தமிழில் போர்னோகிராஃபி இருக்கிறதா என்ன?

சுஜாதாவின் மேற்கண்ட கேள்வியை முன்வைத்து கணையாழி கடைசி பக்கங்களில் எழுதியதை முன்னமே கூட ஒரு முறை பட்டியலிட்டிருக்கிறேன், புத்தக விமர்சனம் வைக்கிறேன் பேர்வழியென்று.

“தமிழில் போர்னோகிராஃபி இருக்கிறதா என்ன” மனிதர் நிறைய தேடியிருக்கிறார். கண்டும் பிடித்திருக்கிறார்.

“தமிழில் ஆதியிலிருந்தே பார்த்தால் சங்கப்பாடல்கள் செக்ஸ் உணர்ச்சியற்று இருக்கின்றன. சில களவுப்பாடல்களில் உள்ள கலவையைப் பதம் பிரிப்பதற்குள் உயிர் போய் விடுகிறது. திருக்குறளில் காமத்துப்பாலில் உண்மையான காமம் கொஞ்சமே. மற்றவை பெருமூச்சுக்கள், ஊடல், வளை கழல்வது இன்ன பிறவே. தமிழில் ஏகமாகப் பரவிக் கிடக்கிற காவியங்களிலும் பிரபந்தங்களிலும் அவ்வப்போது தோன்றும் பெண்கள் யாவரும்(out of proportion) கொங்கைகளில் ஈர்க்கிடை போகாதாம். இல்லையென்றால் மலைக்குன்றுகளாம். இடை இல்லவே இல்லையாம்(உலோபியின் தருமம்) சமாளிக்கச் சிரமமான பரிமாணங்கள். அருணகிரிநாதர் சில சமயங்களில் Pure Porno.

அருக்கு மங்கையர் மலரடி வருடியும்
கருத்தறிந்து பின் அரைதனில் உடைதனை
அவிழத்தும் அங்குள…
மேலே ‘திருப்புகழில்’ தேடிக்கொள்ளவும்.”

என்று போட்டிருக்கிறது, தேவைப்படுபவர்கள் தேடிக்கொள்ளவும் கண்டுபிடித்தவர்கள் ஒரு பின்னூட்டம் போடவும்.

சரி மனுஷன் சுத்திச் சுத்தி இலக்கியத்தில மாரைத்தான் தேடுறாருன்னு நினைச்சிக்கிட்டே அடுத்த பக்கத்தைத் திருப்பினால். நான் நினைத்ததை ஒரு முப்பத்திரண்டு வருஷத்துக்கு முன்னாடியே கேட்டது மாதிரி அடுத்தப் பக்கத்தில் விளக்கம் தருகிறார்.

“தமிழ் இலக்கியத்தில் போர்னோ என்று நான் தேடுவது முலைகளைப் பற்றிய பாடல்களை இல்லை. ஐம்பெரும்காப்பியங்களிலும் அகத்திலும், புறத்திலும் ஆழ்வார்களிலும் குங்குமம் கழுவின கொங்கைகளுக்குப் பஞ்சமே இல்லை என்பது எனக்குத் தெரியும் நான் தேடுவது இன்னும் கொஞ்சம் Subtle ஆன விஷயம். ஆழ்வார் பாடலிலிருந்தே உதாரணம் சொல்கிறேன்.

‘மையார் கண் மடலாச்சியார் மக்களை
மையன்மை செய்து அவர் பின்போய்
கோய்யார் பூந்துகில் பற்றித் தனிநின்று
குற்றம் பலபல செய்தாய்’

என்பது ஆண்டாள் பாடல்களை விட Better Porno.”

ஏன் அந்த மாரைப் பற்றிய சந்தேகம் வந்ததுன்னா, தமிழ் சிபியில் முலைகளைப் பற்றிய ஒரு இலக்கியக் கட்டுரை நான் படித்த ஞாபகம் இருக்கிறது அதனால் தான் இதைப் போயா தேடினார்னு நினைச்சேன். ம்ம்ம் மனுஷன் பெரிய ஆள்தான்.

“இந்த நூற்றாண்டின் தமிழ் எழுத்திலும் அதிகம், போர்னோ கிடையாது. பாரதியார் இதைத் தொடவில்லை. பாரதிதாசனின் ஓடைக் குளிர் மலர்ப் பார்வைகள் தான் உண்ணத் தலைப்பட்டன. உடல்கள் இல்லை. புதுமைப்பித்தன், கு.ப.ரா, போன்றவர்கள் தலைவைத்துப் பார்க்கவில்லை. ஏன் புதுக்கவிஞர்களும் புது எழுத்தார்களும் கூட இந்த விஷயத்தில் ஜகா வாங்கியிருக்கிறார்கள். தமிழ்நாடனின் காமரூபம் சற்று வேறு ஜாதி. எடுத்துக்கொண்ட செக்ஸை நேராகச் சொல்வதில் எல்லோருக்குமே தயக்கம் இருந்திருக்கிறது. மார்பகம் விம்மித் தணியும், அதற்கப்புறம் என்னடா என்றால் இருவரும் இருளில் மறைந்தார்கள்? ஏன் மறைய வேண்டும்?”

கணையாழி கடைசி பக்கங்கள் பதிவில் இங்கே எழுதியிருந்தேன்.

—————————–

முன்னமே கூட தமிழ் சிஃபியில் ‘முலைகள்’ பற்றிய ஒரு கட்டுரை இருந்தது. கட்டுரை எழுதியவரைப் பற்றி மறந்து போய்விட்டது ஆனால் முலைகளின் வித்தியாசமான தோற்றங்களைப் பற்றி பேசியது அந்தக் கட்டுரை. தமிழ் சிஃபி அப்பொழுது யுனிக்கோடில் இல்லை, இப்பொழுது மாற்றிக் கொண்டிருந்தார்கள் மாற்றிவிட்டார்களா தெரியாது, மாற்றினால் ஒரு முறை தேடிப் பார்க்கலாம்.

தேடிப்பார்த்து கிடைத்தது. இங்கே

எப்பொழுதோ யாரோ எழுதிப் படித்தது, பழங்கால தமிழர்களுக்கு ஆண்குறியே இல்லை என்று*(இல்லை அதை ஒத்த ஒன்று – நினைவில் இருந்து எழுதுகிறேன்.) ஏனென்றால் அதைப் பற்றிய குறிப்பே இலக்கியத்தில் இல்லை என்று சொல்லியோ என்னவோ, தமிழ் இலக்கியத்தில் அத்தனை தூரம் பரீட்சையம் இல்லாதவன் நான். முலைகள் பற்றிய குறிப்புகள் இருக்கும் அளவிற்கு ஆண்குறிகள் பற்றிய குறிப்புகள் இருக்காது என்றே நினைக்கிறேன்.

——————————

நான் சிறுகதைகள் எழுதத் தொடங்கிய பொழுது ஒரு வழக்கத்திற்காகவே கொஞ்சம் ‘செக்ஸியாக’ எழுதிக் கொண்டிருந்தேன். பின்னர் நண்பர் ஒருவர் ‘ரமணி சந்திரன்’ கதை போல இருக்கிறது என்று சொல்ல, அதை விட உத்வேகம் ஒன்று வேண்டுமா அப்படி எழுதுவதை நிறுத்திவிட்டேன். 🙂

——————————-

‘அருப்பு ஏந்திய கலசத்துணை
அமுது ஏந்திய மதமா
மருப்பு ஏந்திய’ எனல் ஆம் முலை,
மழை ஏந்திய குழலாள்
கருப்பு ஏந்திரம் முதலாயின
கண்டாள் இடர்காணாள்
பொருப்பு ஏந்திய தோளனோடு
பொருந்தினள் போனாள். [ அயோத்தியா காண்டம். 1931]

[அரும்பு ஏந்திய அமுது நிறைந்த இணைக் கலசங்கள் போலவும் மதயானை தந்தங்கள் போலவும் முலைகளும் மேகம்போன்ற கூந்தலும் கொண்டவள் கரும்பு இயந்திரம் முதலியவற்றைக் கண்டபடி துயரங்களை அறியாமல் மலைகள் பொருந்திய தோள்கொண்டவனுடன் இணைந்து சென்றாள்]

இப்ப ஜெயமோகன் புகுந்து விளையாடுறாரு, அவருடைய காடு மற்றும் பின் தொடரும் நிழலின் குரல் ஏற்கனவே படித்திருக்கிறேன் என்பதால் புதிதாகத் தெரியவில்லை என்றாலும். ரொம்ப நாட்களாய் மனதிற்குள் ஊறிக்கொண்டிருந்த கம்ப ராமாயணம் படிக்கணும் என்ற ஆசையை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

ஜெமோவின் கம்பனும் காமமும்…

ஒன்று

இரண்டு

மூன்று

——————————-

இதே போல R.P. ராஜநாயஹம் எழுதியிருக்கிறார், அதில் சௌந்தர்யலஹரி பற்றி சொல்கிறார் இப்படி,

‘சக்கரமையப்புள்ளி சக்தி உன் முகமாம்
கீழே தக்கதோர் இரு முலைகள்
தாவினால் அழகு யோனி ‘

இவருடைய Carnal Thoughts தமிழில் ஒரு நல்ல ஃபோர்னோ முயற்சி என்றே நினைக்கிறேன்.

பார்ப்போம்.

* – நன்றி அருட்பெருங்கோ

சினிமா

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா. என்ன உணர்ந்தீர்கள்?

ஏழு எட்டு வயதில் ஆரம்பித்தது, நினைவு தெரிந்து முதலில் பார்த்த படம் கர்ணன். டிவிப் பெட்டிக்குள் உண்மையில் எல்லாம் நடக்கிறது என்று நம்பினேன். அம்புகள் டிவியின் கண்ணாடித்திரையைத் தாண்டி வரக்கூடாது என்று பயந்தேன், டிவிப் பெட்டியை உடைத்துக் கொண்டு கர்ணனுக்காக உதவ எண்ணினேன்.

2.கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த சினிமா?

’காதலில் விழுந்தேன்’

3.கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

காதல் – வீட்டில் – டிவியில் – இந்த முறை பெரிதாய் ஒன்றும் இல்லை.

4.மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

குருதிப்புனல், மகாநதி – சட்டென்று நினைவுக்கு வந்ததும் மனது தானாய்ப் பதறும் இரண்டு படங்கள்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

என் காலம் இல்லாவிட்டாலும் பராசக்தி முதலான ‘திராவிட’ படங்கள் ஏற்படுத்திய தாக்கம்.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

தமிழ் சினிமாவின் ஒளிப்பதிவு – குறிப்பாய் சொல்லவேண்டுமானால் பாலுமகேந்திரா, மணிரத்னம், பாலா, ஜீவா இவர்களின் படங்கள். இன்னமும் கூட நிறைய பேரைச் சொல்லலாம்.

6.தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

கண்ணில் படும் எல்லாவற்றையும்.

7.தமிழ்ச்சினிமா இசை?

கேட்பதுண்டு. பெரும்பாலும் புதிய படங்களின் இசையில் கைவைப்பதில்லை. எனக்கான பழைய – புதிய பாடல்கள் தொகுப்பு உண்டு. பிடித்திருக்கிறது – நன்றாயிருக்கிறது என்ற சொன்ன பிறகு கேட்பதுண்டு.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

தற்சமயம் தமிழ் சினிமா எ உலக சினிமா 10 : 90 என்ற விகிதத்தில் உள்ளது. அதிகம் தாக்கிய படங்களின் வரிசை இந்தப் பதிவை விட நீண்டு விடும் என்பதால், குறிப்பாய் தற்சமயம் பார்த்து என் பதிவில் குறிப்பிடாத சில,

Perfume, Days of Glory(Indigழூnes), The golden pond, One flew over cuckoo’s nest, Mamma Roma, Oedipus Rex…

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இல்லை.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நன்றாகயிருக்கிறது. ‘ரே’ ‘கத்தக்’ அளவிற்கும் அதற்கு மேலும் பெயர் தரக்கூடிய படங்கள் விரைவில் வரும் என்றே எதிர்ப்பார்க்கிறேன்.

11.அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

நான்கு வருடம் முன்பென்றால் உலகமே இரண்டது போலிருந்திருக்கக்கூடும். இப்பொழுது பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்னைப் பொறுத்தவரை. அதுவும் தமிழ்சினிமா மட்டுமென்றால். தமிழர்கள் தங்கள் முதல்வரை வேறெங்கேணும் தேடத் தொடங்குவார்களாயிருக்கும்.

பதிவு போட அழைத்த மதிக்கு நன்றி.

நான் அழைக்க விரும்புபவர்கள் – விருப்பமிருந்தால் போடலாம்.

1) பெயரிலி
2) ஹரன் பிரசன்னா
3) சன்னாசி
4) நண்பன் ஷாஜி
5) ஜமாலன்

கோவில்கள் கடவுள்களுக்கு உகந்ததா?

என் மீது எப்பவுமே ஒரு விமர்சனம் உண்டு, விஜய் டீவியே நான் பார்ப்பதில்லை என்று, இது ஒருவாறு உண்மைதான் நான் சன் டீவி, கே டிவி, POGO தவிர்த்து மீதி பார்ப்பதற்கான நேரம் பெரும்பாலும் இல்லாமல் போகும் காரணத்தால் மற்ற விஜய் டீவி, ஜெயா டீவியெல்லாம் பார்ப்பதில்லை. பின் ஏன் ஒருவாறு உண்மையென்று சொல்லணும் உண்மைன்னு சொல்லிடலாமேன்னு கேட்கலாம். ஆனால் நான் டீவி பார்க்கும் நேரத்தை மொத்தமாகக் கணக்கிட்டு அதில் நான் விஜய் டீவி பார்க்கும் நேரத்தைக் கணக்கிட்டால் அது 40% அளவிற்கு இருக்கும் என்று நினைக்கிறேன். யாரும் தப்பா நினைச்சிறாதீங்க, பார்மேட் நியூமராலஜியின் தந்தை மஹாதன் ஷேகர் ராஜா, சித்தர் வழி வழி வந்த வொயிட் அண்ட் ஒயிட் நீல்கண்ட் சிவா, நியூமராலாஜி நிபுணர் டாக்டர் ராஜராஜன் இவர்களது நிகழ்ச்சிகளை நாள் தவறாது தினமும் 12.00 AM மணிக்கு மேல் பார்த்து வருகிறேன்.

இதில் அனைவரது ஃபோன் நம்பர்கள் உட்பட நிகழ்ச்சி நிரல் அனைத்துமே கூட நான் தலையில் தட்டினால் கடகடவென்று சொல்லும் அளவிற்கு இந்த நிகழ்ச்சிகளின் தீவிர ரசிகன் என்றே கூட சொல்லலாம். சில சமயம் ‘ராஜ வைத்தியம்’ என்றொரு ஐட்டம் வேறு வரும், முன்பெல்லாம் ஜெயாடீவியில் வந்து கொண்டிருந்தது நன்றாகத் தெரியும் இப்பொழுதெல்லாம் விஜய்டீவியில் வருகிறது. ஜெயாவிலும் வருமாயிருக்கும் சரியான statistics இல்லை.

சில சமயங்களில் ஏண்டா வாழ்க்கையில் இத்தனை கஷ்டப்பட்டுக்கொண்டு, Mohandoss என்ற பெயறை Mohaandooss என்றோ Mohan I Doss என்றோ மாற்றிக்கொண்டு எளிதாய் வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிட்டு போய்விடலாம் என்று நினைப்பேன். ஆனால் ம்ம்ம் என்ன செய்ய நமக்கு விதிச்சது அவ்வளவு தான் என்று சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறேன். மக்களே இன்னும் சிறிது நாளில் நாலைந்து பெயரியல் நிபுணர்களைக் கலந்தாலோசித்து பெயரை மாற்றி விரைவில் வெற்றிபெரும் வகையில் ஒரு பெயரை சஜஸ்ட் செய்யச் சொல்ல இருக்கிறேன். எனக்கு சக்ஸஸ்புல்லா ஆன பிறகு உங்களுக்கும் சொல்கிறேன்.

இதில் வரும் எல்லாரையும் விட எனக்கு அந்த வொயிட் அண்ட் வொயிட் நீல்கண்ட் சிவா தான் மிகவும் பிடித்த நபர், அவர் பேசுவதே ஹிப்னடைஸ்ட் செய்யும் விதத்தில் இருக்கும், ஒருவேளை டீவி மூலமாகவே இது சாத்தியமா தெரியவில்லை. ஆனால் அவர் ப்ரொக்கிராம் வந்துவிட்டால் அந்தப்பக்கம் இந்தப் பக்கம் மாற்றாமல் பார்த்துக் கொண்டேயிருப்பேன், பாவம் அக்கா தான் காண்டாகி உன்னையத் திருத்தவேமுடியாது என்று புலம்பிவிட்டு தூங்கப் போய்விடுவார்கள். நானும் எவ்வளவோ முறை சொல்லிவிட்டேன் இவர்களைச் சாதாரணமாய் நினைக்க வேண்டாம் எல்லாம் science படி பூர்வ் செய்ய விஷயங்கள் என்று ம்ம்ம் என்ன செய்ய எல்லாம் புரியும் பொழுது புரியும்.

இந்த மேற்கண்ட “கோவில்கள் கடவுள்களுக்கு உகந்ததா?” என்ற கேள்வி என் மனதில் ஆழமாய் ஊடுறுவிய நிகழ்ச்சியை நினைத்துக் கொள்கிறேன். திரு டாக்டர் மஹாதன் ஷேகர் ராஜா அவர்கள் (சாரி மறந்திட்டனே ஃபார்மேட் நியூமராலஜியின் தந்தை என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்) யாராவது கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்லும் நிகழ்ச்சியும் அவருடைய ப்ரொக்கிராமில் வரும். அப்படி கேட்கப்பட்ட கேள்வியான “கடவுள்களின் பெயர்களை வைத்துக் கொள்ளலாமா?” என்ற கேள்விக்கு, கூடாது என்றும் நேரடியாய் முருகன் என்று வைத்துக் கொள்ளாமல் “செந்தில்” என்று வைத்துக் கொள்ளலாம் என்று கூறினார்.

மேட்டர் என்னான்னா இப்ப நீங்க முருகன் கோவிலுக்கு போறீங்க மனசு விட்டு உங்கள் குறைகளைச் சொல்லி அழுகிறீர்கள் என்றால் கடவுள் அந்தக் குறைகளை உங்களிடம் இருந்து எடுத்துவிடுவார் இல்லையா ஆனால் பாவம் அவரிடம் Recycle Bin இல்லாத காரணத்தால் அந்தக் குறைகள் கஷ்டங்கள் கோவிலைச் சுற்றி வலம் வந்தபடியிருக்குமாம். நீங்கள் முருகன் என்ற பெயரை வைத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்றீர்கள் என்றால் உங்களிடம் அந்தக் குறைகள் distribute ஆகிவிடுமாம்.

எனக்கும் உடம்பெல்லாம் நடுங்கத் தொடங்கிவிட்டது, ஐயய்யோ எந்த சாமிக்காவது “மோகன்தாஸ்” என்று பெயரிருக்கிறதா என திருச்சிக்கும் அம்மாவிற்கு இரவு 12.30 க்கு தொலைபேச, அம்மா வந்த கோபத்தில் “டேய் இப்ப நீ போனை வைக்கிறீயா இல்லை தனி ஃப்ளைட் வைச்சிக்கிட்டு வந்து உன்னைய உதைக்கவா?” என்று கத்த. என் பயம் இன்னும் அதிகமாகிவிட்டது நண்பர்களே உங்களுக்குத் தெரிந்து எந்த கடவுளுக்காவது “மோகன்தாஸ்” என்ற பெயரிருந்தால், என்னால் மாற்றிக் கொள்ள முடியாது. எனது நண்பர் ஃபார்மேட் நியூமராலஜி புகழ் டாக்டர் திரு மஹாதன் ஷேகர் ராஜாவிடம் வந்து கலந்தாலோசித்து அவரை பெயரை மாற்றிக் கொள்ளச் சொல்லுங்கள். ப்ளீஸ்.

PS: நான் யாருக்கும் அடிவருட ‘முருகன்’ என்ற பெயரை இழுக்கவில்லை, தமிழ்க்கடவுள், இந்திக் கடவுள் என்ற பிரச்சனைகளைக் கிளப்பாதீர் – டாக்டர் திரு ஃபார்மேட் நியூமராலஜியின் தந்தை மஹாதன் ஷேகர் ராஜா உபயோகித்த அதே கடவுளை நானும் உபயோக்கிறேன் அஷ்டே.

PS1: இந்தக் கருத்துக்களில் எதுவும் சந்தேகம் என்றால் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண் – மகாதன் ஷேகர் ராஜா – ஃபார்மேட் நியூமராலஜியின் தந்தை – 99404 23555, 63555

அழகான பெண்கள் ஆபத்தானவர்கள் – புறநானூறு

வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே;
கடவன கழிப்புஇவள் தந்தையும் செய்யான்;
ஒளிறுமுகத்து ஏந்திய வீங்குதொடி மருப்பின்
களிறும் கடிமரம் சேரா; சேர்ந்த
ஒளிறுவேல் மறவரும் வாய்மூழ்த் தனரே;
இயவரும் அறியாப் பல்லியம் கறங்க,
அன்னோ, பெரும்பே துற்றன்று, இவ் வருங்கடி மூதூர்;
அறன்இலன் மன்ற தானே-விறன்மலை
வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்
முகைவனப்பு ஏந்திய முற்றா இளமுலைத்
தகைவளர்த்து எடுத்த நகையடு,
பகைவளர்த்து இருந்த இப் பண்புஇல் தாயே.

336. பண்பில் தாயே!
பாடியவர்: பரணர்
திணை: காஞ்சி துறை: பாற் பாற் காஞ்சி

இதுதான் நான் குறிப்பிட்ட புறநானூற்றுப் பாடல் – இதற்கு சுஜாதா கொடுத்த நவீன கவிதை கீழே(சுஜாதா யாரு புறநானூற்றுக்கு உரை எழுத – அவர் எழுதியதில் அங்கே தப்பு இங்கே தப்பு – என்கிற புலவர்களுக்கு பதில் சொல்ல நான் கிடையாது ஆள் நான் வரலை அந்த விளையாட்டுக்கு.)

பெண் கேட்ட அரசன் கோபக்காரன்
பெண்ணின் தந்தையோ பொறுப்பற்றவன்
யானைகள் கடிமரத்தில் அமையாமல் சீறுகின்றன
வீரர்கள் கோபத்தில் இருக்கிறார்கள்
ஊரே கலக்கத்தில் இருக்கிறது
வேங்கைமலைக் கோங்கின் அரும்பு போன்ற
சிறிய முலைகளைக் கொண்ட
இந்தப் பெண்ணால்
பகை வளர்கிறது
தாய்க்குத் தெரியவில்லையே!

அகநானூறுக்கான அறிமுகம் போல் இல்லாமல் புறநானூற்றுக்கான அறிமுகம் இப்படி செய்யப்படுவதில் எனக்கும் மனம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. எந்த விஷயத்திலும் நம்ம டச் இருக்கணும் இல்லையா? இளையராஜா தேவாரத்துக்கு இசையமைச்சப்ப, மெட்டுக்கு தகுந்த பாட்டை தேர்ந்தெடுத்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதைப் போல் நான் இந்தப் பாடலைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். நாளைக்கு ஒரு நாள் – “அக்கா! அக்கா! என்றாய் அக்கா வந்து கொடுக்க சுக்கா மிளகா சுதந்திரம்” என்று சொன்ன ஆணாதிக்கவாதி பாரதிதாசன் புகழளவிற்கு இல்லாவிட்டாலும் நானும் கொஞ்சம் ஈயம் அடித்தேன் என்று தமிழ்கூறும் நல்லுலகம் சொல்லவேண்டுமல்லவா?

Fri, 28 Sep 2007 10:14:00 GMT

வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே;
கடவன கழிப்புஇவள் தந்தையும் செய்யான்;
ஒளிறுமுகத்து ஏந்திய வீங்குதொடி மருப்பின்
களிறும் கடிமரம் சேரா; சேர்ந்த
ஒளிறுவேல் மறவரும் வாய்மூழ்த் தனரே;
இயவரும் அறியாப் பல்லியம் கறங்க,
அன்னோ, பெரும்பே துற்றன்று, இவ் வருங்கடி மூதூர்;
அறன்இலன் மன்ற தானே-விறன்மலை
வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்
முகைவனப்பு ஏந்திய முற்றா இளமுலைத்
தகைவளர்த்து எடுத்த நகையடு,
பகைவளர்த்து இருந்த இப் பண்புஇல் தாயே.

336. பண்பில் தாயே!
பாடியவர்: பரணர்
திணை: காஞ்சி துறை: பாற் பாற் காஞ்சி

இதுதான் நான் குறிப்பிட்ட புறநானூற்றுப் பாடல் – இதற்கு சுஜாதா கொடுத்த நவீன கவிதை கீழே(சுஜாதா யாரு புறநானூற்றுக்கு உரை எழுத – அவர் எழுதியதில் அங்கே தப்பு இங்கே தப்பு – என்கிற புலவர்களுக்கு பதில் சொல்ல நான் கிடையாது ஆள் நான் வரலை அந்த விளையாட்டுக்கு.)

பெண் கேட்ட அரசன் கோபக்காரன்
பெண்ணின் தந்தையோ பொறுப்பற்றவன்
யானைகள் கடிமரத்தில் அமையாமல் சீறுகின்றன
வீரர்கள் கோபத்தில் இருக்கிறார்கள்
ஊரே கலக்கத்தில் இருக்கிறது
வேங்கைமலைக் கோங்கின் அரும்பு போன்ற
சிறிய முலைகளைக் கொண்ட
இந்தப் பெண்ணால்
பகை வளர்கிறது
தாய்க்குத் தெரியவில்லையே!

அகநானூறுக்கான அறிமுகம் போல் இல்லாமல் புறநானூற்றுக்கான அறிமுகம் இப்படி செய்யப்படுவதில் எனக்கும் மனம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. எந்த விஷயத்திலும் நம்ம டச் இருக்கணும் இல்லையா? இளையராஜா தேவாரத்துக்கு இசையமைச்சப்ப, மெட்டுக்கு தகுந்த பாட்டை தேர்ந்தெடுத்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதைப் போல் நான் இந்தப் பாடலைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். நாளைக்கு ஒரு நாள் – “அக்கா! அக்கா! என்றாய் அக்கா வந்து கொடுக்க சுக்கா மிளகா சுதந்திரம்” என்று சொன்ன ஆணாதிக்கவாதி பாரதிதாசன் புகழளவிற்கு இல்லாவிட்டாலும் நானும் கொஞ்சம் ஈயம் அடித்தேன் என்று தமிழ்கூறும் நல்லுலகம் சொல்லவேண்டுமல்லவா?

ஆண்கள் எல்லோரும் ஏமாளிகளா?

 

ஆஸ்திரேலிய அணியின் அண்மைய வெற்றியைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை; இன்னும் ஐந்துபோட்டிகள் மீதமிருக்கிறது என்பதைத் தவிர. வழமை போல் இல்லாமல் மிடில் ஆர்டர் பாட்ஸ்மான்களுக்கு விளையாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது; அதனை சரிவர உபயோகித்துக் கொண்டும் இருக்கிறார்கள். அடுத்த ஆட்டத்தில் ரிக்கி பான்டிங் விளையாட வாய்ப்புக்கள் உண்டு. நானூறுக்கான வாய்ப்புக்களை எதிர்பார்த்தபடி நான் காத்திருக்கிறேன்.

=

கர்நாடகாவில் நடக்கும் குழப்பங்களால் பெங்களூருவின் அன்றாட வாழ்வில் பெரிய பாதிப்புக்கள் இல்லை. அலெக்ஸ் பாண்டியன் சொல்லியிருந்ததைப் போல் நான் அவ்வளவு ஓசூர் – பெங்களூர் ரோட்டை உபயோகிக்க மாட்டேன் என்பதால் அது தெரியாது. ஆனால் ‘நம்ம மெட்ரோ’விற்காக மகாத்மா காந்தி ரோட்டை கந்தர கோலம் செய்திருக்கிறார்கள். பெங்களூரு டிராஃபிக் ஏற்கனவே ரொம்பவும் பிரசித்தம் இதில் இது வேறு.

=

காந்தியைப் பற்றிய கவியரங்கம் பார்த்தேன்(indeed கேட்டேன்) கலைஞர் டீவியில். பா.விஜய் மக்களைக் கவரும் படி கவிதைப் படிக்கிறார். ‘காந்தி கடைசியா சொன்னது ஹே ராம், கலைஞர் முடிவாய்ச் சொன்னது No ராம்‘ என்று சொல்ல கரகோஷம் வானைப் பிழந்தது(கிளிஷே)’ வாலி வராதது எனக்கு வருத்தமே வந்திருந்தால் நான் ரொம்பவும் ரசித்திருப்பேன். காந்தியைப் பற்றியாவது பாடியிருக்கலாம் என்றாலும் அழைத்திருக்கவே மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

=

கன்னட ஹீரோ, கன்னட(?) ஹீரோயின், கன்னட வில்லன், கன்னட தயாரிப்பாளர் சேர்ந்து ஒரு தமிழ்ப்படமாம். தேவுடா தேவுடா ரொம்ப நாட்களாக தியேட்டர் சென்று தமிழ்ப்படம் பார்க்காததால் வேறு வழியில்லாமல் ‘மலைக்கோட்டை’க்குச் சென்றிருந்தேன். விஷாலின் ஆக்ஷன் காட்சிகள் பார்க்கும் படியிருந்தன; அதே போல் ஆஷிஷ் வித்யார்த்தி/ஊர்வசியின் காதல் காட்சிகள்(ஊர்வசி வித்யார்த்தியின் உறவு முறை எனக்குப் புரியலை) மற்றபடிக்கு நிறைய காட்சிகளின் landscape களில் மலைக்கோட்டை தெரிகிறது. பொன்னம்பலத்தை இவ்வளவு கேவலப்படுத்தியிருக்க வேண்டாம். மற்றபடிக்கு படம் பக்வாஸ் தான். ப்ரியாமணி ஆம்பளை மாதிரி இருக்கிறார்(இது சன்மியூஸிக்கில் அவருடைய உரையாடலுக்கு பிறகான முடிவு அல்ல) அவருடைய மேக் அப்பும், ட்ரெஸ்ஸிக்கும் கேவலமாயிருக்கு.

=

பொல்லாதவன் படத்தில் ‘எங்கேயும் எப்போதும்’ ரீமிக்ஸ் பாடல் கேட்கக்கூடியதாய் இருக்கிறது.

=

ராயல் ஆர்சிட்டின் ‘டைகர் ட்ரையல்’ உணவகத்தின் பஃபே நன்றாகயிருக்கிறது. புதன் கிழமைகளில் மதிய உணவிற்கு பெரிய ஹோட்டலுக்குச் செல்லும் வழக்கம் போல் இந்த முறை இந்த ஓட்டலுக்குச் சென்றோம். முந்தைய வாரம் சென்ற ‘இந்திரா நகர்’ ன் ‘ரொமாலி வித் அ வியூ’ வை விட வெரைட்டிகளிலும் சரி, ருசியிலும் சரி நன்றாக இருந்தது. அதைப்போல் விலையும் குறைவே.

ரொமாலி வித் அ வியூ – 245 ரூபாய்
ராயல் ஆர்சிட் ‘டைகர் ட்ரையல்’ – 170 ரூபாய்.

இனி ஒவ்வொரு புதன்கிழமை மட்டும் பதிவெழுத உத்தேசித்திருக்கிறேன். வேறென்ன தூக்கத்தை கட்டுப்படுத்தத்தான் – பஃபே சாப்பிட்டுவிட்டு வந்து வேலை வேறு செய்யமுடியுமா என்ன?(பஃபே பற்றி செல்லா எழுதிய கவிதை(தானே?) இணைப்பாக!, பஃபே பத்தி எழுதியிருக்காருப்பா தேடிப்பாருங்க…)

=

இது நான் சமீபத்தில் வரைந்த இன்னொரு படம் – பெரிதாகப் பார்க்க படத்தில் கிளிக்கவும்.

=

ஒரு அகநானூற்றுப் பாடலும் அதற்கான விளக்கமும்.

அளிநிலை பொறாஅது அமரிய முகத்தள்,
விளிநிலை கொள்ளாள், தமியள், மென்மெல,
நலமிகு சேவடி நிலம்வடுக் கொளாஅக்,
குறுக வந்துதன் கூர்எயிறு தோன்ற
வறிதகத் தெழுந்த வாயல் முறுவலள்
கண்ணிய துணரா அளவை, ஒண்ணுதல்,
வினைதலைப் படுதல் செல்லா நினைவுடன்-

முளிந்த ஓமை முதையலம் காட்டுப்,
பளிங்கத் தன்ன பல்காய் நெல்லி,
மோட்டிரும் பாறை ஈட்டுவட்டு ஏய்ப்ப,
உதிர்வன படூஉம் கதிர்தெறு கவாஅன்,
மாய்த்த போல மழுகுநுனை தோற்றி,
பாத்தி யன்ன குடுமிக் கூர்ங்கல்,
விரல்நுதி சிதைக்கும் நிரைநிலை அதர,
பரல்முரம்பு ஆகிய பயம்இல் கானம்
இறப்ப எண்ணுதிர் ஆயின்- ‘அறத்தாறு
அன்று’ என மொழிந்த தொன்றுபடு கிளவி
அன்ன ஆக என்னுநள் போல,

முன்னம் காட்டி, முகத்தின் உரையா
ஓவச் செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றி
பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு,

ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன்தலைத்
தூநீர் பயந்த துணையமை பிணையல்
மோயினள் உயிர்த்த காலை, மாமலர்
மணிஉரு இழந்த அணியழி தோற்றம்
கண்டே கடிந்தனம், செலவே-ஒண்டொடி
உழையம் ஆகவும் இனைவோள்
பிழையலள் மாதோ, பிரிதும் நாம் எனினே!

– எழுதியவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ

ஆனால் ஆச்சர்யமாக இருக்கிறது அகநானூற்றுப் புலவர்கள் எவ்வளவு ரசித்து ரசித்து இந்தக் கவிதைகளை எழுதியிருக்க வேண்டும் என்று நினைக்கும் பொழுது ;). அந்தப் பாடலுக்கு சுஜாதா ஐயா கொடுத்த விளக்கம்.(போன பதிவில் கொடுத்த டிஸ்க்ளெம்பர் இந்தப் பதிவுக்கும் ஒத்து வரும்.)

ஆறுதல் கூறுவதையும் பொறுக்காது, மாறுபட்ட முகமுடையவள்
கூப்பிட்டாலும் கேளாதது போல் இருப்பாள். தன்னந்தனிபோல் ஆனாள். மெல்லமெல்ல
அழகுமிகுந்த சிவந்த பாதங்கள் நிலத்தில் பதிய
அருகில் வந்து கூர்மையான பற்கள் தெரிய
வெறிதே போலிப் புன்முறுவல் பூக்கிறாள்.

பிரிந்து செல்வதை நான் உணர்வதற்குள்ளாகவே,
ஒளிவீசும் நெற்றியுடையவள் தான்உணர்ந்து
பிரியும் செயலைப் பற்றிய நினைவில் துயரடைகிறாள்.

பட்டுப்போன ‘ஓமை’ மரங்கள் உள்ள பழைய கானகத்தில்
பளிங்கு போன்ற நெல்லிக் காய்கள்
வட்டாடும் சிறுவர்கள் சேர்த்துவைத்ததுபோல் உதிர்ந்துகிடக்கும்!
கதிரவன் எரிக்கும் மலைச்சாரல் அது.

தீட்டியது போன்ற கூர்மையான முனையை உடைய
கற்கள் விரல் நுனிகளைச் சிதைக்கும் பாதை அது.
பரல்கள் தவிர வேறு தாவரமேதும் இல்லாத கானகம்.
அதைக் கடந்து செல்ல எண்ணுவீரானால்’ – அது
அறமல்ல’ என்று சொல்லப்படும் பழமொழி
வெறும் பேச்சுத்தான் என்பவள் போல
குறிப்புக் காட்டி முகத்தாலும் தெரிவித்தாள்.
அதை மட்டுமே எண்ணிய ஓவியம் போல் இருந்தாள்.
கண்விழிகளைத் திரையிட்ட கண்ணீரால் பார்த்தாள்.

உடலோடு அணைத்த புதல்வனது தலையில்
பனிநீர் சொட்டச் சூடிய பூச்சரத்தை
முகர்ந்து பெருமூச்சு விட்டாள், அப்போது பெரிய பூக்கள்
அழகிய உருவை இழந்து பொலிவற்று வாடின

அதுகண்டு, பிரிந்து செல்லும் எண்ணத்தைக் கைவிட்டேன்.
இப்போதே இப்படி இருப்பவள்
பிரிந்து சென்றால் பிழைக்க மாட்டாள்.

=

கடைசியாய் தலைப்பிற்கு; சமீபத்தில் ஒரு விளம்பரம் பார்க்க நேர்ந்தது அதில் ஒரு காதலனின் காரில் ஏறிக்கொண்டு காதலியை வீட்டை விட்டு வெளியேறுகிறார். வழியில் மறிக்கும் காதலியின் தந்தை காரைச் சுற்றி சுற்றி பார்த்துவிட்டு கடைசியில் உள்ளே உட்கார்ந்திருக்கும் தன் மகளைக் கூட கவனிக்காமல் ‘குட் செலக்ஷன்’ என்று சொல்வது போல் அமைத்திருந்தார்கள். ஜெஸிலாவைப் போல் எனக்கும் இந்தத் தலைப்பில் ஒரு பெரிய கட்டுரை எழுத வேண்டும் என்று ஆசை தான். ஆனால் இல்லையா அப்படியெல்லாம் எழுதக்கூடாது.

=

Wed, 03 Oct 2007 10:57:00 GMT

கடல் குதிரையும் சபிக்கப்பட்ட ஆண் ஜனமும்

 

வீட்டில் அக்கா உறங்கியதும் அனிமல் ப்ளானட் பார்ப்பது உண்டு. சமீபத்தில் நான் பார்த்த Most Extreme Mom’s & Dad’s(விலங்குகளில்) ஆச்சர்யப்பட வைத்த ஒன்று. விலங்கினங்களிலேயே குட்டியை வயிற்றில் சுமக்கும் ஆண் விலங்கு(மனிதனையும் சேர்த்துத்தான் – மனிதன் social animalலாமாம்) ஒன்றே ஒன்று தானாம். அதுதான் கடல் குதிரை, அதனால் Most extreme dad என்கிற பெருமை கடல் குதிரைக்குக் கிடைத்தது.

எங்கோ படித்த ஞாபகம் மனித இனத்தின் தொடக்கத்தில் இருந்தே பெண்களைக் கண்டு ஆண்கள் பயந்து வந்ததாக, எதனாலென்றால் பெண்ணால் மட்டும் தான் ஒரு உயிரினத்தை பிறப்பிக்க வைக்க முடிந்ததாகவும் அதனால் தான் அவன் பெண்களை தெய்வமாக வைக்க ஆரம்பித்தான் என்றும் எங்கே என்று நினைவில் இல்லை. கடவுள் மீது நம்பிக்கை இல்லாததால் இயற்கையின் மீது இந்த பழியை சுமத்துவதைத் தவிர வேறுவழியில்லை, ஆண்களிடம் இருந்து பிறப்பிக்கும் பாக்கியத்தை மறைத்துவிட்டதற்காக.

அறிவியல் உலகத்தின் அதிவளர்ச்சின் காரணத்தில் பிற்காலத்தில் ஆண்கள் குழந்தை பெற வைக்கும் சாத்தியம் நிறைவேறும் என்று நம்புவோம். கற்காலத்தில் இருந்த மனிதனால் இன்றைய சாட்டிலைட் உலகத்தை கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது அதைப்போலவே இன்று நாமும் இருக்கிறோம் அறிவியல் உலகம் படைக்கப்போகும் ஆச்சர்யங்களில் இந்த ஆண் பிரசவிக்கும் அதிசயமும் ஒன்றாக இருக்கவேண்டும்.

Men’s breasts do have milk ducts

Men’s breasts do have milk ducts, and their bodies produce oxytocin and prolactin, the hormones required for milk production. As of yet, there are no proven scientific examples of male breastfeeding, but there are reports of men who were able to produce milk through extensive stimulation of the breast and nipple. Yet this isn’t a viable option for feeding babies, especially as no one is certain if male breast milk would be of the same quality and composition as female milk.

கடல் குதிரையில் இருந்து டாபிக் எங்கேயோ ஹைஜாக் செய்யப்பட்டுவிட்டது. ஆண் இனங்களிலேயே பிரசவிக்கும் திறன்படைத்த ஒரே உயிரினம் கடல்குதிரைகள் தான்(இந்த ஃபேமிலியும் இன்னும் சிலரையும் சொல்லலாம் – கடல் டிராகன் ஒரு உதாரணம்). நிறைய பேர் அனிமல் ப்ளானட்டின் இந்த நிகழ்ச்சியைப் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். Most extreme mom’s ம் கூட ஒரு நல்ல நிகழ்ச்சி தான் நான் மறுக்கவில்லை; ஆனால் எனக்கு இயல்பாகவே மற்றையது பிடித்திருந்தது.

ஆண்களாலும் பிள்ளை பெற முடியும் என்ற நிலை வந்துவிட்டால் உலகம் எப்படியிருக்கும் நிச்சயமாய் ஒரு சைன்ஸ் பிக்ஷன் கதை எழுத முடியும். சைன்ஸ் பிக்ஷன் என்றதும் நினைவிற்கு வரும் சுஜாதா ஐயாவை என்னால் ஒரு தீவிரமான ஆணாதிக்கவாதி என்று சொல்லமுடிந்தாலும் அந்த வம்பை இங்கே இழுக்கவில்லை. அதேபோல் சமீபத்தில் ஒரு நபர் நிறைய பெண்களைத் திருமணம் செய்து கொள்வதாகச் சொல்லி ஏமாற்றியதைப் பற்றிய கேள்வி ஒன்றிற்கு குங்குமத்தில் ‘பெண்களை சுலபமாக ஏமாற்ற முடியும்’ என்பதை திரும்பவும் நிரூபித்திருக்கிறார் என்ற அவருடைய பதிலை தூக்கியெறிந்துவிட்டு மற்றொரு கேள்வியான பெண்கள் இல்லாத உலகம் பற்றிய கேள்விக்கான பதிலை எடுத்துக் கொள்ளலாம்.

அவர் சொல்லியிருந்த பதில் எவ்வளவு காலம் அப்படியிருக்க முடியும் ஒரு நூற்றாண்டுக்குள் உலகம் மடிந்துபோய்விடும்(Exact ஆன வரிகள் கிடையாது நினைவில் இருந்து சொல்கிறேன்) என்று சொன்னார். ஆனால் அறிவியல் இந்த அதிசயத்தைச் சாதித்தால் ஒருவேளை அந்த நபர் கேட்டிருந்த கேள்விக்கான பதிலாக சுஜாதா மற்றொன்றை சொல்லியிருப்பார் என்று நம்பலாம்.

ஆனால் உயிரினங்களில் சில அரியவகை உயிரினங்கள் அழியும் பொழுதே அவற்றைக் காப்பாற்ற பெரிய இயக்கங்கள் வரும்பொழுது இத்தனை நூற்றாண்டுகளாய் உலக இயக்கத்திற்கு வழி செய்த பெண்களை ஒழித்துவிடுவதும் கூட சைன்ஸ் பிக்ஷனிலேயே சாத்தியமாகலாம்.

Fri, 19 Oct 2007 04:40:00 GMT

கோவை பதிவர் சந்திப்பு – என் குறிப்புகள் (இரண்டாம் அமர்வு)

இரண்டாம் அமர்வு என்று போட்டாலும் விஷயம் ஆரம்பிப்பது, முதல் அமர்வின் முடிவிலிருந்து. சென்ஷி வாங்க கீழே போய்ட்டு வரலாம் என்று அழைக்க கிளம்பி கீழே வந்தோம். அங்கே உண்மைத் தமிழன், சுகுணா திவாகர், அவருடைய நண்பர், லிவிங் ஸ்மைல் வித்யா போன்றோர் நின்று கதைத்துக் கொண்டிருந்தனர். நான் சுகுணா திவாகரை சென்னை வலைபதிவர் சந்திப்பில் சந்திப்பதற்கு முன்னமே தொலைபேசியில் பேசியிருக்கிறேன். அதனால் கொஞ்சம் போல் அறிமுகம் உண்டு.

நேரடியாக விஷயத்திற்கு இறங்கி பின்நவீனத்துவ படைப்புக்களை(கவிதைகளை) எழுதுவதோடு மட்டுமல்லாமல், சாதாரண(என்னை மாதிரி) மக்களுக்கும் புரியும் வகையில் பின்நவீனத்துவக் கோட்பாடுகளை விளக்கும் விதமாக பதிவெழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அதற்கு உதாரணமாக ரமேஷ்-பிரேமின் பேச்சும்-மறுபேச்சும் புத்தகத்தைப் பற்றிச் சொல்லி அதுபோல நீங்கள் எழுதவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தேன். சுகுணா அவர்கள், பின்நவீனத்துவ ஜார்கன்’ஸ் இல்லாமல் எழுத முடியாது என்றும் முன்னமே சில பதிவுகள் இப்படி எழுதியிருப்பதாகவும் சொல்லிக் கொண்டிருந்தார். சென்ஷியும் கூட என்னமோ அவரிடம் கேட்டுக்கொண்டிருந்தார் என்னவென்று நினைவில் வரமறுக்கிறது.

செல்லா மதிய உணவிற்கு ஏற்பாடு செய்திருந்ததால், அவருடைய நபர் எங்களை அந்த ஹோட்டலுக்கு அழைத்துச் செல்ல காத்திருந்தார். ஆனால் சின்ன சின்ன குழுக்களாகப் பிரிந்து கௌதம் ஆர்கேட் வெளியில் பேசிக் கொண்டிருந்தார்களே ஒழிய யாரும் ஹோட்டலை நோக்கி நகர்வதாகத் தெரியவில்லை. பின்னர் வேறவழி நானே ஆரம்பித்து வைத்தேன் பயணத்தை. இந்தச் சமயத்தில் மேலிருந்து கீழே வந்த மா.சிவக்குமாருடனும் முகுந்துடனும் இணைந்து ஹோட்டலுக்குச் சென்றேன். பின்னர் தான் என்னிடம் மாட்டிக்கொண்டனர் இருவரும்; நான் போட்ட ரம்பத்தில் இரத்தம் சொட்ட சொட்ட அவர்கள் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தனர்.

முகுந்திடம் உபுண்டு உபயோகிக்க ஆசை இருப்பதாகவும் ஆனால் எங்கேயிருந்து தொடங்குவது என்றும் கேட்டேன். கம்ப்யூட்டர் உபயோகிக்கத் தொடங்கி இவ்வளவு ஆண்டுகள் ஆன பின்னரும் இன்னும் ஒரு OS நானாக இன்ஸ்டால் செய்திராத ரகசியத்தைச் சொல்லி. என்னைப் போன்ற ஆட்களுக்கு உதவ எதாவது இணையத்தளம் இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் உபுண்டு இணையத் தளத்திலேயே அனைத்து விவரங்களும் கிடைக்கும் என்று கூறினார்.

பின்னர் சிவக்குமாரிடம் நீங்கள் பங்குவணிகத்தில் ஈடுபடுகிறீர்களா என்று கேட்டு பின்னர் அதைப் பற்றி வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். முகுந்த் நான் பங்குச்சந்தைப் பற்றி தெரிந்துகொள்ள சோம. வள்ளியப்பனின் “அள்ள அள்ளப் பணம்” நன்றாகயிருக்கும் என்றார். தான் முதலில் கொஞ்ச காலம் நேரடி பங்கு வர்த்தகத்தில் இருந்தாலும் இப்பொழுதெல்லாம் மியூட்சுவல் பண்ட் தான் என்று சொல்லி கொஞ்சம் பயப்படவைத்தார். நான் பருப்பு மாதிரி வாழ்க்கையில் எப்பவும் தான் ரிஸ்க் எடுத்துக் கொண்டேயிருக்கிறோமே இதிலும் எடுப்போம் என்று கூறினேன். மா. சிவக்குமார் தன்னுடைய பாயாசத்தை என்னிடம் கொடுத்ததற்கு என்னுடைய ரம்பம் தான் காரணம் என்று நான் நினைக்கவில்லை.

திரும்பி வரும் வழியில் மா.சிவக்குமார் எஸ்கேப் ஆகிவிட முகுந்த், மற்றும் வித்யா பார்ட்னர்ஷிப்பில் வந்தேன். வித்யாவிடம் திருச்சியில் எந்தப் பக்கம் என்று விசாரித்துக் கொண்டிருந்தேன் பின்னர் முகுந்த் தான் பேச்சுலர்ஸ் மற்றும் மாஸ்டர் படித்த் “வரலாறை” எங்களிடம் சொன்னார். நாங்கள் மேலேறி வந்த பொழுது அங்கே குறைவான நபர்கள் தான் இருந்தனர், என் நினைவின் படி, சென்ஷி, உண்மைத் தமிழன், மா.சிவக்குமார், கோவை மணி, வினையூக்கி இவர்கள் தான் இருந்தனர்.

ஏற்கனவே முகுந்தையும் மா.சிவக்குமாரையும் ப்ளேடு போட்டு சக்க பார்மில் இருந்த என்னிடம் இந்த முறை மாட்டியது வினையூக்கி, சென்ஷி, அப்புறம் கோவை. மணி. வினையூக்கியிடம் எப்படிங்க உங்களால மட்டும் இத்தனை கதை எழுத முடியுதுன்னு ஒரு காலத்தில் எல்லோரும் என்னிடம் கேட்ட கேள்வியை நான் அவரிடம் கேட்க அவர் அந்த ரகசியத்தை விளக்கினார். நான் அவரிடம் பின்னர் ஏன் நீங்க இன்னும் நல்லா எழுதக்கூடாதுன்னு கேட்டதை மனிதர் ரசித்திருக்க மாட்டார் என்றே கருதுகிறேன். நான் என்னுடைய கனவான “ஒரு நல்ல சிறுகதை”க்கான அம்சங்கள் எப்படியிருக்க வேண்டும் என்று பதினைந்து நிமிடம் “உரை” நிகழ்த்தினேன். ஆனால் இதற்கெல்லாம் முன்னமே இந்த வரையறையை எல்லாம் நான் ஃபாலோ பண்ணுகிறேனா என்று கேட்கக்கூடாதென சொல்லியிருந்தேன்.

முடிக்கும் முகமாய் ஆபிதீன் எழுதிய “தினம் ஒரு பூண்டு” தான் இதுவரை நான் படித்ததிலேயே அதிகம் பிடித்த சிறுகதை என்று பில்டப் கட்டினேன். சிறுகதை மீதான என்னுடைய ஆசை காணாமல் போக்கும் பொழுதெல்லாம் அந்தக் கதையை ஒருமுறை படித்துவிட்டு இன்னும் நான் அந்தக் கதை பக்கத்தில் கூடவரவில்லையென்று மனதிற்குள்ளேயே சொல்லிக் கொண்டு என்னை சமாதானம் செய்துகொள்வேன் என்று கூறி அவர்களை அதிர்ச்சி அடைய வைத்தேன். ஏனென்றால் உட்கார்ந்திருந்த மூவரும் அந்தக் கதையை படித்திருக்கவில்லை.

இடைமறித்த சென்ஷி, ஒரு விஷயம் எழுதுறீங்கன்னா நாலு பேருக்கு போய்ச் சேரணும்னு நினைக்க மாட்டீங்களா என்று கேட்டார் நீங்கள் எழுதும் பதிவுகளுக்கு எத்தனை ஹிட்ஸ் வருகிறதென்றும் கேட்க நான், எனக்காகத் தான் நான் எழுதுகிறேன் என்றும் மற்றவர்கள் படிப்பதை படிக்காமல் இருப்பதைப் பற்றி கவலைப் படுவதில்லை என்று சொன்னேன். பின்னர் எப்படியோ விஷயம் பக்கத்தில் “பாரதியை” பற்றி எழுதியிருந்த விஷயத்திற்கு வந்தது. லக்ஷ்மி அதில் நான் ஒரு முன்முடிவுடனேயே விவாதத்தில் இறங்குவதாக சொல்லியிருந்ததை நினைவுபடுத்திய சென்ஷியிடம். ஆமாம் நான் சரி என்று தீவிரமாக நம்பும் ஒரு விஷயத்தைப் பற்றித்தான் எழுதமுடியுமே தவிர, நான் தவறு என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு ஆனால் சரியென்று ஒருவிஷயத்தை என்னால் எழுத முடியாதென்றும் அதனால் முன்முடிவுகளை மறுக்கமுடியாதென்றும் சொன்னேன்.

பாரதியின் திருமணத்தைப் பற்றி முன்னம் பதிவில் பின்னூட்டம் போட்டிருந்ததையே இன்னொரு முறை சொன்னேன். நாங்கள் இப்படி பேசிக்கொண்டிருப்பதை தூரத்தில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த மா.சிவக்குமார் நான் மெஷின் போல் பேசுவதாக கம்ப்ளெய்ண்ட் செய்தார்.

பின்னர் அப்படி இப்படி என அடுத்த அமர்வு தொடங்கியது. முகுந்த் எ-கலப்பை, தமிழ்விசை, அதியன், மீபோ பற்றிய நல்லதொரு அறிமுகத்தைக் கொடுத்தார். எப்படியென்றால் தீவிர இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஃபேன் ஆன நான் தற்சமயம் பயர் பாக்ஸில் உட்கார்ந்து டைப் செய்து கொண்டிருக்கிறேன் என்றால் காரணம் அவருடைய செஷன் தான். பத்திரிக்கையாளர்களோ இல்லை வீடியோ எடுப்பவர்களோ இல்லாததால் என்னமோ ரொம்பவும் பழகியவர்கள் சொல்லித்தருவது போலத்தான் இருந்தது.

இடையிடையில் என்னுடைய தேவை காரணமாக வெளியில் சென்று சென்று வந்துகொண்டிருந்தேன். முகுந்த் முடித்ததும் சிவக்குமார் Joel on software பற்றி ஆரம்பித்தார்; சொல்லப்போனால் வலைபதிவு கன்டென்ட் எப்படி இருக்கலாம் என்பதைப் பற்றித் தான் பேசினார் என்று வைத்துக்கொள்ளலாம். நான் ரொம்ப காலமாக ஜாவாவில் ப்ரொக்கிராம் எழுதுவதைப் பற்றி, ப்ரோஜெக்ட் செய்வதைப் பற்றி, இன்டர்வியூவிற்கு பிரிபேர் செய்வது பற்றி தமிழில் எழுதலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதை ஒரு தொடக்க நிலையிலாவது கொண்டுவந்து வைக்க வேண்டும் என்பதைப் பற்றி தீவிரமாக யோசித்து வருகிறேன்.

பின்னர் பாலபாரதி வீடியோ கான்ப்ரன்ஸ் செய்ய முயற்சிகள் தொடங்க, பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த மா.சிவக்குமார் “ழ” கணிணியில் இருந்தவர் என்பதால் எனக்கு இருந்த சில கேள்விகளைக் கேட்டேன் அவரும் “அரசியல்” எதுவும் இன்றி விளக்க்கினார். நண்பர்களுடன் இன்னும் உரையாட வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் இருந்தாலும்(;)) நான் செய்து கொண்டிருந்த அரேஞ்மென்ட்கள் அதற்கு உதவாததால். சிறில் அலெக்ஸுடன் மற்றவர்கள் பேச ஆரம்பிக்கும் பொழுதே நான் கிளம்ப வேண்டி வந்தது.

இவர்களைப் பற்றி ஓரிரு வார்த்தைகள்.

* சென்ஷி நிறைய சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறேன். அதை அவரிடமும் சொன்னேன். ஆளு ரொம்ப நரம்பாயிருக்கிறாரு.

* வினையூக்கி ரொம்பவும் தீவிரமாக எல்லோரும் பேசுவதை கவனித்து வருகிறார்.

* மா.சிவக்குமார் ரொம்பவும் ஆப்டிமிஸ்டிக்காக இருக்கிறார். பழகுவதற்கு இனிய மனிதர்; ப்ரொபைலில் இருக்கும் படத்தில் ஏன் கண்ணாடி இல்லாமல் இருக்கிறார் என்று தெரியவில்லை. கண்ணாடியுடன் இருக்கும் பொழுது இன்னும் பிரகாசமாகயிருக்கிறார்.

* பாலபாரதி ஒரு இடத்தில் நில்லாமல் ஓடிக்கொண்டேயிருந்தார். அவர் ரூமிற்குள் உட்கார்ந்திருந்த நேரம் குறைவாகத் தான் இருக்குமென்று நினைக்கிறேன்.

* பாமரன் ரொம்பவும் ப்ராக்டிகலான ஆளாகயிருப்பார் என்று நினைக்கிறேன். ஸ்பாண்டேனியஸ்ஸாக அவர் அடிக்கும் கமெண்ட்கள் நன்றாகயிருக்கின்றன.

* உண்மைத் தமிழன் ரொம்பவும் மெதுவாகப் பேசுகிறார், இதை வருத்தத்துடன் அவரிடம் சொன்னேன். இங்கே பதிவெழுதும் ஆளுக்கும் சந்திப்புக்களில் பார்க்கும் ஆளுக்கும் எனக்கென்னமோ வித்தியாசம் இருப்பதாகப்பட்டது.

* ராஜாவனஜ் மதியம் முகுந்த் பேசிக்கொண்டிருக்கும் பொழுது கடைசி பெஞ்ச் மாணவன் போல் தூங்கிக்கொண்டிருந்தார். நான் வீடியோ எடுத்து வைத்திருக்கிறேன் அதை.

* முகுந்த் துறுதுறுவென இருக்கிறார் எறும்புகள் குழுவில் இருந்த பழக்கமோ தெரியாது. இவரை நிறைய எழுதச் சொல்லி வற்புறுத்தினேன்.

* செல்லா மற்றும் இன்னும் சிலரை பார்க்கமுடியவில்லை என்ற வருத்தம் உண்டு.