காந்தி, உள்குத்து, அரசியல், கொடசாத்ரி, புகைப்படங்கள், Life of others, பீத்தோவான், லெனின், மாக்ஸிம் கார்கி

கேள்வி கேட்பவர் – சார்! சமீபத்தில் மோகன்தாசு கரம்சந்த் காந்தி செத்துப் போனதப் பத்தி உங்களுக்கு இருக்கிற மனவருத்தங்களைப் பதிவு செஞ்சீங்களே! ஏன்?

பதில் சொல்பவர் – காந்தி செத்துப் போனதப் பத்தி எனக்கு ஒரு ஒப்பீனியன் இருக்கில்லையா அதை என்ன செய்யறது. அதான் வைச்சேன்!

கே.கே – காந்தி செத்துப் போய் 60 வருஷம் ஆய்டுச்சே அதை இப்பத்தான் வைக்கணுமா?

ப.சொ – இங்கப் பாருங்க காந்தி செத்துப் போனதிலிருந்து நான் பிஸியா இருக்கேன் – ப்ளாக்கில் ‘குசு’ விட்டதையெல்லாம் எழுதும் அளவிற்கு எனக்கு நேரம் கிடையாது. பாருங்க. காந்தி செத்துப் போனது தெரியும். காந்தி செத்துப் போனதில் இருந்து வரும் விமர்சனங்கள் எல்லாம் படிச்சிட்டு வர்றேன். ஆனால் பிசியா இருக்கேனே, உங்கள மாதிரி வெட்டியாவா இருக்கேன் சொல்லுங்க.

கே.கே – அதுக்காக காந்தி சாவுக்கு வருத்தம் தெரிவிக்கிறது ஓவரா தெரியலையா உங்களுக்கு?

ப.சொ – யோவ்! தமிழ்ல தான சொல்றேன்! காந்தி செத்தது மனசை உறுத்துற விஷயம். அவர் மரணத்தோடு சம்மந்தப்பட்டு எனக்கான கொள்கைகள் இருக்கு. என்ன காரணமானாலும் அதை ஒதுக்க முடியாது. ஆயிரம் தான் காந்தியோட சில விசயங்களில் உடன்பாடு இல்லாட்டாலும் காந்தி சாவு வருத்ததிற்குரியது! அதுமட்டுமில்லாமல் நான் என்ன நினைக்கிறேன்னு பதிவு செய்து வைக்கணும் இல்லையா?

கே.கே – அதுக்காக அறுபது வருஷம் கழிச்சா?

ப.சொ – ங்கொய்யால, காந்தி செத்ததைப் பத்தி நான் என்ன நினைக்கிறேன் தெரிஞ்சிக்கிறதுக்கு என்னையறிந்த நண்பர்கள் எவ்வளவோ பேர் இருக்காங்க அவங்களுக்காகத்தான் வைக்கிறேன். வந்துட்டாங்க்ய கேள்வி கேட்டுக்கிட்டு.

PS: இப்பல்லாம் வாரத்துக்கு ஒரு பதிவு போடுறதுக்குள்ளையே நுரை தள்ளுது. இரண்டு மூணு மாசத்துக்கெல்லாம் பதிவே எழுதாம இருந்தா எப்படியிருக்கும் என்று யோசித்ததால் வந்த விளைவு. மேற்சொன்ன கற்பனை உரையாடல், யாரையும் குறிப்பிடுவதல்ல.

——————————

இடையில் வந்து மூன்று நாட்கள் இடைவெளியில் கொடசாத்ரி சென்று வந்தோம். கொடசாத்ரி பெங்களூரில் இருந்து 500 கிமீ இருவழி 1000 கி.மீ. ஊர் சுற்றுவது தான் எனக்கொன்றும் புதிதில்லையே, ஆனால் இந்த முறை கொஞ்சம் மாற்றம் தோழர் Comet வாங்கியிருந்ததால் வெட்டியாக நின்று கொண்டிருந்தTB(Royal Enfield – Thunderbird (350 cc))யில் நீர் வாறீரா என்று கேட்டார். அதற்கு முன் ஒரு 1000 கி.மீ அவருடன் அந்த வண்டியில் சென்றிருந்தாலும் ஓட்டியதில்லை. அதுமட்டுமல்லாமல் 400D வாங்கியதில் இருந்து ரிஸ்க் எடுக்க பயந்து கொண்டு அவருடன் TBயில் போகக்கூட இல்லை. ஏனென்றால் இதுபோல் 1000 கிமீ காட்டு வழி பயணங்களில் கீழே விழுவது என்பதெல்லாம் சர்வ சாதாரணமானது. துடைத்துவிட்டுக் கொண்டு திரும்பவும் பில்லியனில் உட்கார்ந்து கொள்ள வேண்டும்.

நாம விழுந்தாலும் பரவாயில்லை காமெரா விழுந்தால் சரிவராது என்று தான் அவருடன் பயணம் மேற்கொள்ளவில்லை, ஆனால் இந்த ஆஃபர் நன்றாகயிருந்தது. என் சொந்த ரிஸ்கில் நான் TB ஓட்ட காமராவுடன் செல்ல வேண்டும் என்பது. சரி வண்டியக் கொடுங்க ஓட்டிப் பார்க்கிறேன் என்று சொல்லி வாங்கிவிட்டு இரண்டு கிமீ ஓட்டிப் பார்த்துவிட்டு ‘வர்றேன் தல’ என்று சொல்லி 1000 கிமீ ஓட்ட தயாரானேன். 🙂 மூன்று நாட்களுக்கான உடைகள், வண்டிக்கான விஷயங்கள் எல்லாம் பையில், காட்டில் எங்கும் தங்க வேண்டி வந்தால் தங்குவதற்காக டெண்ட் ஒன்று. என்னுடைய ட்ரைபாட் எல்லாவற்றையும் கட்டியதும் ஒரு மஸ்த் லுக் வந்தது வண்டிக்கு.

பெங்களூரில் இருந்து குனிஹல், ஹசன், பெலூர், சிக்மகலூர், ஸ்ரீரிங்கேரி, ஆகும்பே, சோமேஷ்வர், கொல்லூர், கொடசாத்ரி, ஷிமோகா, பெங்களூர் என்று 1000 கிமீ தூர பயணம். ஆகும்பேயிலும், கொடசாத்ரியிலும் Travelers Bungalowவில் இரவு தங்கியிருந்தோம்.

இதில் குறிப்பிட வேண்டியது கொடசாத்ரி மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்குப் போகும் 20 கி.மீ தொலைவு நான் TBக்கு புதியது என்பதால் என்னை கொல்லூரிலேயே வண்டியை விட்டுவிட்டு ஜீப்பில் வரச்சொல்லிவிட்டனர், இதில் தோழர் வேறு Cometஐக் கொண்டுபோய் மலைப்பாதையின் கொமட்டில் குத்தியதால், அவரும் வர இந்த அதிர்ச்சி நிகழ்வால் பாதிக்கப்பட்ட இன்னும் இரண்டு நபர்களும் ஜீப்பில் வர மொத்தம் கிளம்பிய ஏழு வண்டிகளில் கொடசாத்ரிக்கு ஏறியது மூன்று பைக்கள் தான். இன்னொரு Cometம், இரண்டு கரீஸ்மாக்களும். எனக்கு அந்த மலைப்பாதையில் வண்டியில் ஏறவேண்டும் என்பதெல்லாம் பெரிய ஆசை கிடையாது, ஆனால் மற்ற இரண்டு பல்ஸர் காரர்களுக்கும் அந்த ஆசை உண்டு ஆனால் வழிப்பாதையைப் பார்த்துவிட்டு இதிலெல்லாம் வண்டியை ஓட்ட முடியாது என்ற முடிவிற்கே வந்துவிட்டனர்.

சொல்லப்போனால் ஜீப்பில் உட்கார்ந்து கொண்டு அந்த மலை மேல் ஏறி கீழிறங்கியதே பெரிய விஷயமாய் பட்டது செய்து முடித்ததும். அசாத்திய திறமை இல்லாமல் அந்த மலையில் நடந்தே ஏறமுடியாது எனும் பொழுது டூவீலர் ஓட்டுவதோ ஜீப் ஓட்டுவதோ அசாதாரணம். ஏன் சொல்கிறேன் என்றால் நாங்கள் கொடசாத்ரி மலைமேல் ஏறி சன்செட் பாய்ண்டிற்கு போக அழுப்புப் பட்டுக் கொண்டு அங்கிருந்தே சன்செட் பார்த்துமுடித்த பிறகு வந்த ஒரு கும்பல் இரண்டு ஜீப்களிலும் ஒரு ஜிப்ஸியிலும் வந்தது. அதில் ஒரு ஜீப்பை ஓட்டிக் கொண்டு வந்தது ஒரு பெண்! மூன்று வருடங்களுக்கு எல்லாம் முன்பென்றால் உடனே கீழேயிறங்கி TBயை எடுத்துக் கொண்டு மேலே வந்திருப்பேன், ஆனால் இப்ப அதையெல்லாம் செய்யறதில்லை. ஹாஹா.

பின்னர் அவர்களும் எங்களைப் போலவே திங்கட்கிழமை காலை கொடசாத்ரியில் இருந்து கிளம்பி, கீழே வந்து பெங்களூர் வந்தார்கள். காலை 11லிருந்து இரவு 2 மணி வரையான அந்த பயணத்தில் நாங்கள் சந்தித்துக் கொண்டேயிருந்தோம். அவர்கள் சாயா சாப்பிடும் சமயத்தில் நாங்கள் ஓவர்டேக் செய்வது நாங்கள் சாயா சாப்பிடும் நேரத்தில் அவர்கள் ஓவர்டேக் செய்வது என வெறும் சாயாவும் ஓவர்டேக்குமாக சென்றது. அன்றைக்கு இருந்த களைப்பில் ஒன்பது மணிக்கெல்லாம் தூக்கக் கலக்கம் வேறு. சத்தமாய்(TBயின் சத்தத்தையும் தாண்டி) பாட்டு பாடிக் கொண்டே வண்டி ஓட்டினேன், ஏறக்குறைய எல்லாரும் இது போல் ஏதோ ஒன்றை செய்து கொண்டிருந்தனர் என்று கேள்விப்பட்டேன். ஒருவர் தனக்குத்தானே ரன்னிங் கமெண்ட்டரி மற்றும் பாட்டு என. எப்படா ஐம்பது கிமீ தாண்டும் சாயா குடிக்கலாம் என காத்திருந்தோம். அருமையான பயணம் அது. யாருமில்லாத ரோட்டில் மணிக்கு 80/90 கிமீ வேகத்தில் ஏழு பேரும் குறிப்பிட்ட இடைவெளியில் வந்த பயணம் மனதை ரம்மியப்படுத்தியது.

தும்குரில் Coffee dayயிலும் அந்த ஜீப் மக்களை சந்தித்தோம், அங்கிருந்து பெங்களூர் வரை எல்லோரும் ஒன்றாகத்தான் வந்தோம் ஏனென்றால் அத்தனை கண்டெய்னர்கள். ஒரு அற்புதமான பயணம்.

சில கொடசாத்ரி புகைப்படங்கள்

Sunset

IMG_6232

IMG_6249

Pepper Garden

'Smart' Boy

'Smart' boy

Landscape

பாரதி கண்ட 'ஜீப் ஓட்டும்' பெண்

Johny

மேலும் கொடசாத்ரியில் பயணத்தில் எடுத்த படங்கள், எந்தவிதமான Post productionம் இல்லாமல் இங்கே அதனால் Only for personal use.

Life of others என்றொரு ஜெர்மன் படம் பார்த்தேன், கிழக்கு/மேற்கு என்று ஜெர்மனி பிளவுபட்டு இருந்த காலக்கட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். என்னைக்கேட்டால், “Sonata for good man” என்பதையே தலைப்பாக வைத்திருக்கலாம் என்று சொல்வேன். அருமையான படம், ஈரானிய படங்களைப் போல “பிரச்சனைகளை நேரடியாகச் சொல்லிச் செல்லாமல் மறைமுகமாக மெல்லிய புன்னகையை பரவவிட்டு” சொல்லிச் செல்கிறது படம்.

லெனின் ஒரு முறை பீத்தோவானின் சிம்பொனியைக் கேட்டுவிட்டு சொன்னதாக மாக்ஸிம் கார்க்கி நினைவு கூர்ந்த, “இந்த இசையைக் கேட்பதைத் தொடர்ந்தால் நான் என் தொடங்கியிருக்கும் புரட்சியை முடிக்க முடியாது போலிருக்கிறது” என்றாராம்.

Maxim Gorky’s anecdote about Lenin listening to Beethoven’s Appassionata Gorky wrote:

I know of nothing better than the Appassionata and could listen to it every day. What astonishing, superhuman music! It always makes me proud, perhaps naively so, to think that people can work such miracles!” Wrinkling up his eyes, Lenin smiled rather sadly, adding: “But I can’t listen to music very often. It affects my nerves. I want to say sweet, silly things and pat the heads of people who, living in a filthy hell, can create such beauty. One can’t pat anyone on the head nowadays, they might bite your hand off. They ought to be beaten on the head, beaten mercilessly, although ideally we are against doing any violence to people. Hm—– what a hellishly difficult job!

கதை இதன் பின்னாலேயே சுழல்கிறது, மிக முக்கியமான ஒரு முடிச்சி இதன் பின்னணியில் நிகழ்கிறது. க்ளைமாக்ஸில் “Sonata for good man” புத்தகத்தை வாங்கும் படத்தின் ஹீரோவிடம் கடையின் உரிமையாளர், கிஃப்ட் ராப்பர் சுற்றித் தரவா என்று கேட்கும் பொழுது, ஹீரோ சொல்லும் இல்லை இந்தப் புத்தகம் எனக்காக என்று சொல்கிறார். உண்மையில் யாருக்கும் தெரியாமல் அந்தப் புத்தகம் அவருக்காக சமர்ப்பணம் செய்யப்பட்டது தான். மெல்லிய நகைச்சுவை ஒன்று எப்பொழுதுமே படம் முழுவதும் நம்முடன் தொடர்கிறது. அருமையான படம் பார்க்கத் தவறாதீர்கள். Adults only தான் என்றாலும் மோசமில்லை மனைவியையோ காதலியையோ அழைத்துச் செல்லலாம். 🙂

கோவை பதிவர் சந்திப்பு – என் குறிப்புகள்

நான் தங்கியிருந்த காந்திபுரத்திலிருந்து சந்திப்பு நடைபெற்ற RS-புரம் எப்படி வரவேண்டும். ஆட்டோவிற்கு எவ்வளவு கொடுக்கலாம் என்றெல்லாம் செல்லாவிடம் ஞாயிறு காலை 9 மணிக்கே(!!!) போன் செய்து கேட்டுக்கொண்டு தான் கிளம்பினேன். எனக்கு இரண்டாவது ப்ளோரில் நடப்பதாக தெரியாததாலும், கௌதம் ஆர்கெட் ஒன்பதரை மணிக்கு ஆளோருவரும் உள்ளிருப்பதைப் போன்ற தோற்றத்தை தராததாலும்; பக்கத்தில் இருந்த பேங்கிற்கு சென்று ஏடிஎம்-ல் காசை உருவி(எனக்கு முன்னர் காசை எடுத்துவிட்டு சென்ற நபர் கார்டை விட்டுவிட்டுச் சென்றிருக்க – என்னிடம் வேறு டிரான்ஸாக்ஷன் செய்யணுமா என்று அந்த நபரின் கார்டில் கேட்டதும். உடனடியாக புரிந்துகொண்டு கார்டை எடுத்துக்கொண்டு வெளியில் வந்து – அந்த நபரிடம் கொடுத்து “புண்ணியம்” சேர்த்துக் கொண்டேன்)வந்தேன்.

பின்னர் இன்னொரு தடவை அந்த பில்டிங்கின் எதிரில் வந்து பார்த்துவிட்டு இன்னமும் ஆள் நடமாட்டம் இல்லாததால் – மேங்கோ ஜூஸ் ஒன்றை பக்கத்தில் இருந்த பழமுதிர்ச் சோலையில் குடித்துவிட்டு; இனி வேலைக்காகாது என்று செல்லாவிற்கு தொலைபேச. அவர் மேலை போங்காணும் – கீழே நின்று என்னத்த பராக் பார்க்கிறீர் என்று சொன்னதும் தான் 2ஆவது ப்ளோருக்கு வந்தேன். எனக்கு முன்பே மா.சிவக்குமார், பாலபாரதி, வினையூக்கி, உண்மைத் தமிழன், சென்ஷி, எ-கலப்பை முகுந்த் அப்புறம் இன்னும் ஒருவர் பெயர் நினைவில் வரமறுக்கிறது, கண்ணாடி போட்டிருந்தவர் கவிதை எழுதுபவராக தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டவர், போன்றவர்கள் இருந்தனர்.

வழக்கம் போல் நான் தான் மோகன் தாஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு உட்கார்ந்தேன்; அந்தச் சமயத்தில் பார்ட்னர்ஷிப் கொடுத்தது சென்ஷி. தான் வலையுலகத்திற்கு எப்படி வர நேர்ந்தது என்பதைப் பற்றி நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது தான் பாலா, செல்லாவிற்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் வரமுடியாத நிலையில் இருப்பதை சொன்னார். பின்னர் உதயசெல்வி அவரது கணவருடன் வந்தார் அவரிடம் நாங்கள் ஒருமுறை அறிமுகம் செய்து கொண்டோம். முகுந்த் நாங்கள் ஒவ்வொருவரும் திரட்டிகளில் இருந்து எதிர்பார்ப்பது எதை என்பதைப் பற்றி கேட்க சொல்லிக்கொண்டிருந்தோம்.

நான் சொன்னது தமிழ்மணத்தின் ஒரு விண்டோ என் ஸ்கிரீனில் எப்பொழுதும் இருக்குமென்றும் தேன்கூட்டை, அதிகம் பேர் பார்வையிட்ட பதிவுகளைப் பார்ப்பதற்காகவும் கில்லி பரிந்துரைகளை பார்ப்பதற்காகவும் பயன்படுத்துவதாகச் சொன்னேன். சமயங்களில் தமிழ்ப்ளாக்ஸ் பார்ப்பேன் என்றும், பின்னர் நானே உருவாக்கிக்கொண்ட iGoogle பற்றிச் சொல்லி அது எப்படி எனக்குப் பயன்படுவதாகச் சொன்னேன்.

பின்னர் ஒன்றிரண்டாய் ஆட்கள் வந்து சேர்ந்தார்கள். சுப்பையா அவர்களும் கோவை ரவி அவர்களும் வந்ததும் சூடுபிடித்தது என்று நிச்சயமாய்ச் சொல்லலாம். அவர் தான் எப்படி பதிவெழுத வந்தது எப்படி இருந்தது தன் அனுபவம் எப்படி படிப்படியாய் மக்களுக்கு ஏற்றவாறு தன்னுடைய பதிவை மாற்றிக்கொண்டார் என்பதைப் பற்றி கொஞ்சம் பெரிதாய்(;)) தன்னுடைய தெளிவான குரலில் சொன்னார். இந்தச் சமயத்தில் தான் பாமரனும் அவருடைய நண்பர்களும்(செகுவாரா அவருடைய மகன் – இதை நான் படித்திருக்கிறேன்) வந்தார்கள். அதில் ஒருவர் செகுவாராவின் படத்தை கலரில் கருப்பு பேக்ரவுண்டில் போட்டிருந்தார் நன்றாகயிருந்தது.(பின்ன பொண்ணுங்க மட்டும் தான் மத்தவங்க போட்டிருந்த புடவை நன்றாகயிருந்தது என்று எழுதணுமா என்ன?) ஆனால் எனக்கு நான் ப்ரொபைலில் போட்டிருக்கும் செகுவாரா படம் போட்ட டீஷர்ட் வாங்கத்தான் ஆசை. இங்கே கருடா மாலிலும், போரமிலும்(Forum) அப்படி செய்து தருபவர்கள் இருக்கிறார்கள்; செய்யணும்.

பாமரன் வந்ததும் இசைக்கலைஞர் ஆறுமுகம் வந்தார் என்று நினைக்கிறேன். பின்னர் பாமரன் மெதுவாக பாலபாரதியிடம் ஆரம்பிக்கலாமா என்று கேட்டுக் கொண்டிருந்தார். ஒரு ப்ரொபஷ்னலான உரையாடலுக்கு முன்னர் ஆறுமுகம் அய்யா; உட்கார்ந்ததுமே தன்னை அறிமுகப்படுத்துக் கொண்டு பேச ஆரம்பித்தது நன்றாகயிருந்தது. நான் ஆறுமுகம் அவர்களுடனான பாமரன் அவர்களின் உரையாடலுக்குப் பிறகு பாமரன் அவர்களிடம், நீங்கள் அவரிடம் வேறுமாதிரியான கேள்விகள் கேட்டு வேறுமாதிரியான அனுபவங்களை சொல்லச் சொல்லியிருக்க வேண்டும் என்று சொன்னேன். ஆறுமுகம் அய்யா தன்னுடைய ப்ரொபஷ்னல் உரையாடலில் “ராமன்”ஐ பற்றி பேச ஆரம்பித்ததுமே ராஜா வனஜ் எஸ்கேப் ஆகிவிட்டிருந்தார். இதை பக்கத்தில் உட்கார்ந்திருந்த சென்ஷியிடம் சொல்லிக் காட்டினேன்.

என்னால் ஒருவகையில் ஆறுமுகம் அவர்கள் வைத்த வாதத்தை தவறாகச் சொல்ல முடியவில்லை ஏனென்றால், அவருடைய வயதை கருத்தில் கொண்டும் அந்தக் காலத்தில் அவர் வாழ்ந்து வந்த முறைகளைக் கொண்டும் என்னால் அவர் சொல்லிய விஷயங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஏனென்றால் நானும் என் அப்பாவுடன் உரையாடுவதுண்டு ஒரு(number) ஜெனரேஷன் இடைவெளியின் தாக்கமே பெரிதாக இருக்கும் பொழுது. அங்கிருந்த பலருடன் அவருடைய ஜெனரேஷன் இடைவெளி அதிகமாக இருந்திருக்கும். என்னைப் பொறுத்தவரை அவரிடம் வேறு வித்தியாசமான கேள்விகள் கேட்டிருக்கலாம். நான் பாமரனைக் குறை சொல்லவில்லை அவரும் உரையாடல் வேறு திசையை நோக்கிப் போகும் பொழுதெல்லாம் தன்னால் முடிந்தவரை எங்களுக்கு இடையிலான ஜெனரேஷன் கேப்பை சரிசெய்ய முயன்றார். ஆனால் பேட்டி எடுப்பவர்களுக்கான ரெஸ்டிரிக்ஷன்; எனக்கு நான் மாங்காயாக இருப்பதால் புரியுமென்பதால் அக்செப்டட்.

இந்தச் சமயத்தில் தான் பாலபாரதிக்கும், ஆறுமுகம் அவர்களுக்கும், செந்தழல் ரவிக்கும் சுப்பையா அவர்கள் பொன்னாடை போற்றினார். இதுவும் ஒரு ஜெனரேஷன் கேப் தான் நிச்சயமாய், ஆறுமுகம் அய்யா பற்றி தெரியாவிட்டாலும் பாலபாரதியும் ரவியும் இதை எதிர்பார்த்திருக்க(விரும்பியிருக்க) மாட்டார்கள் என்றே நம்புகிறேன். அடுத்த இதைப் போன்ற சந்திப்புக்களில் இந்த விஷயத்தை செய்ய வேண்டாம் என்று இந்தச் சமயத்தில் கேட்டுக் கொள்கிறேன். இதனாலெல்லாம் நான் பாலபாரதியின், ரவியின் சேவைகளை பாராட்ட வேண்டாம் என்று சொல்லவில்லை; இப்படித் தொடர்ந்தால் நாளை ஒரு மீட்டிங்கின் பொழுது ஆளாளுக்கு நான்கைந்து பொன்னாடைகளை எடுத்துவந்து வலைபதிவர் மீட்டிங்கையும் அரசியல் மேடையாக ஆக்கிவிடும் சூழ்நிலை பிரகாசமாகத் தெரிகிறது.

இந்தச் சமயத்தில் தான் ரவி வந்திருந்தார், அப்படியே சுகுணா திவாகரும். இதற்கெல்லாம் கொஞ்சம் முன்னர் லிவிங் ஸ்மைல் வித்யாவும் வந்து சேர்ந்திருந்தார். பின்னர் ரமணி அவர்களின் பின்நவீனத்துவம் பற்றிய பேச்சு; ஓரளவிற்கு இந்தக் காலக் கட்டங்களில், மையம், விளிம்புநிலை, அமேரிக்க மேலாதிக்கம் பற்றி தெளிவாகத் தெரியுமென்று சொல்ல முடியாவிட்டாலும் அப்படின்னா என்ன என்று புரியுமாதலாலும், தீவிரமாக பின்நவீனத்துவத்தைப் பற்றிய என்னுடைய புரிதல்களை அதிகமாக்க வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டிருப்பதால்; தீவிரமாக கவனிக்கத் தொடங்கினேன்.

என் N73ல் அதனுடைய சில பிரச்சனைகளுக்கு இடையிலும் இவருடைய பின்நவீனத்துவ உரையாடல் ஓரளவிற்கு என்னிடம் MP4 பைலாக இருக்கிறது. செல்லா வீடியோகிராபரை ஏற்பாடு செய்திருந்ததால்; அவர் இதை வலையேற்றுவார் என்று நினைக்கிறேன். அப்படி இல்லை என்றால் என்னிடம் இருப்பதை வலையேற்றுகிறேன். இந்த பின்நவீனத்துவ உரையாடலைப் பற்றி சுகுணா திவாகர் ஏற்கனவே எழுதிவிட்டார். அதனால் அதற்குள் அத்தனை தீவிரமாகப் போகவில்லை.

நிறைய விஷயங்களைப் பற்றிய அறிமுகம் கிடைத்தாலும் ‘பின்நவீனத்துவத்திற்கான’ அறிமுகமாக இந்த உரையாடலை வைத்துக் கொள்ளலாம். அதுவும் கடைசியில் அவர் நவீனத்துவத்தின் பிரச்சனைகளையும் அது எப்படி சரியில்லை என்றும் சொன்னார் ஆனால் பின்நவீனத்துவம் எப்படி இந்தப் பிரச்சனைகளை சரி செய்கிறது என்பதை சொல்லவில்லை(அப்படின்னு நினைக்கிறேன்). ஆனால் ராஜா வனஜ், சுகுணா திவாகர், முகுந்த் மற்றும் நான் இடையிடையே நிறைய கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தோம். அவ்வப்போது மா. சிவக்குமாரும் தன்னுடைய புரிந்துணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார்.

இந்த உரையாடல் அப்படியே ரிலையன்ஸ் ப்ரஷ் மற்றும் மேற்கு வங்காளப் பிரச்சனை என பல தரப்புகளில் விவாதம் சூடுபிடித்தது. அந்தச் சமயம் ஹிந்துவின் நிருபராக வந்திருந்தவரும் தன்னுடைய பங்கிற்கு சில விஷயங்களைப் பற்றிய தன்னுடைய புரிதல்களைச் சொன்னார். இந்த மாதிரி விவாதங்களில் முதலில் கருத்தைச் சொன்னவர் விவாதத்தை தள்ளி நின்று வேடிக்கைப் பார்ப்பது அவ்வளவு சரியாகயிருக்காது அதைப் போலவே ஒரு இனிஷியேட்டிவ்வை நான் கொடுத்திருக்கிறேன், நீங்கள் யோசித்து தீர்வை நோக்கி நகர்த்துங்கள் என்று விலகி உட்காருவது எந்த அளவிற்கு சரிவரும் என்று தெரியவில்லை.

இந்த விவாதம் முடியும் தருவாயில், சுப்பையா அவர்கள் மாற்றங்களுக்கா நாமெதுவும் செய்யவேண்டுமென்ற அவசியம் இல்லை மாற்றம் அதுவாய் ஏற்படும் என்றும். நீங்களெல்லாம் நம்ப மாட்டீர்கள் என்றாலும் “கடவுள்” அந்த மாற்றம் ஏற்பட ஏதாவது செய்வார் என்பதையோ இல்லை அதை ஒத்ததையோ சொன்னார். நான் “தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா” அப்படின்னு சொன்னதை எத்தனை பேர் கவனித்தார்கள் என்று தெரியாது. கடவுள் பற்றி அவருடைய பேச்சுக்கும் எதிர்வாதம் வைத்தேன்; பாமரனும் நக்கலாக ஒரு வார்த்தைச் சொல்லி நிறுத்தினார்.

இதற்கெல்லாம் இடைப்பட்ட காலத்தில் நிறைய விஷயங்கள் நடந்தது, அதாவது சின்னச் சின்ன விஷயங்கள். பாலபாரதி தன்னுடைய கத்தி போன்ற பற்களால் கடித்து(;)) ஒரு பார்சலைப் பிரித்து எல்லோருக்கும் நோட் புக்கும் பேனாவும் கொடுத்தார். நான் மட்டும் “நானெல்லாம் காலேஜிலேயே நோட் எடுக்க மாட்டேன்” என்று சொல்லி தவிர்த்துவிட்டேன். எனக்குத் தெரிந்து நன்றாய் நோட்ஸ் எடுத்தவர்கள்(நான் பார்த்தவரையில்) சென்ஷி, மற்றும் வினையூக்கி. செந்தழல் ரவி, பின்நவீனத்துவ ஓவியம் ஒன்றை வரைந்திருந்தார் இடைப்பட்ட இந்த நேரத்தில். நான் அவர் வரைந்திருந்த அந்த ஓவியத்தில் பின்நவீனத்துமே இல்லை என்றும். அந்தப் படம் பின்நவீனத்துவ ஓவியமாக ஆக என்ன செய்யவேண்டும் என்றும் சொன்னேன்; அவர் முறைக்க எக்ஸ்கேப் ஆகினேன்.

கேட் பெர்ரீஸ் சாக்லேட்டும், டீயும் கொடுக்கப்பட்டது(இது முதல் ரவுண்ட்) நான் சாக்லேட் சாப்பிடக்கூடாது என்று தீவிரமான உத்தரவு ஒன்று நிலுவையில் உள்ளதால் சாயாவை மட்டும் குடித்துவிட்டு பேசாமல் உட்கார்ந்துவிட்டேன். பாமரனின் “நக்கல்” தொணித்த ஒன்றிரண்டு வரி கமெண்ட்களை ரசித்தேன்.

இப்படியாக முதல் அமர்வு நிறைவு பெற்றவுடன், கிளம்பிய சுப்பையா அவர்களும் கோவை ரவியும், ஹிந்து பேட்டிக்காக மீண்டும் வந்து உட்கார இன்னொரு இன் – பார்மலான பார்மல் பேட்டி ஒன்று நடந்தேறியது. நானும் பாலாவும் முதலில் பின்னூட்டத்திலும் பின்னர் தொலைபேசியிலும் விவாதித்த பிரச்சனை இன்னொரு முறை கிளப்பப்பட்டது. இந்த முறையும் நான் “எனக்கு” சரியென்று பட்டதை சொன்னேன். பின்னர் விவாதம் வேறுபக்கமாக திரும்புவதாக மா.சிவக்குமார் விளக்க மீண்டும் விவாதத்திற்கு வந்தோம்.

முகுந்த், முன்னர் ஒரு முறை ஹிந்துவில் தவறாக வந்திருந்த ஒரு தகவலைச் சொல்லி, ஹிந்து நிருபரிடம் எழுதிப் பதிவிடும் முன் யாராவது ஒருவரிடம் காட்டி சரிபார்த்துக் கொள்ளும்படி சொன்னார் எனக்கு அது சரியென்று பட்டது. லிவிங் ஸ்மைல் வித்யா தன்னுடைய பதிவுலக அனுபவங்களையும், வாழ்க்கை அனுபவங்களையும் சொன்னார். பின்னர் தமிழ் பதிவுலம் ஹிந்து போன்ற பத்திரிக்கைகளில் இருந்து எதிர்பார்ப்பது என்ன என்பதை யாரோ ஒருவர் சொல்ல கடைசியில், தமிழில் இலவசமாக எழுத முடியும் என்பதை மட்டும் சொன்னாலே போதும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்தோம். நிருபர் தானும் தமிழில் எழுத ஒரு சாப்ட்வேர் காசு கொடுத்து வாங்கியதாகவும் அதுவும் வொர்க் ஆகவில்லை என்ற தன்னுடைய ஆதங்கத்தைச் சொன்னார்.

இரண்டாவது அமர்வை இன்னொரு பதிவு போடுகிறேன். முதல் அமர்வில் சில கண்ணில் பட்ட விஷயங்கள்.

* சென்ஷி என்றால் என்ன என்பதை சென்ஷி விளக்கவேண்டும் என்று நிறைய பேர் ஆசைப்பட்டனர்.

* சுப்பையா அவர்கள் தான் எப்படி வாத்தியார் ஆனார் என்பதை நிறைய தடவை சொல்லும் படியான சூழ்நிலை அமைந்தது.

* உடனுக்குடன் வினையூக்கியும், பாலாவும், மாசிவக்குமாரும் பதிவெழுதிக் கொண்டிருந்தனர்.

* மோகன்தாஸ் தன்னுடைய மொபைலில் இருந்து போட்டாக்களை பதிவிட ப்ளூடூத் வசதியுள்ள மடிக்கணிணியை தேடிக்கொண்டிருந்தார். (கிடைக்கவில்லை)

* செந்தழல் ரவிக்கு நாங்கள் பெங்களூரில் இருந்து கோயம்புத்தூருக்கு தண்டர் பேர்டில் வந்ததை நான் படம் காண்பித்துக் கொண்டிருந்தேன்.

* இன்று வரை, சுகுணா திவாகர் செந்தழலாரிடம் இருந்து தான் பெற்ற பின்நவீனத்துவ பரிசைப் பற்றி பின்நவீனத்துவக் கவிதை எழுதவில்லை.

கல்லூரியில் கிரிக்கெட்

நான் என் கல்லூரி அணிக்குத் தேர்வானது ஒரு நல்ல கதை. முதலில் டென்னிஸ் பந்துகளில் விளையாடுவதைத் தொடங்கினாலும் எனக்கு கிரிக்கெட் பந்துகளில் விளையாட நேரமோ, சூழ்நிலையோ அமையவில்லை. இதனாலெல்லாம் நான் கல்லூரி அணிக்கு தேர்ந்தெடுக்கிறார்கள் என்றதும்; அதுவும் கிரிக்கெட் பந்தில் என்றதும் தாழ்வு மனப்பான்மையால் அந்தப் பக்கமே போகவில்லை. என்ன பெரிய செலக்ஷன் ப்ராப்பர் கிரவுண்டிலா நடந்ததது? என்றால் இல்லை. கல்லூரிக்கு பின்னால் இருந்த ஒரு இடத்தில் நடந்தது.

நான் அந்த செலக்ஷனுக்குப் போகாத மற்றொரு காரணம் முதலில் பீல்டிங் பயிற்சி என்று காஜி எடுத்துக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் கல்லூரி நேரம் முடிந்ததும் பக்கத்து பஸ் ஸ்டாப்பில் இருக்கும் ஆயா கடையில் டீ சாப்பிடப் போவது வழக்கம். அன்று அப்படி போயிருந்த பொழுதுதான் தெரிந்தது; பீல்டிங் செலக்ஷன் நடப்பது. நானும் வேடிக்கைப் பார்த்துவிட்டு, நக்கலாக இரண்டு கமெண்ட் அடித்துவிட்டு கிளம்பிவிட்டேன். அதற்கடுத்து சனி, ஞாயிறு என்று நினைக்கிறேன். ஹாஸ்டலில் பெரிய காலமாகப் போகும் அவை.

அடுத்த நாளும் கல்லூரி முடிந்ததும் ஹாஸ்டல் வந்து கைலி கட்டிக்கொண்டு டீகுடிக்க, ஆயாக்கடையை நோக்கி நகரும் பொழுதுதான் கவனித்தேன். பௌலிங் செலக்ஷன் நடந்து கொண்டிருந்தது. கிரிக்கெட் பற்றிய தீராத வெறி என்னை ஒரு ஐந்து பத்து நிமிடம் அங்கே நிற்க வைத்தது. நான் எதிர்பார்த்ததைப் போலில்லாமல் அங்கே டிஸ்டிரிக்ட் டிவிஷினல் என்று கதைகளை விட்டு நிறைய பேர் பௌலிங் போட்டுக் கொண்டிருந்தார்கள். பூரா க்ராப்; ஒரே வார்த்தை. நான் அவசர அவசரமாக கூடவந்த பையனின் பாண்டை உருவி போட்டுக்கொண்டு நானும் பௌலிங் செய்ய பந்து ஒன்றை வாங்கினேன்.

டென்னிஸ் பந்துகளை விட சைஸில் பெரிய பந்துகள்; சிகப்புக் கலர் கூக்குபரா பந்துகள். கைக்கு அடக்கமாக இல்லாத காரணத்தால் நான் எதிர்பார்த்த யார்க்கராக இல்லாமல் முதல் பந்து ஒரு நச்சு பௌன்ஸராகப் போனது. ஹெல்மட் போட்டுத்தான் விளையாடுவார்கள் என்றாலும் அந்த சீனியர் பையன் பயந்து போனது நன்றாகத் தெரிந்தது. அப்பொழுதுதான் முதன் முதலில் கிரிக்கெட் பந்தில் பௌலிங் போடுகிறேன் என்பதை நினைவில் வைக்க வேண்டும். அந்தப் பந்திற்கு பாட்ஸ்மேனிடம் பதிலொன்றும் இல்லாததால். தொடர்ச்சியாக ஒரு ஓவர் போடும் வாய்ப்பு கிடைத்தது.

இப்பொழுது இருப்பதையெல்லாம் விடவும் தலைமுடி அதிகம் வைத்திருப்பேன். நான் ஓடிவர என் தலைமுடி ஒரு பக்கம் தனியாக வரும். ரெண்டு குட் லெங்க் டெலிவரிகளும், இரண்டு யார்க்கரும் போட்டுக்காட்ட, இரண்டு யார்க்கரிலும் பாட்ஸ்மேனின் குச்சி போயிருந்தது. பெரும்பாலும் இந்த கிரிக்கெட் விளையாடுபவர்களுக்கு கால்கள் அவ்வளவு வேகமாக நகராது ஏனென்றால் அடிஷனல் பர்டன் பேட்கள். அதுவும் கிடைக்கிறதென்று இரண்டு பேட்கள், ஹெல்மெட், காட் என ஏகப்பட்ட அய்டங்களைப் போட்டுவிளையாடுவதால். அவர்களுடைய நேச்சுரல் கேம் வரவே வராது. அதனால் குச்சி பறந்தது பெரிய விஷயம் இல்லை; அந்த வேகத்தில் வரும் பந்தை கரெக்டாக ஜட்ஜ் செய்து டிபென்ஸ் ஆடுவது கடினம்.

நான் ஒரு ஓவர் போட்டு முடித்ததும் கூட டீ குடிக்க போய்விடலாமா என்றுதான் நினைத்தேன். அங்கே செல்க்ஷனுக்காக நின்றிருந்த வாத்தியார் பாட்டிங் செய்வியா இல்லை ஒன்லி பௌலரா என்று கேட்க ஆஹா போட்ட பந்துக்கு காஜியும் அடிக்கலாம் என்று ஆடுவேன் என்று சொன்னேன். சரி போய்த் தயாராகு என்று சொன்னதும். வேகவேகமாகப்போய் இடது காலுக்கு மட்டும் பேட் கட்டிக் கொண்டு போய் நின்றேன். எல்லாம் ஒரு சீன் தான், எங்கள் ஸ்டேடியத்தில் ப்ராக்டிஸ் செய்யவரும் பிரபல BHEL பிளேயர்கள் அந்தக் காலில் மட்டும் பேட் கட்டி விளாயாடுவதைப் பார்த்திருக்கிறேன்.

ஆனால் ஹெல்மட் மேண்டேட்டரியாகக் கொடுக்கப்பட அதைமட்டும் போட்டுக் கொண்டு போய் நின்றேன். சீனியர் மக்களுக்கு கோபம் இருந்திருக்க வேண்டும். அதுவரை பௌலிங் செய்து கொண்டிருந்த ஜூனியர் மக்களை நிறுத்தி அவர்களே இறங்கினார்கள் பௌலிங்கிற்கு. நாங்க மதிச்சாத்தானே. ஆறு பந்துகளுக்குமே கீழேயிறங்கி ஆடினேன். என் அதிர்ஷ்டம்(???) நான்கு பந்துகள் கிளிக் ஆகியது. ஒன்று எட்ஜாகி பின்பக்காம் சென்று விட ஒன்று மிஸ். அம்பையர் இடத்தில் இருந்த செல்க்டர் சரி போதும் என்று சொல்ல பேடைக் கழட்டியவன். ஆயாக்கடை சாயாவில் மயங்கி அங்கிருந்து எஸ்கேப் ஆக; டீக்கடைக்கு மெஸேஜ் வந்தது செலக்டர் என்னை தேடுவதாக. ஆல்ரவுண்டராக என்னை அணியில் தேர்ந்தெடுத்திருந்தார்கள். அதற்குப் பிறகு ஹாஸ்டல் அணியுடன் டென்னிஸ் பால் கிரிக்கெட். காலேஜ் அணியுடன் கிரிக்கெட் பால் ப்ராக்டீஸ் என பிரகாசமாகப் போனது.

ஆனால் நாங்கள் RECயில் கொங்கு Arts & Scienceவுடன் விளையாடிய மட்ட ரகமான ஆட்டம் ஒருவாறு எங்கள் கிரிக்கெட் வாழ்க்கையை இல்லாமல் செய்தது என்று சொல்லலாம். சீனியர்கள் செலக்டர் சொல்லியும் கேளாமல் என்னை சப்ஸ்டிட்யூட் ஆக வைத்து விளையாடினார்கள். நாங்கள் RECயில் பிகர் பார்க்கக் கிளம்பிப் போய்விட்டு வருவதற்குள் பாதி பேர் அவுட். இருபத்தைந்து ஓவர்களுக்கு எங்கள் அணி அடித்ததை விக்கெட் இழப்பில்லாமல் ஐந்து ஓவர்களில் அடித்துவிட்டு அவர்கள் கிளம்பிப் போனார்கள். அதற்குப் பிறகு சீனியர்கள் முகம் போன போக்கு… ;). அதற்குப் பிறகு அபிஷியலாக அதிகம் விளையாடாவிட்டாலும்; பக்கத்தில் இருந்த சாரநாதனுடன் நிறைய ஆட்டம் விளையாடியிருக்கிறோம். இந்த இடைப்பட்ட காலத்தில் நான் சீனியர்களுடன் நல்ல பழக்கத்திற்கு வந்திருந்தேன்.

பின்னர் எங்கள் ஹாஸ்டல் அணியின் நிரந்தர ஆட்டக்காரராகவே இருந்தேன். பெரும்பாலும் எக்ஸாம் இல்லாத நாட்களில் எல்லாம் ஏதாவது ஒரு கல்லூரி அணிக்கும் ஹாஸ்டல் அணிக்கும் இடையில் மேட்ச் இருக்கும். சில சமயம் நான் படிக்கும் வகுப்பிற்கு எதிராகவே விளையாடுவோம். அப்பொழுதெல்லாம் கிளாஸ்மெட்களையெல்லாம் விடவும் ஹாஸ்டல் மெட்கள் தான் பிடிக்கும். ஏனென்றால் நாள் முழுவதும் அவர்கள் தான் எங்களுடன் இருப்பார்கள். கல்லூரியில் உட்கார்ந்திருக்கும் பொழுதுகளிலும் கூட ஹாஸ்டல் நண்பர்களுடன் தான் உட்கார்ந்திருப்பது. டேஸ் ஸ்காலர்களின் உலகம் வேறு, ஹாஸ்டல் மக்களின் உலகம் வேறு…

முந்தைய பாகம்
அதற்கு முந்தையது

கிரிக்கெட் நான் மற்றும் Nostalgia – 1

கிரிக்கெட் நான் மற்றும் Nostalgia

இந்தச் சமயத்தில் ஒரு மிக முக்கியமான நிகழ்வு நடந்தது அது நான் எட்டாவது படித்து முடித்த பொழுது மே மாத விடுமுறைக்காக டெல்லிக்குச் சென்றது. மற்ற விஷயங்களை விடுத்து கிரிக்கெட் சம்மந்தமான முக்கியமான நிகழ்வென்றால் அது நான் என் மாமாக்கள் இருவருக்கும் பந்து வீசியது. இருவரும் உண்மைக் கிரிக்கெட் 😉 ஆடியிருந்தவர்கள். அதாவது மேட் எல்லாம் போட்டு விளையாடும் டிவிஷன் மேட்ச்சஸ். இதனால் இருவருக்குமே டெக்னிக்கலாக கிரிக்கெட் எப்படி விளையாட வேண்டுமென்று தெரியும்.

அங்கே விளையாடிய பொழுதுதான், Front foot, Back foot, பந்து வீசுபவர்களின் கைகளைக் கவனிப்பது, பந்து கைகளில் இருந்து வெளியேறியது பந்தை கவனிப்பது, பேட்டை எப்படி விளையாடப் போகிறோம் என்பதற்கிணங்க ஹேண்டிலைப் பிடிப்பது(ஸ்ட்ரோக் ஆடுவதற்கும் ஷாட்ஸ் ஆடுவதற்கும் வெவ்வேறு ஸ்டைலில் பேட்டைப் பிடிக்க வேண்டும்) என நிறைய விஷயங்களை ப்ராக்டிகலாக இம்ப்ளிமெண்ட் செய்ய சொல்லித் தந்தார்கள். அதுவரை குருட்டாம் போக்கில் வந்த பந்தை அடிப்பது என்ற நிலையில் இருந்த என்னை அடுத்த அடிக்கு உயர்த்தியது அங்கே தான். எனக்கு என் மாமாக்களுடன் இன்றும் கிரிக்கெட் விளையாடப் பிடிக்கும். இன்று நான் ஆப்-ஸெட்ம்புக்கு அந்தப் பக்கம் நாலு இஞ்சில் போடப்படும் பந்தை லாவகமாக தடுத்தாடுவார்கள் என்று நன்றாகத் தெரியும் ஆனால் வேலை காரணமாக நாங்கள் மூவரும் ஒரு இடத்தில் இருக்கும் வாய்ப்புக்கள் குறைந்ததில் நான் அனுபவிக்கும் வருத்தத்தில் இதுவும் ஒன்று.

இதையெல்லாம் விடவும் முக்கியமான ஒரு விஷயம் மாமா வைத்திருந்த SG பாட் ஒன்றை என்னிடம் தந்தார் நான் டெல்லியில் இருந்து புறப்படும் பொழுது. நான் என் பகுதியில் கேப்டன் ஆனேன் ;). நாங்கள் விளையாடிக் கொண்டிருந்த பேட்களுடன் ஒப்பிடக் கூட முடியாது அந்த பேட்டை, கொஞ்ச நாள் யாருக்கும் கொடுக்காமல் நான் மட்டும் தான் விளையாடி வந்தே அந்த பேட்டில் ஆனால் அது பல காரணங்களுக்காக சரிவராமல் போக எல்லோரும் உபயோகிக்கத் தொடங்கினார்கள். சில டோர்னமென்ட் விளையாடுவதற்கு பெரிய டீமில் இருந்தெல்லாம் பேட் கேட்டு வருவார்கள்.

இப்பத்தான் நான் அப்பா ஸ்கூலில் இருந்து வேறு ஸ்கூலுக்கு வந்தது, ஆனால் இரண்டு பள்ளிகளுமே ஒரு மேனேஜ்மென்ட்-ஆல் நடத்தப்படுபவை. நானூறு மீட்டர் இடைவெளி இருக்கும் இரண்டு பள்ளிகளுக்கும் அவ்வளவுதான் விஷயம் என்றாலும். ஸ்கூல் அதையடுத்து ஒரு ரோடு ரோட்டைத்தாண்டினால் “நேரு ஸ்டேடியம்”. இது போதுமே ஆனால் இன்னொரு விஷயமும் இருந்தது, “நேரு ஸ்டேடியம்” தாண்டி கேர்ல்ஸ் ஹைஸ் ஸ்கூல் ;).

பள்ளி விடும் 4.15க்கு முன்னமே கிளம்பிப் போய் கிரவுண்டில் குச்சி நட்டு வைச்சு, அந்தப் பெரிய கிரவுண்டில் நல்ல பிச்சா விளையாடுவதற்கு தேர்ந்தெடுத்து வேறுயாரும் விளையாடாமல் பார்த்துக்கொள்ளவென்றே ஒருத்தன். அவன் 4.00 மணிக்கெல்லாம் கிளம்பிடுவான் பாத்ரூம் வருகிறதென்று. நாங்கள் அவன் பையையும் எடுத்துக் கொண்டு கிரவுண்டிற்கு வந்துவிடுவோம். அப்புறமென்ன இரண்டு இரண்டு பேரா அரைமணிநேரத்திற்கு ஒரு தடவை குறையத் தொடங்க. கடைசி இரண்டு மூன்று ஆட்கள் வரும் வரை விளையாடிவிட்டு பேட் பாலை எடுத்துக் கொண்டு வீடு வந்து சேருவோம். அந்த கிரவுண்டில் மொத்தம் எங்களைப் போல் இருபது டீம் விளையாடிக் கொண்டிருக்கும்.

இது கிட்டத்தட்ட அந்த நான்கு வருடங்களில் தொடர்ச்சியாக நடந்தது. அப்பல்லாம் டீம் மாட்ச் நடக்கும் 9A, 9B, 9C என மூன்று பிரிவுகள் ஆங்கில வகுப்புக்கள். அப்புறம் 9D ல் தொடங்கி 9M வரைக்கும் தமிழ் பிரிவுகள். ஒவ்வொரு வகுப்பிற்கும் 40 – 45 மாணவர்கள் இருப்பார்கள், அதனால் குறைந்த பட்சம் 11 பேர் பிரச்சனையே இல்லை. எல்லா நாட்களும் மேட்ச் தான், மதியம் இன்டர்வெல்லில் இதற்கென்றே இருக்கும் மாணவர்கள் போய் எதாவது ஒரு க்ளாஸிடம் மேட்ச் கேட்டு வருவார்கள். அப்படி டீம் மாட்சா இருந்தால் சென்டர் பிச்சில் விளையாடுவோம்.

பொதுவாக சென்டர் பிச் காலியாகத்தான் இருக்கும், இதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று பெரிய மைதானம், இருபத்திரெண்டு பேர் விளையாடாவிட்டால் சரிவராது அதுமட்டுமில்லாமல் அந்த சென்டர்பிச் பௌலிங் பிச் அதனால் அதிக ரன்கள் வராது. எட்டு ஓவர்கள் இருபத்தைந்து ரன் அடிப்பதுவே பெரிய விஷயம் அதனால் கிளாஸிக் கிரிக்கெட் போல் இருக்குமென்பதால் அவ்வளவு சுவாரசியமாகயிருக்காது. ஆனால் க்ளாஸ் மேட்ச் என்று வந்துவிட்டால் செண்டர் பிச் தான். அந்தக் காலத்தில் எல்லாம் அப்பா என்னைத் தேடவேண்டுமென்றால் நேராக ஒன்றிரண்டு கிரிக்கெட் கிரவுண்டிற்கு போய்த் தேடி கண்டுபிடித்துவிடுவார்.

அந்தக் காலத்தில் எல்லாம் நான் ஆல்-ரவுண்டர், கொஞ்சம் வித்தியாசமான. பெரும்பாலும் ஓப்பனிங் பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர்(நான் பௌலிங் செய்யாத பொழுது), அப்புறம் பௌலர். எட்டு/பத்து ஓவர் மேட்சில் இரண்டு ஓவர்கள் தான் கிடைக்கும். அந்த இரண்டு ஓவர்களும் நன்றாகப் போட்டால் மூன்றாவது கிடைக்க வாய்ப்புண்டு எனென்றால் ஒரு பத்து ஓவர் மேட்சில் ஒரு ஆள் தான் மூன்று ஓவர் போடலாம்.

அதுமட்டுமில்லாமல் விக்கெட் கீப்பிங் ரொம்பவும் முக்கியமான ஒன்று. அதனால் அதுவும் நானே, அப்பல்லாம் கண்ணாடி கிடையாது. ஸ்டெம்புக்கு ரொம்பவும் அருகில் நின்று கீப்பிங் செய்வேன். சிலகாலம் ஒரு அணிக்கு அவர்களிடம் இருந்த ஒரு பேஸ் பவுலரின் பந்துகளை நான் கீப் செய்கிறேன் என்பதற்காகவே குறைந்த வயதில் டோர்னமெண்ட் விளையாடியிருக்கிறேன். எப்படியாவது லெக் அம்ப்பயரை ஏமாத்தி மேட்சுக்கு ஒரு ஸ்டெம்பிங் வாங்கிவிடுவேன் ;). அப்புறம் பௌலிங், முதலில் எங்கள் அணி பௌலிங் செய்தால் நான் தான் முதலில் வீசுவது. முதல் ஸ்பெல் முடிந்து எட்டாவதோ பத்தாவதோ ஓவரை நான் தான் வீசுவேன்.

1500 ஓடுவதாலும் வீட்டில் தண்ணி தெளித்து விட்டிருந்ததாலும் என்னால் அந்தக் காலக் கட்டத்தில் நிறைய கிரிக்கெட் விளையாட முடிந்திருந்தது. பின்னர் எனக்கென்று ஒரு டீம் இருந்தாலும் பிற அணிகளுக்காகவும் விளையாட போய்விடுவேன். கூத்தைப்பார் டோர்னமெண்ட், செக்யூரிட்டி காலனி டோர்னமெண்ட், எழில்நகர் டோர்னமெண்ட் என சுத்துவட்டாரத்தில் நான் விளையாடாத டோர்னமெண்ட்களே ஒரு காலத்தில் இல்லை என்பது போல் ஒன்று கிரிக்கெட் விளையாடுவது இல்லை கிரிக்கெட் பற்றி பேசுவது இது மட்டும் தான் வாழ்க்கை அப்பொழுது.

+1, +2 விலும் அப்படித்தான். நான் எதிர்பார்த்த அளவிற்கு மதிப்பெண் வாங்காததற்கு இதுவும் ஒரு காரணம். மற்ற காரணம் தான் முன்னமே தெரிந்திருக்குமே.

அடிக்கிற மழை கொளுத்தும் வெய்யில் என எதற்காகவும் நாங்கள் விளையாடுவதை நிறுத்தியதில்லை. இதுவரையான சமயத்தில் நான் ரொம்பவும் பேமஸான பௌலர் தான் பேட்டிங் பிஞ்ச் ஹிட்டர், ஏனென்றால் டெக்னிக்கலாக தெரிந்திருந்தாலும் 8 ஓவர் மேட்சில் நமக்கு கிடைக்கும் ஒன்றிரண்டு ஓவர்களை ஸ்ட்ரோக் பண்ணியெல்லம் ஆடினால் அடுத்த மேட்சில் ஆட இடம் கூட கிடைக்காது. அதனால் ஓப்பனிங் பிஞ்ச் ஹிட்டர், ஷாட்ச் பிச் டெலிவர் வந்தால் போதும் ஒரு போர் அடித்துவிடுவேன் பெரும்பான்மையான சமயங்களில் என்பதால் என் பள்ளி அணிக்காக பெரும்பாலும் ஓப்பனிங் மட்டுமே விளையாடுவேன். சிலசமயம் ஆப்பொனண்ட் ரொம்பவும் குறைவான ரன்கள் என்றால் நான் இறங்க மாட்டேன்.

ஆனால் இதையெல்லாம் மாற்றிப் போட்ட கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன், +2 படிக்கும் பொழுது. பௌலிங் கிடையாது ஒன்லி த்ரோ தான், ஒரு சதுரம் போல் இருக்கும் இடம் தான் பிச். வெறும் ஆப் சைட் மட்டும் தான். கட்டத்திற்கு வெளியில் தூக்கி அடித்தால் அவுட். அது ஒரு அற்புதமான கிரிக்கெட். ஓவர் கணக்கு கிடையாது அவுடாகும் வரை விளையாடலாம். ஆனால் அந்த சின்னக் கட்டத்திற்குள் இருக்கும் பீல்டர்கள் கைகளில் சிக்காமல் ரன் அடிப்பது என்பது பெரிய விஷயம். ஆனால் சில பேர் வேண்டுமென்றே ஸ்ட்ரோக் வைக்கிறேன் பேர்வழியென்று ஆரம்பித்ததால் – unlimited ஓவர்கள் விளையாட முடியாமல் போனது. அதனால் ஒரு கணக்கிற்கு 15 ஓவர்கள்.

பிரம்மாதமான ஆஃப் சைட் ஆட்டம் கைக்கு வந்தது அப்பொழுது தான். அதேபோல் லெக் ஸ்பின் விளையாட வந்ததும்(பிற்காலத்தில் கல்லூரி அணிக்காகவும், கம்பெனி அணிக்காகவும் ஆடிய பொழுது ஸ்பின்னர்ஸை அடிக்க இந்த ஆட்டம் உதவியது.) அப்பொழுதுதான். ஷென் வார்னேவின் மைக்கேல் ஹோல்டிங்கிற்கான பந்து தெரிந்திருக்கும். அதெல்லாம் என்ன பிரம்மாதம் த்ரோ என்பதால் வெறும் முத்தையா முரளீதரன்களும் ஷேன் வார்னேக்களும் தான் அங்கே. அதுவும் இல்லாமல் நிறைய வெரைட்டி வேறு, ஒரே ஓவரில் பேஸ், பவுன்ஸ், லெக் ஸ்பின், ஆப் ஸிபின், புல்டாஸ் என நிறைய போடுவார்கள். இந்த ஆட்டங்களில் எத்தனை 50 அடித்திருப்பேன் நினைவில் இல்லை. மாமாக்கள் சொல்லிக் கொடுத்த டெக்னிக் இங்கே நிறைய உதவியது.

அடுத்த பாகம் போடுகிறேன், இப்பவே நிறைய ஆச்சுது.

கிரிக்கெட் நான் மற்றும் Nostalgia

நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தது எப்பொழுது என்று சரியாக நினைவில் வரமறுக்கிறது ஆனால் ஐந்தாவது வகுப்பு படிக்கும் பொழுதெல்லாம் ஆடியிருக்கிறேன் என்பது நினைவில் இருக்கிறது. கொஞ்சம் போல் சீரியஸ் கிரிக்கெட் என்றால் அது ஆரம்பித்தது ஆறாவது ஏழாவது படிக்கும் பொழுதாகயிருக்கலாம்.

எங்கள் பள்ளிக்கூடத்திற்கு அருகில் இருந்த ஒரு இடத்தில் விளையாடுவோம்; பக்கத்தில் ஒரு மாங்காய் மரத்துடன் கூடிய வீடிருந்தது. பெரும்பாலும் அந்த வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள் எனவே பந்து வீட்டின் கொல்லைப் புறத்திற்கு சென்றுவிட்டால் பிரச்சனையில்லாமல் எடுத்துவரமுடியும் என்பதுகூட நாங்கள் அந்த இடத்தில் விளையாடியதற்கு ஒரு காரணம். அப்பொழுதெல்லாம் ரப்பர் பந்துதான், கிரிக்கெட் பேட் என்று பெரிதாக ஒன்றும் இல்லாவிட்டாலும் எங்கேயோ கிடைத்த ஒரு பேட்டில் விளையாடிக் கொண்டிருந்த நினைவு.

ஸ்டிக் எல்லாம் மரக்குச்சிகள் தான், பெரும்பாலும் பள்ளிவிட்ட பிறகு இரண்டு மணிநேரங்கள் விளையாடுவோம். வெறும் ‘லெக்’ சைட் மட்டும் தான்; அதுவும் ஸ்டிக்கிற்கு பின்பக்கம் ரன்கள் கிடையாது. ஏனென்றால் அந்த வயதில் பௌலிங் போடும் பொழுது ஷார்ட் பிச் டெலிவர்கள் அதிகம் இருக்குமென்பதால் அந்தப் பக்கம் அடிக்க வசதியாக இருக்கும். அதன் காரணமாகவே அந்தப் பக்கம் ரன் கிடையாது. பள்ளிக்கூடம் விட்டபிறகென்பதாலும் எல்லோர் வீடுகளிலும் உடனே வீட்டிற்கு போய்விடவேண்டிய அவசியம் இல்லாத காரணத்தாலும் சைட் ஒன்றிற்கு ஆறு பேர் என பன்னிரெண்டு பேர் விளையாடுவோம்.

நினைவு தெரிந்து அந்த வயதில் எல்லாமே வேகப் பந்துவீச்சு தான்; சனி ஞாயிற்றுக் கிழமைகளில் கொஞ்சம் பெரிய க்ரவுண்ட்களில் இரண்டு செக்டார்களுக்கு இடையில் மேட்ச் நடக்கும். அந்த மொட்டை வெய்யலில் முதல் ஆளாக நான் உட்கார்ந்திருப்பேன் மேட்ச் பார்ப்பதற்கு. நான்கு மணிக்கு ஆட ஆரம்பிக்கும் அவர்கள், ஆறு மணி போல் மேட்ச் ஆடி முடித்ததும் அந்த பெரிய ஆட்களுக்கு பௌலிங் செய்வேன். சொல்லப்போனால் நான் ஓசி காஜி தான் அடிப்பார்கள் அவர்கள் இருந்தாலும்; அதுவரை நானாகப் பார்த்திராத டென்னிஸ் பால்களுக்கு அறிமுகம் அங்கே தான் கிடைத்தது.

ரப்பர் பாலுக்கும், காஸ்கோ பாலுக்கும் வித்தியாசம் நிறைய உண்டு. கொஞ்சம் மித வேகமாக பந்து வீசினாலே ரப்பர் பாலில் வேகமாகச் செல்லும். ஆனால் காஸ்கோ பாலிற்கு வெய்ட் சுத்தமாகயிருக்காது, அதனால் என்ன வேகமாக ஓடிவந்து வேகமாக வீசினாலும் பேட்ஸ்மேனுக்கு டைமிங் நிறைய கிடைக்கும். நான் ஆறாவது படிக்கும் பொழுதெல்லாம் இப்பொழுது மார்க்கெட்டில் கிடைக்கும் ‘விக்கி’ பந்துகள்(இரண்டு கலர்களில் பெரும்பாலும் இருக்கும், சில ஒற்றைக் கலரிலும்) கிடைக்காது. BHELல் டென்னிஸ் கிளப்பில் இருந்து இந்த காஸ்கோ பந்துகளை அந்த அண்ணன்கள் வாங்கி வருவார்கள்.

சின்ன வயது, எதையாவது சாதிக்கணும் என்ற ஆசை எல்லாம் சேர்த்து அந்த வயதிலேயே நான் வேகமாக பந்துவீசுவேன். காஸ்கோ பந்திலும்; என்னைவிட சற்றேறக்குறைய பத்து வயது பெரியவர்கள் பேட்டிங் செய்பவர்களை என் வேகத்தால் தடுமாறவைப்பேன் சில தடவைகள். சில தடவைகள் பொத்தென்று ஷார்ட் பிச் விழ பந்து பறக்கும்(பஞ்சு மாதிரி ;)). இதில் பிரச்சனை என்னவென்றால் அப்படி அடிக்கப்பட்ட பந்தையும் நான் தான் எடுத்துவரவேண்டும். இதனாலெல்லாம் ஒரு நன்மை என்னவென்றால் ஆஸ்பிட்டல் பக்கம் ஒரு பிரச்சனை என்று படுத்ததில்லை அவ்வளவே.

அப்பா வேறு உடற்பயிற்சி ஆசிரியர், அக்கா ஸ்டேட்-ல் தொடர்ச்சியாக தங்கம் வாங்கியவர். இதனால் காலையில் ஐந்தரை மணிக்கே “நேரு ஸ்டேடிய”த்திற்கு துரத்தப்படுவேன். அக்கா போய் வார்ம் அப் செய்யும் வரை, கேலரியில் படுத்திருந்துவிட்டு. வார்ம் அப் ஆனதும் லாங்க் ஜெம்ப் பிட்டில் படுத்துக் கொள்வேன். அப்பா தூரத்தில் வருவது தெரிந்ததும் நானும் அப்பத்தான் ஓடிக் களைச்சு போயிருக்கிறதா சீன் போடுவேன். ஆனால் அப்பாவுக்கு அதெல்லாம் நல்லாவே தெரியும். ஆனாலும் நான் காலையில் எழுந்து ஸ்டேடியம் போனதற்கு காரணம் அம்மா போய்வந்ததும் தரு கேழ்வரகு கஞ்சி. (அந்த ஏலக்காய் மணம் இப்பவும் நினைச்சா உணரமுடிகிறது.)

காலை இப்படின்னா சாயங்காலம் இப்படி கிடையாது; என்னையும் அக்காவையும் ஸ்டேடியத்திற்கு துரத்திவிட்டுட்டு அப்பாவும் அம்மாவும் வாக்கிங் வருவார்கள். வந்து ஸ்டேடியத்தின் கேலரியில் உட்கார்ந்திருப்பார்கள்; அதனால் ஏமாற்ற முடியாது. அந்த ஸ்டேடியம் பெரியது. எப்படியென்றால் நானூறு மீட்டர்களை ஒரே ரவுண்டில் ஓடக்கூடிய அளவிற்கு பெரியதென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். நான் அந்த ஸ்டேடியத்தில் பதினைந்து ரவுண்ட்கள் ஓடுவேன். பார்த்துக் கொள்ளுங்கள்(400மீட்டர் x 15). அக்காவிற்கு வெறும் இரண்டு ரவுண்ட்கள் தான் ஏனென்றால் அவள் பங்கேற்பது 100, 200 மற்றும் லாங் ஜெம்ப்.

என்னை இருபது மீட்டர் முன்னால் நிறுத்திவிட்டு எனக்கும் அக்காவிற்கு 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடக்கும் பெரும்பாலும் எல்லா நாளும், 20 மீட்டர் மட்டுமல்லாமல் ஸ்டாட்டிங்கும் முன்னாடியே கொடுத்துவிட்டு ஓடுவேன். ஆனால் அக்கா தீவிரமாக ஓடிக்கொண்டிருந்த காலங்களில் அவள் என்னை முந்திக் கொண்டுதான் முடிப்பாள்.

இதுமுடிந்ததும் அப்பா அக்காவைக் கூட்டிக் கொண்டு வீட்டிற்குப் போய்விடுவார், நான் அந்த ஸ்டேடியத்தில் கிரிக்கெட் விளையாடுவேன். இது வேறு ஒரு கூட்டம் கொஞ்சம் போல் நான்-ஸ்டாண்டர்ட் கிரிக்கெட் விளையாடுபவர்கள். அதாவது காலையில் இருந்து வேலை செய்துவிட்டு விளையாட வருபவர்கள். இவர்களிடம் என் பௌலிங்க் வெகு சீக்கிரமாக எடுபடும் பந்தும் ரப்பர் பால் தான். என்னிடம் இருந்த அத்தெலெட்டுக்கான திறமை என்னுடைய பீல்டிங்கிலும் ரன்கள் எடுப்பதிலும் தெரியும்.

சொல்லப்போனால் இவ்வளவு தான் நினைவில் இருக்கிறது நான் எட்டாவது படித்தது வரையிலான கிரிக்கெட் அனுபவம், நினைவுகள், நோஸ்டாலஜியா எல்லாம். அடுத்து நான் கொஞ்சம் போல் கிரிக்கெட் பைத்தியம் பிடித்துக் கிடந்த 8 – 12 படித்த பொழுதுகளின் நினைவுகள்.

கங்கை கொண்ட சோழபுரம் – பயணம்

அப்பொழுதுதான் எங்கள் கல்லூரி இறுதித் தேர்வு முடிந்திருந்தது. கல்லூரி வாழ்வில் அனைவரும் பேர்வெல் பார்ட்டி கொண்டாடியிருப்பீர்கள். ஆனால் நாங்கள் (நான் மற்றும் என் கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர்) கொண்டாடவில்லை. எங்களுக்குத் தெரியும் அந்தக் கல்லூரியில் நாங்கள் கொண்டாடுவதற்கு எதுவும் இல்லையென்று. அதாவது நாங்கள் அந்தக் கல்லூரியை பிரிவதற்காக வருந்தவேயில்லை. நாங்கள் ஏற்கனவே முடிவெடுத்திருந்ததைப் போல் ஒரு சுற்றுப்பயணத்தைத் தொடங்கினோம்.

2003 மேயிலிருந்து அடுத்த 2004 மே வரை நான் ஊர் சுற்றியது மிகவும் அதிகம். முதலில் என் கல்லூரி நண்பர்களுடனான பயணம். நாங்கள் அனைவரும் முதலில் திருச்சியிலிருந்து கிளம்பி பிரபுவின்(துறையூர்) வீட்டிற்கு வந்திருந்தோம். முதலில் எங்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம், மொத்தம் ஆறு பேர், நான், ராஜேஷ், உதயசங்கர், பிரபு, பார்த்திபன், ராஜாமணி. இதில் பிரபுவையும் ராஜாமணியையும் தவிர்த்து எங்கள் அனைவருக்கும் எந்த பேப்பர்களும் பாக்கியில்லை. கொஞ்சம் நன்றாய் படிக்கும் சொம்பு கும்பல் என்று கூட வைத்துக் கொள்ளலாம் ஆனால் நான் அதில் சேர்ந்தது தான் ஆச்சர்யமே. நன்றாய் படிக்க மாட்டேனா என்றால் அப்படியில்லை. கொஞ்சம் ரௌடி, ஒரு முறை கல்லூரி நிர்வாகம் கண்டிப்பாய்ச் சொல்லியிருந்தும், லீவ் போட்டுக்கொண்டு பெங்களூர் வரை வந்து ஊர் சுற்றியதால் ஹாஸ்டலில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தேன் அது வேறு ஒரு கதை.

ஒரு முறை கல்லூரியிலிருந்து “பார்ட்” பெஸ்டிவலிற்கு பேச்சுப்போட்டியில் கலந்து கொள்வதற்காக வைக்கப்பட்ட போட்டியில் நான் வெற்றி பெற்றிருந்தும் மேலாளர் சொன்னார் என்பதற்காக வேறொரு பெண்ணை அனுப்பிவிட கல்லூரியின் அனைத்து தமிழ்ச்சங்க பொறுப்புகளிலிருந்தும் விலகிக் கொண்டேன், அந்த நாட்களில் இது ஒரு பெரும் பிரச்சனையாய் இருந்தது. இப்படியாக நன்றாய்ப் படித்துக் கொண்டும் வம்பிழுத்துக் கொண்டிருந்ததால் கொஞ்சம் இல்லை நன்றாகவே கெட்டப்பெயர் வாங்கியிருந்தேன்.

வந்துட்டேன் பயணத்திற்கு, இப்படியாக நாங்கள் சுற்றுலாவை துறையூரிலிருந்து தொடங்கினோம், பிரபுவின் வற்புறுத்தலுக்காக மட்டுமே துறையூர் வந்திருந்தோம் ஏற்கனவே பார்த்த ஊர், பார்த்த இடங்கள். இருந்தாலும் புளியஞ்சோலை என்ற பெயர் மனதின் ஓரத்தில் அனைவருக்குமே அறித்துக் கொண்டிருந்ததால் வந்து சேர்ந்த இரவு பிரபுவின் வீட்டில், டைட்டானிக் படம் பார்த்தோம். ஆமாம் பிரபு காதலித்துக் கொண்டிருந்தான். புளியஞ்சோலையில்லாமல் நாங்கள் துறையூர் வந்ததற்கு இன்னொரு காரணம் அவன் காதல். அந்தப் பெண்ணை எங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் பேர்வழியென்று கூப்பிட்டுவந்திருந்தான் எங்களை. அது ஒரு பெரிய தமாசு.

காலையில் நாலரை மணிக்கெல்லாம் எழுந்து பார்த்தால், கிராமமே எழுந்திருந்தது. வாழ்க்கையில் நான் முதன்முதலில் ஒரு கிராமத்தை நினைவு தெரிந்து பார்த்தேனேயானால் அது துறையூர் தான். பிரபுவின் அம்மா காலையில் எழுந்து எங்களுக்கெல்லாம் காப்பி போட்டுக் கொடுத்துவிட்டு நாங்கள் கிணற்றில் குளித்துவிட்டு வருவதற்குள். ஆறு பேருக்கும் எலுமிச்சை சாதம் தயார்செய்து வைத்திருந்தார்கள். இன்று சொல்கிறேன், அவர்கள் எலுமிச்சை சாதம் செய்து தருவதாகச் சொன்னால் வேலைப் பளுவின் இடையிலும் புளியஞ்சோலை சென்றுவரத் தயாராயிருக்கிறேன்.

புளியஞ்சோலை என்று நான் சொன்ன ஊரை உங்களில் பெரும்பால் ஆனவர்களுக்கு தெரிந்து வாய்ப்பிருக்கிறது. அது ஒரு மலையடிவாரம், அங்கே ஆறு மலைமேலிருந்து ஒடிவருகிறது. மிக ரம்மியமான இடம், ஆனால் கொஞ்சம் மோசமான இடமும் கூட, திருச்சி காதலர்களுக்கான இடங்களில் புளியஞ்சோலையும் ஒன்று. காலையில் ஓட்டிக்கொண்டுவந்து விட்டு சாயங்காலம் திரும்பும் ஓட்டிக்கொண்டு போவதை அனாயாசமாகப் பார்க்கலாம்.

நாங்கள் நன்றாய் மலையில் உள்வரை சென்று அருமையாக கலக்கப்படாமல் இருந்த ஆற்றுநீரை ஐந்துமணிநேரம் கலக்கிவிட்டு, பின்னர் எடுத்த பசியில் கொண்டு வந்திருந்த எலுமிச்சை சாதத்தை முடித்திருந்தோம். இந்த விஷயத்தில் பெரியவர்களின் அனுபவம் ஆச்சர்யம் அளிக்கும். நாங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும் பிரபுவின் அம்மா கட்டிக்கொடுத்த அதிகப்படியான சாதம் எங்களுக்கு சொல்லப்போனால் மிகச்சரியாக இருந்தது.

இப்படியாக நாங்கள் புளியஞ்சோலை பயணத்தை முடித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்த ஊர், ஜெயங்கொண்டம், இது பார்த்திபனுடைய சொந்த ஊர். அவர்கள் வீட்டில் தறிநெய்வது தான் தொழில். அம்மா அப்பா தம்பி, தங்கை சில சமயங்களில் பார்த்தியும் நெய்வதுண்டு என்று சொல்ல எங்கள் அனைவருக்கும் நாங்களும் நெய்ய வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. ஆனால் அதையெல்லாம் சொல்லி அவர்கள் பிழைப்பை கெடுத்து விடாமல் தவிர்த்துக் கொண்டோம்.

இன்னுமொரு விஷயம் பயணத்தை தவிர்த்து, நாங்கள் அனைவரும் கல்லூரி படிப்பவர்கள் எங்கள் வீடுகளும் அத்துனை வசதியானது கிடையாது, அதுவும் கல்லூரி படிக்கும் ஆறு தடிமாடுகளுக்கு சாப்பாடு ஆக்கிப்போடுவதென்பது சாதாரணமான விஷயம் கிடையாது. அதனால் நாங்கள் பயணத்தின் ஆரம்பத்திலேயே கணக்குப்போட்டுக் கொண்டது. யாருடைய வீட்டிலும் சாப்பிடுவது இல்லையென்று. ஆனால் பிரபுவின் வீட்டிலேயே இந்த விரதம் உடைக்கப்பட்டிருந்தது. ஆனால் புளியஞ்சோலையில் சாப்பிட வேறு இடம் கிடைக்காது என்ற காரணத்தால் அது ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது.

காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து குளித்து விட்டு தயாராகிவிடவேண்டும், பெரும்பாலும் இரவுகளில் தூங்குவதில்லை சீட்டுக்கட்டு(ஏஸ்) ஆட்டம் போடத் தொடங்கினால் அது முடிய இரண்டு மணிநேரம் ஆகும் பிறகு பிரபுவை வம்பிழுக்க ஆரம்பித்தோமானால் ஒரு வழியாக நாங்கள் தூங்க மூன்று மணியாகிவிடும் பிறகு ஒரு மணிநேரத்தில் எழுந்து கிளம்பிவிடவேண்டும். வேண்டுமானால் தங்கும் வீட்டில் காப்பி சாப்பிடாலாம்.

ஆனால் நாங்கள் சாப்பிடுவதைப் பார்க்க வேண்டுமே, எப்படியும் அந்த ஊரை தெரிந்தவன் ஒருவன் இருப்பான் என்பதால் அவனிடம் கேட்டுக்கொண்டு அன்லிமிட்டட் மீல்ஸ் கிடைக்கும் கடைக்குச் சென்றுதான் சாப்பிடுவது, காலை மதியம் இரண்டிற்கும் சேர்த்து ஹோட்டலில் சாப்பாடு சமைத்து தயாரான பதினொன்று மணிவாக்கில் உட்கார்ந்தோமானால் வயிறு நிறைய சாப்பிட்டு விட்டுத்தான் நகர்வது.

ஜெயங்கொண்டத்தில் இன்னொரு விஷயமும் நடந்தது அது, பார்த்திபனின் வீட்டிற்று பக்கத்தில் ஜோசியக்காரர் ஒருவர் வீடும் இருந்தது. பார்த்தின் வற்புறுத்தி அனைவரும் ஜோசியம் பார்க்கவேண்டும் என்று சொல்லிவிட என்னைத் தவிர்த்த அனைவரும் பார்த்தனர்.

பின்னர் நாங்கள் வந்திறங்கிய இடம் தான், ஜெயங்கொண்ட சோழபுரம் எங்கேயோ கேள்விப்பட்ட பெயர் போல் தெரிகிறதா, அதுதான் கங்கை கொண்ட சோழபுரம். ராஜேந்திரன் அதாவது ராஜராஜனின் மகன் கட்டியக் கோவில், தந்தைக்கும் மகனுக்கும் என்ன காண்டு என்று தெரியாது. அப்பனைப் போலவே மகனும் பிரம்மாண்டமாய் ஒரு கோவில் கட்டியிருந்தான்.

ஆரம்பத்தில் மிகவும் மோசமாக பராமரிக்கப்பட்டு இருந்ததாகவும் தற்சமயம் இந்திய தொல்பொருள் துறையினரிடம் இருப்பதலால் கொஞ்சம் நன்றாய் இருப்பதாகவும் பார்த்திபன் சொன்னான். வீட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்தக் கோவிலை பார்த்தே ஆவது என நான் ஒற்றைக்காலில் நின்று கொண்டிருந்ததால், அவனுடைய அப்பா போட்டுக் கொடுத்த பிளானையை கொஞ்சம் மாற்றி கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வந்திருந்தோம்.

அழகான அமைதியான ஊர், புல்வெளிகளுக்கு மத்தியில் சிவன் கோவில். மற்றவர்கள் ரொம்பத் தீவிரமாக சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க நான் சுற்றிப் பார்த்துக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன்.

அந்தக் கோவில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரத்தைப் பற்றி சிறு அறிமுகம்.

உடையார்ப் பாளயம் தாலுகாவில் 16 மைல் நீளத்திற்கு வடக்குத் தெற்காக ஒரு கரை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், வலிமை வாய்நத பல பெரிய கலிங்குள் உள்ளன. இது முன் காலத்தில் இந்தியாவிலேயே மிகப்பெரிய நீர்த்தேக்கங்களில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். இந்தப் பெரிய குளம் அல்லது ஏரிக்குக் கொள்ளிடம் ஆற்றிலிருந்து ஒரு கால்வாய் அதனுடைய தென் கோடியில் இந்த ஏரிக்குள் நுழைகிறது. இதுவே இந்த ஏரியின் முக்கியமான வருவாய்க் காலாகும்.

ஏரியின் வடபகுதியில் நுழையும் ஒரு சிறு கால்வாய் வெள்ளாற்றின் நீரையும் இங்கு கொண்டு வருகிறது. இந்த ஏரி தூர்ந்து விட்டதால், பல ஆண்டுகளாக அது எவ்விதத்திலும் பயன்படவில்லை. அந்த ஏரியின் நடுப்பகுதி முழுவதிலும் உயர்ந்த அடர்த்தியான புதர்களும் குறுங்காடுகளும் நிறைந்து பாழாகிவிட்டது. இந்த ஏரி, படையெடுத்து வந்த ஒரு படையினர் வேண்டுமென்றே செய்த கொடுஞ்செயலால் அழிந்து விட்டதாகத் தலைமுறை தலைமுறையாகச் சொல்லப்பட்டுவருகிறது.

ஏரியின் தென் கோடியில் காடு சூழ்ந்த ஒரு கிராமம், கங்கைகொண்டபுரம் என்னும் பெயரால் இருந்து வருகிறது. அதன் சுற்றுப்புறத்தில் மிகப்பெரிய அளவினதும், அரிய வேலைப்பாடு உடையதுமாகிய ஒரு கோயில் இருக்கிறது. அதற்கு அருகே காடுசூழப்பட்ட பகுதியில் பழைய கட்டடங்களின் எஞ்சிய பகுதிகள் உள்ளன. மலை மேடுகள் போலவும் குவியல்கள் போலவும் உள்ளன.

இவை பழங்காலத்து பாபிலோனை நினைவுப் படுத்துகின்னற. மிகப் பரந்த பகுதியில் அழகிய ஒரு அரண்மணை இருந்தது என்றும் அதன் பல்வேறு பகுதிகள் தான் இவ்வாறு இடிபாடுகளாகக் காட்டியளிக்கின்றன என்றும் கிராமத்திலுள்ள முதியோர் சொல்கின்றனர்.

இந்த அரண்மனை இருந்த காலத்தில் கங்கைகொண்டபுரம் முடியடைய மன்னர் ஒருவரின் செல்வமுக் செழிப்பும் நிறைந்த தலைநகராக விளங்கியது. இப்போது ஒற்றையடிப்பாதை ஓட இல்லாத காடாகக் காட்சி தரும் பகுதியில் மைல் கணக்கான பெரும்பரப்புக்கு இந்த ஏரி வளத்தை வாரி வழங்கிற்று.

இந்த மாபெரும் அணையை மீண்டும் கட்டவேண்டும் என்று அடிக்கடி பேசப்பட்டு வந்திருக்கிறுது.

என்று 1855 ம் ஆண்டில் வெளியான ஸ்தல சஞ்சிகை ஒன்று நினைவு கூர்கிறது.

இவ்வாறெல்லாம் நினைவுகூறப்படும் கங்கை கொண்ட சோழபுரம், இராஜராஜ சோழனின் மகனான இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. இம் மன்னனை பற்றிய ஒரு சிறு குறிப்பு, தற்போதைய சென்னை, ஆந்திரம் பகுதிகளுடன், மைசூரின் ஒரு பகுதியையும், ஈழத்தையும் உள்ளிட்ட ஒரு பரந்த நாட்டை இவனது தந்தை இவனுக்கு விட்டுச் சென்றான். அரசாங்க நிர்வாகம் மிகுந்த கவனத்துடன் நிறுவப்பட்டதுடன். பெருநிலப்பிரபுக்கள், சிறு விவசாயிகள், தொழிற்குழுக்கள் ஆகிறோரது உரிமைகளைப் பாதுகாக்கவும். அதே சமயம் மன்னனது அமைதியையும் சமூக உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் வலிமைமிக்க ஒரு அதிகாரவர்க்கமுக் உருவாக்கப்பட்டது. நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட வீரரைக் கொண்ட படை ஒன்று நாட்டின் விரிந்த எல்லையைக் காக்கும் திறன் பெற்றிருந்ததோடு.

புதிதாகக் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் எழும் எதிர்ப்புக்களை அழிக்கவும் வெளிநாடுகளைக் கைப்பற்றவும் உதவி புரிந்தது. ஈழம், மாலத்தீவுகள் போன்ற கடல் கடந்த நாடுகளைக் கைப்பற்றிய பின், அவற்றைத் தம் அதிகாரத்திற்குள் நீடித்திருக்குமாறு செய்ய அவன் ஒரு சிறந்த கடற்படையும் வைத்திருந்தான்.

இக்கடற்படை உதவியுடன் கிழக்கிந்திய தீவுகளுடனும், சீனத்துடனும் ஏற்பட்ட வாணிகத்தையும் பாதுகாக்க முடிந்தது. இவற்றைப் பயன்படுத்தி ஆட்சி செய்த 33-ம் ஆண்டுகளில் இராஜேந்தின் தன்நாட்டை இந்து அரசர்கள் ஆண்ட நாடுகளிலேயே தலைசிறந்த ஒன்றாகவும் மலேயாத் தீபகற்பத்தையும், கீழைக்கடற்கரைப் பகுதிகளையும் உள்ளிட்ட மிகப்பரந்த நாடாகவும் மாற்றி அமைத்தான்.

வரலாற்றின் மிகச்சிறந்த மன்னர்களில் ஒருவனான இராஜேந்திரனின் அரண்மனையும் தலைநகரமும் இன்றிருக்கும் நிலையை நினைத்து கண்ணீர்தான் வந்தது.

இது ஒரு பெரிய சுற்றுலாக் கதையென்பதால் இதனை இங்கேயே நிறுத்திக் கொள்கிறேன். பின்னர் நாங்கள், மீனாட்சி அம்மன்கோவில், பெரிய கோவில், சூரியனார்க் கோவில், பாரி ஆட்சி செய்த ஒரு மலைக்கோட்டையில் இருக்கும் ஒரு கோவில் (பெயர் மறந்துவிட்டது) என ஏறக்குறைய 20 கோவில்களுக்கு மேல் சென்றோம். முடிந்தால் என் பக்கத்தில் அதைப்பற்றி குறிப்புக்களை எழுத முனைகிறேன்.

——————————–

இது நான் தமிழோவியத்திற்காக எழுதிய ஒரு பதிவு.

பதின்மத்தில் நான் செய்த பயணம்

நன்றி தமிழோவியம். வாய்ஸ் பதிவு போட்டப்ப நினைவில் வந்தது, தேடிப் பார்த்தேன் என் பதிவில் என் கண்ணில் படாததால் மீண்டும் ஒருமுறை.

எழுதப்படாத என் கவிதைகள்

பாப்லோ நெருதாவைப் பற்றி எழுத அரிப்பெடுக்கும் என் நினைப்பை மட்டப்படுத்திக் கொண்டிருக்கிறேன், உள்ளிருந்து வெளிப்பட்டதும் மறைந்துபோய்விடுவதாய் நினைக்கும், மீண்டும் இன்பக்கிளர்ச்சி வருவதேயில்லை.

————————–

நழுவிச் செல்லும்
சொற்களைப் படிமமாக்கி
அழகுபடுத்தப்படும்
அக்கவிதை
ஒருமுறை படிக்கப்பட்டதும்
இறந்துபோனதாய் உணரப்படுவதால்
அழிக்கப்படுகிறது
இரைச்சலுடன் பறந்துபோகும்
சொற்களைப் பார்த்தவாறே
நிரப்பப்படாத பக்கங்களாய்
எழுதப்படாத என் கவிதைகள்.

– நான் தான் எழுதினேன்.