கொலைத்தொழில் வல்லவன் – 3(New)

“இதில் பேசவேண்டாமே, பத்து நிமிடத்தில் உங்களைச் சந்திக்கிறேன்.”

ஒரு சில வார்த்தைகளில் அவள் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்ட, இந்திரஜித் என்ற அவள் தந்தையின் நண்பர், சொன்னது போல் பத்து நிமிடங்களில் வந்து சேர்ந்தார். நன்கு வாட்ட சாட்டமாக இருந்தாலும் அவர் நடை உடை பாவனைகளில் ஒரு உளவாளியைப் போன்ற சிறு அறிகுறிக்கூட அவரிடம் தெரியவில்லை அவளுக்கு.

“உங்களுக்கே தெரிந்திருக்கும் என் அப்பா இறந்துபோன விஷயம். அவர் இறக்கும் முன் எனக்கு அனுப்பிய கடைசிக் கடிதத்தில் என்னுடைய உயிருக்கும் ஆபத்திருப்பதாகவும். உங்களிடம் உதவி கேட்குமாறும், சுவிட்சர்லாந்திற்கு போய்விடுமாறும் சொல்லியிருந்தார்.”

தீபிகா மெதுவாய்ச் சொல்லிவிட்டு, அந்த மனிதரிடம் ஏதாவது முகமாற்றம் ஏற்படுகிறதா எனக் கவனித்தாள், கண்களுக்கு ஏற்கனவே கூலிங்கிளாஸ் அணிந்திருந்ததால், அவர் முகபாவாத்தைக் கொண்டு ஒன்றும் உறுதிசெய்ய முடியவில்லை.

“உங்கக்கிட்ட ஏற்கனவே பாஸ்போர்ட் இருக்கா?” கேட்ட இந்திரஜித் சிறிது யோசித்துவிட்டு, “சரி வேண்டாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் சுவிஸ் செல்வதற்கு தயாராக இருங்கள்.” சொல்லிவிட்டு போயேவிட்டார்.

அவளுக்கும் தெரியும் தந்தை தன்னிடம் சொல்லியதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் அவரால் தன்னிடம் கேட்கமுடியாதென்பது, அவர்கள் வழக்கப்படி, வார்த்தை தான் முக்கியம். ஆனால் அதே நேரத்தில் அப்படி தன்னையும் தன் வார்த்தையையும் நம்பும் ஒருவரை ஏமாற்ற வேண்டியிருக்கிறதே என நினைக்கும் பொழுதே தீபிகாவிற்கு கண்களில் நீர் எட்டிப்பார்க்கத் தொடங்கியது. ஆனாலும் தன் மனஉறுதியை குலைக்கும் எந்த விஷயத்தையும் அனுமதிக்காமல் எல்லாம் நன்மைக்கே என்று இந்திரஜித்திற்காக காத்திருக்கத் தொடங்கினாள்.

.

செய்தி,

உள்துறை அமைச்சர் சந்தகோஷ் முகோபாத்யாய் ராஜினாமா.

சொந்தக்கட்சியிலும், எதிர்க்கட்சியிலும் தனக்கும் பிரதமர் அவர்களுக்கும் சிண்டுமுடிக்கும் வேலைகள் நடைபெற்று வருவதாகவும் அதை முற்றிலும் தவிர்க்கும் நோக்கமாக தன்னுடைய உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகவும் அந்த கடிதத்தை பிரதமமந்திரிக்கு அனுப்பிவிட்டதாகவும் தெரிகிறது.

பிரதமர் உள்துறை அமைச்சரின் ராஜினாவை ஏற்றுக்கொள்ளக் கூடாதென்று, மத்திய மந்திரிகள் பலர் பிரதமரின் இல்லத்தின் முன்னர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்கள்.

.

ஸ்யூரிச் விமானநிலையத்தில் வந்திறங்கிய தீபிகாவை வரவேற்க, இந்திரஜித் சொல்லியிருந்ததைப் போன்றே சற்று நடுத்தர வயதுள்ள ஒரு மனிதர் கையில் பெயர்ப்பலகையுடன் காத்திருந்தார். அவரிடம் எந்தெந்த விஷயங்ளை சொல்லலாம், எதைச் சொல்லக்கூடாதென்று அவளுக்கு சொல்லப்பட்டிருந்தது. அந்த நபர் சுவிட்சர்லாந்தில் ஒரு உணவகம் நடத்துபவர் என்பது மட்டும் அவளுக்கு தெரியும். அதிலும் அந்த நபர் ஒரு தமிழ் தெரிந்தவர் என்பது தீபிகாவிற்கு கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.

அவரிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவளுக்கு, விமானநிலையத்திலிருந்து அவர் வீடு செல்லும் வரை, தான் கடைசியாக இந்திரஜித்துடன் பேசியது தான் நினைவில் வந்துகொண்டேயிருந்தது.

.

“தீபிகா, உங்க அப்பா ஏன் அப்படிச் சொன்னார் என்பது தெரியாது எனக்கு. உங்களுக்கும் ஜகதாவிற்கும் இருக்கும் தொடர்பு என்னைத்தவிர யாருக்குமே தெரியாது.

ஆனால் எங்கள் பழக்கவழக்த்தில் சிலதடவை மனம் சொல்லும் விஷயத்திற்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும். அதேபோல் உங்கள் தந்தையும் ஏதோ அவர் மனதில் பட்டதால் இப்படி சொல்லியிருக்க வேண்டும் அதனால் எவ்வளவு சீக்கிரம் இங்கிருந்து சென்றுவிடமுடியுமோ சென்றுவிடுங்கள். உங்களுக்கான பணம் ஏற்கனவே வங்கியில் இருக்கும். என்னிடம் கேட்பதற்கும் தயக்கம் வேண்டாம்.

நீங்கள் சுவிட்சர்லாந்தில் என் தூரத்து சொந்தக்காரர் ஒருவரின் வீட்டில் தங்கலாம். உங்களுக்கு விருப்பமிருந்தால் அவருடைய உணவகத்தில் வேலைக்கூட செய்யலாம். அவர்கள் உங்களைப்பற்றிய விவரங்களை கேட்க மாட்டார்கள். நீங்கள் சொல்லவேண்டாம். மற்றபடிக்கு சிறிது காலத்திற்கு பிறகு நீங்கள் மறுபடியும் இங்கே வருவதற்கு விருப்பப்பட்டால் அதுவும் நிறைவேற்றப்படும்.”

ஆனால் கடைசிவரை ஆந்தனியைப்பற்றிக் கேட்க நினைத்த தீபிகாவால் அந்த விஷயத்தைக் கேட்க முடியவில்லை, அசாதாரணமான அறிவுடைய உளவாளிகள், மற்றவர்கள் பேசும் ஒவ்வொருவார்த்தையையும். கணக்கில் எடுத்துக் கொள்வார்கள் என நன்கறிந்த தீபிகாவிற்கு அவள் இந்த சமயத்தில் ஆந்தனியைப் பற்றிக் கேட்பதில் இருக்கும் சிக்கல் தெரிந்துதான் இருந்தது.

.

ஆந்தனிக்கு கியூபாவில் இருக்கும் ஒரு அமேரிக்க எதிரியைக் கொல்வதற்கான அசைன்மெண்ட் வந்திருந்தது. கியூபாவின் பொருளாதாரத்தில் இருக்கும் நிலையால், உளவாளிகளின் வேலைகள் வெகுசாதாரணமாக நடக்கும் ஒரு நாடுதான் என்ற பொழுதும். அவனுக்கு அசைன்மெண்ட்டாக கொடுக்கப்பட்டிருக்கும் நபர். கியூபாவில் மிகவும் பாதுகாப்பான பகுதியில் இருப்பவன், பயங்கரமான சாமர்த்தியசாலியான அவனை, அமேரிக்காவில் இருக்கும் பொழுதே போட்டுத்தள்ளிவிட நினைத்த அமேரிக்காவின் சிஐஏவை ஏமாற்றி விட்டு தற்பொழுது கியூபாவில் அடைக்கலம் புகுந்திருக்கிறான்.

அவனைப்பற்றிய விவரங்கள் அடங்கிய சிடி ஆந்தனிக்கு வந்து சேர்ந்த பத்தாவது நாளை ஆந்தனி, தன்னுடைய டார்கெட்டாக் வைத்திருந்தான். அவனுடைய திட்டத்தின் படி சரியாக எட்டாவது நாளே ஹவானா விமானநிலையத்தில் வந்திறங்கிய அவன். தன் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவமாக மாறப்போகும், அந்த பத்தாவது நாளுக்காக காத்திருக்கத் தொடங்கினான்.

.

வந்ததில் இருந்தே அங்கிருக்கும் ஆட்களிடம் அதிகமாக பேச்சுக் கொடுக்காமல் தீபிகா இருக்க, உணவகத்தின் முதலாளி கண்ணன், முதலில் வலியச்சென்று பேச்சுக்கொடுத்த பொழுதும். இவள் மௌனம் கடைபிடிக்க அவரும் அவர் குடும்பத்தினரும் சரி, புது இடம் பழகினால் சரியாய்ப் போகும் என நினைத்து விட்டிருந்தனர்.

ஆனால் தீபிகாவிற்கு அவள் சுவிட்சர்லாந்து வந்ததின் அர்த்தமே தான் ஆந்தனியை சந்திப்பதில் இருக்கிறது என்பது சரியாகத் தெரிந்திருந்ததால். அவளின் எண்ணம் முழுக்க அதைப்பற்றியே சுற்றிவந்தது. தன்னால் அவனை தனிப்பட்ட முறையில் தொடர்புகொள்ளவே முடியாதென்பது அவளுக்கு தெரிந்துதான் இருந்தது. இரண்டு மூன்று நாட்கள் தீவிர யோசிப்பில் மீண்டும் அவளுக்கு ஏதோ ஒரு யோசனைத் தட்டுப்பட்டதைப் போலிருக்க, மீண்டும் ஒரு முடிவுக்கு வந்தவளாய்.

அந்த எண்ணுக்குத் தொலைபேசினாள்,

“ஹுலோ இந்திரஜித், எனக்கு பயமாயிருக்கிறது. என்னைத் தொடர்ந்து இங்கேயும் கொல்வதற்கு ஆட்கள் வந்திருப்பதாய்ப்படுகிறது. ஒரு ஆள் என்னையே சுற்றிச்சுற்றி வருவதாய்ப் படுகிறது. நீங்கள் தான் உதவவேண்டும்.”

முந்தைய அந்தியாயங்கள்
கொலைத்தொழில் வல்லவன் 1 & 2

நட்சத்திரம் – கொலைத்தொழில் வல்லவன் 1 & 2

அந்த கண்ணாடி அறைக்குள் உட்கார்ந்திருந்த இருவரின் முகமும் இறுக்கமாய் இருந்தது. அந்த அறையில் நிலவிய நிசப்தத்தை போல.

“அவனை முடிச்சிடுங்க.”

எதிரே உட்கார்ந்திருப்பரின் உணர்ச்சிகளற்று முகத்தில் மாற்றங்களை எதிர்பார்த்து ஏமாந்தவாராக,

“அந்த முக்கியமான் கோப்புக்களை அவன் பார்த்திருக்கக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம். அதனால் தான் சொல்கிறேன்.”

இதற்கும் பதில்வராத காரணத்தால்,

“அவனுக்கு குடும்பம் எதுவும் உண்டா?”

“இல்லை.”

மீண்டும் நிசப்தம் அந்த அறையில் பரவத்தொடங்கியது.

நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர், முனிர்கா வீதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். அவரை பற்றிய எந்த விவரமும் தெரியாத நிலையில் காவல் துறை அதிகாரிகள் தீவிரமான விசாரணையில் ஈடுபட்டுள்ளார்கள்.

முக்கியமான அழைப்புக்காக காத்திருப்பவள் போல் தொலைபேசி எதிரிலேயே உட்கார்ந்திருந்த தீபிகா, மணி பன்னிரெண்டு அடித்ததும் ஓவென்று அழத்தொடங்கினாள்.

அவளுக்குத் தெரியும் இனிமேல் தான் காத்திருந்த அந்த அழைப்பு வராதென்றும், அவளை அழைக்க வேண்டியவர், இந்நேரம் உயிருடன் இருக்க மாட்டாரென்றும்.

“தீபி, நாளைக்கு பன்னிரெண்டு மணிக்குள் நான் உனக்கு தொலைபேசவில்லையென்றால், நான் இறந்துவிட்டதாக அர்த்தம். அதன் பின் நீ என் சம்மந்தப்பட்ட அனைத்து கோப்புகள், நிழற்படங்கள் அத்துனையையும் அழித்துவிடு. முன்பே சொன்னது போல் உன் தேவைக்கான பணம், வங்கியில் இருக்கிறது. எதுவும் பிரச்சனையென்றால் இந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பிரச்சனையை சொல். தீர்த்து வைக்கப்படும்.”

இது வழக்கமாக அவள் தந்தை சொல்வதுதான். சிறுவயதில் இருந்தே கேட்டு கேட்டு பழக்கமாகிவிட்டதென்றாலும். எல்லாமுறையும் அப்பா தொலைபேசிவிடுவார். இந்தமுறை, இந்தமுறை…

இரண்டாம் நாள் அவளுக்கு ஒரு தபால் வந்தது. பிரித்து படித்தாள்.

“தீபி, இத்துனை நாள் உனக்கு சொல்லாத ரகசியங்களை இன்று சொல்லப்போகிறேன். நான் இந்திய அரசின் உளவுத்துறையில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஒருவாறு நீ இதை ஊகித்திருப்பாய். பலநாட்கள் அந்நியதேசத்து ஆட்களால் தான் கொல்லப்படப் போகிறோம் என்று ஆனந்தமாய் இருந்தேன்.

நீ இந்தக் கடிதத்தை படித்துக்கொண்டிருக்கும் பொழுது நான் உயிருடன் இருக்க மாட்டேன். நான் வேலை பார்த்த உளவுத்துறையே என்னை கொலை செய்யப்போகிறது. அரசாங்கத்தின் ஒரு முக்கியமான் கோப்பை மீட்டுவரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. நானும் முடித்துவிட்டேன், ஆனால் உயரதிகாரிகள் என்மேல் சந்தேகப்படுவதாகப்படுகிறது.

எனக்கு ஒரு குடும்பம் இருப்பதாக இவர்களுக்கு தெரியாது. அதனால் நீ இந்தக் கடிதத்தை படித்ததும் கிழித்துவிடு. இந்தக் கடிதத்தை வைத்து எதுவும் செய்யலாம் என்று கனவிலும் நினைக்காதே. அவர்கள் உன்னையும் அழித்துவிடுவார்கள். உன்னிடம் மட்டும் சொல்லவேண்டும் போல் தோன்றுகிறது. நான் இறந்துபோனால் அதற்கு முழுக்காரணம் உள்துறை அமைச்சர்தான்.

அடுத்த பிரதமர் ஆவதற்கான அத்துனை முயற்சிகளும் செய்து வருகிறார் அவர். உன்னுடன் அதிக காலம் கழிக்கமுடியாமல் போனதற்காக வருந்துகிறேன்.”

கடிதத்தை படித்து முடித்ததும் தீபிகாவிற்கு அழுகை அழுகையாக வந்தது. அவளுக்கு விவரம் தெரிந்ததில் இருந்தே. அப்பாவின் முகம் ஞாபகத்தில் இல்லை. அதிகம் பேசியிருக்கமாட்டாள். எல்லாமே கடிதத்தொடர்புதான். சில வருடங்களில் அவளுடைய தாயாகப்பட்டவளும் இறந்துபோக விடுதிவாழ்க்கைதான் அவளுக்கென்றாகியது.

ஒரு முறை நேரில் பார்த்தபொழுது அவசர அவசரமாய், அவர் எழுதும் கடிதங்களை படிக்கும் வித்தையை சொல்லிக்கொடுத்தவர். அதற்கு பிறகு முழுவதும் கடிதங்களால் மட்டுமே அறிமுகம் ஆகியிருந்தார். அவள் கேட்காமலேயே அவளுக்குறிய அனைத்தும் கிடைத்தது. அன்பை தவிர.

அவள் தந்தையினுடைய நாட்குறிப்பேட்டை படிக்கத்தொடங்கினாள், அதுவரை அந்த நாட்குறிப்பேடு அவளிடம் இருந்தாலும் தந்தையே ஆனாலும் இன்னொருவருடயதென்பதால் படிக்காமல் இருந்தவள். இப்பொழுதுதான் படிக்கத்தொடங்கினாள்.

படிக்க படிக்க அவரின் மேல் அளவுக்கதிகமான அன்பும் பாசமும் ஏற்பட்டது. உயிரைக் கூடமதிக்காமல் நாட்டிற்காக உளவறியப்போகும் இவர்களை போன்றவர்களை, சந்தேகத்தால் அநாதைகளாக சாகடிப்பது அவளுக்கு சரியாகப்படவில்லை.

அவளுக்குள் மெதுவாக பழிவாங்கும் எண்ணம் ஊற்றெடுக்கத்தொடங்கியது. தன் தந்தையை கொன்றவர்களை நிச்சயமாக பழிவாங்க வேண்டுமென்று நினைத்தாள். ஆனால் அவளுக்கு தெரிந்துதான் இருந்தது. அவள் பழிவாங்க நினைக்கும் ஆட்கள் எப்படிப்பட்டவர்களென்று.

…(1)

தான் பங்கேற்ற, வெளிநாட்டு உளவுவிவகாரங்களஇல் சிலவற்றை தந்தை நாட்குறிப்பில் எழுதியிருந்து, அதை படித்துவிட்ட பிறகு, தீபிகாவிற்கு ஆச்சர்யமே அதிகரித்தது. எங்கெல்லாம் ஊடுருவுகிறார்கள், என்னவெல்லாம் செய்கிறார்கள். பயன்படுத்தும் தந்திரங்கள். விநோதம்.

இப்படித்தான் சுவிட்ஸர்லாந்தில் இந்தியாவின் ஒரு முக்கியமான புள்ளியின் வங்கிவிபரங்களைப் பற்றிய துணுக்குகளை சேகரிக்க சென்றிருந்த சமயத்தில் தான் உபயோகப்படுத்திய ஒருவனைப் பற்றி எழுதும் பொழுது, அவன் செய்த அரசியல் கொலைகளுக்காக உலகம் முழுவதும் தேடப்பட்டு வரும் ஒருவன் என்றும். இந்திய அரசிற்கே தெரியாமல், அவனை அணுகி அந்த வேலையை கச்சிதமாக முடித்ததாகவும் எழுதியிருந்தது. அவளுக்கு ஆச்சர்யமாயிருந்தது.

என்ன இருந்தாலும் அவன் கொலைகாரன் இல்லையா, அவனுடைய உதவியை எப்படி நாடலாம் என்று நினைக்கும் பொழுது. அவனைப் பற்றி அவள் தந்தையெழுதிய ஒற்றை வரி நினைவில் வந்தது.

ஆந்தனி கன்ஸாலஸ் – கொலைத்தொழில் வல்லவன்.

.

பெர்ன், ஆந்தனிக்கு மிகவும் பிடித்த ஒரு நகரம். பழமையான கருங்கற்கலால் ஆன, சொல்லப்போனால் 18ம் நூற்றாண்டுக்கு முந்தைய நினைவுச்சின்னங்கள் நிறைந்த ஒரு அற்புதமான நகரம். பெர்ன் சுவிட்ஸர்லாந்தின் தலைநகரம். அந்த நகரின் மனிதர்கள் ஆழ்ந்து யோசித்து நகர்பவர்களாகவும், மெதுவாக பேசுபவர்களாகவும் இருப்பதாக அவனுக்குப்பட்டது.

ஆறடி உயரமாய் இல்லாமல் சாதாரணமான ஒருவனாக இருந்தான் ஆந்தனி. அவனுடைய உருவத்தை வைத்து அவன் இந்த நாட்டை சேர்ந்தவன் என் தீர்மானிக்க முடியாதவனாகவும் தோன்றினான். கூர்மையான கண்கள், நீண்ட பெரிய கைகள், அதிகம் பேசாதவனாகவும், எப்பொழுதும் எதையோ யோசித்துக் கொண்டிருந்தவனாகவும் இருந்தான்.

“குடென் டக்.” சுவிஸ் நாட்டின் உச்சரிப்பில் அவன், தங்கயிருந்த விடுதியின் காப்பாளனை அழைக்க,

“சொல்லுங்க சார். நான் எதுவும் உதவி செய்ய வேண்டுமா?”

“டாங்கே, இல்லை, எனக்கு முக்கியமான தகவல் எதுவும் வந்ததா?”

“இல்லை.” அந்த காப்பாளான் சொல்லிவிட்டு அவனையே பார்க்க மீண்டும் நன்றி சொல்லியவனாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

உலகமே தேடும் ஒரு கொலைகாரன், சுவிட்ஸர்லாந்தில் அதன் தலைநகரத்தில் சுதந்திரமாக உலாத்துகிறான் என்றால் அவனுடைய அடையாளம் தெரிந்து நேரில் பார்த்தவர்கள் வெகு சிலரே. இன்டர்போல் இவனை தேடுவதற்காக, உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் புகைப்படம் கூட சுமார் பத்துவருடங்களுக்கு முன்னர் எடுத்தது.

பல நாட்டு உளவு நிறுவனங்கள் இவனை கொல்வதற்காக தேடிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் சில உளவு நிறுவனங்கள் இவன் உதவியை பெறவும் அவனைத் தேடுகின்றன. இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொஸாட் கூட சில சந்தர்ப்ங்களில் அவர்கள் பெயர் வெளியாக வேண்டாம்மென்று நினைத்து, ஆந்தனியை வைத்து பாலஸ்தீன தலைவர்களை, அரசியல் படுகொலை செய்திருக்கிறார்கள். ஆந்தனியை பொறுத்தவரை அவனுக்கு மதம் கிடையாது, மொழி கிடையாது. பலருக்கு அவன் எந்த நாட்டை சேர்ந்தவன் என்பதே தெரியாது. ஜெர்மன், ப்ரெஞ்ச், ஆங்கிலம் உட்பட உலகின் பலமொழிகளை எழுதவும் படிக்கவும் பேசவும் வல்லவன்.

யாரோ ஒருநாள், ஆந்தனியை கொலைத்தொழிலில் வல்லவனாக உருவாக்கியது அமேரிக்காதான் என பத்திரிக்கைகளில் எழுத எப்பொழுதுமே சிரிக்காத ஆந்தனி அன்று முழுவதும் நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருந்தான்.

.

செய்தி

உள்துறை அமைச்சர், சந்த்கோஷ் முகோபாத்யாய், எதிர் கட்சிகள் வெளியிட்ட கருத்துக்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் தனது பேட்டியில், தங்கள் கட்சியில் எந்த உட்கட்சி பூசலும் இல்லையென்றும் அடுத்து நாடாளுமன்ற தேர்தலுக்கும் தற்போதைய பிரதமரே, தங்கள் கட்சியின் பிரதமர் உறுப்பினராக நிறுத்தப்படுவார் என்றும் தெரிவித்தார்.

.

கடந்த சில நாட்களாகவே தீபிகாவின் மனதில் ஆந்தனி கன்ஸாலஸ் என்ற பெயர் சுழன்று கொண்டேயிருந்தது. ஆளைப்பார்த்ததேயில்லை, தந்தையின் நாட்குறிப்பை படிக்கும் முன் அந்தப் பெயரை கேள்விக்கூட பட்டதில்லை. ஆனால் ஆந்தனியை வைத்து உள்துறை அமைச்சரை பழிதீர்க்க வேண்டுமென்ற எண்ணம் மட்டும், மேலெழத்தொடங்கியிருந்தது.

அவனை எப்படி தொடர்பு கொள்வது, உலகமே தேடும் கொலைக்காரன், தான் சொன்னதற்காக, உள்துறை அமைச்சரைக் கொல்ல வருவானா? வந்தாலும் அவனுக்கு கொடுக்க தன்னிடம் பணம் ஏது. இதுபோன்ற சிந்தனைகளால் தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்த தீபிகா தான் இரண்டு நாட்களாக சாப்பிடவில்லையென்பதைக் கூட மறந்துவிட்டிருந்தாள்.

அடுத்த இரண்டு நாட்கள் அவளுக்கு முட்டாள்தனமாக தெரிந்தாலும், இன்டர்நெட்டில் உட்கார்ந்து அந்த பெயரில் ஒரு தேடுதல் வேட்டையே நடத்திக் கொண்டிருந்தாள். ஆனால் அவளுக்கு ஒரு தகவலும் உபயோகமாய் கிடைக்கவில்லை.

.

சில நாட்கள் தீவிரமாக யோசனை செய்த பிறகு, அவளுக்கு ஏதோ ஒருயோசனை தட்டுப்பட்டதை போல் உணர்ந்தவள். ஒரு முடிவுக்கும் வந்தவளாய்,

அந்த எண்ணுக்கு தொலைபேசினாள்.

“ஹுலோ, இந்திரஜித், நான் தீபிகா, ஜகதலப்பிராதபனின் மகள். ஒரு உதவி வேண்டும். மிகவும் முக்கியமானது.”

…(2)