என் பெயர் ராமசேஷன்

ஆரம்பத்தில் இருந்தே ஒரு விஷயத்தை நானாய்த் தேடிப்படிக்காமல், யாராவது நன்றாய் இருக்கிறது என்று சொன்னால் படிக்கத்தொடங்கும் வழக்கம் உண்டு ஆனால் அந்த அறிமுகம் எனக்கு முதல் புத்தகத்திற்குத்தான் வேண்டும். அதற்குப்பிறகு தேடித்தேடி படிக்கவேண்டியது என் பொறுப்பு. பொன்னியின் செல்வன் அறிமுகம் கிடைத்த பிறகு நான் அலை ஓசை படித்திருக்கிறேன். இதே போல் தான் பாலகுமாரன், எண்டமூரி வீரேந்திரநாத், சாண்டில்யன் என்று யாராவது ஒருவர் ஆத்மியின் பெயரையோ இல்லை நாவலின் பெயரையோ சொல்லவேண்டிய தேவையிருந்திருக்கிறது.

ஆனால் இந்தச் சமயத்தில் அப்படிப்பட்ட ஒன்று தேவைப்படாமல் நானாய்த் தேடிப்படிக்கத் தொடங்கியிருந்தேன். தமிழ்சிஃபியில் காலச்சுவட்டில் சாணக்கியாவின் ஆண்களின் படித்துறை படிக்கத்தொடங்கி அப்படியே, என் வீட்டின் வரைபடம், கனவுப்புத்தகம் என்று நீளத்தொடங்கியது அப்படி ஆரம்பித்தது தான் ரமேஷ் – பிரேம் புத்தகங்களும் ஆனால் டிசேவின் பதிவில் தான் ரமேஷ் பிரேமின் அறிமுகம் கிடைத்தது.

இப்படிப்பட்ட அறிமுகமாய் இல்லாமல், எங்கோ மனதில் ஒட்டிக்கொண்டதைப் போல் என் பெயர் ராமசேஷன் நல்ல புத்தகம் என்ற எண்ணம் இருந்தது. புத்தகம் வாங்கி அது ஒரு மூளையில் தூங்கிக் கொண்டிருந்தது. ஒரு பதினெட்டு மணிநேர வேளைநாளுக்குப் பின் தூக்கம் வராமல், கிளாஸ் நேம்களும் மெத்தேட் நேம்களும் லாஜிக்கல் அனலடிக்கள் லூப்களும் பிஸினஸ் லாஜிக்கும் தூக்கத்திற்குப் பிறகும் துரத்திய நாளொன்றில் இரவு இரண்டு மணிக்கு மேல் படிக்கத் தொடங்கினேன் என் பெயர் ராமசேஷனை.

கங்கையாற்றின் வேகத்தை நேரில் பார்த்திருக்கிறேன் ஹரித்துவார் ரிஷிகேஸில், அலட்சியமாக நின்றவர்களை அப்படியே இழுத்துச் செல்லும் வேகமும், லாவகமும் கங்கைக்கு உண்டு, அப்படிப்பட்ட கங்கை தான் நினைவில் வந்தது என் பெயர் ராமசேஷனை படிக்கத் தொடங்கிய பொழுது. உபபாண்டவம், நெடுங்குருதி என என்னை நாவலுக்குள் இழுத்துப்போகாமல், நாவலுக்குள் என்னைத் திணித்து படித்து வந்த பொழுதில் ராமசேஷன் தந்த அனுபவம் வித்தியாசமானது. வேகமாய் நாவலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டேன். ஆனால் காலில் கட்டியிருந்த சங்கலியாய் சாப்ட்வேர் துறை தந்த நாளொன்றின் அலுப்பு நான்கைந்து பக்கங்களுக்குள் இழுத்து நிறுத்த தூங்கப்பண்ணியது.

பின்னர் அடுத்த நாள் இந்த அனுபவத்தை நண்பரொருவரிடம் சாட்டில் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் அசாதாரணமாய் ‘எனக்குத் தெரியும் ஓய் உங்கள மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் பிடிக்கும் அந்தப் புத்தகம்’ னு சொல்ல, இன்னும் அதிக ஆர்வக்கோளாராகி அடுத்த நாள் படித்து முடித்திருந்தேன். புது அனுபவம், பொன்னியின் செல்வன் படித்து முடித்து பத்து வருடங்கள் ஆகியிருக்கும் அதே போன்றதொரு உணர்வு.

நாவலில் ராமசேஷன் அறிமுகப்படுத்துவதாய், பங்கஜம் மாமி, மூர்த்தி, ராவ் அவன் சகோதரி மாலா, அவங்க அம்மா மிஸஸ் ராவ், ராமசேஷனின் அப்பா, அம்மா, அத்தை, பெரியப்பா, பெரியம்மா, பிரேமா என ஒவ்வொருவரும் நமக்கே தெரியாமல் நாவலுக்குள் நுழைந்துவிடுகிறார்கள்.

உயிர்மை கொடுத்த பின்பக்க அறிமுகம் போல, ஒரு நகர்ப்புற, மத்தியதர இளைஞன், ராமசேஷன் கண்களின் வழியே நவீன வாழ்க்கையின் பாசாங்குகளும் முகமூடிகளும் வேட்கைகளும் சித்திரக்கப்படுகிறது. சுயநிரூபணத்திற்கான பரிதவிப்பும் அடையாளத் தேடலும் கொண்ட இளமையின் வண்ணமும் உங்கள் மீதும் பூசப்படுகிறது.

ஆமாம், ராமசேஷன். கர்நாடகமான ஒரு பெயர். எனக்கு என் அப்பா மீது கோபமேற்படுத்திய பல காரணங்களில் இந்தப் பெயரும் ஒன்று.”

இப்படி ஆரம்பிக்கும் இந்த நாவலில் அறிமுகப்படுத்தும் நபர்களை, சூழ்நிலைகளை நீங்கள் பெரும்பாலும் நேரில் பார்த்திருப்பீர்கள், அவர்களை நீங்கள் ஆதவனின் கண்கொண்டு இந்த நாவலில் பார்க்கலாம். எல்லா விஷயங்களையும் பற்றியும் ஆதவனின் வார்த்தைக் கோர்வைகள் ஆச்சர்யமூட்டுபவையாகவும் ஒரு பிரச்சனையை ராமசேஷன் மூலமாய் ஆதவன் அணுகும் முஅற யோசிக்கவைப்பதாயும் இருக்கிறது. பாட்டியும் அத்தையும் அப்பாவின் மீதான தங்கள் ஆதிக்கத்தை அம்மாவை விடவும் அதிகப்படுத்தியது அதில் பாட்டியின் செயல்கள். பாட்டியின் இறப்பிற்குப் பிறகு ஆதிக்கப்போட்டியில் அத்தையை அம்மா வென்றது என்பன போன்றவற்றிலும் அதற்குப்பிறகு அத்தை எப்படி தன் நிலையை காப்பாற்றிக்கொண்டால் போன்றவற்றை நாவலில் முதல் மூன்று பக்கங்களிலிலேயே விளக்கிவிடுகிறார்.

அவருடைய பாத்திர அறிமுகங்கள் கூட அப்படித்தான். அவர் ராமசேஷனை அறிமுகப்படுத்தியதை படித்தீர்கள்.

அப்பா ஒரு சம்பிரதாயப் பிச்சு. கோழை…” சொல்லவும் வேண்டுமா இது அப்பாவைப் பற்றியது

டே டு டே குடும்பச் சிக்கல்களிலே, மத சம்மந்தமான(பண்டிகை புனஸ்காரங்கள் இத்தியாதி, சகுனம், நாள், நட்சத்திரம்) கடவுள் சம்மந்தமான(என்னிக்குக் கோவிலுக்குப் போகணும், எந்தக் கோவிலுக்குப் போகணும்?) என்பதிலெல்லாம் அவளுடையதுதான் கடைசி வார்த்தை. இது டிபிகள் பொம்மனாட்டித் தந்திரம். கடவுளின் பிரதநிதியாகத் தன்னை ப்ரொஜக்ட் பண்ணிப் பண்ணி…” இது பாட்டியைப் பற்றிய அறிமுகம்.

அப்பா அத்தையுடன் ஷோடௌனுக்குத் தயாராக இல்லாததால், ஸெக்ஸ் தேவை காரணமாக அம்மாவின் முன்பு தான் மண்டியிட வேண்டி வந்தது அப்பாவுக்கு ஒரு குற்ற உணர்ச்சியை அளித்தது. இந்த குற்ற உணர்ச்சியை அத்தை எக்ஸ்ப்ளாய்ட் பண்ணினாள்…” இது அத்தையைப் பற்றியது.

அம்மாவுக்குத் தான் ஒரு இஞ்சினியரின் அம்மாவாக இருக்க வேண்டுமென்ற ஆசை பிறந்தது. அவளுடைய பெரியக்காள் பிள்ளை ஏற்கனவே இஞ்சினியராக இருந்தான்… அவள் பார்த்த திரைப்படங்களைப் பார்த்துக் கொண்டு, அவளுடன் கோவில்கள், அபிராமி அந்தாதி வகுப்புக்கள், பொன்விழாக் கொண்டாடும் வெற்றி நாடகங்கள் முதலியவற்றைப் பகிரந்து கொண்ட மாமிகள் பலரின் பிள்ளைகள் இஞ்சினியரிங் படித்தார்கள்…” இது அம்மாவைப் பற்றி

மூர்த்தி ஒரு நாய், அல்லது விசுவாசமுள்ள (பழங்காலத்து) பண்ணையாளைத்தான் எனக்கு நினைவூட்டினான்…” இது மூர்த்திக்கானது.

…நான் மிகச் சிரமப்பட்டு அவளுடைய முகத்துக்குக் கீழே பார்வையை இறக்காமலிருக்க முயன்று, தோல்வியுற்று, பார்வையால் கீழே மினி டைவ் அடித்தவாறு இருந்தேன்.

அவளுடைய மார்பகங்கள் மாக்ஸியில் ஏற்படுத்தியிருந்த மேடு… ஊப்ஸ்.

அதுவரை கதைகளில் ‘என்னவோ செய்தது, என்னவோ செய்தது’ என்று அர்த்தம் தெரியாமலேயே – இளமையின் அறியாமையில் – படித்திருந்த எனக்கு. அப்போதுதான் திடீரென்று அந்தப் பதச் சேர்க்கையின் அர்த்தம் புரிந்தது…”

இது மாலாவைப் பற்றிய ஒன்று.

…ராவின் அம்மா, ஒரு குழந்தையின் அபிநயத்தை அனுதாபத்துடன் பார்த்து ஷொட்டு கொடுப்பது போன்ற பாவாத்துடன் என் மீது ஒரு புன்னகைத் துணுக்கை கிள்ளி எறிந்தாள் …எனக்கு அந்தப் புடவை இன்னும் நினைவிருக்கிறது. ராவின் அம்மா என்னுடைய விசாரணையின் போது கட்டிக் கொண்டிருந்த புடவை… அவள் ஒரு முட்டாளில்லை என் போன்றவர்களை உள்ளும் புறமுமாக அவள் அறிவாள். சாலையில் போகும் பொழுது வழியில் கிடக்கிற தகர டப்பாவை வெறுமனே ஒரு உதைவிட்டுக் கொண்டு போகிறவர்கள் நாங்கள்…

பிரேமா மாலாவைப் போல வெளுப்பு இல்லை, கறுப்புதான். ஆனால் அட்டைக் கறுப்பில்லை. மாலாவை விட இவளுக்கு உயரம் குறைச்சல், முன்புற பின்புற மேடுகள் குறைச்சல், தலைமயிர் குறைச்சல், குரலும் மென்மையாக இல்லாமல் கரகரப்பாக இருக்கும்…” இது பிரேமாவைப் பற்றியது.

இப்படி ஆரம்பமாகும் நாவலில் கதையென்ற ஒன்றை பிரமாதமாக சொல்லமுடியாது, ஆனால் அதற்கான அவசியமும் இருப்பதாகத் தெரியவில்லை. தேவைப்பட்ட இடங்களில் சம்பவங்களைக் கோர்த்து நாவலை நகர்த்திவிடுகிறார் ஆசிரியர். ஆனால் எல்லா இடங்களிலும் நவீன வாழ்க்கையின் பாசாங்குகளை பளிரென்று வெளிப்படுத்துகிறார்.

மாலாவுடன் நீளும் ராமசேஷனின் பழக்கம் அவர்களுக்குள் உடல் சம்மந்தமான பழக்கத்தை ஏற்படுத்துவிடுவதையும் அந்தப் பழக்கத்தில் இருக்கும் சமயத்தில் அவர்கள் மட்டும்தான் நிஜமென்றும் மற்றதெல்லாம் கற்பனையாகவும் பொய்களாகவும் தோன்றுவதையும், ராமசேஷன் தான் ஒரு அல்சேஷனாக மாறிவிட்டதாக நினைப்பது பின்னர் தங்கள் உறவு ஒரு பாதுகாப்பான உறவாயில்லாமலிருப்பதைப் பற்றி கவலைப்படுபவது, ஆனால் நிரோத் வாங்க பயப்படுபது, தன் தந்தை உறை உபயோகித்திருப்பாரா என்று யோசிப்பது என்று பாசாங்குகள் தோலுரிக்கப்படுகின்றன.

மிஸஸ் ராவ், மற்றும் இயக்குநருக்கிடையேயான உறவு, இராமசேஷன் பிரேமாவிற்கிடையேயான உறவு, ராமசேஷனினன் பெரியப்பா பெரியாம்மாவின் உறவு, ராமசேஷன் பங்கஜம் மாமிக்கிடையேயான உறவு, பங்கஜம் மாமி மற்றும் அவருடைய கணவருக்கிடையேயான உறவு என அனைத்து பத்தாம் பசலித்தனங்களும் உடைக்கப்பட்டிருக்கின்றன, ஆதவனின் எழுத்துக்களின் வழியாக. புத்திசாலித்தனமான அவருடைய எழுதும் திறன், இரண்டு வரிகளுக்கிடையில் தொனிக்கும் நகைச்சுவையுடன் வெளிப்படுகிறது. இந்த நகைச்சுவை உணர்வுதான் நாவலை நாம் படிக்கும் பொழுது சட்டென்று உணர்வது ஆனால் சப்டைலாக பாசாங்குகள், முகமூடிகள் உடைக்கப்படுகின்றன, சில சாம்பிள்கள்.

…ஸீட்டின் கைப்பிடி மேலிருந்த அவள் கைமீது படுகிறாற் போல என் கையை வைத்துக் கொண்டேன்.

அவள் எதுவும் நடக்காதது போலத் திரையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

(அ) அவளுக்கு ஆட்சேபணையில்லாமல் இருக்கலாம். (ஆ) அவளுக்குப் பிடிக்கவில்லை, ஆனால் உடனே கையை விலக்கி என்னைப் புண்படுத்த வேண்டாமென்று கையை அப்படியே வைத்துக் கொண்டிருக்கிறாள். (இ) ஒருவேளை தற்செயலாக என் கை அந்த நிலையில் இருப்பதாக நினைத்து என் அடுத்த இயக்கத்திற்காகக் காத்திருக்கிறாள். (ஈ) கை தொடப்படுவது அவளுக்குப் பெரிய விஷயமேயில்லை. நான் வேறு எதையாவது தொடவேண்டும், அல்லது பேசமாலிருக்க வேண்டும்…”

…அவள் தைலத்தை என் மார்பில் தடவ, நான் அந்த ஸ்பரிச இன்பத்தில் லயித்துப்போகத் தொடங்கினேன். அவசரமாக ஒரு கணக்குப் போட்டேன். இரண்டும் இரண்டும் நாலு என்ற கணக்கு.

சட்டென்று அவள் மார்பின் மீது சாய்ந்தேன். அவள் முதுகைச் சுற்றிக் கைகளைக் கோர்த்து அணைத்துக் கொண்டேன். அவள் என்னை ஊக்குவிப்பதுபோல, என் முதுகில் தடவிக் கொடுத்தாள்.

நான் அவள் முதுகின் மேல் தடவியவாறு இருந்தேன். ரவிக்கைப் பித்தான்கள் மீது தடவினேன். சட்டென்று ஒரு பித்தானை அவிழ்த்து, அவள் முகபாவத்தைப் பார்ப்பதற்காக நிமிர்ந்தேன்.

ஆனால் அந்த நிமிரல் பூர்த்தியாவதற்குள் நான் படுக்கையில் தொப்பென்று, முகம் கீழாயிருக்க விழுந்தேன்.

இரண்டும் இரண்டும் எப்போதும் நாலாகி விடுவதில்லை.

‘யூ டெர்ட்டி ராஸ்கல்’…”

வெயிட் அ மினிட், வெயிட் அ மினிட், இந்த இரண்டு இடங்களை எடுத்து எழுதியதற்கு வெறுமனே என் அரிப்பு மட்டும் காரணம் கிடையாது.

ஒரு பெண், தான் பார்த்தே நான்கைந்து மணிநேரங்கள் தான் ஆகியிருக்கும் ஒருத்தியின் மீது லேசாக கைப்பட, அதற்கான ரியாக்ஷன்கள் எதுவும் வராததால் ராமசேஷனின் மனதில் ஓடும் வரிகள் நிச்சயமாய் ஒரு சராசரி ஆண் மகனை மிக அழகாக விவரிக்கிறது. சட்டென்று அந்தப் பெண்ணின் மீது எழும் தப்பெண்ணம் என அப்படியே ஒரு இளைஞனின் எண்ணத்தை எழுத்தில் பார்க்கிறேன். இந்த மாதிரி என்று சொல்ல முடியாவிட்டாலும் இதே போல பலமுறை சிந்தித்திருக்கிறேன். அதுவும் ஒரு செயலுக்கு காரணங்களை யோசித்திருக்கிறேன்.

அதைப் போலவே அடுத்த பத்தியும், ஒரு பணக்காரி, அவள் பணக்காரியாயிருப்பதாலேயே அவள் தப்பானவளாக இருப்பாள் என இரண்டும் இரண்டும் நான்கென்று கணக்குப்போடும் ராமசேஷன் கடைசியில் சொல்லும் எப்பொழுதும் இரண்டும் இரண்டும் நான்காகிவிடுவதில்லை. என்ற வரிகள் பிரமாதம் என்று சொல்வேன். கேட்கலாம் எப்படி இரண்டையும் இரண்டையும் எப்பொழுது கூட்டினாலும் நான்கு தானே என்று. அப்படிக் கேட்டால் அதற்குரிய விளக்கத்தை பிரகாஷிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.

என் வாழ்க்கையில் இதைப் போலவே(அந்த மேட்டரில் இல்லை) பல தடவைகள் இரண்டும் இரண்டும் நான்கென்று ரிஸ்க் எடுத்திருக்கிறேன். ஆனால் பட்டுத் தெரிந்து கொண்டேன், இரண்டும் இரண்டும் பெரும்பாலும் நாலாகயிருப்பதில்லை என்று, அதை அப்படியே எழுதிய ஆதவனின் எழுத்தின் மீது காதலே வந்துவிட்டது.

…உன்னுடன் தனியே இருக்கும்போது உன்னுடனாவது ஏதாவது பேசுவானா?’ என்று நான் பிரேமாவைக் கேட்டேன். ‘ஷ்யூர், வை நாட்?’ என்றாள் அவள். ‘நீ இருக்கும் போது அவனுக்கு கூச்சமாய்ப் போய்விடுகிறது. உன்னுடைய காஸனோவா பெர்ஸனாலிடி அவனுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்குகிறது… என்னிடம் நிறையப் பேசுவான், தனியே இருக்கும்போது.’

‘எதைப்பற்றி?’

‘சிலருடைய மூக்கு ஏன் மிக நீளமாக இருக்கிறது என்பது பற்றி…’”

இந்த உரையாடலில் மூக்கு எங்கிருந்து வருகிறது தெரிகிறதா? இதைப் போன்ற விஷயங்களை அவருடைய உரையாடல்களிலோ இல்லை விவரணைகளிலோ மிக அதிகமாய்ப் பார்க்கலாம்.

ஆனால் நான் ஆதவனின் இந்த நாவலில் விழுந்தது இதற்காகயில்லை. நிச்சயமாக.

…அவளுடைய கறுப்பு நிறமும் உயரக் குறைவாகவும் அவளுக்கு ஒரு இன்ஸெக்யூரிட்டியைக் கொடுத்தது. மரபுக்கெதிரான அவளுடைய பாய்ச்சலகளுக்கு இந்த இன்ஸெக்யூரிட்டிதான் காரணமென்பதைப் பின்னால் நான் புரிந்துகொண்டு அவள் மீது அனுதாபப்படக் கற்றுக் கொண்டேன். ஆனால் அந்த ஆரம்ப நாட்களில், ஏற்கனவே சொன்னது போல, சராசரித் தமிழ் பிராமணர்களின் மீது அவள் காட்டிய தீவிர வெறுப்பையும், பொழிந்த கனமான வசைமாரியையும் நான் புரிந்துகொள்ள முடியாமல் திணறினேன். பௌதிக ஆகிருதியையும் தோற்றத்தையுமே செலவாணியாகக் கொண்ட சராசரி பெண்வர்க்கம், சராசரி ஆண் வர்க்கம், இரண்டிடையேயும் தான் மிகக்குறைந்த மதிப்பெண்களே பெறுவோமென்பதை உணரந்து, தான் இவர்களால் ஒதுக்கப்படுமுன் இவர்களைத் தான் ஒதுக்கும் உபாயமாகவே (அதாவது ஒரு பழிப்புக் காட்டலாக) அவள் தன் இன்டலெக்சுவல் திறன்களை ஆவேசமாக வலியுறுத்தவும்…

இது அவரால் நாவலுக்காகப் படைக்கப்பட்ட பெண், கறுப்பு நிறமாயும் உயரக் குறைவாயும் படைத்து, அதன் மூலம் நிச்சயமாக அந்த வகையாக உண்மையிலேயே இருக்கும் பெண்களின் மனநிலையை படம்பிடித்திருக்கிறார்.(என்னைப் பொறுத்தவரை) வேண்டுமானால் பாலினம் வராதென்றால் என்னைப் பற்றி நான் நினைத்துக் கொண்டிருக்கும் அதே விமர்சனங்கள். எல்லா விஷயங்களைப் பற்றியும் தீவிரமான மறுபரீசீலனைக்கு உட்படுத்துவதைப் பற்றி நான் இந்தச் சமயத்தில் பயப்படுவதில்லை, ஜாதி, மதம், இட ஒதுக்கீடு, காதல், கல்யாணம், மனைவி, பெண்ணீயம், ஆணீயம்,கடவுள் மறுப்பு ஆதரிப்பு என என் மறு பரிசீலனைகள் எதற்கும் தயங்குவதில்லை. உண்மை என மனம் நம்புவதை மனதோடே வைத்துக் கொண்டிருக்கிறேன். வெளியில் சொல்வதில்லை அவ்வளவே. முன்பே சொன்னது போல், மிகச் சின்ன வயதில் ஆஸ்திரேலியா டீம் பிடித்துப் போனதிற்கான சாத்தியங்களைக் கூட பொய்கள் கலப்பில்லாமல் யோசித்து உண்மையை கண்டறிய முடிந்திருக்கிறது என்னால். ஆனால் வெளிப்படுத்துவது தேவையில்லையென்றே இன்னும் நினைக்கிறேன்.

ஆதவன் அவர் அப்படி மறுபரிசீலனை செய்ததை நாவலாக எழுதியிருக்கிறார். இந்த நாவலைப் பற்றி எழுதச் சொன்னால் இதைப் போல இன்னொரு நாவல் தான் என்னால் எழுத முடியும். ரிவ்யூ எழுவதற்காக குறிப்பெடுத்த விஷயங்களில் 10% கூட தாண்டவில்லை. பக்கம் 5 யைத் தாண்டிவிட்டது(மைக்ரோசாப்ட் வேர்டில்). இந்த நாவல் படித்து முடித்ததும் நான் ஆதவனின் விசிறி ஆகவிட்டது உண்மை, தொடர்ந்து காகித மலர்கள், இரவிற்கு முன்னால் வருவது மாலை(குறுநாவல்கள்), ஆதவனின் சிறுகதைகள் என கண்ணில் பட்ட ஆதவனுடையவை அனைத்தையும் வாங்கி படித்து முடித்தாகிவிட்டதில் இருந்து நான் புரிந்து கொண்டேன். சிறுகதை, நாவல்கள், குறுநாவல்கள் என ஆதவன் எழுதியது இவ்வளவே என நினைக்கிறேன். இந்த வகையறாக்களில் ஆதவன் எழுதிய எதையாவது மிஸ் பண்ணியிருந்தால் சொல்லவும்.

புலிநகக் கொன்றை

புலிநகக் கொன்றை எனக்கு அறிமுகமானது மரத்தடியில். சாதாரணமாகவே அந்தக் காலக்கட்டத்தில் கிடைத்ததையெல்லாம் படித்துக்கொண்டிருந்தேன். சூழ்நிலை அப்படி, கேன்பேவில் பெஞ்சில் இருந்த காலக்கட்டங்கள் அவை. அப்படிப்பட்ட ஒரு நாளில் அறிமுகம் ஆனது தான் புலிநகக் கொன்றை. மரத்தடி மக்கள் பெரும்பாலானோருக்கு மிகவும் பிடித்தப் புத்தகம். இன்னும் சிலர் தாங்கள் படித்ததிலேயே மிகவும் நல்ல புத்தகம் என்றெல்லாம் எழுதி ஓவர் ஹைப் கிடைத்திருந்த புத்தகம். ஆனால் கைகளில் அந்தப் புத்தகத்தைப் பார்க்கும் வாய்ப்பு சமீபத்தில் தான் கிடைத்தது.

Tiger-claw tree என்று ஆசிரியர் பி. ஏ. கிருஷ்ணன் ஆங்கிலத்தில் எழுதிய நாவலை, தமிழிலும் (அ) எழுதியிருக்கிறார் (ஆ) மொழிபெயர்த்திருக்கிறார். சில இல்லை பல சமயங்களில் விஷயங்களுக்கு கிடைக்கும் ஹைப்புகள் அதன் டிஸ் அட்வான்ட்டேஜ்களாக ஆகிவிடுவதுண்டு. ஆனால் என்னைப் பொறுத்தவரை, இந்தப் புத்தகத்திற்கு கிடைத்த ஹைப் சரியானதே.

“எக்கர் ஞாழல் இறங்கிணர்ப் படுசினைப்
புள்ளிறை கூருந் துறைவனை
உள்ளேன் தோழி படீ இயரென் கண்ணே…”

இந்தப் பாடல்களுக்குப் அர்த்தம் சொல்லறது வைரத்தைக் கரியாக்கற விவகாரம். இருந்தாலும் சொல்லறேன். தோழி கேள். நான் அவனைப் பற்றி நினைக்க மாட்டேன். யாரை? எவன் நாட்டிலன் மணலடர்ந்த கரையில் இருக்கும் புலிநகக்கொன்றை மரத்தின் – ஞாழல்னா புலி நகக் கொன்றை மரம் – புலிநகக் கொன்றை மரத்தின் தாழ்ந்த, பூத்திருக்கும் கிளைகளில் பறவைகள் ஆக்கிரமித்துக் கூச்சல் இட்டு அழிவு செய்து கொண்டிருக்கின்றனவோ அவனை. என் கண்களுக்குச் சிறிது தூக்கம் கிடைக்கட்டும்.

ஐங்குறுநூறு 142ம் பாடலில் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தான் தனக்கு இந்த நாவலுக்காந தலைப்பு கிடைத்ததாக ஆசிரியர் பி.ஏ. கிருஷ்ணன் சொல்கிறார். அந்தப் பாடலும் அதன் பொருளும் தான் மேலே காண்பது.

தென் தமிழ்நாட்டு, தென்கலை பிராமணர் வகையறாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைப் பற்றிய நான்கு தலைமுறைக் கதைகளை சொல்ல முயன்றிருக்கிறார் ஆசிரியர். முதல் பக்கம் கொடுத்திருக்கும் அட்டவணை ஆரம்பத்தில் பெரிதும் உதவுகிறது. இதனால் ஆசிரியரால் கதைக்குள் வேகமாக டைவ் பண்ண முடிகிறது என்பது உண்மையே. நூறு, நூற்று இருபது ஆண்டு கதைக்குள் நிறைய விஷயங்களை தொட்டுச் சென்றிருக்கிறார் ஆசிரியர், அவருடைய எழுத்தில் தான் வைக்கும் விஷயங்கள் பிரச்சனையை ஏற்படுத்திவிடக்கூடாதே என்ற கவனம் தெளிவாகத் தெரிகிறது.

ஏனென்றால் தமிழ்நாட்டின் பிரச்சனைகளை இன்றும் ஏற்படுத்திவிடக்கூடய விஷயங்கள் அவை, கட்டபொம்மு, மருது பாண்டியர், சிதம்பரம் பிள்ளை, திலகர், வாஞ்சிநாதன், வவேசு ஐயர், சுப்பிரமணிய பாரதி, இராஜாஜி, பெரியார், எம்ஜிஆர், எம் ஆர் ராதா என தொட்டால் பற்றிக்கொள்ளக் கூடிய ஆட்கள் நாவலெங்கும் பரவியிருக்கிறார்கள் சில சமயங்களில் கதாப்பாத்திரங்களாக, சில சமயங்களில் விவரணைகளாக, சில சமயங்களில் உரையாடல்களாக.

கதையின் ஆரம்பக்கட்டங்களில் முற்றிலும் ஏற்படாத ஒரு தொய்வு என்னைப் பொறுத்தவரை, கம்யூனிஸம் மார்க்ஸிஸம் பற்றிய பேச்சு வரும் பொழுது எழுகிறது. இது ஆசிரியரின் தவறில்லை என்னுடையது. என்னுடைய தலைமுறை ஆட்களுக்கு கம்யூனிஸமோ மார்க்ஸ்ஸிஸமோ அறிமுகப்படுத்தப்படவில்லை. ஆனால் அந்த யிசங்கள் பிரபலமாகயிருந்த காலத்தில் நடக்கும் கதையில் அவற்றைச் சொல்லாமல் விட்டுவிடமுடியாது தான். அதைப் போலவே மிகச் சுலபமாக விளங்கிக்கொள்ளும் அளவிற்கு சுலபமான கான்ஸெப்டுகளும் கிடையாது அவர்கள்.

ஆனால் எது எப்படியிருந்தாலும், பிரச்சனைகளுக்கான தீர்வு இதுதான் என்று ஒரு தீர்ப்பை முன்வைக்கவேயில்லை புலிநகக் கொன்றை, இந்த விஷயத்தில் மிகச் சிறப்பாகவே வந்திருக்கிறது. கடவுள் மறுப்பு, கடவுள் ஆதரிப்பு, காங்கிரஸ், திமுக இப்படி பல விஷயங்களை ஆசிரியர் அவர் பார்த்தது போலவே சொல்ல, நாமும் கேட்டுக்கொண்டதைப் போல பயணிக்க முடிகிறது நாவலில். பல சமயங்களில் ஒரு முடிவை சொல்லிவிடும்பொழுது அது நமக்கு பிடிக்காமல் போகும் பொழது நாம் நாவலின் சுவாரஸியத்தன்மையை இழக்கிறோம். அது புலிநகக் கொன்றையில் கிடையாது.

கதையின் சாராம்சம் இதுதான் என இரா. முருகன் காபி கிளப்பில் எழுதியது நீங்கள் கீழே காண்பது.

“…பொன்னா பாட்டி சாகக் கிடக்கிறாள். எந்தப் பொன்னாப் பாட்டி? நாங்குநேரி ஜீயரின் மடைப்பள்ளியில் புளியோதரைப் புலியாகக் கரண்டி பிடித்தவரின் ஒரே பெண். லேவாதேவி கிருஷ்ண ஐயங்காரின் ஒரே மகன் ராமனுக்குப் பெண்டாட்டியானவள்.

போஜனப் பிரியனான ராமன் சாப்பிட்ட நேரம் போகச் சற்றே பொன்னாவுடன் படுத்து எழ, நம்மாழ்வார், பட்சிராஜன் (பட்சி), ஆண்டாள் என்று மூன்று குழந்தைகள். அப்புறம் ஒரேயடியாகப் படுத்துத் திருநாடு அடைந்து விடுகிறார் அவர்.

நம்மாழ்வாருக்கு அப்போது புதிதாக எழுந்த தேசிய அலையில் கலக்க – வ.உ.சி, பாரதியோடு, காங்கிரஸ் தீவிரவாதிகளோடு செயல்பட விருப்பம். செயல்படுகிறான். கல்யாணம் ஆகி, மனைவி மது என்ற மதுரகவியைப் பிள்ளையாகப் பெற்றுக் கொடுத்து விட்டு உயிரை விடுகிறாள். தேசபக்தியும் வாழ்க்கையும் அலுத்துப்போய் நம்மாழ்வார் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார்.

அறுபது வருடம் கழித்து நம்மாழ்வார் திரும்பி வரும்போது அம்மா பொன்னா இன்னும் உயிருடன் – உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கிறாள். தம்பி பட்சி ஹோம்ரூல் இயக்கத்தில் ஈடுபட்டு வயதாகி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் பெரிய வழக்கறிஞர். தங்கை ஆண்டாள் கன்னி கழியாமலேயே வாழ்க்கைப்பட்டு, அதேபோதில் கணவனைப் பறிகொடுத்து, இளமையில் விதவையாகி, சித்தம் தடுமாறி மனநோயாளியாக இறந்து போயிருக்கிறாள்.

பட்சியின் ஒரே மகன் திருமலை. அவனுடைய மகன் கண்ணன் நெல்லையில் கல்லூரி விரிவுரையாளன்.

திருநெல்வேலியில் பேராசிரியரை போலீஸ் காவலில் வைத்த வழக்கில் (கதை சிப்பாய்க் கலக காலத்தில் தொடங்கி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வரை நீள்கிறது) மாணவர் போராட்டத்தின்போது கண்ணன் வேலையை இழக்கிறான்.

நம்மாழ்வாரின் பிள்ளை மது பொதுவுடைமை இயக்கத்தில் ஈடுபட்டு இறக்கிறான். அவனுடைய மகன் நம்பி டாக்டராக, பெரிய பாட்டி பொன்னாவைக் கவனித்துக் கொள்வதோடு, தன் மனைவி ரோசாவோடு கம்யூனிஸ்ட்டாகவும் இருக்கிறான்.

நம்மாழ்வார் ஜோஷிமடத்திலிருந்து தம்பி பட்சிக்கு எழுதிய கடிதம் கிடைத்து நம்பி தான் அவரைச் சந்திக்கஅங்கே போகிறான்.

ஆனால் நம்மாழ்வார் திரும்ப வரும்போது நம்பி நக்சலைட் என்ற சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலில்வைக்கப்பட்டு, விடுதலையான பிறகு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறக்கிறான்.

படுத்த படுக்கையாக இருக்கும் பொன்னா தன் பிள்ளை நம்மாழ்வாரை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. நம்மாழ்வார் ரோசாவுடனும் அவளுடைய கைக்குழந்தையோடும் நம்பியின் நினைவோடும் அவள் வீட்டிலேயே தங்கி விடுகிறார்.

கண்ணன் ஐ.ஏ.எஸ் தேர்வு பெற்று தில்லிக்குப் பயணமாவதில் கதை முடிகிறது…”

இதையெல்லாம் விட இந்தக் கதையை தெளிவாகச் சொல்லிவிடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை என்பதால் காப்பி பேஸ்ட். மற்றபடிக்கு இந்தக் கதையைத் தொடர்ந்து நடந்த ஜெயமோகனுக்கும் பிஏ கிருஷ்ணனுக்கும் ஆன உரையாடல் நன்றாகயிருக்கும், அது இங்கே

அப்புறம் இரா.மு எழுதிய முழு விமர்சனம் இங்கே கிடைக்கும். ஆனால் பிரச்சனை டிஸ்கியில் இருக்கு மாற்றிக்கொள்ளுங்கள் மகானுபாவர்களே.

நன்றி இரா.முருகன், ராயர் காப்பி கிளப்.

பெங்களூர் புத்தக கண்காட்சி – அள்ள அள்ளப் பணம் – ஜல்லி

 

நான் எழுதும் பதிவுகளை என்னைத்தவிர யாரும் ரொம்ப சீரியஸா எல்லாத்தையும் படிப்பாங்களான்னு எனக்கு எப்பவுமே ஒரு டவுட் உண்டு; ஏன்னா நான் அப்படி படிக்கும் பதிவுகளின் எண்ணிக்கையை வைத்தும். என் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் கவுன்டர் சொல்லும் உண்மைகளை வைத்தும் தான்.

“…பின்னர் சிவக்குமாரிடம் நீங்கள் பங்குவணிகத்தில் ஈடுபடுகிறீர்களா என்று கேட்டு பின்னர் அதைப் பற்றி வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். முகுந்த் நான் பங்குச்சந்தைப் பற்றி தெரிந்துகொள்ள சோம. வள்ளியப்பனின் “அள்ள அள்ளப் பணம்” நன்றாகயிருக்கும் என்றார். தான் முதலில் கொஞ்ச காலம் நேரடி பங்கு வர்த்தகத்தில் இருந்தாலும் இப்பொழுதெல்லாம் மியூட்சுவல் பண்ட் தான் என்று சொல்லி கொஞ்சம் பயப்படவைத்தார். நான் பருப்பு மாதிரி வாழ்க்கையில் எப்பவும் தான் ரிஸ்க் எடுத்துக் கொண்டேயிருக்கிறோமே இதிலும் எடுப்போம் என்று கூறினேன். மா. சிவக்குமார் தன்னுடைய பாயாசத்தை என்னிடம் கொடுத்ததற்கு என்னுடைய ரம்பம் தான் காரணம் என்று நான் நினைக்கவில்லை…”

என்று கோவை வலைபதிவர் சந்திப்பின் பின் எழுதி நான்கு மாதம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

அள்ள அள்ளப் பணத்தை கைகளில் பார்க்க இத்தனை நாட்கள் ஆனதற்கு நானொருவனே தனிப்பட்டமுறையில் காரணமாகயிருக்கமுடியும். பிறகு இரண்டு மாதங்களுக்கு முன்னர் சட்டென்று சனியனாய் முளைத்த இன்னொரு பிரச்சனை. பிரச்சனைகள் முடிந்து ஆராம்சேயாய் உட்கார்ந்த நேரம் பங்குச்சந்தை மீண்டும் இன்னொரு உச்சத்தை எட்டியிருந்தத்து 19,000 BSE.

என் கியூபிக்கில் அமர்ந்திருக்கும் மற்ற இரு நபர்களுமே பங்குச்சந்தையில் கொட்டை போட்டவர்கள் என்று சொல்லலாம் – ஒரு நபர் ஏறக்குறைய 5 லட்சங்களுக்கு இன்வெஸ்ட் செய்துவிட்டு எப்பொழுதும் ICICI Directன் பக்கத்தை திறந்து உட்கார்ந்திருப்பார்(10.30 – 3.30) பின்னர் அன்றைய நாளுக்கான Analysis நடக்கும் 3.30க்குப் பின்னர். இப்படி நாளொன்றுக்கு சரியான அளவிளான நேரத்தை பங்குவணிகத்தில் செலவிட்டால் மாதம் பிறந்தால் சம்பளம் தந்து தனக்கு மூன்றுவேளை சோறுபோடும் தன் முதலாளிக்காவது நேர்மையாக இருக்கிறாரார்களா என்று கொஞ்சம் சுயநேர்மையைக் கேள்வி கேட்கும் புண்ணியவான்களுக்கு(!!!) பதில் என்னிடம் இல்லை வேண்டுமானால் உண்மையில் எங்கள் முதலாளியிடம் இருக்கலாம். ஆனால் எங்கள் வேலையில் மீது திருப்தி இல்லாவிட்டால் மாதாமாதம் சம்பளமும் கொடுத்து வருடக்கடைசியில் போனஸும்/அப்ரைசலும் கொடுப்பது உண்மையிலேயே ஆச்சர்யமான விஷயம் தான். ஒருவேளை ‘கோடி’களில் புலங்குபவர்கள் முட்டாள்களாக இருப்பார்களோ! ம்ம்ம் இருக்கலாம் ஏனென்றால் அவர்கள் பதிவெழுதுவதில்லையே!

அப்படிப்பட்ட ஒரு நல்லநாளில் தான் நானும் ICICIல் Demat அக்கவுன்ட்டும் ட்ரேடிங் அக்கவுன்ட்டும் தேவைகளுக்காக ஒரு சேவிங் அக்கவுன்ட்டும்(Shaving இல்லை saving) திறந்தேன். அதற்கு நாட்கள் அதிகமானதாலும் மார்க்கெட் இன்வெஸ்ட் செய்யும் நிலையில் இருந்ததாலும் நண்பருக்கு 10,000 ரூபாய் அனுப்பி ஷேர் வாங்கச் சொல்லி என்னுடைய ட்ரேடிங் வாழ்க்கையைத் தொடங்கினேன். உண்மையில் ரிஸ்க் எடுப்பதில் எனக்கிருக்கும் இயல்பான விருப்பம் தான் என்னை இதில் இறங்கச் சொன்னாலும் சோம. வள்ளியப்பனின் அள்ள அள்ளப் பணம் I & II அதற்கான தைரியத்தை எனக்குக் கொடுத்தது என்று சொல்லலாம்.

உண்மையில் நான் என்ன விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினேனோ அதைத் தெளிவாக விளக்கியது அள்ள அள்ளப் பணம் புத்தகம். ஏற்கனவே ஆங்கிலத்தில் கட்டுரைகளாகவும் நண்பர்களுடன் இந்தி/ஆங்கிலத்தில் உரையாடல்களாகவும் என் கேள்விகளைத் தொடர்ந்து எழுப்பியிருந்தேன் என்பதால் என்னுடைய தேடல் எது என்று எனக்குச் சரியாகத் தெரிந்திருந்தது ஆனால் இப்படி புதிதாய் ஷேர் மார்கெட்டில் இன்வெஸ்ட் செய்யப்போகும் ஒருவர் எதிர்பார்ப்பது என்ன என்பது தெரிந்து எழுதப்பட்டிருப்பது அதிசயம் என்று தான் சொல்வேன் நான்.

ஓவராய் தியரியாகச் சொல்லி போரடிக்காமல் அதே சமயம் வெறும் ப்ராக்டிக்கல் அப்ரோச்சாகவும் இல்லாமல் இரண்டும் கலந்து எழுதப்பட்டிருப்பது இந்தப் புத்தகத்தின் வெற்றியின் முக்கிய காரணம். கூட வேலை செய்யும் டிரேடிங் புலிகளிடம் இப்படி ஒரு விஷயம் செய்யத் துணிந்திருக்கிறேன் என்று சொன்னதும் அப்படி ஒன்றும் ஆதரவு அலைகள் எதுவும் எழவில்லைதான். சொல்லப்போனால் மிரட்டியவர்கள் தான் அதிகம் – அதிலும் இன்வெஸ்ட் செய்யும் நண்பர்களே கூட! ஆச்சர்யமாயிருக்கிறதா – எனக்கு இல்லை.

சரிதான் என்று நினைத்தவனாய் நண்பர் ஒருவரின் ஆலோசனையின் படி Reliance Energy ஒரு ஷேர் 1475 க்கு என்று 10,000 ரூபாய்க்கு 6 ஷேர் வாங்கிப் போட்டேன் வெள்ளிக்கிழமை(19/10/2007). சாயங்காலம் 1350ல் நின்றுகொண்டிருந்தது. சோம.வள்ளியப்பன் புத்தகத்தில் சொல்லியிருப்பது போல் இரவு – பகல் லாஜிக் என்று நினைத்து நான் ஒன்றும் பெரிசாய் கவலைப்படவில்லை. என் மனதில் ஒரு கணக்கு இருந்தது 20% அதிகம் அவ்வளவே. அது இரண்டு நாளில் கிடைத்தாலும் சரி – ஒரு வருடத்தில் கிடைத்தாலும் சரி என்று. மார்கெட், நண்பர் சொன்னது போலவே அடுத்த ட்ரேடிங் நாள் முன்னோக்கி நகர நான் காத்திருந்தேன் அடுத்த செவ்வாய் கழிந்து புதன்(24/10/2007) வரை என் கணக்கு 20% க்கு மேல் வந்த நிலையில் 1670 ரூபாய்க்கு சட்டென்று அவரிடம் விற்கச் சொல்லிவிட்டேன். மூன்று நாட்களில் 20% லாபம் சொல்லப்போனால் 2000 ரூபாய். இதை இங்கே சொல்ல வந்ததன் காரணம் என்னவாய் இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

என் மாமா என்னிடம் ஷேர் மார்கெட்டைப் பற்றி படித்துக் கொண்டு விசாரித்துக் கொண்டோ இரு என்று சொன்ன பொழுது என் வயது 16 – 17 இருக்கும். நான் உண்மையில் பார்க்க ஆரம்பிக்கும் பொழுது வயது 24 சொல்லப்போனால் 7 ஆண்டுகள் அவர் சொன்னதைக் கேட்கவில்லை. ஆனால் என்னுடைய பைனான்சியல் பொஸிஷன் அப்படி என்று வைத்துக் கொண்டாலும் பைனான்ஸியலி நான் ஸ்ட்ராங்கான கடைசி மூன்று வருடங்களில் கூட நான் அதைச் செய்யவில்லை. இப்பொழுது தான் செய்யத் தொடங்கியிருக்கிறேன். இன்று நான் லாபம் சம்பாதித்ததைப் பற்றி பெருமை பேச இதைச் சொல்லவில்லை, பணம் தூங்கிக் கொண்டிருக்கும் நபர்களுக்கு ஒரு ஆலோசனையாய் டிரேடிங்க் செய்யச் சொல்லவும் இதை எழுதவில்லை. எனக்குத் தெரிந்து அள்ள அள்ளப் பணம் புத்தகத்தை வாங்கி ஒரு முறை புரட்டிப் பாருங்கள் அவ்வளவே.

ஏன் என்றால் ட்ரேடிங்க் செய்வதென்பது பணத்துடன் சம்மந்தப்பட்டது இன்னமும் பணத்தை லக்ஷ்மிகரமான விஷயமாக நினைத்து வேடிக்கைக்கான ஒன்றாக விளையாட்டாக பயன்படுத்த நிறைய பேருக்கு பயம் இருக்கும். என் அப்பாவிடம் இதைப்பற்றிச் சொன்னால் ஒரு மணி நேரம் வேறெதாவது விஷயத்தைச் சுத்திச் சுத்தி பேசி கடைசி ஐந்தாவது நிமிடத்தில் இங்கே வந்து நின்று கேட்பார் இது தேவையா என்று! ஆனால் நான் சொல்வதெல்லாம் ஒருமுறை படித்துப் பாருங்கள் என்பதுதான்.

———————————-

இந்த வருடம் பெங்களூர் புத்தகக் கண்காட்சியைப் பற்றிய பெரிய அளவிலான பதிவுகள் வெளிவரவில்லை காரணம் தெரியாது; பத்ரி ப்ராங்க்போர்ட் சென்றிருந்தது காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையாகவே நினைக்கிறேன். மனுஷ்யபுத்திரனும் வரலை(நினைக்கிறேன் – கடைசி நாள் வந்தாரா தெரியாது). நான் புத்தகங்களை அள்ளிக்கொண்டு வரவே நேரம் போதலை! மழை கொட்டியதால் ரிஸ்க் எடுக்க விருப்பமில்லாமல் காமெரா கொண்டு போகவில்லை. ஆனால் நிறைய நல்ல படங்களை மிஸ் செய்தேன். ராம் எனக்கு காலையில் ஃபோன் செய்து என்னை அழைத்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் போய்வந்துவிட்டார்(சொல்லப்போனால் நான் தான் அவரை மிஸ் பண்ணிட்டேன்னு சொல்லணும் – சனிக்கிழமை காலை தூக்கம் வராததால் காலையிலேயே கிளம்பி புத்தகக் கண்காட்சிக்குப் போய்ட்டு வந்துட்டேன்). நான் சாட்டிங்கில் அன்றிரவு, என்னை அழைத்துச் செல்லாததற்காக நல்லப்புள்ளை போல் திட்டினேன் வாங்கிக் கொண்டார்.

வழக்கம் போல் காலச்சுவடு – உயிர்மை – கிழக்கு தான் என் நோக்கமாகயிருந்தது. மூன்றிலும் இந்த முறை கொஞ்சம் அதிக புத்தகம் அள்ளினேன் என்று நினைக்கிறேன். ஆனால் வாரநாட்களில் மழை பெய்ததால் இரண்டாம் நாள் சனிக்கிழமையும் ஒன்பதாம் நாள் சனிக்கிழமை மட்டுமே புத்தக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். கிழக்கில் ரெகுலர் கஸ்டமர்னு சொல்லி 15% டிஸ்கவுண்ட் கொடுத்ததை இங்கே குறிப்பிட வேண்டும் என்னை மீண்டும் நினைவில் வைத்திருந்தவரின் பெயர் நினைவில் இல்லை; போன தடவை பெங்களூர் புத்தகச் சந்தைக்கு வந்திருந்தீங்க இல்லையா என்று கேட்டார்! என்னை சென்னை புத்தக சந்தையிலும் அவர் பார்த்திருக்க வாய்ப்புண்டு. போன தடவை போல் பிரச்சனை வரக்கூடாது என்று நினைத்தோ என்னமோ இந்த முறை கிழக்கே கிரடிட் கார்ட் ட்ரான்ஷாக்ஷன் செய்யும் வசதியுடன் வந்திருந்தார்கள். ஆனால் நான் பொய் ஒன்றும் சொல்லவில்லை என்னுடன் வந்திருந்த நண்பர் ஒருவரிடம் இந்த முறையும் அதே கி.மு – கி.பி மதன் புத்தகத்தைக் காண்பித்து அருமையான புத்தகம் சார் வாங்கிக்கோங்க என்று மற்றொரு விற்பனைப் பிரெதிநிதி சொன்னார். மதன் எதுவும் காசுகொடுத்து ஆள் செட்டப் பண்ணியிருக்காரா கிழக்கில் தெரியாது!

ஜெயமோகனின் காடு, விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல் ஏற்கனவே Anyindian.comன் ஷாப்பிங்க் கார்ட்டில் தூங்கிக் கொண்டிருந்தது. சரி இந்த முறை புத்தகக் கண்காட்சியில் ஆட்டையைப்(காசு கொடுத்துத்தாம்ப்பே) போட்டுடலாம்னு நினைச்சேன் ஆனால் ஜெமோவை யாருமே எடுத்துவரலை(சில புத்தகங்கள் உயிர்மையில் இருந்ததுன்னு நினைக்கிறேன் – அங்கே தான் நினைவின் நதியில் வாங்கினேன்). வேறென்ன செய்ய ஷாப்பிங் கார்ட் காலியாய்டுச்சு இப்ப ;-). காலச்சுவடில் பிரமீள் நினைவோடை – சுந்தர ராமசாமி வாங்கினேன், ஒரே இரவில் அதுவும், நினைவின் நதியில் – ஜெயமோகனும் தொடர்ச்சியாகப் படித்தேன் கொடுத்து வைச்சிருக்கணும் நான்; இப்படி ஒரு காம்பினேஷன் கெடச்சதுக்கு. விமர்சனம் வருது வருது.

பிறகு பெண்ணிய ஜல்லி விமர்சனம் செய்வதற்காக – இந்துமதி – லக்ஷ்மியினுடைய சில புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டேன்(அதுவும் காசுகொடுத்துத்தான்).

என்னுடன் வேலைசெய்யும் நண்பர் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நீயும் என்கூட வாயேன் கொஞ்சம் புஸ்தகம் வாங்கிட்டு வரலாம் என்று சொல்லிக்கொண்டேயிருந்தார் முதல் வாரத்தில் இருந்து முதல் வாரம் எஸ்கேப் ஆகியிருந்தேன். அடுத்தவாரம் மாட்டிக்கொண்டேன்(ஹாஹா) அவர் மனைவி மற்றும் மாமியார் உடன் புஸ்தகம் வாங்க வந்திருந்தார் – ஜாவாவில் Head First Java வாங்கிக்கச் சொல்லிவிட்டு தமிழில் தாயுமானவன் – பாலகுமாரன் மட்டும் சஜஸ்ட் பண்ணினேன்.(பாலகுமாரனின் பயணிகள் கவனிக்கவும் பற்றி ஒரு பதிவு வருது வருது வருது). அவர் விகடனில் நுழைந்து ‘இவன் தான் பாலா’ வாங்கினார் அங்கே அவரைத் திட்டினேன் அதை வாங்குவதற்காக. நான் வாலியின் கிருஷ்ண விஜயம் 1 & 2 வாங்கினேன்(வெறும் மணியம் செல்வம் ஓவியத்திற்காக).

நான் வாங்கிக் குமிப்பதைப் பார்த்த நண்பரின் மாமியார் “தம்பிக்கு இன்னும் கல்யாணம் ஆகலை போலிருக்கே” என்று கேட்டார் எனக்கு முதலில் உள்குத்து புரியலை. நானும் எப்பவும் சொல்றதைப் போல், “இல்லம்மா எனக்கு இன்னும் கல்யாண வயசாகலை, 24 தான் ரன்னிங்…” பாவமேன்னு சொன்னேன். அப்புறம் அந்தப்பக்கமா திரும்பி அவங்க பொண்ணுக்கிட்ட “பொண்டாட்டி வந்து தான் இதையெல்லாம் திருத்தணும்னு” சொல்ல எனக்கு குபீரென்று சிரிப்பு வந்தது. ஆனால் இதெல்லாம் நடந்த உண்மை பதிவு செய்து வைக்கிறேன்(ஹாஹா).

பின்னர் மழை கொட்டோ கொட்டென்று கொட்ட நண்பர் கால்டாக்ஸி அரேன்ஞ் செய்துகொண்டார். நான் கீர போண்டாவில் புத்தககுவியலுடன் அல்ஸூரை நோக்கிப் பயணித்தேன். என் கம்பெனி கொடுத்த மிக அருமையான ப்ரொடக்ட்டான(என் கம்பெனி ஒரு ப்ரொடக்ட் ஓரியண்ட்டட் கம்பெனி – ஆனால் Bag தயாரிப்பில் இல்லை) Bagன் மீதான நம்பிக்கையில் அடாத மழையிலும் கிளம்பினேன். சுமார் 10 கிலோமீட்டர் இருக்கணும்(கூடவும் இருக்கலாம்) ஒரு சொட்டு தண்ணி கூட பைக்குள்ள வரலை!!!. அருமையான பை ஒன்றைக் கொடுத்த எங்க கம்பெனிக்கு ஒரு ஓ!!!

நண்பர் ஒருவர் புத்தகக் கண்காட்சிக்கு போவதுவும் புத்தகம் வாங்வதும் அதைப் புகைப்படமாய் போடுவதும் விமர்சனம் எழுதுவதும் அறிவாளி என்று சொல்லிக்கொள்ளத்தான் ஆனால் அப்படியெல்லாம் செய்தால் அறிவாளி என்று அர்த்தம் இல்லை என்று சொன்னார். அவருக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம். கீழிருக்கும் புகைப்படங்களும் 😉


பெரிதாய் தெரிய புகைப்படத்தின் மேல் கிளிக்கவும்…

Mon, 29 Oct 2007 04:25:00 GMT

பிரமிள் – சுந்தர ராமசாமி – இலக்கியச் சண்டை

 

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிக்கொண்டிருக்கிறது- பிரமிள்

இதுதான் நான் படித்த முதல் பிரமிளின் கவிதையாகயிருக்கும். இந்தக் கவிதை ஏற்படுத்திய நெருக்கம் பிரமிளைத் தேடத் தொடங்கினேன். அந்தச் சமயம் பிகே சிவக்குமார் எழுதியிருந்த சுந்தர ராமசாமியின் சவால் கவிதை இடுகையும்,

“ஓய்ந்தேன் என மகிழாதே
உறக்கமல்ல தியானம்
பின்வாங்கல் அல்ல பதுங்கல்

எனது வீணையின் மீட்டலில்
கிழிபடக் காத்துக் கிடக்கின்றன
உனக்கு நரையேற்றும் காலங்கள்.”

என்ற கவிதை வரிகளும் “சுந்தர ராமசாமியின் சவால் என்ற இந்தக் கவிதை பிரமிளுக்குப் பதிலாக எழுதப்பட்டது என்று ந. முத்துசாமி சுந்தர ராமசாமி அஞ்சலிக் குறிப்பொன்றில் எழுதியிருந்தார். பிரமிளுக்கும் சுந்தர ராமசாமிக்குமான சண்டை தமிழ் இலக்கிய உலகில் பரிச்சயம் உடையவர் அறிந்தது.” பிகேஎஸ்ஸின் இந்த வரிகளும் என்னை வெகுவிரைவாக சுந்தர ராமசாமி – பிரமிள் – இலக்கிய சர்ச்சையை நோக்கி இழுத்தது.

இடையில் ஜெயமோகன், “…ஆயினும் சுந்தர ராமசாமி தமிழ் வரலாற்றின் சுடர்களில் ஒன்று. அவரது பிற்காலச் சிறு சரிவுகளில் பெரும்பாலானவை தன் குழந்தைகள்மீது தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட பெரும்பாசம் கொண்ட இந்தியத்தந்தை அவர் என்பதிலிருந்து முளைத்தவையே. ஒரு கோணத்தில் அவையும் அவரது மகத்துவத்தின் அடையாளங்களேயாகும்…” மரத்தடியில் எழுதியதைப் படித்திருந்தேன் – இதை ஜெ.மோ எழுதிய பொழுது சு.ரா உயிருடன் இருந்தாரா எனக்குத் தெரியாது ஆனால் நான் படிக்கும் பொழுது அவர் இல்லை. மேலும் ஜெ.மோ நினைவின் நதியில் என்ற சுந்தர ராமசாமியின் நினைவுகளைப் பற்றி எழுதியிருந்த சமயம். பெரிய உரையாடல் – கருத்துப் பரிமாற்றம் அந்தப் புத்தகத்தைப் பற்றி நடந்துகொண்டிருந்தது.

நான் கேள்விப்பட்டிருந்தது ஜெயமோகனுக்கும் சுராவிற்கு என்னமோ பிரச்சனை என்றும் பணம் பண்ணுவதற்காக உயிர்மையும் ஜெ.மோகனும் சு.ராவின் மரணத்தின் தாக்கம் குறைவதற்குள்ளேயே புத்தகத்தை வெளியிட்டுவிட்டதாகவும். மனுஷ்யபுத்திரனுக்கும் காலச்சுவட்டிற்கும் காண்டு என்று இதற்கு முன்னமே கூட படித்திருந்தேன். ஜெயமோகனின் “தமிழ் வரலாற்றின் சுடர்களில் ஒன்று” வரிகள் மற்றும் மேற்சொன்னவையெல்லாம் சேர்த்து என்னை இதைப்பற்றி நிறைய படிக்கவைத்தது.

இதற்குப்பின் நேரடியாக புத்தகத்தில் இருந்து படிக்காமல் இணைய நண்பர்கள் கிடைக்கும் தகவல்கள் என்று பிரமிள் பற்றியும் சுந்தர ராமசாமி பற்றியும் படித்துக்கொண்டுதான் இருந்தேன். சமீபத்தில் நடந்த பெங்களூர் புத்தகக் கண்காட்சியில் ஜெயமோகனின் நினைவின் நதியில் புத்தகமும் சுந்தர ராமசாமியின் “நினைவோடை – பிரமிள்” புத்தகமும் வாங்கினேன். இன்னும் நிறைய புத்தகங்கள் வாங்கியிருந்தாலும் முதலில் எடுத்தது பிரமிள் நினைவோடை – சுந்தர ராமசாமிதான்.

சொல்லப்போனால் இந்தப் பதிவை – நினைவோடை பிரமிள் – சுந்தர ராமசாமியின் புத்தக விமர்சனமாக பார்க்கலாம் தான்; பிரமீளைப் பற்றி நிறையப் படிக்காததாலும் புத்தகம் சுந்தர ராமசாமியினுடையது என்பதாலும் ஒருபக்கச் சார்பு வந்திருக்கலாம் என்றே நினைக்கிறேன்.

“பிரமிளை நேரில் பார்ப்பதற்கு முன்பே அவர் மீது சுந்தர ராமசாமிக்கு ஒரு கவர்ச்சியும் மானசீக உறவும் ஏற்பட்டிருந்தன. ஆனால் அவரைச் சந்தித்து நெருங்கிப் பழகிய இரண்டாண்டுகளிலேயே பிரமிளின் விசித்திரமான நடவடிக்கைகளாலும் பேச்சுகளாலும் அந்தக் கவர்ச்சியும் மானசீக உறவும் கருகி உதிர்ந்துவிட்டன. அந்த வலியையும், அதன் பின்னான பிரமிளின் வக்கிரமான தாக்குதல்களின்போது மௌனம் காத்ததற்கான காரணங்களையும் சமன்நிலை குலையாத நிதானத்துடன் இந்நூலில் சுந்தர ராமசாமி நினைவுகூர்ந்துள்ளார்.”

– புத்தகத்தின் பின்பக்க வரிகள்.

இந்தப் புத்தகத்தை முதலில் படித்து முடித்ததும் இப்படிப்பட்ட விஷயத்தையும் சுவாரசியமாக எழுத முடியுமா என்ற எண்ணம் தான் முதலில் எழுந்தது. இதைத் தொடர்ந்து படித்தனாலோ என்னமோ நினைவின் நதியில் பற்றி எனக்கிருந்த சில எண்ணங்கள் இல்லாமல் போய்விட்டது. ஒருவேளை இது இலக்கியச் சண்டையைப் பற்றியதாக இருந்ததாலும் இதைப் பற்றி வெகுகாலமாக நான் தனிப்பட்ட முறையில் தேடிக்கொண்டிருந்ததாலும் சுவாரசியமாகப் பட்டதா தெரியவில்லை. முன்னமே கூட ரமேஷ் – பிரேம்ன் பேச்சும் – மறுபேச்சுமில் வந்த உரையாடல்கள் எனக்கு சுவாரசியமாகத்தான் இருந்தது.

இந்தப் புத்தகத்தில் சுந்தர ராமசாமி, பிரமிளை சந்திப்பதற்கு முன்பு, அவரைச் சந்தித்து உரையாடி இரண்டு ஆண்டு ஒன்றாய் இருந்தது பின்னர் அவருடனான கருத்து வேறுபாட்டின் பொழுதான காலங்களைப் பற்றிப் பேசியிருக்கிறார்.

“சிவராமூ எழுத்துவில் எழுதியிருந்த எஸ்.பொவின் ‘தீ’ பற்றிய கடிதம் மனதில் நன்றாகப் பதிந்திருந்தது. அது ஒரு விளாசல் கடிதம். விளாசல்கள் மீது எனக்கும் நம்பிக்கும் அந்த வயதில் ரொம்பக் கவர்ச்சி இருந்தது எல்லாவற்றையும் நொறுக்கி எறியவேண்டும்! அந்த ஆவேசம் தான் மனதிற்குள். ஆவேசம் ஏற்படும்போது சந்தோஷமாக இருந்தாலும் பின்னால் தனியாக நான் யோசிக்கும்போது குறையாக இருந்தது. ‘தீ’ என்ற நாவலை நான் அப்போது படித்ததில்லை…” இப்படித்தான் சு.ரா. பிரமிளைப் பற்றிய தன்னுடைய நினைவோடையைத் துவங்குகிறார்.

பிரமிளுக்கு எண்கணிதத்தின் மீது நம்பிக்கையிருந்ததால் அவருடைய பெயர் அவ்வப்பொழுது மாறுபட்டுக் கொண்டே வந்திருக்கிறது. தருமூ அரூப் சிவராமூ என்பது தான் அவருடைய பெயர், அவர் இதை பெரும்பான்மையான சமயங்களில் வெவ்வேறான ஸ்பெல்லிங்கில் எழுதிக்கொண்டிருந்திருக்கிறார். ஏன் சட்டென்று எண் கணிதத்தில் நுழைந்தேன் என்றால் இதில் ஒரு பெரிய மேட்டர் உண்டு; வருகிறேன்.

சின்ன ப்ளாஷ்பேக் உடன், அதாவது பிரமிள் சுந்தர ராமசாமியுடன் தங்கியிருந்த பொழுதுகளில் அவருடைய பணத்தை சு.ராவிடம் கொடுத்து வைத்திருந்திருக்கிறார். அதைப் பற்றி சு.ராவின் வார்த்தைகளில்…

“…நான் கடைக் கணக்குப் புத்தகத்தில் அவருக்கு ஒரு பக்கத்தை ஒதுக்கி அதில் அந்தத் தொகையைக் குறித்து வைத்துக் கொண்டேன். ஒரு நாள் அந்தப் பேரேட்டைப் பார்க்க வேண்டும் என்று சொன்னார். கணக்குகளைச் சரிபார்க்க அல்ல. அன்று காலையில் அவர் தன் பெயரை மாற்றிக் கொண்டுவிட்ட்டிருக்கிறார். பழைய பெயரை மாற்றிவிட்டுப் புதிய பெயரில் கணக்கைப் பதிவு செய்து கொள்ளுங்கள் என்று சொன்னார். நான் ‘ஒரு தடவை என்றால் செய்யலாம். நீங்கள் வாரத்திற்கு ஒரு பெயரை வைத்துக் கொள்கிறீர்கள். நண்பர்களுக்கு எழுதும் போது, பிறக் பத்திரிகைகளுக்கு எழுதும்போது வேண்டுமானால் அந்தப் புதிய பெயரைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என்றேன். அதற்கு அவர், ‘அப்படியில்லை. எனக்கு ஒரு பெயரை மாற்றுவதானால் என் சம்மந்தப்பட்ட எல்லாப் பதிவேடுகளிலும் அதை மாற்றிவிட வேண்டும்’ என்று சொன்னார்…”

அதைப் பற்றி இன்னும் விளக்கமாகச் சொல்லும் முன்னால், பெயரிலியின் இந்தப் பதிவு நினைவில் வந்தது. இதுவும் சொல்லப்போனால் பிரமிளின் இந்த பெயர் மாற்றும் வழக்கத்தை நையாண்டி செய்து வந்ததுதான்.

ஏன் நான் பிரமிளின் இந்த எண்கணித ஆர்வத்தை முதலில் எடுத்தேன் என்றால், பிற்பாடு சுராவுக்கும் பிரமிளுக்கும் பிரச்சனை வந்த பிறகு பிரமிள் சுராவின் மீது வைத்த கடுமையான குற்றச்சாட்டில் ஒன்று சுரா தனக்கு பணம் பாக்கி தரவேண்டும் என்பது, இதில் எண்கணிதம் எங்கே வந்தது என்றால்; எண்கணித முறைப்படி சுராவிற்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் பெயர் மாற்றம் செய்து தந்ததற்காகத்தான் அந்தப் பணம் கொடுக்க வேண்டும் என்று பிரமிள் சொன்னதுதான் அது. சு.ராவின் வார்த்தைகளில்,

“…ஒரு நாள் எனக்கு ஒரு பெரிய பில் அனுப்பியிருந்தார். என்ன என்று பார்த்தால் எங்கள் குடும்பத்தில் இருந்த எல்லோருடைய பெயரையும் எண் கணித சாஸ்திரப்படி அவர் மாற்றிக் கொடுத்ததற்கான பில் அது. அவர் மாற்றிக் கொடுத்தது வாஸ்தவம் தான். அதற்கு பில் அனுப்பியிருந்தார். கமலாவுக்கு 900 ரூபாய். எனக்கு ஆயிரம். நான் அவளைவிட வயதில் மூத்தவன். உயரமாகவும் வேறு இருக்கிறேன். அதனால் எனக்கு நூறு ரூபாய் அதிகம். இப்படி வீட்டில் இருந்த எல்லோருக்கும் பெயரை மாற்றிய கணக்கில் ரூபாய் முப்பத்தைந்தாயிரம் நான் தரவேண்டும் என்று பில் அனுப்பியிருந்தார். நான் அதற்குப் பதில் போடவேயில்லை. எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது. நாங்கள் சொல்லி அவர் பார்க்கவில்லை என்பதெல்லாம் அவருக்கு நன்கு தெரியும் இருந்தாலும் அப்படி எழுதினார்…”

இதே போன்ற கடிதத்தை பிரமிள் சுராவையும் பிரமிளையும் தெரிந்த நண்பர்களுக்கு அனுப்பியிருந்திருக்கிறார். சுரா பணம் தரவேண்டிய பாக்கி இருக்கிறது என்று சொல்லி…

“…அவருடன் தங்கியிருந்தபோது அவர் உனக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறார் அதோடு அவருக்கு இந்த விஷயங்களில் நம்பிக்கை கிடையாது. அவரிடம் போய் இப்படிக் கேட்பது சரியல்ல என்று எனக்குத் தெரிந்து ஒருவர்கூட எழுதியிருக்கவில்லை. ஆனால் பணத்தைக் கொடுத்துவிடும்படி பல எனக்குக் கடிதம் போட்டார்கள். தமிழ்ச் சூழல் மோசமாக இருக்கிறது என்பதுதான் எனக்கு உறுதிப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக அந்தக் காரியத்தைச் செய்துவந்தார். என்னுடைய எல்லாக் கஷ்டங்களுக்கும் ராமசாமி பணம் தராததுதான் காரணம் என்று பார்க்கும் ஆட்களிடம் எல்லாம் சொன்னார். ஒரு நாள் கூட நானோ நம்பியோ அவருக்குச் செய்த நல்ல காரியங்களில் ஒன்றைக்கூட யாரிடமும் சொன்னது கிடையாது. நாங்கள் அவரைக் கவனித்துக்கொண்ட நாட்களில் சின்னச்சின்ன குறைகள், தவறுகள் நடந்திருக்கலாம். இல்லை என்று சொல்லவில்லை. முழுத்தவறும் அவர் பக்கம்தான் இருக்கிறது; எங்கள் பக்கம் தவறே இல்லை என்று சொல்ல வரவில்லை. ஆனால் ஒரு மனித உறவில் அடிப்படையாகச் சில விஷயங்கள் இருக்குமே அவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அவர் செய்துவந்தது குறித்து எனக்கு ஆச்சர்யமாகத்தான் இருந்தது…”

சுராவுக்கும் பிரமிளுக்குமான பிரச்சனை நடந்துகொண்டிருந்த பொழுது சுரா அதைப்பற்றி வாயையே திறக்கவில்லை. இன்றும் கூட மக்கள் சுராவின் மோனநிலை என்று நக்கல் செய்வதைப் பார்க்கமுடியும். அதற்கான விளக்கம் கூட இந்தப் புத்தகத்தில் அவர் சொல்லியிருக்கிறார்.

“…அவர் பலரைப் பற்றித் திட்டி நிறைய எழுதியிருக்கிறார். செல்லப்பா பற்றி, சாமிநாதன் பற்றி, ஞானக்கூத்தன் பற்றி, என்னைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். நானொரு முடிவு செய்திருந்தேன். அவர் என்ன சொன்னாலும் நாம் அதற்குப் பதில் எழுதக்கூடாது என்று. அதற்கான சக்தி எனக்குக் கிடையாது. நான் ஏதாவது பதில் எழுதினால் அதை வைத்துக்கொண்டு இன்னும் பல அஸ்திரங்களை அவர் பிரயோகிக்க ஆரம்பிப்பார். எனக்கு மட்டும் புரியும்படியாகச் சில விஷயங்களைச் செய்வார். அதன் பின் எல்லோருக்கும் புரியும்படியாக ஒன்றைச் செய்வார். ‘அவர் ரொம்பவும் அழுகியவர், அவரது குடும்பத்தில் இருப்பவர்கள் எல்லோருமே அப்படிப்பட்டவர்கள்’ என்று சொல்ல ஆரம்பிப்பார். எனவே நான் அவற்றைத் தவிர்க்க விரும்பினேன். அவர் இந்தியாவுக்கு வந்து தங்கி அவர் கடைசியில் மறையும் வரை அவரைப்பற்றி ஒரே ஒரு நெகட்டிவ்வான வாக்கியம்தான் நான் எழுதியிருக்கிறேன். யாத்ராவில் வெங்கட் சாமிநாதனைப் பற்றிச் சொல்லும் போது ஒரு இடத்தில் குழந்தைகளைக் கள்ளம் கபடமற்றவர்களாகச் சித்தரிப்பது பற்றி எழுதியிருந்தேன். அதில் குழந்தைகள் கள்ளம் கபடமற்றவர்கள் என்று சொல்வதானால் யாத்ரா இதழை எடிட் செய்யும் பொறுப்பை என் குழந்தை தங்குவிடம் தந்துவிடலாம் என்று சொல்லிவிட்டு சிவராமூவைப் பற்றி அதில் இணைத்துப் பேசியிருந்தேன். அந்த வாக்கியத்தைக் கிட்டத்தட்ட இருநூறு பேரிடமிடமாவது சிவராமூ சொல்லிக் காட்டியிருப்பார். ஏதோ நான் கத்தியால் குத்தியதுபோல் அதை ஆக்கிவிட்டார். அவர் சொல்வதைக் கேட்கும் பலருக்கும் நான் சொன்னது தவறு என்றுதான் பட்டிருக்கும். நான் அவர் சொன்ன விஷயங்களை வேறு யாரிடமும் பகிர்ந்துகொண்டதில்லை. ஜெயமோகன் என்னுடன் நெருக்கமாக இருந்த காலகட்டத்தில் அவருடன் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். அவ்வளவுதான்…”

நகுலனைப் பற்றியும் கொஞ்சம் விரிவாகப் பேசுகிறார் சு.ரா.

“…நகுலனுடைய படைப்புக்கள் சிவராமூவின் உலகத்தோடு நெருக்கமுடையவையாகத்தான் எனக்குத் தோன்றியது. அவர்கள் இருவருக்குமே பொதுவான பார்வை, அக்கறைகள் இருப்பது போலாத்தான் எனக்குப் படுகிறது. என்ன காரணத்தினாலோ சிவராமூவுக்கு நகுலனின் கவிதைகள் பேரிலும் சரி, கதைகளின் பேரிலும் சரி நல்ல அபிப்ராயம் இருந்திருக்கவேயில்லை. நகுலனுக்கு சிவராமூ பேரில் ஆர்வம் இருந்தது…”

நகுலன், பிரமிளைச் சந்திக்க விருப்பமுடன் இருந்ததாக சு.ரா. சொல்கிறார் அப்படி ஒரு சமயம் பிரமிள் சு.ராவின் வீட்டில் தங்கியிருந்த சமயம் நகுலன் பிரமிளைச் சந்திக்க விருப்பம் தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். சுராவும் பிரமிளின் பெயரில் உரிமையெடுத்து அவரை பார்க்க வரச்சொல்லி நகுலனுக்கு கடிதம் அனுப்ப பிரமிளுக்கு கோபம் வந்திருக்கிறது.

“…’நீங்கள் எப்படி என்னைக் கேட்காமல் எழுதிப் போடலாம்’ என்று கேட்டார் அவர் வந்து உங்களைப்ப் பார்த்துவிட்டுப் போகப்போகிறார் அவ்வளவுதானே என்று சொன்னேன். ‘அவரைப் பார்க்க வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்யவேண்டியது நான் தானே தவிர நீங்கள் அல்ல. நீங்கள் அவருக்கு ஒரு கடிதம் எழுதுங்கள், சிவராமூவுக்கு உங்களைப் பார்ப்பதில் விருப்பம் இல்லை என்று எழுதிப்போடுங்கள்’ என்றார் நான் சொன்னேன், ‘வேண்டாம். அவர் என்னைவிட வயதில் மூத்தவர். நான் உங்களைக் கேட்காமல் எழுதிப் போட்டது தவறுதான். அந்த உரிமையை எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்துத்தான் எழுதிப்போட்டுவிட்டேன். அவர் வரட்டும். நீங்கள் ஒரு அரைமணிநேரம்ம் இருந்து பேசிவிட்டுப் போங்கள். வரவேண்டாம் என்று சொல்லிக் கடிதம் எழுத என்னை வற்புறுத்தாதீர்கள் என்று சொன்னேன்’…

நகுலன் ரொம்பவும் பிரயாசைப்பட்டு, திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்திருக்கிறார். ஆனால் பிரமிள் அந்த முறை நகுலனைச் சந்திப்பதை தவிர்த்துவிட்டாராம். இதனால் நகுலனுக்கு சுராவின் பெயரில் சந்தேகம் இருந்திருக்கிறது. அவர்தான் ஏதோ விளையாடுகிறார் என்று. இப்படியே விரிகிறது இந்தப் புத்தகம் வெங்கட் சாமிநாதனுக்கும் பிரமிளுக்குமான உறவைப் பற்றிக் கூட இந்தப் புத்தகம் பேசுகிறது.

பிரமிளைப் பற்றிய வேறு சில நல்ல விஷயங்களையும் பேசுகிறது.

“…ஒருதடவை அவர் டெல்லியில் இருந்தபோது க.நா.சுவைப் பேட்டி கண்டு எழுதியிருந்தார். அந்தப் பேட்டியை அருமையக எடுத்திருந்தார். அந்தப் பிரதியை என்னிடம் தந்து வைத்திருந்தார். நான் எங்கேயோ கை தவறி வைத்துவிட்டேன். சில காலம் கழித்து அவர் அந்தப் பேட்டியைத் தாருங்கள் என்று கேட்டபோது, இரண்டு நாட்களில் தருகிறேன் என்று சொல்லிவிட்டு எனக்கு எப்போதெல்லாம் ஓய்வு கிடைத்தததோ அப்போதெல்லாம் தேடிப்பார்த்தேன், கிடைக்கவில்லை. அந்தக் கட்டுரையை நான் ஒளித்து வைத்துக் கொண்டிருப்பதாக அவர் சொல்லலாம்; அல்லது கிழித்துப் போட்டுவிட்டதாகச் சொல்லலாம்; அது வெளிவரவிடாமல் தடுக்க முயல்வதாகச் சொல்லலாம் என்று எனக்குள் பயம் ஏற்பட ஆரம்பித்துவிட்டது. அவரிடம் தயங்கியபடி, தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை. கிடைத்ததும் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னேன். ‘கிடைக்கவில்லையென்றால் பரவாயில்லை. விட்டுவிடுங்கள் என்று சொன்னார். அப்போது எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவே கிடையாது. நானாக இருந்தால் ‘எவ்வளவு கஷ்டப்பட்டு எழுதியிருந்தேன், இப்படிக் கவனக் குறைவாக இருந்துவிட்டீர்களே’ என்று கேட்டிருக்கத்தான் செய்திருப்பேன். ஆனால் அவர் பெருந்தன்மையோடு விட்டுவிட்டார். அந்தக் கட்டுரை அதன் பின் கிடைக்கவேயில்லை. நிச்சயமாக அது ஒரு இழப்புதான். அவரும் க.நா.சுவை அதன் பின் பேட்டி கண்டு எதுவும் வெளிவிட்டிருக்கவும் இல்லை. நான் என் கைவசம் இருக்கும் பொருட்களைப் பத்து பதினைந்து வருடங்களுக்கு ஒரு தடவை அலசிப் பார்த்து வேண்டாதவற்றை எரிப்பது வழக்கம். அப்படி எத்தனையோ தடவை தேடிப் பார்த்தபோதும் அந்தக் கட்டுரை எனக்குக் கிடைக்கவேயில்லை.

அவர் என்னிடம் கொடுத்த ஆங்கில நாவலை அவரிடம் பத்திரமாகத் திருப்பிக் கொடுத்த ஞாபகம் இருக்கிறது. அந்த நாவலை நான் படுத்துப்படித்துப் பார்த்தபோது ஆபாசமான விஷயங்களைப் பேசுவதிலிருந்துதான் அந்த நாவலே ஆரம்பமானது. அப்போது அந்த விதமான நாவல்களைப் படித்த அனுபவம் இருந்திருக்கவில்லை. ஹென்றி மில்லர் போன்றோரின் படைப்புகளை எல்லாம் அதன் பின் தான் படித்தேன். மேற்கத்திய படைப்பாளிகள் பலர் ஆபாசத்திலிருந்து ஆரம்பித்து அதிலிருந்து உயர்ந்த ஒரு தளத்திற்கு நகர்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். தமிழில் பெரும்பாலும் அப்படியான ஒன்று நடக்கவில்லை. வெறும் ஆபாசத்தைத் தூண்டுவது என்பதாகவே அது முடிந்திருக்கும். சிவராமூவின்ன் அந்த நாவல் அப்படியான வேறொரு தளத்திற்கு நகர்ந்ததா என்று என்னால் சொல்ல முடியவில்லை. நான் அந்த நாவலை முழுவதுமாகப் படிக்க முடிந்திருக்கவில்லை…”

இப்படி அவரைப் பற்றிய நல்ல விஷயங்களையும் நிறையவற்றை சுந்தர ராமசாமி சொல்லியிருக்கிறார்தான்.

“அதிகம் அவரைப் பற்றி எதிர்மறையான அனுபவங்களைப் பற்றி மட்டுமே சொன்னதுபோல் தெரிகிறது. அவருடனான உறவில் இருந்த சாதகமான அம்சங்கள் ஏதாவது சொல்லமுடியாமா?” என்ற கேள்விக்கு

“நான் திட்டமிட்டு அவர் மீதான எதிர்மறையான விஷயங்களைச் சொல்லவில்லை. அவருடனான என் உறவு அப்படியான சம்பவங்களால்தான் நிறைந்திருக்கிறது. இது ஏதோ என் அனுபவம் மட்டுமல்ல. பெரும்பாலோனோருக்கு அப்படியான அனுபவங்கள் தான் இருந்திருக்கின்றன. அளவுகள் வேண்டுமானால் வித்தியாசப்படலாம். வெங்கட் சாமிநாதன் பேரிலும் சிவராமூவுக்கு ஏகதேசம் இதே அளவு வெறுப்பு இருந்தது. நாங்கள் இருவர் மட்டும்தான் அவரை நம்பி ஏமாந்திருந்தோம். மற்றவர்களுக்கு அப்படியான ஒரு நிலை இருந்திருக்கவில்லை. மற்றவர்கள் நண்பர்களாக இருந்திருக்கிறார்கள், அதில் முறிவு ஏற்பட்டிருக்கிறது அவ்வளவு தான். நாங்கள் இருவர்தான் சிவராமூவை நாம் பாதுகாத்து வரவேண்டும் என்று தீர்மானித்து அதற்கான செயல்களைச் செய்தும் வந்தோம். அவர் மீது மிகுந்த நம்பிக்கை, எதிர்பார்ப்பு எங்களுக்கு இருந்தது. எனவே ஏமாற்றமும் வருத்தமும் எங்களுக்கு அதிகமாக இருந்தது…” என்று பதில் சொல்கிறார் சு.ரா.

இந்தப் புத்தகத்தைப் பற்றிய overall opinion ஆக இதையே சொல்லலாம். இந்தப் புத்தகத்தில் இருந்து நான் மேற்கோள் காட்டியிருக்கும் பகுதிகள் என்னுடைய விருப்பு வெறுப்பு காரணமாக அமைந்தது என்று என்னால் சொல்லமுடியவில்லை. ஆனாலும் புத்தகத்தைப் பற்றியோ சு.ரா. & பிரமிளைப் பற்றியோ தெரிந்துகொள்ள புரிந்துகொள்ள விரும்புபவர்கள் புத்தகத்தை வாங்கி முழுவதுமாகப் படிக்க வேண்டுகிறேன். வெட்டி ஒட்டும் பகுதிகள் பல சமயங்கள் தவறான பொருளைக் கொண்டுவந்துவிட்டுவிடும் என்பதால் இந்த டிஸ்கி.

பிரமிளின் கவிதை ஆளுமை பற்றி பெரிய அளவில் இந்த புத்தகம் விவரிக்கவில்லை, ஆனால் அங்கங்கே பிரமிளின் திறமையைப் பற்றி சுரா சொல்லி வந்திருக்கிறார் தான். பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்கும் இடையேயான உறவைப் பற்றியதாகவே பிரமிளின் கவிதைகள் இருந்திருக்கின்றன என்கிறார். ஆரம்பத்தில் இருந்தே பிரமிளின் திறமையில் கவரப்பட்டவராகவே சு.ரா இருந்திருக்கிறார். ஆனால் அவருடனான நேரடிப்பழக்கம் அந்தத் திறமையை கருத்தில் கொள்ள முடியாத அளவிற்குச் செய்திருக்கிறது என்று தான் சொல்லவேண்டும்.

இன்னும் கொஞ்சம் பதிவுகள் பிரமிளைப் பற்றி…

ரோசா வசந்தின்
மொழியின் தீராத பக்கங்களில் கவிதையின் வாழ்வை எழுதிச் சென்ற பிரமீள்.
அறைகூவல்

மு. சுந்தரமூர்த்தியின்
பிரமிள் கவிதைகள் – 1
பிரமிள் கவிதைகள் – 2
பிரமிள் கவிதைகள் – 3
பிரமிள் மேலும் சில குறிப்புகள்

PS: வலையுலகிலும் பிரமிள் – சுரா சார்ந்து காலச்சுவடு – எதிர் அரசியல் உண்டு. எனக்கு இவை இரண்டிலுமே ஆர்வம் இல்லையென்று சொல்லிவிடுகிறேன்.

Tue, 30 Oct 2007 02:48:00 GMT

பயணிகள் கவனிக்கவும் – பாலகுமாரன்

 

பொன்னியின் செல்வன் குந்தவை – வந்தியத்தேவனுக்குப் பிறகு நான் மிகவும் விருப்பம் காட்டிய அடுத்த காதல் ஜோடி ஜார்ஜினா – சத்தியநாராயணாகத்தான் இருக்கும். இதற்கு நிறைய காரணங்கள் பாலகுமாரன் மேல் அந்தச் சமயத்தில் நான் வைத்திருந்த அபிரிமிதமான பற்று, என் பதின்ம வயது, பாலகுமாரனின் எழுத்து இப்படி நிறைய சொல்லலாம். சொல்லப்போனால் இந்தக் கதை படித்துவிட்டு கல்யாணம் பண்ணினால் விதவைப் பெண்ணைத்தான் கல்யாணம் செய்துப்பேன் என்று உறுதிமொழி எடுத்ததெல்லாம் உண்டு. ஆனால் பாலகுமாரனின் வெற்றி என்று அதைத்தான் சொல்வேன் வாழைப்பழத்துக்குள் ஊசி ஏற்றுவதைப் போல் அதை அவர் செய்வார். சொல்லப்போனால் சின்ன வயதில் இருந்த பெண்கள் பற்றிய பொறாமை உணர்ச்சியைப் போட்டு பூட்டிவைத்தவர் பாலா. அவர் பெண்களைப் பற்றி எழுதுவது அவ்வளவு இயல்பாய் வருவதாய் எனக்குத் தோன்றியிருக்கிறது.

சொல்லப்போனால் நான் இன்று வரை சிகரெட், குடி பழக்கத்தை தொடாததற்கு நிச்சயம் பாலாவை ஒரு காரணமாகச் சொல்லலாம். அந்தக் காலத்தில் எல்லாம் அப்படி ஒரு பிரமை அவர் எழுத்தின் மேல்; அழுக்கான என்னை கால்களைச் சுத்தப்படுத்துவது என்று சொல்லி தொடங்கிவைத்தது கூட அவர்தான். எங்க சிவராமன் சார் சொல்வார் இங்கிலாந்தில் ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள் அவளுக்கு முன் ஆண்கள் உட்கார்ந்திருக்க மாட்டார்கள் என்று இதை மேனர்ஸாக அவர்கள் கருதுவார்கள் என்று. ஆனால் இதைப் போல் பெண்களைப் பற்றி புரியவைத்தது பாலாதான். மாற்றுக்கருத்து இல்லை.

எங்கள் வீடுகளில் பாலா பிராமணர்களை எதிர்த்து அவர்கள் செய்யும் கெட்டதையெல்லாம் எழுதுகிறார் என்பதில் தான் அவர்களுக்கு பிரியமே ஆரம்பித்தது என்று சொல்லலாம். இன்றும் உடையாரைப் பிடித்து தொங்கிக் கொண்டு அவர் அங்கேயும் பிராமணர்களின் தவறுகளை எழுதுறார் என்று சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் எனக்கென்னமோ அவர் ஆரம்பக்காலக்கட்டங்கள் ஏதோ தேவை காரணமாக தன்னை இகழந்துகொண்டதாகவும் ஆனால் பின்காலங்களின் தேவையால் தன் மீது அப்படிப்பட்ட பிம்பம் விழுவதை தடுக்கவே இப்படி பொய்யாய் சாமியார் வேஷம் கட்டுகிறாரோ என்ற சந்தேகம். அவர் ரொம்பவும் கீழ் வரைக்கும் போனதை எழுதியதால் மீண்டும் அதைச் சரிசெய்யும் சமயத்தில் சாதாரணமாக இருப்பதைக் காட்டமுடியாமல்; அதற்கும் மேல்நிலை என்ற ஒன்றை அவர் வலிந்து அவர் மேல் திணித்துக் கொள்கிறார் என்று நினைக்கிறேன்.

பல சமயங்களில் அவருடைய கதைகளை மீளப்படிக்கும் பொழுது அவர் தான் மணந்த இருதாரத்தை Defend செய்வதற்காகத்தான் இப்பொழுதெல்லாம் அதிகம் எழுதுகிறாரோ என்று கூட படும் எனக்கு. நிறைய உதாரணங்கள் சொல்லலாம். எனக்குத் தெரிந்து நான் பாலகுமாரன் சிபாரிசு செய்து படித்த பல பெண்களுக்கு அவர் எழுத்துக்களின் மீது விருப்பம் வரவில்லை. எனக்கு காரணம் தெரியாது; ஒருவேளை ஆண்களுக்கு பிடித்தமானதாக இருக்கும் இருதார மணம் என்பது கொள்கை அளவில் கூட பெண்களுக்கு பிடித்தமானதாக இல்லாததாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ பறந்துவிட்டது பதிவு. பயணிகள் கவனிக்கவும் அவருடைய இந்த எந்தவிதமான சமரசத்திற்கும் உள்ளாகாத எழுத்து என்று நினைக்கிறேன். ஆனாலும் அந்தக் காலத்தில் ஆண் ஒருவன் வாசக்டமி செய்துகொள்வதாகச் சொல்லி முடித்தது பெண்கள் மத்தியில் நல்லபெயர் எடுக்க வேண்டும் என்றோ இல்லை அதை ஒத்ததற்கான ஸ்டன்ட்டோ என்று படுகிறது எனக்கு.

நாவல்கள் எழுதுவதில் இருக்கும் டெம்ப்ளேட் முதலில் எனக்கு பிடிபடவில்லை; ஆனால் இப்பொழுது அவருடைய எந்த நாவலை எடுத்தாலும் முதலில் தென்படுவது அவருடைய டெம்ப்ளேட் தான். ஆனந்தவிகடனில் இந்தக் கதை தொடர்கதையாக வந்தது என்று நினைக்கிறேன் ஆரம்பத்தில் ஸ்டீபன் என்றொரு கதாப்பாத்திரத்தை அறிமுகப்படுத்தி அதை ஹீரோ போல் கொண்டுசென்றிருப்பார். ஆனால் சட்டென்று சத்தியநாராயணன் அறிமுகம் ஆனதும் ஸ்டீபன் கதையில் இருந்து மறைந்துவிடுவார். இது எதனால் அப்படி நிகழ்ந்தது என்று தெரியாது. ஒருவேளை ஒருவரை மையமாக வைத்து கதை சொல்லும் வழக்கத்தை பாலகுமாரன் கழற்றி எறிய முயன்றிருக்கவேண்டும். எனக்கென்னமோ அந்த நாவல் சத்தியநாரயணா ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டதும் தான் சூடுபிடிப்பதாகப்படுகிறது.

அதே போல் நாவலின் background எப்பொழுதும் பாலகுமாரன் கதைகளில் மாறிக்கொண்டேயிருக்கும். அதற்கு அவர் நிறைய நேரம் எடுத்துக்கொண்டு விவரம் சேகரிப்பார் என்று நினைக்கிறேன். இது Sidney Sheltonன் அணுகுமுறை எனக்கு பாலகுமாரன் நாவல்களைத் தொடர்ந்து படித்துவிட்டு சட்டென்று சிட்னியின் நாவல் படிக்க முதலில் பட்டது இதுதான். Sidneyன் த மாஸ்டர் ஆப் த கேமை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம், அதில் சிட்னி ஷெல்டன் மொத்தம் ஐந்து தலைமுறையை அலேக்காக வைரத்தில் வைத்து கொடுத்திருப்பார். அதனுடன் ஒப்பிட்டுப்பார்க்கத் தோன்றும் இதில் பாலகுமாரன் விமானநிலையத்தை மையமாக வைத்து நாவல் அமைத்திருப்பார்.

அந்த விமானநிலையத்தைப் பற்றிய விவரிப்புக்கள் கொஞ்சம் போல் ஒட்டாமல் இருப்பதாக எனக்கு இப்பொழுது படுகிறது. ஆனால் சட்டென்று விரியும் கதையில் எங்கேயும் பாலகுமாரன் சட்னியில் அரைபடாமல் தெரியும் பொட்டுக்கடலை போல் தெரியமாட்டார் என்பது தான் விசேஷம். கவனிக்கவும் இது அவருடைய மற்ற கதைகளுடனான ஒப்பீடே, எனக்கு என்னவோ இரும்புக் குதிரைகளைவிடவும் மெர்குரிப் பூக்களை விடவும் பயணிகள் கவனிக்கவும் பிடித்திருந்தது.

எனக்கென்னமோ பாலகுமாரன் தமிழ் சினிமாக்கள் சாதிக்காததை அந்த நாவலில் சாதித்திருப்பதாக தோன்றும்; எப்படியென்றால் ஒரு கன்னிகழியாத ஆண்(சொல்லகூடாதோ!) திருமணம் நடந்து பிள்ளை பிறந்த ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொள்வதாகக் காட்டியிருப்பார். பெரும்பாலான சமயங்களில் அந்தப் பையன் ஏற்கனவே கழிந்தவனாகவேயிருப்பான். இல்லை ஏதாவது கதை சொல்லி அந்தப் பெண் கன்னிகழியாதாவள் என்றொன்றைக் கொண்டு வருவார்கள். நான் மோகமுள் எல்லாம் படித்தது பிறகுதான்.

சரி கதைக்கு வருவோம், ஜார்ஜினாவும் சத்தியநாராயணாவும் விமானநிலையத்தில் பணி செய்பவர்கள். ஜார்ஜினா ஒரு குழந்தையுடன் வசிக்கும் இளம் விதவை. ஜார்ஜினாவின் கணவன் வின்சென்ட் விமானநிலையத்தில் வேலைசெய்து பணியில் இருக்கும் பொழுது நடைபெறும் குண்டுவெடிப்பால் இறந்துவிட ஜார்ஜினாவிற்கு அந்த உத்யோகம் கிடைக்கிறது. சத்தியநாராயணாவும் வின்சென்ட்டும் நண்பர்கள் சத்தியநாராயணன் வின்சென் ட்டின் மரணத்திற்கே தான் தான் காரணம் என்று நினைக்கிறான் – (ஓரளவிற்கு ஒத்துக்கொள்ளக்கூடிய விளக்கமாக எனக்குப்பட்ட இடம் இது) – அதனால் அவனால் ஜார்ஜினாவை வின்சென்ட் இறந்த பிறகு பார்க்கும் பொழுதெல்லாம் மனக்குழப்பம் உருவாகிறது. பின்னர் ஜார்ஜினாவும் சத்தியநாராயணாவும் எதிர்பாராதவிதமாக காதலில் விழுவதும் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவுசெய்யும் பொழுது வரும் பிரச்சனையும் அதை எப்படித் தீர்த்து கல்யாணம் செய்துகொள்கிறார்கள் என்பதும் தான் கதை. சொல்லப்போனால் கதையை அப்படியே ஒரு முழுநீள திரைப்படமாக எடுக்கலாம் தான். ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ் சூப்பராயிருக்கும். இதில் எனக்கு மிகவும் பிடித்தது ஜார்ஜினாவும் சத்திநாராயணாவும் காதலில் விழும் பொழுது நடைபெறும் கருத்துப் பரிமாற்றங்கள். உரைநடை ரொம்பவும் நகைச்சுவையாக இருக்கும் சிரித்துக்கொண்டே படிக்கலாம். இந்த உரையாடல் என்னைப் பித்துபிடித்து அலையச் செய்தது என்றால் அது மிகையல்ல. எத்தனை தடவைகள் அந்த உரையாடல்களைப் படித்திருப்பேன் என்று நினைவில் இல்லை. என்னுடைய ஆரம்பகால கதைகளில்(குறிப்பாக – ஒரு காதல் கதை) பாலாவின் உரையாடல் தாக்கம் இருப்பதாக நான் நினைத்திருக்கிறேன் அதுவும் பயணிகள் கவனிக்கவுமின் தாக்கம். நான் டெல்லியில் இருந்த சமயங்களில் உருப்போட்டுக்கொண்டிருந்த உரையாடல்கள் எழுத்தில் பார்க்க ஒன்றரை ஆண்டு ஆயிற்று. அப்படி எனக்கு மிகவும் பிடித்த உரையாடல் பயணிகள் கவனிக்கவுமில் பாலா எழுதியவை.

அதேபோல் ஜார்ஜினாவும் சத்தியநாராயணாவும் எழுதிக்கொள்ளும் கவிதை இரண்டு. பாலா சொல்லியிருப்பார் வார்த்தையைக் கோர்த்து கோர்த்து கவிதை எழுதணும் தனக்கு ஃப்ரீ ஃபோலோவா எழுதினாத்தான் பிடிக்கும் அதனால் தான் கவிதையை விட்டுட்டு நாவல் எழுத வந்ததா! ஆனால் சிறுகதையும் நாவலுமே கூட இப்ப வார்த்தை வார்த்தையா கோர்த்துத்தான் எழுதணும்னு வந்ததால பெட்டர் வார்த்தைகளை கவிதைக்காகவே கோர்த்துப்போம்னு தான் இப்பல்லாம் கொஞ்சம் தீவிரமா கவிதை எழுதுறது. இந்தக் கவிதை அந்தக்காலத்தில் எனக்குப் பிடித்திருந்த கவிதைகள் வரிசையில் நிச்சயம் இருந்த ஒன்று. ஆனால் இப்பொழுதெல்லாம் கொஞ்சம் உட்கார்ந்தால் இதைப்போன்ற ஒன்றை நானே எழுதிவிடுவேன்னு நினைப்பதால் அதற்கான பாலாவின் தேவையைப்பற்றிய கேள்விகள் எழுகிறது.

எதிர்பாராதவிதமாக சத்தியநாராயணா அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட அவனுக்காக ப்ரார்த்தனை செய்யவரும் ஜார்ஜினாவை – சத்தி இயலாமையால் திட்டிவிட்டு எழுதுவதாய் இருக்கும் இந்தக் கவிதை.

என் மனசுக்குள்ளே சில நாய்கள்
புரண்டு கிடக்கும் எனைத் தின்று
என்றோ மூடிய மனக்கதவை
எவரும் திறக்க வரவேண்டாம்
திறக்க நினைக்கும் ஒற்றைகை
ஓசை கேட்டு அவை நிமிரும்
நெருங்க காலடி சத்தத்தில்
நிமிர்ந்து ரத்தப் பல் காட்டும்
என்னைத் தின்ற வெறி நாய்கள்
உங்களைத் துரத்த ஓடிவரும்
நானே கதவைத் திறந்தாலும்
நாய்கள் மடக்கும் வருபவரை
விதியெனும் கிழவன் எனக்குள்ளே
தள்ளிய நாய்களில் நானில்லை
நாய்கள் எந்தன் தலைமேலே
நானோ நாய்களின் காலின் கீழ்
ஒன்றாய் பெருகுது மனத்தீவில்
என்னைத் தின்று கண்மூடி
புரண்டு கிடக்குது என்னுள்ளே
நான் யாரிடம் பேச முயன்றாலும்
இந்நாய்களின் ஊளைத் தடுக்கிறது
என்னுள் விழுந்த இந்நாய்கள்
நான் சாகும் நேரம் தூங்கிவிடும்
அந்தக் கணத்தில் கைகுவித்து
கண்வழி கேட்பேன் மன்னிப்பை
நீர் இருக்கும் இடத்தின் திசை நோக்கி
நானே நானாய் கிடந்தபடி

சத்தி எழுதிய கவிதைக்கு பதிலாய் இதை ஜார்ஜினா எழுதுவாள்.

வெள்ளை அங்கி சுருள் தாடி
ஒரு யூதன் வந்தான் இவ்வுலகில்
வெளிச்சம் முகுந்த வானத்தின்
ஒளியைத் தேக்கி தன் முகத்தில்
மெள்ள நுழைந்தான் பூவுலகில்
கன்னி மேரியின் சிசுவாக,
உலகம் முழுவதும் பல நாய்கள்
மறித்துக் கேட்டன அவனெதிரே,
எதற்கு வந்தீர் இவ்விடத்தில்
என்ன வேலை மானுடத்தில்
மெள்ள சிரித்து யூதமகன்
கரத்தை நீட்ட அவை விலகும்
மனிதன் எங்கள் முழுப்படைப்பு
மக்கள் எங்கள் குழந்தைகள்
உருவம் அற்ற ஒளிப்பிழம்பாய்
இருக்கும் எங்கள் தேவபிதா
உருக்கிச் செய்த மானுடத்தை
நீங்கள் ஆளவிடமாட்டேன்
உலகம் என்னும் ஆலயத்தில்
ஒவ்வொரு மனிதரும் தீபங்கள்
உருட்டிக் கவிழ்க்க நீர் முயன்றால்
உங்களைச் சும்மா விடமாட்டேன்
உரத்துக் கத்தின அந்நாய்கள்
பயந்து நடுங்கின தீபங்கள்
நாய்களை உறுத்து பார்த்தபடி
மெள்ளத் திறந்தான் ஆலயத்தை
இடுப்புக் கயிற்றை அவிழ்த்தெடுத்து
சொடுக்கிப் போட்டான் புவியதிர
ஓடிப்போச்சு நாயெல்லாம்
தீபங்கள் எல்லாம் மகிழ்ந்தாட
ஒற்றைத் தீபம் தலை வணங்கி
யூதனை நோக்கி வினவியது
என்னைப் படைத்த கடவுள்தான்
நாயைப் படைத்தான் இவ்வுலகில்
எதிரெதிர் விஷயம் படைத்துவிட்டு
எதற்கு வந்தீர் விளையாட
துக்கத்தோடு புலம்பியதை
குனிந்து பார்த்தான் கனிவாக
மெள்ளத் திரியைத் தூண்டிவிட்டு
யூதன் சொன்னான் பொதுவாக
நாய்கள் குரைக்கா திருந்திருப்பின்
எம்மை விரும்பி அழப்பீரோ
இருளே இங்கு இல்லையெனில்
உமக்கு ஏதும் மதிப்புண்டோ
விருப்பம் என்பது முதல்கேள்வி
புரியாதிருப்பின் கேளுங்கள்
கேட்டவர்தானே வரம் பெறுவர்
தீபங்கள் வணங்கின தலை குனிந்து
ஏசு ஏசு என்றபடி என்னுள் கேட்டதை நான்
சொன்னேன்
நீயும் கேளேன் என் தோழா

ஆனால் எனக்கு பாலாவின் சத்தி வாஸக்டமி கடைசியில் செய்துகொள்வதாகச் சொல்லும் முடிவு பிடிக்கவில்லை எத்தனையோ முறை இது ஆணாதிக்க சிந்தனையாக இருக்குமோ என்று யோசித்துப்பார்த்திருக்கிறேன் விடை தெரியவில்லை. ஆனால் இப்படி மறுமணம் செய்துகொள்பவர்களுக்கு வாஸக்டமி நிச்சயமான தீர்வாய் இருக்கமுடியாதுதான். ஒரு காலத்தில் எனக்கு மிகவும் பிடித்திருந்த பாலகுமாரனின் நாவல்களில் இது முக்கியமானது.

Wed, 31 Oct 2007 17:15:00 GMT

அரசூர் வம்சம்

முதலில் ஒரு புத்தகம் நமக்கு எப்படிக் கிடைக்கிறது; என்ன அறிமுகத்துடன் கிடைக்கிறது என்கிற விஷயம் என்னைப் பொறுத்தவரை சுவாரசியமானது. இரா முருகனின் இந்தப் புத்தகம் கூட அப்படித்தான். நான் இணைய உலகில் பரவலாக நடமாடத் தொடங்குவதற்கு முன்பே இந்தப் புத்தகத்தைப் பற்றிய பெயரளவிலான அறிமுகம் கிடைத்திருந்தது. அது ஒரு சுவாரசியமானக் கதை என்பதால் அதை முன்னே சொல்லிவிடுகிறேன்.

எனக்கு கொஞ்சம் தூரத்து சொந்தமாய் ஒரு தாத்தா, காரைக்காலைச் சேர்ந்தவர் அவரிடம் இன்னமும் இருக்கும் புத்தகம் படிக்கும் ஆர்வம் என்னை வியப்பில் ஆழ்த்தும். Dictionary of Contemporary English என்ற புத்தகத்தைத் தேடி அவர் டெல்லியின் புத்தக சந்துகளைத் துளைத்தெடுத்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. அதேபோல் சமீபத்தில் வெளியான சில துப்பாக்கிகளைப் பற்றிய புத்தகத்தையும் அவர் தேடி வாங்கிக் கொண்டு போனார். அப்படி அவருக்கு எங்கேயோ எவராலோ சொல்லப்பட்ட புத்தகம் தான் அரசூர் வம்சம்.

நான் இதைப் பற்றி இரா.முருகனுக்கு ஒரு மெய்ல் அனுப்பியதாக நினைவு.(முதலில் தவறுதலாக அந்த விஷயத்தை இராம.கி.க்கு பின்னூட்டமாக அனுப்பினேன் ;)) எனக்குத் தெரிந்து திருக்கடையூர், தில்லையாடி பக்கத்தில் ஒரு அரசூர் உண்டு. கொஞ்சம் போல் காரைக்கால் பக்கம் வரும், முதலில் தாத்தா அந்த ஊரைப் பற்றித்தான் கதை எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று சொல்லித்தான் அவர் இந்தப் புத்தகத்தைத் தேடினார். ஏனென்றால் அந்த அரசூரைப் பற்றி எழுதியிருந்தால் தன்னைப் பற்றி(அல்லது அவர்களுடைய குடும்பத்தைப் பற்றி) நிச்சயமாய் எழுதப்பட்டிருக்கும் என்று சொல்லித்தான் தேடினார்.

அவருடைய தேடுதலுக்கு கிடைக்காத அளவிற்குத்தான் அந்தச் சமயத்தில் அரசூர் வம்சம் இருந்தது. நானும் ஹிக்கின் பாத்தம்ஸில் தேடியிருக்கிறேன் சில சமயம்; ஆனால் அகப்படவில்லை. இப்படியாகக் கிடைத்த அறிமுகம் சிறிது நாளில் மறந்து போக, பிரகாஷ் ஏதோ ஒரு இடத்தில் உலக அளவில் எழுதப்பட்ட மிகச்சிறந்த நாவல் என்றோ இல்லை அதைப் போன்ற ஒன்றையோ சொல்ல அங்கிருந்துதான் கிளம்பியது அரசூர் வம்சம் இரண்டாவது தேடல். ஆனால் மிகச்சரியாக கூகுள் மூலமாக நான் திண்ணை நோக்கி வந்து சேர்ந்தேன். திண்ணையில் மின்னிதழாக கதையின் பாதி வரை முடித்திருந்தேன், ஆனாலும் என்னவோ ஒன்று குறைவது போலவேயிருந்ததால் புத்தகமாகவே வாங்கியதைப் பற்றி முன்பே சொல்லியிருந்தேன்.

நாவலைப் பற்றி என்னுடைய விமர்சனத்தை எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். இரண்டு மூன்று முறை திரும்பத்திரும்ப புரட்டி இதை எழுதுகிறேன்.

“நீ ஆனாலும் புத்திசாலித் துருக்கண்டா கருத்தா.

அப்ப, சாது நாயக்கனாப் பாத்து ஆள் அமர்த்திக்கட்டா?”

இந்த வசனம் நாவலின் ஏதோ ஒரு பக்கத்தில் வருவது(280 பக்கம் வேண்டுமானால்). எனக்குத் தெரியவில்லை இதன் பின்னால் இருக்கும் “அரசியல்” எத்தனை பேருக்கு சுலபமாகப் புரியும் என்று. அரசியல் என்று குறிப்பிட்டது அதன் பின்னர் இருக்கும் விஷயத்தைப் பற்றி குறிப்பிடவே.

எங்கள் வீட்டிலெல்லாம் ஒரு பழமொழி அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார்கள். என்னவென்றால் “முட்டாத் துலுக்கனும் முரட்டு நாயக்கனும் சேர்ந்தா வேலைக்காகாது” என்பதுதான். வீட்டில் அடிக்கடி சண்டை நடக்கும் அது முட்டா துலுக்கனா, முட்டா நாயக்கனா என்பதைப் பற்றி. அவர் சொல்லியிருக்கும் அந்த மேற்கூரிய வசனத்திலும் கூட இந்த பழமொழியை அடிப்படையாக வைத்தே எழுதியிருக்கிறார். எங்கள் பக்கத்தைச் சேர்ந்த பழமொழி என்பதாலும் அடிக்கடி, “எங்க வீட்டாளுக(ஆம்பளை) டிஸிஷன் மேக்கிங்கில் தவறு செய்யும் பொழுதெல்லாம்”, எப்படியென்றால் பழமொழி மாற்றப்பட்டு; முட்டா நாயக்கனாகவும், முரட்டு துலுக்கனாகவும்.

நான் ஏன் இதை சொல்ல வருகிறேன் என்றால் இந்த பழமொழியைப் பற்றித் தெரியாத ஒருவர் நாவலைப் படிக்கும் பொழுது இந்த இரண்டு வரிகளை கடந்து போய்விடுவது எளிது; அதாவது விஷயம் புரியாமல். இப்படி நிறைய விஷயங்களை நுண்ணிப்பாக கவனித்து இந்த நாவலை எழுதியிருக்கிறார் இரா.முருகன். இந்த நாவலைப் படித்தவுடனேயே ரிவ்யூ போன்ற ஒன்றை எழுதிவிடவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அப்படிப்பட்ட ஒன்றை எழுதுவதற்கு முன்பு அதை இன்னும் இன்னும் மீள்வாசிப்பு செய்யப்படவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானேன்.

நாவலின் உரையாடல் மொழி இடத்திற்கு இடம் மாறுபடுவதும் அந்த மொழியில் பாண்டித்தியம் பெற்ற ஒருவர் எழுதுவது போன்ற நடையில் அந்தப் பாகம் இருப்பதும் படிக்கப்போய் இந்த ஆளால் எப்படி மூன்று வித்தியாசமான உரையாடல் மொழிகளில் தேர்ச்சி பெற்று இருந்திருக்க முடியும் என்ற வியப்பே எழுகிறது. தமிழ்நாட்டு பிராமணர் பாஷை, கேரளாவை மையமாகக் கொண்ட பிராமணர்களின் பாஷை; பிறகு அந்தக் கால ஜமீன்களின் பாஷை கைவந்திருக்கிறது லாவகமாய். மூன்று வித்தியாசமான்ன கதைகளையும் கதைக்களன்களையும் பாத்திரங்களையும் அவர் தனித்தனியே எழுதியிருப்பதற்கான வாய்ப்பு இருந்தாலுமே வியப்பே மிஞ்சியிருக்கிறது.

பிறகு நாவலின் அடிப்படை நாதமாக இருக்கும் மேஜிக்கல் ரியலிஸம்; ராஜாவுடன்(ஜமீன்தார்) அவருடைய இறந்து போன முன்னோர்கள் பேசுவது, மூன்று தலைமுறைக்கு முன்னர் இறந்து போன ஒரு பெண்ணுடன் நிகழ்காலத்தில் இருக்கும் ஒருவன் கூடுவது இப்படி உதாரணத்திற்காக இரண்டு சொல்கிறேன். நாவல் பின்னப்பட்டிருக்கும் கதையில் மாந்தரீக யதார்த்தம் தான் மிகமுக்கியமான விஷயம்.

எங்கள் வீட்டில் என்னை வளர்த்த என் அப்பாவின் அம்மா இருந்தார்கள். நாங்கள் எங்கள் பாஷையில் “பாச்சம்மா” என்றுதான் அழைப்போம். எனக்கு அதற்கான அர்த்தம் அவ்வளவு எக்ஸாக்ட்டா தெரியாவிட்டாலும் ஒரு வகையில் பாட்டி என்று தான் வரும். அம்மா சின்ன வயதில் என்னை பாட்டியிடம் விட்டுவிட்டு டீச்சர் டிரைனிங் படிக்கப் போய்விட்டதால் என்னை வளர்த்தது எல்லாமே பாட்டி தான் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் எனக்கெல்லாம் ரொம்பவும் முந்தைய ஜெனரேஷன் என்பதால் அந்தக் கால வழக்கப்படி ஆண் பிள்ளைக்குத் தான் அதிக சப்போர்ட் கிடைக்கும்; அவருடைய செல்லம் நான். எனக்குத் தெரிந்தே வீட்டில் நடக்கும் பிரச்சனைகளுக்கு என் சப்போர்ட்டாக வரும் ஆள்(ஒரே) அவர்தான். அந்தக் காலத்திலிருந்து அம்மா அப்பா இருவரும் அக்கா சப்போர்ட்.

அவருக்கு கடைசி காலங்களில் மனநிலை கொஞ்சம் தடுமாறியிருந்தது. அவருடைய கடைசி இரண்டு மூன்று ஆண்டுகள் அவருடன் இருந்தவன் என்ற முறையில் நிறைய விஷயங்களை நேரில் பார்த்திருக்கிறேன். அதாவது அவர் தன்னுடைய காலத்து மக்களிடம்(அனைவரும் இறந்தவர்கள்) பேசிக்கொண்டிருப்பது; எப்படி என்னிடம் அப்பா அம்மாவிடம் பேசுவாரோ அப்படி. உன்னிப்பாகக் கவனித்தால் அவரை சுற்றிலும் ஆட்கள் உட்கார்ந்து கொண்டோ இல்லை நின்று கொண்டோ, சுவற்றில் சாய்ந்து கொண்டோ பேசுவதைப் போல ஒவ்வொரு பக்கமும் திரும்பி அந்தந்த நபர்களின் பெயர்களைச் சொல்லிப் பேசிக்கொண்டிருப்பார்.

என்னால் கதையுடன் ஒன்றி படிக்க முடிந்ததற்கு இதுவும் ஒரு காரணமாகயிருக்க முடியும். வேண்டுமானால் எங்கள் குடும்ப பின்னணி என ஒருவாறு கதை என் கண்முன்னே நடப்பதைப் போன்ற பிம்பம் உருவானது என்றே சொல்லலாம். மந்திரம் வைப்பது, அதை எதிர்க்க தகடு வைப்பது, சாப்பாட்டில் மருந்து போடுவது, குடும்பத்திற்கே சூனியம் வைப்பது போன்ற “டெர்ம்”கள் எங்கள் வீட்டில் சர்வ சாதாரணமாக புலங்கும் விஷயங்கள் தான். இதன் காரணமாக என்னால் இந்தக் கதையைப் பற்றிய கேள்விகளை விடவும் ஒன்றத்தான் சுலபமாக முடிந்தது.

இப்பொழுதெல்லாம் ஒரு புத்தகம் படித்தால் அதைப் பற்றிய விமர்சனத்தை எப்படி வித்தியாசமாக(என்ன கொஞ்சம் “A”த்தனமாக, சுத்திச் சுத்தி, கொஞ்சம் சுயத்தைச் சொறிந்து கொண்டு) எழுத முடியும் என்று தான் யோசிக்கிறேன்(;-)). ஆனால் இந்தக் கதையில் அப்படி எழுத முடியாத அளவிற்கு விஷயம்; என்னவென்றால் இந்த நாவல் முழுவதுமே கதையுடன் பின்னிப்பிணைந்து இருப்பது அடல்ஸ் ஒன்லி கண்டெண்ட் தான். கதையையும் இந்த விஷயத்தையும் தனித்தனியே பிரித்தறிவதென்பது ரொம்பக் கடினமான விஷயம்.(இதுவும் நான் இந்த நாவலை படிக்க ஒரு காரணம் என்று நான் சொல்லவில்லை :)).

கதையென்ற ஒன்று பெரிதாகக் கிடையாதென்றாலும் நாவலை நகர்த்திக் கொண்டு போவதற்கான கதை நிச்சயமாய் நாவலில் உண்டு. நாவலில் இருந்து பிடித்த வரிகளை பிடித்துப் போட்டு அது சொல்லும் விஷயங்களை விளக்க எனக்கும் விருப்பம் தான். ஆனால் இந்த நாவலில் வரும் எனக்குப் பிடித்த வரிகளையோ வாக்கியங்களையோ எடுத்துப் போட நான் நினைத்தால் அது வம்பாகிவிடும் எப்படியென்றால் அப்புறம் திண்ணை ஆட்களும் இரா.முருகனும் உதைக்கவருவார்கள் என்பதால் அப்படியே விட்டுவிடுகிறேன். ஆனால் எக்ஸாம்புள்காக இரண்டு விஷயங்கள்.

“குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ
குனிந்து பார்க்கலாமோ
பாதி மறைந்த ஸ்தனமும்
பாங்காய் இடுப்பில் ஒட்டியாணமும்
வாழைத் தொடையும்
வடிவான தோளுமாய்க்
குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ
குனிந்து பார்க்கலாமோ”

“முனிவனவன் பெண்டாட்டி
முடிஞ்சு வச்ச கூந்தலிலே
செல்லமாத் தலைப்பேனா
கள்ளப் புருசனையும்
ஒளிச்செடுத்து வந்து
ஓரமாத் தலைவிரிச்சா
கச்சு அகற்றிப் பழம் போல
கனிஞ்சு தொங்கும் தனமிரண்டும்”

இவையெல்லாம் நாவலின் இடையில் வரும் சில பாடல் வரிகள். சில படங்களைப் பார்த்துவிட்டு இந்தப் படத்தை எப்படி எடுத்திருக்க முடியும் என்ற வியப்பு ஏற்படும். அதைப் போல இந்தக் கதையை எப்படி எழுதியிருக்க முடியும் என்ற வியப்புத்தான் மேலெளுவதை தவிர்க்க முடியவில்லை. எல்லாம் கற்பனையாக இல்லாமல், எல்லாம் நிஜமாகவும் இல்லாமல் ஒரு எப்படி எழுதியிருக்க முடியும் என்று நாவலின் இரண்டு பக்கங்களை படிக்கும் பொழுது வியப்பளிப்பதாக இருக்கிறது.

“காலம், இராமனுடைய அம்பு அல்ல. திரும்பி வந்து அம்பாறாத்தூணியில் தூங்கும் பழக்கம் அதற்குக் கிடையாது. ஓயாது முன்னே சென்று கொண்டிருக்கும் அதைத் தடுக்கவோ அல்லது வேகத்தடை செய்யவோ மனிதனால் இன்னும் முடியவில்லை.

இலக்கியத்திலாவது காலத்தை நிறுத்தி, தட்டி, ஒடுக்கி முன்னும் பின்னும் ஓடச்செய்ய, காலம் காலமாகப் படைபாளிகள் முயன்று வந்திருக்கிறார்கள் ‘அரசூர் வம்சம்’ நாவலும் அப்படி ஒரு முயற்சியே” என்ற பி.ஏ கிருஷ்ணனின் முன்னுரை வரிகள் தான் மனதில் ஓடுகிறது கதைக்கான விமர்சனம் எழுதவேண்டும் என்று உட்காரும் பொழுது. காலத்தை நிறுத்தி, தட்டு, ஒடுக்கி முன்னும் பின்னுமாக எழுதியிருக்கும் இரா.முருகனின் எழுத்துக்களோடு சேர்ந்து நாமும் பயணிக்கிறோம்.

ஜமீந்தார் உப்பை தன் மடியில் கட்டிக்கொள்ளும் பொழுது நாம் பக்கத்தில் இருந்து பார்க்கிறோம். சுப்பம்மா கிழவி “அடல்ஸ் ஒன்லி” பாட்டு பாடும் பொழுது ஆரம்பத்தில் கேட்கத் தொடங்கி பின்னர் காதை பொத்திக் கொள்கிறோம். சாமிநாதனும் வசுமதியும் அறைக்குள்ளே “மேட்டர்” செய்யும் பொழுது கதவருகில் நின்று பார்க்கிறோம் பின்னர் சாமிநாதனோடு வீடு எரியூட்டப்பட்டதும் வெக்கையில் நிற்கமுடியாமல் “ஐயோ பாவம்” என்று அலறியடித்து வெளியேறுகிறோம். “உன் பரம்பரையே கிறிஸ்தியானியாகப் போறது” என்று கிட்டாவய்யனைப் பார்த்து பைராகி சொல்லும் பொழுது மனம் பதறுகிறது.

“ஆமா அப்பு, என்னத்துக்கு வம்பு. வாய்ச்சதப் பத்தி வக்கணையாத் தெரியும். இப்பப் பார்த்ததோட வச்சு அளந்தா, சுண்டு விரல் தண்டி சமாச்சாரம் எல்லாம் அதுல்ல சேத்தியா, அடச் சேன்னு வெறுத்துப் போயிடும் இல்ல.” என்று ஒரு கிழவி, புஸ்திமீசைக் கிழவனைப் பற்றி நக்கல் அடிக்க நாமும் சிரித்துக் கொள்கிறோம் இப்படி கதையினூடே நம்மையும் அழைத்துச் செல்லும் எழுத்து நடை இரா.முருகனுக்குச் சாத்தியமாகியிருக்கிறது. பொன்னியின் செல்வனுக்கும், என் பெயர் ராமசேஷனுக்கும் பிறகு புத்தகத்தை ஜஸ்ட் லைக் தட் பிரித்து படிக்கும் மற்றொரு புத்தகமாக எனக்கு அரசூர் வம்சம் கிடைத்திருக்கிறது.

நிச்சயமாக எழுத்துத் துறையில் கால் பதிக்கவோ இல்லை அதை நோக்கியோ நகரவேண்டும் என்ற ஆவல் இருக்கிறவர்கள் நிச்சயமாய் பலமுறை படிக்க வேண்டிய ஒரு புத்தகம் அரசூர் வம்சம் என்றால் அது மிகையாகாது.

பார்த்தலில்… கேட்டலில்… படித்ததில்…

இந்தத் தலைப்பில் ஒன்றை சுரேஷ் கண்ணன் எழுதியிருந்த பொழுதே அய்ட்டம் பிடித்திருந்ததால் எழுதியிருந்தேன். ஆனால் எங்கும் லிங்க் கொடுக்கவில்லை. இப்பொழுது கார்த்திக் பிரபு இதே போன்ற ஒன்றை எழுதி என்னைத் தொடருமாறு அழைத்திருந்தார்.

நான் ஏற்கனவே எழுதியதை மறுபதிவிடுகிறேன். எனக்குத் தொடர்ச்சியாய் லிங்க் கொடுத்துக்கொண்டே போவதில் விருப்பம் கிடையாது என்றாலும், பொன்ஸை Tag செய்கிறேன். விருப்பப்பட்டால் போடலாம்.

———————————–

பார்த்தலில் கேட்டலில் படித்ததில் என்று சுரேஷ் கண்ணன் எழுதியிருந்து பின்னர் விருப்பப்படுபவர்கள் தொடருமாறு சொல்லியிருந்தார். சோம்பேறித்தனத்தில் ஒன்றாம் நம்பரான எனக்கு இதைப்பற்றி எழுதும் ஆசை இருந்ததாலும் எதையாவது எழுதவேண்டும் போல் இருப்பதாலும் தொடர்கிறேன்.

எனக்கான பிடித்த விஷயங்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன, எப்படி பொன்னியின் செல்வனில் தொடங்கி சாண்டில்யன் வழியாக, சுஜாதா பாலகுமாரன் என படித்து இப்பொழுது, ரமேஷ் பிரேம், ஜேபி சாணக்யா, சாரு நிவேதிதா, சுரா, ஜெயமோகன், எஸ்ரா என்று மாறிக்கொண்டேயிருக்கிறது. இது மொத்தமும் தமிழில் நான் உணர்ந்தவை ஆங்கிலம் முடிந்தால் இன்னுமொறு பதிவில்.

படித்ததில் பிடித்தது
ஒரு புளியமரத்தின் கதை,
உபபாண்டவம்
ஜெயமோகன் குறுநாவல்கள் (குறிப்பாக லங்காதகனம்)
ஜூனோ இருபாகங்கள் (சுஜாதா என்று சொல்லவும் வேண்டுமா)
பயணிகள் கவனிக்கவும் (பாலகுமாரன், ஏறக்குறைய அத்தனையையும் படித்திருப்பேன் உடையார் 5 வரை. இது மிகவும் பிடித்திருந்தது. காரணமெல்லாம் கேட்டால் சொல்லத்தெரியாது.)
ஸீரோடிகிரி (சாரு நிவேதிதா – உவ்வே என்று வந்தாலும் பிடித்திருந்தது)
சொல் என்ற ஒர் சொல்(பின்நவீனத்துவத்தை உண்டு இல்லைன்னு பார்த்திர்றதுன்னு ஒத்தக் காலில் நின்று படித்த புத்தகம் அப்படியே வாங்கிய அவர்களின் நாவல்களின் தொகுப்பு.)
மரப்பசு தி.ஜானகிராமன் (மீண்டும் ஒரு முறை வாங்க வேண்டும். யாரோ எடுத்து சென்று விட்டார்கள்.)
சரி சரி பொன்னியின் செல்வன்(இதனுடன் நான்கைந்து ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன்)
மற்றது, கடல்புறா மொத்தமாக இதுவும் நான் சின்ன வயதில் படித்திருந்ததால் மனதில் ஆழமாக பதிந்துவிட்ட ஒன்று.

கேட்டதில் (எனக்கும் பாடல்களுக்குமான விருப்பம் ரொம்பவே வித்தியாசமானது. இதில் வேறெதையும் எதிர்பார்க்காதீர்கள்.)

நெஞ்சினிலே நெஞ்சினிலே (உயிரே..)
தங்கத்தாமரை மகளே(மின்சாரக் கனவு)
இது ஒரு பொன்மாலைப் பொழுது..
வெண்மதியே வெண்மதியே நில்லு
முன்பனியா முதல் மழையா
தொம் தொம் (சிந்து பைரவி)
ரோஜா ரோஜா (காதலர் தினம்)
எங்கே எனது கவிதை (கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன்.)
என் வானிலே (ஜானி ஜானி ஜானி)
லஜ்ஜாவதியே (4 த பிரண்ட்ஸ்)

பார்த்ததில் பிடித்தது (நான் கமல் ரசிகன் அல்ல இது ஒரு முக்கியமான குறிப்பு )

நாயகன்
குருதிப்புனல்
தளபதி
மைக்கேல் மதன காமராஜன்
திருவிளையாடல் (சிவாஜி)
அதே கண்கள்(ரவிகுமார் நடித்தது)
எதிர் நீச்சல்(நாகேஷ் படிக்கட்டு கீழிருந்து படிப்பதாக வருமே அது இந்தப் படம் தானே.)
வீடு
அவள் அப்படித்தான்(இது முழுக்க முழுக்க ரஜினிக்காக பின்னியிருப்பார் அப்படியே ஸ்ரீப்ரியாவும்)
அப்புறம் கட்டக் கடேசியா புதுப்பேட்டை.

சுரேஷ் சொன்ன பல படங்களை நானும் சொல்லியிருக்கிறேன், என்பது கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும் அவை அத்தனையும் நல்ல படங்கள். அதேபோல் தான் இதுவும் விரும்புபவர்கள் தொடரலாம்.