ஓடிப்போனவளது வீட்டின் மரணம்

வாங்க என்ன வெளியிலேயே நின்னுட்டீங்க, உள்ள வாங்க என்னடா இந்த வீடு கூட அமைதியா இருக்கேன்னு பார்க்கிறீங்களா? ம்ஹும் என்ன செய்றது அப்படியாய்ப்போச்சு, உங்களை முன்னாடியே ஒருதரம் இங்க பார்த்த மாதிரியிருக்கே? ம்ம்ம் ஞாபகம் வந்திருச்சு போனதடவையும் இந்த வீடு அமைதியா இருந்த ஒரு நாள் நீங்க வந்திருந்தீங்கள்ள, ஞாபகம் வந்திருச்சு. சரி, சரி வெட்டிப் பேச்சு பேசிக்கிட்டிருக்கேனே உள்ள வாங்க.

மறந்திடாம காலில் போட்டிருக்கிறதை வெளியக் கழட்டிப்போட்டுட்டு வந்திருங்க, இந்த வீட்டம்மாவுக்கு சுத்தமா பிடிக்காது, சூடா ஆவிபறக்கிற அந்தம்மாவோட மணமான காபியை எதிர்பார்த்து வந்திருந்தீங்கன்னா சாரி, அம்மா நேத்திலேர்ந்து காபி போடுவதை நிறுத்திட்டாங்க. இன்னும் என்னவெல்லாம் எங்க பழக்கவழக்கத்தில் இருந்து மறையப்போகுதோ? ஆண்டவா அய்யோ ஆண்டவனைக் கூப்பிடுறேனே நான் நாத்தீகவரியில்லையா? ஒரு வேளை மறந்திட்டனோ…

என்னங்க அதிசயமா சுத்திச்சுத்தி பார்க்கிறீங்க, ஓஹோ நீங்க அந்தச் சம்பவத்துக்கு அப்புறம் இப்பத்தான் வர்றீங்கல்ல, அம்மாதான் வால்பேப்பர், காந்தி படம், கன்னியாகுமரியிலேர்ந்து வாங்கிவந்த சிப்பி மாலையெல்லாத்தையும் தூக்கிக் கடாசிட்டாங்களே. ம்ஹும் உங்களுக்குத்தான் தெரியுமே அம்மாவோட கோபத்தின் செறிவு.

“எதப்பாத்தாலும் அவமூஞ்சே தெரியுது.”

கோடையின் வெம்மை சுவற்றில் தங்கியிறங்கிய ஒரு இரவில் வியர்வை வாசத்துடன் புரண்டுபடுக்க கூழாங்கற்கள் தான் நகர்ந்ததோயென்னவோ வெளிப்பட்ட சப்தத்தில் அம்மா என் காதில் சொன்ன இந்த விஷயம் இப்ப நான் சொல்லி உங்களுக்கு தெரிஞ்சிருக்கு. என்ன என் குரல் கம்முதேன்னு பார்க்கிறீங்களா இன்னிக்கு அந்தம்மா சொன்ன ஒரு வார்த்தை தான் இன்னும் உறுத்திக்கிட்டேயிருக்கு…

“என்னங்க வீட்டை மாத்திரலாம் இனிமே என்னால முடியாது.”

அழுது ஓஞ்சிருந்த அய்யாவின் காதுகளுக்கு மட்டும் கேட்கும் படியாய்ச் சொன்னது என் காதுகளுக்கு எப்படி கேட்டிச்சுன்னு கேக்குறீங்களா எனக்குத்தான் ஆயிரம் காதுகளாச்சே. ஆனால் இப்படி நடக்கும்னு நான் எதிர்பார்க்கவில்லை. என் சகோதரர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். எல்லோருக்கும் மரணம் உண்டென்று. ஆனால் எனக்கு மரணம் வராதென்றே நினைத்திருந்தேன். இல்லையா பின்ன மூணு தலைமுறையா உயிரோடயிருக்கேன்ல அதில் வந்த திமிர்தான்.

எத்தனை குழந்தைகள் பிறந்ததையும் வயதானவர்கள் சாவதையும் பார்த்திருக்கிறேன். ஏன் அந்த பொண்ணு பேரென்ன, ஆஹா நான் சாவப்போறேன் எனக்குத் தெரிய ஆரம்பிச்சிறுச்சு. மூணு தலைமுறை பெயர்களைக்கூட ஞாபகம் வச்சிருந்த எனக்கு போன வருஷம் இருந்த அந்தப் பொண்ணு பேரு நியாபகத்தில் வரமாட்டேங்குதுன்னா சரிதான் நீங்கவேற வந்துட்டீங்கள்ள அதையே மறந்திட்டேன். போனதடவை வந்தப்ப உங்களை ஓட ஓட விரட்டினது ஞாபகத்தில் வருது. அப்ப சோகத்தில் கூட எவ்வளவு சந்தோஷமா இருந்தது. சாவையே ஜெயிச்சிட்டேன்னு.

எல்லாம் அந்தச் சனியனால, அய்யய்யோ நான் சொன்னது உங்களுக்கு கேட்டிருச்சா அந்தம்மாக்கிட்ட சொல்லிடாதீங்க, வருத்தப்படுவாங்க. ம்ம்ம் நியாபகம் வந்திருச்சு வந்தனா, வாயில் சக்கரைத்தண்ணியைத் தொட்டுவைச்சி அவக்காதில் வந்தனா வந்தனா வந்தனா ன்னு சொன்னதை நீங்க பார்த்திருக்கீங்களா நான் பார்த்திருக்கேன். அதைமட்டுமாப் பார்த்தேன் ஒரு நாள் அந்தப் பொண்ணு பொட்டியைத் தூக்கிக்கிட்டு யாரும் முழிச்சுப் பார்த்திருவாங்களோன்னு திரும்பித்திரும்பிப் பார்த்துக்கிட்டே வெளியே போனதையும் பார்த்துத் தொலைத்திருந்தேன். ஆயிரம் காதுன்னு சொன்னேன்ல ஆனால் ஒரு வாய் இல்லைன்னு வருத்தப்பட்டது அன்னைக்குத்தான். இருந்திருந்தால் அந்த அம்மாவை உஷார் பண்ணியிருக்கலாம் இல்லைன்னா அய்யாவை இரண்டுமே முடியலைன்னா அந்தச் சோம்பேறி மோகனையாவது.

நான் உருவான பொழுது பக்கத்தில் சகோதரர்கள் பேசக் கேட்டிருக்கிறேன். பெண்கள் யாருக்கும் கேட்காத அளவிற்கு பேசக்கூடியவர்களென்று உண்மைதான் அந்தம்மா மனசில என்ன நினைக்குதுன்னோ இல்லை தூக்கத்திலேயோக்கூட அவள் மனதில் இருக்கும் விஷயம் நான் அறிய முடிந்ததில்லை, அதுபோலில்லை ஆண்கள் அவர்கள் புலம்புவது மட்டுமல்லாமல் அவர்கள் மனதில் நினைக்கும் விஷயங்கள் கூட எளிதாகக் கேட்டிருக்கிறது. அப்படித்தான் வந்தனா ஓடிப்போன அன்றவன் எவனோ ஒருவன் அந்த அழகுதேவதையை அனுபவித்துக் கொண்ருப்பான் நினைத்ததும் தெளிவாகவேக் கேட்டது. என்னையும் அறியாமல் நான் ஆமாம் என்று சொல்லியதை நினைத்து சிரித்தேன். உண்மைதான் என்னதான் அவன் தம்பிக்காரனாயிருந்தாலும் நான் பார்த்த அளவிற்கு அவன் பார்த்திருக்க வாய்ப்பில்லையில்லையா. இதை ஒருமுறை சகோரனிடம் சொல்லும் பொழுது அவன் எதையோ புரிந்துகொண்டவனைப் போல் சிரித்தான் முதலில் பின்னர், என்னவோ உனக்கு சாவில்லைன்னு சொன்னியே உனக்கும் சாவு உண்டு, உன் சாவு என் கண்ணில் தெரியுதுன்னு சொன்னதை கொஞ்சம் கொஞ்சமாய் யோசித்துப் புரிந்து கொண்டேன்.

ஆமாம் எனக்கும் சாவு உண்டென்பதை நான் புரிந்து கொண்டேன் என்றுதான் சொல்லவேண்டும் ஆனாலும் மூன்று தலைமுறையாய் உயிர்வாழ்ந்தது அதை மறக்கடிக்கும் வித்தைதான் ஆச்சர்யமே. மூன்று தலைமுறை மக்களுடனான பழக்கம் இருந்தாலும் யாருடனும் ஒட்டாமலே இருந்து வந்திருக்கிறேன். எல்லாம் ஒரு நிமிடத்தில் மாற்றப்பட்டது, இந்த அம்மா அய்யாவிற்கிடையேயான உறவினைக்கூட விலகியிருந்து பார்க்கமுடிந்திருக்கிறது, இதுவரையிலும் இவர்களிடத்தில் அந்த ஒட்டுதல் இல்லைதான், சகோதர்கள் அவரவர் வீட்டு அய்யா அம்மாவின் இரவு விளையாட்டுக்களைப் பற்றி பேசும் பொழுது தலையில் அடித்தக்கொண்டு நகர்ந்திருக்கிறேன். அவர்களுக்கு மரணம் வேண்டும், தங்களை அவர்களாக பாவித்து ஒரு தலைமுறை வாழ்ந்து மடிவதில் அவர்களுக்கு விருப்பம் அதிகம், அவர்களின் சோகங்களுக்கு அழுது, சந்தோஷத்தில் சிரித்து, மரணத்தில் தங்கள் நினைவுகளை அழித்து மீண்டும் நினைவில்லாமல் பிறப்பதில் சுகம் காண்பவர்கள்.

அந்தக் கிராமத்தில் சுவர்களுக்கு வெள்ளைப் பூச்சே அரிதாகயிருந்த காலக்கட்டத்தில், அய்யாவிடம் கெஞ்சிக்கூத்தாடி டிஸ்டம்பர் அடித்து, அழகழகான குழந்தைப் படங்களை வால்பேப்பர்களாக வாங்கிவந்து ஒட்டி, சோழிகள், சிப்பிகளால் ஆன மாலைகளால் அலங்கரித்து ஒரு சூரியன் மேற்கேசாயும் அந்திவேளையில் என்மேல் காதைவைத்து இப்ப நீ எவ்வளவு அழகாயிருக்கத் தெரியுமா அந்தப் பெண் கேட்ட ஒரு நிமிடத்தில் எல்லாம் மாறிப்போனது. காதலா அந்த வார்த்தைக்குத்தான் எத்தனை போதைதரும் வல்லமை. பின்னர் என் கண்கள் எல்லாம் ஒடுங்கிப்போய்விட்டன இரண்டேயிரண்டைத்தவிர்த்து, காதுகளும் கூட. அவளுக்காக மட்டும் இயங்குபவையாக, இப்படி ஒருவருடத்திற்கு முன்பே அவள் வீட்டை விட்டு ஓடிப்போன பொழுதே அழிந்திருக்க வேண்டிய நினைவுகள் இன்னமிருப்பதற்கு காரணம் அதோ அந்தச் சோபாவில் தூங்வதற்கான எல்லா முயற்சிகளையும் செய்து தோற்றுப்போனவனாய் விட்டத்தை வெறித்துப் பார்த்தவாறு படுத்திருக்கானே அந்தச் சோம்பேறி மோகன் தான் காரணம்.

அடாத மழையில் விடாமல் காஜி அடித்து ஜுரத்தினால் படுத்திருந்த ஒரு நாளில் அவன் மேல் ஆரம்பித்தது இந்தப் பொறாமையுணர்ச்சி, காய்ச்சல் 106க்கும் மேல் போய்விட, வந்தனா அவன் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்து அழுதபடியே கைகளைப் பிடித்துக் கொண்டிருந்தது நினைவில் உள்ளது. இப்படி ஆரம்பித்ததுதான் அவன் மீதான ஒட்டுதல், அக்காவைப் போலவே அவனுக்கும் என்மேல் காதல் உண்டு, எத்தனைப் படங்கள் எத்தனைப் படங்கள், அவன் எதிர்த்தவீட்டு இரட்டைச்சடைப் பெண், ஒரு கையில்லாத அய்யர் வீட்டு ஆன்ட்டி என அவன் பொருந்தாக் காதலெல்லாம் படங்களாக என் மேனியெங்கும் பரவியிருந்தது அவனது திறமை உண்மையில் ஆச்சர்யமானதுதான். ஆனால் ஆச்சர்யமூட்டும் அந்த ஓவியங்களை அதிர்ச்சிக்குரியவையாக்கிய அவனை நினைத்து இன்னமும் துடைத்துக் கொண்டேயிருக்கிறேன் உதடுகளை. என்னை ஆணாக வரித்து அவன் அக்காவை நான் காதலிக்க அவன் என்னைக் காதலுடன் முத்தமிட்டதைக் கூட பொறுத்துக் கொண்டிருந்தேன் வந்தனாவிற்காக, ஆனால் அவன் ஒருநாள் கொண்டுவந்தானே ஒரு சனியன் பேரைப்பாரு பாரு ஜிம்மியாம் ஜிம்மி.

கைகளுக்குள் அடங்கிவிடும் சைஸில் கொண்டுவந்த அந்த ஜீவனை அம்மாதான் காப்பாற்றினாள், நூழிலையில் பால்விட்டு, கொஞ்சமாய் வெட்டிய கம்பளிக்குள் வெதுவெதுப்பை உண்டாக்கி, அவனுக்கு தற்பெருமை அதிகம் அவன்தான் ஜிம்மியின் மீது பாசம் அதிகம் வைத்திருப்பதாய், ஆனால் எனக்குத் தெரியும் அம்மாவிற்கு வந்தனாவையும் மோகனையும் விட ஜிம்மியை அதிகம் பிடிக்கும்.

ஆனால் எனக்கு பிடிக்கவேப்பிடிக்காது, அம்மாவிற்கும் அய்யாவிற்கும் தெய்வமாய், வந்தனாவிற்கும் மோகனுக்கும் காதலன் காதலியாயும் இருந்த என்னை காலைத்தூக்கி அசிங்கம் செய்யும் பொருளாகப் பார்த்த ஜிம்மியை எனக்கு பிடிக்கவேயில்லை, உண்மையில் இது கூட ஒருவகையில் ஒட்டுதல் தான். பிரியமோ இல்லை கோபமோ இருக்கக்கூடாது சாவு வேண்டாமென்றால். ஆனால் எனக்கு பிரியம் பொறாமை கோபம் மூன்றும் வந்தது மூன்றாம் தலைமுறையில். ஆனால் ஜிம்மி வந்த பிறகு அந்த வீடு அமைதியாய் இருந்து நான் உணர்ந்ததேயில்லை, ஒருவர் மாற்றி ஒருவர் அவனைக் கொஞ்சிக் கொண்டும் கோபித்துக் கொண்டும் விளையாடிக்கொண்டும் ம்ஹும் அந்த நாட்கள் மகிழ்ச்சியானவை. சோம்பேறி மோகன் ஆரம்பக்காலத்தில் பள்ளிக்கூடத்திற்கு போனதற்கு பிறகும் பிற்பாடு காலேஜுக்கு போனதிற்கு பிறகும் அய்யாதான் ஜிம்மிக்கு எல்லாமே, எனக்கென்னமோ மோகன் கண்முன்னால் அய்யா ஜிம்மியை பிடிக்காதது போல் நடிக்கிறாரோ என்ற எண்ணம் எழுந்து கொண்டேயிருந்தது.

பின்னர் ஒருநாள் தான் காதலித்த வேற்று மத பையனைக் கல்யாணம் செய்துகொள்வதற்காய் சொல்லாமல் கொள்ளாமல் லெட்டர் மட்டும் எழுதி வைத்துவிட்டு வந்தனா போன நாள் ஜிம்மி மட்டும் கொஞ்ச நேரம் பசியில் கத்திக்கொண்டிருந்தான். ஊரே இந்த விஷயம் பற்றி பேசிக்கொண்டிருக்க வீட்டில் நிசப்தம். நான் வந்தனா காதலித்த பையனைப் பார்த்ததில்லை அதனால் தான் மோகன் எவனோ ஒருவனைப் பற்றி நினைத்ததும் ஒத்து ஊதத் தோன்றியது. என்னயிருந்தாலும் எனக்குக் கூட காண்பிக்கமாட்டேனெற்று உடை உடுத்துபவளாயிற்றே வந்தனா, இன்னொருவனுடன் உடையில்லாமல்…

அப்படியிப்படியென்று ஒருவருஷம் ஆகியிருந்தது. காலையில் அம்மா படிச்சிப் படிச்சி சொன்னாங்க, டேய் கதவை மூடிட்டு போ ஜிம்மி வெளியப் போயிறப்போறான்னு இந்தச் சோம்பேறிதான் மூடாமல், எதிர்த்தவீட்டு ஏஞ்சலை சைட் அடிச்சிக்கிட்டே போய்விட்டான் அப்படியே ஜிம்மியும், இது இரண்டாவது முறை நான் வாய் இல்லாமல் போனதற்காக வருந்தியது, என்னதான் நான் பொறாமைப்படும் விஷயம் என்றாலும் ஜிம்மி கூழாவதைப் பார்க்கும் நிலையில் நான் இல்லை, வந்தனா ஓடிப்போன அன்றுகூட கண்ணை திறந்து வைத்திருந்தவன் வாழ்க்கையில் முதல் முறையாய் கண்களை மூடினேன். விஷயம் தெரிந்து அய்யா ரோட்டிலேயே கூழைக்கையில் எடுத்து முகத்திலறைந்து அழுததும் அவர் வந்தனா வீட்டை விட்டு ஓடிப்போனதின் பிறகு வந்த முதல் சனிக்கிழமை முதல் வார்த்தையாக சொன்னது ஞாபகத்தில் வந்தது,

“ஒருவார்த்தை சொல்லிட்டு போயிருக்கலாம்.”

எல்லாம் போச்சு, அய்யாவிற்கு அழுகையுடன், மோகனுக்கு கழிவிரக்கத்துடன் ஆனால் அம்மாதான் சொல்லிவிட்டாள் என் சாவிற்கான நாளை இந்த வீட்டை விட்டு போவதான ஒரு வார்த்தையுடன். நான் அழிந்து போவதற்காக வருந்தியதெல்லாம் உண்டுதான், எனக்கென்னவோ வந்தனா போனதிலிருந்தே நான் பாதி இறந்துவிட்டவனாயும், எல்லாவற்றையும் கடந்துவிட்டவனாகவும் ஆனாலும், மோகன் மீதும், ஜிம்மியின் மீது மட்டும் பாசம் உரியவனாயும் இருப்பதாய் உணர்ந்தேன். வந்தனா ஓடிப்போய்விட்ட நாட்களின் ஆரம்பக்காலத்தின் இரவுகளில் யாருக்கும் கேட்காமல் அம்மா அழுதது தெரியும்.

இன்று எதற்கும் கவலைப்படாதது போல், அம்மா சமையற்கட்டை வெறித்து வெறித்துப் பார்த்து வெடித்து அழுது கொண்டிருந்தாள், இது போதும் இது நிச்சயமாகப் போதும். நான் சந்தோஷமாய் இறந்து போவேன். பின்நாட்களில் என்றைக்காவது இவர்கள் திரும்பவும் வந்து தெருமுனையில் இருந்து பார்க்கலாம். ஆனால் நான் அப்போது இருக்கப்போவதில்லை. என்னுடைய மூன்று தலைமுறை நினைவுகள் இழந்தவனாய் புதிதாய் பிறந்து ம்ஹூம் இன்னும் நிறைய தலைமுறைகளைப் பார்க்கப்போகிறேன். அம்மா சொன்ன அந்த வார்த்தையைக் கேட்டுத்தானே வந்திருக்கீங்க நீங்க, இருங்க அந்த லாரி தெருமுனையை கடந்ததும் அழிச்சிறுங்க என் நினைவுகளை.

————————

இது இரண்டு கவிதைகளைப் படித்ததின் விளைவு கவிதையை எழுதியவர் போட்டிருந்த புகைப்படங்களைக் காப்பியடித்திருக்கிறேன். இதே போல் கவிதையெழுதியவர் எழுதிய இரண்டு கதைகளை(???) தொடர்ந்து எழுத உட்கார்ந்திருக்கிறேன் இரண்டொரு நாட்கள். பின்னர் வேண்டாமென்று தள்ளியும் வைத்துவிட்டேன்.

எழுதியவர் இளவஞ்சி. உரல்கள்.

ஓடிப்போனவளின் வீடு

ஜிம்மியும் சில நிகழ்வுகளும்…

நன்றி இளவஞ்சி.

—————————-

முன்பே தீர்மானித்திருந்தது போல், இந்த பதிவிற்கான பின்னூட்டங்களும் வெளியிடப்படாது. இதை முன்னாடியே சொல்லியிருக்கலாம் தான், மறந்திட்டேன். பின்னூட்டம் போட்டுவிட்டு காத்திருக்கும் அத்தனை மக்களுக்கும்(???) ஒரு வார்த்தை தான் மாப்பு, மாப்பு அப்புறம் இன்னுமொறு முறை மாப்பு. ஒரு வார்த்தை மெயில் தட்டிவிடுங்களேன். முடியுமானால் mohandoss.i @ gmail.com

அவன் கண்விடல்

அன்று ஒரு அதிர்ஷ்டமான நாள் என்பதற்கான அறிகுறி காலையிலேர்ந்து தெரியவில்லை, பாட்டரி தீர்ந்திருந்ததால் நின்று போன அலாரம் க்ளாக், தலைநகரின் டிசம்பர் மாதக் குளிரில் குளிக்க அயர்ன் ராட் போட்டுவிட்டு ஞாபகமறதியில் சுவிட்சை அணைக்காமல் சூடுபார்க்கிறேன் பேர்வழி என்று கையில் நறுக்கென்று வாங்கிய மின்சாரக்கடி, இனிமேல் ஆபிஸ் போனாலும் அரைநாள் விடுப்புதான் எனத் தெரிந்தாலும் பார்க்கவேண்டிய வேலை பாக்கிக்காக, அவசரஅவசரமாக எடுத்த பல்ஸர் பெட்ரோல் இல்லாமல் பங்கிற்கு 100 மீட்டர் முன்பே நின்றுவிட நான் நிச்சயமாய் நினைக்கவில்லை இன்று அதிர்ஷ்டகரமான நாளாக இருக்குமென்று. எல்லாம் மாறியது ஒரு நொடியில்.

வெள்ளை சுகிதாரில், குளிருக்கு இதமாய் கருப்புநிற ஸ்வெட்டர் அணிந்த பஞ்சாப் கோதுமை நிற பிகரொன்று ரோட்டோரத்தில் லிப்ட் கேட்க, நான் யோசித்துப் பார்த்தேன் டெல்லி டிபார்ட்மெண்ட் ஆப் ரிஸர்ச் அண்ட் டெவலப்மெண்ட்டில் வேலைக்குச் சேர்ந்த இந்த இரண்டு வருடத்தில் எத்தனை நாட்கள் கனவு கண்டிருப்பேன் இதுபோல் பிகரொன்றை பல்ஸரில் ஏற்றிக்கொண்டு வீதிஉலா வரவேண்டும் என்று, நான் விட்ட பெருமூச்சை அவள் உணர்ந்திருப்பதற்கானச் சாத்தியக்கூறுகள் குறைவுதான். அவளருகில் வண்டியை நிறுத்தினேன் அவள் எங்கே போகவேண்டும் என்கிறாளோ அங்கே போவதற்கான முடிவை எடுத்தவனாய், ஹெல்மெட்டைக் கழட்டினேன்.

“சவுத்எக்ஸ்-பே டிராப் கர்ஸக்தா க்யா? தோடாஸா அர்ஜண்ட் காம் ஹை. பஸ் நை மில்ர” அவள் கெஞ்சும் பாணியில் கேட்க, “நோ ப்ராப்ளம்” என்று சொல்லாமல் தோளைக் குலுக்கிக் காட்டியவனாய் மீண்டும் ஹெல்மட் தலைக்கு நான் மாற்றும் நேரத்தில் பட்சி வண்டியில் கெத்தாய் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்து பிடிமானத்திற்காய் தோளில் கை வைத்தாள். சாதாரணமான விஷயமாக அவள் செய்த இதை சாதாரணமா நான் எடுத்துக்கொள்ள நிறைய நேரம் பிடித்தது. நான் அணிந்திருந்த ஜெர்கின், ஆஃப் ஸ்வெட்டர், சட்டை, பனியன் இதையெல்லாம் தாண்டி அவள் உள்ளங்கையின் வெப்பம் உடலைத்தாக்குவதாய்ப் பட்டதை உள்மனம் மட்டும் மாயை என்று சொல்லியது. அதை அடக்கி இன்ஜினை விரட்டினேன்.

கிட்டத்தட்ட ஐஐடி டெல்லி, ஹவுஸ்காஸ் எல்லாம் நொடியில் தோன்றி மறைந்து அய்ம்ஸை நெருங்கும் சமயத்தில் பக்கத்தில் வந்து கொண்டிருந்த மாருதி ஜிப்ஸி ஒன்று இன்டிகேட்டர் சிக்னல் ஒன்றும் கொடுக்காமல் பட்டென்று வலதுபக்கம் திரும்ப டிஸ்க் பிரேக்கையெல்லாம் தாண்டியும் என் வண்டி குடைசாய்ந்தது.

“குத்தே கம்மினே…” நான் திட்டிக் கொண்டே முதலில் அந்த கார்க்காரனை அடிக்கக் கிளம்பினேன், பின்னர் தான் ஞாபகம் வந்தது பின்னால் உட்கார்ந்து வந்துகொண்டிருந்த தேவதையின் நினைவு. அவளும் கீழே விழுந்திருந்தாள் முழுங்கையில் நல்லஅடி நெற்றியில் லேசாய்ச் சிராய்ப்பு. அந்த நிமிடத்தை மீண்டும் நினைவில் கொண்டு வந்த எனக்கு அவள் பின்பக்கமாய் விழுந்திருக்க வேண்டுமென்பது புரிந்தது. பின்பக்கத்தில் நல்ல அடி பட்டிருக்க வாய்ப்புண்டு. சமீபத்தில் சிக்னல் இருந்ததால் கொஞ்சம் ஸ்லோவாய் வந்ததால் பெரிய காயம் ஒன்றும் இருக்க வாய்ப்பில்லைதான். ஆனாலும் பெண்ணல்லவா கையைக் கொடுத்து தூக்கிவிட்டேன்.

“ஸாரிஜி, உஸ்கா கல்தி ஹை.” மன்னிப்பு கேட்கும் மனோபாவத்தில் நான் தாமதித்த சில நிமிடங்களில் ஜிப்ஸிக்காரன் எஸ்க்கேப் ஆகியிருந்தான்.

முழங்கையில் இருந்து வழிந்த இரத்தத்தை துடைக்க ஜீன்ஸிலிருந்து கர்சீப்பை எடுத்துக்கொடுத்தேன். “தேங்க்ஸ்” சொல்லி வாங்கிக் கொண்டவளை, எதிர்பக்கம் இருந்த எய்ம்ஸிற்கு கூட்டிக்கொண்டு வந்தேன். அடுத்த அரைமணிநேரத்தில் டிரஸ்ஸிங் முடிந்து கையிலும், தலையில் கட்டுப் போட்டிருந்த வாக்கில் கேன்டீனில் உட்கார்ந்து டீ ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.

“நீங்க தமிழா?”

எனக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை, அவள் தமிழில் பேசியதைக் கேட்டதும்.

“நீங்க தமிழா? உங்களுக்கு எப்டி தெரியும் நான் தமிழ்னு?”

“நீங்க அந்த மாருதிக்காரனை திட்டினீங்க தமிழில்.”

ஆஹா திட்டினீங்களா, அவனைக் காய்ச்சி எடுத்துக் கொண்டிருந்தேன். நல்ல தமிழாவா இருக்கும் எல்லாம் மோசமானத் தமிழ் தான். ஒரு பிகரைக் கூட்டிக்கொண்டு போகும் நல்ல சந்தர்ப்பத்தில் இப்படி ஆக்ஸிடெண்ட் பண்ணி மானத்தை வாங்கிட்டானேன்னு நல்ல நல்ல கெட்ட வார்த்தைகளால் திட்டியிருந்தேன். அதுவரை கண்களை மட்டும் பார்த்து பேசிக் கொண்டிருந்தவனுக்கு அதன் பின் கண்களை பார்க்க முடியாமல் போனது. திரும்பத்திரும்ப என்ன கெட்டவார்த்தை ப்ரயோகித்தேன் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

“எங்க அப்பா ஒரு பஞ்சாபி, அம்மா தமிழ்க்காரங்க அதனால எனக்குத் தமிழ் தெரியும்.” அவள் சொல்ல,

“நீங்க பஞ்சாபியாத்தான் இருப்பீங்கன்னு நினைச்சேன்…” சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டேன். என்னவோ புரிந்தவளாய்ச் சிரித்தவள் “எப்டி அப்டி நினைச்சீங்க…” அவள் கேட்டதற்கு பதிலெதுவும் சொல்லாமல் தரையையும் கையில் இருந்த டீ கப்பையயும் பார்த்துக் கொண்டிருந்தவன், ஏதோ நினைவுக்கு வந்தவனாய்,

“முக்கியமான வேலை இருக்கிறா சொன்னீங்க. இல்லையா?”

அப்படியும் ஈர்க்கும் அந்தக் கண்களைப் பார்ப்பதை தவிர்க்கமுடியாமல் பார்த்தவனுக்கு தெரிந்தது அவளிடம் இருந்த தமிழ் அழகுகள். இதை எப்படி அப்பொழுது கவனிக்காமல் போனேன் என்று நினைத்தேன். பின்னர், பார்க்கவேண்டியதைப் பார்க்காமல் வேற எதையாவது பார்த்துக் கொண்டிருந்தது நினைவில் வந்தது, பார்த்ததை வைத்து மாநிலத்தை மட்டுமல்ல எதையுமே கணிக்க முடியாதென்று நினைத்தவனாய் மெலிதாய் சிரித்தேன்.

என் மனதில் ஓடுவதை படிப்பவளைப் போல் கண்களையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தவள்,

“என்ன சிரிக்கிறீங்க?” கேட்க,

“இல்ல அந்த மாருதிக்காரனுக்கு தேங்க்ஸ் சொல்லியிருக்கணும்னு நினைத்தேன் சிரிப்பு வந்தது.” சொல்லிவிட்டு சிரித்தேன்.

கண்களை முடிந்த அளவிற்கு விரித்து, அதன் ஓரத்தில் ஒரு கேள்விக்குறியை நிறுத்தியவளுக்கு பதிலாய்,

“இல்லாவிட்டால் இந்நேரம் உங்களை சவுத்எக்ஸில் இறக்கி விட்டுட்டு ஆபிஸ் போயிருப்பேன். உங்கக்கூட பேசிக்கிட்டிருக்கிற இந்த சந்தர்ப்பம் கிடைச்சிருக்குமா அதான்.”

தாஸ் நீ எங்கேயோ போய்ட்டடா, நீதானா நீதானா இப்படி. மனதின் உள்ளிருந்து எனக்கு மட்டும் காதுகிழியும் அளவிற்கு சப்தமாய்க் கேட்கும் சப்தத்தை உதறித்தள்ளியவனாய், அவளுடைய மறுமொழியை அறிந்து கொள்ளும் ஆவலில் அவளை நிமிர்ந்து பார்த்தேன். அழகாய் உதடு பிரிக்காமல் சிரித்தவள்.

“நல்லா பேசுறீங்க, தமிழ்ல பேசிக் கேட்டு ரொம்ப நாள் ஆகுது. அதுவும் உங்கள மாதிரி வேடிக்கையா பேசிக்கேட்டு ரொம்ப வருஷம் ஆகுது.” சிரித்தாள்.

சிறிது நேரம் இப்படி வேடிக்கையாய் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தவனுக்கு அவள் கேட்கப்போய்தான் நினைவில் வந்தது வேலைக்கு போகாமல் இங்கே உட்கார்ந்திருந்தது, என்னதான் இவ்வளவெல்லாம் பேசினாலும் மொபைல் நம்பர் கேட்க தைரியமில்லாமல் குட்பையுடன் முடிந்தது அந்தச் சந்திப்பு.

ஒட்டுமொத்த என்னுடைய ஐந்தாண்டு வெளிமாநில அனுபவத்தில் பெண்களுடன் அதிகப்படியாக பழகியது அதுதான் முதல் முறையாக இருக்கும். எப்படியிருந்தாலும் கொஞ்ச நேரத்தில் பிரியப்போகிறவள் தானே என நினைத்ததால் என்னுடைய ஈகோ கொஞ்சம் உறங்கியிருந்த சமயத்தில் நடந்த சந்திப்பில் முழுதாய் பறிகொடுத்துவிட்டதாய் உணர்ந்தேன் ஏதோ ஒன்றை.

இது நடந்த இரண்டாவது நாளில் மற்றொரு அதிர்ஷ்டமான நேரத்தில் நேரு ப்ளேஸின், இருபத்தைந்தடுக்கு பில்டிங்கின் லிப்ட் ஒன்றில் அவளைச் சந்தித்தேன், அதுவும் தனியாய் நானும் அவளும் மட்டும். ஆச்சர்யங்கள் எப்பொழுதும் நடப்பதில்லைதான் ஆனால் எனக்கு நடந்தது. நான் மனதின் ஓரத்தில் நினைத்ததை தேவர்கள் கேட்டு ‘ததாஸ்து’ சொல்லியிருக்க வேண்டும் லிப்ட் அரைகுறையாய் நின்றது நடுவில்.

என்னைப் பார்த்து அவள் அடைந்த ஆச்சர்யத்தை அவள் கண்கள் படம் போட்டுக் காட்டின.

“வாட் அ ப்ளஸண்ட் சர்ப்ரைஸ், இன்னிக்கு காலையில் தான் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். அன்னிக்கு உங்க போன் நம்பர் கூட வாங்கலைன்னு அதற்குப் பிறகு தான் ஞாபகம் வந்தது.”

அவள் சொல்லச்சொல்ல எனக்கு தேவர்கள் பூமாறி பொழிவதாகத் தோன்றியது, அதன் பிறகு நடந்ததாகத்தான் இருக்க வேண்டும் அந்த ததாஸ்து சம்பவம். நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை, அவளும் கொஞ்சம் கூட பயப்படாமல்,

“இங்க இப்படித்தான் அடிக்கடி லிப்ட் பெயிலியர் ஆயிரும். அஞ்சு பத்து நிமிஷத்தில் சரியாயிரும்.”

என்னவோ நான் அது சரியாக வேண்டும் என்று கவலைப்படுவதாய் நினைத்து. அதைப் பற்றிய ப்ரக்ஞையே இல்லாமல் நான் இரண்டு நாளாக கனவில் அவளுடன் பேசியதில் நினைவாக்க எந்த ஒன்று நன்றாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

லிப்ட் கடகடவென சப்தத்துடன், மெதுவாய் ஒருமுறை ஆட அதுவரை சாதாரணமாய் எதிரே நின்று பேசிக்கொண்டிருந்தவள் பயந்துபோய் அருகில் வந்து ஒட்டி நின்றுகொண்டாள். எனக்கும் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது இருந்தாலும் காட்டிக்கொள்ளவில்லை, ஆனால் இருவருக்குமே பேச்சு வரவில்லை, சிறிது நேரத்தில் கரெண்ட் கட்டாகிப் போய் இன்னுமொறுமுறை லிப்ட் ஆடத்தொடங்க, பக்கத்தில் நின்று கொண்டிருந்தவள் பயந்துபோய் தோளில் முகம் புதைத்துக் கொண்டாள், அந்தப் பயங்கரமான சூழ்நிலையிலும் அவள் போட்டுக்கொண்டிருந்த செண்டின் வாசம் என்னை அலேக்காகத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டது. நான் அவளுக்கு தைரியத்தை ஏற்படுத்த நினைப்பவனாக ஒரு கையை அவள் தோளைச் சுற்றிப் போட்டு இறுக்கிப் பிடித்தேன். அப்பொழுது தான் அவளுக்கும் எனக்குமான உயர வித்தியாசம் தெரியவந்தது அப்படியே எங்கள் இருவருக்குமான நிறங்களின் வித்தியாசமும். அன்று அவள் ஸ்லீங்லெஸ் ஜாக்கெட் அணிந்து புடவை கட்டியிருந்தாள்.

“ப்ரார்த்தனா பயப்படாதீங்க, இதே பில்டிங்கில் நம்ம பிரண்டொருத்தன் இருக்கான் அவனைப் பார்க்கிறதுக்காகத்தான் வந்தேன். ஒரு நிமிஷம் போன் செய்து அவனைப் பிடிக்கிறேன்.”

தோள்களில் இருந்து கைகளை எடுக்காமல் இடது கையாலேயே மொபைலை எடுக்க துரதிஷ்டிர வசமாக சிக்னல் கிடைக்கப்போய், அவனிடம் நாங்கள் இருக்கும் நிலையை விவரித்து, அவன் வருகைக்காகவும் உதவிக்காகவும் காத்திருந்த சமயங்கள் மிகவும் அழகானவை சொல்லப்போனால் போதையானவை. அவளுடைய அருகாமை என்னுள் பெரும் மாற்றத்தை உருவாக்கியிருந்தது. அருகாமையென்றால் ஒருவருடன் ஒருவர் உரசிக்கொண்டு இருந்ததில் எதையோ ஒன்றை இழந்து கொண்டிருந்தேன் என்பது தெளிவாக விளங்கியது.

ஒருவழியாய் லிப்டை மேலே தூக்கி நாங்கள் வெளியில் வந்ததும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக்கூட வெட்கப்பட்ட நாங்கள் ஒரு மணிநேரத்தில் டெல்லியின் பிரபலமான ஒரு ஹோட்டலில் அருகருகே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.

“அட நீங்க ஒன்னுங்க லேப்டாப் ரொம்ப செக்யூர்டா இருக்கணும்னு கவர்மெண்ட் செக்யூர்ட் கீ கான்பிகர் பண்ணிக்கச் சொல்லி இங்க அனுப்பினாங்க. அந்த செட்டப் எல்லாம் முடிச்சி இரண்டு மூணு தடவை யூஸ் பண்ணிப் பார்த்துட்டு வர்றதுக்கு ஒரு மணிநேரம் ஆய்டுச்சு. ரொம்ப லேட் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்.”

நான் முதல்முறை அவளைச் சந்தித்த பின் தான் நினைவில் வந்தது அன்று லாப்டாப் என்னிடம் இல்லாதது, டிஆர்டிவோவில் லேப்டாப் கொடுத்ததும் சந்தோஷமாய் வாங்கியதற்கு ஒரே காரணம். இனிமேல் ரோட்டில் சீன் போடலாம் என்றுதான். அன்றைக்கென்று பார்த்து லேப்டாப் கையில் இல்லாததை ஒரு பெரிய குறையாக நினைத்தேன். என்னை அவளிடம் சரியாய் லேப்டாப் அறிமுகம் செய்து வைக்கும் என்று நினைத்தே அந்தப் பேச்சை இழுத்தேன். அப்படியே வேலை செய்தது.

செக்யூர்டு கீயை இன்னொரு முறை சோதனை செய்து பார்ப்பவனைப் போல் ஹோட்டலிலேயே அவளுக்கு செய்முறை விளக்கம் செய்து காட்ட அவள் முகம் பிரகாசமடைவதை உணரமுடிந்தது. அவளும் ஆர்வமாய் சில கேள்விகள் கேட்க, அவளுடைய கம்ப்யூட்டர் திறமையை ஆச்சர்யத்துடன் கவனித்தேன். முதல் முறையைப் போலில்லாமல் அவளுடைய பர்ஸனல் விவரங்களை அடுக்கியவள் மறக்காமல் மொபைல் நம்பரை கொடுத்து என்னுடையதை பெற்றுக்கொண்டு சென்ற ஒரு வாரத்தில் எல்லாம் எங்களுக்கிடையேயான இடைவெளி குறைந்திருந்தது, எவ்வளவென்றால் ஆடையின் அவசியம் எங்களுக்கிடையில் இல்லாமல் போகுமளவிற்கு.

இது எனக்கும் ஆச்சர்யமான விஷயம் தான். டெல்லி போன்ற ஒரு சிட்டிக்கு வேலைக்கு வந்து இரண்டு வருடங்களாக பிரம்மச்சரியத்தையும் ஆஞ்சநேயரையும் சைட் அடிப்பது என்ற ஒரே ஒரு எக்ஸம்ஷனுடன் காப்பாற்றி வரும் நான் இப்படி ஆனது வேதனையுடன் சேர்த்து சந்தோஷத்தையும் அளித்தது. யாரிடமோ எதையோ ப்ரூவ் பண்ண நினைத்தவன் வெற்றுடம்புகளின் வெம்மைப் பரிமாற்றத்தில் அதை சாதித்ததாய் உணர்ந்தேன். ஆனால் உள்மனம் யாரோ ஒரு பெண்ணை அவளுடைய பெற்றோரை ஏமாற்றுவதாய் உளறிக்கொட்ட, ப்ரார்த்தனா ஒன்றும் சின்னப் பெண் கிடையாது அவள் செய்வது எத்தகையது என்பதைப் பற்றி அவளுக்குத் தெரியும் என்று சமாதானம் செய்து கொண்டிருந்தேன்.

அத்தனை நாள் பிரம்மாண்டமாய் தோற்றமளித்த அவள் குறிப்பாய் அவள் உடல் பற்றிய எண்ணங்கள் நிர்வாணத்தில் கரைந்து கொண்டிருந்தன. அத்தனை நெறுக்கும் பயத்தையும் அவளின் மீது பச்சோதாபத்தையும் ஏற்படுத்தியது. அசந்து தூங்கிக் கொண்டிருந்தவளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவன் எப்பொழுது தூங்கினேன் என்றே தெரியாமல் தூங்கிக்கொண்டிருக்க இன்டலிஜென்ஸ் பீரோ ஏஜன்டுகள் வந்து எழுப்பி “இராணுவ சம்மந்தமான தகவல்களை வெளியானதற்காக” கைது செய்வதாய் சொன்னதும் தான் ஒரு வாரம் நடந்தவைகளை திருப்பிப் பார்த்தேன் ஒரு திருத்தப்பட்ட குறளுடன்.

இதனை இதனால் இவன்செய்வன் என்றாய்ந்து
“அவளை” அவன் கண்விடல்.

கல்லூரி உறவுகளைப் பற்றிய சிறுகுறிப்புகள்

வாழ்க்கையில் ஆட்டோபயோகிராபி எழுதும் ஐடியா சின்னவயதிலிருந்தே உண்டு, யாராவது வாங்கி படிப்பார்களா என்றால், அதற்காகயெல்லாம் வருத்தப்படுவதென்றால் நான் பதிவுகள் கூடத்தான் எழுதமுடியாது. சரி விஷயத்திற்கு வருகிறேன், அப்படி எழுதும் பொழுது உபயோகப்படுத்திக் கொள்வதற்காக குறிப்புக்களை இப்பொழுதே எழுதி வைத்துக் கொள்கிறேன். அப்படி எழுதத்தொடங்கிய ஒரு சிறுகுறிப்பு போட்டிக்காக…,

——————————————————————

அலுவலகத்தில் என்னுடன் வேலை செய்யும் பெண் ஒருத்தி சொல்லப்போகத்தான் எவ்வளவு தவறான அனுமானத்துடன் என்னை மற்றவர்கள் அணுகுகிறார்கள் எனத்தெரிந்தது, அதில் என் பங்கு பெருமளவில் உண்டு. இங்கே ஒரு கம்பெனியில் பல ப்ரொஜக்ட்கள் இருக்கும், பெரும்பாலும் தற்சமயம் கணிணித்துறையில் வேலைவாய்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில் ஒரு நபர் ஒரே அலுவலகத்தில் ஒராண்டிற்கு மேல் வேலை செய்வதென்பதே நடக்கிறக் கதை கிடையாது. அதிலும் குறிப்பாக எங்கள் கம்பெனியில் இரண்டாண்டிற்கு ஒருமுறை தான் ஒரு ப்ரொஜக்ட்டிலிருந்து வேறொரு ப்ரொஜட்டிற்கு மாற்றுவார்கள். நான் இங்கே குறிப்பிடுவது சாதாரண ப்ரொஜக்டை அல்ல ஒரு அக்கவுண்டை என்று வைத்துக் கொள்ளலாம்.

அதாவது இப்பொழுது நான் எச்எஸ்பிசி(HSBC) அக்கவுண்டில் இருக்கிறேன் என்றால் நான் இரண்டாண்டிற்கு மேல் இதே அலுவலகத்தில் வேலை செய்தால் மட்டுமே இன்னொரு அக்கவுண்டிற்கு மாற்றுவார்கள். அதாவது மார்கன் ஸ்டான்லிக்கோ(Morgan Stanley), இல்லை சிட்டி பேங்கிற்கோ(City Bank). எதற்காக இதைச் சொல்ல வருகிறேன் என்றால் அந்த இரண்டு வருடங்களில் நீங்கள் செய்த உழைப்பென்பது உங்கள் பழைய அக்கவுண்ட் சார்ந்தவர்களுக்குத்தான் தெரியும் பெரும்பாலும். இப்படி அக்கவுண்ட் விட்டு அக்கவுண்ட் மாறும் பொழுது நீங்கள் புதிதாய் வேலை செய்யத் தொடங்குவதைப் போன்ற உணர்வும் ஏற்படும், புதிய பங்காளிகள் புதிய இடம் புதிய மேலாளர்கள் என மொத்தமாய்ப் புதிதாய் இருக்கும்.

அப்படி நான் ஒரு அக்கவுண்டிலிருந்து மற்றொரு அக்கவுண்டிற்கு வந்த பொழுதுதான் அந்தப் பெண்ணைச் சந்தித்தேன், இதற்கு முன்னர் இரண்டு மூன்று சமயங்களில் சந்தித்திருக்கிறேன், தென்னிந்தியா என்று தெரியும் ஆனால் தமிழ்நாடென்று தெரியாது. எங்கள் அலுவலகத்தில் ஒரு பழக்கம் உண்டு, வாலிபால் போட்டி நடக்கும் பொழுது பெண்களுக்கும் இடமளிக்கும் வகையில், ஆறுபேரில் ஒரு நபர் பெண்ணாக இருக்கும் படியாக எங்கள் அலுவலகம் ஒரு சட்டத்தை வைத்திருந்தது. அப்படி நான் வேறொரு அக்கவுண்டிற்காக விளையாடிய காலத்தில் இந்தப் பெண்ணை எச்எஸ்பிசி அக்கவுண்டிற்காக விளையாடும் சமயத்தில் பார்த்திருக்கிறேன். ஆனால் பேசியதில்லை.

சாதாரணமாக என்னைப் பார்க்க கரடுமுரடானவனாகத் தெரியும் அதற்கு நான் எதுவும் செய்ய முடியாது, அந்த மனநிலையை நானும் இன்னும் அதிகம் தான் படுத்துவேன். இப்படித்தான் அந்தப் பெண் நான் சேர்ந்திருந்த புது அக்கவுண்ட் உபயோகப்படுத்தும் விஷயம் சம்மந்தமாக ஒரு செஷன் எடுத்துக்கொண்டிருந்தாள். பெரும்பாலும் நான் சொந்தமாகப் படித்துதான் தெரிந்து கொள்வேன் என்பதாலும், செஷனில் சொக்கிச் சொக்கி விழும் என் தூக்கத்தைப் போக்க எடக்கு மடக்கானக் கேள்விகளை அடுக்கிக் கொண்டேயிருப்பேன். அப்படி நான் தூங்கிவிழுவதையும், கேள்வி கேட்பதையும் வைத்துக்கூட அந்தப் பெண் என்னைப் பற்றிய தவறான எண்ணத்திற்கு வந்திருக்க வாய்ப்புண்டுதான். ஆனால் அது அப்படியில்லை என்று இன்றுவரை நம்புகிறேன் அதற்கு முழுப்பொறுப்பு என் உருவத்தோற்றமாகக்கூட இருக்கலாம்.

பெரும்பாலும் முசுடாக யாரிடமும் பேச்சுக் கொடுக்காமல் நான் என் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு நாள் அவள் பின்னாலிருந்து நான் தமிழில் டைப்புவதைப் பார்த்து நீங்க ப்ளாக் எல்லாம் எழுதுவீர்களா என்று கேட்டது நினைவில் உள்ளது, நான் பெரும்பாலும் விளம்பரம் செய்வதில்லை ப்ளாக் எழுதுவதாக அவள் கேட்டுக்கொண்டதற்காக லிங்க் கொடுக்க பார்த்தவள் கூகுள் ‘ஆட்’கள் என் பக்கத்தில் இருப்பததைப் பார்த்தே தெரிந்து கொண்டவளாய், ரொம்ப நாளாய் எழுதுவீங்களோ என்று கேட்டாள் என்றாள் பார்த்துக் கொள்ளுங்களேன்.

அன்றைக்கு இரண்டு நல்ல நகைச்சுவை சம்பவம் நடந்தது, அதன்பிறகு என்னைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தவள், சாதாரணமாக இந்த கல்கியின் கடல்புறா புத்தகம் உங்களிடம் இருக்கிறதா என்று கேட்க, நான் அவளுடைய தமிழறிவை மொத்தமாகப் புரிந்து கொண்டேன் கொஞ்சம் தவறாக என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். இப்படியாக நாங்கள் பேசத் தொடங்கிய ஒரு நாளில் தான் அவள் சொன்னாள், உங்களைப் பார்த்தால் இவ்வளவு நல்லபடியாக பேசுபவராகத் தெரியவில்லையென்று. உருவத்தைப் பார்த்து எடைபோடுவதில் உள்ள தவறு பெரும்பாலும் பலருக்குத் தெரியவில்லை.

அதே நாளில் என் ப்ளாக்கில் இருந்து ஒரு கதையை பிரிண்ட் அவுட் எடுத்துப் படிக்கப்போவதாகவும் ஒரு நல்ல கதை சொல்லுங்களேன் என்று கேட்டதற்கு கூச்ச சுபாவத்தில் நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டேன், அதன் பயனை பிற்பாடு அனுபவித்தேன். நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், அன்றுதான் முதன் முறையாக தமிழில் பேச ஆரம்பித்திருந்தோம். அந்தப் பெண் தேர்ந்தெடுத்த கதை ‘மக்குக் குடும்பம்’, குளிர்கால டிசம்பர் மாதத்தின் தாக்கத்தில் எழுதப்பட்ட ஒரு ‘ஏ’த்தனமான கதையது. அன்றிரவு போகிற போக்கில் விண்டோ மெஸஞ்சரில் அவள் இந்த விஷயத்தை தட்டிவிட்டுச் சென்றாள்.

அதற்கு முன் அந்த மாதிரி கதை எழுதுவதைப் பற்றி எந்த முன்முடிவும் இருந்ததில்லை, சாண்டில்யன், பாலகுமாரன், சுஜாதா படித்து கொஞ்சம் செக்ஸியாக எழுத வேண்டுமென்று பெரும்பான்மையான என்னுடைய எல்லாக் கதையிலுமே பார்க்கக்கூடிய ஒரு விஷயமாக இருக்கும் ‘அது’. அன்று இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை, அந்தப் பெண் கதையைப் படித்து என்ன நிலையில் நாளை வருவாள் என்று. ஆனால் பெரிய வித்தியாசம் அடுத்த நாள் எனக்காக காத்திருக்கவில்லை, மிகவும் சாதாரணமாக அந்தக் கதை அப்படிப்பட்டதென்று சொல்லியிருக்கலாமே என்று சொன்னாள் என்று நினைக்கிறேன். ஆனால் அவள் மனதில் அந்தக் கதை படிந்திருந்ததை நான் இன்னொரு சமயத்தில் பார்த்திருக்கிறேன், நாங்கள் நல்ல நண்பர்களாக ஆன ஒருநாள் விளையாட்டிற்காக கப்டேரியாவில் சென்று கொண்டிருந்த பெண்ணை சைட் அடிப்பதாகச் சொல்லப்போக அந்தப் பெண் அவகிட்ட என்ன இருக்கு அயர்ன் பாக்ஸ் என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்தாள் நான் பதிலெதுவும் சொல்லவில்லை.

சொல்லப்போனால் எங்களிருவரிடமும் ஈகோ உண்டு, அதிலும் நான் எப்பொழுதுமே உள்ளர்த்தம் வைத்து மட்டுமே பேசுவதை வாடிக்கையாக வைத்திருந்தேன். இப்படி இருவருமே உள்ளர்த்தம் வைத்தும் ‘ஈயம்’ ‘ஈயம்'(பெண்ணீயம், ஆணீயம்) என்றும் பேசிவந்ததால் உள்ளர்த்தத்தை உணர்ந்து கொண்டாமோ என்று இருவருமே மற்றவரைப் பற்றி ஆராய்வதுண்டு அப்படிப்பட்ட ஒரு ஆராய்தல் தான் அன்று நடந்தது.

இப்படியாக அவள் என் கதைகளைப் படித்து ஒரு முன்முடிவிற்கு வந்திருக்க வேண்டும் என்னைய்ப்பற்றி, நாங்கள் நல்ல நண்பர்களாக ஆகிவிட்டிருந்த இன்னொரு நாளில் நீங்க காதலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற எடக்குமடக்கான கேள்வியைக் கேட்டாள், நான் ஒரே வார்த்தையாக முட்டாள்தனம் என்று பதிலளித்தேன். அவளுக்கு அது ஆச்சர்யமாகக் கூட இருந்திருக்கும், அவள் ஈகோவை விடுத்து, என்னால் இதை நம்பவேமுடியவில்லை, நீங்கள் இப்படி சொல்வீர்கள் என்று காதல் பற்றி கதைகதையாய் எழுதிக்கொண்டு காதலை முட்டாள்தனம் என்று சொல்வீர்கள் என்று. நான் காதலைப்பற்றிய என்னுடைய எண்ணங்களைத் தெளிவாக மிகத்தெளிவாகச் சொன்னேன், இன்னும் சொல்லப்போனால் அவளை நன்றாகக் குழப்பினேன்.

அன்று அவளிடம் நான் கல்லூரிக் காலங்களில் நம்மிடம் ஏற்படுவது காதலே கிடையாதென்றும் அது வெறும் இனக்கவர்ச்சி மட்டும் தான் என்றும் வாதாடினேன், இரண்டு மணிநேரம். என் பட்டிமன்ற நடுவர்களை பத்து நிமிடப்பேச்சால் என்னால் மாற்ற முடிந்திருக்கிறது. ஆனால் இது ரியல் டைம் கேள்விகள் நேருக்கு நேராய் கேட்கப்படும், கான்சப்டில் குழப்பமிருந்தால் பிரச்சனையாகிவிடும். அவள் யாரோ ஒரு பையன் யாரோ ஒரு பெண்ணை கல்லூரி இறுதி ஆண்டிலிருந்து காதலிப்பதாகவும் முதலில் அந்தப் பெண் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், கல்லூரி முடிந்த இரண்டாண்டுகளில் அதற்குப் பிறகு ஒருமுறை கூட நேரில் பார்த்திராத சமயத்திலும் அவன் அந்தப் பெண்ணையே நினைத்து கொண்டிருந்ததால் அதன் பின்னர் ஒப்புக்கொண்டதாயுமான அவளின் கல்லூரி நண்பர்கள் பற்றீய கதையைச் சொன்னாள். நான் அதைப்பற்றிய என் புரிதல்களையும் விளக்கத்தையும் அளித்தேன். அது இங்கே தேவையில்லாதது, அந்தக் காதலைப் பற்றியும் அந்தப் பெண்ணைப் பற்றியும் நான் முற்றிலுமாக மறந்து போய்விட்டேன் அந்தப் பொழுதில், முற்றிலுமாக. என் மனம் முழுவதும் இப்பொழுது சார்லஸூம் கனிமொழியும் தான் இருந்தார்கள்.

நான் படித்தது ஒரு அறிவியல் மற்றும் கலைக்கல்லூரி அதாவது பன்னிரெண்டாவது படித்து முடித்தவர்களுக்கு இரண்டவாது ஆப்ஷனாக வைத்திருப்பார்களே அது, அதுதான் எனக்கு முதல் ஆப்ஷனாகக் கிடைத்தது அதைப்பற்றி முன்பே எழுதிவிட்டதால் இப்பொழுது மற்றது. ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு டிரீம் கப்புள் இருப்பாங்க என்பது என் விஷயத்தில் உண்மை. அந்த டிரீம் கப்புள் தான் சார்லஸூம் கனிமொழியும், சொல்லப்போனால் கொஞ்சம் கூட ஒத்துவராக ஒரு ஜோடி, கனிமொழி ஆயிரத்திற்கு மேல் மதிப்பெண் எடுத்து குடுப்பப் பிரச்சனைகள் காரணமாக எங்கள் காலேஜில் படித்துவந்தால், சார்லஸிற்கோ அந்தக் கல்லூரியை விட்டால் வேறு காலேஜ் இல்லையென்ற நிலை. பேரிலேயே தெரிந்திருக்கும் முக்கியமான வித்தியாசம்.

முதல் வருடம் நான் ஹாஸ்டலில் தங்கியிருந்தேன், சார்லஸ் தான் ஏழு பேர் கொண்ட எங்கள் ரௌடி குரூபின் தலைவன் போன்றவன். அதற்கு முக்கியக் காரணம் கனிமொழியை அவன் காதலித்தது கிடையாது. அவன் உண்மையிலேயே ரௌடி, சிகரெட் பிடிப்பது, தண்ணி அடிப்பது பெண்களுடன் பயமில்லாமல் பேசுவது இதுதான் அந்தக் காலத்தில் தலைவனுக்கு உண்டான அடையாளம், இதில் எதிலும் சார்லஸ் குறைவைக்கவில்லை. இதற்கெல்லாம் மகுடமாக தன்னிடம் சண்டித்தனம் செய்த ஒரு சீனியரை பாத்ரூமில் வைத்து கன்னம் கன்னமாக இழுக்க ஹீரோ ஆனான். மொத்தம் எட்டு பேர், சார்லஸ், பெஞ்சமின், விமல்ராஜ், சரவணலால் ஜெயன், கலைராஜா, இளையராஜா, மோகன்தாஸ் அப்புறம் கடேசியாய் அன்சர்.

ஒவ்வொருவரைப் பற்றியும் சொல்வதற்கு நிச்சயமாய் ஒரு கதை உண்டு, இதில் விமல் கொஞ்சம் தலைமைப் பண்புகள் உள்ளவன் நான் சொல்ல வந்தது மேலே உள்ள தலைமைப் பண்புகளை முன்வைத்து. இந்த குரூப்பில் நானும் அன்சரும் இருந்தது தான் ஆச்சர்யமே பலருக்கும். ஏனென்றால் எங்களிருவருக்கு மட்டும் தான் அரியர் கிடையாது. அதுமட்டுமில்லாமல் நானும் அவனும் கொஞ்சம் நன்றாய்ப் படிக்கக்கூடியவர்கள், இந்தக் கொஞ்சமும் மற்ற அறுவர்களுடனான ஒப்பீட்டு மதிப்புதான். ஏன் விமலைப் பற்றி மட்டும் இழுக்கிறேனென்றால் அவனுக்கு இந்த மாதிரியான தலைமைப் பண்புகள் இருந்ததென்றாலும் கொஞ்சம் ப்ராக்டிகலானவன், சொல்லப்போனால்.

இதற்கு ஒரே காரணம் சார்லஸ் கனிமொழியைக் காதலிப்பதாகவும் அந்தப் பெண்ணும் அவனைக் காதலிப்பதாகவும் ஒரு கீழ்த்தர பாரில் பார்ட்டி கொடுத்தபடி சொல்ல முதலில் கண்டித்தவன் அவன்தான். சார்லஸின் முகத்திற்கு எதிராக ‘வேண்டாண்டா பங்காளி அவளை விட்டுடு’ என்றான். சார்லஸிற்கு கொஞ்சம் கோபமுண்டு இதனால். நானெல்லாம் முதலில் இந்த விஷயத்தை நம்பவேயில்லை, முதலில் ஒரு விஷயத்தை உறுதிசெய்துவிடுகிறேன். என் வயதின் படி, நான் ஒரு வருடம் முன்பே பள்ளியில் சேர்க்கப்பட்டவன், ஆசிரியரான அப்பாவின் கைங்கர்யம். அதனால் பெரும்பாலும் கல்லூரியில் என்னுடன் படித்தவர்கள் என்னை விட குறைந்த பட்சம் ஒருவயது அதிகமானவர்கள். கனிமொழியும் சரி கூடப்படித்த மற்ற ஆறு பெண்களும் சரி என்னைவிட வயதில் மூத்தவர்கள் தான் பெரும்பாலும் அக்கா என்றுதான் எல்லோரையும் அழைப்பேன். சரி விஷயத்திற்கு,

இந்தக் காதல் பெரும் படமெடுக்கும் அளவிற்கு கல்லூரியில் நடந்தது, காதலென்றால் ஒன்றிரண்டு உதாரணங்களைச் சொல்லி அவர்களை அமரக் காதலர்களாக்க வேண்டுமென்ற அவசியம் எனக்குக் கிடையாது. அவர்கள் மற்ற எல்லா கல்லூரிக் காதலர்களைப் போலவும் காதலித்தார்கள். என்ன கொஞ்சம் தீவிரமாய், இடையிடைய எங்கள் ஜிங்கிச்சாவையும் மீறி விமல் மட்டும் இதை எதிர்த்துக்கொண்டேயிருந்தான், மூன்றாவதாண்டில் அவனும் ஒரு முதலாமாண்டு பெண்ணைக் காதலிக்க எதிர்ப்பேயில்லாமல் கனிமொழி எங்கள் எல்லோருக்கும் அண்ணியானாள். நான் நிகழ்வுகளை வர்ணிக்க இங்கே எத்தனிக்கவில்லை. இப்படியாக அவர்கள் காதல் எங்கள் கல்லூரியின், வரலாற்றுப் புகழ்பெற்ற காதலானது, கடைசியாக கல்லூரிக்கும், தமிழ்நாட்டிற்கும் டாட்டா காண்பித்து நான் டெல்லி புறப்படும் வரை. எனக்கு சந்தேகமேக்கிடையாது, சார்லஸ் தண்ணியடித்துவிட்டு உளறிய உளறலிலிருந்தும் கனிமொழியுடனான அவனுடைய நேருக்கத்திலிருந்தும், எதிர்ப்புக்கள் அனைத்தையும் பொய்யாக்கிவிட்டு அவர்கள் காதல் சக்ஸஸ் ஆகிவிடுமென்பதில்.

பின்னர் கல்லூரியைப்பற்றியோ, சார்லஸ் கனிமொழியைப் பற்றியோ நினைக்க மட்டுமல்ல என்னைப் பற்றியேக் கூட நினைக்க முடியாத நாட்கள் அவை, டெல்லி, பேங்களூர், புனே என மூன்றாண்டுகள் அப்படியென்பதற்குள் ஓடிவிட்டன. கடைசியாண்டு ப்ரொஜக்ட் செய்வதற்காக என் நண்பர்கள், இவற்கள் வேறு படிக்கிற செட், வந்து புனேவில் தங்கி ப்ரொஜக்ட் செய்துவிட்டு போன பொழுது கூட நான் கேட்கவில்லை சார்லஸ் கனிமொழியைப் பற்றி. ஆனால் என் அலுவலகத் தோழி கேட்ட அன்று எங்கிருந்தோ நினைவில் வந்ததைப் போல சார்லஸ் கனிமொழியைப் பற்றிய விஷயத்தை நினைத்தவனாய். என் அத்துனை தொடர்புகளையும் பயன்படுத்தி அன்றிரவே என்னானார்கள் அவர்கள் என்று கேட்கும் ஆவல் முற்றியது.

முயன்றேன், சார்லஸின் எண் கிடைத்தும் பேச முடியாத சிக்கல், இந்தச் சமயத்திலேயே ஒருவாறாக நண்பர்களின் மூலம் அவர்களைப் பற்றிய செய்தி கிடைத்திருந்தது, ஏனென்றால் முன்பே சொன்னேனே காவியக் காதலர்கள் என்று அவர்கள் தொலைபேசி எண்ணைக் கேட்டால், முழு வரலாற்றையே சொல்லிப் புலம்பாத நண்பர்களே இல்லை, அப்படியிப்படி என்று ராத்திரி பதினொன்று மணிக்கு கனிமொழியின் செல் நம்பர் கிடைத்தது, சாப்ட்வேர் உலகத்தின் மகிமையால் அந்த நேரத்திலும் கால் செய்ய நான் தயங்கவில்லை.

“ஹலோ கனிமொழிங்களா, நான் மோகன் பேசுறேன்.

“ஹலோ எந்த மோகன் தெரியலையே,”

“… காலேஜ், கம்ப்யூட்டர் சைன்ஸ், முத பெஞ்சில் உட்கார்ந்திருப்பேனே மோகன்.”

“இல்லங்க தெரியலை.”

“கனிமொழி, என் நம்பர் கூட 018, கனிமொழி, லிஜோ பாபு, மலர்விழி, நரேந்திரன் அப்புறம் நான் மோகன் தெரியலையா.”

“ம்ஹும் தெரியலை.”

“என்னங்க வேறென்னத்தை சொல்ல, சரி நீங்க நல்லாயிருக்கீங்களான்னு கேட்கத்தான் போன் செய்தேன், நல்லாயிருக்கீங்கல்ல சரி வைக்கிறேன்.”

“சரி சொல்லுங்க.”

“யாருன்னு தெரிஞ்சுதா?”

“இல்லங்க தெரியலை, பரவாயில்லை சொல்லுங்க.” என்றவள் ஏதோ ஞாபகம் வந்தவளாக, “ம்ம்ம் நீங்களா சொல்லுங்க, ராத்திரி இல்லையா தூங்கிக்கிட்டிருந்தேன் ஞாபகத்தில் வரலை.”

“சரிங்க கனிமொழி நீங்க தூங்குங்க நான் காலையில் போன் பண்றேன்.”

வைத்துவிட்டேன், உண்மையில் அதை நான் எதிர்பார்க்கவில்லைதான், ஏனென்றால் நான் படித்த ஒரே ஒரு கல்லூரி அதுதான், அதனால் அந்த நினைவுகள் என்னிடம் எப்பொழுதும் உண்டு, சொல்லப்போனால் என் கதைகளில் கூட அவர்களை வேறு கதாப்பாத்திரப் பெயர்களால் குறித்திருப்பேன். நம்பர், உட்கார்ந்திருந்த இடம் எல்லாமே இன்னும் நன்றாய் ஞாபகத்திலிருக்கிறது. ம்ஹும் கதையெழுதுகிறேன் இல்லையா நினைவில் கொண்டு வந்திருப்பேனாயிருக்கும்.

அடுத்த நாள் காலையில் மீண்டும் போன் செய்தேன், போனை எடுத்தவள் கண்டுபிடித்துவிட்டாள், சொல்லப்போனால் என்னை அவளுக்கு நன்றாய்த் தெரியும் சில நாட்கள் சார்லஸ் சொல்லப்போய் லெட்டர் எல்லாம் கொடுத்திருக்கிறேன் மிகவும் பர்ஸனலான விஷயங்களாகக் கூட இருக்கும் அந்தக் காகிதங்கள். சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தவள் என்னைப் என் பெயரால் அவள் அறிந்திராததையும் கல்லூரி நினைவுகள் அவ்வளவாக இல்லாததையும் சொன்னாள், என்னைப் பற்றிக் கேட்ட அவளுக்கு விவரங்களைச் சொன்னேன், மறுபக்கத்தில் வரப்போகும் ஆச்சர்யத்தையும் கணக்கிட்டுத்தான்,

‘அப்ப செட்டிலாயிட்டேன்னு சொல்லுங்க, சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கங்க’, நான் வாங்கும் சம்பளத்தில் ஒரு சைபர் இல்லாத சம்பளம் கூட தங்களுக்கு கிடைப்பது அரிதாக இருப்பதான புலம்பல்கள் ஆரம்பித்ததும் நான் ஆரம்பித்தேன் சார்லஸ் பற்றி, அவள் ஒரேயொரு வார்த்தை தான் சொன்னாள்.

“உங்கக்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்…”

“கேளுங்க…”

“இல்லை நீங்கதான் எங்க காலேஜோட டிரீம் கப்புள்…”

“புரியலை என்ன சொல்றீங்க…”

“இல்லை நீங்களும் சார்லஸூம் தான் அந்தக் காலேஜின் டிரீம் கப்புள்ஸ், என்னாச்சுன்னு கேட்கிறேன்.”

“இந்த ஆம்பளைங்க எல்லாமே ஏமாத்துறவங்க தானே, அதை விடுங்க. எல்லாம் அத்துப்போச்சு.”

இப்படி நான் கனிமொழி, சார்லஸ் நம்பர்களைத் தேடிய பொழுது கிடைத்த விமல் நம்பருக்கும் போன் செய்தேன்,

“மாப்ள, இது உனக்குத் தெரியாதா இல்லை எனக்கு தெரியாதா, ஆனாலும் நான் அப்பவே சொன்னேன் அந்தப் பொண்ணு பாவம் விட்டுறுன்னு. உனக்குத் தெரியாது ரொம்பக் கஷ்டமாயிருச்சு…”

அதற்கு மேற்பட்ட விஷயங்கள் பர்ஸனலானவை உண்மை பெயர்களை உபயோகிப்பதால் வேண்டாம், என் அலுவலகத் தோழியின் கல்லூரியில் நடந்த காதல் என்ன முடிவிற்கு வந்திருக்கும் என்று கேட்கும் ஆசை சுத்தமாக இல்லை. நான் அவளிடம் பிரயோகித்த என் தர்க்கங்ளை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்தி அது எத்தனை தூரம் உண்மையென யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

வளர்சிதைமாற்றம்

வளர்சிதைமாற்றம் – முற்றுப்புள்ளியில் இருந்து தொடங்கும் கதைகள்.

“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ?”

அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவருக்குமான தொடர்பும் அவள் திருமணத்திற்குப் பிறகு சில வருடங்களாக குறைந்திருந்தது. அவளுடைய கணவன் மற்றும் குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பும் நான் வெளிநாட்டில் வேலை செய்துவந்ததும் அதற்கு முக்கியமான காரணங்கள். நானும் அக்காவும் சத்தமாய் பேசிக்கொண்டிருந்த நாட்களில் பக்கத்து வீட்டினர் கண் போடுவார்கள் என்று அதட்டிய அப்பா கூட இப்பொழுது வரும் சப்தத்தைப் பார்த்து ஒன்றும் சொல்லவில்லை. அக்கா கல்யாணமாகிப் போய்விட நான் வேலைக்காக வெளிநாடு போய்விட வீடே வெறிச்சோடிப்போய்விட்டதாக புலம்பிய அம்மாவின் கண்களில் சந்தோஷம் தெரிந்தது.

என் கல்யாணம் மீண்டும் எங்கள் வீட்டில் மூன்று நான்காண்டுகளுக்கு முன்பிருந்த ஒரு நிலையைக் கொண்டுவந்திருந்தது. அக்கா பையனை அவளுடைய நாத்தனாரிடம் விட்டுவிட்டு என் கல்யாண வேலைகளைப் பார்ப்பதற்காக வந்திருந்தாள். வந்ததில் இருந்தே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள்.

“அம்மா என்னமோ உன் பையன் கலரையெல்லாம் பாத்து கல்யாணம் பண்ணிக்க மாட்டான்னு சொன்னே, இப்பப்பாரு பொண்ணோட கலரில் கவுந்து விழுந்துட்டு அந்தப் பொண்ணுக்கிட்ட ஒரு கேள்விக் கூட கேக்கலை?”

ஆரம்பக்காலத்தில் இருந்ததற்கு கொஞ்சம் மாறியிருந்தேன் தான், ஆனால் நான் அந்தப் பெண்ணை பிடித்திருக்கிறது என்று சொன்னதற்கு அந்தப் பெண்ணின் கலர் மட்டும் காரணம் கிடையாது. என்னவோ பெண் பார்க்கப் போயிருந்த சமயத்தில் காபி கொண்டு வந்து கொடுத்த அந்தப் பெண்ணைப் பிடித்திருந்தது, அமேரிக்காவில் கல்யாணம் செய்து கொள் என்று சொல்லி பின்னால் துரத்திக் கொண்டிருந்த ஒரு என்ஆர்ஐ பெண்ணும் அவள் குடும்பமும் அன்று நினைவில் வந்துபோக, கல்லூரிக்காலத்தில் மனதில் வைத்திருந்த ஒரு பெண்ணிற்கு மேல் பார்க்கக்கூடாது என்று கொள்கையும் வந்துபோக சரியென்று சொல்லியிருந்தேன்.

“ஆமாம் அவன் கேக்கலைன்னா என்ன நீதான் கேட்டுக்கிட்டேயிருந்தியே ஒரு மணிநேரத்துக்கு, எங்கடா தம்பி சரின்னு சொல்லி நீ வேண்டாம்னு சொல்லிடுவியோன்னு பயந்துக்கிட்டே உக்காந்திருந்தேன் தெரியுமா?”

அம்மா, நான் லேப்டாப்பில் என் அமேரிக்க வீடு நண்பர்களை அக்காவிற்கு காட்டிக்கொண்டிருக்க இருவருக்கும் காபி கலக்கிக்கொண்டு வந்து கொடுத்தவராய், அக்காவிற்கும் பதிலளித்தார்.

“பின்ன, சும்மா கட்டி வைச்சிட முடியுமா? உன் பையனோ அரைக்கிறுக்கு வர்றவ கொஞ்சமாவது இவனை அனுசரிச்சு போறவளா இல்லாம வேற மாதிரியா இருந்திட்டா, கஷ்டமாயிடாது, அதுக்கா இவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது.”

“என்னடா ஹனிமூனுக்கெல்லாம் ஏற்பாடு பண்ணிட்டியா? ஒன்னுமே சொல்ல மாட்டேங்குற, நாங்கெல்லாம் நீ கூப்பிட்டாக் கூட வரமாட்டோம் எங்க ஏற்பாடு பண்ணியிருக்கேன்னாவது சொல்லேன்.”

அக்கா மீண்டும் சீண்ட, நான் வழியும் முகத்தை துடைக்கும் வழிதெரியாமல் முழித்துக் கொண்டிருக்க அம்மாதான் உதவினார்கள்,

“ஏண்டி இவ்வளவு பேசுற, ஏங்கடி உன் வீட்டுக்காரன், தம்பிக்கு கல்யாணம் இருக்கு அவன் வர்றாம இவ மட்டும் வந்திருக்கா, இதில நக்கல் வேற இவளைக் கூப்பிடலைன்னு, நீயும் ஒரு மாசம் சுத்திட்டு சுமந்துக்கிட்டுத்தானே வந்த அப்புறமென்ன?”

அம்மாவின் சொந்தத்தம்பியைத் தான் அக்காவிற்கு கல்யாணம் செய்து வைத்திருந்ததால் அந்த மரியாதை, அத்தானுக்கு வேலை அதிகம் என்னிடம் தனிப்பட்ட முறையில் வருத்தப்பட்டு சொல்லியிருந்தார் “டேய் எனக்கும் வருத்தம் தான், என் கல்யாணத்தை முன்னயிருந்து நீதான் நடத்தின. இப்ப ஆனால் நிறைய வேலை கல்யாணத்திற்கு மூன்று நாளைக்கு முன்னால் நிச்சயம் வந்து விடுகிறேன்” என்று.

ஆனால் அம்மாவிற்குத்தான் எவ்வளவு சொன்னாலும் அடங்கவேயில்லை, சொல்லிச்சொல்லி காட்டிக் கொண்டிருந்தாள். அக்காவை அடக்கி வைக்கும் வழிதெரிந்த அம்மா இதைச் சொன்னவுடன் அக்கா மெதுவாக வேறுபக்கம் பேச்சைத் திருப்பியிருந்தாள்.

கல்யாண நாள் நெருங்க நெருங்க கொஞ்சம் படபடப்பாய் இருந்தது, மிகவும் ஆவலாய்க் காத்திருந்தேன் முதலிரவுக்கு, வயதிற்கு வந்ததில் இருந்தே எல்லாருக்கும் வருவதைப்போன்ற கனவுகளும் ஆசைகளும் முண்டியடிக்க பல இரவுகள் முதலிரவு இப்படியிருக்க வேண்டும் அப்படியிருக்க வேண்டும் என்ற ஆவலும் சேர்ந்துகொண்டே வந்தது, இதில் வயது அதிகம் ஆக ஆக வேறு பிரச்சனைகள் வேறு, சொப்பன ஸ்கலிதம், நரம்பத்தளர்ச்சி, மூட்டுவலி, ஒற்றைத்தலைவலி, செயல்பாட்டில் ஊக்கமின்மை, நடுமுதுகில் வலி, கண் எரிச்சல் போன்றவற்றிற்கு நிவாரணம் தரும் விளம்பரங்களைப் படிக்கும் பொழுதெல்லாம் ஒரு மாதிரியான பயம் மனதை அடிக்கும் காலங்களைத் தாண்டி வந்துவிட்டாலும் கூட மனதின் ஓரத்தில் இருக்கும் பயம் எங்கே மையத்திற்கு வந்துவிடுமோ என்ற பயம் இருந்தது,

அலுவலகத்தில் வேறு நண்பர்கள் என்னடா இது ஒருமணிநேரம் நின்னு டென்னிஸ் விளையாட முடியவில்லை, ரொம்பக் கஷ்டம் என்று ஏத்திவிட சம்பளத்தில் பாதி டாலர், பாதாம் பிஸ்தாவில் கழிந்து கொண்டிருந்தது, அறிவியல் பூர்வமாய் இதைப்பற்றி நிறையப்படித்திருந்தாலும், படித்துக்கொண்டிருந்தாலும் அது நம்பிக்கையை வளர்க்காமல் சங்கடத்திலேயே ஆழ்த்திக்கொண்டிருந்தது.

ப்ரண்ட் ஒருத்தன் ஒழுங்கா குளிக்காமப்பாரு உடம்பு முழுக்க அழுக்கேறிப்போயிருக்கு இப்படியிருந்த வர்ற பொண்டாட்டி பயந்திடமாட்டா, நான் கேரளாவில் இருக்கிற ஒரு ஆஸ்ரமத்தோட அட்ரஸ் சொல்றேன், அங்கப்போய் ஒரு மாசம் தங்கினேன்னு வைச்சிக்கோ இந்த தேஜஸ் தேஜஸ்னு சொல்லுவாங்களே அந்த மாதிரியான தேஜஸ் வந்திரும் முகத்தில் உடம்பை அப்படி பளபளன்னு ஆக்கிருவாங்க, அப்புறம் ம்ம்ம்… ம்ம்ம்…, என்று ஏற்றிவிட, ஒரு வாரம் கேரள ஆஸ்ரமத்தில் தங்கியிருந்ததன் பயனாய் என் கால்களைப் பார்த்தால் அவை என்னுடைய கால்களா என்று சந்தேகம் வருமளவிற்கு மாறியிருந்தது.

ஒரு வழியாக அப்படி இப்படியென்று கல்யாணம் முடிந்திருந்தது, ஒரே வகையறாதான்னாலும் சில பல விஷயங்களில் வித்தியாசம் வந்தது, மாலையை குறுக்காகத்தான் போடவேண்டும் என்று எங்கள் வீட்டில் ஒற்றைக்காலில் நிற்க அவர்களும் மறுக்க முடியாமல் மாப்பிள்ளை மற்றும் பெண்ணின் கழுத்தில் மாலை குறுக்காக அதுவும் மல்லிகையால் ஆன மாலைகள் போடப்பட்டன, பின்னால் விளக்கு பிடித்திருந்த அக்காவிற்கு ஐந்நூறு ரூபாய் பணம் தான் வைக்க வேண்டுமென்று அங்கே அவள் வம்பிழுக்க, பின்னர் மாப்பிள்ளைக்கும் மாப்பிள்ளைத் தோழனின் இலைக்கு கீழும் பணம் வைக்காமல் இருப்பதை பார்த்து அங்கேயும் ஒரு பிரச்சனை. அதுமட்டுமில்லாமல் மேடையில் உட்கார்ந்துகொண்டு நான் பூனத்திடம் பேச்சுக் கொடுக்கத்தொடங்க, பின்னாலிருந்த அக்கா இதையெல்லாம் வேற எங்கேயாவது வைச்சிக்கோ நம்ம வீட்டுப் புள்ளைங்களுக்கு என்று ஒரு மரியாதை இருக்கு என்று பாரதம் பாட அதுவும் அங்கேயே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இப்படியாக ஏகப்பட்ட சிறுசிறு பிரச்சனைகளுக்கு இடையில் நிறைவேறியிருந்த கல்யாணத்தில் ஒருவாறு அனைவருக்கும் சந்தோஷமே,

கடைசியில் பெண் வீட்டுக்காரர்கள் அழுதபடியே, பெண்ணு குழந்தை மாதிரி விவரமெல்லாம் ஒன்னும் தெரியாது, பார்த்துக்கோங்கன்னு சொல்ல, பூனம் அழ அப்படியே அவங்க அம்மா அழ என்று ஒரே அழுகை. எனக்கு எங்கக்காவின் கல்யாணம் நினைவில் வந்தது, அதில் இந்த மாதிரியான அழுகையெல்லாம் இல்லை, சாதாரணமாகவே அக்கா ரொம்பவும் தைரியமானவள் அதுவும் இல்லாமல் சொந்த மாமனையே கல்யாணம் கட்டிக்கொண்டிருந்ததால் அவ்வளவு அழுகையில்லை. ஆனால் இவர்கள் கொஞ்சம் தூரத்துச் சொந்தகாரர்கள் என்பதால் கொஞ்சம் அழுகை.

முதலிரவு அறையில் கொண்டுவந்து பூனத்தை விட்ட அக்கா, “டேய் நாளைக்கு காலையில அவக்கிட்ட கேட்பேன், அவளை மிரட்டின உருட்டினன்னு ஏதாவது சொன்னா அவ்வளவுதான் பார்த்துக்கோ.” சொல்லி காதைக் கிள்ளிவிட்டுச் சென்றாள். சொல்லப்போனால், நிச்சயத்திற்குப் பிறகு பூனத்தை இப்பொழுது தான் கொஞ்சம் ஆரஅமரப் பார்க்கிறேன், அதற்கு முன் பார்ப்பதற்கு கொஞ்சம் பயம்தான், எங்கே அக்கா ரொம்ப வழிகிறேன்னு சொல்லிடுவாளோன்னு. அழகாய்த்தான் இருந்தாள் அவள், தேவையான உயரம், வரையப்பட்டதைப் போன்ற கண்கள், அளவான உதடுகள், கண்களை உறுத்தாத மார், எனக்கு மிகவும் பிடித்தமான நீண்ட கூந்தல் இப்படி. நான் என்ன பேசுவதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க. பூனம்,

“என்னங்க நான் உங்கக்கிட்ட ஒரு விஷயம் பேசணும்…”

“சொல்லு பூனம்…” நான் சொல்ல,

“இல்லை இந்த விஷயத்தை கல்யாணத்துக்கு முந்தியே உங்கக்கிட்ட சொல்லணும்னு இருந்தேன். ஆனால் அம்மா அப்பா தற்கொலை பண்ணிப்பேன்னு சொன்னாதால சொல்லலை, இதை மறைச்சி உங்கக்கூட வாழ்வதில் எனக்கு விருப்பமில்லை.”

அவள் என்னவோ பில்டப் கொடுக்கத் தொடங்க, எனக்கு அந்த அறையே சுற்றுவதைப் போல் தோன்றியது. நான் எதுவும் சொல்ல நினைத்தாலும் சொல்ல முடியாத நிலையில் அவளே தொடர்ந்தாள்.

“நான் காலேஜ் படிச்சப்ப கூடப்படிச்ச ஒரு பையனைக் காதலிச்சேன், அவனும் நானும் காதலிச்சது அந்தக் காலேஜில் இருக்கிற எல்லாருக்குமே தெரியும். எங்க வீட்டில் காதல் கல்யாணத்தை ஒத்துக்குவாங்கன்னு தான் நான் நினைச்சேன். அவங்க சம்மதத்தைக் கேட்டதும் அவங்க ஒத்துக்காதது எனக்கு ஆச்சர்யமா இருந்தது, அந்தப் பையனைப் பொறுத்த வரையில் எந்தப் பிரச்சனையும் கிடையாது. சொல்லப்போனால் நம்ம ஜாதி வேற, ஆனாலும் ஏனோ எங்க வீட்டில் ஒத்துக்கலை.

எனக்கும் அம்மா அப்பா இல்லாத ஒரு கல்யாணத்தை நினைத்துக்கூட பார்க்கமுடியலை. எனக்கு அப்பா வேணும் அம்மா வேணும் அண்ணா வேணும், இவங்களையெல்லாம் விட்டுட்டு நடக்கிற ஒரு கல்யாணத்தை என்னால் நிச்சயமாய் நினைத்துக்கூட பார்க்கமுடியலை,

அதுவும் அம்மாவும் அப்பாவும் தற்கொலை பண்ணிப்போம்னு சொன்னதும் என்னால ஒன்னுமே சொல்ல முடியலை, ரொம்பச் செல்லமா வளர்த்தாங்க என்னை அவங்க அப்படி சொன்னதையே என்னால தாங்க முடியலை…” சொன்னவள் அழத்தொடங்கினாள், எனக்கென்னவோ தலைக்கு மேலிருந்த சுவர் கீழிறங்கி மேலே விழுந்ததைப் போலிருந்தது.

“எல்லாரும் என்னை இதைப்பத்தி உங்கக்கிட்ட பேச வேண்டாமுன்னு தான் சொன்னாங்க, ஆனால் என்னை கடைசி வரைக்கும் வைச்சிக் காப்பாத்துவேன்னு நம்பிக்கை கொடுத்து கல்யாணம் பண்ணிக்கிட்ட உங்கக்கிட்ட பொய் சொல்ல மனசுவரலை.”

சொல்லிவிட்டு என்னை நிமிர்ந்து பார்த்தவளுக்கு நான் பேயறைந்ததைப் போல் விழித்தது பயமாகக்கூட இருந்திருக்கும்.

“…, நான் அவன் கூட சேர்ந்து பைக்கில் எல்லாம் போயிருக்கேன், முத்தமெல்லாம் கூட கொடுத்து வாங்கியிருக்கேன், ஆனால் தப்பு பண்ணதில்லை…” சொல்லிவிட்டு முடிக்காமல் தொடர்ந்து அழுதாள் பூனம். சுமூகமான ஒரு முதலிரவை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்த என்னை இடிபோல் தாக்கிய அவள் பேச்சை சுதாகரிக்கவே எனக்கு நேரம் ஆனது, இந்நிலையில் என்னைத் தேற்றவே இரண்டு ஆட்கள் வேண்டும் இதில் அவளைத் தேற்றும் அளவிற்கு மனம் ஒத்துழைக்காததால் வெறுமனே அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்.

“வீட்டில் சம்மதம் சொல்லலைன்னதுமே எனக்கு அந்த காதல் மீதான விருப்பு குறைஞ்சிட்டது, ஒருவிஷயம் இதெல்லாம் நடந்து ஒரு வருஷம் இருக்கும் அந்தப் பையன்கிட்ட சொன்னதும் கொஞ்சம் முரண்டுபிடித்தவன் பிறகு அம்மா அப்பாவோட சாவில் இருந்து தொடங்கிற ஒரு கல்யாணம் நமக்கு வேண்டாம்னு அவனோட அப்பா அம்மா சொன்ன பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு அமேரிக்கா போய் செட்டில் ஆய்ட்டான்.”

கொஞ்ச நேரம் பேசாமலிருந்தவள் கடைசியாக,

“நான் உங்களை விருப்பப்பட்டுத்தான் கல்யாணம் செய்துக்கிட்டேன், உங்கக்கூட காலம் பூரா நல்ல மனைவியா வாழணும்னுதான் விரும்புறேன். அதனால் தான் எல்லாரும் வேண்டாம்னு சொல்லியும் உங்கக்கிட்ட இந்த விஷயத்தைச் சொல்றேன். இனிமேல் உங்கவிருப்பம்.”

சொல்லிவிட்டு என்னையே பார்த்தாள், என் விருப்பமாம் என் விருப்பம் எதைச் சொல்கிறாள் என்று தெரியவில்லை, அவளுடன் சந்தோஷமாய் வாழ்வதையும் டிவோர்ஸ் செய்வதைப் பற்றியும் தேர்ந்தெடுப்பதைச் சொல்கிறாளா புரியவில்லை, முதலிரவின் போது டிவோர்ஸ் பற்றி நினைத்துப்பார்ப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.

இப்பொழுது அவளைப் பார்க்கும் பொழுது அந்த உதடுகளும் மார்புகளும் இன்னபிறவும் இன்னொருவனால் உபயோகப்படுத்தப்பட்டவை, எச்சில் பண்டம் என்ற உணர்வு தோன்றுவதை கட்டுப்படுத்த நினைத்தும் முடியாமல், நண்பர்களுக்கு வாங்கி வந்த சிகரெட் பாக்கெட்டை நோக்கி நடந்தேன். நானா இப்படியெல்லாம் யோசிப்பது என நினைத்தால் கொஞ்சம் சங்கடமாய் இருந்தாலும், அதைப் போன்ற உணர்வுகள் எழுவதை தடுக்க முடியவில்லை.

எல்லாவிதமான வாய்ப்புக்களும் இருந்தும், எந்த தப்பான விஷயத்தையும் செய்யாமல் எல்லாவற்றையும் வருங்கால மனைவிக்காக சேர்த்து வைத்திருந்த எனக்கு அவள் சொன்ன விஷயங்கள் கோபத்தையே அதிகப்படுத்தியிருந்தன. இதற்கு என்ன செய்யலாம், அவளிடம் என்ன பதில் சொல்லவது, என நினைக்க ஒன்றுமே புரியவில்லை. இப்பொழுது கதவை திறந்து கொண்டு வெளியில் போனால் பூனத்தின் அப்பா அம்மாவிற்கு நிச்சயமாய்ச் சந்தேகம் வரும். என நினைத்தவனாய் ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தேன். பன்னிரெண்டாம் வகுப்பில் பிடித்தது பிறகு இப்பொழுதுதான் பிடிக்கிறேன். அதுவும் செய்து கொண்ட கல்யாணத்தால் பிடிக்கிறேன் என நினைக்கும் பொழுது மீண்டும் கோபம் தான் வந்தது.

ஒரு பாக்கெட் காலியாகியிருக்கும் என நினைக்கிறேன், ஒன்றும் பிடிபடாமல் எனக்காக அங்கே படுக்கையில் காத்திருக்கும் பூனத்திற்கு பதிலொன்றும் சொல்லாமல் போய் படுத்துக்கொண்டேன், கொஞ்ச நேரம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தவள் அவளாய்ப் போய் பாத்ரூமில் உடை மாற்றிக் கொண்டு வந்து படுத்துக்கொண்டாள், இந்தக் கட்டிலில் படுத்துக் கொண்டு எத்தனை நாள் முதலிரவைப் பற்றி கனாக் கண்டிருப்பேன் அத்தனையும் பாழாய்ப்போனதை நினைத்துப்பார்க்க வேகம் வேகமாய் வந்தது. எதாயிருந்தாலும் அம்மாவிடம் கேட்டு ஒரு முடிவிற்கு வரலாம் என நினைத்தவன் எப்பொழுது தூங்கினேன் என்றே தெரியாமல் தூங்கியிருந்தேன். கல்யாணத்தன்று காலை ஐந்தரை மணிக்கு எழுந்தது ஒரே அசதி, காலையில் பூனம் எழுப்ப எழுந்தவன் அவளுடைய “குட் மார்னிங்” க்கு கூட பதில் சொல்லாமல் வேகமாய் குளிக்கக் கிளம்பினேன்.

குளிக்கும் பொழுது எல்லாம் கனவாய்த் தோன்றினாலும், குட்மார்னிங் சொன்ன உடலும் உயிரும் நினைவென்றுச் சொல்ல, என்ன செய்வதென்று யோசித்தவனுக்கு ஒன்றுமே தோன்றாவில்லை, குளித்தவுடன் அம்மாவிடமும் சொல்ல மனம் வராமல் அப்படியே யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வெளியில் கிளம்பிச் சென்றேன்.

திரும்பி வந்ததும் வராததுமாய். அக்கா,

“என்னடா மாப்ள அவ்வளவு சீக்கிரமாய் எங்க கிளம்பிட்ட, நாங்கல்லாம் ஓட்டுவோம்னு பயமா?” என்ற சொல்ல நான் என் முகம் காட்டவிருக்கும் உணர்ச்சிகளை மறைப்பதே பெரும் காரியமாய் இருந்தது, என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சமையலறைக்குள் வந்த அம்மா,

“தம்பி என்ன பிரச்சனையென்றாலும் பேசித்தீர்த்துக் கொள்ளலாம், பூனத்தோட அம்மா அப்பாயெல்லாம் இருக்காங்க காலையில நீ வேகமா வெளியில் போனதால ரொம்ப சோகமா இருக்காங்க. அவங்க போகட்டும் பார்த்துக்கலாம்.” ஒரு வழியாக அன்றைக்கு சாயங்காலம் கொஞ்சம் அழுகையுடன் அவங்க வீட்டில் எல்லோரும் சென்றதும்,

“பூனம் எல்லாத்தையும் என்கிட்ட சொன்னா, தம்பி பொறுத்ததும் பொறுத்துட்ட இன்னும் ஒரு நாளு, உங்கக்கா இருக்கா இங்க. அவ போகட்டும் நாம பேசிக்கலாம். இன்னிக்கு ஒரு பிரச்சனையும் கிளப்பாம போய்ப் படுத்துக்க.” சொன்ன அம்மாவைப் பார்த்தால் ஆச்சர்யமாய் இருந்தது, அதைவிட பூனத்தை நினைத்தால் இன்னும் ஆச்சர்யமாய் இருந்தது எந்த நம்பிக்கையில் இவள் இந்த விஷயத்தை அம்மாவிடம் சொன்னாள் என்று தெரியவில்லை.

ஆனால் பிரச்சனை வேறுவிதமாய் ஆனது, அதுவரை சும்மாயிருந்த அப்பா, எங்கள் இரண்டுபேரையும் ஹனிமூனுக்கு அனுப்பியே தீர்வது என்று ஒற்றைக்காலில் நின்றார், அம்மாவும் அப்பாவுக்கு தெரிந்தால் வருத்தப்படுவார் அதனால் போய்ட்டு வந்திரு என்று சொல்ல, என் மனநிலையை யாரும் புரிஞ்சிக்கவே மாட்டேங்கிறாங்களே என்று இருந்தது எனக்கு. இந்த நிலையில் நான் அக்காவை துணைக்கழைக்க, அவள் அத்தானை அழைக்க, பூனம் அவள் தங்கையை அழைக்க என மொத்தமாய் ஐந்து பெரிசுகளும் என் அக்கா பையனும் சேர்ந்து ஹனிமூனுக்கு கிளம்பினோம். எவ்வளவு சந்தோஷமாய் இருக்க வேண்டிய இந்த பயணத்தை சோகமாய் அமைந்ததில் நான் முகத்தை தூக்கிக் கொண்டிருக்க. அம்மா,

“டேய் இங்கப்பாரு, எக்காரணம் கொண்டும் இந்த விஷயம் உன் மாமனுக்கு தெரிஞ்சிடக்கூடாது.” இதுவேறு,

மணாலி வந்திறங்கியதும், எனக்கும் பூனத்திற்கும் ஒரு அறை, அக்கா மாமாவிற்கு ஒரு அறையும், பூனத்தின் தங்கைக்கும் அக்கா பையனுக்கும் சேர்த்து ஒரு சிங்கிள் அறையும் புக் செய்யப்பட்டது, எங்கள் அறையில் பெரும்பாலும் மௌனமே நிலவும் அவளாய் பெரும்பாலும் பேசமாட்டாள், பேசினாலும் நான் பதில் தராமல் இருந்ததால் பெரும்பாலும் தன்னைப் பார்த்துக்கொண்டு பிரச்சனை வராமல் இருந்து வந்தாள். அங்கிருந்த குளிருக்கும், அவளுக்கு வெகுவாய் பொருந்தியிருந்த கருப்புக்கலர் ஸ்வெட்டருக்கும் சேர்த்து ஒருமாதிரியாக இருந்தாலும், அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம் எச்சல் என்ற எண்ணம் மட்டும் திரும்பத்திரும்ப வந்து கொண்டிருந்தது. அன்றிரவைக் கடத்துவது பெரும்பாடாகவே இருந்தது.

கொஞ்சம் அதிகமாய்த் தூங்கியிருந்ததால், அடுத்தநாள் காலை எழுந்ததுமே எல்லோரும் எனக்கு முன்னரே எழுந்து தயாராகியிருந்தது தெரிந்தது. பக்கத்தில் சோலாங் வேலிக்கு எல்லோரும் புறப்படத் தயாராகியிருந்தனர், நான் மட்டும் குளிக்காமல் கிளம்பினேன் அது ஒன்று தான் குறைச்சல் என்று அவள் காதுக்கு மட்டும் படும்படியாய் முணுமுணுத்துவிட்டு,

ஹோட்டலில் இருந்த கிளம்பியதில் இருந்தே கவனித்தேன், பூனம் ஒரு மாதிரியாக நடந்து வந்தாள், நானும் ஏதோ அவள் கால்களில் பட்டுவிட்டது என நினைத்திருந்தேன் ஆனால் புரியவில்லை ஆனால் அவள் நடையில் வித்தியாசம் தெரிந்தது, அதற்கான மர்மம் அன்றிரவுதான் விளங்கியது. நான் சாதாரணமாய்க் கேட்க அவள், “இல்லை அக்காவிற்கு நம்ம இரண்டு பேருக்கு இடையிலும் ஏதோ பிரச்சனைன்னு தெரிஞ்சிருச்சு. கேட்டாங்க நான் புலம்பிட்டேன், அவங்களும் இதை மாதிரி எதாவது நடந்திருக்கும்னு நினைச்சதாகவும், உங்க மாமா அதை கண்டுபிடிக்கிற மாதிரி கேள்விகள் எல்லாம் கேட்டார்னு அக்காதான் அப்படி நடக்கச்சொன்னாங்க.” அக்கா ஏன் அப்படிச் சொன்னாள் என்று புரிந்ததும் முதலில் அவளை உதைக்கவேண்டும் என்று நினைத்தேன்.

அன்றிரவு என்னைப் பார்க்க வந்த அக்கா, “யேய், அம்மா உன்னை கால் பண்ணச் சொல்லிச்சு.” என்று மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டாள்.

நான் இரவு ஒன்பது மணிக்கு மேல் தொலைபேச, அந்த முனையில் இருந்து அம்மா,

“இதை எப்படி உன்கிட்ட நேர்ல பேசுறதன்னு தெரியலை அதான் போன்ல சொல்றேன். அந்த பொண்ணு அவ்வளவு சொல்லுதுடா தம்பி, இதே அவள் சொல்லலைன்னா நமக்கு தெரிஞ்சிருக்குமா, நல்லவளா இருக்கிறதால சொல்லியிருக்கா,

அப்புறம் இன்னொரு விஷயம், இப்படி நடக்குறது கொஞ்சம் கஷ்டமாயிருந்தாலும் இது எல்லார் வாழ்க்கையிலும் நடக்கிறதுதாண்டா, அந்த வயசில நடக்கலைன்னா தான் தப்பு இதே நீ காதலிச்சிறுந்தாலோ இல்லை உங்கக்கா காதலிச்சிறுந்தாலோ நாங்க சரின்னு தான் சொல்லியிருப்போம். ஏனோ நீங்க இரண்டு பேருமே அப்படி பண்ணலை. அதனால காதலிச்சவங்க பண்ணதெல்லாம் தப்புன்னு கிடையாது. கடைசியா ஒன்னே ஒன்னு மட்டும் சொல்றேன்.

நானும் என்னோட காலேஜ் பருவத்தில் ஒருத்ததை காதலிச்சேன், உங்கப்பா மாதிரியே அவரும் எனக்கு அத்தை மகன் உறவுதான் வரும். நாங்க இரண்டு பேரும் விரும்புனது எல்லாருக்குமே தெரியும். ஒரு விபத்தில் அந்தப் பையன் இறந்திட்டான். உங்கப்பா என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டார். இது இன்னிக்கு வரைக்கும் உனக்குத் தெரியுமா நான் இதை உங்கக்கிட்டேர்ந்தெல்லாம் மறைச்சிட்டேன் ஆனா அந்தப் பொண்ணு வெளிப்படையா சொல்லியிருக்கா அதனால தப்பில்லை, இன்னிக்கு வரைக்கும் உங்கப்பாவிற்கு ஏற்றவளாய்த்தான் வாழ்ந்திட்டு வந்திருக்கேன். நம்ம வீட்டில் இது சம்மந்தமா ஒரு பிரச்சனை இதுவரைக்கும் வந்திருக்கா.

இதுக்கு அப்புறமும் நீ அந்தப் பொண்ணுக்கூட சேர்ந்து வாழமாட்டேன்னு சொன்னா, எனக்கு என்ன செய்வதென்றே தெரியலை.

அம்மா போனை வைத்துவிட, அந்தப் பொண்ணை கற்பனை செய்ததைப்போல் அம்மாவை கற்பனை செய்யமுடியவில்லை. அந்தப்பெண்ணை அப்படிக் கற்பனை செய்தது கூட தவறென்ற எண்ணம் எழத்தொடங்கியது.

சுஜாதாவும் என் கதைக்கான சில விளக்கங்களும்

தொடர்கதை தொடரா வந்தா படிக்கிறதில்லைன்னு ஒரு முடிவில் இருந்தேன், ஆனால் வாத்தியார் முடிவை மாத்த வைச்சிறுவாரு போலிருக்கு. ஆனால் அந்தக் காலத்தில் இருந்த அளவிற்கு கணேஷ் வசந்த் கிரேஸ் இப்ப இல்லைங்கிறது உண்மை. பிரகாசமா மெக்ஸிகோ சலவைக்காரியுடன் ஆரம்பித்திருக்கிறார்.

தேர்தல் முடிஞ்சிருச்சு. என்னமோ நான் நினைச்சது நடக்கலை, கலைஞர் வருவார்னு தெரியும் ஆனால் தனியா வருவார்னு நினைத்தேன். ஒரு விதத்தில் ரோசாவசந்த் எழுதியிருந்ததில் எனக்கும் உடன்பாடு உண்டு. இதே ஜெயலலிதா பதவிக்கு வந்திருந்தால் இரண்டு நாளைக்கு சோறு தண்ணீர் இறங்காது. இதை நான் போனமுறை உணர்ந்திருக்கிறேன். ஆனால் காரணமெல்லாம் தெரியாது. மனசு ஏனோ அலைபாயும். இதை நான் ஆரம்பக்காலங்களில் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் தோற்றாலும் உணர்ந்திருக்கிறேன்.

எனக்கு பெரும்பாலும் தேன்கூடு நடத்துவதைப்போன்ற போட்டிகளில் விருப்பமிருந்ததில்லை, மக்களை தேர்ந்தெடுக்க சொல்லும் இதுபோன்ற போட்டிகளில் இருக்கும் குழப்பம் எனக்கு பிடித்ததில்லை. ஆனால் கொஞ்ச நாளாகவே மனதிற்குள் சுற்றிக்கொண்டிருந்த ஒரு விஷயத்தை எழுத கிடைத்த வாய்ப்பாக இதை நினைத்தேன். அதனால் தான் எழுதினேன். சிலர் அந்தக் கதையில் சில பாதிப்புகள் இருப்பதாக சொன்னார்கள். நான் பாதிப்புகள் இல்லாமல் இருப்பதற்காக பெரும்பாலும் உட்கார்ந்து திருத்துவதில்லை. என்னைப்பொறுத்தவரை, எந்த கதையின் தாக்கமும் இல்லாமல் தான் எழுதினேன்.

எங்கள் கம்பெனியின் இமெயில் முகவரியில் இருந்து ஒரு கடிதம் வந்திருந்தது, இதுபோல் உங்கள் ப்ளாக்கை படிப்பேன் தற்சமயம் தான் தெரிந்தது நீங்கள் இங்கே வேலை செய்கிறீர்கள் என்று சந்திக்கலாமா என்று கேட்டு. கேட்டு வந்த கடிதம் எழுதியவர், ஒரு ப்ளோர் மேலே தான் உட்கார்ந்திருந்தாலும் இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏற்கனவே ஞானசேகர் என்ற ஆர்இசி யில் படித்த மாணவர் ஒருவர் என் கம்பெனியில் இருந்து தமிழில் வலைபதிகிறார். சிலசமயம் நாங்கள் சந்தித்து வலைபதிவு நிலவரங்களை பேசுவதுண்டு. (புனே வலைபதிவர் வட்டம்.)

இரண்டொறு நபர்களை உள்ளே இழுத்துவிட்டேன், ஆனால் அவர்கள் தமிழ்மணத்தைப் பற்றி கேட்கும் சில கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் கட்டாயப்படுத்தாமல் விட்டுவிட்டேன். அதே தேர்தல் 2060 தலைப்பிற்கு ஒரு நகைச்சுவை கதை எழுதலாமா என்று யோசித்து வருகிறேன். அவ்வளவு பிரகாசமாக வராதென்று தெரியும் ஆதலால் தற்போதைக்கு விட்டு வைக்கிறேன்.

தேர்தல் – 2060 கணிணிக்கு ஒரு வாய்ப்பை தாருங்கள்

“என்னது கருணாநிதி பிரச்சாரம் செய்கிறாரா?”

ஐம்பது ஆண்டுகள் கோமாவில் இருந்து மீண்டும் நினைவு திரும்பியுள்ள தாத்தா கேட்டது, மோகனுக்கு பெரிதும் ஆச்சர்யமளிக்கவில்லை,

“அட நீங்க வேற தாத்தா ஜெயலலிதாவும் கருணாநிதிக்கு சாதகமா பிரச்சாரம் பண்ணிக்கிட்டிருக்காங்க…” சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே அறைக்குள் நுழைந்த பவானி, மோகனின் முதுகில் செல்லமாகத் தட்டியபடி,

“டேய் உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன் தாத்தாவை தொந்தரவு செய்யக்கூடாதுன்னு.” சொல்லிவிட்டு, பின்னர் தன் தந்தையிடம்,

“என்ன நைனா இப்ப எப்படியிருக்கு?”

“பவானி என்னடா சொல்றான் உன் பையன். கருணாநிதி, ஜெயலலிதாவெல்லாம் இன்னும் உயிரோட இருக்காங்களா?”

ஆம், சுயநினைவை இழந்தவராய் ஐம்பது வருடம் கோமாவில் இருந்தவருக்கு நடந்தவையெல்லாம் தெரிந்திருக்க நியாமில்லைதான். அவனால் கூட கற்பனை செய்து பார்க்கமுடியவில்லை. பத்து வயது சிறுவனாக இருந்த பொழுது ஒருநாள் அவன் தந்தைக்கு ஏற்பட்ட விபத்தில் அவர்f இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு, அலறியடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு வந்து பார்த்தால் உயிர்மட்டும் தான் போகாமல் இருந்தது.

இன்று நினைவிற்கு வந்துவிடுவார், நாளைக்கு வந்துவிடுவார் என்று நம்பிக்கை மாறாததைப்போல் அவருடைய நிலைமையும் சுத்தமாக மாறவில்லை, கொஞ்சம் கொஞ்சமாக மாறிவந்த மருத்துவ வசதிகள், மருத்துவ உலகின் சாதனைகள் அவர்களின் நம்பிக்கையை இழக்காமல் வைத்திருந்தது. அவனால் கூட நினைத்துப்பார்க்க முடியவில்லை நடந்தவைகளையெல்லாம் கனவு போல்தான் இருந்தது.

மத்திய ஆசியாவில் இஸ்ரேல் தொடங்கிவைத்த யுத்தம் உலகப்போராக மாறுமென்று யாருமே உத்தேசித்திருக்கவில்லைதான். இல்லவேயில்லை என்று சொன்ன நாடுகள் எல்லாம் தூக்கி ஒரேயடியாக குண்டைப் போட்டுக்கொள்ள, இந்த நாட்டுக்கு சாதகமா அவன்வர அந்த நாட்டுக்குச் சமமா இவன்வர, இன்னுமொரு உலகப்போர் உருவாகியது தான் மிச்சம். ஆனால் அனைவருக்குமே இதன் முடிவு எப்படியிருக்கும் என்று தெரிந்திருந்ததாலும் ஒன்றுமே செய்யமுடியவில்லை.

எப்படியிருந்தாலும் மொத்தமாக உலகம் அழியாமல் இருப்பதற்கு, போர் தொடங்கிய சில காலங்களில் உருவாகிய மக்கள் எழுச்சியே காரணம், மக்களுக்கு அணுஆயுதப்போரின் தீவிரம் நன்றாகத் தெரியத்தொடங்கியது. தொலை தொடர்புத்துறையின் பிரம்மாண்டமான வளர்ச்சி காரணமாக பாதிப்போரின் பொழுதே, சமாதானத்திற்கு ஒரு வாய்ப்பளியுங்கள் என்பதைப் போன்ற இயக்கங்கள் உலகம் முழுவதும் தொடங்கப்பட்டிருந்தன.

அந்தந்த நாட்டு மக்களின் பெரும் புரட்சியினை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசுகளும், அணுஆயுத நாடுகளும் போரிலிருந்து பின்வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியிருந்தன. ஆனால் அதுவரை நடந்து முடிந்திருந்த போரின் தாக்கம் பெருமளவில் இருந்தது. இதெல்லாம் நடந்தது இரண்டாயிரத்து இருபத்தைந்தாம் ஆண்டில்.

எல்லாம் முடிந்திருந்தது, ஆனால் அந்தப் போர் ஏற்படுத்தியிருந்த பாதிப்பு மாற மற்றுமொரு இருபத்தைந்தாண்டுகள் ஆனது. உலகமெங்கும், சமாதானத்திற்கு ஒரு வாய்ப்பளியுங்கள் என்ற இயக்கம் ஆட்சியைக் கைப்பற்றியிருந்தது. மக்களுக்கு ஆயுதம், போர் மீதிருந்த பயம் கடைசிவரை போகவேயில்லை. அறிவியல் அதன் அதிகபட்ச உச்சத்தை எட்டியிருந்தது, அதுவரை யுத்தம் தளவாடம் ஆகியவற்றில் செலவிடப்பட்டுவந்த மொத்த பணமும், அறிவியலுக்கு செலவிடப்பட, அறிவியில் உலகம் பல விந்தைகளை செயல்படுத்திக் காட்டியிருந்தது அதில் ஒன்று, தானாகவே சிந்திக்கும் கணிணிகள்.

முதலில் ஆராய்ச்சி வடிவத்தில் வரத்தொடங்கிய இந்தக் கணிணிகள் பின் பெரிய அளவில் எழுச்சி பெற்றது. அந்தச் சமயத்தில் கொண்டுவரப்பட்ட ஒன்று தான் இந்த கணிணிக்கு ஒரு வாய்ப்பை தாருங்கள் என்ற கோஷமும். அதுவரை அரசியல்வாதிகளைத் தெர்ந்தெடுக்க நடத்தப்பெற்ற தேர்தல்களில் முதல் முறையாக சுயமாகச் சிந்திக்கும் கணிணிகளும் போட்டியிட்டன, ஒரே ஒரு கோஷத்துடன், கணிணிக்கு ஒரு வாய்ப்பைத்தாருங்கள் என்பதுதான் அது. அந்த கணிணியை வடிவமைத்தவர்கள் சொல்லியிருந்தது மக்களை ஆச்சயர்யத்தில் ஆழ்த்தியது. மக்களுக்கான திட்டங்கள், அடுத்த ஆண்டுகளில் நிறைவேற்றப்படவேண்டிய திட்டங்கள் இவை அனைத்தையும் தீர்மானிக்கும் கணிணிகள் என்று பிரசாரப்படுத்தப்பட்டது.

முதல் தேர்தலில் ஒரு சில நாடுகளில் முழுவதுமாக தோல்வியடைந்த இந்த திட்டம், மிகச்சில நாடுகளில் மிகச்சில இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. பின்னர் அந்த நாடுகளின் அந்தந்த பகுதிகள் அடைந்த வெற்றிகள் மேலும் மேலும் அந்த வகையான கணிணிகளுக்கு பெயர் பெற்றுத்தர அவைகள் கொஞ்சம் கொஞ்சமாக பரவத்தொடங்கியது. இதற்கு முன்பே அந்த தலைமைக் கணிணியின் ஒட்டுமொத்தமான இயங்குதிறன் முழுவதுமாக சோதனை செய்யப்பட்டு நன்மை ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ளவை என்பது நிரூபிக்கப்பட்டிருந்தது.

ஒரு சமயத்தில் உலகத்தில் எங்கும் கணிணிகளின் கீழ் செயல்படும் அரசாங்கமே இருந்தது, ஆனால் மக்களுக்கான அத்துனை சுதந்திரங்களும் இருந்தது, தேர்தலில் ஓட்டளித்து கணிணிகளை தோல்வியடையச் செய்யவும் முடிந்திருந்தது. ஆனால் அவைகள் சுயமாக மட்டுமல்லாமல், நன்மையாக மட்டுமே சிந்திக்கும் ஆற்றல் பெற்றிருந்ததால் பெரும்பாலும் அவைகள் தோல்வியடையவில்லை.

இப்படியே ஒரு பத்தாண்டுகள் கடந்தது, மக்கள் அனைவரும் சந்தோஷமாக இருந்து வந்தாலும் எதையோ ஒன்றை இழந்துவிட்டதைப்போன்ற ஒரு உணர்வு இருந்தது. ஆனால் நிச்சயமாக இதைத்தான் இழந்துவிட்டார்கள் என்பது தெரியவில்லை. ஒவ்வொரு முறை தேர்தலிலும் கணிணிகளை எதிர்த்து நிற்கவே ஆட்கள் இல்லாதிருந்த நிலை இப்பொழுது கொஞ்சம் மாறியிருந்தது. அந்த கணிணிகளால் சிந்திக்க முடியாத விஷயங்களை நாங்கள் செய்கிறோம் என்று கூறி இப்பொழுதெல்லாம் மக்கள் இயக்கங்கள் சிறிதளவில் ஆரம்பித்திருந்தன. ஆனால் ஆண்டாண்டுகளாக மக்கள் இதுமாதிரியான பிம்பங்களில் இருந்து பட்டிருந்ததால் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருந்தார்கள்.

இப்படி கணிணியை எதிர்த்து எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டுமென்று நினைத்த அந்த குழுவினர் செய்த ஏற்பாடு தான் மக்களைக் கவர்ந்த வரலாற்று அரசியல்வாதிகள். நேனோ டெக்னாலஜி அதன் உச்சத்தை அடைந்திருந்தது, மாலிக்கியூளர் ரிப்பேர் முறையின் மூலமாக ஏற்கனவே இறந்து போனவர்களை அணுஅணுவாக உருவாக்கிவிடும் வல்லமையை அறிவியல் உலகம் செய்திருந்தது. அதனை பயன்படுத்தியே அந்த நவீன அரசியல்வாதிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். கணிணிக்கு எதிரான தேர்தலில் மக்கள் கழகத்தை ஆதரித்து, வழமையான தமிழில் கருணாநிதி பேச, நுனிநாக்கு ஆங்கிலத்தில் ஜெயலலிதா பிளந்து கட்ட, ஜெயிக்கமாட்டார்கள் என்பது நிச்சயமாகத் தெரிந்தாலும், மக்களுக்கு இது ஒரு அற்புதமான பொழுதுபோக்காக இருந்தது.

“நைனா உங்களுக்கு ஒரு டெஸ்ட் பண்ணனும் இப்ப பண்ணலாமா?” பவானி கேட்க, லேசாக முகத்தைச் சுழித்தவர்.

“இப்ப நல்லாத்தானே இருக்கேன். என்னாத்துக்கு டெஸ்ட்” அவருடைய வருத்தம் தெரிந்துதான் இருக்கிறது பவானிக்கு என்றாலும், செய்யவிருக்கும் டெஸ்டின் அருமை தெரிந்தவன் என்பதால் அதன் நன்மையை விளக்கத் தொடங்கினான்.

“அதாவது நைனா, கொஞ்சம் மேலோட்டமா சொல்றதுன்னா, நம்ம மூளையில் எல்லா விஷயமும் பதிவாகியிருக்கும், ஆனால் பதிவான அந்த விஷயங்களை நினைவு கூர்ந்து திரும்பவும் எடுப்பதென்பது கொஞ்சம் கஷ்டமான வேலை. அந்த திறமைதான் ஒவ்வொருவரிடமும் கல்விக்கான வேறுபாடுகளை உண்டாக்கியிருந்தது இல்லையா.

இப்ப அந்த பிரச்சனையில்லை, ஒரு சின்ன சிப்பை உங்கள் முளையில் வைத்துவிடுவார்கள். எல்லா உணர்ச்சிகளும், மூளைக்கு செல்லவேண்டிய எல்லாவிஷயமும் முதலில் இந்த சிப்பிற்கு செல்லும். பின்னர் அந்த சிப் உங்கள் மூளையில் நீங்கள் விரும்பிய தகவலைத் தேடித்தரும். இந்த விஷயம் வந்ததில் இருந்து, அறிவாளி முட்டாள் அப்படிங்கிற விஷயம் இல்லாமல் போய்விட்டது,

அதுமட்டுமில்லாமல் இந்த சிப் வெளியில் இருந்தும் கட்டுப்படுத்தக் கூடியதாய் இருக்கும், பப்ளிக் மெம்மரி, பிரைவேட் மெம்மரி என்று இரண்டு பாகங்கள் இருக்கும் இதில் பப்ளிக் மெம்மரியை யார் வேண்டுமானால் உபயோகப்படுத்தக் கூடியதாக இருக்கும், இதையே கூட உங்களின் விருப்பதிற்கு ஏற்றது போல் மாற்றிக் கொள்ளலாம். புதிதாய் ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள வேண்டுமென்பதும் கூட மிகச்சுலபமே, உங்கள் மூளையின் மெம்மரியைக் கூட உபயோகப்படுத்த வேண்டுமென்பது கிடையாது. இப்பொழுது மூளையை வாடகைக்கு விடுவதென்பது பிரபலமாக இருக்கிறது. இதற்கான சிப்களும் கிடைக்கின்றன அதாவது நீங்கள் மற்றவரின் மூளையில் உள்ள பிரைவேட் மெம்மரியை வாடகைக்கு எடுத்து விஷயத்தை போட்டு வைத்துக்கொள்ளலாம். அந்த மூளையின் சொந்தக்காரரால் கூட அந்த விஷயத்தை உபயோகப்படுத்த முடியாது ஆனால் உங்களால் முடியும்.”

ஆரம்பத்தில் கொஞ்சம் ஆர்வமில்லாமல் கேட்கத்தொடங்கிய, சீனியர் மோகன் பின்னர் அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் எப்படி செயல்படுத்தப்பட்டிருக்கும் என யோசித்தவராக அந்த டெஸ்டிற்கு ஒப்புக்கொண்டார். ஏற்கனவே அவரது மூளையிலும் பொறுத்தப்பட்டிருந்தாலும் கோமாவில் இருந்ததால் அதனை உயிர்ப்பிக்க முடியாமல் இருந்து வந்ததை இப்பொழுது உயிர்ப்பித்து சோதனை நடத்த வேண்டும்.

உயிர்ப்பித்ததும், தந்தையிடம் பவானி,

“நைனா இப்ப உங்களோட பழைய மெம்மரியை எல்லாம் சிப் ரீட் பண்ணி கீ வேல்யு பேர்களா மாத்தியிருக்கும், இதுதான் இந்த சிப்பின் பியூட்டியே. இப்ப நீங்க பழைய சம்பவம் எதையாவது யோசித்துப்பாருங்கள், சீக்கிரமே நினைவில் வரும். தேதியை மட்டும் நினைத்தால் போதும்…”

ஒரு நிமிடம் கூட அவர் யோசிக்காமல் தன்னுடைய முதல் இரவைப்பற்றி யோசித்தார். அப்படியே பளிச் பளிச் என்று நினைவுகள் பிரகாசமாய்த் தெரியத்தொடங்கின,

அகிலா வந்து கட்டிலில் உட்கார்ந்ததுமே,

“ஒரு கவிதை மட்டுமே எழுதி கல்யாணம் பண்ணிக்கிட்டவர் நீங்களாத்தான் இருக்கும்” சொல்லிச்சிரிக்க அவர் எழுதிய அந்தக் கவிதை நினைவில் வந்தது, வரிகள், மடிப்புகள் எல்லாமே,

“இன்னும் படித்துக்கொண்டிருக்கும்
என் அக்காவிற்கு
நேற்றிரவு
நாய்கள் என்னைப்பார்த்தது
நக்கலடிப்பதாய்ப்பட்டது
தெரியப்போவதில்லை

உள்ளிருப்பது தெரிய
வலையவரும் பெண்கள்
என்னிரவுகள் நினைவுப்படுத்தும்
மனக்கணக்குகள்
அறிவதில்லை

கழுதையோ எருமைமாடோ
ஏதாவதொன்றை
நானாய்க்கேட்டாலொழிய
தலையில் கட்டமறுக்கும் பெற்றோர்
உணர்வதில்லை
ஜோடிகளின் நெறுக்கத்தில் புழுங்கும்
மனதின் வெம்மையை

மற்றவற்றைப் போலில்லாமல்
கட்டுடைக்கத்தூண்டும்
பனிக்காலத்தின் கிளர்ச்சிகளை
புறந்தள்ளி காத்திருக்கிறேன்
இன்னுமொறுமுறை.”

அவருக்கும் கொஞ்சம் ஆச்சர்யமாகத்தான் இருந்தது, சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கவிதை வரிக்குவரி அப்படியே நினைவில் வந்ததை நினைத்தவருக்கு,

அதில் வரும் கழுதையோ எருமைமாடோ என்ற பதத்தை உபயோகப்படுத்த வேண்டி வந்த சூழ்நிலையும் அதைக்காட்டி, அகிலா அவரை சீண்டியதும் நினைவில் வர, அவரையறியாமலேயே புன்னகை அவர் முகத்தில் பரவியது. அவருடையக் காலத்தில் எல்லாம் ஐம்பதாண்டு அறுபதாண்டு பழமையான கவிதைகளை நினைத்ததும் நினைவில் வருவது பெரியவிஷயம். கலைஞர் கருணாநிதியின் தனித்துவமே அதுதானே என நினைத்தவருக்கு, கலைஞர் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார் என்று பேரன் சொன்னது நினைவில் வந்தது.

“பவானி, கலைஞர் இன்னும் உயிரோட இருக்காரா?”

மருத்துவரும், பவானியும் தந்தையின் முகத்தில் நொடிக்கொரு விதமாய் மாறும் பாவங்களை கவனித்துக் கொண்டிருந்தனர். அவர்களுடைய கவனத்தை கேள்வி சற்று திசை திருப்ப,

“அது ஒரு பெரிய கதை நைனா பின்னாடி சொல்றேன். இன்னிக்கு ஒரு முக்கியமான நாள், அவசர அவசரமா உங்கள் மூளையில் சிப் பொறுத்தியதற்கு காரணம் கூட அதுதான். இன்னிக்கு தேர்தல் நாள்.”

சீனியருடைய முகத்தில் தெரிந்தை வியப்பை குறித்துக் கொண்டவனாக,

“ஆனால் பழைய காலம் போல் பூத் சென்று ஓட்டு போடவேண்டுமென்பதெல்லாம் கிடையாது, உங்கள் பப்ளிக் மெம்மரியில் சரியாக பத்துமணிக்கு தேர்தல் நினைவு வரும். உங்கள் பகுதியில் நிற்பவர்களின் விவரங்கள் கூட நினைவில் வரும். பின்னர் நீங்கள் அந்த நொடி நீங்கள் மனதில் இவருக்கு ஓட்டு போடலாம் என நினைத்தால் உங்கள் ஓட்டு அவருக்கு சென்றுவிடும். இதனை சேகரிக்க மிகப்பெரிய அளவில் கணிணிகள் இருக்கிறது.” சற்று நிறுத்திய பவானி,

“இதனால் 100 சதவீத ஓட்டுகள் ஏதாவது ஒரு சாய்ஸில் வந்துவிடும், நீங்கள் அந்த நொடியில் என்ன நினைக்கிறீர்களோ அது பதிவாகிவிடும். பின்னர் அதற்கேற்றார் போல், சில நிமிடங்களில் ஒட்டுமொத்த மக்களிடம் பெற்ற வாக்குகளை கணக்கிட்டு வென்றவரை தலைமைக் கணிணி வெளிவிடும். பத்து நிமிடங்கள் அவ்வளவுதான் தேர்தல்.”

அடுத்த பத்து நிமிடங்களில் நினைவில் தேர்தல் நடந்து முடிந்துவிட, கணிணிக்கு ஒரு வாய்ப்பைக் கொடுங்கள் அமைப்பு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட, பவானியும் ஜூனியர் மோகனும் சிரித்தனர்.

“கருணாநிதி…”

பெரியவர் விடாப்பிடியாக, கேட்டுக்கொண்டேயிருந்ததால், சுருக்கமாக நானோ டெக்னாலஜியின் வெற்றியை விவரித்த பவானி, கருணாநிதியும் ஜெயலலிதாவும் மாலிக்யூலர் ரிப்பேர் செய்வதற்கான சொத்துக்களை விட்டுவிட்டு போனதால் இறந்த சிறிது காலத்தில் அவர்களை உயிருடன் கொண்டுவரப்பட்டதை விளக்க, பெரியவருக்கு எங்கேயோ பொறிதட்டியது,

“டேய் தம்பி, இதுவந்து நான் எழுதிய ஒரு கதை மாதிரியில்லை இருக்கு.”

சொன்னதும் தான் தாமதம், மருத்துவரும் பவானியும் கைகுலுக்கிக் கொள்ள, ஜூனியரும் சிரித்தான்,

“நைனா உங்கள் மூளையில் பொறுத்தப்பட்ட சிப் நன்றாக வேளை செய்ய ஆரம்பித்துவிட்டது, ஆமாம் இது உங்களுக்கு விபத்து நடப்பதற்கு முன்னர் நீங்கள் எழுதிய கதையின் சாராம்சம்தான். இதன் காரணமாகத்தான் நீங்கள் இன்றைய நவீன உலகத்தின் மிகவும் ஆச்சர்யப்படும் மனிதர்களில் ஒருவராக இருக்கிறீர்கள்.

எப்படி உங்களால் அறுபது ஆண்டுகளுக்கு பின்னால் நடக்கப்போவதை இத்தனை தூரம் சரியாய் ஊகிக்க முடிந்ததென்பதை அறிய பல விஞ்ஞானிகள் காத்திருக்கிறார்கள். ஆனால் தனிநபரின் ஒத்துழைப்பில்லாமல் அவரிடம் இருந்து இன்பர்மேஷன் வாங்குவது நவீன உலகத்தில் தவறான காரியம் ஆதலால், உங்களின் ஒத்துழைப்பிற்காக காத்திருக்கிறார்கள்.”

என்று சொன்னதும் தான் தாமதம், அவருடைய நினைவில் சில பல டாக்டர்களின் பயோடேட்டாகள் வந்து போய்க்கொண்டிருந்தன.