டைரிக் குறிப்புகள்

 

என் எழுத்துநடையைப் பற்றிய கிரேஸ் எனக்கு உண்டுதான்; பலநாட்களில் மனம் ஒரு நிலையில் இல்லாதபொழுது முன்பு எழுதியவற்றை எடுத்து படித்து சிரித்துக் கொண்டிருந்திருக்கிறேன். அதென்னமோ எனக்கு நானே உருவாக்கிக்கொண்ட நடை கிடையாது கொஞ்சம் போல் சுஜாதாவைக் காப்பியடித்துக் கொண்டுவந்ததாக நினைத்துக்கொண்டிருக்கிறேன். சுஜாதா படிச்சிட்டு என்னுதில்லை இதுன்னு சொன்னாருன்னா என்னுதுதான் இந்த நடை. விருப்பமில்லாமலோ இல்லை வேறு காரணங்களுக்காகவோ தங்கள் சொந்த நடையை மாற்றிக்கொண்டு எழுதுபவர்களை நினைத்தால் பாவமாகயிருக்கும். என்னால் ஒரு முழுநீள நகைச்சுவைப் பதிவு எழுதமுடியாததற்குக் காரணமாய் நான் நினைத்துக்கொண்டிருப்பது கூட இந்த விஷயத்தால் தான்.

POGOவில் Just for laughs gags, Smile OK please ம் ரொம்ப வருஷமா பார்த்துவருகிறேன். Takeshi’s castle முன்பிருந்தே வருகிறதென்றாலும் அவ்வளவு தீவிரமாய் பார்க்கமுடியாததற்கு வீட்டில் இருந்த மற்றவர்களுக்கு பெரும்பாலும் விருப்பத்திற்கு உரிய ஒன்றாக இல்லாமல் இருந்தது தான் காரணம் பெங்களூர் வந்ததில் இருந்து நான் தொடர்ச்சியாக பார்க்கும் ஒரு விஷயம் இந்த நிகழ்ச்சி மனசுவிட்டு சிரிப்பதற்கு ஏற்ற நிகழ்ச்சி மற்றவர்கள் கஷ்டப்படுவதைப் பார்த்து சிரிப்பதெல்லாம் சரியா என்ற கேள்வி எழுந்தாலும் பங்கேற்பவர்களும் Enjoy செய்வதால் நமக்கும் சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது.

சன் மியூஸிக்கில் இரவு 9 – 10 மணிக்கு ஹலோ ஹலோவில் தொடர்ச்சியாக ஹேமா சின்ஹா வந்துகொண்டிருந்த நாட்களில் நானும் தொலைபேசி ஜல்லியடித்திருக்கிறேன். அந்தப் பொண்ணு கொஞ்சம் வாத்து மாதிரியிருக்கும், சுமாரா தமிழ் பேசும் மொக்கையாக கேள்வி கேட்டு அதுக்கு அதைவிடவும் மொக்கையாய் க்ளூ கொடுக்கும். ராஜிவ் காந்தியோட அம்மா பேர் என்னான்னு கேட்டுட்டு அவங்க பேரில் ஒரு பாதி இந்திரான்னு க்ளூ கொடுக்கும்னா பார்த்துக்கோங்க. ஆனால் எனக்குத் தெரிந்து ஆனந்த கிருஷ்ணன் – ஹேமா ஜோடி நல்லாயிருக்கும் ஆனால் ஹைட் வித்தியாசம் அதிகம் இருக்குங்கிறதுனால விடமாட்டாங்கன்னு நினைக்கிறேன். ஒரு நாள் இப்படித்தான் பேசிட்டு பிடித்த பாடலான “ஊரோரம் புளியமரம்…” போடுங்கன்னு சொல்லிட்டு போனை வைக்குறேன். நண்பரொருவர் போன் செய்து ஏன்யா வேற பாட்டே கிடைக்கலையா என்று கேட்டார். அப்பத்தான் தெரிஞ்சது ரொம்பப்பேர் இதை பார்த்துக்கிட்டு வேற இருப்பாங்கன்னு.

நான் “ஜூன் போனால் ஜூலைக்காற்றே…” தான் கேட்டேன் ஆனால் அந்தப்பாட்டை கொஞ்ச நேரத்திற்கு முன் தான் ஒளிபரப்பினோம் வேற சொல்லுங்கன்னு முன்னமே கேட்டு இந்தப்பாட்டை வாங்கிக்கிட்டாங்க. இப்பொழுதெல்லாம் ஒரு பாட்டை பிரபலப்படுத்தணுனு சன்மியூசிக்கில் நினைச்சிட்டா பண்ணிடுவாங்கன்னு நினைக்கிறேன். “உலக அழகி நான் தான்…” இந்த பிறப்பு படப் பாடலை முதலில் பார்த்தப்ப சுத்தமா பிடிக்காம இருந்தது. ஆனால் தொடர்ச்சியா பார்க்கப்போய் இப்ப ரொம்பப் பிடிச்சிப்போச்சு.

அழகான பொண்ணை என்னப் பாடு படுத்தியிருக்காரு பாருங்க அந்த இயக்குநர். இந்தப் பொண்ணும் ஹேமா சின்ஹாவும் ஒரு நிகழ்ச்சிக்காக சன்மியூசிக்கில் ஒன்றாய் நின்னப்ப எந்தப் பொண்ணை சைட் அடிக்கிறதுன்னு பெரிய குழப்பமே வந்துடுச்சுன்னா பார்த்துக்கோங்களேன். இந்தப் பொண்ணுங்களுக்கு எதுவும் ரசிகர் மன்றம் இருக்கான்னு தெரியலை; இருந்தா சேர்ந்துக்கலாம் இல்லைன்னா ஒன்னு உருவாக்கலாம்னு இருக்கேன் என்ன சொல்றீங்க.

காதலிப்பதைவிடவும்
கவிதையெழுதப் பிடித்திருந்தது
எனக்கு
கவிதையெழுதுவதற்காகக் காதலித்தவன்
நானொருவனாகத்தான் இருப்பேன்

அப்படின்னு ஒரு மேட்டர் எழுதி என்னுடைய ஸ்டேட்டஸ் மெசேஜில் போட்டதும் போட்டேன். சக்க மொத்து வாங்கினேன். அதுவரைக்கு சாட்டிங்கில் பார்த்திராத நண்பர்கள் எல்லாம் வந்து காட்டு காட்டிவிட்டு சென்றிருந்தனர். ஆனால் எல்லாருமே சொல்லிவைத்ததைப் போல் காதலியைத் தான் துக்கம் விசாரித்திருந்தார்கள். “பாவம்யா உங்க காதலி” என்று.

வா.மணிகண்டனின் “ஒரு தற்கொலையும் இரண்டு காரணங்களும்” சிறுகதை படித்தேன். கிளைமாக்ஸில் சடர்ன்னான திருப்பம் இருக்கும் பெரும்பான்மையான கதைகள் நன்றாகத்தான் இருக்கும். இக்கதையும் அப்படியே ஆனால் சஸ்பென்ஸ் கதைகளுக்கு முக்கியமான ஆரம்பத்தில் இருந்தே வாசகரை அந்தக் கதைக்குள் தள்ளி அவரையும் ஒரு பக்கம் சிந்தித்துக் கொண்டு வரவைக்க வேண்டும். முடிவென்பது முற்றிலும் வாசகர் ஊகிக்காத ஒன்றாகயிருக்க வேண்டுமே ஒழிய அதுவரை கதையில் சொல்லப்படாத ஒரு விஷயமாக இருக்கக்கூடாது; இந்தக் கதையில், “இதுதான் ச‌மய‌ம் என்று பேச நான் ஆர‌ம்பித்தேன்.” என்ற ஒரு இடத்தில் மட்டும் தான் அவர் அந்த விஷயத்தில் இவருக்கான தனிப்பட்ட ஆர்வத்தைக் காட்டுகிறார்.

பிகே சிவக்குமார் என்னிடம் சொல்வார், துப்பாக்கியைப் பற்றிய விவரங்களைக் கொடுத்து எழுதுகிறீர்கள் என்றால் அந்தக் கதையில் துப்பாக்கி எங்காவது ஒரு இடத்தில் வெடித்திருக்கவேண்டும் என்று. ஆனால் இந்தக் கதையில் துப்பாக்கி வெடிக்கிறது ஆனால் அதைப்பற்றி விவரங்கள் இல்லை ;). எங்கிருந்தோ சட்டென்று முளைத்த துப்பாக்கியொன்று வெடிக்கிறது. வாசகர் முதல் முறை படிக்கும் பொழுது ஜட்ஜ் செய்ய முடியாமல் அந்த ஹீரோவுக்கும் நரேஷின் பெண்டாட்டிக்கும் முதலிலேயே தொடுப்பு உண்டு என்று எங்காவது சொல்லியிருக்க வேண்டும். வாசகர் கவனிக்காத மாதிரி அதைச் செய்ய வேண்டும். ஆனால் அந்தக் கதை படிக்கும் பொழுது விறுவிறுப்பாக இருந்தது உண்மை. உரையாடலே இல்லாமல் சரசரன்னு இழுத்துட்டுப் போயிருக்கிறார் வாழ்த்துக்கள்.

ராஜேந்திர குமார், சுபா மற்றும் ஏனைய சஸ்பென்ஸ் புத்தகங்கள் மீதான ஆர்வம் குறைந்ததற்கு இதுதான் காரணம். கிளைமாக்ஸில் எங்கிருந்தோ முளைக்கும் ஒரு புதிய வில்லனைக் காண்பித்து எழுத ஆரம்பித்துவிட்டார்கள் எல்லாக் கதைகளையும் சொல்லாவிட்டாலும் தொடர்ச்சியாக எழுதும் பொழுது உழைப்பு குறைந்து எழுதித்தள்ளுவது தான் இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.

ஷேர் டிரேடிங்கில் இறங்கியிருக்கிறேன்னு சொன்னதும் அட்வைஸ் கொடுக்காதவங்களும், எச்சரிக்கை செய்யாதவர்களும் தான் குறைவாகயிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அம்மா உண்மையிலேயே பயந்துவிட்டார்கள், அக்காவைத் தவிர பயமுறுத்தாதவர்கள் இல்லையென்றே சொல்லலாம். அக்காவிற்குத் தெரியுமாயிருக்கும் சொன்னாலும் திருந்தாத ஜென்மன் என்று. சைடில் Portfolio என்றொன்றைப் போட்டிருக்கிறேன். இதில் தற்சமயம் நான் வாங்கியிருக்கும் Stock களைப் போடலாம் என்றொரு உத்தேசம் இருக்கிறது; தற்சமயம் குறைவாக இன்வெஸ்ட் செய்வதால் சரி, பின்னால் பிரச்சனை வருமே என்று நண்பர் ஒருவர் கேட்டார் நான் சொன்னேன் 100 வாங்கினேன் என்றால் 10 என்று சொல்லிவிட்டுப் போகலாம் என்று.

இந்த நண்பர் தான் என்னுடன் சிவாஜி பார்த்தது. என்னமோ நினைத்துக்கொண்டவராய் சட்டென்று “நீ பொண்ணுங்க ஷேர் மார்கெட்டில் இன்வெஸ்ட் செய்து பார்த்திருக்கிறியா?” என்று கேட்டார். “நான் ரொம்பவும் யோசித்துப் பார்த்துவிட்டு ஆமாம் நம்ம “பம்பா நந்தி” இல்லை அவ இன்வெஸ்ட் செய்து பார்த்திருக்கிறேன் ஏன் கேக்குறீங்க” என்று கேட்டேன். “இல்லை அவளை விடு கல்யாணம் ஆனவ அவ புருஷன் ஷேகர் சொல்லி செய்றாளாயிருக்கும். நான் பார்த்திருக்கேன் ஷேகர் டிரேடிங் செய்வதை” சொல்லிவிட்டு மீண்டும் “கல்யாணம் ஆகாதவளுங்க யாராவது செஞ்சு பார்த்திருக்கிறியா?” என்று கேட்டார். நான் பதில் சொல்லாமல் “நான் தேடிப்பிடிச்சி சொன்னாலும் அவங்கப்பா சொல்லிச் செய்றான்னு சொல்லுவீங்க” என்று சொன்னேன்.

பின்னர் இதைப்பற்றி கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டிருந்தோம் பெண்களுக்கு இந்த விஷயத்தில் இன்னும் சுதந்திரம் கிடைக்கலை என்று நான் சொல்ல நிறைய விஷயங்களுக்கு அப்படித்தான் அப்படிப்பார்த்தா இந்த விஷயம் ரொம்பக்கடைசியாத்தான் வரும்னு சொல்லிட்டுப் போனார் அவர். நான் வேறெதாவது சொல்வேன்னு தெரியும் அவருக்கு அதனால் தான் அவ்வளவு வேகமாய் நகர்ந்தது.

இதே போல் முன்பொருமுறை எழுதிய குறிப்புகள் கல்லூரி உறவுகளைப் பற்றிய சிறுகுறிப்புகள்

Fri, 02 Nov 2007 02:57:00 GMT

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s