வாரணம் ஆயிரம்

வாரணம் ஆயிரம் படத்திற்கு நேற்று முன்பதிவு செய்யும் பொழுது வெறும் 2 சீட்டுகள் தான் மீதமிருந்தது. சூர்யாவிற்கும், காக்க காக்கவினால் கௌதம் மேனனுக்கும் நல்ல மவுசு பெங்களூரில் என்று நினைத்துக் கொண்டேன். இன்று காலையில் டிவிட்டரில் என் விருப்பமில்லாமல் கண்ணில் பட்டுவிட்ட, வாரணம் ஆயிரம் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’த்தைவிட கேவலம் என்ற ரிவ்யூ காண்டாக்கியது என்னவோ உண்மை. நானாய்ப் போய் பார்க்காமல் தானாய் வந்து விழுந்த இரண்டு வரி விமர்சனம் எரிச்சலைக் கிளப்பியது. அதனால் இரண்டு டிவிட்டு டிவிட்டி விட்டு ஓய்ந்தேன். என் நல்ல நண்பர் ஒருவருக்கு கூடிய சீக்கிரம் கல்யாணம் ஆகயிருக்கிறது, அவர் அளித்த பேச்சுலர் பார்ட்டியில் இருந்து பாதியில் தப்பித்து வந்து ‘வாரணம் ஆயிரம்’ படம் பார்த்தேன்.

நிச்சயமாய் கௌதம் மேனனின் படம் போல் இல்லை தான், ஒரு காக்க காக்கவையோ, வேட்டையாடு விளையாடுவையோ நினைத்துக் கொண்டு வந்திருந்தால் படம் அப்படியில்லை. ஆனால் நான் ரசிக்கக் கூடிய அளவிற்கு படமிருந்தது. இதற்கு மேல் கதை ஆங்காங்கு தட்டுப்படலாம். அதனால் படம் பார்க்க நினைக்கிறவர்கள் இங்கிருந்து எஸ்கேப் ஆகிவிடுவது நல்லது.

படம் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டு பின்னர் அசாதாரணமாக நகர்ந்தாலும் கடைசி வரையிலும் சாதாரண மனிதர்களையே தூக்கிப் பிடிப்பதால் பரவாயில்லை. நான் சொல்லவருவது அப்பா கேரக்டரை, இந்தக் கேரக்டரின் காதல் காட்சிகள் தவிர்த்து மற்றவைகள் பரவாயில்லை ரகம். சூர்யாவின் முதல் காதல் ஒவ்வொரு ‘சிறுகதை ஆசிரியர்’ன் கனவிலும் வந்து போயிருக்கக்கூடிய ஐஸ்கிரீம் காதல், அந்தப் பெண் அழகாக இருக்கிறாள், அழகாக சிரிக்கிறாள், ரொம்ப நாள் கழித்து எனக்கு ஒரு சினிமா ஹீரோயின் பிடித்துப் போயிருக்கிறாள். இந்தப் பெண் நடித்த மற்ற படங்களைப் பார்க்க விரும்பவில்லை – மோகமுள் படத்தில் வரும் ஜமுனா கதாப்பாத்திரம் போல்.

அந்தப் பெண்ணின் ட்ரெஸ்ஸிங் செலக்ஷன் பிரம்மாதம், மொத்த படத்தின் காஸ்ட்யூமுமே தேர்ந்தெடுத்து செய்திருக்கிறார்கள் என்றாலும், இந்தக் கதாப்பாத்திரம் செதுக்கப்பட்டிருக்கிறது, உடல்மொழியின் வழி, ஆடைகளின் வழி எல்லாவற்றிலும்.

சூர்யா நிறைய உழைத்திருக்கிறார் நன்றாகத் தெரிகிறது, அதுவும் முதல் காதலின் பொழுது – அந்தப் பெண் தன் காதலைச் சொன்ன பிறகு, நல்ல முன்னேற்றம். சிக்ஸ் பேக்ஸ் காண்பிக்கிறார், ஆர்மி உடையில் கச்சிதமாகப் பொறுந்துகிறார். வயதான கெட்டப்பில் கொஞ்சம் மேக்கப் பிசிறு தட்டினாலும் ‘தசாவதாரம்’ அளவிற்கு இல்லை. உடம்பைக் குறுக்கி கண்களைக் குறுக்கி உடல் மொழியை மாற்றி நன்றாகச் செய்திருக்கிறார்.

படத்தில் கொஞ்சம் சினிமாத்தனம் இருந்தாலும், கமர்ஷியலாக இந்தப் படம் பெயிலாகாமல் இருக்கச் செய்திருக்கிறார்கள் என்று தள்ளி வைத்துவிடலாம். நம் பக்கத்து வீட்டில் நடப்பதைப் பார்ப்பது போலவே இருக்கிறது.

ஒளிப்பதிவு எனக்குப் பிடிக்கவில்லை, ப்ரீஸ் செய்யும் பொழுது பிசிறு தட்டுவது தெரிகிறது என்ன பிரச்சனை? கௌதம் மேனனின் ரிச்னஸ் பாதி படத்தில் இல்லாமல் இருக்கிறது. ஒரு வேளை தெரிந்தே செய்தார்களா தெரியாது. இடையில் திருச்சி REC, மூகாம்பிகை கல்லூரி எல்லாம் வருகிறது; கொஞ்சம் போல் மனசு குறுகுறுத்தது.

மூன்று மணி நேர படத்தை கொஞ்சம் தட்டியிருக்கலாம், முதல் நாள் என்பதால் ஓட்டினார்களாயிருக்கும். நாளையிலிருந்து ஆப்பரேட்டர் கைவைத்துவிடுவார். ஆனால் கொஞ்சம் அலுப்பாய் இருந்தாலும், எப்படா இண்டர்வெல் விடுவார்கள், எப்படா முடிப்பார்கள் என்று இருந்தாலும் இந்த முயற்சியை பாராட்டியே ஆகவேண்டும். நல்ல டிரை.

இந்தப் படத்தின் ஏதோ ஒரு பகுதியில் நீங்கள் உங்களை உணர்வீர்கள், எனக்கு அது போல் நிறைய இருந்தது. உங்களுக்கு தனிப்பட்ட முறையில் சூர்யாவையும், கௌதமையும் பிடிக்குமென்றால் நிச்சயம் பார்க்கலாம்.

8 thoughts on “வாரணம் ஆயிரம்

  1. படம் நல்லாத்தான் இருக்கும் போல!
    ஒரு எட்டு பார்த்துவிட்டு வந்து பின்பு விமர்சனம் எழுதுகிறேன்!

  2. அப்போ பாக்கலாம்…

    சூர்யா { நான் நடிகர் சிவக்குமார் மகன் அல்ல}

  3. // அந்தப் பெண்ணின் ட்ரெஸ்ஸிங் செலக்ஷன் பிரம்மாதம், மொத்த படத்தின் காஸ்ட்யூமுமே தேர்ந்தெடுத்து செய்திருக்கிறார்கள் என்றாலும், இந்தக் கதாப்பாத்திரம் செதுக்கப்பட்டிருக்கிறது, உடல்மொழியின் வழி, ஆடைகளின் வழி எல்லாவற்றிலும்.//

    பில்லாவுக்கு பின்னாடி வர்ற தமிழ் படங்கள் பெரும்பாலும் ஆடை விசையத்தில் கவனம் செலுத்தாரம்பிச்சுட்டாங்க.

    இவ்வளும் சொன்ன நீங்க சிம்ரன் நடிப்ப பத்தி ஒன்னும் சொல்லலையே
    படத்தில் சிம்ரன் நடிப்பு எனக்கு ரொம்ப புடிச்சிது.ரொம்ப இயல்பா இருந்துது

  4. //இந்தப் பெண் நடித்த மற்ற படங்களைப் பார்க்க விரும்பவில்லை – மோகமுள் படத்தில் வரும் ஜமுனா கதாப்பாத்திரம் போல்//

    மோகமுள் நாயகி ஜமுனாவாக நடித்த அர்ச்சனா நல்ல தேர்வு.நான் ரசித்து பார்த்த திரை நாயகி.

  5. மன்னிக்கவும் யமுனாவிற்கு பதிலா ஜமுனா என கூறிவிட்டேன்!! 😦

  6. Surya vin uzhaippu abaaram. Kaatchi paduppugalil nangu gavanam seluthiyrirukkalaam.

    Paadalgalil ulla puthunarchiyai, kaatchiyilum kanbithirukkalam. arumaiyana idangalai thervuseidu, ada sariyaga padivakka thavarivittargal..

    paarkalam..

  7. இன்னப்பா படத்தவிட நீ போர் அடிக்குர..

    vasigaram. blogspot. com
    ( நடிகைகளின் அந்தரங்கம் )

பின்னூட்டமொன்றை இடுக