அதில்லைடா, அன்னிக்கு படிக்கலை ‘யாருப்பா அது மைக்ரோசாப்ட் நாங்கல்லாம் லினக்ஸ்’னு ஒரு ஆனந்தவிகடன்ல. நாமளும் லினக்ஸ்னு சொல்லுவோம். நம்ம பேக்ரவுண்டையும் சொல்லுவோம். நிச்சயமா பேசுவாருடா. அப்ப கேளு உன் கேள்வியெல்லாம். ”

“அப்பிடிப்போனா ஒருவேளை அவங்க சொந்தக்காரங்க இருக்கலாம். இல்ல உதவியாளர்ன்ற பேர்ல ஒருத்தராவது இருக்கலாம், அவங்களுக்காக அவர் தன்னோட நிலையை மாத்திச் சொல்லலாம் இல்லியா. அதுனால நம்ம இடத்துல தனியா வைச்சிக்கேட்டா சொல்லுவார்ல. நாமயென்ன மிரட்டப்போறமா இல்ல வேற எதாவது பண்ணப்போறமா. அழகா உட்காரவைச்சி கேட்கப்போறோம். ”

“அந்தக் கேள்விக்கு பதில் சொல்லமாட்டேன்னுட்டார்னா?”

“அவர்க்கிட்ட கேட்க கேள்விக்கா பஞ்சம். லினக்ஸப்பத்தி, ழ இயக்கத்தைப்பத்தி,
மைக்ரோசாப்ட், பில்கேட்ஸ், கமல், சங்கர், மணிரத்னம், அவரோட பேரன், இன்கம்டாக்ஸ், மேஜை நாற்காலிகள், க்வாண்டம், ரிலேட்டிவிட்டி, ஐன்ஸ்டீன், வெண்பா, கட்டறை கலித்துரை, ராமானுஜர், அர்த்த சாஸ்திரம், சாண்டில்யன், நாலாயிர திவ்ய பிரபந்தம், கொஞ்சம் டயாபடீஸ், நிறைய பைபாஸ் சர்ஜரி இப்பிடி எவ்வளவோயிருக்கு முக்கியமா அந்த ஒரு எழவும் தெரியாத ஓட்டிங் மிஷினைப்பத்தி. ஆனா ரொம்ப முக்கியம் கடவுள் பத்தியது தான்.”

“கடவுளைப்பத்தியென்ன கேட்கணும்.”

“எல்லா விஷயத்திலும் முடிவா ஒரு கருத்தை சொல்பவர் கடவுள் விஷயத்தில் மட்டும் ஒரு முடிவுக்கே வரமாட்டேங்குறார். அவர மாதிரி ஜினியஸ்ஸெல்லாம் கடவுள் இல்லைன்னு ஒத்துக்கிட்டா. சொல்லி வாதாடுறதுக்கு ஒரு ஆள் கிடைப்பாருல்ல. தனக்கு புரிந்த, தெரிந்துகொண்ட விஷயத்தை சுஜாதா எல்லார்க்கும் சொல்வார்னு நான் உறுதியாக நம்புறேன். அதனால தான் கேட்கிறேன். எவ்ளோபேர் கேட்டிருக்காங்க தெரியுமா. எங்ககிட்ட உன் நாத்திகத்தையெல்லாம் பேசாதே. சுஜாதா, சுஜாதான்னு சொல்றியே அவரே கடவுளை நம்புறார் தெரியுமான்னு. ”

“இங்க பாரு தாஸ், அவரால சில விஷயங்களைத்தான் சொல்ல முடியும். முதல்ல மக்களுக்கு புரியுமான்னு பார்க்கணும். பத்திரிக்கைல ஒத்துக்குவாங்களான்னு வேற யோசிக்கணும். விகடன்லயே சில விஷயங்களை ஒத்துக்கலைன்னு அன்னிக்கு ஆதங்கமா இளமை விகடன்ல எழுதல. அதுமாதிரிதான் இதுவும். அதுவும் இது கடவுள் பத்தியது. ஒரு ஒரு தனிமனிதனுக்கும் இதைப்பத்தி கருத்து வேறயாயிருக்கும். அதான் அப்ப அப்ப சூசகமா எதாவது எழுதவார்.”

“என்ன எழுதுறார்?”

“காஸ்மாலஜியைப்பத்தி சொல்லும் போது அதன்மூலமாத்தான் பிரபஞ்சத்தின் ஆரம்ப கணங்களைப் பற்றிச் சிந்திக்க முடிந்தது. அது வரை சென்று கடவுள் எங்கேயாவது ஒளஇந்திருக்கிறாரானு தேட முடிந்ததுனு சொல்லிட்டு இன்றுவரை அகப்படவில்லை சொல்லியிருக்காருல்ல, அப்பிடின்னா என்ன அர்த்தம். இல்லைன்னுதானே சொல்லவர்றார்.”

“அட நீ வேற ஒரு தடவை இப்பிடித்தான். அரியென்று சொல்வார்… அல்லாவென்று
சொல்வார்… அப்பிடின்னு ஆரம்பிக்கும் ஒரு கவிதை, முடிவுல கடவுள் என்று யாரோ ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் தான் வாழ்கிறேன்னு சொல்லி முடிப்பார் கவிஞர். இந்த கவிதையை குறிப்பிட்டுட்டு கீழே இவர் எழுதுறார் இதே நம்பிக்கையில் தான் நானும் வாழ்கிறேன்னு. இதுக்கு என்ன சொல்ற. அதனால நாம இரண்டுபேரும் பேசிக்கிறதால இதுக்கு தீர்வு கிடைக்கும்னு தோணலை. அது போகட்டும், போன தடவையைப்பத்தி என்ன விவரம் கிடைத்தது.”

“இல்ல அந்த நடிகை நடந்ததைப்பத்தி யாருக்கிட்டையும் சொல்லவேயில்லை, சொல்லப்போனா நம்ம இரண்டு பேரையும் ரொம்ப பிடிச்சுபோயிருக்கும்னு நினைக்கிறேன் அதனாலதான் அன்னிக்கு கேட்ட எல்லா கேள்விக்கும் பட்டு பட்டுன்னு பதில் சொல்லிச்சு. நாம மறுபடியும் நேர்ல போய்ப்பார்த்தா, நல்லாவே பேசும்னு நினைக்கிறேன்” சொல்லிவிட்டு வந்தியத்தேவன் சிரித்தான்.

“நாமன்னு ஏண்டா என்னையும் சேத்துக்குற, நீ போய்ப் பார்த்தான்னு சொல்லு, நம்ம அப்பா எப்பிடித்தான் உனக்கு இப்பிடி சரியான பேர் வைத்தாரோ வந்தியத்தேவன்னு சரியான வழிசல்டா நீ. புடிச்சபாரு ஒருத்தியை கடத்துறதுக்கு அதுக்கு நான் எவ்வளவோ தேவலை. ”

“சரி சரி, ஆளு ரொம்ப வயசானவரு, ஏதோ இளமையா எழுதுரதால தப்பா நினைச்சுராத. அவரோட பாதுகாப்புக்கு…”

“எல்லாம யோசிச்சாச்சு, அதனாலத்தான் வெளியெடத்துக்கு போகாம காருக்குள்ளயேன்னு சொன்னேன். காரும் ஏதாவது பெரிய ஆஸ்பிடலுக்கு 100 மீட்டருக்குள்ளயே சுத்துறமாதிரி பார்த்துக்கோ.”

சென்னை – இந்தியா

“டேய் நல்லா பாத்தியா அதே இடம்தானே.” மோகன் கேட்க.

வந்தி சொன்னான் “அதே பெஞ்சும் தான், பேசாம பெஞ்சோட தூக்கிட்டு போய்டுவோமா.”

“நக்கலெல்லாம் போதும், நாளைக்கு கடத்தணும் ஞாபகம் இருக்கில்ல. சரி என்ன பண்ணப்போறோம் சொல்லு?”

“நான் கார்ல இருப்பேன், அவர் தனியா இருக்கிற எதாவது ஒரு சமயம், நீ பக்கத்தில போய்.
உன்கிட்ட இருக்கிற பிஸ்டலை எடுத்துக்காட்டி, இந்த மாதிரி உங்களை கடத்தப்போறோம்னு
சொல்லு. அப்புறம் காரைக்காட்டி அந்த வண்டியில இருக்கிற ஒரு நபர்கிட்ட லாங் ரேஞ்ச் ரைபிள் இருக்கு. சுத்தம் போடாம வந்திட்டீங்கன்னா. அரை மணிநேரத்தில விட்டிருவோம். இல்லைன்னா நடக்கிற எதுக்கும் நாங்க பொறுப்பு இல்லைன்னு சொல்லு. வந்துட்டார்னா நீ சொன்ன மாதிரி அரைமணிநேரம் அப்புறம் நேரா ஜெர்மனி. சுத்தம் போட்டுட்டார்னா ரெண்டு வழி. ஒன்னு ரெண்டு பேரும் தப்பிக்கணும். இல்லைன்னா ஒரு ஆள் தப்பிச்சு இன்னொரு ஆளை கேஸ்லேர்ந்து காப்பாத்தணும். சரியா?”

“சரிதான், சத்தம் போட்டுட்டார்னா நான் ஒரு கன் ஷாட் பண்ணுரேன். நீ வந்திடு. ஜன
நடமாட்டம் அதிகமா இருக்கிற இடத்தில என்னை இறக்கி விட்டுட்டு. நீ இன்னொரு இடத்துல இறங்கிட்டு வேஷத்தயெல்லாம் களைச்சிட்டு ஸே·ப்க்கு போய் உன்னுடயதெல்லாம் எடுத்துக்கிட்டு நேரா ஏர்போர்ட் வந்திரு. ஓகே வா?.”

ஆறு மணி – சென்னை கடற்கரை

எல்லாம் சரியாக நடந்து கொண்டிருந்தது. சுஜாதா வந்து அந்த பெஞ்ச்சில் உட்கார்ந்து சிறிது
நேரம் ஆகிவிட்டது. அந்த இடத்தை நோக்கி மோகன் போய்க் கொண்டிருக்க, சிறிது நேரத்தி
ல் அந்த இடத்தில் கொஞ்சம் பரபரப்பு மோகன் இரண்டு கைகளையும் வானத்தை நோக்கி தூக்கி காட்டுகிறான். இது பிளான் கேன்சல் ஆகிவிட்டதிற்கான சிக்னல். இதையெல்லாம் சிறிது தூரத்தில் காரிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த வந்தியத்தேவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனாலும் காரை அந்த இடத்திற்கு அருகில் கொண்டு சென்றான்.

எட்டு மணி – ஜெர்மன் விமானம்

என்ன வேண்டுமெனக் கேட்டக் கொண்டிருந்த ஜெர்மானிய பணிப்பெண்ணிடம் வழிந்துவிட்டு,

“என்னதாண்டா ஆச்சு?” என்று கேட்டான் வந்தியத்தேவன்.

“யாரோ அவரோட செல்போனை சுட்டுட்டாங்க, அந்த இடம் கொஞ்சம் பரபரப்பாகிவி
ட்டது. அதனால இப்ப கடத்தவேணாம்னுதான் கேன்ஸல் பண்ணிட்டேன். எங்க போய்வி
டப்போறார். அடுத்த முறை அந்த பெஞ்சோட தூக்கிருவோம்.” சொல்லிவிட்டு சிரித்தான் மோகன்தாஸ்.

“சரி நாம கடத்தி, நீ அந்த கேள்வியை கேட்டிருந்தா அவர் என்ன பதில் சொல்லியிருப்பாருன்னு நினைக்கிற?”.

“ரிட்டையர் ஆகி, உனக்கும் பைபாஸ் ஆபரேஷன் பண்ணினா தெரியும்னு சொல்லியிருப்பாருன்னு நினைக்கிறேன்.” சொல்லிவிட்டு கீழே தெரியும் கடலைப்பார்த்து மீண்டும் சிரித்தான் மோகன்தாஸ்.

வந்தியத்தேவன் ஜெர்மானிய விமானப்பணிப்பெண்ணிடம் வழிந்து கொண்டிருந்தான்.

** திரு ரங்கராஜன் அவர்கள் ஆனந்தவிகடனில் அவருடைய செல்போன் தொலைந்ததைப் பற்றி சொல்ல, மனதில் தோன்றிய ஒரு சிறு புனைவு. இது ரொம்ப முன்னாடியே எழுதியதுதான்னாலும் திரும்பவும் ஒருமுறை.