வீடியோ பதிவு – முகுந்தின் உரையாடல்

இரண்டாவது அமர்வில் முகுந்த் பேசியவற்றில் சிலவற்றை வீடியோ எடுத்திருந்தேன். மதிய நேரம், அறையில் அவ்வளவாக வெளிச்சம் இல்லாததாலும் முகுந்த் பேசிய இடத்தில் அத்தனை வெளிச்சம் இல்லாத காரணத்தாலும் ஒரு மாதிரி(!!!) வந்திருக்கிறது.

பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

அறிமுகம் மற்றும் எ-கலப்பை பற்றி.

தமிழ்விசை, அதியன் மீதி விஷயங்கள் பற்றி.

கோவை பதிவர் சந்திப்பு – என் குறிப்புகள் (இரண்டாம் அமர்வு)

இரண்டாம் அமர்வு என்று போட்டாலும் விஷயம் ஆரம்பிப்பது, முதல் அமர்வின் முடிவிலிருந்து. சென்ஷி வாங்க கீழே போய்ட்டு வரலாம் என்று அழைக்க கிளம்பி கீழே வந்தோம். அங்கே உண்மைத் தமிழன், சுகுணா திவாகர், அவருடைய நண்பர், லிவிங் ஸ்மைல் வித்யா போன்றோர் நின்று கதைத்துக் கொண்டிருந்தனர். நான் சுகுணா திவாகரை சென்னை வலைபதிவர் சந்திப்பில் சந்திப்பதற்கு முன்னமே தொலைபேசியில் பேசியிருக்கிறேன். அதனால் கொஞ்சம் போல் அறிமுகம் உண்டு.

நேரடியாக விஷயத்திற்கு இறங்கி பின்நவீனத்துவ படைப்புக்களை(கவிதைகளை) எழுதுவதோடு மட்டுமல்லாமல், சாதாரண(என்னை மாதிரி) மக்களுக்கும் புரியும் வகையில் பின்நவீனத்துவக் கோட்பாடுகளை விளக்கும் விதமாக பதிவெழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அதற்கு உதாரணமாக ரமேஷ்-பிரேமின் பேச்சும்-மறுபேச்சும் புத்தகத்தைப் பற்றிச் சொல்லி அதுபோல நீங்கள் எழுதவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தேன். சுகுணா அவர்கள், பின்நவீனத்துவ ஜார்கன்’ஸ் இல்லாமல் எழுத முடியாது என்றும் முன்னமே சில பதிவுகள் இப்படி எழுதியிருப்பதாகவும் சொல்லிக் கொண்டிருந்தார். சென்ஷியும் கூட என்னமோ அவரிடம் கேட்டுக்கொண்டிருந்தார் என்னவென்று நினைவில் வரமறுக்கிறது.

செல்லா மதிய உணவிற்கு ஏற்பாடு செய்திருந்ததால், அவருடைய நபர் எங்களை அந்த ஹோட்டலுக்கு அழைத்துச் செல்ல காத்திருந்தார். ஆனால் சின்ன சின்ன குழுக்களாகப் பிரிந்து கௌதம் ஆர்கேட் வெளியில் பேசிக் கொண்டிருந்தார்களே ஒழிய யாரும் ஹோட்டலை நோக்கி நகர்வதாகத் தெரியவில்லை. பின்னர் வேறவழி நானே ஆரம்பித்து வைத்தேன் பயணத்தை. இந்தச் சமயத்தில் மேலிருந்து கீழே வந்த மா.சிவக்குமாருடனும் முகுந்துடனும் இணைந்து ஹோட்டலுக்குச் சென்றேன். பின்னர் தான் என்னிடம் மாட்டிக்கொண்டனர் இருவரும்; நான் போட்ட ரம்பத்தில் இரத்தம் சொட்ட சொட்ட அவர்கள் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தனர்.

முகுந்திடம் உபுண்டு உபயோகிக்க ஆசை இருப்பதாகவும் ஆனால் எங்கேயிருந்து தொடங்குவது என்றும் கேட்டேன். கம்ப்யூட்டர் உபயோகிக்கத் தொடங்கி இவ்வளவு ஆண்டுகள் ஆன பின்னரும் இன்னும் ஒரு OS நானாக இன்ஸ்டால் செய்திராத ரகசியத்தைச் சொல்லி. என்னைப் போன்ற ஆட்களுக்கு உதவ எதாவது இணையத்தளம் இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் உபுண்டு இணையத் தளத்திலேயே அனைத்து விவரங்களும் கிடைக்கும் என்று கூறினார்.

பின்னர் சிவக்குமாரிடம் நீங்கள் பங்குவணிகத்தில் ஈடுபடுகிறீர்களா என்று கேட்டு பின்னர் அதைப் பற்றி வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். முகுந்த் நான் பங்குச்சந்தைப் பற்றி தெரிந்துகொள்ள சோம. வள்ளியப்பனின் “அள்ள அள்ளப் பணம்” நன்றாகயிருக்கும் என்றார். தான் முதலில் கொஞ்ச காலம் நேரடி பங்கு வர்த்தகத்தில் இருந்தாலும் இப்பொழுதெல்லாம் மியூட்சுவல் பண்ட் தான் என்று சொல்லி கொஞ்சம் பயப்படவைத்தார். நான் பருப்பு மாதிரி வாழ்க்கையில் எப்பவும் தான் ரிஸ்க் எடுத்துக் கொண்டேயிருக்கிறோமே இதிலும் எடுப்போம் என்று கூறினேன். மா. சிவக்குமார் தன்னுடைய பாயாசத்தை என்னிடம் கொடுத்ததற்கு என்னுடைய ரம்பம் தான் காரணம் என்று நான் நினைக்கவில்லை.

திரும்பி வரும் வழியில் மா.சிவக்குமார் எஸ்கேப் ஆகிவிட முகுந்த், மற்றும் வித்யா பார்ட்னர்ஷிப்பில் வந்தேன். வித்யாவிடம் திருச்சியில் எந்தப் பக்கம் என்று விசாரித்துக் கொண்டிருந்தேன் பின்னர் முகுந்த் தான் பேச்சுலர்ஸ் மற்றும் மாஸ்டர் படித்த் “வரலாறை” எங்களிடம் சொன்னார். நாங்கள் மேலேறி வந்த பொழுது அங்கே குறைவான நபர்கள் தான் இருந்தனர், என் நினைவின் படி, சென்ஷி, உண்மைத் தமிழன், மா.சிவக்குமார், கோவை மணி, வினையூக்கி இவர்கள் தான் இருந்தனர்.

ஏற்கனவே முகுந்தையும் மா.சிவக்குமாரையும் ப்ளேடு போட்டு சக்க பார்மில் இருந்த என்னிடம் இந்த முறை மாட்டியது வினையூக்கி, சென்ஷி, அப்புறம் கோவை. மணி. வினையூக்கியிடம் எப்படிங்க உங்களால மட்டும் இத்தனை கதை எழுத முடியுதுன்னு ஒரு காலத்தில் எல்லோரும் என்னிடம் கேட்ட கேள்வியை நான் அவரிடம் கேட்க அவர் அந்த ரகசியத்தை விளக்கினார். நான் அவரிடம் பின்னர் ஏன் நீங்க இன்னும் நல்லா எழுதக்கூடாதுன்னு கேட்டதை மனிதர் ரசித்திருக்க மாட்டார் என்றே கருதுகிறேன். நான் என்னுடைய கனவான “ஒரு நல்ல சிறுகதை”க்கான அம்சங்கள் எப்படியிருக்க வேண்டும் என்று பதினைந்து நிமிடம் “உரை” நிகழ்த்தினேன். ஆனால் இதற்கெல்லாம் முன்னமே இந்த வரையறையை எல்லாம் நான் ஃபாலோ பண்ணுகிறேனா என்று கேட்கக்கூடாதென சொல்லியிருந்தேன்.

முடிக்கும் முகமாய் ஆபிதீன் எழுதிய “தினம் ஒரு பூண்டு” தான் இதுவரை நான் படித்ததிலேயே அதிகம் பிடித்த சிறுகதை என்று பில்டப் கட்டினேன். சிறுகதை மீதான என்னுடைய ஆசை காணாமல் போக்கும் பொழுதெல்லாம் அந்தக் கதையை ஒருமுறை படித்துவிட்டு இன்னும் நான் அந்தக் கதை பக்கத்தில் கூடவரவில்லையென்று மனதிற்குள்ளேயே சொல்லிக் கொண்டு என்னை சமாதானம் செய்துகொள்வேன் என்று கூறி அவர்களை அதிர்ச்சி அடைய வைத்தேன். ஏனென்றால் உட்கார்ந்திருந்த மூவரும் அந்தக் கதையை படித்திருக்கவில்லை.

இடைமறித்த சென்ஷி, ஒரு விஷயம் எழுதுறீங்கன்னா நாலு பேருக்கு போய்ச் சேரணும்னு நினைக்க மாட்டீங்களா என்று கேட்டார் நீங்கள் எழுதும் பதிவுகளுக்கு எத்தனை ஹிட்ஸ் வருகிறதென்றும் கேட்க நான், எனக்காகத் தான் நான் எழுதுகிறேன் என்றும் மற்றவர்கள் படிப்பதை படிக்காமல் இருப்பதைப் பற்றி கவலைப் படுவதில்லை என்று சொன்னேன். பின்னர் எப்படியோ விஷயம் பக்கத்தில் “பாரதியை” பற்றி எழுதியிருந்த விஷயத்திற்கு வந்தது. லக்ஷ்மி அதில் நான் ஒரு முன்முடிவுடனேயே விவாதத்தில் இறங்குவதாக சொல்லியிருந்ததை நினைவுபடுத்திய சென்ஷியிடம். ஆமாம் நான் சரி என்று தீவிரமாக நம்பும் ஒரு விஷயத்தைப் பற்றித்தான் எழுதமுடியுமே தவிர, நான் தவறு என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு ஆனால் சரியென்று ஒருவிஷயத்தை என்னால் எழுத முடியாதென்றும் அதனால் முன்முடிவுகளை மறுக்கமுடியாதென்றும் சொன்னேன்.

பாரதியின் திருமணத்தைப் பற்றி முன்னம் பதிவில் பின்னூட்டம் போட்டிருந்ததையே இன்னொரு முறை சொன்னேன். நாங்கள் இப்படி பேசிக்கொண்டிருப்பதை தூரத்தில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த மா.சிவக்குமார் நான் மெஷின் போல் பேசுவதாக கம்ப்ளெய்ண்ட் செய்தார்.

பின்னர் அப்படி இப்படி என அடுத்த அமர்வு தொடங்கியது. முகுந்த் எ-கலப்பை, தமிழ்விசை, அதியன், மீபோ பற்றிய நல்லதொரு அறிமுகத்தைக் கொடுத்தார். எப்படியென்றால் தீவிர இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஃபேன் ஆன நான் தற்சமயம் பயர் பாக்ஸில் உட்கார்ந்து டைப் செய்து கொண்டிருக்கிறேன் என்றால் காரணம் அவருடைய செஷன் தான். பத்திரிக்கையாளர்களோ இல்லை வீடியோ எடுப்பவர்களோ இல்லாததால் என்னமோ ரொம்பவும் பழகியவர்கள் சொல்லித்தருவது போலத்தான் இருந்தது.

இடையிடையில் என்னுடைய தேவை காரணமாக வெளியில் சென்று சென்று வந்துகொண்டிருந்தேன். முகுந்த் முடித்ததும் சிவக்குமார் Joel on software பற்றி ஆரம்பித்தார்; சொல்லப்போனால் வலைபதிவு கன்டென்ட் எப்படி இருக்கலாம் என்பதைப் பற்றித் தான் பேசினார் என்று வைத்துக்கொள்ளலாம். நான் ரொம்ப காலமாக ஜாவாவில் ப்ரொக்கிராம் எழுதுவதைப் பற்றி, ப்ரோஜெக்ட் செய்வதைப் பற்றி, இன்டர்வியூவிற்கு பிரிபேர் செய்வது பற்றி தமிழில் எழுதலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதை ஒரு தொடக்க நிலையிலாவது கொண்டுவந்து வைக்க வேண்டும் என்பதைப் பற்றி தீவிரமாக யோசித்து வருகிறேன்.

பின்னர் பாலபாரதி வீடியோ கான்ப்ரன்ஸ் செய்ய முயற்சிகள் தொடங்க, பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த மா.சிவக்குமார் “ழ” கணிணியில் இருந்தவர் என்பதால் எனக்கு இருந்த சில கேள்விகளைக் கேட்டேன் அவரும் “அரசியல்” எதுவும் இன்றி விளக்க்கினார். நண்பர்களுடன் இன்னும் உரையாட வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் இருந்தாலும்(;)) நான் செய்து கொண்டிருந்த அரேஞ்மென்ட்கள் அதற்கு உதவாததால். சிறில் அலெக்ஸுடன் மற்றவர்கள் பேச ஆரம்பிக்கும் பொழுதே நான் கிளம்ப வேண்டி வந்தது.

இவர்களைப் பற்றி ஓரிரு வார்த்தைகள்.

* சென்ஷி நிறைய சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறேன். அதை அவரிடமும் சொன்னேன். ஆளு ரொம்ப நரம்பாயிருக்கிறாரு.

* வினையூக்கி ரொம்பவும் தீவிரமாக எல்லோரும் பேசுவதை கவனித்து வருகிறார்.

* மா.சிவக்குமார் ரொம்பவும் ஆப்டிமிஸ்டிக்காக இருக்கிறார். பழகுவதற்கு இனிய மனிதர்; ப்ரொபைலில் இருக்கும் படத்தில் ஏன் கண்ணாடி இல்லாமல் இருக்கிறார் என்று தெரியவில்லை. கண்ணாடியுடன் இருக்கும் பொழுது இன்னும் பிரகாசமாகயிருக்கிறார்.

* பாலபாரதி ஒரு இடத்தில் நில்லாமல் ஓடிக்கொண்டேயிருந்தார். அவர் ரூமிற்குள் உட்கார்ந்திருந்த நேரம் குறைவாகத் தான் இருக்குமென்று நினைக்கிறேன்.

* பாமரன் ரொம்பவும் ப்ராக்டிகலான ஆளாகயிருப்பார் என்று நினைக்கிறேன். ஸ்பாண்டேனியஸ்ஸாக அவர் அடிக்கும் கமெண்ட்கள் நன்றாகயிருக்கின்றன.

* உண்மைத் தமிழன் ரொம்பவும் மெதுவாகப் பேசுகிறார், இதை வருத்தத்துடன் அவரிடம் சொன்னேன். இங்கே பதிவெழுதும் ஆளுக்கும் சந்திப்புக்களில் பார்க்கும் ஆளுக்கும் எனக்கென்னமோ வித்தியாசம் இருப்பதாகப்பட்டது.

* ராஜாவனஜ் மதியம் முகுந்த் பேசிக்கொண்டிருக்கும் பொழுது கடைசி பெஞ்ச் மாணவன் போல் தூங்கிக்கொண்டிருந்தார். நான் வீடியோ எடுத்து வைத்திருக்கிறேன் அதை.

* முகுந்த் துறுதுறுவென இருக்கிறார் எறும்புகள் குழுவில் இருந்த பழக்கமோ தெரியாது. இவரை நிறைய எழுதச் சொல்லி வற்புறுத்தினேன்.

* செல்லா மற்றும் இன்னும் சிலரை பார்க்கமுடியவில்லை என்ற வருத்தம் உண்டு.

கோவை பதிவர் சந்திப்பு – என் குறிப்புகள்

நான் தங்கியிருந்த காந்திபுரத்திலிருந்து சந்திப்பு நடைபெற்ற RS-புரம் எப்படி வரவேண்டும். ஆட்டோவிற்கு எவ்வளவு கொடுக்கலாம் என்றெல்லாம் செல்லாவிடம் ஞாயிறு காலை 9 மணிக்கே(!!!) போன் செய்து கேட்டுக்கொண்டு தான் கிளம்பினேன். எனக்கு இரண்டாவது ப்ளோரில் நடப்பதாக தெரியாததாலும், கௌதம் ஆர்கெட் ஒன்பதரை மணிக்கு ஆளோருவரும் உள்ளிருப்பதைப் போன்ற தோற்றத்தை தராததாலும்; பக்கத்தில் இருந்த பேங்கிற்கு சென்று ஏடிஎம்-ல் காசை உருவி(எனக்கு முன்னர் காசை எடுத்துவிட்டு சென்ற நபர் கார்டை விட்டுவிட்டுச் சென்றிருக்க – என்னிடம் வேறு டிரான்ஸாக்ஷன் செய்யணுமா என்று அந்த நபரின் கார்டில் கேட்டதும். உடனடியாக புரிந்துகொண்டு கார்டை எடுத்துக்கொண்டு வெளியில் வந்து – அந்த நபரிடம் கொடுத்து “புண்ணியம்” சேர்த்துக் கொண்டேன்)வந்தேன்.

பின்னர் இன்னொரு தடவை அந்த பில்டிங்கின் எதிரில் வந்து பார்த்துவிட்டு இன்னமும் ஆள் நடமாட்டம் இல்லாததால் – மேங்கோ ஜூஸ் ஒன்றை பக்கத்தில் இருந்த பழமுதிர்ச் சோலையில் குடித்துவிட்டு; இனி வேலைக்காகாது என்று செல்லாவிற்கு தொலைபேச. அவர் மேலை போங்காணும் – கீழே நின்று என்னத்த பராக் பார்க்கிறீர் என்று சொன்னதும் தான் 2ஆவது ப்ளோருக்கு வந்தேன். எனக்கு முன்பே மா.சிவக்குமார், பாலபாரதி, வினையூக்கி, உண்மைத் தமிழன், சென்ஷி, எ-கலப்பை முகுந்த் அப்புறம் இன்னும் ஒருவர் பெயர் நினைவில் வரமறுக்கிறது, கண்ணாடி போட்டிருந்தவர் கவிதை எழுதுபவராக தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டவர், போன்றவர்கள் இருந்தனர்.

வழக்கம் போல் நான் தான் மோகன் தாஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு உட்கார்ந்தேன்; அந்தச் சமயத்தில் பார்ட்னர்ஷிப் கொடுத்தது சென்ஷி. தான் வலையுலகத்திற்கு எப்படி வர நேர்ந்தது என்பதைப் பற்றி நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது தான் பாலா, செல்லாவிற்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் வரமுடியாத நிலையில் இருப்பதை சொன்னார். பின்னர் உதயசெல்வி அவரது கணவருடன் வந்தார் அவரிடம் நாங்கள் ஒருமுறை அறிமுகம் செய்து கொண்டோம். முகுந்த் நாங்கள் ஒவ்வொருவரும் திரட்டிகளில் இருந்து எதிர்பார்ப்பது எதை என்பதைப் பற்றி கேட்க சொல்லிக்கொண்டிருந்தோம்.

நான் சொன்னது தமிழ்மணத்தின் ஒரு விண்டோ என் ஸ்கிரீனில் எப்பொழுதும் இருக்குமென்றும் தேன்கூட்டை, அதிகம் பேர் பார்வையிட்ட பதிவுகளைப் பார்ப்பதற்காகவும் கில்லி பரிந்துரைகளை பார்ப்பதற்காகவும் பயன்படுத்துவதாகச் சொன்னேன். சமயங்களில் தமிழ்ப்ளாக்ஸ் பார்ப்பேன் என்றும், பின்னர் நானே உருவாக்கிக்கொண்ட iGoogle பற்றிச் சொல்லி அது எப்படி எனக்குப் பயன்படுவதாகச் சொன்னேன்.

பின்னர் ஒன்றிரண்டாய் ஆட்கள் வந்து சேர்ந்தார்கள். சுப்பையா அவர்களும் கோவை ரவி அவர்களும் வந்ததும் சூடுபிடித்தது என்று நிச்சயமாய்ச் சொல்லலாம். அவர் தான் எப்படி பதிவெழுத வந்தது எப்படி இருந்தது தன் அனுபவம் எப்படி படிப்படியாய் மக்களுக்கு ஏற்றவாறு தன்னுடைய பதிவை மாற்றிக்கொண்டார் என்பதைப் பற்றி கொஞ்சம் பெரிதாய்(;)) தன்னுடைய தெளிவான குரலில் சொன்னார். இந்தச் சமயத்தில் தான் பாமரனும் அவருடைய நண்பர்களும்(செகுவாரா அவருடைய மகன் – இதை நான் படித்திருக்கிறேன்) வந்தார்கள். அதில் ஒருவர் செகுவாராவின் படத்தை கலரில் கருப்பு பேக்ரவுண்டில் போட்டிருந்தார் நன்றாகயிருந்தது.(பின்ன பொண்ணுங்க மட்டும் தான் மத்தவங்க போட்டிருந்த புடவை நன்றாகயிருந்தது என்று எழுதணுமா என்ன?) ஆனால் எனக்கு நான் ப்ரொபைலில் போட்டிருக்கும் செகுவாரா படம் போட்ட டீஷர்ட் வாங்கத்தான் ஆசை. இங்கே கருடா மாலிலும், போரமிலும்(Forum) அப்படி செய்து தருபவர்கள் இருக்கிறார்கள்; செய்யணும்.

பாமரன் வந்ததும் இசைக்கலைஞர் ஆறுமுகம் வந்தார் என்று நினைக்கிறேன். பின்னர் பாமரன் மெதுவாக பாலபாரதியிடம் ஆரம்பிக்கலாமா என்று கேட்டுக் கொண்டிருந்தார். ஒரு ப்ரொபஷ்னலான உரையாடலுக்கு முன்னர் ஆறுமுகம் அய்யா; உட்கார்ந்ததுமே தன்னை அறிமுகப்படுத்துக் கொண்டு பேச ஆரம்பித்தது நன்றாகயிருந்தது. நான் ஆறுமுகம் அவர்களுடனான பாமரன் அவர்களின் உரையாடலுக்குப் பிறகு பாமரன் அவர்களிடம், நீங்கள் அவரிடம் வேறுமாதிரியான கேள்விகள் கேட்டு வேறுமாதிரியான அனுபவங்களை சொல்லச் சொல்லியிருக்க வேண்டும் என்று சொன்னேன். ஆறுமுகம் அய்யா தன்னுடைய ப்ரொபஷ்னல் உரையாடலில் “ராமன்”ஐ பற்றி பேச ஆரம்பித்ததுமே ராஜா வனஜ் எஸ்கேப் ஆகிவிட்டிருந்தார். இதை பக்கத்தில் உட்கார்ந்திருந்த சென்ஷியிடம் சொல்லிக் காட்டினேன்.

என்னால் ஒருவகையில் ஆறுமுகம் அவர்கள் வைத்த வாதத்தை தவறாகச் சொல்ல முடியவில்லை ஏனென்றால், அவருடைய வயதை கருத்தில் கொண்டும் அந்தக் காலத்தில் அவர் வாழ்ந்து வந்த முறைகளைக் கொண்டும் என்னால் அவர் சொல்லிய விஷயங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஏனென்றால் நானும் என் அப்பாவுடன் உரையாடுவதுண்டு ஒரு(number) ஜெனரேஷன் இடைவெளியின் தாக்கமே பெரிதாக இருக்கும் பொழுது. அங்கிருந்த பலருடன் அவருடைய ஜெனரேஷன் இடைவெளி அதிகமாக இருந்திருக்கும். என்னைப் பொறுத்தவரை அவரிடம் வேறு வித்தியாசமான கேள்விகள் கேட்டிருக்கலாம். நான் பாமரனைக் குறை சொல்லவில்லை அவரும் உரையாடல் வேறு திசையை நோக்கிப் போகும் பொழுதெல்லாம் தன்னால் முடிந்தவரை எங்களுக்கு இடையிலான ஜெனரேஷன் கேப்பை சரிசெய்ய முயன்றார். ஆனால் பேட்டி எடுப்பவர்களுக்கான ரெஸ்டிரிக்ஷன்; எனக்கு நான் மாங்காயாக இருப்பதால் புரியுமென்பதால் அக்செப்டட்.

இந்தச் சமயத்தில் தான் பாலபாரதிக்கும், ஆறுமுகம் அவர்களுக்கும், செந்தழல் ரவிக்கும் சுப்பையா அவர்கள் பொன்னாடை போற்றினார். இதுவும் ஒரு ஜெனரேஷன் கேப் தான் நிச்சயமாய், ஆறுமுகம் அய்யா பற்றி தெரியாவிட்டாலும் பாலபாரதியும் ரவியும் இதை எதிர்பார்த்திருக்க(விரும்பியிருக்க) மாட்டார்கள் என்றே நம்புகிறேன். அடுத்த இதைப் போன்ற சந்திப்புக்களில் இந்த விஷயத்தை செய்ய வேண்டாம் என்று இந்தச் சமயத்தில் கேட்டுக் கொள்கிறேன். இதனாலெல்லாம் நான் பாலபாரதியின், ரவியின் சேவைகளை பாராட்ட வேண்டாம் என்று சொல்லவில்லை; இப்படித் தொடர்ந்தால் நாளை ஒரு மீட்டிங்கின் பொழுது ஆளாளுக்கு நான்கைந்து பொன்னாடைகளை எடுத்துவந்து வலைபதிவர் மீட்டிங்கையும் அரசியல் மேடையாக ஆக்கிவிடும் சூழ்நிலை பிரகாசமாகத் தெரிகிறது.

இந்தச் சமயத்தில் தான் ரவி வந்திருந்தார், அப்படியே சுகுணா திவாகரும். இதற்கெல்லாம் கொஞ்சம் முன்னர் லிவிங் ஸ்மைல் வித்யாவும் வந்து சேர்ந்திருந்தார். பின்னர் ரமணி அவர்களின் பின்நவீனத்துவம் பற்றிய பேச்சு; ஓரளவிற்கு இந்தக் காலக் கட்டங்களில், மையம், விளிம்புநிலை, அமேரிக்க மேலாதிக்கம் பற்றி தெளிவாகத் தெரியுமென்று சொல்ல முடியாவிட்டாலும் அப்படின்னா என்ன என்று புரியுமாதலாலும், தீவிரமாக பின்நவீனத்துவத்தைப் பற்றிய என்னுடைய புரிதல்களை அதிகமாக்க வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டிருப்பதால்; தீவிரமாக கவனிக்கத் தொடங்கினேன்.

என் N73ல் அதனுடைய சில பிரச்சனைகளுக்கு இடையிலும் இவருடைய பின்நவீனத்துவ உரையாடல் ஓரளவிற்கு என்னிடம் MP4 பைலாக இருக்கிறது. செல்லா வீடியோகிராபரை ஏற்பாடு செய்திருந்ததால்; அவர் இதை வலையேற்றுவார் என்று நினைக்கிறேன். அப்படி இல்லை என்றால் என்னிடம் இருப்பதை வலையேற்றுகிறேன். இந்த பின்நவீனத்துவ உரையாடலைப் பற்றி சுகுணா திவாகர் ஏற்கனவே எழுதிவிட்டார். அதனால் அதற்குள் அத்தனை தீவிரமாகப் போகவில்லை.

நிறைய விஷயங்களைப் பற்றிய அறிமுகம் கிடைத்தாலும் ‘பின்நவீனத்துவத்திற்கான’ அறிமுகமாக இந்த உரையாடலை வைத்துக் கொள்ளலாம். அதுவும் கடைசியில் அவர் நவீனத்துவத்தின் பிரச்சனைகளையும் அது எப்படி சரியில்லை என்றும் சொன்னார் ஆனால் பின்நவீனத்துவம் எப்படி இந்தப் பிரச்சனைகளை சரி செய்கிறது என்பதை சொல்லவில்லை(அப்படின்னு நினைக்கிறேன்). ஆனால் ராஜா வனஜ், சுகுணா திவாகர், முகுந்த் மற்றும் நான் இடையிடையே நிறைய கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தோம். அவ்வப்போது மா. சிவக்குமாரும் தன்னுடைய புரிந்துணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார்.

இந்த உரையாடல் அப்படியே ரிலையன்ஸ் ப்ரஷ் மற்றும் மேற்கு வங்காளப் பிரச்சனை என பல தரப்புகளில் விவாதம் சூடுபிடித்தது. அந்தச் சமயம் ஹிந்துவின் நிருபராக வந்திருந்தவரும் தன்னுடைய பங்கிற்கு சில விஷயங்களைப் பற்றிய தன்னுடைய புரிதல்களைச் சொன்னார். இந்த மாதிரி விவாதங்களில் முதலில் கருத்தைச் சொன்னவர் விவாதத்தை தள்ளி நின்று வேடிக்கைப் பார்ப்பது அவ்வளவு சரியாகயிருக்காது அதைப் போலவே ஒரு இனிஷியேட்டிவ்வை நான் கொடுத்திருக்கிறேன், நீங்கள் யோசித்து தீர்வை நோக்கி நகர்த்துங்கள் என்று விலகி உட்காருவது எந்த அளவிற்கு சரிவரும் என்று தெரியவில்லை.

இந்த விவாதம் முடியும் தருவாயில், சுப்பையா அவர்கள் மாற்றங்களுக்கா நாமெதுவும் செய்யவேண்டுமென்ற அவசியம் இல்லை மாற்றம் அதுவாய் ஏற்படும் என்றும். நீங்களெல்லாம் நம்ப மாட்டீர்கள் என்றாலும் “கடவுள்” அந்த மாற்றம் ஏற்பட ஏதாவது செய்வார் என்பதையோ இல்லை அதை ஒத்ததையோ சொன்னார். நான் “தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா” அப்படின்னு சொன்னதை எத்தனை பேர் கவனித்தார்கள் என்று தெரியாது. கடவுள் பற்றி அவருடைய பேச்சுக்கும் எதிர்வாதம் வைத்தேன்; பாமரனும் நக்கலாக ஒரு வார்த்தைச் சொல்லி நிறுத்தினார்.

இதற்கெல்லாம் இடைப்பட்ட காலத்தில் நிறைய விஷயங்கள் நடந்தது, அதாவது சின்னச் சின்ன விஷயங்கள். பாலபாரதி தன்னுடைய கத்தி போன்ற பற்களால் கடித்து(;)) ஒரு பார்சலைப் பிரித்து எல்லோருக்கும் நோட் புக்கும் பேனாவும் கொடுத்தார். நான் மட்டும் “நானெல்லாம் காலேஜிலேயே நோட் எடுக்க மாட்டேன்” என்று சொல்லி தவிர்த்துவிட்டேன். எனக்குத் தெரிந்து நன்றாய் நோட்ஸ் எடுத்தவர்கள்(நான் பார்த்தவரையில்) சென்ஷி, மற்றும் வினையூக்கி. செந்தழல் ரவி, பின்நவீனத்துவ ஓவியம் ஒன்றை வரைந்திருந்தார் இடைப்பட்ட இந்த நேரத்தில். நான் அவர் வரைந்திருந்த அந்த ஓவியத்தில் பின்நவீனத்துமே இல்லை என்றும். அந்தப் படம் பின்நவீனத்துவ ஓவியமாக ஆக என்ன செய்யவேண்டும் என்றும் சொன்னேன்; அவர் முறைக்க எக்ஸ்கேப் ஆகினேன்.

கேட் பெர்ரீஸ் சாக்லேட்டும், டீயும் கொடுக்கப்பட்டது(இது முதல் ரவுண்ட்) நான் சாக்லேட் சாப்பிடக்கூடாது என்று தீவிரமான உத்தரவு ஒன்று நிலுவையில் உள்ளதால் சாயாவை மட்டும் குடித்துவிட்டு பேசாமல் உட்கார்ந்துவிட்டேன். பாமரனின் “நக்கல்” தொணித்த ஒன்றிரண்டு வரி கமெண்ட்களை ரசித்தேன்.

இப்படியாக முதல் அமர்வு நிறைவு பெற்றவுடன், கிளம்பிய சுப்பையா அவர்களும் கோவை ரவியும், ஹிந்து பேட்டிக்காக மீண்டும் வந்து உட்கார இன்னொரு இன் – பார்மலான பார்மல் பேட்டி ஒன்று நடந்தேறியது. நானும் பாலாவும் முதலில் பின்னூட்டத்திலும் பின்னர் தொலைபேசியிலும் விவாதித்த பிரச்சனை இன்னொரு முறை கிளப்பப்பட்டது. இந்த முறையும் நான் “எனக்கு” சரியென்று பட்டதை சொன்னேன். பின்னர் விவாதம் வேறுபக்கமாக திரும்புவதாக மா.சிவக்குமார் விளக்க மீண்டும் விவாதத்திற்கு வந்தோம்.

முகுந்த், முன்னர் ஒரு முறை ஹிந்துவில் தவறாக வந்திருந்த ஒரு தகவலைச் சொல்லி, ஹிந்து நிருபரிடம் எழுதிப் பதிவிடும் முன் யாராவது ஒருவரிடம் காட்டி சரிபார்த்துக் கொள்ளும்படி சொன்னார் எனக்கு அது சரியென்று பட்டது. லிவிங் ஸ்மைல் வித்யா தன்னுடைய பதிவுலக அனுபவங்களையும், வாழ்க்கை அனுபவங்களையும் சொன்னார். பின்னர் தமிழ் பதிவுலம் ஹிந்து போன்ற பத்திரிக்கைகளில் இருந்து எதிர்பார்ப்பது என்ன என்பதை யாரோ ஒருவர் சொல்ல கடைசியில், தமிழில் இலவசமாக எழுத முடியும் என்பதை மட்டும் சொன்னாலே போதும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்தோம். நிருபர் தானும் தமிழில் எழுத ஒரு சாப்ட்வேர் காசு கொடுத்து வாங்கியதாகவும் அதுவும் வொர்க் ஆகவில்லை என்ற தன்னுடைய ஆதங்கத்தைச் சொன்னார்.

இரண்டாவது அமர்வை இன்னொரு பதிவு போடுகிறேன். முதல் அமர்வில் சில கண்ணில் பட்ட விஷயங்கள்.

* சென்ஷி என்றால் என்ன என்பதை சென்ஷி விளக்கவேண்டும் என்று நிறைய பேர் ஆசைப்பட்டனர்.

* சுப்பையா அவர்கள் தான் எப்படி வாத்தியார் ஆனார் என்பதை நிறைய தடவை சொல்லும் படியான சூழ்நிலை அமைந்தது.

* உடனுக்குடன் வினையூக்கியும், பாலாவும், மாசிவக்குமாரும் பதிவெழுதிக் கொண்டிருந்தனர்.

* மோகன்தாஸ் தன்னுடைய மொபைலில் இருந்து போட்டாக்களை பதிவிட ப்ளூடூத் வசதியுள்ள மடிக்கணிணியை தேடிக்கொண்டிருந்தார். (கிடைக்கவில்லை)

* செந்தழல் ரவிக்கு நாங்கள் பெங்களூரில் இருந்து கோயம்புத்தூருக்கு தண்டர் பேர்டில் வந்ததை நான் படம் காண்பித்துக் கொண்டிருந்தேன்.

* இன்று வரை, சுகுணா திவாகர் செந்தழலாரிடம் இருந்து தான் பெற்ற பின்நவீனத்துவ பரிசைப் பற்றி பின்நவீனத்துவக் கவிதை எழுதவில்லை.

கோவை பதிவர் சந்திப்பு – படங்கள்

எழுதுவதற்கு நிறைய விஷயங்கள் உண்டு. என்னுடைய ‘Bicycle Diaries’ ஜல்லி; பிறகு பார்த்த இரண்டு படங்கள்(ஒன்றில் படுக்க வைத்து ரம்பத்தால் கழுத்தை அறுப்பதைப் போல் உணர்ந்தேன்.) பிறகு நடந்த வலைபதிவர் சந்திப்பென்று ஆறு ஏழு பதிவுகள் போடும் அளவிற்கு விஷயங்கள் நிறைய இருக்கின்றன இப்போதைக்கு சில புகைப்படங்கள் மட்டும்.

சென்னை வலைபதிவர் சந்திப்பு

இதைப்பற்றி பாலபாரதியும் நானும் முன்பே ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும் பொழுது சொல்லியிருந்தார்(அறிவிப்பெல்லாம் வெளியாவதற்கு முன்னால்), நானும் ரொம்ப நல்ல புள்ளையாய் டிரெயின் டிக்கெட் எல்லாம் எடுத்து வைத்திருந்தேன். ஆனால் என்னுடைய கோளாறான வேதாள புத்தியால், கடைசி நிமிடம் வரை திட்டத்தை கேன்ஸல் செய்துவிட்டு முருங்கை மரம் ஏறிவிடும் வாய்ப்பிருந்ததால் பெரும்பாலும் இதைப் பற்றி(நான் சென்னை வருவதைப் பற்றி) யாரிடமும் பேசவில்லை. வலையுலகில் வெகுசிலருக்குத் தெரிந்திருக்கும்.

இடையில் செந்தழல் ரவி அவர்கள், தங்களின்(அவரும் இன்னொரு நண்பரும்) காரில் சென்னை வருமாறு என்னை அழைத்தார், ஆனால் எனக்கு சனிக்கிழமை பெங்களூரில் கொஞ்சம் வேலையிருந்ததால் மறுத்துவிட்டேன். ஆனால் கடைசி நேரத்தில் அந்த வேலை, நடக்காமல் ஈயடித்துக் கொண்டிருந்தேன் என்பதுதான் உண்மை. சென்னைக்கு காலை ஏழு இருபதுக்கெல்லாம் ஆஜராகிவிட்டேன். ஏற்கனவே செய்து கொண்ட சில அப்பாயின்மென்ட்களை நினைவில் வைத்தவாறு நண்பருடன் நேராக அவருடைய வீட்டிற்குச் சென்று, மற்ற வேலைகளை முடித்துவிட்டு கிளம்பினோம்.

கோயம்பேடு பஸ்டாண்ட் அருகில் இருக்கும் சரவணபவனில் காலை டிபனை முடித்துக்கொண்டு நாங்கள் புறப்பட்டது எங்களுடன் கல்லூரியில் படித்த ஒருவரை சந்திப்பதற்காக. இவரைப் பற்றிமுன்பே ஒரு முறை எழுதிய நினைவு. இந்தச் சந்திப்பு முடிந்ததும் தான், எங்கள் ப்ளானில் இருந்த மிகப்பெரிய ஓட்டை நினைவில் வந்தது. அதாவது ஏறக்குறைய பதினொன்னறைக்கு முடிந்த இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, வலைபதிவு சந்திப்பின் மூன்றரை மணிவரை இருந்த காலம் தான் அது.

நானும் என்னுடன் வந்த நண்பரும் கல்லூரிக்காலங்களில் இருந்தே நிறையப் படங்கள் பார்ப்போம் என்பதால் டீபால்ட்டாக தேர்ந்தெடுத்தது சினிமா பார்க்கலாம் என்பதைத்(இதை கொஞ்சம் போல் முன்பே தீர்மானித்துத்தான் வைத்திருந்தோம்.)தான். ஆனால் சத்யம் சென்று ஒரு சினிமாவிற்கும் டிக்கெட் கிடைக்காமல் கடுப்பாகி அடுத்த நகர்ந்த இடம் தேவி காம்ப்ளக்ஸ். பெரும்பான்மையான தமிழ்ப்படங்கள் பெங்களூருக்கு வருவதில்லை ஆகையால் அந்த காம்ப்ளக்ஸில் ஓடிக்கொண்டிருந்த ஒரு படத்தைத் தவிர்த்து எந்தப் படத்தையும் நான் பார்த்திருக்கவில்லை. பின்னர் நண்பரின் தீர்மானப்படி நாங்கள் தேவி-பாலாவில் “தீபாவளி”க்குப் போனோம்.

கொய்யால, தியேட்டராய்யா அது – எங்க ஊரு பிலக், எலெக்ட், சாந்தி தியேட்டர் பக்கத்தில் கூட வராது இந்தத் தியேட்டர், ‘ஏசி’ சாரி ‘பேன்’ கூட இல்லை தியேட்டருள். என்னவோ நினைத்து எங்கேயோ போய்விட்டோம், அந்தச் சோகக்கதையை விடுங்கள். படம் கொஞ்சம் வன்முறையாக இருந்தாலும் ‘ஃபோரம் – பிவிஆர்’ மாதிரியான தியேட்டர்களில் பார்த்திருந்தால் பிடித்திருக்கக்கூட செய்திருக்கும். ‘பில்லு’ ‘பில்லு’ன்னு சப்தம் நான் சந்திப்பிற்கு வரும் வரை காதிலே ஒலித்துக்கொண்டேயிருந்தது.

————————————-

நடேசன் பார்க், நான் நினைத்ததைப் போல கண்டுபிடிக்க கடினமானதாக இல்லை. பாலபாரதியிடம் பத்துநிமிடம் அடையாளம் கேட்டதெல்லாம் வீண். உள்ளே நுழைந்ததும் ஒரு மாதிரி வட்டமாய் உட்கார்ந்திருந்த மக்களைப் பார்த்ததும் தெரிந்தது இதுதான் நம்ம கும்பல் என்று ஆனால் பக்கத்தில் இன்னொரு கூட்டமும் நின்று கொண்டிருக்க சுதாரிக்க ஒரு நிமிடம் ஆனது, ஆனால் வழமையாக தருமியையும், பிரகாஷரையும் வைத்து நம்மக் கூட்டத்தைக் கொஞ்சம் சுலபமாக கண்டறிந்துவிட்டேன்.

நான் தான் மோகன்தாஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, கிருபா ஷங்கர், பிரகாஷ், பாஸ்டன் பாலா, பக்கத்தில் உட்கார்ந்தேன் எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தது முத்து தமிழினி, நான் அவருடன் தொலைபேசியில் பேசியிருந்தாலும் நேரில் பார்த்துப் பேசியிருக்கவில்லை. தனியாக பக்கத்தில் உட்கார்ந்திருந்த பிரகாஷிடம் அறிமுகம் செய்து கொள்ள, அவரும் தன்னை; நான் தான் பிரகாஷ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். நான் அது பிரகாசமாகத் தெரியுதே என்று சொன்னதை ஜாலியாக எடுத்துக்கொண்டார் மனிதர்.

பின்னர் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பாபாவிடம் இட்லிவடை பற்றி கதைத்துக்கொண்டிருந்தேன், அவர் சுவாரசியம் காட்டியமாதிரி தெரியவில்லை. நான் இட்லிவடை பற்றி தெரிந்து கொள்ள விரும்பியது அரசியல் காரணங்களுக்காக அல்ல, முன்பொரு முறை என்னைப் பற்றி இட்லிவடையில் வந்திருந்த ஒரு கருத்தை சொன்ன நபர் யார் என்று தெரிந்துகொள்ளும் ஆவல் மட்டும் தான். திரும்பவும் சொல்கிறேன் நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன் குறைந்த பட்சம் இணைய அரசியலுக்கு ;).

நான் உட்கார்ந்ததுமே, “வாய்யா மோகன்தாஸ் – உட்காரு” என்று வந்த பாசக்காரக் குரல் நன்றாகப் பழகியதாகயிருந்தாலும் ஆளை அடையாளம் தெரியாமல் ஒரு நிமிடம் விழித்தேன். கடைசியில் பதிவர் சந்திப்பிற்காக கெட்டப்பை மாற்றியிருந்த பாலபாரதிதான் அது என்று தெரிந்தது; நான் எதிர்பார்த்ததை விடவும் உயரம் கொஞ்சம் அதிகம் ஆள் வாட்ட சாட்டமாகயிருந்தார் ;)(அண்ணாச்சி! என்னைச் சொல்லிட்டு(வீட்டுச் சாப்பாடுன்னு) நீங்க தான் ஓய் வீட்டுச் சாப்பாடு சாப்பிடுவது மாதிரி இருக்கிறியள். இத்தனைக்கும் சொந்தச் சமையல் வேறு கிடையாது என்று சொன்ன நீங்கள். ம்ம்ம்ம், இன்னொரு நாள் இந்த ரகசியம் பற்றி பேசுவோம், அதுசரி வீட்டுப் பக்கம் யாராவது இருந்தால் சுத்திப் போடச் சொல்லுங்கள், என் கண்ணே பட்டுடும் போலிருந்தது ;)).

பின்னர் அறிமுகப்படலம், (அதற்கு முன்பே சிறில் அலெக்ஸின் பெட்டகம் பற்றி பேசி முடித்திருந்தார்கள். மாற்று பற்றி ஆரம்பிக்கும் பொழுது வந்திருந்தேன் – கையை உயர்த்தி ஒரு கேள்வி கேட்டேன், யாரும் கண்டுகொண்ட மாதிரி தெரியாததால் விட்டுவிட்டேன்.) ஒருவர் பின் ஒருவராக அறிமுகப்படுத்திக் கொண்டிருந்த பொழுது எனக்கும் முத்துவிற்கும் இடையில் இன்னொரு பிரபலம் வந்து உட்கார்ந்தார், அது ஜி.இராகவன். நான் மோகன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன்.

கிருபா ஷங்கரின் அறிமுகத்தின் பொழுது பாலபாரதி ஒரு கமென்ட் கொடுக்க, பாபா மற்றொரு நண்பரின் அறிமுகத்தின் பொழுது குரல் கொடுத்ததை பலர் கவனிக்காதது போல் விட்டு விட்டார்கள்(போட்டு விட்டுட்டுடனே…) பின்னர் சில ஜல்லி விஷயங்களைப் பற்றி நான் பிரகாஷுடன் பேசிக்கொண்டிருந்தேன். இடையில் வந்து உட்கார்ந்தவரைப் பார்த்ததும் முதலில் மற்ற அறிமுகம் இல்லாதவர்கள் போல் தான் நானும் நினைத்தேன்; கடைசியில் தான் தெரிந்தது அது ரோஸா வசந்த். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன் – குவான்டம் பற்றி முன்பொருமுறை சண்டை போட்டதை வைத்து கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

அந்தச் சமயத்தில் தான் பாபாவை Snap Judgement பற்றி பேசச் சொன்னார்கள். என்னை ஆங்கிலத்தில் பேசச்சொன்னால் “Actually” யை அதிகம் தடவை உபயோகிப்பேன், அதைப் போல் பாபா “அது என்ன பேரது…”(இல்லை அதை ஒத்ததோ) ஒன்றை அதிகம் தடவை உபயோகித்தார்.(குற்றம் கண்டுபிடிப்பதற்கு மன்னியுங்கள், கல்லூரிக் காலத்தில் லெக்சரர் ஒருவர் சொல்லும் “Actually” யைக் கணக்கெடுத்து எடுத்து அப்படியாகிவிட்டேன் நான்.) சொன்ன மேட்டர் நன்றாகயிருந்தது உபயோகித்துப் பார்க்கலாம் என்று நினைத்திருக்கிறேன்.

இடையிடையில் ஒவ்வொரு நிகழ்வின் பொழுதும், பிரகாஷ் இல்லை(OR) ரோஸா வசந்த் கொடுத்த கமென்ட் நன்றாகயிருந்தது. ஆனால் அவ்வளவு கரெக்டாக நினைவில் இல்லாததால் எழுதவில்லை. ஓசை செல்லா தன்னுடைய கோவை “வலைபதிவுப் பட்டறை” பற்றி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது, பிரகாஷ் சிகரெட் குடிப்பீங்களா என்று கேட்க, நான் மாட்டேன் என்றும் ஆனால் கம்பெனி கொடுப்பேன் என்றும் சொல்லி நானும் அவரும் கிளம்பியது தான் தாமதம், படபடவென்று ஒரு பெரிய கும்பலே புகைபிடிக்க வந்து சேர்ந்தது.

கொஞ்ச நேரம் அவர்களுடன் ஜாலியாக அரட்டை அடித்துவிட்டு திரும்பவும் பதிவர் வட்டத்திற்குள் வந்து உட்கார்ந்ததற்கும் தருமி பேசத் தொடங்கியதற்கும் நேரம் சரியாகயிருந்தது. ஒரு திறமையான ஆசிரியரைப் போல முதலில் நல்லவைகளை(ப்ளாக்கர்களைப்) சொல்லிவிட்டு பிறகு என்ன செய்யவேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அவருடைய Think Tank பற்றிய கருத்துக்கு, பொன்ஸ், பிறகு இருவர் சந்தேகம் கேட்டார்கள் அவர் எதை Think Tank என்று சொல்ல வருகிறார் என்று. எனக்கு அவர் சொல்லவந்த கருத்து ஒரு மாதிரி புரிவது போல் இருந்தது. இந்தச் சமயத்தில் எல்லாம் பிரகாஷ், பாபா, ரோசா வசந்த, மற்றும் குழுவினர் எஸ்கெப் ஆகியிருந்தார்கள். அவர்கள் நான் பிறகு சந்திக்கவேயில்லை.

இப்படியாக தருமி பேசிக்கொண்டிருந்த பொழுது, ஓரளவிற்கு சீரியஸான டிஸ்கஷன்ஸ் போய்க்கொண்டிருந்தது, தமிழ்மணம், 40, அனானி பின்னூட்டங்கள், நல்ல கெட்ட பதிவுகள் பற்றிய பேச்சு சுவாரசியத்தைக் கொடுத்தது. ஓகை, இலவசமாக தமிழ் சாப்ட்வேர் தருவதை பற்றி பிரஸ்தாபிக்கத் தொடங்கியதும், கௌதம் அதை எப்படி இன்னும் நன்றாகச் செய்யலாம் என்பதைப் பற்றி பேசினார்கள். சிறிது நேரத்தில் குங்குமம், மக்கள் தொலைக்காட்சி ஆகியவை வலைபதிவர் சந்திப்பை இன்னொரு நிலைக்கு நகர்த்த புகைப்படம், ஒளிப்பதிவு போன்ற விஷயங்களில் இறங்கியது. பின்னர் குரூப் போட்டோவிற்கு போஸ் கொடுக்கத் தொடங்கினர் வலைப் பதிவர்கள்.

பின்னர் சின்ன சின்ன குழுக்களாகப் பிரிந்து அவரவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். நான் பேசக் கிடைத்த ஆள் கிருபா ஷங்கர், அவர் தான் .Netல் வேலை செய்வதாகச் சொன்னதும் நான் அவரிடம் J2EEல் வேலை செய்வதாகச் சொல்லி கொஞ்சம் நேரம் அதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். இடையில் புகுந்த பொன்ஸ் இடம் எங்கே நாங்கள் ஆரக்கிள் ஓப்பன் சோர்ஸ்டா இல்லையா என்று கேட்டுவிடுவோம் என்று பயந்து கொஞ்ச நேரத்தில் எஸ்கேப் ஆகிவிட்டார்.

பிறகு மா.சிவக்குமாரை சந்தித்து முன்பே தனிமடலில் பேசிக்கொண்டிருந்த, கல்லூரி இறுதியாண்டு ப்ராஜக்ட் விஷயமாகப் பேசிக்கொண்டிருந்தேன். அவரோ ஏக பிஸி, நானோ ரொம்ப சீரியஸாக பேசிக்கொண்டிருக்க இடையில் வந்த செல்லா சிவக்குமாரை தட்டிக்கொண்டு போய்விட்டார்.(KPN ஆபீஸ் சென்றார்கள் என்று நினைக்கிறேன் – பின்னர் நடு வழியில் அதாவது நானும் நண்பரும் நடேசன் பார்க்கை விட்டு வெளியேற எத்தனிக்க அவர்கள் உள்ளே வர அங்கே ஒரு ஐந்து நிமிடம் பேசிக்கொண்டிருந்தோம்.)பின்னர் வடுவூர் குமாரை சந்தித்துப் பேசினேன், ஆள் பூராவும் புன்னகையாகயிருக்கிறார்.

நண்பர் ஒருவர் நீங்கதானே அந்த “சார்… சார்…னு போட்டு ஒரு கதை எழுதினீங்க நல்லாயிருந்தது” என்று சொன்னார் பின்னர் நான் அது ரொம்ப பழைய கதையாச்சேன்னு கேட்க அதற்குப் பிறகு உங்கப் பதிவு படிப்பதில்லைன்னு சொல்லிட்டுப் போனார். 😦

பின்னர் தருமியிடம் கொடுக்க வேண்டியதைக் கொடுத்துவிட்டு, பாலபாரதியிடம் போய்வருவதாகச் சொல்லக் கிளம்பினேன். சொல்லக் சொல்லக் கேட்காமல் என் புகைப்படத்தை க்ளோசப்பில் எடுத்து வைத்திருக்கிறார் ;). பாவம். (அண்ணாச்சி கம்ப்யூட்டரில் போடும் பொழுது பார்த்துப் போடுங்கள். குழந்தைகள் பயந்திடப்போகுது.) நாமக்கல் சிபி வந்து ஒரு ஹாய் சொல்லி பேசிக்கொண்டிருந்தார். லக்கிலுக், வரவனையான், ஜெய் சங்கர் இவர்களுடன் பேசிக்கோண்டிருந்தேன். இடையில் நிறைய பதிவர்களுடன் பேசிக்கொண்டிருந்தாலும் யாருடனும் அவ்வளவு பிரகாசமான தொடர்பு இல்லாததால் பேச்சுக்கள் இடையில் தொங்கின…

மற்றபடிக்கு பதிவர்களைப் பற்றிய நல்லதொரு அறிமுகம் கிடைத்தது. நல்ல முறையில் ஆர்கனைஸ் செய்யப்பட்டு சிறப்பாக முடிவடைந்தது சந்திப்பு. இதே போல் பதிவர் சந்திப்புக்களை சில நாட்களோ வாரங்களோ இல்லை மாதங்களோ இடைவெளிவிட்டு தொடர்ச்சியாக நடத்த வேண்டும். பெரும்பாலும் இது போல நடக்கும் சந்திப்புக்களால் ஒருவருக்கொருவர் கிடைக்கும் பழக்கம், தமிழ் வலைப் பதிவுகளை இன்னொரு நிலைக்கு கொண்டு செல்ல உதவும். இந்தமுறை கொஞ்சம் டைட் ஷெட்யூலில் வந்ததால் நிறைய விஷயங்கள் பேச, பகிர்ந்து கொள்ள முடியாமல் போனது. இது ஆரம்பம் தானே என்று விட்டுவிட்டேன்…

பிறகு இன்னொரு முறை எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு பெங்களூருவைப் பார்க்கக் கிளம்பினேன்.(அந்தக் கதை இன்னொரு நாள்…)